தேவனின் ‘மிஸ்டர் வேதாந்தம்’

விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் எல்லாம் படித்து மெய்மறந்து போவதற்கு முன்னாலேயே ஜெயமோகனோடு இணையத்தில் ஓரளவு பேசி இருக்கிறேன். வணிக நாவல்களின் முக்கியத்துவம் பற்றி அப்போது அவர் பேசியதும் எழுதியதும் என்னை ‘அட!’ என்று திரும்பிப் பார்க்க வைத்தது. வணிக நாவல்கள் முக்கியமானவை என்று நினைக்கும் இலக்கியத் தேடல் உள்ள ஒரே ஆள் நான்தான் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். என்னை விட சிறந்த ஒரு வாசகரும் அதே மாதிரி நினைக்கிறார் என்பது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

பிறகு ஜெயமோகனின் seminal நாவல் பட்டியல் கண்ணில் பட்டது. அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் – குறிப்பாக வணிக நாவல்களைப் பற்றி – சிலிகன் ஷெல்ஃபில் எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. என்னைத் தவிர வெறு யாரும் அவற்றை சீந்தமாட்டார்கள் என்று ஒரு நினைப்பு இருந்தது. இப்போது பல நண்பர்கள் – கேசவமணி, ரெங்கசுப்ரமணி, ஏன் சுசீலா மேடம் கூட அவற்றைப் படிக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப நாளாயிற்று அந்தப் பட்டியல் பக்கம் போய். அவ்வப்போதாவது எழுத வேண்டும், இன்று மிஸ்டர் வேதாந்தம் பற்றி.

தேவனை முழுவதும் வணிக எழுத்தாளர் என்று லைட்டாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை. பெரும் இலக்கியவாதியும் இல்லை. அவர் எழுதி நான் படித்தவற்றில் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம் மூன்றும் எனக்கு இலக்கியம். மிச்ச எல்லாம் – ராஜத்தின் மனோரதம், கோமதியின் காதலன் இத்யாதி – அந்தக் காலத்துக்கு ஸ்டாண்டர்ட் விகடன் தொடர்கதை, அவ்வளவுதான். ஒரு இரண்டுங்கெட்டான் எழுத்தாளராக இருக்கிறார்.

மிஸ்டர் வேதாந்தம் முழுக்க முழுக்க வணிக நாவல். நான் தமிழில் பிரபலமாக இருந்த பெண் எழுத்தாளர்கள்லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, அனுராதா ரமணன், ஏன் இன்றைக்கு ரமணி சந்திரன் எல்லாரும் ஒரே கருவைத்தான் – பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும் – எழுதுகிறார்கள் என்று கிண்டலடிப்பேன். இதில் தேவன் அதே ஃபார்முலாவைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். பத்தினிக்கு பதில் கட்டுக்குடுமி பிராமண வாலிபனுக்கு இன்னல் வருகிறது பழையபடி தீர்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் தேவன் லக்ஷ்மி, சிவசங்கரி போன்றவர்களை விட மிகத் திறமையான எழுத்தாளர். அதனால் கதை எப்படிப் போகும், என்னவெல்லாம் ஆகும் என்று யூகிக்க முடிந்தபோதும் படிக்கத் தோன்றியது. சில இடங்களில் – அன்றைய பத்திரிகை அலுவலக சித்தரிப்பு, நாயகனை ஏமாற்றும் திமிரான உறவினர்களின் சித்தரிப்பு, அழகான பெண்ணைப் பார்த்ததும் வேதாந்தம் லேசாகத் தடுமாறுவது போன்ற இடங்கள் உண்மையாகத் தெரிகின்றன. ஏன் அவர் பக்திப் பரவசத்தோடு சிக்கல் சிங்காரவேலன் கோவில், பார்த்தசாரதி கோவில் என்று விவரிப்பது கூட உண்மையாகத்தான் இருக்கிறது. சுவாரசியம் குறையாமல் எழுதி இருக்கிறார்.

சுருக்கமாகக் கதை – பணக்காரச் சூழலில் வளரும் வேதாந்தம் அப்பா இறக்கும்போதுதான் நிறைய கடன் இருப்பதை உணர்கிறான். உறவினர்கள் ஏமாற்றி இருப்பதையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். தான் விரும்பும், தன்னை விரும்பும் அத்தை மகளை மணக்கும் முன் செட்டில் ஆக வேண்டும். ட்யூஷன் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார், எழுத்தாளன், உதவி ஆசிரியன் என்று பல வேலைகளில் அலைகிறான். அவனுக்கு பல விதங்களில் உதவி செய்யும் ஆபத்பாந்தவர் சுவாமி, அவரது தம்பி சிங்கம். சில பல சிக்கல்களுக்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கிறது, காதல் மணத்தில் முடிகிறது, சுபம்!

நாயகனுக்கு உதவி செய்வதே தன் வாழ்வின் ஒரே லட்சியம் என்று சுவாமி இருக்கிறார். ஏன் என்றே தெரியவில்லை. வேதாந்தம் மருந்துக்கு கூட ஒரு அபிராமணரை சந்திப்பதில்லை. எப்படி? வேதாந்தத்தை ஏமாற்றினால் சாமி வந்து கண்ணைக் குத்திவிடுகிறது – சரி முதுகைக் குத்திவிடுகிறது, அவனை ஏமாற்றும் உறவினருக்கு முதுகில் கட்டி வருகிறது, சொத்தெல்லாம் போய்விடுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற வேதாந்தமாக இருப்பது தவிர வேறு எந்தத் தகுதியும் வேண்டாம் போலிருக்கிறது!

இது எல்லாருக்குமான நாவல் இல்லை. ஆனால் வணிக எழுத்து எப்படிப் பரிணமித்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். ஜெயமோகன் இதற்குப் பதிலாக ஜஸ்டிஸ் ஜகன்னாதனை (வணிக நாவலாகவாவது) தேர்ந்தெடுத்திருக்கலாம்.

வேதாந்தம் போலவே இன்னொரு நாவல் லக்ஷ்மி கடாட்சம். முழுக்க முழுக்க வாரப் பத்திரிகை தொடர்கதை. வேதாந்தத்துக்கு பதிலாக துரைசாமிக்கும் காந்தாமணிக்கும் இன்னல்கள் வந்து தீர்கின்றன.

இன்னொரு நாவலான மிஸ் ஜானகி பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. இவை எல்லாம் அந்தக் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வணிக நாவல்கள், அவ்வளவுதான். பிராமண மத்தியதர வர்க்கத்துக்காக எழுதப்பட்டவை. இன்று தேவன் பக்தர்கள், ஆவணப்படுத்துபவர்கள் தவிர வேறு யாரும் சீந்தமாட்டார்கள். எனக்கு முக்கியமாகத் தெரிவது தேவனின் craft. பல சரடுகளை ஒன்றிணைக்கும் விதம். சின்னச் சின்ன பாத்திரங்களில் (நாயகனின் அப்பா ஹரன், நாயகனின் நண்பன் மணியின் மனைவி தங்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்) தெரியும் genuineness. மெலிதான நகைச்சுவை. ஆனால் வணிக நாவல்கள் எழுத விரும்புபவர்கள் இதை எல்லாம் படித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறுகதையும் கிடைத்தது – மாலதி. தவிர்க்கலாம்.

தேவனுக்கு இன்னும் ஓரளவு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லயன்ஸ் அவரது புத்தகங்கள வெளியிட்டது. கிழக்கும்.

தேவன் ரசிகர்கள் பசுபதியின் தளத்தை கட்டாயமாகப் பார்க்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இவர் தேவனின் பரம ரசிகர். இன்னொரு பரம ரசிகரான திவாகர் அவரைப் பற்றி எழுதிய பதிவுகள் இங்கே புத்தகமாகவே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

வேதாந்தம் பற்றி ரெங்கசுப்ரமணியின் பதிவு இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன் பக்கம்

சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I

இது ஒரு மீள்பதிவு (கொஞ்சம் அப்டேட் செய்யப்பட்டது)

சமீபத்தில் ஜெயமோகன் இந்த நாவலை மறுபார்வைக்குட்படுத்தி இருந்தார். அவரது கோணம் மாறி இருக்கிறது என்று சொன்னார். (ஒரிஜினல் அலசலை இங்கே பார்க்கலாம்.) என் கருத்துக்கள் மாறவில்லை, மீள்பதித்திருக்கிறேன்.

