போப்பாக ஒரு திருநங்கை – ராபர்ட் ஹாரிசின் ‘Conclave’
சாதாரணமாக spoiler இல்லாமல் புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றுதான் முயற்சிப்பேன். இந்த முறை புத்தகம் கிளப்பிய எண்ணங்களைப் பற்றி எழுத விரும்புகிறேன், அது spoiler இல்லாமல் முடியாது.
ஹாரிஸ் எழுதிய சிசரோ trilogy-க்கு நான் பெரிய ரசிகன். புதிய புத்தகம் – Conclave (2016) – ஒன்று கண்ணில் பட்டதும் படிக்க ஆரம்பித்தேன். சாதாரண வணிக நாவல்தான். விறுவிறுவென்று போவதும், சில நுண்விவரங்களும்தான் புத்தகத்தின் பலம்.
போப் இறந்த பிறகு அடுத்த போப்பை உயர்நிலையில் இருக்கும் சர்ச் குருமார்கள் (cardinals) தேர்ந்தெடுப்பார்கள். தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரியான லோமலியின் கண்ணோட்டத்தில் மூன்று நாள் நடக்கும் அந்த தேர்தல் விவரிக்கப்படுகிறது. முன்னணியில் இருப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு வெளிவருகின்றன. கடைசியில் புதிதாக மற்றும் ரகசியமாக நியமிக்கப்பட்ட ஒரு cardinal – பெனிடஸ் – போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடைசி பக்கங்களில் லோமலிக்கு பெனிடஸ் ஒரு திருநங்கை என்று தெரிகிறது. ஆனாலும் பெனிடஸ் போப்பாகிறார்.
மாதொருபாகன் சர்ச்சை (மற்றும் பல சர்ச்சைகள்) பெரிதாக இருந்தபோது பெருமாள் முருகன் ஹிந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார் என்று பலரும் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அடிக்கடி பார்த்த ஒரு கேள்வி – இப்படி பிற மதங்களைப் பற்றி எழுதிவிட முடியுமா? இதோ ஒருவர் எழுதி இருக்கிறார், அது பெஸ்ட்செல்லரும் கூட. யாராவது ஏதாவது கேட்கிறார்களா என்ன? டாவின்சி கோட் இந்தியாவில்தான் தடை செய்யப்பட்டது, கிறிஸ்துவம் dominate செய்யும் மேலை நாடுகளில் அல்ல. ஹாரிஸ் இங்கிலாந்துக்காரர், இங்கிலாந்தின் அரசர்/அரசி இங்கிலாந்து சர்ச்சின் ஏறக்குறைய தலைவர் பதவியில் இருப்பவர். அப்படியும் ஒரு பிரச்சினையும் கிடையாது. என் மகாபாரதச் சிறுகதைகளில் கிருபருக்கு துரோணர் மேல் பொறாமை, பீஷ்மருக்கு அம்பை மேல் காதல் என்றெல்லாம் கற்பனைக் கதைகளாக எழுதித் தள்ளுகிறேன், அதை ஹிந்துத்துவ தளமான தமிழ் ஹிந்து தளத்தில் பிரசுரிக்கவும் செய்கிறார்கள். அது ஏன் திடீரென்று ஒரு புனைவை புனைவாக மட்டும் கருதாமல் அதை தங்கள் மத நம்பிக்கைகளோடு இணைத்துக் கொள்கிறீர்கள்? அதுவும் பன்மைத் தன்மையையும் சகிப்புத்தன்மையையும் தன் அடையாளமாகக் கொண்டுள்ள ஹிந்துக்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? இதற்கு பதிலாக டாவின்சி கோடும் சாதானிக் வெர்ஸசும் தடை செய்யப்படக் கூடாது என்று குரல் எழுப்பலாமே?
தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்
பின்குறிப்பு: ஹாரிசின் எல்லா நாவல்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. உதாரணமாக Fear Index (2010) எல்லாம் பஸ்ஸில் படிக்கக் கூட லாயக்கில்லை. ஆனால் சிசரோ புத்தகங்களோ மிகச் சிறப்பானவை. இது சுமாரான வணிக நாவலாக இருக்கிறது…
பீஷ்மர், அம்பை, கிறிஸ்து, காந்தி போன்றவர்களின் இமேஜ் எல்லாம் இது போன்ற கதைகளால் எங்கும் பாதிப்படையாது. உங்கள் கதையை படித்துவிட்டு நான் கிருபர் ஒரு பொறாமைக்காரன் என்று நினைத்து கொள்வேனா என்ன? இல்லை டாவின்சி கோடை படித்துவிட்டு கிறிஸ்துவிற்கு பெண் இருந்தது என்றே நினைத்தாலும் அது கிறிஸ்துவிற்கு ஒரு சிறுமையும் இல்லை.
