ஜடாயு உரை – இளங்கோ முதல் தாயுமானவர் வரை

jataayu_2.jpgஇந்தத் தளத்திற்கு வருபவர்களுக்கு ஜடாயு பரிச்சயமான பெயர். தீவிர ஹிந்துத்துவர். சிறந்த வாசகர். கம்ப ராமாயணத்தில் ஊறித் திளைப்பவர். சமீபத்தில் இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். தமிழ்ஹிந்து இணைய தளத்தின் ஆசியர், மற்றும் வலம் மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர். இவரது கட்டுரைகளின் தொகுப்பு காலம்தோறும் நரசிங்கம் தடம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

ஜடாயுவின் ஹிந்துத்துவ அரசியலில் எனக்கு இசைவில்லை. அவரது அரசியல் நிலைப்பாடு அவரை சில சமயங்களில் ஸ்பின் டாக்டராக ஆக்கிவிடுகிறது என்று கருதுகிறேன். ஆனால் நான் மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர். அவரால் கூட எனக்கு கவிதைகளைப் புரிய வைத்துவிட முடியவில்லை என்பதுதான் சின்ன சோகம்.

ஜடாயு நேற்று பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் ‘இளங்கோ முதல் தாயுமானவர் வரை: தமிழ் இலக்கியச் சுடர்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையெல்லாம் கேட்டு எனக்கு பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றியோ, அல்லது கவிதைகளைப் பற்றியோ ஞானோதயம் எதுவும் உண்டாகிவிடப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் சமோசாவும் பக்கோடாவும் கிடைக்கும் என்பதால் போனேன். அவரது உரையை கிட்டத்தட்ட இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள்/படைப்பாளிகள் பற்றிய ஒரு கழுகுப் பார்வை (Bird’s eye view) என்று சொல்லலாம். என்னால் அவர் மேற்கோள் காட்டிய பாடல்களை எல்லாம் நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் சுருக்கமாக அவரது உரையின் முக்கியப் புள்ளிகள் கீழே.

கம்பனே தமிழ் இலக்கியத்தின் உச்சம். அவருக்குப் பின்னாலும் முன்னாலும் வந்தவர்களுக்கு கம்பனே உரைகல். இது ஜடாயுவின் சொந்தக் கருத்து மட்டுமல்ல, தமிழ் இலக்கியம் அறிந்த எல்லாருமே ஏறக்குறைய ஏற்றுக் கொள்ளும் கருத்து.

கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் அடியொற்றிச் செல்கிறது. கம்பன் செய்திருக்கும் கதை மாற்றங்கள் எல்லாம் சின்னச் சின்ன நகாசு வேலைகள்தான்.

வள்ளுவர் காலத்தால் இளங்கோவுக்கு முற்பட்டவர், அதனால் இந்த உரையில் அவரைப் பற்றி இல்லை. (ஜடாயு உரைக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்டது)

இளங்கோவின் காலத்திலேயே தற்கால ஹிந்து மதத்தின் கூறுகள் தமிழகத்தில் நன்றாக வேரூன்றி இருக்கின்றன. வேட்டுவவரியில் பாலை நிலத்தில் வாழும் எயினர் மகிஷனை வெல்லும், மான் மேல் அமரும் துர்கையை வணங்குகிறார்கள். (பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் சக்தியின் வாகனம் மான், சிங்கம் அல்ல)

சிலப்பதிகாரம் தனது கருக்களாக முன் வைப்பவை – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் – இந்திய, ஹிந்து/பௌத்தக் கருத்தாக்கங்களாக பல காலமாக நிலை பெற்றிருப்பவை.

பிற ஐம்பெருங்காப்பியங்களான மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, ஜீவகசிந்தாமணி ஆகியவை கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிடும்போது சிறு விளக்குகள்தான், பெருஞ்சுடர்கள் அல்ல.