ஜெயகாந்தன் நிறைய எழுதி இருக்கிறார். ஆனால் அக்னிப்பிரவேசம் சிறுகதை, அதன் தொடர்ச்சியான சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல், அதன் தொடர்ச்சியான கங்கை எங்கே போகிறாள் நாவல் ஆகியவற்றின் தாக்கம், பாப்புலாரிட்டி பிற கதைகளுக்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது. அக்னிப்பிரவேசம் அளவுக்கு சர்ச்சைக்கு ஆளான வேறு சிறுகதையை ஜெயகாந்தன் எழுதவில்லை என்று நினைக்கிறேன். (ரிஷிமூலம் போன்றவையும் நிச்சயமாக சர்ச்சையை உண்டாக்கி இருக்கும்தான்.) சினிமாவாக வந்து வெற்றி பெற்றதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

அக்னிப்பிரவேசம் சிறுகதை அறுபதுகளில் எழுதப்பட்டது. யாரோ ஊர் பேர் தெரியாதவனுடன் கொஞ்சமாவது விருப்பத்துடன் உறவு கொண்ட பெண்ணை தலையில் தண்ணீர் விட்டு நீ புனிதமாயிட்டே என்று சொல்லும் அம்மாக்கள் இன்று கூட கொஞ்சம் அபூர்வம்தான். அன்று மத்திய தர குடும்பங்களுக்கு ஏற்பட்ட ஷாக் மிக அதிகம்.

சி.நே.சி.ம. அறுபதுகளின் இறுதியிலோ என்னவோ எழுதப்பட்டது. (படமே 75-இல் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.) கங்காவின் வெறுமையில் கதை ஆரம்பிக்கிறது. நீ ஒரு வைப்பாட்டியாகத்தான் இல்லை இல்லை “கான்குபைனாகத்தான்” வாழ முடியும் என்று கங்காவிடம் வெங்கு மாமா சொல்கிறார். அக்னிப்பிரவேசம் கதை பத்திரிகையில் வருகிறது. எதுவுமே பேசாத கங்காவுக்கு அதைக் கண்டு ஆவேசம் வருகிறது. அந்த பத்திரிகையை தன் அம்மாவிடம் தூக்கி எறிகிறாள். அம்மா இப்படி செய்யலாம் என்று தோன்றக்கூட இல்லையே என்று அழுகிறாள். அம்மாவை தேற்றக் கூடிய ஒரே மனிதர் வெங்கு மாமா. அவர் இல்லை நீ செய்ததுதான் சரி, அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவனையே தேடி பிடிச்சு அவன் கூடவே வாழட்டுமே என்கிறார். தன் சாமர்த்தியத்தை நிரூபிக்க கங்கா கதை எழுதிய ஆர்கேவியை பிடித்து, பிரபுவை கண்டுபிடித்துவிடுகிறாள். முதலில் சபலத்தோடு கங்காவை பார்க்க வரும் பிரபு கங்காவுக்கு ஒரு குழந்தை போல தெரிகிறான். பிரபு கங்கா நட்பு வளர்கிறது, ஆனால் அம்மாவுக்கு மானம் போகிறது. கங்காவுடன் சண்டை போடும்போது, நீ மட்டும் என்ன முடியை சிரைச்சுண்டா நிக்கறே என்று கேட்டுவிட, அம்மா அடுத்த நாளே ஆசாரமான பிராமண விதவை மாதிரி மொட்டை அடித்துக் கொண்டு நிற்கிறாள். பிரபு கங்கா நட்பில் பிரபுவின் டீனேஜர் மகள் மஞ்சுவும் இடம் பெறுகிறாள். விளையாட்டாக ஒரு திருமண சம்பந்தப் பேச்சை கங்கா கட் செய்யாமல் இருந்துவிட, அது வளர்ந்து பிரபு கங்காவை வந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறான். கங்காவுக்கு தனக்கு வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் அது பிரபுவுடன்தான் என்று முடிவாகிவிட்டது. தோழி என்ற ஸ்தானத்திலிருந்து உண்மையிலேயே “கான்குபைனாக” தயாராக இருக்கிறாள். பிரபுவின் குற்ற உணர்ச்சி அவளை ஏற்க முடியாமல் தடுக்கிறது. அவர்கள் பிரிவோடு கதை முடிகிறது.

கதையின் முதல் பலம் பாத்திரங்கள். கங்காவும், பிரபுவும், மஞ்சுவும் நாம் அடிக்கடி சந்திப்பவர்கள் இல்லைதான். ஆனால் உண்மையான நபர்கள். கங்காவின் வாழ்க்கையின் வெறுமை, பிரபு திரும்பியதும் ஒரு பிடிப்பு ஏற்படுவது, பிரபுவின் பலவீனங்கள், அந்த பலவீனங்களை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கும் அவன் குணம், மாறினால் நன்றாக இருக்குமே, மாறலாம் என்று கூட தெரியவில்லையே என்று துடிக்கும் ஒரு பழைய கால பிராமண அம்மா, ஒரு “மாடர்ன்” டீனேஜர் மஞ்சு, அதி புத்திசாலி, ஆனால் எழுபது வயதான பிறகும் சபலம் போகாத வெங்கு மாமா, அவரிடம் அடிபட்டே வாழ்க்கையை கடத்தும் மாமி, ஒரு டிபிகல் அந்த கால அண்ணன் கணேசன், எழுத்தாளர் ஆர்கேவி, என்று சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மிகவும் ரியலிஸ்டிக்காக இருக்கின்றன. அனேகமாக இவர்கள் எல்லாருமே கொஞ்சம் அதீத மனிதர்கள், ஆனால் பொய்ச்சித்திரங்கள் இல்லை.

கதையின் இரண்டாவது பலம் கதைப் பின்னல். சம்பவங்கள் மிக அருமையாக கோர்க்கப்படுகின்றன. “கற்பிழந்த” கங்கா வெங்கு மாமாவை விலக்குவது, கங்காவுக்கு கான்குபைனாக வாழ்வது தவறாகத் தெரியாத அன்றைய சமுதாய விழுமியங்கள், பிரபு மெதுமெதுவாக தன்னுள் மறைந்து கிடக்கும் நல்ல குணங்களை வெளிப்படுத்துவது, பிரபு தன் பெண் மஞ்சுவின் தலையில் தன் “பாவங்கள்” இறங்கிவிடுமோ என்று பயப்படுவது, அந்த குற்ற உணர்வினால் கங்கா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது, மொட்டை அடித்துக் கொண்டு வரும் அம்மா, அக்னிப்ரவேசம் கதையை நாவலுக்குள் அழகாக பிணைத்திருக்கும் விதம் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன.

கதையின் மூன்றாவது பலம் அன்றைய சமூக விழுமியங்கள் இயற்கையாக வெளிப்பட்டிருக்கும் விதம். “கற்பு” போச்சா, வாழ்க்கை முடிந்துவிட்டது. வாழ்க்கை வேண்டுமா, அதே “கற்பழித்தவனுக்கு” வைப்பாட்டியாகத்தான் இருக்க முடியும், அதுதான் அதிக பட்சம். இப்படி இன்றைக்கு ரமணி சந்திரன் கூட எழுதமாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அன்று அதுதான் மத்திய தர குடும்பத்தின் வால்யூ சிஸ்டம். அது இன்றைக்கு படிக்கும்போதும் நமக்கு ஆச்சரியமாகத், தவறாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் கங்காவை பெண்ணியம் பேசுபவர்கள் ஒரு ரோல் மாடலாகத்தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்! சும்மா சொல்லக்கூடாது, அப்படி தோன்ற வைப்பதில்தான் ஜெயகாந்தன் கலக்குகிறார்!

ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது விலாவாரியான அலசலைப் பற்றி அடுத்த பகுதியில். சுருக்கமாக அவரது வார்த்தைகளில்:

நமது பாலியல் பாவனைகளுக்குப் பலியாகும் பெண்களின் வாழ்வு பற்றிய ஆய்வு எனத் தொடங்கி, சீதையில் தொடங்கும் இந்தியப் பெண்ணின் தனிமையை காட்டி முழுமை பெறுகிறது. இந்த நாவல் தீவிரமே இதன் பலம். 1973ல் பிரசுரமாயிற்று.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

ஜெயகாந்தனின் ஒரு சிறந்த எழுத்தாளர், ஆனால் இந்தப் புத்தகம் முடிந்து போன ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி. இன்றைக்கே இந்த புத்தகத்தின் விழுமியங்கள் (என்னைப் போன்ற ஒரு அரைக்கிழத்துக்கே) கொஞ்சம் காலாவதியான மாதிரி தெரிகிறது. இன்னும் நூறு வருஷம் கழித்து ஏதோ ஒரு நாள் எவனோடோ படுத்தாளாம், அவள் வாழ்க்கையே மாறிவிட்டதாம், வாட் நான்சென்ஸ்? என்றுதான் படிப்பவர்களுக்கு தோன்றும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் நூறு வருஷம் கழித்து இந்த புத்தகம் நினைவு கூரப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதே படித்துவிடுங்கள்!

பின்குறிப்பு: கங்கை எங்கே போகிறாள் நாவலில் பிரபு திவாலாகிவிடுகிறான். கடைசி காலத்தில் கங்காவும் பிரபுவும் ஒன்றாக platonic relationship என்று வாழ்கிறார்கள். கங்கா கங்கையிலே மூழ்கி இறந்துவிடுவதோடு முடிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயமோகனின் அலசல்
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் – பக்ஸ் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்

வெய்யிற்கேற்ற நிழலும் வீசும் தென்றலும்

எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். வர வர சங்கக் கவிதைகளாவது படிக்க முடிகிறது, ஆனால் பாரதியாரைத் தவிர்த்த நவீனக் கவிஞர்களை அபூர்வமாகவே ரசிக்க முடிகிறது. அப்படிப்பட்ட என்னை இந்த எளிமையான கவிதை எப்படி இத்தனை சுலபமாக அசைத்துவிடுகிறது?

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையம் தரும் இவ்வனமின்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?

(கடைசி வரி அனாவசியம்)

ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். (பிள்ளை ஆங்கிலத்தில்தானே படித்திருப்பார்?) எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரல்டின் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பில்:

Here with a loaf of bread beneath the bough,
A flask of wine, a book of verse – and thou
Beside me singing in the wilderness
And wilderness is paradise now

தமிழில் வையம் தரும் இவ்வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ என்ற வரி தேவை இல்லாததாகத் தெரிகிறது. ஆனால் ஆங்கிலத்தில் ‘And wilderness is paradise now‘ என்பது கவிதை! ஆங்கிலத்தில் மற்ற வரிகள் எனக்கு சுமார்தான். ரசனை விசித்திரங்கள்!

தேசிகவினாயகம் பிள்ளை எழுதியது, உமர் கய்யாமின் ருபையாத்தில் வரும் ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பாம். நான் ருபையாத்தையும் படித்ததில்லை, இந்த மொழிபெயர்ப்பையும் முழுதாகப் படித்ததில்லை. பிள்ளைவாளின் வேறு எந்தக் கவிதையும் என் ரேடாரில் பட்டதும் இல்லை.

கண்டசாலா இசையமைத்து பானுமதியோடு சேர்ந்து பாட்டாகப் பாடிய காட்சி, கள்வனின் காதலி (1955) திரைப்படத்தில் இடம் பெறுகிறது. ஒரே பிரச்சினை, மதுவுண்டு என்பதை அமுதுண்டு என்று bowdlerize செய்திருக்கிறார்கள். ஒரிஜினல் கவிதை மட்டுமல்ல, பாடலும் என் மனதைக் கவர்ந்த ஒன்றுதான். சிவாஜிக்கு கண்டசாலா குரல் பொருந்தவில்லையே என்று நினைப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு கேட்டுப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

துப்பறியும் சாம்பு

(மீள்பதிவு)

கிளாசிக். தேவனின் புத்தகங்களில் இதுதான் மிகவும் பிரபலமானது. ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஆகிய மூன்றும் தேவன் புத்தகங்களில் கட்டாயமாக படிக்க வேண்டியவை.

கதை தெரிந்ததுதான். ஒரு சாதாரண டெம்ப்ளேட் – காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்கள். அந்த மாதிரி அடி முட்டாள் சாம்பு முட்டாள்தனமாக எதையாவது செய்ய, அது ஒவ்வொரு முறையும் வொர்க் அவுட் ஆகிவிடுகிறது. இந்த டெம்ப்ளேட்டை ஐம்பது முறை போரடிக்காமல் பயன்படுத்தி இருக்கிறார் தேவன். ஒவ்வொரு கதையிலும் சாம்புவின் முட்டாள்தனத்தையும், அது எப்படியோ குற்றவாளியை கண்டுபிடிப்பதையும் மெல்லிய நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார். இன்றைக்கும், இந்த ஜெனரேஷனுக்கும் கூட கதைகள் அப்பீல் ஆகின்றன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த, பாப் இசை கேட்கும், அமெரிக்க டீனேஜர்கள் பற்றிய புத்தகங்களை மட்டுமே விரும்பிப் படிக்கும் என் (அப்போதைய) 12 வயதுப் பெண்ணுக்கு “இஷ்டம் போல் பிரயாணம்” என்ற கதையை சொன்னேன் – அவள் விழுந்து விழுந்து சிரிக்கிறாள்! அதுதான் தேவனின் வெற்றி.

என்னுடைய ஃபேவரிட் கதைகள்:

  1. தேடி வருகிறது கவுரவம்
  2. மைசூர் யானை
  3. தலைக்கு வந்தது
  4. வேஷம் பலித்தது
  5. குறட்டையும் கொட்டாவியும்
  6. தேடி வந்த தனம்
  7. மடையன் செய்கிற காரியம்
  8. தலைக்கு மேல் வெள்ளம்
  9. சிங்காரம் ஐ.சி.எஸ்.
  10. அதிர்ஷ்டம் துரத்துகிறது
  11. இஷ்டம் போல் பிரயாணம்
  12. பச்சை வைரம்
  13. சங்கராபுரம் மகாராஜா
  14. கோட்டையூர் கோமளம்
  15. காணமற்போன கணவன்
  16. சுந்துவின் சிறுகதை

காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகத்தையும் தேவனே எழுதி இருக்கிறார் – கதைகளை வெட்டியும் ஒட்டியும் உருவாக்கி இருக்கிறார். நாடகமும் இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது. அவருக்கு முன்னால் நடராஜன் என்று ஒருவர் நடித்ததாகவும் அவர் சாம்பு நடராஜன் என்றே புகழ் பெற்று விளங்கியதாகவும் தெரிகிறது.

ஒய்.ஜி. மகேந்திரன் சாம்புவாக டிவி சீரியலில் நடித்திருக்கிறாராம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சாம்பு மாதிரி குணாதிசயமும், சாம்பு என்ற பேரும், சாம்புவைப் போலவே அதிருஷ்டம் உடைய துப்பறிபவராக நாகேஷ் நடித்திருக்கிறார். ஆனால் தேவனின் கதைகள் எதுவும் அதில் பயன்படுத்தப்படவில்லை.

நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே.

தேவனின் பரம ரசிகரான பசுபதி சாம்புவைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். சில கதைகளை ராஜு ஆகியோர் வரைந்த சித்திரங்களுடனேயே ஸ்கான் செய்து பதித்திருக்கிறார். திரை எழும்புகிறது, சித்ரசேனா நாடக சபை ஆகியவற்றை இங்கே படிக்கலாம்.

