தேவனின் “ஜஸ்டிஸ் ஜகன்னாதன்”

மீள்பதிவு

மைனர் கிளாசிக்.

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் தேவனின் சிறந்த படைப்புகளில் ஒன்று. Legal thriller. அதே நேரத்தில் ஒரு விதத்தில் இது ஒரு Arthur Haileysque நாவல். கோர்ட், ஜூரி விசாரணை என்று ஒரு பின்புலத்தை சுவாரசியமாகக் காட்டுகிறது, ஆனால் மேலோட்டமாகத்தான் காட்டுகிறது. கோர்ட்டின் நடைமுறைக்குள் ஆழமாக போகவில்லை.

தியாகராயப் பிள்ளை பணக்காரர். அவரது மூத்த மாப்பிள்ளை வரதராஜப் பிள்ளை. மற்ற வாரிசுகளை விட வ. பிள்ளைக்கு நிறைய சொத்து எழுதி வைத்திருக்கிறார் மாமனார். ஆனால் உயிலை மாற்றவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். மாப்பிள்ளைக்கும் மாமனாருக்கும் இந்த விஷயத்தில் மனக் கசப்பு இருக்கிறது. தி. பிள்ளைக்கு உடம்பு மோசமாக இருக்கிறது. டாக்டர்கள் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று மருந்து கொடுத்ததில் எப்படியோ அபாயம் நீங்கிவிட்டது. வ. பிள்ளை வீட்டில் தங்கி இருந்து மாமனாரை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார். ஒரு நாள் இரவு கொஞ்சம் ரகசியமாக வெளியூர் போகிறார். அன்றிரவு உடல் தேறிக் கொண்டு வந்த மாமனார் இறக்கிறார். அவருக்கு யாரோ விஷம் கொடுத்திருப்பது தெரிய வருகிறது. காணாமல் போன வ. பிள்ளை மீது சந்தேகம் வருகிறது. அவரை கண்டுபிடித்து அவர் மேல் கொலைக் கேஸ் போட்டிருக்கிறார்கள். விசாரணை, குறுக்கு விசாரணை, கேஸ் என்று கதை சுவாரசியமாகப் போகிறது. உண்மையில் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் இந்த நாவலில் ஒரு minor பாத்திரம்தான்.

சில விஷயங்கள் ஆச்சரியத்தை தருகின்றன. ஜூரி சிஸ்டம் இந்தியாவில் ஏன், எப்போது மறைந்தது? ஆங்கில, அமெரிக்க சட்ட முறைகளில் இன்னும் இருக்கிறதே? (1959 நானவதி வழக்கிற்குப் பிறகு ஜூரி முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த நானாவதி வழக்கு சமீபத்தில் ருஸ்தம் என்று அக்‌ஷய் குமார் நடித்துத் திரைப்படமாக வந்தது.) வேளச்சேரி நாவலில் ஒரு கிராமம் என்று சொல்லப்படுகிறது! வெங்கடேசன் ஒரு வேலைக்காரிக்கு “செக்ஸ் புத்தகம்” எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார், ஐம்பதுகளிலேயே இதெல்லாம் வெளிப்படையாக விற்றிருக்கிறது! (டோண்டு ராகவன் இன்றில்லை, அவர் வயது இளைஞர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.)

நாவலின் பலம் அதன் சுவாரசியம்தான். அது காட்டும் உலகம் இன்று இல்லைதான். ஆனாலும் படிக்கும்போது அலுப்பு தட்டுவதில்லை. நல்ல கதைப் பின்னல் (plotting) இருக்கிறது. மெதுமெதுவாக தியாகராஜப் பிள்ளையின் குடும்ப உறுப்பினர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று புரிய வைக்கிறார். பலவீனம் கோர்ட் சூழ்நிலையை காட்டுவதோடு தேவன் திருப்தி அடைவதுதான். அவர் பெரிய இலக்கியம் படைக்க கிளம்பவில்லை என்பது தெளிவு!

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
தேவன் மரணம் பற்றி ஆனந்த விகடன் தலையங்கம்
கோபால் பதிவு – தேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்
கிழக்கு பதிப்பகம் மறு வெளியீடு செய்திருக்கும் தேவனின் புத்தகங்கள்
தேவனின் “கோமதியின் காதலன்”
தேவன் பற்றி சுஜாதா

5 thoughts on “தேவனின் “ஜஸ்டிஸ் ஜகன்னாதன்”

 1. ‘எழுத்துக் கலை’ பற்றி ‘தேவன்’
  ——————————————————
  1. எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று
  ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில்
  கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும். அதைக் காகிதத்தில்
  ஓட்டுவது தேர் இழுக்கிறமாதிரி இருக்கும். படிக்கிற பேருக்கு உலுக்கு மரம்
  போடுகிறமாதிரி தோன்றும். பேனா ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்,
  அப்போதுதான் எழுத்தாளனுக்கும் எளிது. வாசகனுக்கும் சுகம்.

  2. எழுதுவது என்றால் ஒரு ஆவேசம் வேண்டி இருகிறதே! அப்படி வந்தால் தான்
  எழுத்து ஜீவனுடன் இருக்கிறது.

