இந்தத் தளத்திற்கு வருபவர்களுக்கு ஜடாயு பரிச்சயமான பெயர். தீவிர ஹிந்துத்துவர். சிறந்த வாசகர். கம்ப ராமாயணத்தில் ஊறித் திளைப்பவர். சமீபத்தில் இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். தமிழ்ஹிந்து இணைய தளத்தின் ஆசியர், மற்றும் வலம் மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர். இவரது கட்டுரைகளின் தொகுப்பு காலம்தோறும் நரசிங்கம் தடம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
ஜடாயுவின் ஹிந்துத்துவ அரசியலில் எனக்கு இசைவில்லை. அவரது அரசியல் நிலைப்பாடு அவரை சில சமயங்களில் ஸ்பின் டாக்டராக ஆக்கிவிடுகிறது என்று கருதுகிறேன். ஆனால் நான் மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர். அவரால் கூட எனக்கு கவிதைகளைப் புரிய வைத்துவிட முடியவில்லை என்பதுதான் சின்ன சோகம்.
ஜடாயு நேற்று பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் ‘இளங்கோ முதல் தாயுமானவர் வரை: தமிழ் இலக்கியச் சுடர்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையெல்லாம் கேட்டு எனக்கு பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றியோ, அல்லது கவிதைகளைப் பற்றியோ ஞானோதயம் எதுவும் உண்டாகிவிடப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் சமோசாவும் பக்கோடாவும் கிடைக்கும் என்பதால் போனேன். அவரது உரையை கிட்டத்தட்ட இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள்/படைப்பாளிகள் பற்றிய ஒரு கழுகுப் பார்வை (Bird’s eye view) என்று சொல்லலாம். என்னால் அவர் மேற்கோள் காட்டிய பாடல்களை எல்லாம் நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் சுருக்கமாக அவரது உரையின் முக்கியப் புள்ளிகள் கீழே.
கம்பனே தமிழ் இலக்கியத்தின் உச்சம். அவருக்குப் பின்னாலும் முன்னாலும் வந்தவர்களுக்கு கம்பனே உரைகல். இது ஜடாயுவின் சொந்தக் கருத்து மட்டுமல்ல, தமிழ் இலக்கியம் அறிந்த எல்லாருமே ஏறக்குறைய ஏற்றுக் கொள்ளும் கருத்து.
கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் அடியொற்றிச் செல்கிறது. கம்பன் செய்திருக்கும் கதை மாற்றங்கள் எல்லாம் சின்னச் சின்ன நகாசு வேலைகள்தான்.
வள்ளுவர் காலத்தால் இளங்கோவுக்கு முற்பட்டவர், அதனால் இந்த உரையில் அவரைப் பற்றி இல்லை. (ஜடாயு உரைக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்டது)
இளங்கோவின் காலத்திலேயே தற்கால ஹிந்து மதத்தின் கூறுகள் தமிழகத்தில் நன்றாக வேரூன்றி இருக்கின்றன. வேட்டுவவரியில் பாலை நிலத்தில் வாழும் எயினர் மகிஷனை வெல்லும், மான் மேல் அமரும் துர்கையை வணங்குகிறார்கள். (பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் சக்தியின் வாகனம் மான், சிங்கம் அல்ல)
சிலப்பதிகாரம் தனது கருக்களாக முன் வைப்பவை – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் – இந்திய, ஹிந்து/பௌத்தக் கருத்தாக்கங்களாக பல காலமாக நிலை பெற்றிருப்பவை.
பிற ஐம்பெருங்காப்பியங்களான மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, ஜீவகசிந்தாமணி ஆகியவை கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிடும்போது சிறு விளக்குகள்தான், பெருஞ்சுடர்கள் அல்ல.
தேவாரம் – குறிப்பாக, அப்பர், சம்பந்தர், சுந்தரர் எழுதிய பாடல்களை அடுத்த பெருஞ்சுடராக கருதுகிறார். பாலை, சூலை, ஓலை தந்து சிவபெருமான் இவர்களைத் தனது அடியவர்களாக்கிக் கொண்டார். சம்பந்தர் உமையிடம் பாலருந்தி ஞானம் பெற்றார், அப்பருக்கு சூலை நோய் கண்டு அவதிப்பட்டபோது சிவபெருமானைப் பிரார்த்தித்து குணமானார், மண வேளையில் இவன் என் அடிமை என்று ஓலை ஒன்றைக் காட்டி சுந்தரரை ஆட்கொண்டார் என்பது தொன்மம். சம்பந்தரின் பாடல்களில் குழந்தையின் இனிமை (சமணர்களை கண்டமேனிக்கு திட்டிப் பாடி இருக்கிறார் என்றும் பின்னால் சொன்னார்), அப்பரின் பாடல்களில் வலியின் வேதனை, சுந்தரரின் பாடல்களின் தோழனோடு சமமாகப் பழகும் தொனி இருக்கும். மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ உருக்கம் ததும்பி வழியும். சம்பந்தர்தான் நிறைய இடங்களுக்கு சென்று பதிகம் பாடி இருக்கிறார், அதுவும் பதிகத்தில் ஊர் பெயரைச் சொல்லிவிடுவார்.