மேலும் தென்றல் பத்திரிகையில் பங்களா மர்மம் என்ற சிறுகதையைப் படிக்கலாம்.

ஒரே ஒரு வருத்தம்தான். ஐம்பதோடு நிறுத்திவிட்டாரே, இன்னும் எழுதி இருக்கலாமே!

கட்டாயமாக படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன்

தொடர்புடைய பதிவுகள்:
தேவன் மரணம் – விகடன் தலையங்கம்
மோட்டார் சுந்தரம் பிள்ளை விமர்சனம்

பாலகுமாரனின் ‘இரும்பு குதிரைகள்’

இரும்பு குதிரைகள் கல்கியில் தொடர்கதையாக வந்தது என்று நினைவு. தொடர்கதையாகப் படிக்கும்போது மனதில் ஆழமாகப் பதிந்தது மன்னார்குடி வாத்தியார் ஒருவர் தான் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது பிரிவுபசார நிகழ்ச்சியில் பேசுவது. போதும் போதாமல் இருக்கும் சம்பளமும் போய்விட்டால் ஏழை வாத்தியாரின் கதி என்ன என்ற கேள்வி மிக நிஜமானது. என் அம்மா/அப்பா பள்ளி ஆசிரியர்கள்தான். என் அத்திம்பேர் (அபிராமண மொழியில் அத்தையைக் கட்டிய மாமா) மன்னார்குடியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது இருப்பதைப் போல ஓய்வூதியத்தில் சௌகரியமாக எல்லாம் வாழ்ந்துவிட முடியாத காலம். என்னை தாக்கிய உரை அது.

பிற்காலத்தில் அந்த வாத்தியார் பாத்திரம் கரிச்சான் குஞ்சுவால் inspire ஆனது என்று தெரிய வந்தது ஒரு சின்ன சுவாரசியம்.

ஆனால் அப்போதே அடுத்தடுத்த பகுதிகளில் என்ன இந்த ஆள் பெண்கள் பற்றிய தன் கனவுகளை (fantasies) கதையில் வலிந்து புகுத்துகிறாரே என்று தோன்றியது. நாயகி மணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவாள். குழந்தையின் உயிரியல் தந்தைக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இன்றே அப்படி ஒரு விருப்பம் சமூகத்தில் புருவத்தைத் தூக்க வைக்கும். அன்று மகா செயற்கையாக இருந்தது. மீண்டும் இந்தப் பதிவுக்காகப் படித்துப் பார்த்தேன், வெறுமனே வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்காக – பகல் உணவை டப்பாவில் கட்டிக் கொண்டு கையில் விகடனையோ கல்கியையோ எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்கு பஸ்ஸிலோ ரயிலிலோ சென்று கொண்டிருந்த அன்றைய டிபிகல் மத்திய தர வர்க்க வாசகனை, குறிப்பாக முப்பத்தி சொச்சம் வயது வாசகியை, ‘பாருடீ இப்படி எல்லாம் எழுதறான்’ என்று லேசான கிளுகிளுப்புடன் அங்கலாய்த்துக் கொள்ள வைப்பதற்காக – வலிந்து புகுத்தப்பட்ட செயற்கையான முடிச்சு என்று நிச்சயமாகத் தெரிந்தது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த செயற்கையான முடிச்சு இல்லாவிட்டால், வாத்தியாரின், அவரது மகள் காயத்ரியின், கவிதை எழுதும் நாயகனின் சித்தரிப்பு கதையின் தரத்தை உயர்த்தி இருக்கும்.

சமூகத்தில் உள்ள விழுமியங்களை, பிம்பங்களை தன் எழுத்தால் கட்டுடைக்க வேண்டும் என்ற விழைவுக்கும் வாசகர்கள் தன் எழுத்தால் அதிர்ச்சி அடைய வேண்டும் என்ற விழைவுக்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. புதுமைப்பித்தன் பொன்னகரத்திலும், ஜெயகாந்தன் அக்னிப்பிரவேசத்திலும் தி.ஜா. அம்மா வந்தாளிலும் அந்தக் கோட்டை அனாயாசமாகத் தாண்டுகிறார்கள். திறமை இருந்தும் பாலகுமாரனால் அந்தக் கோட்டை என்றுமே தாண்ட முடிந்ததில்லை. தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த மாதிரி உறவு வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை வலிந்து புகுத்திவிடுகிறார், அது அவரது சில நல்ல படைப்புகளையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.

நண்பர் ரெங்கசுப்ரமணி இதற்கு ஒரு சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கிறார். அதைப் படித்த பிறகு எனக்கு லாரித் தொழிலின் பின்புலம் இந்த நாவலின் பலங்களில் ஒன்று, அதைக் குறிப்பிட மறந்துவிட்டோமே என்று தோன்றியது.

பாலகுமாரன் ஏன் நல்ல இலக்கியவாதி இல்லை என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்

அந்தக் காலத்தில் பிராமணப் பெண்களின் திருமண வயது

நம்மில் அனேகருக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளைதான் தமிழின் முதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் என்று தெரிந்திருக்கும். வே. பிள்ளை சுகுணசுந்தரி சரித்திரம் என்ற இன்னொரு நாவலையும் எழுதி இருக்கிறார். நாவலுக்கு historical curiosity என்பதைத் தவிர வேறு மதிப்பு எதுவும் இல்லை. இதை எல்லாம் இந்தக் காலத்து சின்னப் பிள்ளைகள் கூட காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள்.

ஒரு அம்புலி மாமா கதையை சட்டமாக வைத்து அதில் நல்லொழுக்கம், பொறாமை, இளமையில் திருமணம் என்று பல விஷயங்களைப் பற்றி சொற்பொழிவு. அவரே பல அத்தியாயங்களின் ஆரம்பத்தில் சொற்பொழிவு என்று சொல்லிவிடுகிறார். 🙂 மு.வ. 1800-களில் எழுதிய “நாவல்” போல இருக்கிறது.

பிறகு எதற்காக இந்த புத்தகத்தைப் பற்றி எழுதுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? புத்தகத்தின் ஒரே ஒரு சுவாரசியமான விஷயம் – பார்ப்பனர்கள் மட்டும்தான் அந்தக் காலத்தில் சின்னக் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் போலிருக்கிறது. ‘மிகு இளமை மணமறுப்பு‘ என்ற தலைப்பில் நாயகி சுகுணசுந்தரி செய்யும் சொற்பொழிவிலிருந்து சில வரிகள்:

இந்த நாட்டில் பார்ப்பனர் முதலானவர்களுக்குள்ளாக நடக்கும் மிகு இளமை மணமானது மிகவும் வெறுக்கத் தக்கதாய் இருக்கிறது.

இந்த நாட்டிலும் பார்ப்பனர் முதலிய சிலரைத் தவிர மற்றை எந்தப் பிரிவினரிலும் மிகு இளமை மணமே இல்லை. இந்த நாட்டிலே கிறித்துவர்களும் மகமதியர்களும் இன்னும் பல பிரிவினரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தகுந்த காலம் வந்த பிறகுதான் திருமணஞ் செய்கிறார்கள்.

வே. பிள்ளை இதை 1880, 1890 வாக்கில் எழுதி இருக்க வேண்டும். அப்போதெல்லாம் என்ன வயதில் திருமணம் நடக்கும்? பாரதியாருக்கு 12, 13 வயதில் ஏழு வயது செல்லம்மாவோடு திருமணம் என்று நினைவு.

பெண் ருதுவானதும் அவளை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி பல புனைவுகளில் வருகிறது என்று நினைவு. பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றையில் பெண்ணுக்கு வயது வருவதற்கு முன் திருமணம் செய்ய வேண்டும் என்ற வழக்கம் பேசப்படுகிறது என்று ஒரு மங்கலான ஞாபகம். ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரத்திலும் சிறு வயது திருமணங்கள் பற்றி வரும் என்று நினைக்கிறேன். ஜே.ஆர். ரங்கராஜுவின் ராஜாம்பாள் நாவலில் ராஜாம்பாளுக்கு வயது 13-தான். ஆனால் ராஜாம்பாள் பிராமணத்தியா என்று நினைவில்லை. 13 வயதுதானா என்று யாராவது பொங்கி எழுவதற்கு முன் ஜூலியட்டுக்கு வயது 12-தான் என்று நினைவுபடுத்துகிறேன்!

யாருக்காவது தெரியுமா? 1875-1925 காலகட்டத்தில் பிராமணக் குடும்பங்களில் எத்தனை வயதில் திருமணம் செய்வது பழக்கமாக இருந்தது? பிற ஜாதிகளில்?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

ஒரு கருத்து, மூன்று மேற்கோள்கள்

ராபர்ட் ஹெய்ன்லெய்ன் எழுதிய They என்ற சிறுகதையைப் படித்துக் கொண்டிருந்தேன். என் கண்ணில் கதை சுமார்தான், ஆனால் நல்ல கரு. ஒரு வரி என்னை மிகவும் கவர்ந்தது.

They went to work to earn the money to buy the food to get the strength to go to work to earn the money to buy the food to get the strength to go to work to get the strength to buy the food to earn the money to go to…

என்னைக் கவரும் கவிதைகள் அபூர்வம். அதுவும் ஆங்கிலக் கவிதைகள் மிக அபூர்வம். ஆனால் டி.எஸ். எலியட்டின் இந்த வரிகளுக்கு நான் ஏறக்குறைய அடிமை. அவரது வரிகள்தான் ஞாபகம் வந்தது.

Here we go round the prickly pear
Prickly pear prickly pear
Here we go round the prickly pear
At five o’clock in the morning.

தாயுமானவரா, பட்டினத்தாரா யாரென்று சரியாகத் தெரியவில்லை. அவரும் பட்டினத்தாரிடமிருந்து இரண்டு வரிகள்.

– பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க நாய் நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும்தான்!

இந்த மாதிரி உணர்வுகளை கவிதையாகச் சொல்லும்போது இன்னும் அழகாக இருக்கிறது, ஆனால் அது எனக்கு கவிதையாகத் தென்படுமா இல்லையா என்பதுதான் எனக்கு பிரச்சினையாக இருக்கிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

ஜடாயு உரை – இளங்கோ முதல் தாயுமானவர் வரை

jataayu_2.jpgஇந்தத் தளத்திற்கு வருபவர்களுக்கு ஜடாயு பரிச்சயமான பெயர். தீவிர ஹிந்துத்துவர். சிறந்த வாசகர். கம்ப ராமாயணத்தில் ஊறித் திளைப்பவர். சமீபத்தில் இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். தமிழ்ஹிந்து இணைய தளத்தின் ஆசியர், மற்றும் வலம் மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர். இவரது கட்டுரைகளின் தொகுப்பு காலம்தோறும் நரசிங்கம் தடம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

ஜடாயுவின் ஹிந்துத்துவ அரசியலில் எனக்கு இசைவில்லை. அவரது அரசியல் நிலைப்பாடு அவரை சில சமயங்களில் ஸ்பின் டாக்டராக ஆக்கிவிடுகிறது என்று கருதுகிறேன். ஆனால் நான் மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர். அவரால் கூட எனக்கு கவிதைகளைப் புரிய வைத்துவிட முடியவில்லை என்பதுதான் சின்ன சோகம்.

ஜடாயு நேற்று பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் ‘இளங்கோ முதல் தாயுமானவர் வரை: தமிழ் இலக்கியச் சுடர்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையெல்லாம் கேட்டு எனக்கு பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றியோ, அல்லது கவிதைகளைப் பற்றியோ ஞானோதயம் எதுவும் உண்டாகிவிடப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் சமோசாவும் பக்கோடாவும் கிடைக்கும் என்பதால் போனேன். அவரது உரையை கிட்டத்தட்ட இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள்/படைப்பாளிகள் பற்றிய ஒரு கழுகுப் பார்வை (Bird’s eye view) என்று சொல்லலாம். என்னால் அவர் மேற்கோள் காட்டிய பாடல்களை எல்லாம் நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் சுருக்கமாக அவரது உரையின் முக்கியப் புள்ளிகள் கீழே.

கம்பனே தமிழ் இலக்கியத்தின் உச்சம். அவருக்குப் பின்னாலும் முன்னாலும் வந்தவர்களுக்கு கம்பனே உரைகல். இது ஜடாயுவின் சொந்தக் கருத்து மட்டுமல்ல, தமிழ் இலக்கியம் அறிந்த எல்லாருமே ஏறக்குறைய ஏற்றுக் கொள்ளும் கருத்து.

கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் அடியொற்றிச் செல்கிறது. கம்பன் செய்திருக்கும் கதை மாற்றங்கள் எல்லாம் சின்னச் சின்ன நகாசு வேலைகள்தான்.

வள்ளுவர் காலத்தால் இளங்கோவுக்கு முற்பட்டவர், அதனால் இந்த உரையில் அவரைப் பற்றி இல்லை. (ஜடாயு உரைக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்டது)

இளங்கோவின் காலத்திலேயே தற்கால ஹிந்து மதத்தின் கூறுகள் தமிழகத்தில் நன்றாக வேரூன்றி இருக்கின்றன. வேட்டுவவரியில் பாலை நிலத்தில் வாழும் எயினர் மகிஷனை வெல்லும், மான் மேல் அமரும் துர்கையை வணங்குகிறார்கள். (பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் சக்தியின் வாகனம் மான், சிங்கம் அல்ல)

சிலப்பதிகாரம் தனது கருக்களாக முன் வைப்பவை – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் – இந்திய, ஹிந்து/பௌத்தக் கருத்தாக்கங்களாக பல காலமாக நிலை பெற்றிருப்பவை.

பிற ஐம்பெருங்காப்பியங்களான மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, ஜீவகசிந்தாமணி ஆகியவை கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிடும்போது சிறு விளக்குகள்தான், பெருஞ்சுடர்கள் அல்ல.

தேவாரம் – குறிப்பாக, அப்பர், சம்பந்தர், சுந்தரர் எழுதிய பாடல்களை அடுத்த பெருஞ்சுடராக கருதுகிறார். பாலை, சூலை, ஓலை தந்து சிவபெருமான் இவர்களைத் தனது அடியவர்களாக்கிக் கொண்டார். சம்பந்தர் உமையிடம் பாலருந்தி ஞானம் பெற்றார், அப்பருக்கு சூலை நோய் கண்டு அவதிப்பட்டபோது சிவபெருமானைப் பிரார்த்தித்து குணமானார், மண வேளையில் இவன் என் அடிமை என்று ஓலை ஒன்றைக் காட்டி சுந்தரரை ஆட்கொண்டார் என்பது தொன்மம். சம்பந்தரின் பாடல்களில் குழந்தையின் இனிமை (சமணர்களை கண்டமேனிக்கு திட்டிப் பாடி இருக்கிறார் என்றும் பின்னால் சொன்னார்), அப்பரின் பாடல்களில் வலியின் வேதனை, சுந்தரரின் பாடல்களின் தோழனோடு சமமாகப் பழகும் தொனி இருக்கும். மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ உருக்கம் ததும்பி வழியும். சம்பந்தர்தான் நிறைய இடங்களுக்கு சென்று பதிகம் பாடி இருக்கிறார், அதுவும் பதிகத்தில் ஊர் பெயரைச் சொல்லிவிடுவார்.

சேக்கிழாரின் பெரிய புராணம் இன்னொரு பெரும் இலக்கியச் சுடர். சேக்கிழார் ஒவ்வொரு நாயன்மாரின் ஊர், குலம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து எழுதி இருக்கிறார்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நம்மாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் ஆகியோரைப் பற்றி கொஞ்ச நேரம் பேசினார். திருமங்கை ஆழ்வார் ‘சீதை உன் தோழி, என் தம்பி உன் தம்பி, நான் உன் தோழன்’ என்று ராமன் சொன்னதாகப் பாடியதைத்தான் கம்பன் குகனொடும் ஐவரானோம் என்று பின்னால் பாடி இருக்கிறார். பெரியவாச்சான் பிள்ளையின் உரைகளும் பெரும் இலக்கியம்.

