Skip to content

முதல் குரங்கும் ஆரியர்-திராவிடரும்: எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை

by மேல் மே 4, 2017

m_s_puranalingam_pillaiஎனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். தீவிரத் தனித்தமிழ் இயக்கத்தினருக்கு – தேவநேயப் பாவாணர் நல்ல உதாரணம் – முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதே நேரத்தில் கைபர் போலன் கணவாய்கள் வழிவந்த வந்தேறி ஆரியப் பார்ப்பனர்கள்தான் தமிழ் சமுதாயத்தைக் கெடுத்து குட்டிசுவராக்கிவிட்டார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் கிடையாது. முதல் குரங்கே தமிழ்க் குரங்கு என்றால் ஆரிய-திராவிட வேறுபாடே பொருளற்றதாகிவிடுகிறதே, முதல் குரங்கு என்ற பெருமையும் வேண்டும், ஆரிய வந்தேறி என்று திட்டவும் ஆள் வேண்டும், கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா என்று ஒரு கேள்வி வரத்தானே செய்யும்! ஒரு பழைய பதிவில் இந்தக் கேள்வியை எழுப்பியும் இருந்தேன். பிள்ளைவாள் முதல் குரங்கு தமிழ்க் குரங்காக இருந்தாலும் வந்தேறிக் குரங்கு வேறுதான் என்று நிறுவுகிறார்!

பிள்ளைவாளின் ‘Tamil India‘ (1945) புத்தகத்தில் அவருக்கு தோன்றுவதை எல்லாம் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை என்பதைப் போல சொல்கிறார். தனது எந்த முடிவுக்கும் விளக்கம் சொல்லும் பழக்கமே அவருக்கு இல்லை. என்னவோ நேரில் பார்த்தது மாதிரி தமிழரசர்களின் கிரீடம் முக்கோண வடிவத்தில் இருந்தது, ஏழு நாள் வாரம் என்பது தமிழ் பழக்கம், அதுதான் உலகம் முழுவதும் பரவியது என்று நிறைய எழுதி இருக்கிறார். எனக்கு எப்போதும் நினைவில் இருக்கப்போவது மனித குலம் எப்படிப் பரவியது என்ற அவரது ‘ஆராய்ச்சிதான்’. உலகின் முதல் மனிதன் லெமூரியத் தமிழன். கடல்கோள் இந்தியத் துணைக்கண்டத்தை உருவாக்கியதும் அவன் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்குப் போனான். அங்கிருந்து ஒரு பிரிவு இன்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு. அங்கிருந்து ஒரு கோஷ்டி தென் ஐரோப்பாவுக்கு. இன்னொன்று இன்றைய நார்வே, ஸ்வீடன் நாடுகளுக்கு. (அமெரிக்க கண்டங்களுக்கு எப்படிப் போனான் என்று அவர் சொல்லவில்லை.) பிறகு தங்கள் ஒரிஜினல் தமிழ் அடையாளத்தை மறந்துவிட்டு மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்களாக உருமாறி மீண்டும் இந்தியாவுக்கு கைபர் கணவாய் வழியாக வருகிறார்கள். அதாவது இங்கிருந்து போனது தமிழ்க் குரங்குதான், ஆனால் திரும்பி வரும்போது எப்படியோ ஆரியக் குரங்காக மாறிவிட்டது!

பிள்ளைவாளின் இன்னொரு புத்தகம் Ravana the Great (1923). முன்முடிவுகள் என்ற கண்ணாடியை அணிந்து அதன் மூலம்தான் பிள்ளைவாள் எல்லாவற்றையும் பார்க்கிறார். அவருக்கு எப்போதும் திராவிடனே உசத்தி, ஆரியன்கள் அயோக்கிய சிகாமணிகள், சைவத்தையும் தமிழையும் உயர்த்திச் சொல்ல வேண்டும் என்று ஆசை. அவருக்கு ராவணன் தமிழன். சைவன். ராமன் ஆரியன். ராமாயணம் ஆரியர்களால் எழுதப்பட்டது. அதனால் ராவணனை உயர்த்திப் பேச வேண்டும். ஆனால் அவன் சீதையைக் கடத்தி வந்ததை எப்படி நியாயப்படுத்துவது? சூர்ப்பனகைக்கும் ராமனுக்கும் உறவு இருந்திருக்க வேண்டும், அது சீதைக்கு தெரிந்ததும் ராமன் பெண்டாட்டி கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள பொய் சொல்லிவிட்டான், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த காட்டுமிராண்டித்தனத்துக்கு பதிலடி கொடுக்கத்தான் தமிழ் பண்பாட்டுப்படி ராவணன் சீதையை கவர்ந்து சென்றான், பெண்ணைக் கவர்ந்து செல்லுதல் தமிழ் மரபுதான் என்கிறார். Of course, விபீஷணனின் துரோகத்தால்தான் ராவணனை வெல்ல முடிந்திருக்கிறது. ஆனால் ஹனுமன் திராவிடன், ஹனுமனை வசப்படுத்திக் கொண்டது ஆரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பொங்குகிறார் பாருங்கள், பிரமாதம்! ரிஷிகள் மனிதத் தன்மை அற்ற விதத்தில் யாகங்களை நடத்தினார்கள், அதனால்தான் ராவணாதி அசுரர்கள் ரிஷிகளை எதிர்த்தார்களாம். அது என்ன யாகம் என்று தெரியவில்லை.

