கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க்

கலைஞர் கருணாநிதிக்கு 94 வயது. தமிழக அரசியலில் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக பல பத்தாண்டுகளாக இருந்திருக்கிறார் என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்க முடியாது. நல்ல சக்தியா தீய சக்தியா என்பதைப் பற்றிப் பேச சிலிகன் ஷெல்ஃப் சரியான தளமில்லை. இங்கே சில பல பழைய பதிவுகள் இருக்கின்றன. நேரம் இல்லாதவர்களுக்காக ஒரு மதிப்பீடு இங்கே.

பொதுவாக யாரையும் எனக்கு அடைமொழி வைத்து அழைப்பது பிடிக்காது. காந்தி என்றுதான் எழுதுவேன், மஹாத்மா காந்தி என்று எழுதமாட்டேன். கலைஞர் மட்டுமே விதிவிலக்கு. ஏனென்றால் தான் கலைஞர் என்று அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவு. அவரவர் விரும்பும் பெயரால் அழைப்பதுதான் நாகரீகம் என்று நினைக்கிறேன். அப்படி கலைஞர் என்று அடைமொழி வைத்து அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார் என்பதிலேயே அவரது குணாதிசயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சிலிகன் ஷெல்ஃபில் வேறு என்ன எழுதப் போகிறேன்? அவரது இலக்கியப் பங்களிப்பைப் பற்றித்தான். இது ஒரு மீள்பதிப்பு, சில திருத்தங்களுடன்.

திராவிட இயக்க எழுத்தாளர்கள் எவருமே எனக்குத் தெரிந்து நன்றாக எழுதியதே இல்லை. அண்ணாதுரை மட்டுமே கொஞ்சம் தேறுவார். கலைஞர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மொத்த மதிப்பு என்னைப் பொறுத்த வரை பூஜ்யம்தான். கறாராக மதிப்பிட்டால் பூஜ்யத்துக்கும் கீழேதான் மார்க் போட வேண்டும்.

எனக்கும் பழைய தமிழ் இலக்கியத்துக்கும் கொஞ்சம் தூரம். சின்ன வயதில் உருப்போட்டதால் நாலு குறள், குற்றாலக் குறவஞ்சியில் இரண்டு பாட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வெண்பா சொல்லுவேன். அவ்வளவுதான். சிவபெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு இறங்கி வந்து எழுதிய கவிதையான கொங்குதேர் வாழ்க்கையை முழுதாக படித்தபோது சிவபெருமான் கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாமே, வெளியே ஏன் வந்தார் என்றுதான் தோன்றியது.

கலைஞரோ இந்த இலக்கியத்தில் முங்கி குளிப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. குறளோவியம் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை, ஆனால் அவர் ரசிகர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தொல்காப்பியப் பூங்காவை என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறாராம். அதில் ஒரு பத்து நாடகம் இருக்கும் போலத் தெரிகிறது. ஒரே முத்தம் போன்றவை நாற்பதுகளில் நல்ல வணிக நாடகம் என்று கருதப்பட்டிருக்கலாம். முக்கால்வாசி பண்டைத் தமிழ் இலக்கியம் பற்றித்தான். ஜெயமோகன் அவரது ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம் ஆகியவற்றை தன் வரலாறு கற்பனை படைப்புகள் இரண்டாம் பட்டியலில் பரிந்துரைத்திருக்கிறார். என் பார்வையில் இது அதீதமான அங்கீகாரம்.

தென்பாண்டி சிங்கம் சரியாக நினைவில்லை. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ரோமாபுரிப் பாண்டியனும் இந்த லெவலில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவருடைய கதைகளில் ஓரளவு நினைவிருப்பது பொன்னர் சங்கர் ஒன்றுதான். ஆரம்ப பள்ளி மாணவன் லெவலில் எழுதப்பட்ட கதை. ஒரே லாபம் அண்ணன்மார் சாமி கதை பற்றி தெரிந்துகொண்டதுதான். அண்ணன்மார்சாமி கதை நல்ல ஸ்கோப் உள்ள கதை. ஒரு திறமையான எழுத்தாளன் பொன்னர்-சங்கர் vs அண்ணன் காளி போராட்டத்தை விவசாயி vs வேட்டைக்காரன் போராட்டமாக சித்தரிக்கலாம். அன்றைய மைய அரசு vs குறுநில மன்னர் உறவைப் பற்றிப் பேசி இருக்கலாம். இவர் பாட்டி கதை ஸ்டைலை தாண்டவில்லை. பொன்னர் சங்கர் மட்டும் வைத்து சொன்னால் இவர் கதை கிதை என்று எழுதாமலே இருக்கலாம் என்றுதான் சொல்வேன்.

இவற்றைத் தவிர பாயும் புலி பண்டார வன்னியன் என்றும் ஒன்று எழுதி இருக்கிறாராம். ஏன் இந்தக் கொலை வெறி?