தேவாரம் – குறிப்பாக, அப்பர், சம்பந்தர், சுந்தரர் எழுதிய பாடல்களை அடுத்த பெருஞ்சுடராக கருதுகிறார். பாலை, சூலை, ஓலை தந்து சிவபெருமான் இவர்களைத் தனது அடியவர்களாக்கிக் கொண்டார். சம்பந்தர் உமையிடம் பாலருந்தி ஞானம் பெற்றார், அப்பருக்கு சூலை நோய் கண்டு அவதிப்பட்டபோது சிவபெருமானைப் பிரார்த்தித்து குணமானார், மண வேளையில் இவன் என் அடிமை என்று ஓலை ஒன்றைக் காட்டி சுந்தரரை ஆட்கொண்டார் என்பது தொன்மம். சம்பந்தரின் பாடல்களில் குழந்தையின் இனிமை (சமணர்களை கண்டமேனிக்கு திட்டிப் பாடி இருக்கிறார் என்றும் பின்னால் சொன்னார்), அப்பரின் பாடல்களில் வலியின் வேதனை, சுந்தரரின் பாடல்களின் தோழனோடு சமமாகப் பழகும் தொனி இருக்கும். மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ உருக்கம் ததும்பி வழியும். சம்பந்தர்தான் நிறைய இடங்களுக்கு சென்று பதிகம் பாடி இருக்கிறார், அதுவும் பதிகத்தில் ஊர் பெயரைச் சொல்லிவிடுவார்.

சேக்கிழாரின் பெரிய புராணம் இன்னொரு பெரும் இலக்கியச் சுடர். சேக்கிழார் ஒவ்வொரு நாயன்மாரின் ஊர், குலம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து எழுதி இருக்கிறார்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நம்மாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் ஆகியோரைப் பற்றி கொஞ்ச நேரம் பேசினார். திருமங்கை ஆழ்வார் ‘சீதை உன் தோழி, என் தம்பி உன் தம்பி, நான் உன் தோழன்’ என்று ராமன் சொன்னதாகப் பாடியதைத்தான் கம்பன் குகனொடும் ஐவரானோம் என்று பின்னால் பாடி இருக்கிறார். பெரியவாச்சான் பிள்ளையின் உரைகளும் பெரும் இலக்கியம்.

பிற்காலப் புலவர்களில் அவர் குறிப்பிட்டது அருணகிரிநாதர், தாயுமானவர் மற்றும் குமரகுருபரர். (நண்பர் பாலாஜி குமரகுருபரர் தாயுமானவருக்கு காலத்தால் பிற்பட்டவர், இந்த உரையில் அவர் பேர் வந்திருக்கக் கூடாது என்றார். தமிழ் இலக்கியமே நமக்குத் தகராறு, இதில் புலவர்களின் காலத்தைப் பற்றி எல்லாம் நான் என்ன சொல்ல?) நான்தான் பாலாஜி சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது, குமரகுருபரர் தாயுமானவருக்கு முந்தையவர்தான்.

அவரது உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு எல்லாம் அகில இந்தியப் பண்பாட்டோடு இணைந்த ஒன்று, அதன் பகுதி என்ற வாதம். கங்கையும் காசியும் ராமனும் கிருஷ்ணனும் எப்படி அன்றே தமிழர்களின்/இந்தியர்களின் கூட்டு மனநிலையில் (collective psyche) இடம் பெற்றுவிட்டார்கள் என்பதை பல மேற்கோள்கள் மூலம் சுட்டிக் காட்டினார். உதாரணமாக கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டுச் செல்வதை அயோத்தியை விட்டு ராமனும் சீதையும் நீங்குவதோடு ஒப்பிட்டு இளங்கோ பாடி இருப்பதை மேற்கோள் காட்டினார். ராமன் சர்வசாதாரணமாக மேற்கோளாகக் காட்டவும் பட்டு, அந்த மேற்கோள் சர்வசாதாரணமாக புரிந்து கொள்ளவும் பட்டால் ராமனின் கதை அனைவரும் அறிந்ததாகத்தானே இருக்க வேண்டும்?

