போப்பாக ஒரு திருநங்கை – ராபர்ட் ஹாரிசின் ‘Conclave’

சாதாரணமாக spoiler இல்லாமல் புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றுதான் முயற்சிப்பேன். இந்த முறை புத்தகம் கிளப்பிய எண்ணங்களைப் பற்றி எழுத விரும்புகிறேன், அது spoiler இல்லாமல் முடியாது.

ஹாரிஸ் எழுதிய சிசரோ trilogy-க்கு நான் பெரிய ரசிகன். புதிய புத்தகம் – Conclave (2016) – ஒன்று கண்ணில் பட்டதும் படிக்க ஆரம்பித்தேன். சாதாரண வணிக நாவல்தான். விறுவிறுவென்று போவதும், சில நுண்விவரங்களும்தான் புத்தகத்தின் பலம்.

போப் இறந்த பிறகு அடுத்த போப்பை உயர்நிலையில் இருக்கும் சர்ச் குருமார்கள் (cardinals) தேர்ந்தெடுப்பார்கள். தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரியான லோமலியின் கண்ணோட்டத்தில் மூன்று நாள் நடக்கும் அந்த தேர்தல் விவரிக்கப்படுகிறது. முன்னணியில் இருப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு வெளிவருகின்றன. கடைசியில் புதிதாக மற்றும் ரகசியமாக நியமிக்கப்பட்ட ஒரு cardinal – பெனிடஸ் – போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடைசி பக்கங்களில் லோமலிக்கு பெனிடஸ் ஒரு திருநங்கை என்று தெரிகிறது. ஆனாலும் பெனிடஸ் போப்பாகிறார்.

மாதொருபாகன் சர்ச்சை (மற்றும் பல சர்ச்சைகள்) பெரிதாக இருந்தபோது பெருமாள் முருகன் ஹிந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார் என்று பலரும் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அடிக்கடி பார்த்த ஒரு கேள்வி – இப்படி பிற மதங்களைப் பற்றி எழுதிவிட முடியுமா? இதோ ஒருவர் எழுதி இருக்கிறார், அது பெஸ்ட்செல்லரும் கூட. யாராவது ஏதாவது கேட்கிறார்களா என்ன? டாவின்சி கோட் இந்தியாவில்தான் தடை செய்யப்பட்டது, கிறிஸ்துவம் dominate செய்யும் மேலை நாடுகளில் அல்ல. ஹாரிஸ் இங்கிலாந்துக்காரர், இங்கிலாந்தின் அரசர்/அரசி இங்கிலாந்து சர்ச்சின் ஏறக்குறைய தலைவர் பதவியில் இருப்பவர். அப்படியும் ஒரு பிரச்சினையும் கிடையாது. என் மகாபாரதச் சிறுகதைகளில் கிருபருக்கு துரோணர் மேல் பொறாமை, பீஷ்மருக்கு அம்பை மேல் காதல் என்றெல்லாம் கற்பனைக் கதைகளாக எழுதித் தள்ளுகிறேன், அதை ஹிந்துத்துவ தளமான தமிழ் ஹிந்து தளத்தில் பிரசுரிக்கவும் செய்கிறார்கள். அது ஏன் திடீரென்று ஒரு புனைவை புனைவாக மட்டும் கருதாமல் அதை தங்கள் மத நம்பிக்கைகளோடு இணைத்துக் கொள்கிறீர்கள்? அதுவும் பன்மைத் தன்மையையும் சகிப்புத்தன்மையையும் தன் அடையாளமாகக் கொண்டுள்ள ஹிந்துக்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? இதற்கு பதிலாக டாவின்சி கோடும் சாதானிக் வெர்ஸசும் தடை செய்யப்படக் கூடாது என்று குரல் எழுப்பலாமே?

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

பின்குறிப்பு: ஹாரிசின் எல்லா நாவல்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. உதாரணமாக Fear Index (2010) எல்லாம் பஸ்ஸில் படிக்கக் கூட லாயக்கில்லை. ஆனால் சிசரோ புத்தகங்களோ மிகச் சிறப்பானவை. இது சுமாரான வணிக நாவலாக இருக்கிறது…

சாதனையாளர் – பத்மஸ்ரீ விருது பெற்ற ஜி. வெங்கடசுப்பையா

இந்த வருஷம் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஜி. வெங்கடசுப்பையாவும் ஒருவர். விசேஷம் என்னவென்றால் அவருக்கு 103 வயது! அப்போதே இவரைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன், இத்தனை நாளாகிவிட்டது.

ஜீவி என்று அழைக்கப்படும் இவரது மாபெரும் சாதனை கன்னட அகராதியை – எட்டு பகுதி, 54 வருஷ உழைப்பு – உருவாக்கியதுதான். அகராதியை யாரும் தனியே உருவாக்கிவிட முடியாது (சாமுவெல் ஜான்சனின் ஆங்கில அகராதி மட்டுமே விதிவிலக்கு), இவரும் எட்டு தொகுதிகளில் ஆறுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்தவர்தான். முதல் தலைவரான கிருஷ்ண சாஸ்திரி இவருக்கு ஏறக்குறைய குரு ஸ்தானத்தில் இருந்தவர். அவர் ஜீவியிடம் சொல்லுவாராம் – இந்த அகராதி நான் இறப்பதற்குள் முடியாது, நீ இறப்பதற்குள் முடியலாம் என்று. சாஸ்திரி 68-இல் இறந்திருக்கிறார், முதல் தொகுதி 1970-இல் வந்திருக்கிறது. கடைசி தொகுதி 1995-இல்.

இவற்றைத் தவிர பல மொழிபெயர்ப்புகள், ஆராய்ச்சிகளை செய்திருக்கிறார். இப்படிப்பட்டவர்களை இன்று தமிழில் காணமுடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. ஆயிரம்தான் தனித்தமிழ்வாதிகளை கிண்டலடித்தாலும் தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள் போன்றவர்களிடம் தமிழைப் பற்றி வெறி இருந்தது. வையாபுரிப் பிள்ளை, இரண்டு ராகவையங்கார்கள் (மு மற்றும் ரா), ஸ்ரீனிவாசராகவன், வேங்கடசாமி நாட்டார், ஜகன்னாத ராஜா போன்றவர்களிடம் மேதமை இருந்தது. ரா.பி. சேதுப்பிள்ளை, ம.பொ.சி., அ.ச. ஞானசம்பந்தன் போன்றவர்களிடம் பேச்சுத்திறன் இருந்தது. இன்றைக்கு ஒரு எழவையும் காணோம், வெற்றுக் கூச்சல் கூட கண்ணில் படவில்லை. அடுத்த தலைமுறைக்கு தமிழின் செல்வங்கள் தெரியாமலேயே போய்விடுமோ என்று அச்சமாகத்தான் இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அறிஞர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
வெங்கடசுப்பையா பற்றிய விக்கி குறிப்பு
வெங்கடசுப்பையா பற்றி ஒரு கட்டுரை

வ.உ.சி., திரு.வி.க., ஸ்ரீனிவாச சாஸ்திரியார், பங்காரு அடிகள்… – அ.ச. ஞானசம்பந்தன் கண்ட பெரியவர்கள்

(மீள்பதிப்பு) – சமீபத்தில் இந்தப் புத்தகத்தை மீண்டும் புரட்டிப் பார்த்தேன், அதனால் மீள்பதித்திருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்னால் நான் அ.ச.ஞா. என்ற பேரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். யார், எவர் என்று எந்த விவரமும் தெரியாது. ஏதோ கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம், அவ்வப்போது காப்பியம், தேவாரம், திருவாசகம், கம்பன் என்று சொற்பொழிவு செய்வாராக்கும் என்று யூகித்திருப்பேன்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கும் காரணம் இதில் வ.உ.சி., திரு.வி.க. என்றெல்லாம் இருந்த பேர்கள்தான். என்னை fascinate செய்யும் தலைவர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் உண்டு. சரி என்னதான் எழுதி இருக்கிறார் என்று பார்க்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன்.

அ.ச.ஞா.வுக்கு கம்பன் – ஒரு புதிய பார்வை என்ற புத்தகத்துக்காக 1985-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 1916-இல் பிறந்தவர் 85 வயதில் 2002-இல் இறந்திருக்கிறார். பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர், வானொலியில் பதவி, தமிழ்த்துறையில் பதவி வகித்திருக்கிறார்.

அ.ச.ஞா.வின் அப்பா சரவண முதலியார் சைவப் பாரம்பரியத்தில் வந்த தமிழறிஞர். சின்ன வயதிலேயே அ.ச.ஞா.வும் மேடைகளில் பேச ஆரம்பித்துவிட்டார். அப்படித்தான் சிறுவனாக இருந்தபோது சொற்பொழிவாற்ற ஏதோ ஒரு ஊருக்குப் போன வேளையில் வ.உ.சி. வீட்டில்தான் தங்கி இருக்கிறார். அப்போது வ.உ.சி. பொருளாதார ரீதியாக நொடிந்து போயிருந்திருக்கிறார், ஆனால் சமூகத்தில் மிகவும் மதிப்பிற்குரியவராகத்தான் இருந்தாராம்.

பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் படிக்கப் போயிருக்கிறார். சோமசுந்தர பாரதியார் சரவண முதலியார் பையனே தமிழ் படிக்கவில்லை என்றால் எப்படி என்று இவரைக் கட்டாயப்படுத்தி தமிழில் சேர்த்திருக்கிறார். இவர் வெறும் மாணவர் – ஆனால் நிபந்தனை விதித்திருக்கிறார். ரா. ராகவையங்கார் பாடம் நடத்தினால் நான் தமிழில் சேர்கிறேன் என்று. அவரும் ஒத்துக் கொண்டு பாடம் எடுத்திருக்கிறார்! சரவண முதலியாரின் கீர்த்தி அப்படி! துணைவேந்தராக இருந்த வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இவருக்கு முழு ஆதரவு. சாஸ்திரியார் இவருக்கு சமயத்தில் கல்லூரிக்கான கட்டணத்தைக் கட்டி இருக்கிறார்.

வேற்று ஜாதிப் பெண்ணைக் காதலித்து, அப்பாவை எதிர்த்து (சாஸ்திரியாரின் ஆதரவில்) திருமணம். பிறகு திரு.வி.க.வுடன் நெருக்கம். பிள்ளைகள் இல்லாத திரு.வி.க. விருப்பப்படியே இவரும் மு.வ.வும் சேர்ந்துதான் கொள்ளியே போட்டிருக்கிறார்கள். தெ.பொ. மீனாட்சிசுந்தரம்தான் தமிழைப் பொறுத்த வரையில் தனக்கு குருநாதர் என்கிறார். பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியர், பிறகு வானொலி, பிறகு தமிழ்த்துறை என்று பதவிகள். சொற்பொழிவு, இலக்கிய விமர்சனம், சைவம் (வைணவமும் விலக்கு இல்லை) இவைதான் முக்கியமாக இருந்திருக்கிறது. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளுடன் நெருக்கம் இருந்திருக்கிறது.

சில பல அதிசயங்களை விவரித்திருக்கிறார். அதுவும் ஒரு இலங்கைச் சாமியார் இரண்டு இடங்களில் இருந்ததை தானே பார்த்ததாக எல்லாம் சொல்கிறார். நம்ப முடியாத சம்பவங்கள்தான், ஆனால் அவரது எழுத்தின் வேகம் இப்படியும் நடந்திருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

என்னை மிகவும் கவர்ந்த பகுதி அவரது அண்ணாமலைப் பல்கலைகழக வாழ்க்கைதான். உண்மையிலேயே நல்ல மாணவன், புத்திசாலியான மாணவன் வேண்டுமென்று பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் அலைந்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கே உரிய வேகத்தோடு பரிமேலழகர் கண்றாவியாக உரை எழுதி இருக்கிறார் என்று ராகவையங்கார் முதன்முதலாக எடுத்த தமிழ் வகுப்பில் இவர் நீட்டி முழக்கி பேசி இருக்கிறார். ஐயங்காருக்கோ பரிமேலழகர் மேல் அபார மரியாதை. ஆனால் இவர் இப்படி எடுத்தெறிந்து பேசுவதைக் கேட்டு, புத்திசாலிப் பையன்தான், நான் பாடம் எடுக்க சம்மதிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். மாணவர் சபையின் தலைவராக இருந்தபோது துணைவேந்தர் சாஸ்திரியார் பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்துகொண்டு மற்ற மாணவர்களை அப்படி கேள் இப்படி கேள் என்று சொல்லிக் கொடுத்து குறும்பு செய்வாராம். ஒரு முறை இங்கே இரண்டு மின்விசிறி சுழலவில்லையே, தலைவர் கவனிக்க வேண்டாமா என்று ஒரு மாணவனைத் தூண்டிவிட்டு கேள்வி கேட்க செய்தாராம். அ.ச.ஞா.வின் பதில் – “இந்த அற்ப வேலைகளை கவனிப்பது இந்த மாபெரும் மன்றத் தலைவரின் பணியன்று. இதற்கெனவே பெருந்தொகையைச் சம்பளமாகக் கொடுத்து, துணைவேந்தர் என்ற பெயரையும் கொடுத்து ஒருவரை நியமித்துள்ளார்கள். அவருக்குத் தகவல் அனுப்பி இவற்றை கவனிக்குமாறு செய்கிறேன்.” இந்த நக்கல் பேச்சைக் கேட்டு எல்லாரையும் விட விழுந்து விழுந்து சிரித்தது சாஸ்திரியார்தானாம்.

அ.ச.ஞா.வின் வார்த்தைகளிலேயே ராகவையங்கார், சாஸ்திரியார் இருவரோடும் ஒரு நாள்: (சுவாமிகள் என்று அவர் குறிப்பிடுவது ராகவையங்காரை)

தினந்தோறும் மாலை நான்கரை மணிக்குத் தன் தடிக் கம்பை ஊன்றிக் கொண்டு சுவாமிகள் வருவதை, அந்தக் கைத்தடி சிமெண்டுத் தரையில் பட்டு டொக் டொக் என்று ஒலி எழுப்புவதை வைத்தே அறியமுடியும். ஒரு நாள் நான்கரை மணியாகியும் சுவாமிகள் வரவில்லை. அவர் காலம் தாழ்த்தி வரக் கூடும் என்று நினைத்த நான் ஆசிரியருக்குரிய நாற்காலியில் அமர்ந்து கொண்டு பெருங்குரலில் “சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்” என்ற பாட்டைப் பாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று சுவாமிகள் வகுப்பினுள் நுழைந்துவிட்டார். டொக் டொக் சத்தம் கேட்காததால் ஏமாந்துவிட்டோம். காரணத்தைப் பின்னர் அறிந்தோம். அவர் பயன்படுத்தும் கைத்தடியின் அடியில் ரப்பர் வைத்துக் கட்டிவிட்டதால் சத்தம் எழவில்லை. அவரைக் கண்டவுடன் பதைபதைப்புடன் எழுந்து பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தோம். என் குரலை நன்கு அறிந்திருந்த சுவாமிகள் “முதலியார் மகனே! யார் பாட்டுடா அது?” என்று கேட்டார். அது பாரதியாருடைய பாடல் என்று விடையிறுத்தேன். சுவாமிகள் “ஏண்டா! அரசாங்கத்துக்கு விரோதமா நாட்டுப் பாடல்கள்தான் பாடியிருக்கிறான் பாரதின்னு நினைச்சேன், இப்படிக் கூடப் பாடியிருக்கிறானா? இன்னும் சில பாடல்களைச் சொல்லு” என்றார். நான் மேலும் பாடிக் கொண்டிருந்தேன். “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்று தொடங்கும் பாடலில் வரும்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்ற பகுதியைப் பாடும்போது கண்ணீர் வடிக்கத் தொடங்கிய சுவாமிகள், கண்ணீரும் கம்பலையுமாகவே கேட்டுக் கொண்டிருந்தார். பாட்டை நிறுத்தியவுடன் “அடேய்! நம்மாழ்வார் பாட்டு தெரியுமா உனக்கு!

நண்ணாதார் முறுவலிப்ப நள்ளூற்றார் கரைந்து ஏங்க
எண்ணாராத் துயர் விளைக்கும் இவையன்ன உலகியற்கை (2502)

என்ற பாடல்தான் ‘பஞ்சமும் நோயும்’ என்ற சொற்களில் வெளிப்படுகிறது” என்றார்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரியநிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

என்ற பகுதியைப் பாடியவுடன், “இதே கருத்தை நம்மாழ்வார் ஒரு பாடலில் பாடியுள்ளார்” என்று கூறிவிட்டு அந்த அடிகளையும் எடுத்துச் சொன்னார். அவை:

மண்ணையிருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும்
விண்ணைத் தொழுதவன் மேவுவைகுந்தமென்று கை காட்டும் – (நம். 2447)

அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – (நம் 2449)

சைவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நம்மாழ்வரைப் பற்றியோ அவர்கள் பாடல்கள் பற்றியோ ஒன்றும் தெரியாது.

அதன் பின்னர் அன்றிரவு துணைவேந்தரின் கார் மாணவர் விடுதிக்கு வந்து அ.ச.ஞா.வை அழைப்பதாகக் கூறி கார் டிரைவர் அழைத்துச் சென்றார். அப்போது:

துணைவேந்தர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ‘அடே! கம்மனாட்டி’ என்றுதான் என்னை அழைப்பார். உள்ளே நுழைந்தவுடன் இந்தச் செல்லப் பெயரில் என்னை அழைத்து “நீ சுவாமிகளுக்கு ஏதோ பாரதி பாட்டுப் பாடிக் காட்டினாயாமே! அதைக் கேட்டுச் சுவாமிகள் மிகவும் உருகிப் போய்விட்டார். எங்கே அதைத் திரும்பிப் பாடு” என்றார். எதிரே அமர்ந்து பாடினேன். எதிரே இருந்த இருவரும் பெருமூப்படைந்தவர்கள். ஆனாலும் என்ன! இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது. ஒருவர் தமிழறிஞர். உலகம் தலை மேல் வைத்துக் கொண்டாடும் மூதறிஞர்; மற்றொருவர் உலகம் முழுவதும் போற்றும் மாபெரும் அரசியல்வாதி, துணைவேந்தர் மகாகனம் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியார் அவர்கள் – இந்த இரண்டு மேதைகளும் கண்ணீர் பெருகப் பாரதியின் பாடல்களைக் கேட்டது எனக்கு வியப்பைத் தந்தது.