அவருடைய சமூக நாவல்களில் நாயகியோடு தவறான உறவு கொள்ள வில்லன்கள் வரிசையில் நிற்பார்கள். எப்படா முடியும் என்றுதான் தோன்றும். ஒரு மரம் பூத்தது என்ற குறுநாவலில் ஓ. ஹென்றியின் ஒரு சிறுகதையை கொஞ்சம் தழுவி எழுதி இருக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் சுயசரிதை எழுதி இருக்கிறார். இதை விட மோசமான சுயசரிதையை நான் படித்ததில்லை.

நடுநடுவே தமிழே, நிலவே, எழிலே என்று ஏதாவது கட்டுரைகளும் எழுதுவார். அன்றாவது படித்தார்களா இல்லை இவரேதான் படித்துக் கொண்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது. முத்தாரம் என்ற புத்தகம் நல்ல உதாரணம். ‘செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்‘ என்று ஒன்று. அதில் முன்னோடிகளைப் பற்றி எழுதி இருக்கிறார்.

அவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ?” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா!” அவாள்-சவால், குடும்பத் தகராறு பற்றி எழுதுவது எல்லாமும் கவிதை, பாரதி எழுதியதும் கவிதை என்பது உலக மகா அநியாயம்.

அவரது பேச்சும் எழுத்தும் பலரை கவர்ந்தன. அவரது charisma-வின் ஆதாரமே அவரது தமிழ்தான். ஆனால் அது வெறும் அலங்காரத் தமிழ். அதில் கருத்தை விட எதுகை மோனைக்குத்தான் முதல் இடம். மேடையில் பேசினால் சும்மா பொழுதுபோக்குக்காக கேட்கலாம், அவ்வளவுதான். நான் படித்த வரையில் அண்ணாவின் தமிழ் இதை விட நன்றாக இருக்கிறது.

மொத்தத்தில் எனக்கு தெரிந்த அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது இல்லை. அவர் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்துள்ள முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் அவற்றின் தரத்தை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. என்றாவது தொல்காப்பியப் பூங்கா படித்துப் பார்க்க வேண்டும்.

அவர் படைப்புகளில் நான் உண்மையில் விரும்புவது மனோகரா, பராசக்தி திரைப்படங்களின் திரைக்கதை+வசனங்கள்தான். அவரது எழுத்தின் சாதனை என்று நான் கருதுவது இந்த மாதிரி திரைப்பட வசனங்கள்தான். மந்திரிகுமாரி, திரும்பிப் பார் ஆகிய படங்களிலும் வசனம் குறிப்பிடும்படி இருந்தது. அபிமன்யு படத்திலும் சிறப்பாக எழுதி இருந்தார். ஆனால் அதெல்லாம் மனோகராவோடு போயிற்று. சினிமாவைப் பொறுத்த வரையில் அவர் காலம் முடிந்து பல பத்தாண்டுகள் சென்றுவிட்டன.

மனோகராவின் திரைப்பட வசனங்களை பிறகு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றும் காலாவதி ஆகிவிடவில்லை. சிவாஜி, கண்ணாம்பா, டி.ஆர். ராஜகுமார், எஸ்.எஸ்.ஆர் போன்ற நல்ல நடிகர்கள் நடிக்கும்போது திரைப்படம் இன்னும் மேலே போய்விடுகிறது. ஆனால் இவற்றை ரசிக்கும் மனநிலை இன்று இல்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் அவர் சொந்தமாக இலக்கியம் படைக்கவில்லை. கறாராக மதிப்பிட்டால் அப்படி அவர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மதிப்பு பூஜ்யம்தான். அவர் எழுதி இருக்கும் இலக்கிய விளக்கங்களை என்றாவது படிக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் இலக்கிய விளக்கங்கள் இலக்கியம் ஆவதில்லை. ஷேக்ஸ்பியர்தான் இலக்கியம் படைத்திருக்கிறார், அவரது விமர்சகர்கள் அல்ல.

தொடர்புடைய சுட்டிகள்:
கருணாநிதியின் தளம்
கலைஞர் கருணாநிதி பக்கம்

கருணாநிதியைப் பற்றிய மதிப்பீடு
கருணாநிதியின் அரசியல் பங்களிப்பு
கருணாநிதியின் சினிமா பங்களிப்பு

திரைப்பட விமர்சனம் – மனோகரா
திரைப்பட விமர்சனம் – பராசக்தி
பராசக்தி நீதிமன்ற வசனம்

48 thoughts on “கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க்

  1. ஜெகதீஸ்வரன், சிமுலேஷன் கலைஞர் வீடியோவுக்கு நன்றி!

    சிம்பிள், பொதுவாக எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. இருந்தாலும் தேடித் பார்க்கிறேன்…

    Like

  2. His screen plays and dialogues are very good before 80’s. Even when you see the old movies with out bias you like that. Even though I didn’t like some of his political stunts I like his literature work. I read his kurulooviam and other stories you mentioned above (when it was written by him). You have to consider the period he wrote.