எனக்குத் தெரிந்த வரை அவர் தவறவிட்டது மணிமேகலை, ஜீவக சிந்தாமணி, மற்றும் கலிங்கத்துப் பரணி. இவற்றில் இரண்டை அவர் சிறு விளக்கு என்று ஒதுக்கிவிட்டார். கலிங்கத்துப் பரணியைப் பற்றியும் அப்படித்தான் நினைக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.

சில நண்பர்கள் அவர் சீறாப்புராணத்தை விட்டுவிட்டாரே என்று கேட்டார்கள். ஜடாயு போன்ற ஹிந்துத்துவர் சீறாவை குறிப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் கவிதையும் கவிநயமும் அறியாத, சீறாவின் இரண்டொரு செய்யுள்களை மட்டுமே பள்ளியில் படித்திருக்கும் எனக்கு அது குறிப்பிடப்பட வேண்டிய காவியமாகத் தெரியவில்லை. Tokenism-த்துக்காக மட்டுமே சீறா, தேம்பாவணி போன்றவை பள்ளிப் பாடங்களில் இடம் பெறுகின்றன என்றே கருதுகிறேன். (அது சரிதான் என்றும் கருதுகிறேன், இல்லாவிட்டால் பிற மதம் சார்ந்த இலக்கியங்கள் இருப்பதே நமக்குத் தெரியாமல் போய்விடும்.)

தனிப்பட்ட முறையில் இரண்டொரு பாடல்கள் என்னைக் கவர்ந்தன. அப்பர் பாடல் ஒன்றில் சொல்லப்படும் ஆமை உவமை, ‘வாழ்ந்து போதீரே’ என்று இழிக்கும் சுந்தரர் பாடல், திருமங்கை ஆழ்வாரின் ராமன் பற்றிய பாடல், வேட்டுவவரி ஆகியவற்றைப் படிக்க வேண்டும் என்றும் பெரியவாச்சான் பிள்ளையின் உரைகளைப் படிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. பார்ப்போம்…

முழு உரையையும் இங்கே கேட்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் இலக்கியம்

11 thoughts on “ஜடாயு உரை – இளங்கோ முதல் தாயுமானவர் வரை

  1. பாலாஜி, // Sorry for not noticing it in the first place… // ஆடியோ/வீடியோவுக்கான சுட்டி பின்னால் இணைக்கப்பட்டது. நீங்கள் சொன்னதால்தான் இணைக்கலாமே என்று எனக்குத் தோன்றவே செய்தது.

   Like

 1. It would be better to have read a standard reference book on History of Tamil literature before listening to anyone, esp. Hindutva persons like Jatayu or anti-Hindutva persons. Both have agenda to push through with gullible Tamils – they even live abroad 🙂 – and the agenda points are too well known to iterate here. It is therefore we that should be on guard to protect ourselves from getting nose led.

  When I say standard reference book, it may be a text book for college students in Tamil Nadu as the authors are eminent historians who have no bias or agenda. I have one such book called History of Tamil Literature in English authored by Ra Pi Sethu Pillai – a scholar who needs no introduction to averagely educated people in Tamil. He says the first book in Tamil literature and the Sangam poetry itself are all dated as late as the 2nd century only. All claims to push them before that are political games. He dates Cilappathikaram as late as the period after the so-called Third Sangam (Whether 1st and 2nd existed is a guessing game only – no proof). The period is generally named Sangam Maruviya Kaalam (SMK) when the Vedic Hindu religion was in constant conflict with the other two major religions of TN – Buddhism and Jainism. The fight extended to the period of Alwars and Nayanmnars who wrote harsh words against the Jains and Buddhists. Thondarippodiyalvar prayed to his God to grant him powers to cut off the heads of other religious monks. 😦

  Regarding the indigenous religion of Tamils – which came from hoary past much before the Sangam- they were confined to village and unlettered masses – who didn’t fight with anyone for supremacy of their religion. Impossible because it was not an organised one.

