காஞ்சி சங்கர மடத்தின் உண்மை வரலாறு

chandrasekarendrarஇரண்டு மூன்று தலைமுறையாவது ஐயர் குடும்பங்கள் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களுக்கும் காஞ்சி சங்கர மடத்துக்கும் ஏறக்குறைய குருபீடம் என்ற இடத்தைத் தந்து வந்திருக்கின்றன். காஞ்சி மட ஆசி என்ற சம்பிரதாய வார்த்தை இல்லாமல் ஐயர் வீட்டு கல்யாணப் பத்திரிகையைப் பார்ப்பது அரிது.

நானும் ஐயர் குடும்பத்தில் பிறந்தவன்தான். அதுவும் காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமங்களில் வளர்ந்தவன். சிறு வயதில் வருஷத்துக்கு இரண்டு மூன்று முறையாவது காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கந்தகோட்டம், காமாட்சி அம்மன் கோவில், சங்கர மடம் என்று ஒரு ரவுண்டு வருவோம். சந்திரசேகரர் கலவையில் தங்கி இருந்தபோது அங்கும் போய் வருவோம். பல முறை மடத்தில் சந்திரசேகரர் தரிசனம் தர நேரம் ஆகும். சின்னப் பையன், மடத்தில் அங்கும் இங்கும் சுற்றுவேன். பெரிய கட்டுப்பாடுகள் கிடையாது. மடத்திலேயே கையில் கிடைக்கும் புத்தகத்தை எல்லாம் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

பத்து பனிரண்டு வயது வாக்கில் ஒரு முறை அப்படிப் புரட்டிப் பார்த்த புத்தகம் சங்கர மடத்தின் வரலாறு பற்றி. ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் சுற்றி நான்கு மூலைகளிலும் நான்கு மடங்களை நிறுவி கடைசியாக காஞ்சி மடத்தை நிறுவி அங்கேயே சமாதி ஆகிவிட்டார் என்று ஐதீகம். அந்த ஐதீகத்தைச் சொல்லும் புத்தகத்திலேயே முதல் காஞ்சி மடாதிபதி சுரேஸ்வரர் என்று இருந்தது. ஆனால் சுரேஸ்வரர்தான் சிருங்கேரி மடத்தின் முதல் மடாதிபதி என்பதெல்லாம் ஆதி சங்கரர் பற்றிய தொன்மக் கதைகளில் அதே புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தது. என்னடா இது என்று மேலும் மேலும் படித்தால் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும் சிருங்கேரி மடத்தின் கிளை மடமான கும்பகோணம் மடம்தான் பிற்காலத்தில் காஞ்சி மடமாக உருவாகி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் இந்தப் புத்தகம் மடத்திலேயே கிடைத்ததால் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. (புத்தகத்தின் பேர் நினைவில்லை. ஆனால் பழைய தஞ்சாவூர் பாணி? சித்திரங்கள் நிறைய இருந்தது நன்றாக நினைவிருக்கிறது)

இது என்ன பொய் மீது கட்டப்பட்ட மடமாக இருக்கிறதே என்று என் அப்பாவிடம் வீடு திரும்பும்போது கேட்டு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். கவனமாகப் பார்த்தால் (நான் படித்த வரையில்) ஒரு இடத்தில் கூட சந்திரசேகரர் காஞ்சி மடத்தின் முதல் மடாதிபதி, வரலாறு என்றெல்லாம் பேசவே மாட்டார். ஆனால் இது போன்ற கதைகளையும் மறுத்து ஒரு வார்த்தை பேசியதாக எனக்குத் தெரியவில்லை.

அருணன் எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் இந்த முரண்பாட்டைத்தான் வெளிப்படையாகப் பேசுகிறது. அதைத் தவிரவும் வழக்கமான பல விமர்சனங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த வரை இன்று(ம்) காஞ்சி மடத்துக்கு எஞ்சி இருக்கும் மதிப்பு சந்திரசேகரரால் உருவானது. அவருக்கு முன் மடம் செயலாக இருந்ததாகவே தெரியவில்லை.

புத்தகம் (எனக்கு) புதிய விஷயங்கள் எதையும் சொல்லவில்லை. ஆனால் இது போன்ற கேள்விகள் கேட்கப்பட வேண்டியவை, ஆவணப்படுத்த வேண்டியவை என்று கருதுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சங்கர மடம் பற்றி பல கட்டுரைகள்
சந்திரசேகரருக்கு ஜெயேந்திரர் மேல்!
சங்கர மடத்தின் வரலாறு பற்றி

பின்குறிப்பு: சிறு வயது காஞ்சிபுரம் பயணங்களில் இந்த வழக்கமான கோவில்களுக்குப் போகிற வழியில் ஒரு சித்திரகுப்தன் ஆலயம் இருக்கும், பக்கத்திலேயே உலகளந்த பெருமாள் கோவிலின் பிரம்மாண்டம் உண்டு, கைலாசநாதர் கோவில், வைகுண்டப் பெருமாள் கோவில் எல்லாம் பற்றி கேள்விப்பட்டிருந்தேன், ஆனால் அங்கெல்லாம் போக அப்பா அம்மாவுக்கு நேரம் இருக்காது. செக்கு மாடு மாதிரி இதே மூன்று கோவில், விட்டால் மடம் என்றுதான் போய் வருவோம். போன வருஷம்தான் கைலாசநாதர், வைகுண்டப் பெருமாள் கோவில் எல்லாம் பார்க்கும் அதிருஷ்டம் கிடைத்தது.