    Subu

    Like

  3. சுப்பு, அந்த காலக்கட்டத்திலேயே நன்றாக எழுதியவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் கொஞ்ச நாள் சினிமாவுக்கு நன்றாக வசனம் எழுதினார் என்பதை கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    சிமுலேஷன், தவறாக எழுதிவிட்டேன், மன்னிக்கவும்.

    Like

  4. தென்பாண்டி சிங்கத்தை உண்மையில் எழுதியது சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் எஸ்.எஸ். தென்னரசு அவர்கள். அடுத்தவர் புகழை திருடிக்கொள்ள அடுத்தவர் எழுதியதை தனதென கூறிக்கொள்ள எப்படிதான் மனசு வருதுனே தெரியல. இந்த தென்பாண்டி சிங்கம் ஒரு வார இதழில் தொடராக வந்திருக்கிறது. அதை தொகுத்து புத்தகமாக என் தந்தை வைத்திருந்தை நான் பார்திருக்கிறேன். அதெல்லாம் சரி ‘ராஜராஜன் விருது வாங்கும்போது கொஞ்சம் கூட வெட்கமா தெரியல. எப்படி? ம் ம் காசு இருந்தா என்னவேன்னா செய்யலாம் போல

    Like

  5. லதா மாரன்,

    Plagiarism எனபது மேற்கத்திய நாடுகளிலும் ஒரு அறமற்ற செயலாகவே மட்டுமே பார்க்கப் படுகிறது. ஆனால் இன்னும் கடும் தண்டனை மிக்க சட்டமாகவில்லை. நஷ்ட ஈடு அளவில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    அதுசரி, உங்கள் இந்த தகவலுக்கு ஆதாரம் இருக்கிறதா? இருந்தால் மிக நல்லது. விஷயங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த புண்ணியமிருக்கும்.

    Like

  6. லதா மாரன்,

    கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சொல்லாதீர்கள். எஸ்.எஸ்.தென்னரசு தி.மு.க வில் இருந்தபோது அவருக்குத் தென்பாண்டிச் சிங்கம் என்பது ஒரு பட்டமாக இருந்தது. அதையும் கலைஞர் எழுதிய நாவலையும் போட்டுக் குழப்பாதீர்கள். தென்பாண்டிச் சிங்கத்தைப் படித்துப் பாருங்கள். அந்த மொழி நடையில் ஒவ்வொரு வரியிலும் கலைஞரின் கைவண்ணம் தெரியும்.

    Like

  7. லதா,

    தென்பாண்டி சிங்கத்தை எழுதியது கருணாநிதிதான். அப்படி இல்லை என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுங்களேன்!

    Like

  8. பெங்களூரு செல்வேன். ஒரு உரை எழுதுவேன் என்பார்.
    கொடைக்கானல் செல்வேன். தொல்காப்பிய உரை முடித்தேன் என்பார்.
    ஒரு வாரம், பத்து நாளில் இலக்கியங்களுக்கு உரைநடை எழுதி முடிக்கும் அசகாய சூரர் இவர்.

    Like

    1. வெங்கட சுப்ரமணியன், // ஒரு வாரம், பத்து நாளில் இலக்கியங்களுக்கு உரைநடை எழுதி முடிக்கும் அசகாய சூரர் இவர். // 🙂

      Like

      1. கொடைக்கானலுக்குச் சென்றேன்; பத்து நாட்களுக்குள் தொல்காப்பிய உரையை முடித்தேன் என்பதை எப்படி பத்தே நாட்களுக்குள் உரையை எழுதினார் என்று பொருளெடுக்க முடியும்?

        உரை பல காலமாக எழுதப்பட்டு பின்னர் அது வெகுநாட்களாக முடிக்கப்படாமல் கிடந்து, அதைத் தான் கொடைக்கானல் பத்துநாள் வாசத்தில் முடித்தேன் என்று எடுக்கலாம். ஏனென்றால், தொல்காப்பியத்துக்கு உரை எழுதுவது சுலம்பமன்று என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

        I have a book of more than 1000 pages. I have a lot of family preoccupations. However I am reading it. Almost done. Next week I will have some free time all for myself. A period of one week. The week came; I read and finished. Will you say, I read all the book in one week?

        Like

  9. இப்பதிவு தற்செய்லாகப் பார்த்தேன். Many many sweeping statements ஒரு தடவையன்று; பலதடவைகள், நான் படிக்கவில்லை. படிக்க வேண்டுமென்று எழுதிக்கொண்டே அவரின் படைப்புக்கள் பூஜ்யத்துக்கும் கீழே என முடிவாகச்சொல்ல எப்படி முடிகிறது?

    ஒருவரின் படைப்புக்களை இன்னொருவர் எடைபோடுவது, அந்த இன்னொருவரின் தரத்தையும் காட்டும். அம்புலிமாமா கதையை நான் புகழ முடியாது. ஆனால் சிறுவர்கள் நல்லா இருந்திச்சி. பலதடவை படித்தேன் என்றால், அச்சிறுவர்கள் எனவே அவர்களுக்கு அது நல்ல தரமென்றுதான் எடுக்க முடியும். அதைப்போலவே ஆர் வியின் ”பூஜ்யத்துக்கும் கீழே” என்ற கணிப்பை எடுக்கலாம்.

    இன்னொரு கருத்தையும் வைக்கிறார். இலக்கியங்களுக்கு எழுதும் விளக்கங்கள் இலக்கியமாகா. செகப்பிரியரைப்பற்றி எழுதியவைகளை எடுத்துக்காட்டிப் பேசுகிறார். செகப்பிரியரின் நாடகங்களுக்கு எவருமே விளக்கங்கள் எழுதவில்லை. விமரசன‌ங்கள் எழுதியிருக்கிறார்கள். நாடகங்கள கவிதை நடையில் அக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால், அருஞ்சொற்பொருள்கள்தான் இணைக்கப்படும். ஆங்காங்கே சில allusions மட்டுமே விளக்கப்படும். காரணம் அது இல்லாவிட்டால் அவை புரியா. However, there is one literary critic who wrote like Karunanithi. He took the famous four tragedies of Shakespeare and wrote a big volume called SHAKESPEAREAN TRAGEDY in which he went ballistic over the characterisation. He initiated what is called psychological criticism. Shakespeare’s scholars or readers have rejected the book but take it as a book of a creative art per se. His name is A C Bradley.

    கருநாநிதியின் குறளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் விமர்சனம், விள்க்கங்கள் என்ற தலைப்பின் கீழ் வாரா. குறளுக்கு விளக்கம் கொடுக்கும் அவர் அதை தன் நடையில் தான் புரிந்தபடி விரிவாக இலக்கியம் + எளிய தமிழில் எழுதும் போது அஃதொரு தனி இலக்கியப்படைப்பே ஆகிவிடுகிறது. Like the aforesaid A C Bradley. After him, many attempted to write like that, with the intention to create a literature of their own using Shakespeare.

    இதுவே தொல்காப்பிய பூங்கா. எனவே இவ்விரண்டு நூல்களை குப்பை, அல்லது இலக்கியமன்று என்று ஒதுக்கித்தள்ளுவதை கருநாநிதி வெறுப்பாளர்கள் மட்டுமே ஏற்பர்.

    க‌விதை எனக்குப் பரிச்சமில்லை என்று சொல்லும் ஆர் வி எப்படி கருநாநிதியின் கவிதைகளை எடை போட முடியும்? இன்னொரு அடிச்சிவிடுதல் இங்கே:

    //அவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ?” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது.//

    இருவரிகள் கொண்ட உரை. பாரதிதாசன் எழுதினார் என்று பரவலாகச் சொல்லப்பட்ட போது அவரின் இரசிகர்கள் ஆதாரத்தோடு பாரதிதாசன் சொல்லவில்லை என்று எடுத்துக்காட்டினார்கள். கருநாநிதி சொன்னதாக எங்கேயும் பேச்சேயில்லை. திராவிட இயக்கப்பேச்சாளர் ஒருவர் பேசியிருக்கலாம். இணையதளங்களில் இவ்விவாதம் நிறைய காணக்கிடைக்கிறது. இது இவ்வாறிருக்க இவ்விரு வரி, முதல் வரி தில்லை சிவனைப்பற்றிவரும் – கருநாநிதியின் கவிதையென்றும், தான் சிறுவயதில் படித்ததாகவும். இஃதெல்லாம் ஒரு கவிதை என்று கவிதையில் ஆர்வமில்லாத ஆர் வி சொல்வதுதான் அடிச்சி விடுறது. இஃதொரு முக்கியமான குற்றச்சாட்டு. எனவே ஆர் வி ஆதாரத்தை வைத்துதான் பேச வேண்டும். படித்ததாக ஞாபகம் என்றால் எதையுமே எவருமே அடித்துவிடுவார்கள். Say only if you are sure of the author. No one has said the lines are from a poem by the leader.

    தமிழை விரும்புவோர் கருநாநிதியின் இலக்கியத்தை விரும்புவோரே. பூஜ்யமென்றால், தமிழே பூஜ்யமென்றுதான் சொல்வதாகும்.

    இன்னொன்றையும் சொல்லி முடித்துவிடுகிறேன். இலக்கிய விமர்சனத்தில் இன்னொருவர் எழுதியதோடு ஓப்பீடூ செய்வதில்லை. காரணம், ஒவ்வொரு படைப்பாளியும் தனி. பாரதியோடு ஒப்பிட்டேன். அவர் உசத்தி, இவர் பூஜ்யமென்பது ஆர் வி, இலக்கிய படிப்பில் போக வேண்டிய தூரம் அதிகம்.

    Like

    1. // Many many sweeping statements // என்று குறையும் படுகிறீர்கள். // நாடகங்கள கவிதை நடையில் அக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால், அருஞ்சொற்பொருள்கள்தான் இணைக்கப்படும். //, // கருநாநிதியின் குறளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் விமர்சனம், விள்க்கங்கள் என்ற தலைப்பின் கீழ் வாரா. //, // தமிழை விரும்புவோர் கருநாநிதியின் இலக்கியத்தை விரும்புவோரே. பூஜ்யமென்றால், தமிழே பூஜ்யமென்றுதான் சொல்வதாகும். //, // இலக்கிய விமர்சனத்தில் இன்னொருவர் எழுதியதோடு ஓப்பீடூ செய்வதில்லை. காரணம், ஒவ்வொரு படைப்பாளியும் தனி. பாரதியோடு ஒப்பிட்டேன். அவர் உசத்தி, இவர் பூஜ்யமென்பது ஆர் வி, இலக்கிய படிப்பில் போக வேண்டிய தூரம் அதிகம். // என்றும் எழுதுகிறீர்கள். இவையெல்லாம் எந்த மாதிரி statements? ஒரு வேளை உங்களுக்கு மட்டுமே sweeping statements-ஐ எழுத உரிமை உண்டு, மற்றவருக்கு அந்த உரிமை இல்லை என்று நினைக்கிறீர்களோ?

      // ஒருவரின் படைப்புக்களை இன்னொருவர் எடைபோடுவது, அந்த இன்னொருவரின் தரத்தையும் காட்டும். அம்புலிமாமா கதையை நான் புகழ முடியாது. ஆனால் சிறுவர்கள் நல்லா இருந்திச்சி. பலதடவை படித்தேன் என்றால், அச்சிறுவர்கள் எனவே அவர்களுக்கு அது நல்ல தரமென்றுதான் எடுக்க முடியும். அதைப்போலவே ஆர் வியின் ”பூஜ்யத்துக்கும் கீழே” என்ற கணிப்பை எடுக்கலாம். // இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? என் தளத்தில் என் கணிப்புதான் வரும். இது மிக அடிப்படையான விஷயம், இதில் என்ன வாதம் பிரதிவாதம்?

      // செகப்பிரியரைப்பற்றி எழுதியவைகளை எடுத்துக்காட்டிப் பேசுகிறார். // ஷேக்ஸ்பியர் தனது பெயர் இப்படி சிதைக்கப்படுவதைப் பார்த்தால் இதுதான் பெரிய ட்ராஜெடி என்று நினைப்பார்.

      // எனவே இவ்விரண்டு நூல்களை குப்பை, அல்லது இலக்கியமன்று என்று ஒதுக்கித்தள்ளுவதை கருநாநிதி வெறுப்பாளர்கள் மட்டுமே ஏற்பர். // கருணாநிதி எழுதியதைப் படித்தீர்களோ இல்லையோ, நான் எழுதியதைப் படிக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. பதிவிலிருந்து: // அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. // இவை குப்பை என்று எங்கே ஒதுக்கினேன்? எனக்குத் தெரியாத விஷயம் குப்பை என்று நான் நினைப்பதில்லை. கொஞ்சம் selective reading-ஓ? கடைசி பாரா அப்படியே – // சுருக்கமாகச் சொன்னால் அவர் சொந்தமாக இலக்கியம் படைக்கவில்லை. கறாராக மதிப்பிட்டால் அப்படி அவர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மதிப்பு பூஜ்யம்தான். அவர் எழுதி இருக்கும் இலக்கிய விளக்கங்களை என்றாவது படிக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் இலக்கிய விளக்கங்கள் இலக்கியம் ஆவதில்லை. ஷேக்ஸ்பியர்தான் இலக்கியம் படைத்திருக்கிறார், அவரது விமர்சகர்கள் அல்ல. //

      // க‌விதை எனக்குப் பரிச்சமில்லை என்று சொல்லும் ஆர் வி எப்படி கருநாநிதியின் கவிதைகளை எடை போட முடியும்? // கவிதை பரிச்சயமில்லாத என்னாலேயே எடை போட முடிகிறதென்றால் என்ன அர்த்தம் என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.