  When the Sangam period was over, the period of epics blossomed in the SMK. The fully known epic Cilappathikaram and its sequeal Manimekalai (authored by another man) and the other three – not fully retrieved but scraps are available – all of them were authored by non-Hindus. Although the epics were written to project a particular religious dogma, the references therein to Hindu Vedic religious rituals and ceremonies and the Vedic gods and goddesses – as Jatayu has pointed out – but everyone with cursory reading of the two epics know quite well – firmly make us accept that the Vedic religion was rooted well in Tamil Nadu much conspicuously. No disagreement. At the same time, efforts to use such history to establish the Vedic religion was from time immemorial among Tamils i.e. ante-dated to Sangam i.e. before 2nd century – is what this speaker Jatayu is trying hard to push. Cilappadikaram cannot be held to show that Vedic religion is ancient to Tamil Nadu. When I pointed out this on one occasion in his internet mag debate, he annoyingly retorted: I cannot go to Dionoser age!

  One need not go to that age and it is not possible to do so. But we need to accept that Tamils had a civilisation and a religion before Ilanko and Tolkappiar were born. The first disciple of the latter who submitted the Grammar book before Madurai Sangam, informs the august audience that there were grammar books in Tamil which his guru had mastered and as a brahmin th guru well versed in Sanskrit, and mastered Sanskrit grammar also. Based on such ambidexterous mastery, he wrote the grammar book Tolkappiam. (Please read the fantastic Paayiram the disciple wrote to know all this.

  Hence, 1) Tamils lived before the guru, with a well developed culture and a religion 2) The Vedic religion came from the North and got assimilated in urban societies (I mean, the village religion left untouched – and even today, we can see it in villages in all pristine purity). Please read History of South India by Neelakanta Sastri – who writes that there was no resistence among Tamils when the ingress of Vedic was taking place and people were interested and gradually the ingress happened.

  Alwars, Nayanmaars, the epics are all from later – not even with Sangam – period. Vedic religion had already made deep inroads in Tamil Country.

  People like Jatayu as well as anti Hindutva scholars have made the field a free for all playground – and for allowing them to do whatever they liked, we must blame the character of Tamil people. They had no courage to think for themselves and were not bold to record their times somewhere. It is a truism that the fear of God or profanity will make people to not explore and question anything. Hence, hagiographers flourished in TN. The result is: We don’t know who these Alwars are – the Vaishnavite brahmins wrote all they desire about them and we have to believe them – whether the poems were actually written by them etc. Jatayu says Chekkilar wrote about obscure men (the nayanmars) discovered their caste etc. But who knows whether such persons really lived, except the famous four who left behind their own poetry?

  It is a dark world. It will continue to remain dark – in foreseeable future. Meantime, Jatayus and anti Hindutva scholars can go one merry-go-rounds and we can spend over evenings – as the audience did it in the Bharati Tamil Sangam and you, for a plate of samosa and pakkoda 🙂

  Like

  1. பாலசுந்தர விநாயகம்,

   தமிழில் எழுதுங்களேன்! அதுவும் உங்கள் பாணி ஜோ அமலன் (இல்லை விமலனா?) என்று ஒருவரின் எழுத்து முறையை நினைவுபடுத்துகிறது. அவருக்கு பல பேர்களில் பதில் எழுதப் பிடிக்கும், அவரேதான் நீங்களா?

   ஜடாயு உரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறீர்கள். அதற்கான எந்தக் காரணமும் அவரது உரையிலோ அல்லது அவர் பேசியதாக நான் எழுதி இருக்கும் குறிப்புகளிலோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் எதையும் திரித்துப் பேசியதாகவும் எனக்குத் தெரியவில்லை. முன்முடிவுகளோடு எழுதி இருக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது, உங்கள் முன்முடிவுகளுக்கு நானோ அவரோ எதுவும் செய்வதற்கில்லை.