  3. எழுத எழுதத்தான் மெருகு ஏறும். வார்த்தைப் பிரயொகம் சுபாவமாக வரும்
  உங்களிடம் எழுத்துக்கலைக்கு வேண்டிய விஷயம் இருக்கிறது. அதை
  சரியானபடி பயன் படுத்த வேண்டும். பேனாவுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

  4 எழுதி எழுதித்தான் கை பண்பட வேண்டும். மனதில் அற்புதமான ‘ஐடியா’
  உருவாகும். அதையே எழுத்தில் பார்க்கும்போது ஜீவன் இல்லாமல் போய்விடும்..
  மூளையும் கையும் ஒத்துழைக்க வேண்டும். பாஷை அனுகுணமாக வேலை
  செய்ய வேண்டும். மூன்றும் ஒத்துக் கொண்டால்தான் ‘மார்க்’ வாங்கலாம்.
  எழுத்து என்பது சாமான்யம் இல்லை.

  5. எழுதுவத் மிகவும் சிரமமான, சங்கடமான தொழில். ”அழகாக வார்த்தைகளைக்
  கோத்துக் கொடுத்து விட்டேனே!” என்றால் பிரயோசனமில்லை. எத்தனையோ
  பொறுமை, எத்தனையொ உழைப்பு, வாழ்க்கையை ஊன்றிக் கவனித்து ஏற்பட்ட
  பக்குவம், பொது ஜனங்கள் எதை விரும்புவார்கள் என்ற சரியான ஊகம், எப்படி
  எழுதினால் சிறப்பாக அமையும் என்று கண்டு கொள்கிற ஞானம் – இத்தனையும்
  ஒரே ஆசாமியிடம் வேண்டும். இது ஒரு நாளில் வருகிற வித்தை இல்லை. பல
  வருஷங்கள் உழைத்தே இந்தத் தேர்ச்சியை அடைய முடியும்.

  6. மனித சுபாவங்களில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. அவற்றில் மிகப்
  பெரும்பாலானவை ஒரே திசையை நோக்குபவை. ஒரு சின்னக் காரியம் செய்து
  விட்டுப் பெரும் புகழைப்பெற விரும்புகிறவர்கள், அதைப்பற்றி அடிக்கடிப்
  பேசுகிறவர்கள், ஒரு சில இடங்களில் தலையைக் காட்டிவிட்டுப் புகைப்
  படத்திலும் புகுந்து கொள்பவர்கள், தன் அருமையை இன்னும் உலகம் கண்டு
  கௌரவிக்கவில்லை என்று நிரந்தரமாகக் குறைசொல்பவர்கள் – இந்த மாதிரி
  ரகங்களைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மைக் கட்சியை அலங்கரிப்பவர்கள்.
  ஹாஸ்யமாக எழுதுவதற்கு இவர்கள் தருகிற விஷயம் வேறு யாருமே கொடுக்க
  மாட்டார்கள்.

  7. எழுதுகிற கதை தமிழ்நாட்டுக் கதையாக இருக்க வேண்டும். கதைப் பாத்திரங்
  களைப் படிக்கும் போது ”எங்கேயோ பார்த்திருக்கிறோமே” என்று பிரமை
  தட்ட வேண்டும். அதுதான் எழுத்திலே காட்டும் ஜாலம்.

  8. ஒரு மனிதனைக் கவனித்து, குணாதிசயங்களை உணர்ந்து, பேனா முனையில்
  அதைக் கொணர்ந்து பிறர் அந்த மனிதரை மனக்கண் முன் பார்க்கும்படி
  செய்வது எத்தனை கடினமான காரியம்! அதற்கு எத்தனையோ சாமர்த்தியம்
  வேண்டும். வார்த்தைக்கட்டு வேண்டும்.

  9. எழுத்தாளன் கண்ணால் ஒன்றைக் கண்டுவிட்டு சும்மா இருந்து விடுவானா?
  தான் கண்ட அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லாவிட்டால் அப்புறம் என்ன
  எழுத்தாளன் என்று பெயர்?

  10. வாசகர்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்களுக்கு யாரிடத்திலும் மனதில்
  எள்ளளவும் துவேஷம் கிடையாது. நன்றாக இருகிறதை உடனே தயங்காமல்
  குறைக்காமல் சொல்லுவார்கள். அதில் நம்பிக்கை யுடன் எழுதிவிட்டால்
  யாரும் அசைக்க முடியாது.

  –வே.சபாநாயகம்
  http://ninaivu.blogspot.com/2007/11/1.html

  Like

 2. சுவாரஸ்யமான, விறுவிறுப்பாக படிக்க வைக்கும் புத்தகம். வெறும் உரையாடல்களில் கதையை சொல்வதற்கு அபார கற்பனை தேவை. கோர்ட்டின் நடைமுறைகளை வேண்டிய அளவிற்கு தொட்டுச்சென்றுள்ளதாகவே தோன்றுகின்றது. நானவதி கொலைவழக்கு பற்றி “பிரபல கொலை வழக்குகள்” கிழக்கு வெளியீடு புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.