1904-இல் A Primer of Tamil Literature என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதே புத்தகம் மீண்டும் Tamil Literature என்ற பேரில் பின்னாளில் மீண்டும் வந்திருக்கிறது. பல படைப்புகள், கவிஞர்களைப் பற்றி கோனார் நோட்ஸ் மாதிரி தொகுத்திருக்கிறார். கவிஞர்கள் பற்றிய தொன்மக் கதைகளைக் கூட விடவில்லை. வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர் வரை வந்துவிட்டார், ஆனால் பாரதி இல்லை. ஆவணம் என்ற அளவில் முக்கியமானது. என் கண்ணில் இவரது முக்கியத்துவமே இப்படி அகலமாகவும் ஆழமாகவும் படித்து அதைத் தொகுத்து எழுதவும் முடிந்ததுதான். பிள்ளைவாளின் முன்முடிவுகளும், ‘ஆய்வுகளும்’ இன்று கொஞ்சம் நகைக்க வைத்தாலும் இன்று கூட இதை விட சிறந்த கழுகுப் பார்வை (bird’s eyeview) இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு சுவாரசியமான விஷயம். நான் படித்த மின்புத்தகம் ஆனந்த கென்டிஷ் குமாரசாமியின் நூலகத்திலிருந்து digitize செய்யப்பட்டது! இந்த மின்புத்தகத்தை இணைத்திருக்கிறேன்.

2009-ஆம் வருடத்தில் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அப்போது மறைந்த சேதுராமன் எப்படியோ பூரணலிங்கம் பிள்ளையின் பேரன்களிடம் எல்லாம் பேசி தகவல் சேகரித்து அவரைப் பற்றி கூட்டாஞ்சோறு தளத்தில் ஒரு அறிமுகக் கட்டுரையை எழுதினார்.

அதைப் படித்தபோது பூரணலிங்கம் பிள்ளை எழுதிய ஆங்கில நூல்கள் அந்த காலத்து ஆங்கிலக் கல்விக்கு பாடப் புத்தகங்களாகவோ, இல்லை கோனார் நோட்சாகவோ மட்டும்தான் பயன்பட்டிருக்கும் என்று தோன்றியது. இப்போதுதான் அவரது புத்தகங்கள் இரண்டைப் படிக்க முடிந்தது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு லெமூரியா பற்றி அறுதி முடிவுகளை எடுப்பவர் என்று தெரிகிறது. கள ஆராய்ச்சி என்ற பேரையே கேட்டிருக்கமாட்டார் போலிருக்கிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில், 1900-1920 வாக்கில் அவருடைய புத்தகங்களுக்கு தேவை இருந்திருக்கும். இன்றும் Primer of Tamil Literature ஆகியவை முக்கியமான ஆவணங்கள்தான். காலாவதி ஆகிவிட்ட முன்னோடி…

சேதுராமனின் ஒரிஜினல் பதிவு கீழே வசதிக்காக.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

தமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவானதொரு திறனாராய்ச்சிப் புத்தகம் முதன் முதலாக எழுதியது இவராகத்தானிருக்கும். 1904ம் வருடம் “A Primer of Tamil Literature” என்ற புத்தகம்தான் இவர் முதலில் எழுதியது. இதன் மறுபதிப்பு 1929ல் வெளி வந்தபோது அப்புத்தகத்திற்கு “Tamil Literature” எனப் பெயரிடப்பட்டது.

திருநெல்வேலிக்கருகேயுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற சிற்றூரிலே 1866ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி பிறந்தவர் பூர்ணலிங்கம். அவ்வூர்ச் சிவன் கோயிலுள்ள பெருமானின் பெயர் பரிபூர்ணக்ருபேசர் அல்லது பூர்ணலிங்கம் என்பது. அங்கு வாழும் மக்கள் தம் குழந்தைகளுக்கு பூரணலிங்கம் என்ற பெயரிடுவது இன்னமும் வழக்கில் உள்ளது. இவரது பெற்றோர் திரு. சிவசுப்பிரமணியப் பிள்ளை, திருமதி வள்ளியம்மை என்பவர்கள்.