   குறிப்பாக சங்க இலக்கியங்களின் காலம் பற்றி அவர் எதையும் சொல்லவில்லை, நானும் அப்படி அவர் சொன்னதாக எதையும் எழுதவும் இல்லை. // firmly make us accept that the Vedic religion was rooted well in Tamil Nadu much conspicuously. No disagreement. At the same time, efforts to use such history to establish the Vedic religion was from time immemorial among Tamils i.e. ante-dated to Sangam i.e. before 2nd century – is what this speaker Jatayu is trying hard to push. Cilappadikaram cannot be held to show that Vedic religion is ancient to Tamil Nadu. // ‘வேத’ சமயம் தமிழகத்தில் சிலப்பதிகார காலத்தில் வேரூன்றி இருந்தது என்பது பற்றி எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்கிறீர்கள். வேரூன்றி இருந்தது என்றால் அதற்கு பல ஆண்டுகள் முன்னால் ‘வேத’ சமயம் முன்னால் இருந்திருக்க/வந்திருக்க வேண்டும் என்பது அந்த சொல்வடையில் பொதிந்து இருக்கத்தான் செய்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தமிழகத்தில் என்ன மதம் என்பதை எல்லாம் அவரும் பேசவில்லை, அவர் பேசியதாக நானும் எழுதவில்லை.

   // Jatayu says Chekkilar wrote about obscure men (the nayanmars) discovered their caste etc. But who knows whether such persons really lived, except the famous four who left behind their own poetry?// ஜடாயு சொல்வதென்ன? பெரிய புராணம் பல சிவனடியார்களின் குலத்தைக் குறிப்பிடத்தானே செய்கிறது? ராமன் நிஜமான மனிதனா இல்லையா என்பதற்கும் கம்பன் கவிதையின் இலக்கிய நயத்துக்கும் என்ன தொடர்பு? தஞ்சை கோவில் கல்வெட்டுகள் உண்மையா இல்லை கூட இரண்டு மரக்கால் நெல் கிடைத்ததால் சிற்பி செதுக்கிவிட்டுப் போனதா என்று யாருக்குத் தெரியும்? இந்த சந்தேகங்களுக்கும் ஜடாயுவுக்கும் அவரது உரைக்கும் அவரது அரசியல் நிலைக்கும் என்ன தொடர்பு?

   மீண்டும் ஒரு முறை: முன்முடிவுகளோடு எழுதி இருக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது.

   Like

 2. எனக்கு தமிழ் நன்னா வரும். பின்னர் பதில் எழுதுகிறேன். இப்போது என்பெயர் பற்றிய விளக்கம். இணைய தளங்களில் முதலில் எழதும்போது என் கல்லூரி நாட்களில் ஒரு படகு விபத்தில் மரணித்த நணபன் ஜோ அமலன் ராயன் பர்னான்டோ. நாகர்கோயிலைச்சேர்ந்தவன். என் பெஞ்சில் என் அருகில் அமர்ந்து படித்தவன். படிப்பில் வீக். எனவே என் துணை வேண்டி பின்னர் நட்பானது. என்னடன் ஜாதிரீதியாக காழ்ப்புணர்ச்சி கொண்ட நாயிலும் கீழான ஒருவன் அப்பெயரை வைத்து என்னை கிருத்துவன் என்று நிலை நாட்டத்துடித்து அவ‌தூறு செய்ய ஆரம்பித்ததால் அப்பெயரை விட வேண்டியதாயிற்று. அவனிடம் மேற்சொன்ன காரணத்தைச் சொல்லியும் விடுவதாயில்லை. அவன் என்னைக்கிருத்துவன் என நிலைநாட்டி எழதினால் என்னை மனவேதனைப்படுத்த முடியும் என்று கற்பனையாக நினைத்து செயல்படுவதால் அவன் எண்ணத்தை முறியடிக்க அப்பெயரை விடுவதாயிற்று. என் கருத்துக்கு மாறுகருத்து வைக்க அவனால் முடியவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் தனிநபர் தாக்கம் செய்து எதிராளியை கருத்தைச்சொல்லவிடாமல் செய்வது போல. பின்னர, என் ஜாதகப்பெயரான பால சுந்தர விநாயம். அஃபிசியல் பெயரான விநாயகம். தற்போது முக நூலில் பா விநாயகம் என்றும் இங்கே பால சுந்தர விநாயகம் என்ற பெயரிலும் எழுதுகிறேன். திண்ணையில் பி எஸ் சி என்ற பெயரில் பின்னூட்டங்கள். இன்றில்லை.அத்தளம் போரடித்துவிட்டதால். இப்படி பெயரைப்பற்றி சிலாகிப்பதில் உங்களுக்கும் எனக்கும் நேர விரயம். தவிர்க்கலாம். எனக்கு இணையதளங்கள்; முகநூல் இவையெல்லாம் பொழது போக்கு அம்சங்களே. என் கடப்பணி வேறிடத்தில்.

  ஆங்கிலத்தில் எழுதும்போது என்னால் தெளிவாக எழுதமுடிகிறது என்றுணரமுடிகிறது. நீங்கள் அமெரிக்க பிரஜை. ஆங்கிலம் விரும்ப்பபடும் எனபதால் இங்கு ஆங்கிலம். அது போக, இங்கெழுதுபவர்கள்; அல்லது வாசிப்பவர்கள் எல்லாரும் – ஒரு சிலரைத்தவிர – என் எளிய ஆங்கிலத்தைப் புரிவர் என்பது என் நம்பிக்கை.

  ஏன் தமிழில் எழுதச்சொல்கிறீர்கள்? எனக்குப்புரியவில்லை

  In your country and UK, or in many places, debaters rarely use their original names. The variety of nicknames they create and use, is mind boggling, sometimes, interesting and suggestive. There they never bother about such names. All are interested only in what is said, and rarely who said it. Only among Tamilians, it becomes an issue. Everyone wants to know who, rather than, what. This is due to a Tamilian’s inborn nature of knowing the background of the person: caste, religion and region. We are narrow. This habit of chasing names is unbecoming of good education. What do you think about it? Please tell me in which way it is going to help if a person talks about a social or literary issue if we know his real name?

  Like

 3. //ஜடாயு உரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறீர்கள். //

  நான் அப்படி எழுதவில்லை. அவர் பேச்சின் நம்பகத்தன்மை என்றால் அவர் அடிச்சி விடுகிறாரா இல்லை ஆதாரங்களின் அடிப்படியில் பேசுகிறாரா என்பதுதான். அதைப்பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அவரைப்போன்றோர் அரசியல் ஆதாயத்தினால்தான் ஊர் ஊராகச்சென்று தமிழ் இலக்கியத்தைப் பற்றிப்பேசுகிறார்கள். அப்படி பேசும்போது அவர்கள் நிலைநாட்ட விரும்புவது ஆதிகாலத்திலிருந்தே தமிழர்களிடையே வைதீக மதம் இருந்தே வந்திருக்கிறது என்பதுதான். ஆனால் அதை நிலை நாட்ட சிலப்பதிகாரத்தையும் அதற்குப்பின் வந்த நூல்களையுமே எடுக்கிறார்.அப்படியெடுத்தால், சங்கம் மருவிய காலத்திலிருந்துதான் வைதிக மதம் தெளிவாக நிலையாகியது எனவாகும்.

