எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் மூலக்கதையை எழுதிய ரஃபேல் சபாடினி

rafael_sabatiniசபாடினியை இரண்டு காரணங்களுக்காக தமிழர்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று, இவர்தான் சாண்டில்யனின் inspiration. இரண்டாவது எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலக்கதை(கள்) இவருடையதுதான். Captain Blood மற்றும் Sea Hawk நாவல்களின் சம்பவங்களை ஒன்றினைத்துத்தான் அந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. Captain Blood, Sea Hawk, Scaramouche போன்ற புத்தகங்கள் பெருவெற்றி பெற்றவை. Captain Blood, Scaramouche இரண்டு கதைகளையும் நான் சாகசக் கதைகளில் minor classics என்றே கருதுகிறேன்.

சாகசங்களை கட்டுக்கோப்பான கதைப்பின்னலாக மாற்றுவது இவரது தனித்திறமை. பத்து பனிரண்டு வயதினர் நன்றாக ரசிப்பார்கள்.

கேப்டன் ப்ளட் சீரிஸில் மூன்று புத்தகங்கள் இருக்கின்றன. Captain Blood (1922), Captain Blood Returns (1931), Fortunes of Captain Blood (1936). ப்ளட் ஒரு டாக்டர். இங்கிலாந்து ராஜாவை எதிர்த்த ஒரு வீரனுக்கு சிகிச்சை செய்வதால் அவர்களோடு சேர்த்து அவரும் மேற்கிந்தியத் தீவுகளில் அடிமையாக விற்கப்படுகிறார். அங்கே எஜமான் வீட்டுப் பெண்ணோடு காதல். தீவை கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களை முறியடித்து தப்பிக்கிறார். தானே ஒரு கடற்கொள்ளையனாக மாறுகிறார். (இதுதான் ஆயிரத்தில் ஒருவனின் முதல் பாதி என்பது நினைவிருக்கலாம். நம்பியாரோடு போடும் சண்டையும் ஒரு புத்தகத்தில் வருகிறது.) அவரது வீர தீர சாகசங்கள்தான் மூன்று புத்தகங்களிலும். முதல் புத்தகத்திலேயே இங்கிலாந்தின் ராஜா இவரையே தீவுக்கு கவர்னர் ஆக்கி கடற்கொள்ளை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுகிறார்.

Sea Hawk (1915) ஆ. ஒருவன் திரைப்படத்தில் ஜெயலலிதாவை ஏலம் எடுக்கும் காட்சி இங்கிருந்துதான் உருவப்பட்டிருக்கிறது.

Scaramouche (1921) சிறப்பாக தொகுக்கப்பட்ட கதை. ஃப்ரெஞ்சுப் புரட்சியின் காலத்தில் பிரபு ஒருவனுக்கும் ஒரு வக்கீலுக்கும் தகராறு ஏற்படுகிறது. ஜன்மப்பகையாகவே மாறுகிறது. கடைசியில் ட்விஸ்ட். (கல்கியின் மகுடபதியிலும் இதே கருதான்). Scaramouche the Kingmaker (1931) நாவல் இதே நாயகனை வைத்து கொஞ்சம் இழுவையாக எழுதப்பட்ட நாவல். ஃப்ரெஞ்சுப் புரட்சி காலத்தில் நாயகனின் சாகசங்கள்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Captain Blood.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகசக் கதைகள்