எனக்கு யூட்யூப் உரைகளையோ, ஆடியோ பதிவுகளையோ உட்கார்ந்து கேட்கும் பொறுமை கிடையாது. ஆனால் ஜெயமோகனின் அஞ்சலி உரை நெகிழ வைத்தது. அசோகமித்திரன் போன்ற ஒரு மாபெரும் எழுத்தாளர் எத்தனை லௌகீக சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது, கார் டிரைவராக, அலுவலகத்தில் ஏறக்குறைய ஒரு பியூனாக வேலை செய்து, மனைவி அப்பளம் போட்டு விற்று வாழ்க்கையின் தேவைகளை சமாளித்தது என்று கேட்கும்போது இத்தனை தடைகளை மீறி இலக்கியம் படைத்திருக்கிறாரா என்று அசோகமித்திரன் மேல் உள்ள மரியாதை மேலும் மேலும் அதிகரித்தது. அசோகமித்திரன் என்ற எழுத்தாளர் மாபெரும் மேதை என்றால் அசோகமித்திரன் என்ற மனிதர் மாபெரும் லட்சியவாதி என்று தோன்ற வைத்த உரை. இந்த மாபெரும் லட்சியவாதியின் எழுத்தில் அவ்வப்போது தெரியும் நிராசை, cynicism எல்லாவற்றுக்கும் இந்தத் தடைகள்தான் ஊற்றுக்கண்ணோ?
ஆனால் அசோகமித்திரனின் மகன் ராமகிருஷ்ணன் இவை தகவல் பிழைகள் என்று மறுத்திருக்கிறார். அவருக்கு குசும்பு அதிகம். ஜெயமோகன் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தகவல் கொடுத்தால் அது அவரது தவறான ‘கருத்து’ என்கிறார். என் தந்தை காரோட்டக் கற்றுக் கொள்ள முயன்றார், ஆனால் கற்றுக் கொள்ளவில்லை என்று அசோகமித்திரனின் மகனே சொல்லும்போது அசோகமித்திரன் இந்துமதியின் குழந்தைகளை காரில் வைத்து ஓட்டிக் கொண்டு சென்றதை தானே பார்த்ததாக ஜெயமோகன் சொல்வது நடந்திருக்க வாய்ப்பில்லைதான். கார் சரியாக ஓட்டத் தெரியாதவரை யாரும் ட்ரைவராக வைத்துக் கொள்ளப் போவதில்லை.
தன் எழுத்தில் மிகைப்படுத்துதல் இருக்கவே கூடாது, அடக்கியே வாசிக்க வேண்டும் என்று காலம் பூராவும் முயன்ற ஒரு எழுத்தாளருக்கு செலுத்தும் அஞ்சலி மிகைப்படுத்தப்பட்டிருப்பது நகைமுரணாகத்தான் இருக்கிறது.
ஆனால் ஜெயமோகனுக்கு அசோகமித்திரன் மேல் உள்ள மரியாதையை நான் நேருக்கு நேர் பேச்சில் பல முறை கேட்டிருக்கிறேன். அது போலித்தனமற்ற, உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் உண்மையான உணர்வு என்பதை அவர் பேசுவதை ஒரு முறை கேட்டிருந்தால் கூட, அல்லது அசோகமித்திரனைப் பற்றி அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்தால் கூட தெள்ளத் தெளிவாக புரியும். ஜெயமோகன் எங்கோ எதையோ கேட்டிருக்கலாம், அதை இன்னும் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்லிவிட்டார் என்பது அவரது உணர்வைப் பொய்யாக்கிவிடாது. அட சுவாரசியத்துப்படுத்துவதற்காக தெரிந்தேதான் சொன்னார் என்றே வைத்துக் கொள்வோமே, அது அவர் சொல்லும் மற்ற 99 விஷயங்களையும் பொய்யாக்கிவிடுமா என்ன?
அவர் சொன்னது தவறு, தகவல் பிழை என்று சுட்டிக் காட்டுங்கள். சரி அவர் மனதறிந்து தன் அஞ்சலி கவனிக்கப்பட வேண்டும், பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய்யே சொன்னார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் அசோகமித்திரனை என்ன கொச்சைப்படுத்திவிட்டார், கேவலப்படுத்திவிட்டார்? அசோகமித்திரன் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்துவிட்டாரா? அவருடைய புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்று அவருக்கு எக்கச்சக்கமாக ராயல்டி வந்ததா? அவர் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்று ஜெயமோகன் சொல்கிறார்; இல்லை இல்லை அவர் இப்படி கஷ்டப்படவில்லை, வேறு மாதிரி கஷ்டப்பட்டார் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறீர்கள், அவ்வளவுதானே! இந்தத் தகவல் பிழை, அல்லது பொய், அவரது உரை தரும் உணர்வை மாற்றுகிறதா என்ன?
ஆனால் இணையத்தில் வரும் கமெண்டுகளைப் பார்த்தால் இத்தனை காழ்ப்பா என்று தோன்றத்தான் செய்கிறது. அசோகமித்திரன் குடும்பத்தினர் கூட அவரைப் போலவே அடக்கித்தான் வாசிக்கிறார்கள், ஆனால் கிடைத்தது சான்ஸ் என்று நிறைய பேர் – குறிப்பாக விமலாதித்த மாமல்லன் – குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயமோகனுடன் எனக்கு கடந்த ஓரிரு வருஷங்களில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என் மதிப்பிற்குரிய சில நெருங்கிய நண்பர்களுக்கு அவரோடு மனவிலக்கே ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மனஸ்தாபங்கள் நான் மதிக்கும் மனிதர்களில் ஜெயமோகனும் ஒருவர் என்ற நிலையை எந்த விதத்திலும் மாற்றவில்லை. அவரும் மனிதர்தான், விண்ணிலிருந்து நேராக இறங்கி வந்த தெய்வம் அல்லர், அவருடைய அணுகுமுறையிலும் தவறுகள் ஏற்படக் கூடும் என்பதைத்தான் இந்த மனஸ்தாபங்கள், மிகைப்படுத்தல்கள் எனக்கு காட்டுகின்றன.
ஆனால் ஜெயமோகனின் சாதனைகளில் பத்து சதவிகிதமாவது செய்த பிறகுதான் எனக்கு அவரை குறை கூறும் அருகதை வரும் (அவரைக் குறை கூறும் அருகதை, அவரது கருத்துகளை விமர்சிப்பதற்கான அருகதை அல்ல) என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படி குறை கூறும் அருகதை இன்று இருந்திருந்தாலும் இதை உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்தில் தான் கேட்ட விஷயத்தை தவறுதலாக கண்டேன் என்று சொல்லிவிட்டார் என்று மேலேதான் போயிருப்பேன். சாதனைகள் என்று நான் இங்கே சொல்வது இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான ஒரு இயக்கத்தை உருவாக்கி வழி நடத்தி செல்வதைத்தான், அவரது எழுத்தை அல்ல. அவரது எழுத்தின் தரத்தில் ஒரு சதவிகிதத்தை அடைந்தால் அதுவே எனக்கு பெரிய சாதனை.
என்ன,
நான் அடைந்த நினைவுப்பதிவு மற்றும் என் காட்சிப்பதிவு பிழையாக இருக்கலாமென்றும் ஒப்புகிறேன்
என்று அரைகுறையாக இருக்கலாம், நடந்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லாமல், ஆம் தவறுதலாக சொல்லிவிட்டேன் என்று அவர் சொல்லி இருக்கலாம் இருக்க வேண்டும்.
அசோகமித்திரனை நான் கொச்சைப்படுத்துகிறேன், விளம்பரம் தேடுகிறேன் என்றெல்லாம் அவரது குடும்பத்தினர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்
என்பது இன்னொரு தகவல் பிழை என்று தோன்றுகிறது. ஃபேஸ்புக்கில், இணையத்தில் அப்படி எதுவும் காணப்படவில்லை. சில முறை ஜெயமோகன் அவரது பதிவுகளுக்கு ஒரு எடிட்டர் மற்றும் fact-checker வேண்டுமென்று தோன்ற வைப்பார், அப்படிப்பட்ட ஒரு தருணம் இது.
நான் இப்படி இது சின்ன விஷயம்தான் என்று எண்ணுவதை என் மதிப்பிற்குரிய, நெருங்கிய நண்பர்கள் சிலர் வன்மையாக மறுக்கிறார்கள், என் மேல் கொஞ்சம் வருத்தப்படுகிறார்கள். என்ன செய்ய, என் சிந்தனை முறை அப்படித்தான்.
பின்குறிப்பு:
மனஸ்தாபங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், அசோகமித்திரன் பற்றி அவர் சொல்லி இருக்கும் சில கருத்துகளிலிருந்தும் நான் பெரிதும் வேறுபடுகிறேன்.