  இப்படி நான் எழுதுவதை நீங்கள் எடுத்துக்கொண்டு, அதற்கு முன் இருந்தாதகவும் தெளிவு என்கிறீர்கள் இல்லையா? அதை நான் conspicuously என்ற பதத்தினால் சொல்லியிருக்கிறேன். ஏன் படிக்கவில்லை? முன்பு இலைமறை காயாக கொஞ்சம் மட்டுமே இருந்தது இளங்கோ காலத்தில் தெளிவாக நீக்கமற தெரியவருகிறது. இன்றைய சமூகத்தில் நடப்பவைகளை இலக்கியவாதிகளும் சினிமாக்காரர்களும் கதைப்புலனாகக் கொள்வதைப்போல – அப்படிக்கொண்டால் ஒரு ஆதன்டிசியும் கவர்ச்சியும் உருவாக ஹேதுவாகுமென்பதால் – சமணக்கருத்துக்களைச் சொல்லவந்த இளங்கோவால், தன் கதாபாத்திரங்களே வைதீக மதத்தைப் பேணிய ஹிந்துகள் என்பதாக வைக்கிறார். கோவலன்-கண்ணகி மணம் வைதீக முறைப்படி நடந்தது. காப்பியத்தில் மாடல மறையோன் என்ற பார்ப்பனர் வருகிறார். ஆயர்பாடி இடைச்சிகள் – பரவசமடையவைக்கும் கண்ணனைப்பற்றி ஓர் குலவைப்பாட்டைப் பாடுகிறார்கள். கண்ணன் ஒரு வைதீக தெய்வம். இவற்றையெல்லாம் வைத்து இளங்கோ வைதிக இந்துமதத்தைப் போற்றவே எழுதினார் என்பது வசதியான கற்பனை. நல்ல வேளை, அவர் ஒரு பிராமண ஹிந்து என்று சொல்லத்துணியவில்லை. அதற்கு நன்றிகள். சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு நல்ல கற்பனைக்கதையை வடித்த ஒரு தேர்ந்த படைப்பாளி இளங்கோ என்றே கொள்ளவும்.

  //அவரது உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு எல்லாம் அகில இந்தியப் பண்பாட்டோடு இணைந்த ஒன்று, // இவை உங்கள் சொற்கள்.

  அடிநாதத்தின் இன்னொரு பெயர் அஜன்டா. ஜடாயு போன்ற ஹிந்துத்வர்களின் அஜண்டாவே இதுதான். தமிழ்ப்பண்பாடு அகில இந்திய பண்பாட்டோடு இணந்த ஒன்று என்பதை நிலை நாட்ட வே இலக்கியத்தைக் கையிலெடுக்கிறார். அதை வெறும் இலக்கிய நயத்துக்காகவே பேசினார் எனப்து உங்கள் நிலைப்பாடு. அதை நான் மறுக்கவே எடுக்கவோ இல்லை. எனக்குப் பட்டதை நான் சொன்னேன். When the Greeks come with gifts, beware! என்பது ஒரு நல்ல ஆங்கில முதுமொழி.

  சிலம்புக்கு முன் என்ன நடந்தது என்பதை நீஙகள் தானாக்வே ஆராயுங்கள். காயதல் உவத்தல் இல்லா அறிஞர்களைப் படியுங்கள். இன்றைய காலம் தமிழர் பணபாடு எனப்தை அரசியலாக்கிவிட்டது. அதில் உட்படுத்திக்கொள்ளக்கூடாது. அதற்காக, இப்படிப்பட்ட பேச்சுக்களை – இலக்கியத்தைக் கேட்tu இரசிக்கும் – உங்கள் சொறகளையும் சேர்த்துப்பேசினால் – சமோசா, பக்கோடாவோடு – ஒரு நல்ல மாலைப்பொழுதாக மட்டுமே எடுங்கள்.

  இதுதான் நீங்கள் சொல்லும் முன்முடிபு எனக்கு. ஒரு கூட்டம் தமிழர்களின் ஆதிமதமே வைதீக கடவுள்களைக்கொண்டது. இன்னொரு கூட்டம் இல்லை…இல்லை. பின்னரே திணிக்கப்பட்டன என, நானோ இரு கூட்டங்களையும் கேட்பதே இல்லை. கேட்டாலும் அஃது ஒரு மாலைப்பொழுதைப் போக்குவதற்காக மட்டுமே.

  Like

 4. பாலசுந்தர விநாயகம்,

  நீங்கள் எந்தப் பேரில் எழுதினாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உங்கள் பாணி ஜோ அமலனை நினைவுபடுத்தியது, அவ்வளவுதான். இறந்து போன உங்கள் நண்பரைப் பற்றி நீங்கள் நினைவு கூர்ந்தது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் பல பெயர்களில் ஒரே கருத்தைச் சொல்வது இந்தக் கருத்தை நிறைய பேர் ஏற்கிறார்கள் என்ற பொருளைத் தரும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

  இந்தத் தளத்தில் பொதுவாக தமிழில்தான் எழுதுகிறோம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவதும் உங்கள் விருப்பமே.