இளம் வயதில் ஊரிலுள்ள திண்ணைப் பள்ளியில், செல்லப் பெருமாள் வாத்தியார் என்ற ஆசிரியரிடம் கல்வி பயின்றார். பூரணலிங்கத்தின் தந்தையும் செல்லப் பெருமாளிடமே கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு அருகிலுள்ள மேலப்பாளையம் பள்ளிக் கூடத்தில் சுந்தரம் பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கணமும், திருக்குறளும் மனதிலே நன்றாகப் பதியும்படி பாடம் கேட்டுத் தேர்ந்தார். அடிப்படைத் தமிழ்க் கல்வி முடிந்ததும் தருவையிலுள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார். தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை இன்று ஹிந்து கல்லூரி என்றழைக்கப்படும் ஆங்கிலத் தமிழ்ப் பள்ளியிலே படித்துத் தமது பதினைந்தாவது வயதில் நடுப்பள்ளித் தேர்வில் வெற்றி பெற்று, அதற்கடுத்த ஆண்டு இரட்டைத் தேர்வு பெற்று, மெட்ரிகுலேஷன் படிப்பும் முடித்தார்.

நிதிப் பற்றாக்குறை காரணமாக பூர்ணலிங்கம் மேலே தொடர்ந்து படிக்க முடியாமல், பரமக்குடியிலுள்ள முன்சீஃப் கோர்ட்டிலே எழுத்தாளராகப் பணியாற்றத் தொடங்கினார். இந்த விஷயம் அறிந்து ஹிந்து கல்லூரி பேராசிரியர் விங்க்ளேர் இவர் பட்டப் படிப்பை முடித்தாக வேண்டும் என்ற அன்புக் கட்டளையிட்டு அதற்கு ஆவன செய்து எஃப்.ஏ. தேர்வில் வெற்றியடையச் செய்தார். அப்போது கல்லுரியில் நடந்த மில்லர் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. முதல் வகுப்பில் சேர்ந்தார். டாக்டர் மில்லரே இவர் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடங்கள் எடுத்தவர். பி.ஏ. பட்டம் பெற்ற பின் பூரணலிங்கம் தனது சகோதரி திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பியவர் முதலில் எழுத்தாளராக, நெல்லை மாவட்டக் கலெக்டர் காரியாலயத்திலும், பின்னர் பாளையம் கோட்டையிலுள்ள இந்து உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

திருநெல்வேலியில் பணி புரிந்த போது, தாயம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டக் கலெக்டர் வேண்டுகோளின்படி எட்டயாபுரம் ஜமீன் இளவரசுக்குக் கல்வி கற்றுத் தரத் தொடங்கி அப்பணியை இனிதே முடித்தார். வாழ்க்கை முன்னேற்றம் கருதி, பணியில் இருந்தவாறே சட்டப் படிப்பு முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தார். இவர் சென்னை வந்த செய்தி கேட்டு டாக்டர் மில்லர் கிறிஸ்தவக்கல்லூரியிலும், உயர் பள்ளியிலும் ஆசிரியப்பணி தந்து ஆதரித்தார். கல்லூரியில் இவர் வேலை பார்க்கும்போது (1894-1899) அங்கு தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) இவருக்கு ஒப்புயர்வற்ற நண்பரானார். இவ்விருவரும் சேர்ந்து சென்னைக் கடற்கரையினில் செய்து கொண்ட முடிவின் பயனாக எழுந்தவைதான் தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்கள். பரிதிமால் கலைஞரால் எழுதப் பெற்றது தமிழ்மொழி வரலாறு – தமிழ் இலக்கிய வரலாறைப் பூரணலிங்கம் ஆங்கிலத்தில் எழுதினார்.

1900ம் வருஷம் முதல் 1904ம் வருஷம் வரை கோயம்புத்தூர் செயிண்ட் மைக்கேல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், 1904 முதல் 1911 வரை திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், பணி புரிந்தார். 1912 முதல் 1919 வரை சென்னையில் இருந்தபோது சொந்தமாக கெமிசிசு என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அதே காலத்தில் JUSTICE என்ற ஆங்கிலத்தாளுக்குத் துணையாசிரியராகவும் இருந்தார்.