சென்னையின் பிராமண வட்டம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்களால் ஆனது. அவை நம் காலத்தில் வாழ்ந்த மேதையை கைவிட்டன என்பது வரலாறு
என்று எழுதி இருக்கிறார். பிராமணர்கள் அசோகமித்திரன் பிராமணர் என்ற காரணத்தால் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டுமா என்ன? எஸ்.எஸ். வாசனுக்கு அசோகமித்திரன் பிராமணர் என்ற காரணத்தால் அவர் மீது ஒரு soft corner இருந்திருக்க வேண்டுமா? ஏன் ஏவிஎம் செட்டியார் அவரது புத்தகங்களைப் பதித்திருந்தால் கசக்குமா? அப்படி அவரை பிராமணர் என்பதற்காக சென்னை பிராமண வட்டம் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று ஜெயமோகன் கருதினால் திராவிட இயக்கத்து ‘இழிமகன்கள்’ அவரை பிராமணர் என்பதற்காக நிராகரிப்பதில் என்ன தவறு காண்கிறார்? இன்று இணையத்தில் இந்த விஷயத்துக்காக அவரைக் கழுவி கழுவி ஊற்றுவதில் முதல் இடம் விமலாதித்த மாமல்லனுக்குத்தான். வி. மாமல்லனின் அணுகுமுறை எனக்கு இசைவானது அல்ல. ‘ங்கொய்யால எங்கிட்டயா! உங்க எல்லாரையும் தோலுரித்து உங்க உண்மை சொரூபத்தை காட்டுவேண்டா!’ என்பதெல்லாம் ஒவ்வொரு சின்னத் தவறையும் ஊதிப் பெருக்க வைக்கிறது. ஆனால் அவர் தன் மனதுக்கு நேர்மையாக மட்டுமே கருத்துகளைத் தெரிவிக்கிறார் என்பதிலோ, சின்னதோ பெரியதோ, தவறைத்தான் பொதுவாக சுட்டிக் காட்டுவார் என்பதிலோ எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரும் பரீக்ஷா ஞானியும் எந்த பிராமண வட்டத்தின் குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. சுத்தப் பிதற்றல்.
பின்-பின்குறிப்பு: தமிழ் எழுத்தாளர்களில் இருவர் – புதுமைப்பித்தன், அசோகமித்திரன் – மேதைகள் என்று ஜெயமோகன் தன் அஞ்சலியின் ஆரம்பத்தில் சொல்கிறார். மூன்று மேதைகள் – ஜெயமோகனையும் சேர்த்து – என்பது என் அபிப்ராயம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், ஜெயமோகன் பக்கம்
அவர் உரையை கேட்கும் போதே தோன்றியது அவர் எரிச்சலில் அ கோபத்தில் பேசுகின்றார் என்று. அதன் பின் உண்மையான ஆதங்கம் இருக்கலாம், கோபத்தில் பிழைகள் வரலாம். காரோட்டினார் என்பதை கூட ஏதோ குழப்பம் என்று ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் சாவி பத்திரிக்கையில் அவர் காபி வாங்கி தருபவராக இருந்தார் என்ற கூற்று மொத்த உரையின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குரியதாக்கிவிட்டது. மிகைப்படுத்துதல் என்பது அடுத்தவரை குத்தக்கூடாது. அசோகமித்திரன் அஞ்சலியில் அவர் சாவியை குற்றம்சாட்டுகின்றார். சாவியை பற்றி அவருடன் வேலை செய்த ரவி பிரகாஷ் ஏராளமான தகவல்களை எழுதியிருக்கின்றார். ஒரு பெரிய பத்திரிக்கையாளர் ஒரு தலை சிறந்த எழுத்தாளரை டீ வாங்கும் பணியில் வைத்தார் என்பது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. சாவியில் அவர் தொடர்கதையும் வந்திருக்கின்றது. “என்னப்பா சாவிக்கு ஒரு கதை தர்றியா” என்று சாவியே கேட்டு வாங்கி போட்ட கதை மானசரோவர். பாலகுமாரன், ஞானி, மாலன் என்று அனைவரும் சாவி இதழில் அவர் வேலை செய்யவில்லை என்று தெளிவாக கூறுகின்றனர்.
கோபத்தில் பேசினார் சரி, அந்த தகவல் பிழைகளை, ஆமாம் தகவல் பிழை என்று சொல்வதில் என்ன பிரச்சினை. அதை நியாயப்படுத்துவது போல பேசிவிட்டு, பிராமணர்கள் அவரை கைவிட்ட குற்ற உணர்வை மறைக்க பேசுகின்றார்கள் என்பது பேத்தல். கருணாநிதியின் அறிக்கைக்கு இணையானது. இது அசோகமித்திரன் அபிமானிகளை கூட அவர்கள் ஜாதிப்பாசத்தால் தான் செய்கின்றார்கள் என்று சொல்வது போன்றிருக்கின்றது. ஆறுமாதங்கள் கழித்து இலக்கியவாதிகள் நாங்கள் எடுத்து கொள்கின்றோம் என்கின்றார். தவறு. வாசகர்களாகிய நாம்தான் அவரை எப்போது நம்மிடம் வைத்துக் கொண்டுள்ளோம்.
LikeLike
ரெங்கா, காபி வாங்கித் தந்த சம்பவம் தனக்கு சுராவால் சொல்லப்பட்டதாக தனிப்பட்ட பேச்சில் சொல்லி இருக்கிறார். யார் கண்டது, சுரா மிகைப்படுத்தி இருக்கலாம்.
LikeLike