வ.உ.சி., திரு.வி.க., ஸ்ரீனிவாச சாஸ்திரியார், பங்காரு அடிகள்… – அ.ச. ஞானசம்பந்தன் கண்ட பெரியவர்கள்

(மீள்பதிப்பு) – சமீபத்தில் இந்தப் புத்தகத்தை மீண்டும் புரட்டிப் பார்த்தேன், அதனால் மீள்பதித்திருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்னால் நான் அ.ச.ஞா. என்ற பேரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். யார், எவர் என்று எந்த விவரமும் தெரியாது. ஏதோ கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம், அவ்வப்போது காப்பியம், தேவாரம், திருவாசகம், கம்பன் என்று சொற்பொழிவு செய்வாராக்கும் என்று யூகித்திருப்பேன்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கும் காரணம் இதில் வ.உ.சி., திரு.வி.க. என்றெல்லாம் இருந்த பேர்கள்தான். என்னை fascinate செய்யும் தலைவர்கள் லிஸ்டில் இவர்கள் இருவரும் உண்டு. சரி என்னதான் எழுதி இருக்கிறார் என்று பார்க்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன்.

அ.ச.ஞா.வுக்கு கம்பன் – ஒரு புதிய பார்வை என்ற புத்தகத்துக்காக 1985-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 1916-இல் பிறந்தவர் 85 வயதில் 2002-இல் இறந்திருக்கிறார். பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர், வானொலியில் பதவி, தமிழ்த்துறையில் பதவி வகித்திருக்கிறார்.

அ.ச.ஞா.வின் அப்பா சரவண முதலியார் சைவப் பாரம்பரியத்தில் வந்த தமிழறிஞர். சின்ன வயதிலேயே அ.ச.ஞா.வும் மேடைகளில் பேச ஆரம்பித்துவிட்டார். அப்படித்தான் சிறுவனாக இருந்தபோது சொற்பொழிவாற்ற ஏதோ ஒரு ஊருக்குப் போன வேளையில் வ.உ.சி. வீட்டில்தான் தங்கி இருக்கிறார். அப்போது வ.உ.சி. பொருளாதார ரீதியாக நொடிந்து போயிருந்திருக்கிறார், ஆனால் சமூகத்தில் மிகவும் மதிப்பிற்குரியவராகத்தான் இருந்தாராம்.

பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் படிக்கப் போயிருக்கிறார். சோமசுந்தர பாரதியார் சரவண முதலியார் பையனே தமிழ் படிக்கவில்லை என்றால் எப்படி என்று இவரைக் கட்டாயப்படுத்தி தமிழில் சேர்த்திருக்கிறார். இவர் வெறும் மாணவர் – ஆனால் கண்டிஷன் போட்டிருக்கிறார். ரா. ராகவையங்கார் பாடம் நடத்தினால் நான் தமிழில் சேர்கிறேன் என்று. அவரும் ஒத்துக் கொண்டு பாடம் எடுத்திருக்கிறார்! சரவண முதலியாரின் கீர்த்தி அப்படி! துணைவேந்தராக இருந்த வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இவருக்கு முழு சப்போர்ட். சாஸ்திரியார் இவருக்கு சமயத்தில் ஃபீஸ் கட்டி இருக்கிறார்.

வேற்று ஜாதிப் பெண்ணைக் காதலித்து, அப்பாவை எதிர்த்து (சாஸ்திரியாரின் ஆதரவில்) திருமணம். பிறகு திரு.வி.க.வுடன் நெருக்கம். பிள்ளைகள் இல்லாத திரு.வி.க. விருப்பப்படியே இவரும் மு.வ.வும் சேர்ந்துதான் கொள்ளியே போட்டிருக்கிறார்கள். தெ.பொ. மீனாட்சிசுந்தரம்தான் தமிழைப் பொறுத்த வரையில் தனக்கு குருநாதர் என்கிறார். பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியர், பிறகு வானொலி, பிறகு தமிழ்த்துறை என்று பதவிகள். சொற்பொழிவு, இலக்கிய விமர்சனம், சைவம் (வைணவமும் விலக்கு இல்லை) இவைதான் முக்கியமாக இருந்திருக்கிறது. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளுடன் நெருக்கம் இருந்திருக்கிறது.