1920 முதல் 1922 வரை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், பின்னர் 1926 வரை திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரித் தலைவர் கார்டினர் வேண்டுதலின் பேரில் ஆங்கிலத் தலைமையாசிரியராகவும் பணி புரிந்தவர், ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளம் திரும்பினார்.

ஓய்வு காலத்தில் தமிழ்ப் பணியிலும், ஆங்கிலத்திலும் தமிழிலும் பேருரைகள் நிகழ்த்துவதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இடைவிடாது படித்துக் கொண்டே இருப்பார். சட்டம் பயின்றும், வழக்குரைஞர் வாழ்க்கையில் பற்றில்லாமையால் பி.எல். தேர்வினை எழுதாது விட்டுவிட்டார். யாரையும் எளிதில் நம்பும் தன்மையுடையவர். எவரும் வியக்கும் வண்ணம் பல வகைத் துன்பங்களையும் புறங்கண்டு, எவர் துணையினையும் எதிர்பாராமல் வாழ்ந்தவர். தனது எண்பத்தோராவது வயதில் (1947ல்) காலமானார்.

இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு.

பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலத்தில் முப்பத்திரண்டு நூல்களும், தமிழில் பதினெட்டு நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார். ஆங்கில நூல்கள் வருமாறு:

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிய பல்கலைக் கழக வினாக்கள் — ஷேக்ஸ்பியர் பாடல்கள் — கோல்ட்ஸ்மித்தின் கதைகள் — கார்லைல் எழுதிய அபட்டு சாம்சன் — ஆங்கில இலக்கிய விளக்கத் தொகுப்பு — ஆங்கிலத்தில் பயிற்சிகள் — ஆங்கிலத்தில் பேச்சு முறை — மெட்ரிகுலேஷன் வாசகம் — மெட்ரிகுலேஷன் முன்வகுப்பு வாசகம் — ரிப்பன் ஆரம்பம் – இளைஞர் முதியவர் வாசகங்கள் — நடுத்தர வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடத் திரட்டு — இந்திய வரலாறு (இளைஞர்களுக்கு) — இங்கிலாந்து வரலாறு (முதியவர்களுக்கு) — பி.ஏ. வகுப்பிற்கு சாக்ரடிஸ் பிளேட்டோ வரலாறுகள் — ஜூலியஸ் சீசர் உரை — ஒதெல்லோ உரை — எஃப்.ஏ., பி.ஏ. ஆங்கிலப் பாடப் புத்தகங்களுக்கு விரிவான உரைகள் — ரோமன் சட்டத் தொகுப்பு — மேயின் பழங்காலச் சட்டம் – சட்ட முறைமைகளின் சுருக்கம் — மேயின் பழங்காலச் சட்டச் சுருக்கம் — ஒப்பந்தச் சட்டம் — இன உதவிச் சட்டம் — திருக்குறள் உரையுடன் — இலங்கைப் பெருமன்னன் இராவணன்

தமிழ் நூல்கள்
ஔவை குறள் — ஆயிரத்து ஐம்பத்தைந்து செய்யுட்களையுடைய ‘செய்யுள் கோவை’ — விவேக விளக்கம் – ராயர் அப்பாஜி கதைகள் — வாசகத் திரட்டு — இரு சிறுகதைகள் — கதையும் கற்பனையும் நீதிக் கதைகள் — வீரமணி மாலை — தமிழ்க் கட்டுரைகள் — பன்னிரு பெண்மணிகள் — நபி நாயகமும் கவிவாணர்களும் — மருத்துவன் மகள் — தமிழரும் தமிழ்ப் புலவர்களும் — தப்பிலி — காமாட்சி என்ற நவநகை நாடகம் — ஐரோப்பியப் போர் — நவராத்திரி விரிவுரைகள் — சூரபதுமன் வரலாறு

(தகவல் ஆதாரம் – நெல்லைத் தமிழ்ப் புலவர்கள் — புத்தகத்திலிருந்து பிள்ளையவர்கள் வரலாற்றைத் தந்து உதவியவர்கள் – அவரது பிள்ளை வயிற்றுப் பேரர்களான மு.சி. பூரணலிங்கம், மு.சி. சந்திரன் திருநெல்வேலி, வலைத்தளத்தில் வி. சுந்தரம் ஐ.ஏ.எஸ்.கட்டுரை)

பரிதிமால் கலைஞர் எழுதிய மதிவாணன் என்ற புத்தகத்தை படித்திருக்கிறேன். தாங்க முடியாத போரடிக்கும் கதை என்பது வேறு விஷயம். அதன் முகவுரையில் அவர் இந்த புத்தகம் மு.சு. பூரணலிங்கம் பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அறிஞர்கள்

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: