கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க்

கலைஞர் கருணாநிதிக்கு 94 வயது. தமிழக அரசியலில் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக பல பத்தாண்டுகளாக இருந்திருக்கிறார் என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்க முடியாது. நல்ல சக்தியா தீய சக்தியா என்பதைப் பற்றிப் பேச சிலிகன் ஷெல்ஃப் சரியான தளமில்லை. இங்கே சில பல பழைய பதிவுகள் இருக்கின்றன. நேரம் இல்லாதவர்களுக்காக ஒரு மதிப்பீடு இங்கே.

பொதுவாக யாரையும் எனக்கு அடைமொழி வைத்து அழைப்பது பிடிக்காது. காந்தி என்றுதான் எழுதுவேன், மஹாத்மா காந்தி என்று எழுதமாட்டேன். கலைஞர் மட்டுமே விதிவிலக்கு. ஏனென்றால் தான் கலைஞர் என்று அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவு. அவரவர் விரும்பும் பெயரால் அழைப்பதுதான் நாகரீகம் என்று நினைக்கிறேன். அப்படி கலைஞர் என்று அடைமொழி வைத்து அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார் என்பதிலேயே அவரது குணாதிசயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சிலிகன் ஷெல்ஃபில் வேறு என்ன எழுதப் போகிறேன்? அவரது இலக்கியப் பங்களிப்பைப் பற்றித்தான். இது ஒரு மீள்பதிப்பு, சில திருத்தங்களுடன்.

திராவிட இயக்க எழுத்தாளர்கள் எவருமே எனக்குத் தெரிந்து நன்றாக எழுதியதே இல்லை. அண்ணாதுரை மட்டுமே கொஞ்சம் தேறுவார். கலைஞர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மொத்த மதிப்பு என்னைப் பொறுத்த வரை பூஜ்யம்தான். கறாராக மதிப்பிட்டால் பூஜ்யத்துக்கும் கீழேதான் மார்க் போட வேண்டும்.

எனக்கும் பழைய தமிழ் இலக்கியத்துக்கும் கொஞ்சம் தூரம். சின்ன வயதில் உருப்போட்டதால் நாலு குறள், குற்றாலக் குறவஞ்சியில் இரண்டு பாட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வெண்பா சொல்லுவேன். அவ்வளவுதான். சிவபெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு இறங்கி வந்து எழுதிய கவிதையான கொங்குதேர் வாழ்க்கையை முழுதாக படித்தபோது சிவபெருமான் கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாமே, வெளியே ஏன் வந்தார் என்றுதான் தோன்றியது.

கலைஞரோ இந்த இலக்கியத்தில் முங்கி குளிப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. குறளோவியம் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை, ஆனால் அவர் ரசிகர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தொல்காப்பியப் பூங்காவை என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறாராம். அதில் ஒரு பத்து நாடகம் இருக்கும் போலத் தெரிகிறது. ஒரே முத்தம் போன்றவை நாற்பதுகளில் நல்ல வணிக நாடகம் என்று கருதப்பட்டிருக்கலாம். முக்கால்வாசி பண்டைத் தமிழ் இலக்கியம் பற்றித்தான். ஜெயமோகன் அவரது ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம் ஆகியவற்றை தன் வரலாறு கற்பனை படைப்புகள் இரண்டாம் பட்டியலில் பரிந்துரைத்திருக்கிறார். என் பார்வையில் இது அதீதமான அங்கீகாரம்.

தென்பாண்டி சிங்கம் சரியாக நினைவில்லை. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ரோமாபுரிப் பாண்டியனும் இந்த லெவலில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவருடைய கதைகளில் ஓரளவு நினைவிருப்பது பொன்னர் சங்கர் ஒன்றுதான். ஆரம்ப பள்ளி மாணவன் லெவலில் எழுதப்பட்ட கதை. ஒரே லாபம் அண்ணன்மார் சாமி கதை பற்றி தெரிந்துகொண்டதுதான். அண்ணன்மார்சாமி கதை நல்ல ஸ்கோப் உள்ள கதை. ஒரு திறமையான எழுத்தாளன் பொன்னர்-சங்கர் vs அண்ணன் காளி போராட்டத்தை விவசாயி vs வேட்டைக்காரன் போராட்டமாக சித்தரிக்கலாம். அன்றைய மைய அரசு vs குறுநில மன்னர் உறவைப் பற்றிப் பேசி இருக்கலாம். இவர் பாட்டி கதை ஸ்டைலை தாண்டவில்லை. பொன்னர் சங்கர் மட்டும் வைத்து சொன்னால் இவர் கதை கிதை என்று எழுதாமலே இருக்கலாம் என்றுதான் சொல்வேன்.