      // கருநாநிதி சொன்னதாக எங்கேயும் பேச்சேயில்லை. திராவிட இயக்கப்பேச்சாளர் ஒருவர் பேசியிருக்கலாம். இணையதளங்களில் இவ்விவாதம் நிறைய காணக்கிடைக்கிறது. இது இவ்வாறிருக்க இவ்விரு வரி, முதல் வரி தில்லை சிவனைப்பற்றிவரும் – கருநாநிதியின் கவிதையென்றும், தான் சிறுவயதில் படித்ததாகவும். இஃதெல்லாம் ஒரு கவிதை என்று கவிதையில் ஆர்வமில்லாத ஆர் வி சொல்வதுதான் அடிச்சி விடுறது. இஃதொரு முக்கியமான குற்றச்சாட்டு. எனவே ஆர் வி ஆதாரத்தை வைத்துதான் பேச வேண்டும். படித்ததாக ஞாபகம் என்றால் எதையுமே எவருமே அடித்துவிடுவார்கள். Say only if you are sure of the author. No one has said the lines are from a poem by the leader. // இது குற்றச்சாட்டு என்று நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை வருஷங்களுக்குப் பிறகு ஒருவர் ஆதாரம் கேட்பார் என்று தெரிந்திருந்தால் அப்போதே குறித்து வைத்துக் கொண்டிருப்பேன். இல்லை என்று நிச்சயமாக உங்களால் சொல்ல முடியுமானால் சரிதான். எல்லாம் கிடக்கட்டும், உங்களுக்குத் தெரிந்து அவர் எழுதிய நாலு ‘நல்ல’ கவிதையைச் சொல்லுங்களேன்!

      Like

      1. சிறுவயது நினைவுகள்; அதற்கு ஆதாரங்கள் இன்று தேட முடியா. சரி. தேடவேண்டியதே இல்லை. இவ்விருவரிகள் பிரச்சினைக்குரியவை.

        எங்கெல்லாம் திராவிட தலைவர்கள், குறிப்பாக, கருநாநிதி, பாரதி தாசன், அண்ணா என்ற பெயர்கள் எழுப்படும்போது ஓர் எதிராளி எழுதுவார் இவ்வரிகளை இவர்தான் (மூவரில் ஒருவர் பெயரைக்குறிப்பிட்டு) எழுதினார் என்று. அதாவது இந்துக்களின் கோபத்தை இவர்கள்மேல் திருப்ப வேண்டும் என்ற நோக்கம்.

        இம்மூவருமே இவ்வரிகளை எழுதவில்லை; பேசவும் இல்லை. இம்மூவரில் வெகுவாகத் தாக்கத்துக்குள்ளானவர் பாரதிதாசனே. எனக்குக்கூட அவர் பண்ணியிருக்கலாம் என்று தோன்றியது. பின்னர் அன்னாரின் மகனும், இரசிகர்களும், திராவிட இயக்கத்துக்காரகள் பலரும் பாரதிதாசன் எழுதவில்லை. பேசவில்லை என்றார்கள். அத்தோடு அப்பிரச்சினை ஓய்ந்தது. நீங்கள் கருநாநிதி கவிதை இது என்றும் சிறுவயதில் படித்த ஞாபகமென்றும் எழுதுகிறீர்கள். சிறுவயதில் இப்படிப்பட்ட கடவுளைத்தாக்கும் வரிகளை எந்த வீட்டில் அல்லது பள்ளியில் சிறு குழந்தைகள் கண்ணில்படும்ப‌டி வைப்பார்கள்? எப்பள்ளி நூலில் இவை வரும்? கருநாநிதி கவிஞரோ இல்லையோ ஆனால் இவ்வரிகள் அவர் எழுதியதாக இன்னும் உங்களுக்குத் தோன்றினால், இனியாவது அவற்றைத் தேடுங்கள்; போடுங்கள்.

        நீங்கள் மேற்கோள் காட்டிய என் வரிகள் sweeping statements ஆகா. வாசிக்காமலேயே குற்ளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் இலக்கியமே இல்லை எனவே இவர் ஒரு பூஜ்யத்துக்கும் கீழே எனப்துதான் sweeping statement. செகப்பிரியரைப்பற்றி செகப்பிரியர் பற்றிய படிப்பைப்பற்றியும் ஞானம் இல்லை. உங்களிடம் செகப்பிரியரைப்பற்றிப்பேசுவது செவிப்புலனில்லாதவரிடம் இசை ஞானத்தைப்பற்றிப் பேசுவதாகும். எனினும் நான் சொல்வதை சாமானியரும் புரியலாம். செகப்பிரியர்தான் நாடக ஆசிரியர். அன்னாரின் நாடகங்கள்தான் இலக்கியம். செகப்பிரியரின் நாடகங்களைப்பற்றி பிறர் எழுதியவை இருவகைப்படும்: 1. நாடகத்தை டெக்ஸ்டாகாப் போடும்போது, ஒரு முன்னுரை, ஒரு பின்னுரை, மற்றும் அருஞ்சொற்பொருள்கள் இருக்கும். முன்னுரையும் பின்னுரையும் தமிழில் மாதிரி எழுத்தாளருக்கு ஜாலரா தட்டி வாரா. அவை பல ஆங்கில இலக்கிய உலகில் புகழ்பெற்றவை. உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. எனவே மேலும் விரிக்க முடியாது. 2. டெகஸ்ட அல்லாமல அந்நாடகமொன்றையோ, அல்லது பல்வற்றையோ எடுத்து தன் கருத்துக்களால் விரிப்பது. இவை பல மிகவும் உலகப்புகழ்பெற்றவை. ஆங்கில இலக்கிய உலகில். அதில் ஒருவரைப்பற்றிச்சொன்னேன். பிராட்லி ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை தலைமைப்பேராசியராக இருந்த போது அங்காற்றிய நான்கு உரைகளில் தொகுப்பே Shakespearean Tragedy. செகப்பிரியரின் நாடகங்களைப்பற்றிய நூல்கள். அவற்றையெடுத்து தன் கருத்துக்களை இலக்கிய நயத்தோடு – மொழி நடை, சொல்லும் நேர்த்தி, கருத்துச்சுவை – இவை மூன்றும் ஒரு நூலை இலக்கியமாக்கும்; இவைபோக மற்றவையும் வரும் – வைக்கும் நூலது. உங்களுக்கு இவைபற்றித் தெரியாததால், செகப்பிரியரே ட்ராஜடியாக நினைப்பார் எனபது ஆவ்ரேஜ் தமிழனின் பேச்சு. வியப்பில்லை. ஓரிலக்கியவாதி, அலலது இரச்னையாளனின் பேச்சாகாது.