சில பல அதிசயங்களை விவரித்திருக்கிறார். அதுவும் ஒரு இலங்கைச் சாமியார் இரண்டு இடங்களில் இருந்ததை தானே பார்த்ததாக எல்லாம் சொல்கிறார். நம்ப முடியாத சம்பவங்கள்தான், ஆனால் அவரது எழுத்து முறை இப்படியும் நடந்திருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

என்னை மிகவும் கவர்ந்த பகுதி அவரது அண்ணாமலைப் பல்கலைகழக வாழ்க்கைதான். உண்மையிலேயே நல்ல மாணவன், புத்திசாலியான மாணவன் வேண்டுமென்று பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் அலைந்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கே உரிய வேகத்தோடு பரிமேலழகர் கண்றாவியாக உரை எழுதி இருக்கிறார் என்று ராகவையங்கார் முதன்முதலாக எடுத்த தமிழ் வகுப்பில் இவர் நீட்டி முழக்கி பேசி இருக்கிறார். ஐயங்காருக்கோ பரிமேலழகர் மேல் அபார மரியாதை. ஆனால் இவர் இப்படி எடுத்தெறிந்து பேசுவதைக் கேட்டு, புத்திசாலிப் பையன்தான், நான் பாடம் எடுக்க சம்மதிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். மாணவர் சபையின் தலைவராக இருந்தபோது துணைவேந்தர் சாஸ்திரியார் பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்துகொண்டு மற்ற மாணவர்களை அப்படி கேள் இப்படி கேள் என்று சொல்லிக் கொடுத்து குறும்பு செய்வாராம். ஒரு முறை இங்கே இரண்டு மின்விசிறி சுழலவில்லையே, தலைவர் கவனிக்க வேண்டாமா என்று ஒரு மாணவனைத் தூண்டிவிட்டு கேள்வி கேட்க செய்தாராம். அ.ச.ஞா.வின் பதில் – “இந்த அற்ப வேலைகளை கவனிப்பது இந்த மாபெரும் மன்றத் தலைவரின் பணியன்று. இதற்கெனவே பெருந்தொகையைச் சம்பளமாகக் கொடுத்து, துணைவேந்தர் என்ற பெயரையும் கொடுத்து ஒருவரை நியமித்துள்ளார்கள். அவருக்குத் தகவல் அனுப்பி இவற்றை கவனிக்குமாறு செய்கிறேன்.” இந்த நக்கல் பேச்சைக் கேட்டு எல்லாரையும் விட விழுந்து விழுந்து சிரித்தது சாஸ்திரியார்தானாம்.

அ.ச.ஞா.வின் வார்த்தைகளிலேயே ராகவையங்கார், சாஸ்திரியார் இருவரோடும் ஒரு நாள்: (சுவாமிகள் என்று அவர் குறிப்பிடுவது ராகவையங்காரை)

தினந்தோறும் மாலை நான்கரை மணிக்குத் தன் தடிக் கம்பை ஊன்றிக் கொண்டு சுவாமிகள் வருவதை, அந்தக் கைத்தடி சிமெண்டுத் தரையில் பட்டு டொக் டொக் என்று ஒலி எழுப்புவதை வைத்தே அறியமுடியும். ஒரு நாள் நான்கரை மணியாகியும் சுவாமிகள் வரவில்லை. அவர் காலம் தாழ்த்தி வரக் கூடும் என்று நினைத்த நான் ஆசிரியருக்குரிய நாற்காலியில் அமர்ந்து கொண்டு பெருங்குரலில் “சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்” என்ற பாட்டைப் பாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று சுவாமிகள் வகுப்பினுள் நுழைந்துவிட்டார். டொக் டொக் சத்தம் கேட்காததால் ஏமாந்துவிட்டோம். காரணத்தைப் பின்னர் அறிந்தோம். அவர் பயன்படுத்தும் கைத்தடியின் அடியில் ரப்பர் வைத்துக் கட்டிவிட்டதால் சத்தம் எழவில்லை. அவரைக் கண்டவுடன் பதைபதைப்புடன் எழுந்து பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தோம். என் குரலை நன்கு அறிந்திருந்த சுவாமிகள் “முதலியார் மகனே! யார் பாட்டுடா அது?” என்று கேட்டார். அது பாரதியாருடைய பாடல் என்று விடையிறுத்தேன். சுவாமிகள் “ஏண்டா! அரசாங்கத்துக்கு விரோதமா நாட்டுப் பாடல்கள்தான் பாடியிருக்கிறான் பாரதின்னு நினைச்சேன், இப்படிக் கூடப் பாடியிருக்கிறானா? இன்னும் சில பாடல்களைச் சொல்லு” என்றார். நான் மேலும் பாடிக் கொண்டிருந்தேன். “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்று தொடங்கும் பாடலில் வரும்

“பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?”

என்ற பகுதியைப் பாடும்போது கண்ணீர் வடிக்கத் தொடங்கிய சுவாமிகள், கண்ணீரும் கம்பலையுமாகவே கேட்டுக் கொண்டிருந்தார். பாட்டை நிறுத்தியவுடன் “அடேய்! நம்மாழ்வார் பாட்டு தெரியுமா உனக்கு!

“நண்ணாதார் முறுவலிப்ப நள்ளூற்றார் கரைந்து ஏங்க
எண்ணாராத் துயர் விளைக்கும் இவையன்ன உலகியற்கை” (2502)

என்ற பாடல்தான் ‘பஞ்சமும் நோயும்’ என்ற சொற்களில் வெளிப்படுகிறது” என்றார்.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரியநிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

என்ற பகுதியைப் பாடியவுடன், “இதே கருத்தை நம்மாழ்வார் ஒரு பாடலில் பாடியுள்ளார்” என்று கூறிவிட்டு அந்த அடிகளையும் எடுத்துச் சொன்னார். அவை:

“மண்ணையிருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும்
விண்ணைத் தொழுதவன் மேவு வைகுந்த மென்றுகை காட்டும் – (நம். 2447)

“அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்” – (நம் 2449)

சைவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நம்மாழ்வரைப் பற்றியோ அவர்கள் பாடல்கள் பற்றியோ ஒன்றும் தெரியாது.

அதன் பின்னர் அன்றிரவு துணை வேந்தரின் கார் மாணவர் விடுதிக்கு வந்து அ.ச.ஞா.வை அழைப்பதாகக் கூறி கார் டிரைவர் அழைத்துச் சென்றார். அப்போது:

துணைவேந்தர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ‘அடே! கம்மனாட்டி’ என்றுதான் என்னை அழைப்பார். உள்ளே நுழைந்தவுடன் இந்தச் செல்லப் பெயரில் என்னை அழைத்து “நீ சுவாமிகளுக்கு ஏதோ பாரதி பாட்டுப் பாடிக் காட்டினாயாமே! அதைக் கேட்டுச் சுவாமிகள் மிகவும் உருகிப் போய்விட்டார். எங்கே அதைத் திரும்பிப் பாடு” என்றார். எதிரே அமர்ந்து பாடினேன். எதிரே இருந்த இருவரும் பெருமூப்படைந்தவர்கள். ஆனாலும் என்ன! இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது. ஒருவர் தமிழறிஞர். உலகம் தலை மேல் வைத்துக் கொண்டாடும் மூதறிஞர்; மற்றொருவர் உலகம் முழுவதும் போற்றும் மாபெரும் அரசியல்வாதி, துணைவேந்தர் மகாகனம் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியார் அவர்கள் – இந்த இரண்டு மேதைகளும் கண்ணீர் பெருகப் பாரதியின் பாடல்களைக் கேட்டது எனக்கு வியப்பைத் தந்தது.

1938இல் பாரதியின் நாட்டுப் பாடல்கள் மட்டும்தான் மக்களால் ஓரளவு அறியப் பெற்றிருந்தன. ஏனைய பாடல்கள் சிறுசிறு நூல்களாக வந்திருந்த போதிலும் அவற்றை யாரும் விரும்பிப் படிப்பதில்லை. அன்றியும் அன்றைய தமிழ்ப் புலவர்கள் பாரதியை ஒரு கவிஞனாக நினைத்ததேயில்லை. மரபுக் கவிதைகளைத் தவிரப் பிறவற்றை அவர்கள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் இப்பெருமக்கள் இருவரும் பாரதியின் பாடல்களை வழிந்தோடும் கண்ணீருடன் கேட்டது பெருவியப்பை தந்தது. இரண்டு மாமனிதர்களைச் சந்தித்ததாக அன்று நான் புரிந்துகொள்ளவில்லை. அறுபது ஆண்டுகள் கழித்து இப்போது அதனை உணர்கிறேன்.

ஓப்பன் ரீடிங் ரூம் தளத்தில்தான் நான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். தளத்தையே இப்போது காணோம். நல்ல வேளையாக இங்கே அவரது பல புத்தகங்கள் கிடைக்கின்றன.