1938இல் பாரதியின் நாட்டுப் பாடல்கள் மட்டும்தான் மக்களால் ஓரளவு அறியப் பெற்றிருந்தன. ஏனைய பாடல்கள் சிறுசிறு நூல்களாக வந்திருந்த போதிலும் அவற்றை யாரும் விரும்பிப் படிப்பதில்லை. அன்றியும் அன்றைய தமிழ்ப் புலவர்கள் பாரதியை ஒரு கவிஞனாக நினைத்ததேயில்லை. மரபுக் கவிதைகளைத் தவிரப் பிறவற்றை அவர்கள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் இப்பெருமக்கள் இருவரும் பாரதியின் பாடல்களை வழிந்தோடும் கண்ணீருடன் கேட்டது பெருவியப்பை தந்தது. இரண்டு மாமனிதர்களைச் சந்தித்ததாக அன்று நான் புரிந்துகொள்ளவில்லை. அறுபது ஆண்டுகள் கழித்து இப்போது அதனை உணர்கிறேன்.

ஓப்பன் ரீடிங் ரூம் தளத்தில்தான் நான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். தளத்தையே இப்போது காணோம். நல்ல வேளையாக இங்கே அவரது பல புத்தகங்கள் கிடைக்கின்றன.

தம்பியர் இருவர் என்ற புத்தகத்தை கொஞ்சம் முயற்சி செய்து படித்தேன். அ.ச.ஞா. கம்பனை ஆராய்வது மட்டுமில்லை அனுபவிக்கவும் செய்கிறார். கம்பன் கவிதை புரிகிறதோ இல்லையோ அவர் ரசிக்கிறார், அனுபவிக்கிறார் என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது. இந்தப் புத்தகம் ஒரு சிறந்த மேடைப் பேச்சாக இருக்கும். ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் புத்தகமும் இப்படிப்பட்ட உணர்வைத்தான் ஏற்படுத்தியது. இன்று இப்படி சிறப்பாக உரையாற்றக் கூடியவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சாகித்ய அகாடமி விருது பெற்ற கம்பன் – ஒரு புதிய பார்வை புத்தகத்தை என்னால் படிக்க முடியவே இல்லை. முதலில் கம்பனைப் படித்துவிட்டுத்தான் இதை எல்லாம் படிக்க வேண்டும். இதைப் போலத்தான் பெரிய புராணம் – ஓர் ஆய்வு என்ற புத்தகமும். பெரிய புராணத்தை கரைத்துக் குடித்திருக்கிறார், நானெல்லாம் ஆரம்பிக்கவே பல வருஷம் ஆகும்.

மற்ற புத்தகங்களில் திருவிக என்ற புத்தகம் அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பு. பேச்சாக இன்னும் நன்றாக இருந்திருக்கும். தமிழ் நாடக வரலாறும் சங்கரதாஸ் சுவாமிகளும் என்ற புத்தகம் எனக்கு கொஞ்சம் போரடித்தது. .

மிகவும் சுவாரசியமான memoirs. கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
நான் கண்ட பெரியவர்கள் மின்னூல்
விக்கி குறிப்பு

உடுக்கை இழந்தவள் – என் சிறுகதை

என் இன்னொரு மகாபாரதப் பின்புலச் சிறுகதை, தமிழ் ஹிந்து தளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவினருக்கு நன்றி!

இந்தச் சிறுகதை இன்னும் நிறைய தூரம் போக வேண்டி இருக்கிறது, ஆனால் it has promise என்று பி.ஏ. கிருஷ்ணன் சொன்னதும், நண்பர் ரெங்கசுப்ரமணி என் மற்ற சிறுகதைகளை விட இந்த கதையின் அமைப்பு நன்றாக இருக்கின்றது என்றதும் முகினுக்கு பிடித்திருந்ததும் ஒரு சின்ன மகிழ்ச்சி! சுந்தரேஷின் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு நன்றி!

பாரதப் போர் முடிவில் யுதிஷ்டிரன் கர்ணன் தன் அண்ணன் என்று தெரிந்து வருந்துகிறான். பாஞ்சாலி சபையில் அவமதிக்கப்படும்போது தான் தலை குனிந்து நின்றதையும் அப்போது கர்ணனின் பாதங்கள் குந்தியின் பாதங்களை ஒத்திருந்ததை கவனித்ததையும் அது அவனுடைய கோபத்தைத் தணித்து கொஞ்சம் ஆறுதல் தந்ததையும் நினைவு கூர்கிறான். அந்தப் புள்ளியிலிருந்துதான் இந்தக் கதை உருவானது.

உடுக்கை இழந்தவள்

தம்பியர் புடைசூழ யுதிஷ்டிரர் சபா மண்டபத்துக்கு வரும்போது சபை கூடியிருந்தது. உள்ளே நுழைந்ததும் அவரது கண்கள் தன்னிச்சையாக விதுரரை நோக்கின. தலையை தாழ்த்தி வணக்கம் சொல்ல வேண்டும் என்று எண்ணினார், அந்த எண்ணம் மூளையிலிருந்து தலைக்குச் சென்று செயலாக மாறுவதற்கு முன் விதுரர் தன் கண்களை திருதராஷ்டிரர் பக்கம் சுழற்றிக் காட்டினார். யுதிஷ்டிரர் வணக்கத்தை எண்ணத்தோடு நிறுத்திக் கொண்டு திருதராஷ்டிரரைப் பணிய அரியணைப் பீடம் நோக்கி நடந்தார். சாத்திரம் அறிந்த தானே முறைமையில் கோட்டை விடும்போது தம்பியர் தாமதம் செய்துவிட்டனர் என்று குறை சொல்லிப் பயனில்லை என்று நினைத்துக் கொண்டார்.

வழியில் இரண்டு பாதங்கள் அவரது கண்களில் பட்டன. கட்டை விரலை விட நீளமான இரண்டாவது, மூன்றாவது விரல்கள். கட்டை விரல் அளவு நீளம் உள்ள மற்ற இரண்டு விரல்கள். அவர் பார்த்த வரையில் குந்திக்கு மட்டும்தான் அப்படி கால் விரல்கள் அமைந்திருக்கும். பட்டாடை மூடி இருந்தாலும் பளிங்குத் தரையில் பொற்கவசத்தின் மின்னலும் தெரிந்தது. ‘இவன் ஒருவன் மட்டும் இல்லை என்றால் துரியோதனனைப் பற்றி அச்சமே வேண்டியதில்லை’ என்று அன்றைக்கு முதல் முறையாக நினைத்துக் கொண்டார்.

‘ஆட்டத்தைத் தொடங்கலாமே!’

பாண்டவர்கள் தாள் பணியும்போது கூட பீஷ்மரின் கண்கள் கர்ணனிடம்தான் நிலைத்திருந்தன. கௌந்தேயா, குருவம்சத்தின் அழிவைக் காட்டும் நிமித்தங்களை சில நாட்களாகவே கண்டு வருகிறேன், உன் ஒருவனால்தான் அழிவைத் தடுக்க முடியும்! உன் ஒருவனுக்குத்தான் துரியன் பணிவான், நீ கௌந்தேயன் என்று அறிந்தால் யுதிஷ்டிரனும் மறுபேச்சு பேசமாட்டான். குரு வம்சத்தின் இந்த இரண்டு கிளைகளையும் உன்னால்தான் இணைக்க முடியும் கர்ணா! இவன் க்ஷத்ரியன் அல்ல, சூதன் என்றும் இழித்துப் பேசும் அடுமடையர்களே, அவன் உடலோடு ஒட்டிய பொற்கவசம் கூடவா கண்ணில் படவில்லை? அதை விடவும் வேறு நிரூபணம் வேண்டுமா?

‘நூறு முத்துமாலை பணயம்!’

வந்ததிலிருந்து துரியோதனனையே பார்த்துக் கொண்டிருந்த பீமன் தன் கவனத்தை கர்ணன் மீது திருப்பினான். என்ன உயரம், எத்தனை வலுவான தசைகள்! இவனாலும் ஜராசந்தனை மற்போரில் தோற்கடித்திருக்க முடியுமோ? ஜராசந்தன் எத்தனை பலசாலி என்றாலும் உடலோடு பிறந்த கவசத்தை உடைத்தால்தானே இவனை வெல்ல முடியும்? பார்த்தனின் வித்தையையும் என் வலிமையையும் ஒரு சேரப் பெற்றவனா இவன்? துரியோதனனைக் கூட வென்றுவிடலாம் போலிருக்கிறது…

‘ஆயிரம் யானை பணயம்!’