        இங்குதான் கருநாநிதியும் வருகிறார். அதாவது இரண்டாவது வகை. குறளுக்கு உரைகள் பல. பரிமேலழகரிலிருந்து இன்று வரை. இவ்வுரைகள் ஓர் குறளுக்கு பதமபதமாகப் பிரித்தும் ஒன்றாக்கியும் 1330 குறட்பாக்களுக்கும் பொருள் சொல்லும். கிட்டத்தட்ட எல்லாரும் ஒரே பொருளைத்தங்தாலும், அவரவர் முத்திரை கொஞ்சமாக இருக்கும். பரிமேலழகர் வைதீக மதக்கருத்துக்களைத் திணித்திருப்பார். ஆயினும் உரைகள் இலக்கியமாகா. காரணம் வெகுவாக தன் கருத்துக்களையோ கற்பனைகளோ ஏற்றிச்சொல்ல முடியாது. தமிழில் இதுவரை எல்லாரும் இப்படித்தான் எழுதினார்கள். கருநாநிதி மட்டுமே ஆங்கில வழக்கத்தைக் கொண்டு வந்தார். 1330 குறள்களில் தனக்கு எவை பிடித்தனவோ அவற்றை மட்டும் எடுத்து அவற்றின் பொருட்களை ஓர் ஓவியத்தை வரைவது போல தன் கற்பனைகளை ஏற்றி வரைந்தார். எனவே அதன் பெயர் குறளோவியம். வள்ளுவர்தான் குறளை எழுதினார். கர்நாநிதியும் செய்தார் என்றால் வள்ளுவரே ட்ராஜிடியாக நினைப்பார் என்று சொல்வது அப்பாவித்தன்ம். காரண்ம் இப்படி சொல்லோவியம் தீட்டுவது ஒரு புதிய இலக்கிய வடிவம். New literary genre and the credit goes to him. தொல்காப்பியப்பூங்காவும் இப்படியே. புறநானூறு காட்டும் காட்சிகள்; தொல்காப்பியம் காட்டும் காட்சிகள்; குறல் காட்டும் வாழ்க்கை காட்சிகள் – இவற்றைத் தன் வழியில் இலக்கிய நயங்களோடு எழுதும் போது அவை இலக்கியமாகின்றன.

        கருநாநிதி வெறுப்பில் ஊறியவர்கள் படிக்க மாட்டார்கள். அவர்களுக்காக எழுதப்படவில்லை என்று அவர்கள் விட்டுவிடுவதுதான் நல்லது. எனக்குத் தமிழில் மீது கல்லூரியில் வெறுப்பு வந்தது. தமிழை விட்டு வேறு மொழியை பார்ட் 2 ஆவதாக எடுத்தேன். காரணம். தமிழாசிரியரின் அடாவடித்தனமான நடத்தை. இதைப்போல் ஒரு ஆளை வெறுத்தால் அவர் விரும்பும அனைத்தையுமே நாம் வெறுப்போம் எனப்து உளவியல். எனவேதான் கருநாநிதியை வெறுப்பதுவும் தமிழை வெறுப்பதுவும் ஒன்றாகின்றன‌. My statement is therefore not sweeping; but a reality.