சேக்கிழாரின் பெரிய புராணம் இன்னொரு பெரும் இலக்கியச் சுடர். சேக்கிழார் ஒவ்வொரு நாயன்மாரின் ஊர், குலம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து எழுதி இருக்கிறார்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நம்மாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் ஆகியோரைப் பற்றி கொஞ்ச நேரம் பேசினார். திருமங்கை ஆழ்வார் ‘சீதை உன் தோழி, என் தம்பி உன் தம்பி, நான் உன் தோழன்’ என்று ராமன் சொன்னதாகப் பாடியதைத்தான் கம்பன் குகனொடும் ஐவரானோம் என்று பின்னால் பாடி இருக்கிறார். பெரியவாச்சான் பிள்ளையின் உரைகளும் பெரும் இலக்கியம்.
பிற்காலப் புலவர்களில் அவர் குறிப்பிட்டது அருணகிரிநாதர், தாயுமானவர் மற்றும் குமரகுருபரர். (நண்பர் பாலாஜி குமரகுருபரர் தாயுமானவருக்கு காலத்தால் பிற்பட்டவர், இந்த உரையில் அவர் பேர் வந்திருக்கக் கூடாது என்றார். தமிழ் இலக்கியமே நமக்குத் தகராறு, இதில் புலவர்களின் காலத்தைப் பற்றி எல்லாம் நான் என்ன சொல்ல?) நான்தான் பாலாஜி சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது, குமரகுருபரர் தாயுமானவருக்கு முந்தையவர்தான்.
அவரது உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு எல்லாம் அகில இந்தியப் பண்பாட்டோடு இணைந்த ஒன்று, அதன் பகுதி என்ற வாதம். கங்கையும் காசியும் ராமனும் கிருஷ்ணனும் எப்படி அன்றே தமிழர்களின்/இந்தியர்களின் கூட்டு மனநிலையில் (collective psyche) இடம் பெற்றுவிட்டார்கள் என்பதை பல மேற்கோள்கள் மூலம் சுட்டிக் காட்டினார். உதாரணமாக கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டுச் செல்வதை அயோத்தியை விட்டு ராமனும் சீதையும் நீங்குவதோடு ஒப்பிட்டு இளங்கோ பாடி இருப்பதை மேற்கோள் காட்டினார். ராமன் சர்வசாதாரணமாக மேற்கோளாகக் காட்டவும் பட்டு, அந்த மேற்கோள் சர்வசாதாரணமாக புரிந்து கொள்ளவும் பட்டால் ராமனின் கதை அனைவரும் அறிந்ததாகத்தானே இருக்க வேண்டும்?
எனக்குத் தெரிந்த வரை அவர் தவறவிட்டது மணிமேகலை, ஜீவக சிந்தாமணி, மற்றும் கலிங்கத்துப் பரணி. இவற்றில் இரண்டை அவர் சிறு விளக்கு என்று ஒதுக்கிவிட்டார். கலிங்கத்துப் பரணியைப் பற்றியும் அப்படித்தான் நினைக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.
சில நண்பர்கள் அவர் சீறாப்புராணத்தை விட்டுவிட்டாரே என்று கேட்டார்கள். ஜடாயு போன்ற ஹிந்துத்துவர் சீறாவை குறிப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் கவிதையும் கவிநயமும் அறியாத, சீறாவின் இரண்டொரு செய்யுள்களை மட்டுமே பள்ளியில் படித்திருக்கும் எனக்கு அது குறிப்பிடப்பட வேண்டிய காவியமாகத் தெரியவில்லை. Tokenism-த்துக்காக மட்டுமே சீறா, தேம்பாவணி போன்றவை பள்ளிப் பாடங்களில் இடம் பெறுகின்றன என்றே கருதுகிறேன். (அது சரிதான் என்றும் கருதுகிறேன், இல்லாவிட்டால் பிற மதம் சார்ந்த இலக்கியங்கள் இருப்பதே நமக்குத் தெரியாமல் போய்விடும்.)
தனிப்பட்ட முறையில் இரண்டொரு பாடல்கள் என்னைக் கவர்ந்தன. அப்பர் பாடல் ஒன்றில் சொல்லப்படும் ஆமை உவமை, ‘வாழ்ந்து போதீரே’ என்று இழிக்கும் சுந்தரர் பாடல், திருமங்கை ஆழ்வாரின் ராமன் பற்றிய பாடல், வேட்டுவவரி ஆகியவற்றைப் படிக்க வேண்டும் என்றும் பெரியவாச்சான் பிள்ளையின் உரைகளைப் படிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. பார்ப்போம்…
முழு உரையையும் இங்கே கேட்கலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் இலக்கியம்