துரோணர் நாற்பத்தெட்டாவது முறையாக அர்ஜுனனை நோக்கினார். பெருமிதம் அவரது கரிய முகத்தை ஒளிர வைத்திருந்தது. சபைக்குள் நுழைந்ததும் அர்ஜுனனின் கண்கள் முதலில் தன்னைத் தேடுமா அல்லது கர்ணனைத் தேடுமா என்று அவருக்குள் இருந்த பதைபதைப்பு மறைந்திருந்தது. பார்த்தனின் உள்ளத்தில் தனக்கே முதலிடம் என்பதில் சந்தேகமே இல்லை என்று நினைத்துக் கொண்டார். ஏன் இருக்காது? அவனை இன்றைய தலைமுறையின் இணையற்ற வில்லாளியாக உருவாக்கி… ஆனால் இந்தக் கவச குண்டலதாரி…

‘இரண்டாயிரம் சீனத்துப் பட்டாடை பணயம்!’

அர்ஜுனன் துரோணரை ஓரக்கண்ணால் பார்த்தான். ஆசார்யரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டோம் என்று நினைத்து தன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டான். முதலில் கர்ணனை என் கண்கள் தேடிவிடுமோ என்ற பதைபதைப்பு அவருக்கு இருந்திருக்கும் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்தான். அன்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் மாமனிதர் என்று நினைத்துக் கொண்டான். அண்ணாவிடம் பேசி துரோணரின் குருகுலத்தை இந்திரப்பிரஸ்தத்துக்கு மாற்றிவிட வேண்டும். அவருக்குத் தெரியுமா என்னால் அவனை நேராகப் பார்க்க முடிவதில்லை என்று? வந்து இரண்டு நாழிகை இருக்கும் இன்னும் அவன் பக்கம் மட்டும் தலையை திருப்பவே முடியவில்லை. ஆனால் மனக்கண்ணால் அவனைப் பார்க்காத நொடியில்லை. இம்மி இம்மியாக அவன் உடலைப் பார்க்கிறேன், கவசத்துக்கும் உடலுக்கும் ஒரு சின்ன இடைவெளி கூட இல்லை. காற்று கூட உள்ளே புக முடியாது போலிருக்கிறது. அவன் குளிக்கும்போது அவன் மார்பு ஈரமாகுமா? நான் குளிக்கும்போது என் விலா எலும்புகள் ஈரமாகின்றனவா என்ன? இவன் கவசத்தை எப்படித் துளைப்பது? இவன் திறமையை சமாளித்துவிடலாம், இவன் கவசத்தை எப்படி சமாளிப்பது? இவனை எப்படித்தான் வெல்வது?

‘அடுத்த வருஷ வரிப்பணம் பணயம்!’

துரியோதனன் தன் பார்வையை பீமனிடமிருந்து திருப்பினான். அனிச்சையாக கர்ணனைப் பார்த்து புன்னகைத்தான். கர்ணனின் பதில் புன்னகையைக் கண்டதும் அவன் மனம் மேலும் பூரித்தது. உன் வில்லையும் கவசத்தையும் அந்த தசரத ராமனால் கூட வெல்ல முடியாதடா! இருந்தும், சூதில் வெல்வது உன் வீரத்துக்கு இழிவுதான் என்று தெரிந்தும், நான் அந்த வழியைத் தேர்ந்தெடுத்ததும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டாயே, உன்னைப் போல் நண்பன் இது வரை இந்த உலகத்தில் தோன்றியதில்லையடா!

‘அஷோமதி ஆற்றை ஒட்டிய பகுதிகள் பணயம்!’

கிருபரின் மனம் மேலும் கவலையில் ஆழ்ந்தது. சகுனி இப்படி தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறாரே, இவை என்ன பகடைகளா அல்லது அவரது ஆறாவது, ஏழாவது விரல்களா? இந்த நால்வரின் எண்ணத்தில் நல்லவையே உதிக்காதா? அதுவும் க்ஷத்ரியர் அவையில் இந்த சூதனுக்கு என்ன வேலை? ஆனால் சூதனுக்கு உடலோடு ஒட்டிய பொற்கவசம் எப்படி? எந்தத் தேரோட்டி கவசம் அணிகிறான்? தேரோட்டிகளுக்கு கவசம் அணிவிப்பது நல்ல யோசனையாக இருக்கிறதே! அவர்களை எதிராளியின் வில்லிலிருந்தும் வேலிலிருந்தும் பாதுகாக்குமே! துரோணனிடம் ஆலோசிக்க வேண்டும்…

‘மாயராஷ்டிரபுர நகரம் பணயம்!’

பகடைகளை உருட்டிய சகுனியின் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்திருந்தது. பார் மருகா, என் திறமையைப் பார்! கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி நீ சக்கரவர்த்தி ஆகப் போவது நிச்சயம்! என்னதான் வீரன் என்றாலும் கர்ணனின் வில் வெற்றியைப் பெற்றுத் தரும் என்பது அவ்வளவு நிச்சயம் இல்லை மருகா!

‘இந்திரப்பிரஸ்த அரசு பணயம்!’

விதுரரின் மனத்தில் இருந்த உளைச்சல்கள் அத்தனையும் அந்தக் கணத்தில் நீங்கின. இனிமேல் சகோதர யுத்தத்தைத் தவிர்க்க ஒரே வழிதான் இருக்கிறது. ஐவரும் திராவிடத்துக்கு சென்று தோள் வலியால் ஒரு அரசை அமைத்துக் கொள்ளட்டும். அண்ணனிடமும் பிதாமகரிடமும் ஆசார்யரிடமும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். இந்த மூர்க்கன் அதற்கும் தடை சொல்லாமல் இருக்க வேண்டும். கர்ணனை சம்மதிக்க வைத்துவிட்டால் போதும், மூர்க்கனை வழிக்கு கொண்டு வந்துவிடலாம். அவனை உதவி என்று கேட்டால் போதும் உடலோடு ஒட்டிப் பிறந்த கவசத்தைக் கூட அறுத்துக் கொடுத்துவிடுவான். விதுரர் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்.

‘சகதேவன் பணயம்!’

நகுலனின் கண்கள் மூடியிருந்தாலும், சபை முழுவதும் சகதேவனையே பார்ப்பதையும், சகதேவனின் முகத்தின் உறைந்த புன்னகையின் அழகையையும் உணர்ந்தான். அவன் உடலெல்லாம் உஷ்ணமாக இருந்தது. இத்தோடு தமையன் நிறுத்திக் கொள்ளக் கூடாது, சகதேவன் அடிமை என்றால் நான் மட்டும் சுதந்திரமாக இருந்து என்ன பயன்? நேராக போரில் ஈடுபட்டிருக்கலாம், எதற்காக சூதாட ஒத்துக் கொண்டார்? அது சரி, தெரிந்த விஷயம்தானே? பெரியப்பா, தாத்தா, தம்பியருடன் போரிட விருப்பமில்லை என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் கவசத்தின் மீதுள்ள அச்சம்தானே இவரை சூதாட வைத்திருக்கிறது?

‘நகுலன் பணயம்!’

சகதேவன் இப்போது நகுலனை ஏறிட்டுப் பார்த்தான். சகதேவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த நகுலனும் தன் கண்களைத் திறந்து புன்னகைத்தான். இந்த அழகனும் அடிமையா? ஆசைகளும் அச்சமும் அகங்காரமும் இல்லாத மாமனிதன். காற்றிலும் கடலிலும் ஏன் எல்லாரும் அஞ்சும் கவசத்திலும் கூட அழகையே காணும் ரசிகன். அண்ணா, என்னோடாவது நிறுத்திக் கொண்டிருக்கக் கூடாதா?

‘மாற்றாந்தாயின் புதல்வர்களை மட்டும்தான் பணயம் வைப்பாயா யுதிஷ்டிரா?’

அஸ்வத்தாமனின் கண்கள் சுருங்கி இருந்தன. அர்ஜுனன் அடிமையா? இது என்ன குறுக்கு வழி கர்ணா? உன் கவசத்துக்கு இனி என்ன பயன்? நீ அர்ஜுனனை போரில் வென்றிருந்தால் சூதன் என்று இழித்துப் பேசி உனக்கு கற்பிக்க மறுத்த என் தந்தைக்கும் மாமனுக்கும் சரியான பாடமாக இருந்திருக்கும். சொந்த மகனை விடுத்து பார்த்தனைத்தான் உலகின் சிறந்த வில்லாளியாக ஆக்குவேன் என்று சூளுரைத்த என் தந்தைக்கும் தலை குனிவு ஏற்பட்டிருக்கும்…

‘பீமன் பணயம்!’