  // அவரைப்போன்றோர் அரசியல் ஆதாயத்தினால்தான் ஊர் ஊராகச்சென்று தமிழ் இலக்கியத்தைப் பற்றிப்பேசுகிறார்கள். // இதைத்தான் முன்முடிவு என்று சொல்கிறேன். அவருக்கு எந்த ஆதாயமும் கிடைப்பதாக/கிடைத்ததாக எனக்குத் தெரியவில்லை. கையிலிருந்து காசு செலவழிப்பார் என்றுதான் தோன்றுகிறது. அவருக்கும் சமோசாவும் பக்கோடாவும்தான் லாபம். இப்படி எல்லாம் பேசி எதிர்காலத்தில் அவர் தமிழகத்தின் முதல்வராகிவிடப் போவதும் இல்லை. அப்படியே ஆனாலும் கடந்த சில பல முதல்வர்களை விட நேர்மையாக நடந்து கொள்வார் என்றே கருதுகிறேன்.

  // முன்பு இலைமறை காயாக கொஞ்சம் மட்டுமே இருந்தது இளங்கோ காலத்தில் தெளிவாக நீக்கமற தெரியவருகிறது // மீண்டும் சொல்கிறேன், இளங்கோவுக்கு முன் என்ன இருந்தது என்று என்று அவரும் பேசவில்லை, நானும் எழுதவில்லை. முன்னால் இலைமறைகாயாக இருந்தது என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  // இவற்றையெல்லாம் வைத்து இளங்கோ வைதிக இந்துமதத்தைப் போற்றவே எழுதினார் // என்று அவரும் சொல்லவில்லை, நானும் எழுதவில்லை. எத்தனை முறைதான் உங்கள் முன்முடிவுகளுக்கு ஒரே பதிலைச் சொல்ல முடியும்? பேசாமல் ஜடாயு என்ன சொன்னார் என்று நீங்களே எழுதிவிடுங்கள். நானும், ஏன் அவரும் கூடத் தெரிந்து கொள்கிறோம்.

  // தமிழ்ப்பண்பாடு அகில இந்திய பண்பாட்டோடு இணந்த ஒன்று என்பதை நிலை நாட்டவே இலக்கியத்தைக் கையிலெடுக்கிறார். // இதுவும் உங்கள் முன்முடிவாகத்தான் எனக்குத் தெரிகிறது. தமிழ் பண்பாடு அகில இந்தியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதற்கான மேற்கோள்களை அவர் மறைக்கிறார் என்றால் அவரது அணுகுமுறை உள்நோக்கம் வாய்ந்தது என்று சொல்லலாம். ஆனால் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே? உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

  இந்த உரையைப் பொறுத்த வரை எனக்கு உறுத்தல், கருத்து வேறுபாடு என்று எதையும் சொல்ல முடியாது. அதற்கப்புறம் நடந்த தனிப்பட்ட பேச்சு வேறு விஷயம். 🙂

  ஒரு புறம் பேரில் என்ன இருக்கிறது, எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்கிறீர்கள், இன்னொரு புறம் ஜடாயு சொன்னால் அதில் ஆயிரம் உள்குத்து இருக்கும் என்கிறீர்கள். :–)

  எனக்கு எதிரான அரசியல் நிலை உள்ளவர் என்ற ஒரே காரணத்துக்காக நான் யாரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை. ஜடாயு (என் கண்ணில்) ஸ்பின் டாக்டராக மாறும் தருணங்களில் எனக்கு நேரம் இருந்தால் அவற்றை சுட்டிக் காட்டாமலும் இருப்பதில்லை. ஆயிரம் கருத்து வேற்றுமை, அணுகுமுறை வேற்றுமை இருந்தாலும் அவரது உழைப்பு, scholarship, தனிப்பட்ட நேர்மை, அவரது அடிப்படை decency எல்லாம் என் கண்ணில் பாராட்டுக்குரியவை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.