        கிட்டத்தட்ட 70 ஆண்டுகள். — தமிழ் வாசிப்பு. தமிழில் இனிமை, தொன்மை, அழகு பற்றி பேச்சுக்கள்; எழுத்துக்கள்; தமிழ் பற்றி ஒரு அதீத உணர்வு. தன் தொண்டரகளுக்கும் தமிழ் இனிமையான மொழி என்ற உணர்வைப்பெருக்குதல் – ஆக, தமிழ்மக்களிடையே தமிழை ஏறெடுத்துப்பார்க்க வைக்கும் ஒரு தொண்டு – இவற்றைச் செய்தவரை – இவர் எழுத்துக்களை நன்கு படிக்காமல், எழுதியவை இலக்கியாமாகா என்பது சரியா இல்லையா என்ற வாதத்தை நான் வைப்பது நேர விரயம். பிறர் கணிக்கட்டும்.

        உங்கள் பதிவு. எப்படியும் கணிக்கலாம். போட்டுத்தாக்கலாம். துவைத்துக் காயபபோடலாம். அதே சமயம், உங்கள் எழுத்துக்களை வாசித்து கருத்தை இடலாமென்பதால், என் கருத்து:

        His service to Tamil language and literature will always be remembered.
        Using the media of Cinematic art and journalism and public speeches – not merely authoring books – to propagate and instill love of Tamil language and literature across Tamil speaking population is a unique achievement by this nonagenarian politician and my constant wonder. What a few people like you rate his work unworthy of any positive remark ? It doesn’t matter at all.

        I have also many many prejudices but, when it comes to service to Tamil, I am the first to bow my head to that person for whom I carry visceral hatred for all other reasons except Tamil. Hate the sin, not the sinner.

        Like

      2. பாலசுந்தர விநாயகம்,

        // கருநாநிதியை வெறுப்பதுவும் தமிழை வெறுப்பதுவும் ஒன்றாகின்றன‌. // என்பது sweeping statement இல்லை என்று நீங்கள் கருதினால் எனக்கு உண்மையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இதைப் பற்றி மேலே பேச எனக்கு எதுவுமில்லை.

        // நீங்கள் கருநாநிதி கவிதை இது என்றும் சிறுவயதில் படித்த ஞாபகமென்றும் எழுதுகிறீர்கள். சிறுவயதில் இப்படிப்பட்ட கடவுளைத்தாக்கும் வரிகளை எந்த வீட்டில் அல்லது பள்ளியில் சிறு குழந்தைகள் கண்ணில்படும்ப‌டி வைப்பார்கள்? எப்பள்ளி நூலில் இவை வரும்? // நான் சிறு வயதில் பள்ளி நூல்களை மட்டும் படிக்கவில்லை என்றெல்லாம் விளக்க வேண்டுமா? முரசொலி பத்திரிகையில் படித்த நினைவு. முரசொலியை உங்கள் வீட்டில் வாங்கினார்களா என்று ஆரம்பிக்காதீர்கள். பக்கத்து வீட்டு தி.மு.க. அனுதாபி வாங்கியதைப் படித்திருக்கலாம். டீக்கடையில், சலூனில் பார்த்திருக்கலாம். இதெல்லாம் ஒரு வாதம், இதற்கெல்லாம் நான் விளக்கம் தர வேண்டுமா? அலுப்பாக இருக்கிறது, பா. விநாயகம். கொஞ்சமாவது யோசியுங்கள்.

        // வாசிக்காமலேயே குற்ளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் இலக்கியமே இல்லை // எத்தனை முறை சொன்னாலும் உங்கள் காதில் ஏற மாட்டேன் என்கிறதே? என் பதிவில் குறளோவியமும் தொ. பூங்காவும் இலக்கியம் இல்லை என்று எங்கே சொல்லி இருக்கிறேன்? அட முழுப் பதிவையும் படிக்காவிட்டாலும் என் மறுமொழியில் பதிவிலிருந்து காட்டிய மேற்கோளையாவது படிக்கலாமே? // அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. //

        செகப்பிரியர், ட்ராஜெடி என்று அடுத்த கடுப்பைக் கிளப்புகிறீர்கள். ஷேக்ஸ்பியரின் பேரை செகப்பிரியர் என்று சிதைப்பது ட்ராஜெடி என்று நான் எழுதியதற்கு சம்பந்தமே இல்லாமல் என்னென்னவோ வியாக்கியானம் தருகிறீர்களே! ஏன் சார் இந்தக் கொலை வெறி?

        கவிதை கிவிதை என்று கிளம்பினீர்கள், கருணாநிதி எழுதியவற்றில் உங்களைக் கவர்ந்த நாலு கவிதையை முடிந்தால் பதியுங்கள். இந்த (விதண்டா)வாதம் உருப்படியான திசையில் திரும்ப அதுதான் ஒரே வாய்ப்பு.

        Like

  10. வணக்கம் R V சார்.
    பழைய பதிவு இன்று படிக்கிறேன். பின்னூட்டப் போர் கட்டுரையை விட ரசிக்கும்படி இருக்கிறது! 🙂
    அன்புடன் ஆனந்த்

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.