இது தவறு. பெருந்தவறு. மூர்க்கனான எனக்கே தெரிகிறது. பீமன் இயல்பாகவே காட்டுமிராண்டி, இப்போது கரை மீறி எழும் வெஞ்சினத்தால் என் மார்பைப் பிளந்து என் ரத்தத்தைக் குடிக்கத்தான் போகிறான். இல்லை, அப்படி எதுவும் நடந்துவிடாது. என் கதாயுதம் என்னைக் காக்கிறதோ இல்லையோ, அண்ணாவின் கதாயுதம் என்னைக் காக்கிறதோ இல்லையோ கவச குண்டலதாரி என்னைக் காப்பான்.

‘உன் மனைவியை பணயம் வை, வென்றால் நீ தோற்ற அனைத்தையும் திரும்பப் பெறலாம்!’

துரியா, இனி நீதான் சக்கரவர்த்தி! இந்தக் குருடனின் ஆசை நிறைவேறியதடா! ஆனால் அந்தக் கிருஷ்ணனை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது, அவன் சக்கரத்துக்கு எதிர் இவன் வில் தாக்குப் பிடித்துவிடுமா?

‘அவளை இழுத்து வா துச்சாதனா!’

நான் வில் கற்கக் கூடாதா துரோணரே? நான் அர்ஜுனனுடன் போட்டியிடக் கூடாதா கிருபரே? நான் சுயம்வரத்தில் பங்கேற்கக் கூடாதா பாஞ்சாலி?

‘ஐவரின் மனைவி பத்தினி அல்ல!’

அறுவருக்கும் பத்தினியாக இருந்திருந்தால்…

‘சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு!’

திரௌபதி கண்களைத் திறந்தாள். அவள் காலடியில் துச்சாதனன் விழுந்து கிடந்தான். பொன்னிறச் சேலைகள் பொதியாகக் கிடந்தன. சுற்றுமுற்றும் பார்த்தவள் கர்ணனின் கோலத்தைக் கண்டதும் திடுக்கிட்டாள். கர்ணன் தன் வெண்பட்டாடையை இழுத்து இழுத்து தன் மார்பை மீண்டும் மீண்டும் மூட முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் மார்பின் கருமுடிகள் அந்த வெண்பட்டாடையை கருநிறமாகவே காட்டின.


Disclaimer – பாஞ்சாலியின் ஆடையை நீக்கச் சொன்ன தருணத்தில் கர்ணனின் தெய்வீக ‘ஆடை’ – கவசம் – அவனை விட்டு நீங்கியது என்பது என் கற்பனை மட்டுமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

காற்று வெளியிடை – திரைப்பட விமர்சனம்

மாறுதலுக்காக இன்று திரைப்பட விமரிசனம்

நாங்கள் குடும்பமாக ஒரு திரைப்படம் சென்று வெகு நாளாகிறது. சரி மணிரத்னம் படமாயிற்றே என்று துணிந்து நானும், என் மனைவி ஹேமாவும் இளையவள் க்ரியாவும் திரை அரங்குக்குப் போனோம். வியாழன் இரவுக் காட்சிக்கு பாதி அரங்கு நிறைந்திருந்தது. இந்த ஊரில் அது பெரிய விஷயம்.

பல நல்ல அம்சங்கள் – ஒளிப்பதிவு, விஷுவலாக நல்ல காட்சிகள், இசை, அதிதி ராவின் நடிப்பு, நடன அமைப்பு, தோழி பாத்திரம், கார்த்தியின் குடும்பச் சித்தரிப்பு – இருந்தாலும் படம் இழுவைதான். நிறைய ஸ்கோப் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லை. பலவீனமான திரைக்கதை படத்தின் நல்ல அம்சங்களை அமுக்கிவிடுகிறது.

இதே படத்தை ஒரு புதுமுக இயக்குனர் எடுத்திருந்தால் இந்த நல்ல அம்சங்கள்தான் கண்ணில் பட்டிருக்கும். மணிரத்னம் திரைப்படத்தில் நமது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஓட்டைகள் நிறைந்த திரைக்கதை. பாகிஸ்தான் ஜெயிலிலிருந்து தப்புவது ரொம்ப சுலபமாக இருக்கிறது. தப்பிய பிறகு பஸ்ஸில் போக, சாப்பிட பணத்துக்கு என்ன செய்தார்கள்? சரி பணம் கிடைத்தது என்றே வைத்துக் கொள்வோம். ஆஃப்கானிஸ்தான் பக்கம் போனால் தேட மாட்டார்கள் என்று புத்திசாலித்தனமாகத் திட்டம் போடுபவர்கள் முடியை வெட்டிக் கொள்ளலாம், மீசையை சிரைத்துக் கொள்ளலாம் என்று கூடவா திட்டம் போட மாட்டார்கள்? அதே மாதிரி கன்னாபின்னாவென்று பறக்கும் சுருட்டை முடியோடுதான் கடைசி வரை கார்த்தியின் தோழர் வருகிறார்.

கார்த்தி மூன்று வருஷமாக செஞ்சிலுவை முகாம் முகாமாகத் தேடுகிறாராம். ஏன் அதிதியின் அப்பா, அம்மாவிடம் கேட்க மாட்டாரா? அட கூட வேலை செய்த அண்ணனின் ரெகார்டைப் புரட்டினால் நாலு உறவினர் நண்பர் பேர் கிடைக்காதா? அட இவரை விடுங்கள், கார்த்தியை விட்டுப் பிரியும் அதிதி தனக்கு இத்தனை நெருக்கமாக இருக்கும் தோழியிடம் கூட வருஷக் கணக்காக ஒரு வார்த்தை பேச மாட்டாராமா? அதிதிக்கு குழந்தை இருப்பது அந்த நெருக்கமான தோழிக்குக் கூடத் தெரியாதாமா? கடைசியில் அந்த அழகான நிலப்பரப்பில் இருவரும் இணையும் காட்சியைத் திட்டமிட்டுவிட்டார், அதற்காக இத்தனை பூ சுற்றுவதா?

கார்த்தியின் பாத்திரத்தை இன்னும் நன்றாகச் செதுக்கி இருக்க வேண்டும். அவரை பலவீனங்கள் உள்ள, தன்னைப் பற்றி மட்டுமே எண்ணும் ஆணாதிக்கவாதியாக காட்ட வேண்டும் என்றால் அதற்காக இன்னும் முயன்றிருக்க வேண்டும். அதற்கான ஸ்கோப் இருக்கிறது. தன் அப்பாவைப் போலவே நடந்து கொள்கிறார் என்று இன்னும் இரண்டு காட்சி வைத்திருக்கலாம். ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு வரச் சொன்னதையே மறந்துவிட்டார் என்றால் மிகச் செயற்கையாக இருக்கிறது.

கார்த்தி சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். மணிரத்னம் அவரிடம் ஸ்மைல் பண்ணுப்பா என்று சொல்லிவிட்டார் போலிருக்கிறது, படம் பூராவும் என்னவோ பற்பசை விளம்பரம் போல அதேதான். கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்.

துணைப் பாத்திரங்கள் ஓரளவு நன்றாக வந்திருக்கின்றன. அதிதியிடம் ஆர்.ஜே. பாலாஜிக்கு இருக்கும் ஈர்ப்பை அவர் subtle ஆகக் காட்டி இருக்கிறார். தோழியின் பாத்திரம் யதார்த்தமாக இருக்கிறது. கார்த்தியின் அப்பாவாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார்.

பாடல்கள் நன்றாக இருக்கின்றன. மணிரத்னம் படத்தின் பாடல்கள் எப்போதுமே மிக அழகாக படமாக்கப்படுபவை. இதுவும் அப்படித்தான். அழகியே, வான் வருவான், சாரட்டு வண்டியில், கேளாயோ எல்லாமே அமர்க்களமான பாடல்கள். அதுவும் கேளாயோ படத்துக்கான நடனம் (டாங்கோவா?) பிரமாதம். சாரட்டு வண்டியில் பாட்டு ஒரு பழைய பாட்டை நினைவுபடுத்துகிறது. (சம்திங் சம்திங் அரச்ச சந்தனம் மணக்கும் வேளையில?) வார்த்தைகள் நினைவு வரவில்லை. யாருக்காவது தெரிகிறதா?

சாதாரணமாக எனக்கு ஒளிப்பதிவு எல்லாம் கண்ணிலே படவே படாது. ஆனால் இந்தப் படம் ஒரு visual treat. முதலில் பனியில் பறக்கும் காட்சிகள், காஷ்மீரின் (எந்த ஊரில் எடுக்கப்பட்டதோ?) காட்சிகள், கார்த்தியின் கார் சேஸ் காட்சி, கடைசியில் இருவரும் இணையும் இடம் எல்லாமே பிரமாதமாக இருக்கின்றன. பல சமயம் என் மனதில் எந்த ஊரில் எடுத்தார்கள் என்று தெரிந்தால் போகலாமே என்ற ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது, படம் மனதை ஆக்கிரமிக்கவில்லை.