பிற்காலப் புலவர்களில் அவர் குறிப்பிட்டது அருணகிரிநாதர், தாயுமானவர் மற்றும் குமரகுருபரர். (நண்பர் பாலாஜி குமரகுருபரர் தாயுமானவருக்கு காலத்தால் பிற்பட்டவர், இந்த உரையில் அவர் பேர் வந்திருக்கக் கூடாது என்றார். தமிழ் இலக்கியமே நமக்குத் தகராறு, இதில் புலவர்களின் காலத்தைப் பற்றி எல்லாம் நான் என்ன சொல்ல?) நான்தான் பாலாஜி சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது, குமரகுருபரர் தாயுமானவருக்கு முந்தையவர்தான்.

அவரது உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு எல்லாம் அகில இந்தியப் பண்பாட்டோடு இணைந்த ஒன்று, அதன் பகுதி என்ற வாதம். கங்கையும் காசியும் ராமனும் கிருஷ்ணனும் எப்படி அன்றே தமிழர்களின்/இந்தியர்களின் கூட்டு மனநிலையில் (collective psyche) இடம் பெற்றுவிட்டார்கள் என்பதை பல மேற்கோள்கள் மூலம் சுட்டிக் காட்டினார். உதாரணமாக கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டுச் செல்வதை அயோத்தியை விட்டு ராமனும் சீதையும் நீங்குவதோடு ஒப்பிட்டு இளங்கோ பாடி இருப்பதை மேற்கோள் காட்டினார். ராமன் சர்வசாதாரணமாக மேற்கோளாகக் காட்டவும் பட்டு, அந்த மேற்கோள் சர்வசாதாரணமாக புரிந்து கொள்ளவும் பட்டால் ராமனின் கதை அனைவரும் அறிந்ததாகத்தானே இருக்க வேண்டும்?

எனக்குத் தெரிந்த வரை அவர் தவறவிட்டது மணிமேகலை, ஜீவக சிந்தாமணி, மற்றும் கலிங்கத்துப் பரணி. இவற்றில் இரண்டை அவர் சிறு விளக்கு என்று ஒதுக்கிவிட்டார். கலிங்கத்துப் பரணியைப் பற்றியும் அப்படித்தான் நினைக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.

சில நண்பர்கள் அவர் சீறாப்புராணத்தை விட்டுவிட்டாரே என்று கேட்டார்கள். ஜடாயு போன்ற ஹிந்துத்துவர் சீறாவை குறிப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் கவிதையும் கவிநயமும் அறியாத, சீறாவின் இரண்டொரு செய்யுள்களை மட்டுமே பள்ளியில் படித்திருக்கும் எனக்கு அது குறிப்பிடப்பட வேண்டிய காவியமாகத் தெரியவில்லை. Tokenism-த்துக்காக மட்டுமே சீறா, தேம்பாவணி போன்றவை பள்ளிப் பாடங்களில் இடம் பெறுகின்றன என்றே கருதுகிறேன். (அது சரிதான் என்றும் கருதுகிறேன், இல்லாவிட்டால் பிற மதம் சார்ந்த இலக்கியங்கள் இருப்பதே நமக்குத் தெரியாமல் போய்விடும்.)

தனிப்பட்ட முறையில் இரண்டொரு பாடல்கள் என்னைக் கவர்ந்தன. அப்பர் பாடல் ஒன்றில் சொல்லப்படும் ஆமை உவமை, ‘வாழ்ந்து போதீரே’ என்று இழிக்கும் சுந்தரர் பாடல், திருமங்கை ஆழ்வாரின் ராமன் பற்றிய பாடல், வேட்டுவவரி ஆகியவற்றைப் படிக்க வேண்டும் என்றும் பெரியவாச்சான் பிள்ளையின் உரைகளைப் படிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. பார்ப்போம்…

முழு உரையையும் இங்கே கேட்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் இலக்கியம்

கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க்

கலைஞர் கருணாநிதிக்கு 94 வயது. தமிழக அரசியலில் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக பல பத்தாண்டுகளாக இருந்திருக்கிறார் என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்க முடியாது. நல்ல சக்தியா தீய சக்தியா என்பதைப் பற்றிப் பேச சிலிகன் ஷெல்ஃப் சரியான தளமில்லை. இங்கே சில பல பழைய பதிவுகள் இருக்கின்றன. நேரம் இல்லாதவர்களுக்காக ஒரு மதிப்பீடு இங்கே.

பொதுவாக யாரையும் எனக்கு அடைமொழி வைத்து அழைப்பது பிடிக்காது. காந்தி என்றுதான் எழுதுவேன், மஹாத்மா காந்தி என்று எழுதமாட்டேன். கலைஞர் மட்டுமே விதிவிலக்கு. ஏனென்றால் தான் கலைஞர் என்று அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவு. அவரவர் விரும்பும் பெயரால் அழைப்பதுதான் நாகரீகம் என்று நினைக்கிறேன். அப்படி கலைஞர் என்று அடைமொழி வைத்து அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார் என்பதிலேயே அவரது குணாதிசயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சிலிகன் ஷெல்ஃபில் வேறு என்ன எழுதப் போகிறேன்? அவரது இலக்கியப் பங்களிப்பைப் பற்றித்தான். இது ஒரு மீள்பதிப்பு, சில திருத்தங்களுடன்.

திராவிட இயக்க எழுத்தாளர்கள் எவருமே எனக்குத் தெரிந்து நன்றாக எழுதியதே இல்லை. அண்ணாதுரை மட்டுமே கொஞ்சம் தேறுவார். கலைஞர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மொத்த மதிப்பு என்னைப் பொறுத்த வரை பூஜ்யம்தான். கறாராக மதிப்பிட்டால் பூஜ்யத்துக்கும் கீழேதான் மார்க் போட வேண்டும்.

எனக்கும் பழைய தமிழ் இலக்கியத்துக்கும் கொஞ்சம் தூரம். சின்ன வயதில் உருப்போட்டதால் நாலு குறள், குற்றாலக் குறவஞ்சியில் இரண்டு பாட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வெண்பா சொல்லுவேன். அவ்வளவுதான். சிவபெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு இறங்கி வந்து எழுதிய கவிதையான கொங்குதேர் வாழ்க்கையை முழுதாக படித்தபோது சிவபெருமான் கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாமே, வெளியே ஏன் வந்தார் என்றுதான் தோன்றியது.

கலைஞரோ இந்த இலக்கியத்தில் முங்கி குளிப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. குறளோவியம் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை, ஆனால் அவர் ரசிகர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தொல்காப்பியப் பூங்காவை என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறாராம். அதில் ஒரு பத்து நாடகம் இருக்கும் போலத் தெரிகிறது. ஒரே முத்தம் போன்றவை நாற்பதுகளில் நல்ல வணிக நாடகம் என்று கருதப்பட்டிருக்கலாம். முக்கால்வாசி பண்டைத் தமிழ் இலக்கியம் பற்றித்தான். ஜெயமோகன் அவரது ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம் ஆகியவற்றை தன் வரலாறு கற்பனை படைப்புகள் இரண்டாம் பட்டியலில் பரிந்துரைத்திருக்கிறார். என் பார்வையில் இது அதீதமான அங்கீகாரம்.