பீஷ்மருக்கு அம்பை மேல் காதல், கிருபருக்கு பொறாமை என்பதெல்லாம் ஒரு சாத்தியக்கூறு, கற்பனை. ஆனால் பெ.முருகன் ஒரு சரித்திரத்தை ஆரய்ந்து அதனடிப்படையில் எழுதியிருப்பதாக கூறுகின்றார். ஒரு கோவில் வேண்டுதலில் பிறந்தவனை திருவிழாவில் பிறந்தவன் என்று கூறுகின்றது. பெருமாள் முருகன் தூற்றியிருப்பது ஒரு கிராமத்தையே, சாதரண மக்களை. அவர்களின் மீது ஏவப்படும் இது போன்ற பழிகளை தாங்கு அளவிற்கு அவர்களின் ஆளுமைகள் கிடையாது. நினைத்துப்பாருங்கள், அக்கோவில் வேண்டுதலில் பிறந்தவன் என்று சொல்லி திரியும் ஒருவனை, மற்றவர்கள் திருவிழாவில் எவனுக்கோ பிறந்தவன் என்று மற்றவர்கள் கிண்டலித்தால் அதை தாங்க முடியுமா? இதில் அந்த கோவிலிற்கு பதிலாக ஒரு சர்ச்சையோ, மசூதியையோ வைத்தால் கூட அவர் எழுதியது அயோக்கியத்தனம்தான். அப்படி எழுதியிருந்தால் கிடைத்திருக்கும் எதிர்ப்பு வேறு வகையாக இருந்திருக்கலாம். அவரே எழுதமாட்டேன் என்று சொல்லத்தேவையிருந்திருக்காது.
LikeLike
ரெங்கா, // பீஷ்மர், அம்பை, கிறிஸ்து, காந்தி போன்றவர்களின் இமேஜ் எல்லாம் இது போன்ற கதைகளால் எங்கும் பாதிப்படையாது // இது உங்களுக்கும் எனக்கும், ஏன் ஜடாயு போன்ற சிந்திக்கக் கூடிய ஹிந்துத்துவர்களுக்கும் தெரிகிறது. அது பீஷ்மரையோ அம்பையையோ தூற்றுவதில்லை என்று புரிந்து கொள்கிறோம். ஆனால் பெருமாள் முருகனின் புனைவு மட்டும் எப்படி தூற்றுதல் ஆகிறது? ஒரு வேளை உங்கள் ஆட்சேபணை பெ. முருகன் சரித்திரத்தை ஆராய்ந்ததாக விட்டிருக்கும் ஸ்டேட்மெண்டுக்காக இருக்கலாம். வாய்மொழி வரலாறு என்று அவர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். வாய்மொழி வரலாற்றுக்கு என்ன ஆதாரம் தர முடியும்? கூவாகத்தில் விழா நடப்பது நின்று ஐம்பது வருஷங்களுக்குப் பிறகு கல்வெட்டு எங்கே என்றா கேட்க முடியும்? இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் சொன்னதை ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கலாம். ஒரு பேச்சுக்காக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி பெண்கள் விரும்புபவனோடு கூடுவது தவறு என்றுதான் நினைக்கிறீர்களா? ஆண்கள் அதே திருச்செங்கோட்டில் ஏறக்குறைய அதே பக்கங்களில் தாசி வீட்டுக்குப் போகிறார்கள். ஆண்கள் அப்படிப் போனார்கள் என்பதற்கு ஆதாரமும் இல்லை, அது கேவலம், திருச்செங்கோட்டுக்காரர்களைத் தூற்றுவது என்று யாரும் உணர்வதும் இல்லை. ஏன்?
LikeLike
பெண்களோ ஆண்களோ விருப்பமானவர்களுடன் கூடுவதில் என்ன தவறு. அதை யாரும் எதிர்க்கவுமில்லையே, அப்படி எதிர்ப்பதாக இருந்தால் தி.ஜாவிலிருந்து ஜெயகாந்தன் வரை பலரின் புத்தகங்களுக்கு இதே கதிதான் நேர்ந்திருக்க வேண்டும். இது ஒரு நம்பிக்கையை சிதைக்கின்றது. அந்த கோவிலில் வேண்டிக்கொண்டால் குழந்தை பிறக்கும் என்பதை அப்படி இல்லை, அங்கு செல்லும் பெண்கள், அங்கு வரும் யாருடனாவது கூடி பிள்ளையை பெற்று கொண்டுவருவார்கள் என்பதற்கும் விருப்பமானவர்களுடன் கூடுவதற்கும் வித்தியாசம் இல்லையா? இது தனிமனிதனை பற்றியதல்ல. ஒரு சமூகத்தை பற்றியது
LikeLike