மணிரத்னம் திரைப்படம், மௌனராகம் கார்த்திக் போல ரொமாண்டிக் ஹீரோ என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால் – நல்ல பாட்டுகள், காட்சிகள், ஓரளவு நல்ல நடிப்பு இருக்கும் ஒரு லைட் என்டர்டெயினர் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இருந்தால் – நிச்சயம் ரசிக்கலாம். நாயகன், தளபதி, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் ரேஞ்ச் திரைப்படம் என்றெல்லாம் எண்ணிப் போனால் ஏமாறுவீர்கள்.

என் 13 வயதுப் பெண் க்ரியா கொஞ்சம் வெளிச்சம் வந்தாலும் தன் செல் ஃபோனைத்தான் நோண்டிக் கொண்டிருந்தாள் என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

ஒரு பழைய நாடகம் – வி.வி. ஸ்ரீனிவாச ஐயஙகார் எழுதிய ‘கீதோதயம்’

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் ஓரிரு தசாப்தங்களிலும் மயிலாப்பூர் வக்கீல்கள் என்ற அடையாளப்படுத்தக் கூடிய ஒரு குழு தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. பிராமணர்கள். வக்கீல் தொழிலில் வெற்றி அடைந்து கொண்டிருந்தார்கள். ஓரளவு பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கி இருந்தார்கள். காங்கிரஸ் போன்ற ஸ்தாபனங்களை ஏறக்குறைய கைப்பற்றியே இருந்தார்கள். சென்னையின் பெரிய மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி.எஸ். சிவசாமி ஐயர் (மயிலாப்பூர் பி.எஸ். பள்ளியை நிறுவியவர்), எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார், சத்தியமூர்த்தி, வி.சி. கோபால்ரத்னம் போன்ற பெயர்கள் இன்றும் நினைவில் இருக்கலாம்.

வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் ஒரு மயிலாப்பூர் வக்கீல்தான். பம்மல் சம்பந்த முதலியாரின் பள்ளி(?) தோழர் என்று நினைக்கிறேன். அவ்வப்போது நாடகங்கள் எழுதுவார். அவரது சில நாடகங்களைப் பற்றி இங்கே ஒரு சின்னக் குறிப்பைப் படிக்கலாம்.

அவரது இன்னொரு நாடகம் – கீதோதயம் – மின்பிரதியாகக் கிடைத்தது. கண்ணனின் குழந்தைப் பருவத்தை வருணிக்கும் நாடகம். புதிய தரிசனம் என்று எதுவுமில்லை என்றாலும் இன்றும் படிக்கக் கூடிய சுவாரசியமான சித்தரிப்பு.

நாடகத்தில் என்னைக் கவர்ந்தது அதன் மொழி. நாரதரும் வியாசரும் கடினமான மணிப்பிரவாளத்தில் பேசுகிறார்கள். கிருஷ்ணனின் சக ஆயர் தோழர்கள் கொச்சை மொழியில் பேசுகிறார்கள். கண்ணன் நடுவாந்தரமான, இன்றும் புரியும் தமிழில் பேசுகிறான். மனிதர் யோசித்து எழுதி இருக்கிறார்.

பூதனை, கண்ணன் வெண்ணெய் திருடித் தின்பது, சகடாசுரன், காளிங்க மர்த்தனம், கோவர்த்தனம், குழல் ஊதுவது, பெண்கள் மயங்குவது என்று எல்லோருக்கும் தெரிந்த நிகழ்ச்சிகள்தான் நாடகமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சுவாரசியம் குறையாமல் எழுதி இருக்கிறார்.

நாடகத்தை இணைத்திருக்கிறேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தோல்வி – Uncle Petros and Goldbach’s Conjecture

லாஜிகாமிக்ஸ் புத்தகத்தை எழுதிய அதே அப்போலோஸ் டாக்சியடிஸ்தான் இந்தப் புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். கொஞ்சம் கணிதம் தெரிந்தால் இந்தப் புத்தகத்தின் பின்புலத்தை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால் புத்தகம் கணிதத்தைப் பற்றி அல்ல. திறமை இருந்தும் தோற்பதைப் பற்றி. உங்களுக்குத் திறமை இருக்கிறது. ஆனால் எத்தனை திறமைசாலி நீங்கள்? கிரிக்கெட்டில் உங்களுக்கு நன்றாக பேட்டிங் வருகிறது. ஆனால் நீங்கள் இன்னொரு டெண்டுல்கரா? அட டெண்டுல்கர் அளவுக்கே திறமைசாலி என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்த அன்று அம்பயர் தவறாக அவுட் கொடுத்துவிட்டால்? அன்றைக்கு பார்த்து பிடிக்கவே முடியாத ஷாட்டை எப்படியோ காட்ச் பிடித்துவிட்டால்? நீங்கள் டெண்டுல்கராகப் பரிமளிக்கிறீர்களா இல்லை அவரது பள்ளித் தோழர் காம்ப்ளியாக முடிகிறீர்களா என்று யாரால் சொல்ல முடியும்? அட டெண்டுல்கரையும் காம்ப்ளியையும் விடுங்கள் எழுபதுகளில் காவஸ்கரும் விஸ்வநாத்தும் ஏறக்குறைய சமமான திறமை வாய்ந்தவர்கள்தான். இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு தூண்களாகத்தான் இருந்தார்கள். காவஸ்கரே மீண்டும் மீண்டும் என்னை விட விஸ்வநாத்தான் நல்ல பாட்ஸ்மன் என்று சொல்லி இருக்கிறார். இன்று விஸ்வநாத்தை நினைவு வைத்திருப்பவர்கள் யார்?

புத்தகம் அப்படி திறமை வாய்ந்த ஒரு கணித ஆராய்ச்சியாளரை, அவரது தோல்வியைத்தான் பேசுகிறது. தோல்வியின் சித்தரிப்புதான் இந்தப் புத்தகத்தை உயர்த்துகிறது. அவர் என்ன ஆராய்ச்சி செய்தார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

புத்தகத்தின் நாயகன் பெட்ரோஸ் பெரியப்பா. அவரது தம்பியின் மகனின் கண்ணோட்டத்தில் கதை சொல்லப்படுகிறது. தம்பிகள் நடத்தும் தொழிற்சாலையிலிருந்து பெரியப்பாவுக்கு பணம் வருகிறது. தனியாக செஸ் விளையாடிக் கொண்டும் தோட்ட வேலை செய்து கொண்டும் காலத்தைக் கழிக்கிறார். ஆனால் தம்பிகளுக்கு அண்ணன் மேல் நிறைய கோபம். கூட சேர்ந்து தொழில் நடத்தவில்லை என்றல்ல. கணிதத்தில் மேதைமை இருந்தும் பேரும் புகழும் பெறாமல் இப்படி ஓபி அடிக்கிறாரே என்றுதான் கோபம்.

சிறு வயதிலேயே பெட்ரோஸ் கணித மேதையாக வருவார் என்று தெரிகிறது. ஓரளவு பணக்காரக் குடும்பம். பணப் பிரச்சினைகள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடிகிறது. ராமானுஜன், ராமானுஜனைக் ‘கண்டுபிடித்த’ ஹார்டி, லிட்டில்வுட் ஆகியோரோடு சேர்ந்து ஆய்வுகள் செய்கிறார். புகழை பங்கு போட்டுக் கொள்ள விரும்பாததால் அவர்களிடமிருந்து பிரிந்து வந்து கணிதத்தில் இன்றும் நிரூபிக்கப்படாத Goldbach’s Conjecture-ஐ நிரூபிக்க முயற்சி செய்கிறார். தனக்கு முன் யாரும் அதை நிரூபித்துவிடக் கூடாது என்று தன் ஆய்வை ரகசியமாக வைத்திருக்கிறார், யாரிடமும் பேசுவதே இல்லை. நிரூபிக்க முடியாவிட்டாலும் வேறு சில தேற்றங்களைக் கண்டுபிடிக்கிறார். அதை வெளியே சொன்னால் அதை வைத்து தன்னை யாரும் முந்திவிடக் கூடாது என்று ரகசியமாக வைத்திருக்கிறார். கடைசியில் அதை வெளியிடும்போது அவருக்கு முன்னால் வேறு ஒருவர் அந்தத் தேற்றங்களை கண்டுபிடித்தது தெரிய வருகிறது. விடாமல் முயற்சிக்கிறார், அப்போது கர்ட் கோடலின் Incompleteness Proof வெளிவருகிறது. தான் இத்தனை வருஷம் உழைத்த ஒரு விஷயத்தை நிரூபிக்க முடியுமா இல்லை முடியவே முடியாதா என்று கூட சொல்ல முடியாத நிலையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு செஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்.