தென்பாண்டி சிங்கம் சரியாக நினைவில்லை. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ரோமாபுரிப் பாண்டியனும் இந்த லெவலில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவருடைய கதைகளில் ஓரளவு நினைவிருப்பது பொன்னர் சங்கர் ஒன்றுதான். ஆரம்ப பள்ளி மாணவன் லெவலில் எழுதப்பட்ட கதை. ஒரே லாபம் அண்ணன்மார் சாமி கதை பற்றி தெரிந்துகொண்டதுதான். அண்ணன்மார்சாமி கதை நல்ல ஸ்கோப் உள்ள கதை. ஒரு திறமையான எழுத்தாளன் பொன்னர்-சங்கர் vs அண்ணன் காளி போராட்டத்தை விவசாயி vs வேட்டைக்காரன் போராட்டமாக சித்தரிக்கலாம். அன்றைய மைய அரசு vs குறுநில மன்னர் உறவைப் பற்றிப் பேசி இருக்கலாம். இவர் பாட்டி கதை ஸ்டைலை தாண்டவில்லை. பொன்னர் சங்கர் மட்டும் வைத்து சொன்னால் இவர் கதை கிதை என்று எழுதாமலே இருக்கலாம் என்றுதான் சொல்வேன்.

இவற்றைத் தவிர பாயும் புலி பண்டார வன்னியன் என்றும் ஒன்று எழுதி இருக்கிறாராம். ஏன் இந்தக் கொலை வெறி?

அவருடைய சமூக நாவல்களில் நாயகியோடு தவறான உறவு கொள்ள வில்லன்கள் வரிசையில் நிற்பார்கள். எப்படா முடியும் என்றுதான் தோன்றும். ஒரு மரம் பூத்தது என்ற குறுநாவலில் ஓ. ஹென்றியின் ஒரு சிறுகதையை கொஞ்சம் தழுவி எழுதி இருக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் சுயசரிதை எழுதி இருக்கிறார். இதை விட மோசமான சுயசரிதையை நான் படித்ததில்லை.

நடுநடுவே தமிழே, நிலவே, எழிலே என்று ஏதாவது கட்டுரைகளும் எழுதுவார். அன்றாவது படித்தார்களா இல்லை இவரேதான் படித்துக் கொண்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது. முத்தாரம் என்ற புத்தகம் நல்ல உதாரணம். ‘செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்‘ என்று ஒன்று. அதில் முன்னோடிகளைப் பற்றி எழுதி இருக்கிறார்.

அவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ?” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா!” அவாள்-சவால், குடும்பத் தகராறு பற்றி எழுதுவது எல்லாமும் கவிதை, பாரதி எழுதியதும் கவிதை என்பது உலக மகா அநியாயம்.

அவரது பேச்சும் எழுத்தும் பலரை கவர்ந்தன. அவரது charisma-வின் ஆதாரமே அவரது தமிழ்தான். ஆனால் அது வெறும் அலங்காரத் தமிழ். அதில் கருத்தை விட எதுகை மோனைக்குத்தான் முதல் இடம். மேடையில் பேசினால் சும்மா பொழுதுபோக்குக்காக கேட்கலாம், அவ்வளவுதான். நான் படித்த வரையில் அண்ணாவின் தமிழ் இதை விட நன்றாக இருக்கிறது.

மொத்தத்தில் எனக்கு தெரிந்த அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது இல்லை. அவர் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்துள்ள முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் அவற்றின் தரத்தை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. என்றாவது தொல்காப்பியப் பூங்கா படித்துப் பார்க்க வேண்டும்.

அவர் படைப்புகளில் நான் உண்மையில் விரும்புவது மனோகரா, பராசக்தி திரைப்படங்களின் திரைக்கதை+வசனங்கள்தான். அவரது எழுத்தின் சாதனை என்று நான் கருதுவது இந்த மாதிரி திரைப்பட வசனங்கள்தான். மந்திரிகுமாரி, திரும்பிப் பார் ஆகிய படங்களிலும் வசனம் குறிப்பிடும்படி இருந்தது. அபிமன்யு படத்திலும் சிறப்பாக எழுதி இருந்தார். ஆனால் அதெல்லாம் மனோகராவோடு போயிற்று. சினிமாவைப் பொறுத்த வரையில் அவர் காலம் முடிந்து பல பத்தாண்டுகள் சென்றுவிட்டன.

மனோகராவின் திரைப்பட வசனங்களை பிறகு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றும் காலாவதி ஆகிவிடவில்லை. சிவாஜி, கண்ணாம்பா, டி.ஆர். ராஜகுமார், எஸ்.எஸ்.ஆர் போன்ற நல்ல நடிகர்கள் நடிக்கும்போது திரைப்படம் இன்னும் மேலே போய்விடுகிறது. ஆனால் இவற்றை ரசிக்கும் மனநிலை இன்று இல்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் அவர் சொந்தமாக இலக்கியம் படைக்கவில்லை. கறாராக மதிப்பிட்டால் அப்படி அவர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மதிப்பு பூஜ்யம்தான். அவர் எழுதி இருக்கும் இலக்கிய விளக்கங்களை என்றாவது படிக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் இலக்கிய விளக்கங்கள் இலக்கியம் ஆவதில்லை. ஷேக்ஸ்பியர்தான் இலக்கியம் படைத்திருக்கிறார், அவரது விமர்சகர்கள் அல்ல.

தொடர்புடைய சுட்டிகள்:
கருணாநிதியின் தளம்
கலைஞர் கருணாநிதி பக்கம்

கருணாநிதியைப் பற்றிய மதிப்பீடு
கருணாநிதியின் அரசியல் பங்களிப்பு
கருணாநிதியின் சினிமா பங்களிப்பு

திரைப்பட விமர்சனம் – மனோகரா
திரைப்பட விமர்சனம் – பராசக்தி
பராசக்தி நீதிமன்ற வசனம்

ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர I

இத்தனை நாள் எழுதியதில் என்ன புத்தகங்களைப் பற்றி திருப்பி எழுதலாம் என்று புரட்டிப் பார்த்தபோது முதலில் வந்தது நினைவு வந்தது இந்தப் புத்தகம்தான். 2010-இல் எழுதியது, ஒரு எழுத்தைக் கூட இன்றும் மாற்ற வேண்டியதில்லை.


நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் எப்படி இருக்கும், என் references என்ன என்றெல்லாம் எழுதியாயிற்று. ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

என் சிறு வயதில் படித்த நல்ல புத்தகங்களில் “ஜயஜய சங்கர” ஒன்று. இதை படித்தபோது காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது மரியாதை அதிகரித்தது. சமீபத்தில் மறு வாசிப்பு செய்தபோது இது நல்ல புத்தகம் என்பது எனக்கு உறுதிப்பட்டது. காஞ்சி சந்திரசேகரர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு என்பதே தெரிந்திருக்கலாம். எனக்கு அவரைப் பற்றி இருக்கும் இமேஜை இந்தப் புத்தகம் மேலும் உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் அவர் மீது மரியாதையும் அதிகரிக்கிறது.

பதிவு நீளமாகிவிட்டதால் இரண்டு பகுதிகளாக போட உத்தேசம்.

கதைக்கு உன்னத மனிதர்கள் என்று பெயர் வைத்திருக்கலாம். கதையில் வரும் பலரும் noble souls, லட்சியவாதிகள். இந்த நாவலே லட்சியவாதத்தை தூக்கிப் பிடிப்பதுதான்.

கதை நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது 1975 வாக்கில்.

நாயகன் ஆதி ஹரிஜன். (இந்த புத்தகம் வரும்போது தலித் என்ற வார்த்தை பரவலாகவில்லை.) சுதந்திரப் போராட்டத்தின்போது மகாலிங்க ஐயர் என்பவர் சேரியில் ஒரு காந்தி ஆசிரமம் நடத்துகிறார். அங்கே படித்து பெரியவனாகும் ஆதி ஐயரின் மகள் சுதந்திர தேவியையே மணந்து கொள்கிறார். ஒரு வளர்ந்த பையன், ஒரு வளர்ந்த பெண், ஒரு சிறு பையன் என்று குடும்பம் இருக்கிறது. மூத்தவன் மகாலிங்கத்துக்கும் ஆதிக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவதில் தகராறு. ஆதி அதை பயன்படுத்தக் கூடாது என்கிறார், மகாலிங்கமோ அதை வைத்து வேலையில் சேர்கிறான். தான் உயர்வாக கருதிய/கருதும் விழுமியங்களை இந்தக் காலத்தில் யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல் ஆதிக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

ஆதியின் சிறு வயது நண்பன் சங்கரன். இன்றைய “சுவாமிகள்” – சங்கராச்சாரியார்தான். சிறு வயதில் ஆற்றோடு போக இருந்த சங்கரனை தொட்டு காப்பாற்றியது ஆதிதான். எப்போதும் இறைவனை ஆதியின் உருவில்தான் பார்க்கிறார் சுவாமிகள். காலம் அவர்களை வேறு வேறு பாதையில் செலுத்திவிட்டாலும் ஆதியை அவர் நினைக்காத நாளில்லை.