இவற்றைத் தவிர பாயும் புலி பண்டார வன்னியன் என்றும் ஒன்று எழுதி இருக்கிறாராம். ஏன் இந்தக் கொலை வெறி?

அவருடைய சமூக நாவல்களில் நாயகியோடு தவறான உறவு கொள்ள வில்லன்கள் வரிசையில் நிற்பார்கள். எப்படா முடியும் என்றுதான் தோன்றும். ஒரு மரம் பூத்தது என்ற குறுநாவலில் ஓ. ஹென்றியின் ஒரு சிறுகதையை கொஞ்சம் தழுவி எழுதி இருக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் சுயசரிதை எழுதி இருக்கிறார். இதை விட மோசமான சுயசரிதையை நான் படித்ததில்லை.

நடுநடுவே தமிழே, நிலவே, எழிலே என்று ஏதாவது கட்டுரைகளும் எழுதுவார். அன்றாவது படித்தார்களா இல்லை இவரேதான் படித்துக் கொண்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது. முத்தாரம் என்ற புத்தகம் நல்ல உதாரணம். ‘செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்‘ என்று ஒன்று. அதில் முன்னோடிகளைப் பற்றி எழுதி இருக்கிறார்.

அவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ?” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா!” அவாள்-சவால், குடும்பத் தகராறு பற்றி எழுதுவது எல்லாமும் கவிதை, பாரதி எழுதியதும் கவிதை என்பது உலக மகா அநியாயம்.

அவரது பேச்சும் எழுத்தும் பலரை கவர்ந்தன. அவரது charisma-வின் ஆதாரமே அவரது தமிழ்தான். ஆனால் அது வெறும் அலங்காரத் தமிழ். அதில் கருத்தை விட எதுகை மோனைக்குத்தான் முதல் இடம். மேடையில் பேசினால் சும்மா பொழுதுபோக்குக்காக கேட்கலாம், அவ்வளவுதான். நான் படித்த வரையில் அண்ணாவின் தமிழ் இதை விட நன்றாக இருக்கிறது.

மொத்தத்தில் எனக்கு தெரிந்த அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது இல்லை. அவர் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்துள்ள முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் அவற்றின் தரத்தை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. என்றாவது தொல்காப்பியப் பூங்கா படித்துப் பார்க்க வேண்டும்.

அவர் படைப்புகளில் நான் உண்மையில் விரும்புவது மனோகரா, பராசக்தி திரைப்படங்களின் திரைக்கதை+வசனங்கள்தான். அவரது எழுத்தின் சாதனை என்று நான் கருதுவது இந்த மாதிரி திரைப்பட வசனங்கள்தான். மந்திரிகுமாரி, திரும்பிப் பார் ஆகிய படங்களிலும் வசனம் குறிப்பிடும்படி இருந்தது. அபிமன்யு படத்திலும் சிறப்பாக எழுதி இருந்தார். ஆனால் அதெல்லாம் மனோகராவோடு போயிற்று. சினிமாவைப் பொறுத்த வரையில் அவர் காலம் முடிந்து பல பத்தாண்டுகள் சென்றுவிட்டன.

மனோகராவின் திரைப்பட வசனங்களை பிறகு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றும் காலாவதி ஆகிவிடவில்லை. சிவாஜி, கண்ணாம்பா, டி.ஆர். ராஜகுமார், எஸ்.எஸ்.ஆர் போன்ற நல்ல நடிகர்கள் நடிக்கும்போது திரைப்படம் இன்னும் மேலே போய்விடுகிறது. ஆனால் இவற்றை ரசிக்கும் மனநிலை இன்று இல்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் அவர் சொந்தமாக இலக்கியம் படைக்கவில்லை. கறாராக மதிப்பிட்டால் அப்படி அவர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மதிப்பு பூஜ்யம்தான். அவர் எழுதி இருக்கும் இலக்கிய விளக்கங்களை என்றாவது படிக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் இலக்கிய விளக்கங்கள் இலக்கியம் ஆவதில்லை. ஷேக்ஸ்பியர்தான் இலக்கியம் படைத்திருக்கிறார், அவரது விமர்சகர்கள் அல்ல.

தொடர்புடைய சுட்டிகள்:
கருணாநிதியின் தளம்
கலைஞர் கருணாநிதி பக்கம்

கருணாநிதியைப் பற்றிய மதிப்பீடு
கருணாநிதியின் அரசியல் பங்களிப்பு
கருணாநிதியின் சினிமா பங்களிப்பு

திரைப்பட விமர்சனம் – மனோகரா
திரைப்பட விமர்சனம் – பராசக்தி
பராசக்தி நீதிமன்ற வசனம்