நான் இதில் வரும் கணிதக் கருத்துகளை எல்லாம் விவரிக்கப் போவதில்லை. ஆனால் வேறொரு தளத்தில் வைத்துப் பார்க்கலாம். எழுதும் எல்லாரும் ஜெயமோகன் ஆகிவிட முடியாது, உங்கள் மனதில் இருக்கும் ஒரு கரு வேறொருவரால் எழுதப்படும்போது ஏற்படும் ஏமாற்றம் எல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவைதானே! அந்த சித்தரிப்புக்காகப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், கணிதம்

அசிமோவின் ரோபோ துப்பறியும் நாவல்கள்

issac_asimovதுப்பறியும் கதைகள், SF இரண்டும் எனக்கு பிடித்தமான genre-கள். அசிமோவின் எலைஜா பேலி நாவல்கள் இந்த இரண்டு genre-களையும் ஓரளவு வெற்றிகரமாக இணைக்கின்றன.

அசிமோவின் எந்திரன்கள் அசிமோவின் புகழ் பெற்ற மூன்று விதிகளால் கட்டப்பட்டவர்கள்.

  • A robot may not injure a human being or, through inaction, allow a human being to come to harm.
  • A robot must obey orders given it by human beings except where such orders would conflict with the First Law.
  • A robot must protect its own existence as long as such protection does not conflict with the First or Second Law.

நாவல்களில் சித்தரிக்கப்படும் எதிர்கால உலகத்தில் பூமிக்கு வெளியே 50 கிரகங்களில் மனிதர்கள் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஸ்பேசர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை முறை ரோபோக்களை – எந்திரன்களை – அடிப்படையாகக் கொண்டது. 200, 300 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள். பூமியோ நெரிசல் மிக்க நகரங்களை சுற்றி இயங்குகிறது. நகரங்கள் மண்ணுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. திறந்த வெளியில் நடமாடுவது கூட மனிதர்களுக்கு பழக்கம் விட்டுப்போயிருக்கிறது, பயப்படுகிறார்கள். மனிதர்கள் எழுபது, எண்பது வயது வரைதான் உயிரோடிருக்கிறார்கள். எந்திரன்கள் பயன்படுத்தப்பட்டாலும் எந்திரன்களைப் பற்றி நிறைய பயம், அவநம்பிக்கை இருக்கிறது. அந்த அவநம்பிக்கை ஸ்பேசர்களிடமும் இருக்கிறது. ஸ்பேசர்கள் எந்திரன்களால் சொகுசாக வாழ்கிறார்கள். ஸ்பேசர்கள் ஒஸ்தி, மனிதர்கள் மட்டம் என்ற எண்ணம் ஸ்பேசர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் அச்சு அசல் மனிதனைப் போன்ற ஒரு எந்திரன் – டானீல் – உருவாக்கப்படுகிறது. மனிதர்களால் டானீல் எந்திரன் என்று கண்டுபிடிக்கவே முடியாது. அந்தப் பின்புலத்தில் மூன்று மர்மங்கள். முதல் மர்மத்தில் – Caves of Steel (1954) – டானீலை உருவாக்கிய விஞ்ஞானி கொல்லப்படுகிறார். எந்திரன்களிடம் அவநம்பிக்கை கொண்ட எலைஜா டானீலுடன் சேர்ந்து துப்பறிய வேண்டி இருக்கிறது. இரண்டாவது புத்தகத்தில் – Naked Sun (1957) – சோலாரியா என்ற கிரகத்தில் நடக்கும் கொலையை எலைஜாவும் டானீலும் சேர்ந்து துப்பறிகிறார்கள். மூன்றாவது புத்தகத்தில் – Robots of Dawn (1983) – ஆரோரா கிரகத்தில் டானீலைப் போன்ற இன்னொரு எந்திரன் ‘கொல்லப்படுகிறது’.

Mirror Image என்ற ஒரு சிறுகதையும் உண்டு. இதே சட்டகம்தான்.

பேலி மறைந்த பிறகும் டானீல் மட்டும் வரும் இன்னொரு கதையும் – Robots and the Empire (1985) – உண்டு. அதில் எந்திரன்கள் ஏற்கனவே உள்ள மூன்று விதிகளை விடவும் முக்கியமான இன்னொரு விதியை தாங்களே கண்டுபிடிக்கிறார்கள். Zeroth Law of Robotics!

கதைகளின் பலம் அதன் சட்டகம் மட்டும்தான். துப்பறிவது அத்தனையும் இந்த எந்திரன்களை கட்டுப்படுத்தும் விதிகளின் அடிப்படையில் மட்டுமே. கணிதத்தில் சில அடிப்படை விதிகளைக் கொண்டு தேற்றம் தேற்றமாக நிரூபிக்கலாம். அசிமோவின் அணுகுமுறையும் அதேதான். கொஞ்சம் கீழான நிலையில் இருக்கும் மனிதர்கள் மீது ஸ்பேசர்களுக்கு இளக்காரம் இருக்கிறது. அதனால் எலைஜாவின் அணுகுமுறை என்பது ஒரு ஸ்பேசரை ‘சந்தித்து’ ஏதாவது ஒரு அனுமானத்தை முன்வைப்பார். அவை இந்த விதிகளின் அடிப்படையில் நிறுவப்படும், அல்லது மறுக்கப்படும். அதில் ஏதாவது ஒரு நூலைப் பிடித்துக் கொண்டு அடுத்த அனுமானத்துக்கு எலைஜா செல்வார்.

கதையின் பலவீனம் அசிமோவுக்கு எழுத்தின் தொழில் நுட்பம் (craft) கை வரவே இல்லை என்பதுதான். புனைவை ஃபார்முலாக்களின் அடிப்படையில் எழுத முடியாது. அசிமோவ் ஃபார்முலாக்களைத் தாண்டவே இல்லை. தட்டையான எழுத்து. டெம்ப்ளேட் கதாபாத்திரங்கள். ஏறக்குறைய ஒவ்வொரு அத்தியாத்திலும் எலைஜா யார் குற்றவாளி என்ற ஒரு யூகத்தை முன் வைப்பார். அது தவறாக இருக்கும். அடுத்த யூகம், அடுத்த அத்தியாயம் என்று போய்க் கொண்டே இருக்கும். தரிசனங்கள் என்றெல்லாம் அசிமோவ் அலட்டிக் கொள்வதே இல்லை. அதனால் நல்ல கருக்களை உடைய கதைகளும் மோசமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. இவையும் அப்படித்தான். சிறுகதைகளில் இது பெரிதாகத் தெரியாவிட்டாலும், நாவல்களாக எழுதப்படும்போது இந்தக் குறை பூதாகாரமாகத் தெரிகிறது.

அசிமோவின் எந்திரன் கரு கட்டாயம் படிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் சிறுகதைகளோடு நிறுத்திக் கொள்வது உத்தமம். இந்த நாவல்கள் எல்லாம் என் போன்ற கிறுக்கர்களுக்குத்தான்.

இவற்றைத் தவிர வெண்டல் உர்த் (Wendell Urth) துப்பறியும் சில கதைகள் Asimov’s Mysteries (1968) என்ற புத்தகத்தில் கிடைக்கும். அவையும் இப்படி SF மற்றும் துப்பறியும் கதைகளை கலந்து கட்டி அடிப்பவைதான். அனேகமாக இந்தப் புத்தகத்தின் எல்லா கதைகளுமே அப்படித்தான். படிக்கலாம்.

அசிமோவ் துப்பறியும் கதைகளையும் எழுத முயற்சித்திருக்கிறார். அவரது துப்பறியும் சீரிஸ் Black Widowers. சில சிறுகதைகள் சுமாரான விடுகதைகள் போல இருக்கும். மீண்டும் மீண்டும் ஒரே format-தான். நண்பர்கள் மாதம் ஒரு முறை கூடுவார்கள். ஒரு விருந்தினர் வருவார். ஏதோ ஒரு பிரச்சினையை விவரிப்பார். அதை நண்பர்கள் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று பேசுவார்கள். கடைசியில் விருந்தைப் பரிமாறும் waiter ஹென்றி சரியான விடையைக் கண்டுபிடிப்பார். Tales of the Black Widowers (1974), More Tales of the Black Widowers (1976), Casebook of the Black Widowers (1980), Banquets of the Black Widowers (1984), Puzzles of the Black Widowers (1990), Return of the Black Widowers (2003) புத்தகங்களில் எல்லாம் ஒரு கதை கூடத் தேறாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

தொடர்புடைய சுட்டி: அசிமோவின் ‘I, Robot’

காத்தவராயன் நாடகம்

நான் சிறு வயதில் கிராமங்களில் வளர்ந்தவன். வருஷாவருஷம் தெருக்கூத்து உண்டு. மூன்று நான்கு கூத்துகளைப் பார்த்திருக்கிறேன். அந்த வயதிலேயே தாங்க முடியாத அறுவையாக இருந்தது. இன்று கூத்து பற்றிய புத்தகங்களைப் படிக்கும்போதும், பழைய நாடகங்களைப் படிக்கும்போதும் அடடா ஒரு நல்ல கூத்து கூட பார்த்ததில்லையே, பாய்ஸ் கம்பெனி நாடகம் மாதிரி ஒன்று கூடப் பார்த்ததில்லையே என்று சின்ன ஆதங்கம் ஏற்படுகிறது. இந்தக் கலை வடிவத்துக்கு இன்று ஓரளவாவது அருகில் இருப்பது கதகளிதான் என்று தோன்றுகிறது, அதையாவது பார்க்க வேண்டும்.