சிங்கராயர் பழைய காலத்து சுதந்திர போராட்ட வீரர். இன்றைக்கு இடிந்துகொண்டிருக்கும் ஒரு வீட்டில் கஷ்டங்களோடு வசிக்கிறார்.

அவரது ஒரே மகன் சத்தியமூர்த்தி. மகா அறிவாளி. இப்போது ஜெயிலில். எமர்ஜென்சி ஆரம்பிக்கும் முன்பே ஜெயில், அதனால் சித்திரவதையை அனுபவிக்கவில்லை. மேலும் ஜெயிலராக இருக்கும் மூர்த்தி சத்தியமூர்த்தியால் கவரப்படுகிறான், தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறான்.

ஆதியின் மகன் மகாலிங்கம் இவர்களோடுதான் இருக்கிறான். அவன் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டதற்கு காரணமே இந்த கூட்டத்துக்கு விவரம் சேகரித்துத் தரத்தான். இவர்களைத் தவிர, உமா என்று போராளிப் பெண், ஆதியின் குடும்பம், மகாலிங்க ஐயரின் அண்ணனும், சுவாமிகளின் பூர்வாசிரம அப்பா – சமஸ்காரங்களில் ஊறியவர் – என்று பல “சின்ன” பாத்திரங்கள்.

கதை முக்கியமே இல்லை, பாத்திரங்கள்தான் முக்கியம் – இருந்தாலும் கதை என்ன என்று கேட்பவர்களுக்காக: ஆதி தன் சிறு வயது மகனை மீண்டும் வேதம் படிக்க வைத்து உண்மையான பிராமணன் ஆக்குங்கள் என்று சுவாமிகளை கேட்கிறார். சுவாமிகள் முதலில் உன் பெரிய மகனை அணைத்துக் கொள் என்று சொல்கிறார். மகாலிங்கத்தின் காரணங்களை ஆதி புரிந்துகொள்கிறார். அவர், சிங்கராயர் மற்றும் பலர் ஒரு காந்தி ஆசிரமம் நடத்த முன் வருகிறார்கள்.

படிக்கும்போது ஒரு மாபெரும் ஓவியத்தை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

சின்ன வயதில் இதை நான்கு தனித்தனி மாத நாவலாக படித்திருக்கிறேன். இதில் வரும் சங்கரன் – சுவாமிகள் – காஞ்சி சந்திரசேகரரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாத்திரம் என்பது படித்தால் சுலபமாக புரிந்துவிடும். ஜெயகாந்தன் சந்திரசேகரரால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு. இதில் வரும் சித்திரம் அவர் மீது மரியாதையை அதிகரிக்கும். அன்று எனக்கும் அதிகரித்தது. இன்றும் அப்படித்தான்.

சிறு வயது சங்கரனும் ஆதியும் நண்பர்கள். ஆனால் தவறுதலாகக் கூட கை படக்கூடாதென்று இருவரும் கவனமாக இருப்பார்கள். ஆற்றோடு போகும் சங்கரனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து அவனை இழுத்து வரும்போது மட்டுமே அந்த ஆசாரம் உடைகிறது. வயதான பிறகு தன் “சொந்த” கிராமத்துக்கு வரும் சுவாமிகளை ஆதி தொலை தூரத்திலிருந்துதான் பார்க்கிறார். மடத்துக்கு வர முயல்வதில்லை. சுவாமிகள் ஆதியை கூட்டி வரும்படி ஒரு மடத்து காரியக்காரரிடம் சொல்கிறார். அவரிடம் ஆதி தான் ஹரிஜன் என்று சொல்ல, அதை நேராக வந்து சுவாமிகளிடம் அவர் சொல்கிறார். அதற்கு சுவாமிகள் சொல்லும் பதில் – “அவன் ஹரிஜன்னா மத்தவாள்ளாம் சிவஜனோ?” அப்புறம் ஆதி வழக்கமான பரிகாரமான பசுவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு சுவாமிகளைப் பார்க்க வருகிறார். சுவாமிகள் வேறு ஒரு இடத்தில் விதவைகள் கையில் ஒரு குழந்தையோடு வந்தால் தரிசனம் கொடுப்பேன் என்று ஒரு பரிகாரம் சொல்லி இருப்பதாக சொல்கிறார். இதில் வரும் சுவாமிகளின் சித்திரம் உண்மையான ஞானம் நிறைந்த ஒரு மகான், தன் சொந்த நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை உடைக்க விரும்பாத, அவற்றை ஓரளவு வளைக்க மட்டுமே தயாராக இருக்கும் ஒரு மதத் தலைவர். மாற்றங்கள் தானாக ஏற்பட வேண்டும், அதை ஏற்படுத்த ஒரு மதத் தலைவர் முயலக் கூடாது என்று நினைப்பது போல இருக்கிறது.

இந்த உன்னத மனிதர்கள் எல்லாருமே பொதுவாக அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தனக்கு உரிமை இருந்தபோதும், அதை பிடுங்குவதில்லை. ஆதி கோவில்களுக்குள் நுழைவதில்லை. என்று அவரை முழு மனதாக ஏற்றுக் கொள்கிறார்களோ அன்று போனால் போதும் என்று இருக்கிறார். ஆதி தன் குடும்பத்தவரிடம் – குறிப்பாக மூத்த மகனிடம் மட்டுமே தன் கருத்தை திணிக்க முயற்சிக்கிறார், மற்ற அனைவரையும் அரவணைத்துப் போகவே முயல்கிறார்.

ஜெயகாந்தனிடம் இது ஒரு பெரிய மாற்றம். இங்கே தெரியும் ஜெயகாந்தன் அக்னிப்ரவேசத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டு நீ புனிதமாயிட்டே என்று சொல்லும் தாயை உருவாக்கியவர் இல்லை; யுக சந்தியில் மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பேத்திக்கு துணை போகும் பாட்டியை உருவாக்கியவர் இல்லை. ஆனால் அந்த மனிதர்களிடம் இருக்கும் மனித நேயம், பரஸ்பர அன்பு எல்லாம் இவர்களிடமும் இருக்கிறது. அதனால் இவர்கள் அநியாயங்களை எதிர்த்து, நியாயங்களை ஆதரித்து கூப்பாடு போடவில்லை, they try to work around it. எமர்ஜென்சியை எதிர்த்து மட்டுமே கொஞ்சம் போராடுகிறார்கள். நமக்கு இந்த கதைகளில் தெரிவது போராளி ஜெயகாந்தன் இல்லை, ஒரு mellowed down ஜெயகாந்தன்.

அருமையான பாத்திரப் படைப்புகளுக்காக இந்த புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். ஜெயகாந்தனின் சாதனைகளில் ஒன்று. கட்டாயம் படித்துப் பாருங்கள்.

இதற்கு ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்ற sequel உண்டு.

இன்னும் ஒரு sequel கூட – ஹர ஹர சங்கர – வந்திருக்கிறதாம். அதை நான் இன்னும் படிக்கவில்லை. நீங்கள் யாராவது படித்திருக்கிறீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

  • ஜய ஜய சங்கர – ஒரு அலசல் பகுதி 2
  • ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரோ நாம்
  • அழியாச்சுடர்கள் தளத்தில் யுகசந்தி சிறுகதை
  • (ஜெயகாந்தனின் பிற படைப்புகள் பற்றி):

  • ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” சிறுகதை, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம் ஆகியவற்றில் ஒரே அடிப்படைக் கருத்து
  • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்
  • “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்