தம்பியர் இருவர் என்ற புத்தகத்தை கொஞ்சம் முயற்சி செய்து படித்தேன். அ.ச.ஞா. கம்பனை ஆராய்வது மட்டுமில்லை அனுபவிக்கவும் செய்கிறார். கம்பன் கவிதை புரிகிறதோ இல்லையோ அவர் ரசிக்கிறார், அனுபவிக்கிறார் என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது. இந்தப் புத்தகம் ஒரு சிறந்த மேடைப் பேச்சாக இருக்கும். ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் புத்தகமும் இப்படிப்பட்ட உணர்வைத்தான் ஏற்படுத்தியது. இன்று இப்படி சிறப்பாக உரையாற்றக் கூடியவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சாகித்ய அகாடமி விருது பெற்ற கம்பன் – ஒரு புதிய பார்வை புத்தகத்தை என்னால் படிக்க முடியவே இல்லை. முதலில் கம்பனைப் படித்துவிட்டுத்தான் இதை எல்லாம் படிக்க வேண்டும். இதைப் போலத்தான் பெரிய புராணம் – ஓர் ஆய்வு என்ற புத்தகமும். பெரிய புராணத்தை கரைத்துக் குடித்திருக்கிறார், நானெல்லாம் ஆரம்பிக்கவே பல வருஷம் ஆகும்.

மற்ற புத்தகங்களில் திருவிக என்ற புத்தகம் அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பு. பேச்சாக இன்னும் நன்றாக இருந்திருக்கும். தமிழ் நாடக வரலாறும் சங்கரதாஸ் சுவாமிகளும் என்ற புத்தகம் எனக்கு கொஞ்சம் போரடித்தது. .

மிகவும் சுவாரசியமான memoirs. கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
நான் கண்ட பெரியவர்கள் மின்னூல்
விக்கி குறிப்பு

11 thoughts on “வ.உ.சி., திரு.வி.க., ஸ்ரீனிவாச சாஸ்திரியார், பங்காரு அடிகள்… – அ.ச. ஞானசம்பந்தன் கண்ட பெரியவர்கள்

 1. இந்த புத்தகத்தை நான் சமீபத்தில் வாசித்தேன். (வானதி வெளியீடு) இலக்கியமும் ஆன்மீகமும் கலந்த புத்தகம். தெ.பொ.மீ, திருவிக, மு.வ. கி.வா.ஜ.வுடனான அனுபவங்கள் ஒருபுறம் என்றால் யோகியார், காஞ்சிப் பெரியவர், பங்காரு அடிகளார், சுத்தானந்த பாரதி (இவர் சொன்னதாக அ.சஞா. எழுதியிருக்கும் சில வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன) பற்றிய அனுபவங்கள் வேறு விதம்.

  நடுவே ஈ.வெ.ரா. பெரியாரும் உண்டு. அவர் பிள்ளையார் உடைப்பதற்கான காரணத்தைக் கூறும் விஷயத்தைப் படித்துப் படித்து எனக்கு சிரிப்புத் தாளவில்லை.

  ஆன்மீக, இலக்கிய ஆர்வலர்களுக்கு மிக நல்ல புத்தகம்.

  பேசாமல் இருந்த குரல் பேச வந்தது, காஞ்சிப் பெரியவர் மீது போர்த்தப்பட்ட போர்வை தனக்குப் போர்த்தப்பட்டது, தெ.பொ.மீயின் ஆன்மீக ஆற்றல்கள், பங்காரு அடிகளாரின் எதிர்காலம் உரைக்கும் திறன் என இந்நூலில் எத்தனை விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

  ஆர்வியோடு சேர்ந்து நானும் இந்த நூலை எல்லோரும் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

  Like

 2. அ ,ச.ஞா வின் நான் கண்ட பெரியவர்கள் படித்து ஆச்சர்யத்தின் எல்லைக்கே போனேன் ..எதனை பெரிய மனிதர்களிடம் பழகும் வாய்ப்பை பெற்ற இந்த திருமாகனார் மனிதர்களில் மாணிக்கம் ..நீங்கள் எழுதிய வரிகள் நீங்கள் எத்தனை ஈடுபாட்டுடன் அவரின் நூலை படித்து இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ..தமிழன் எல்லோரும் படிக்கவேண்டிய நூல் இது ..நமது பெரியவர்களின் வரலாறு .நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கணும்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.