kathavarayanயாழ்ப்பாண கலாச்சாரப் பேரவை பல நாடகப் பிரதிகளை ஒன்று சேர்த்து தொகுத்த காத்தவராயன் நாடகம் இணையத்தில் கிடைத்தது. அதைப் படிக்கும்போதுதான் இந்தக் கூத்துகளின்/நாடகங்களின் பலம் என்ன என்ற ஞானோதயம் ஏற்பட்டது. கூத்துகளின் பலம் வசனம்/பாட்டுகளில் இருக்கும் rhythm – சந்தம்தான். ‘தன்னானே தானானே தன்னனன தானே’ என்ற சந்தத்தில்தான் அனேக பாட்டுகள் இருக்கின்றன. காத்தவராயன் ‘ஆரியப்பூ மாலையை நானே மணப்பேனே’ என்று பாடினால் அதற்கு ஆரியமாலா ‘காத்தவராயன் உன்னைத்தானே மணப்பேனே’ என்று அதே சந்தத்தில் எதிர்ப்பாட்டு பாடுகிறாள்.மாறி மாறி ஏறக்குறைய ஒரே வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அந்த சந்தம் மனதில் பதிந்துவிடுகிறது. படிக்கும்போதே பாதி நாடகம் போனதும் அந்தச் சந்தம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. படிக்கும்போதே இப்படி என்றால் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருந்தால் தானாகவே நமது தலை அந்தத் தாளத்துக்கு ஆட ஆரம்பித்துவிடும்.

கூத்துகள் புதிய கதைகளை நமக்கு சொல்வதில்லை. எல்லாருக்கும் தெரிந்த திரௌபதி கதையும் துரியோதனன் கதையும் கர்ணன் கதையும் ராவணன் கதையும் அல்லி அர்ஜுனன் கதையும் வள்ளி திருமணம் கதையும் இன்று யாருக்கும் தெரியாவிட்டாலும் அன்று நன்றாகத் தெரிந்திருந்த காத்தவராயன் கதையும் நல்லதங்காள் கதையும் சதாரம் கதையும் ஆரவல்லி சூரவல்லி கதையும்தான் சொல்லப்படுகிறது. காட்சி அமைப்புக்கு பெரிதாக செலவு செய்ய முடியாது. பிறகு எப்படித்தான் புதுமையைக் கொணர்வது? பாடல்கள், ஆரவாரமான நடிப்பு – சமயத்தில் மிகை நடிப்பு, துள்ளல் நிறைந்த நடை (சிவாஜி கணேசன் நடை, முகமது பின் துக்ளக்கில் சோ ராமசாமியின் நடை, சில பழைய திரைப்படங்களில் கே.ஆர். ராமசாமி நாடகத்தில் நடிப்பார், காலைத் தூக்கி தூக்கி வைத்து நடப்பார்) என்றுதான் ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. அதை மிகை நடிப்பு என்று சொல்வதே தவறு, அதுவும் ஒரு நாடக உத்திதான் என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

காத்தவராயன் கதை பெருசுகளுக்குத் தவிர வேறு யாருக்கும் நினைவிருக்கப் போவதில்லை. அதனால் சுருக்கமாக. மாய மந்திரம் தெரிந்த ‘கீழ்ஜாதிக்காரனான’ காத்தவராயன் ராஜகுமாரி ஆரியமாலாவை விரும்புகிறான். பல சாகசங்களைப் புரிகிறான், உதவிக்கு நண்பன் சின்னான். ஆனால் ஆரியமாலா பிறந்தபோது அவளுடன் ஒரு கழுமரமும் பிறந்திருக்கிறது. அவளை மணக்க வேண்டுமென்றால் கழுமரத்தில் ஏற வேண்டும். அப்புறம் மேலே போக வேண்டியதுதான், எப்படி திருமணம் செய்து கொள்வது? அதனால் காத்தவராயனின் அம்மா அனுமதி தர மறுக்கிறாள். காத்தவராயன் கடைசியில் கழுமரம் ஏறி இறக்கிறான், அப்போது சிவபெருமான் வந்து காப்பாற்றுகிறார்…

இந்த நாடகப் பிரதியில் காத்தவராயனின் அம்மா முத்துமாரி அம்மன். முத்துமாரிதான் பெரியம்மை, வைசூரி போன்ற தொற்றுநோய்க்கெல்லாம் அம்மன். வைசூரிராயன் என்ற ராஜாவின் ஆட்சியில் பெரியம்மை போட்டு எல்லாரும் இறக்கிறார்கள். அப்புறம் முத்துமாரி கருணை வைத்து எல்லாரையும் பிழைக்க வைக்கிறாள்.

முத்துமாரியால் சிவனுக்கே அம்மை போடுகிறது. சிவனும் கிருஷ்ணனும் சேர்ந்து உனக்கு பிள்ளை கிடையாது என்று சாபம் தருகிறார்கள். முத்துமாரி சிவனுக்கு கஞ்சா கொடுத்து பிள்ளை வரம் வாங்குகிறாள். ஆனால் பெற்ற பிள்ளை இல்லை, வளர்ப்புப் பிள்ளைதான் – காத்தவராயன்.

காத்தவராயன் தொட்டியத்து சின்னானை தோற்கடித்து தனக்கு நண்பன்/அடிமையாக்கிக் கொள்கிறான். ஆரியமாலாவை மணக்க முத்துமாரி அனுமதி தரவில்லை. பல பெண்களை வெல்லச் சொல்கிறாள். காத்தவராயன் சின்னானின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வெல்கிறான். கடைசியில் கழுமரம், சிவபெருமான்…

முதலில் இப்படி ஒரு பிரதியைத் தொகுத்ததற்காக இந்த அமைப்பைப் பாராட்ட வேண்டும். படிக்க சுலபமான புத்தகம் அல்லதான், ஆனால் முக்கியமான ஆவணம்.

தாசி வீட்டிற்குப் போவது, ‘டாபர்’ மாமாக்கள், சாராயம் குடிப்பது, கஞ்சா அடிப்பது எல்லாம் நிறைய வருகின்றன.

சந்தத்திற்கு ஒரு உதாரணம்:

கரியமலை மீதேறி காத்தான் கரடி வேட்டை ஆடுறன் பார்
கரியமலை மீதேறி சின்னான் கரடி வேட்டை ஆடுறன் பார்
உச்சிமலை மீதேறி காத்தான் உடும்பு வேட்டை ஆடுறன் பார்
உச்சிமலை மீதேறி சின்னான் உடும்பு வேட்டை ஆடுறன் பார்
பச்சைமலை மீதேறி காத்தான் பன்றி வேட்டை ஆடுறன் பார்
பச்சைமலை மீதேறி சின்னான் பன்றி வேட்டை ஆடுறன் பார்
வெள்ளி மலை மீதேறி காத்தான் விருது வேட்டை ஆடுறன் பார்
வெள்ளி மலை மீதேறி சின்னான் விருது வேட்டை ஆடுறன் பார்

மலை மேலே காத்தான் ஏறியல்லோ மான் வேட்டை சுழன்றாடுறன் பார்
மலை மேலே சின்னான் ஏறியல்லோ மான் வேட்டை சுழன்றாடுறன் பார்
குன்று குளம் காத்தான் ஏறியல்லோ இப்போ குருவி வேட்டை சுழன்றாடுறன் பார்
குன்று குளம் சின்னான் ஏறியல்லோ இப்போ குருவி வேட்டை சுழன்றாடுறன் பார்

வேட்டை எல்லாம் காத்தான் தானாடிக் களைத்து இப்போ வீற்றிருந்தேன் நடுக் கானகத்தே
வேட்டை எல்லாம் சின்னான் தானாடிக் களைத்து இப்போ வீற்றிருந்தேன் நடுக் கானகத்தே

இது எல்லாருக்குமான புத்தகம் இல்லை. ஆனால் இந்த மாதிரி விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் முக்கியமான புத்தகம். இணைத்திருக்கிறேன்.

பின்குறிப்பு: எழுத்தாளர் அ. முத்துலிங்கம் கனடாவில் காத்தவராயன் நாடகம் பார்த்த அனுபவத்தைப் பற்றி இங்கே அருமையாக எழுதி இருக்கிறார்.

பின் -பின்குறிப்பு: நிறைய பொறுமை இருப்பவர்கள் சிவாஜி, சாவித்ரி, பாலையா, சந்திரபாபு, கண்ணாம்பா நடித்த காத்தவராயன் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம். ஆனால் இதை வெறும் மாய மந்திரப் படமாக மாற்றிவிட்டார்கள். குறைந்த பட்சம் நாடகத்தின் பாடல்களையாவது பயன்படுத்தி இருக்கலாம்.

அவ்வளவு பொறுமை இல்லாதவர்கள் எனக்குப் பிடித்த ஒரு பாடலை – வா கலாப மயிலே! – மட்டும் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்