(மீள்பதிவு)
கிளாசிக். தேவனின் புத்தகங்களில் இதுதான் மிகவும் பிரபலமானது. ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஆகிய மூன்றும் தேவன் புத்தகங்களில் கட்டாயமாக படிக்க வேண்டியவை.
கதை தெரிந்ததுதான். ஒரு சாதாரண டெம்ப்ளேட் – காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்கள். அந்த மாதிரி அடி முட்டாள் சாம்பு முட்டாள்தனமாக எதையாவது செய்ய, அது ஒவ்வொரு முறையும் வொர்க் அவுட் ஆகிவிடுகிறது. இந்த டெம்ப்ளேட்டை ஐம்பது முறை போரடிக்காமல் பயன்படுத்தி இருக்கிறார் தேவன். ஒவ்வொரு கதையிலும் சாம்புவின் முட்டாள்தனத்தையும், அது எப்படியோ குற்றவாளியை கண்டுபிடிப்பதையும் மெல்லிய நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார். இன்றைக்கும், இந்த ஜெனரேஷனுக்கும் கூட கதைகள் அப்பீல் ஆகின்றன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த, பாப் இசை கேட்கும், அமெரிக்க டீனேஜர்கள் பற்றிய புத்தகங்களை மட்டுமே விரும்பிப் படிக்கும் என் (அப்போதைய) 12 வயதுப் பெண்ணுக்கு “இஷ்டம் போல் பிரயாணம்” என்ற கதையை சொன்னேன் – அவள் விழுந்து விழுந்து சிரிக்கிறாள்! அதுதான் தேவனின் வெற்றி.
- தேடி வருகிறது கவுரவம்
- மைசூர் யானை
- தலைக்கு வந்தது
- வேஷம் பலித்தது
- குறட்டையும் கொட்டாவியும்
- தேடி வந்த தனம்
- மடையன் செய்கிற காரியம்
- தலைக்கு மேல் வெள்ளம்
- சிங்காரம் ஐ.சி.எஸ்.
- அதிர்ஷ்டம் துரத்துகிறது
- இஷ்டம் போல் பிரயாணம்
- பச்சை வைரம்
- சங்கராபுரம் மகாராஜா
- கோட்டையூர் கோமளம்
- காணமற்போன கணவன்
- சுந்துவின் சிறுகதை
காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகத்தையும் தேவனே எழுதி இருக்கிறார் – கதைகளை வெட்டியும் ஒட்டியும் உருவாக்கி இருக்கிறார். நாடகமும் இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது. அவருக்கு முன்னால் நடராஜன் என்று ஒருவர் நடித்ததாகவும் அவர் சாம்பு நடராஜன் என்றே புகழ் பெற்று விளங்கியதாகவும் தெரிகிறது.
ஒய்.ஜி. மகேந்திரன் சாம்புவாக டிவி சீரியலில் நடித்திருக்கிறாராம்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சாம்பு மாதிரி குணாதிசயமும், சாம்பு என்ற பேரும், சாம்புவைப் போலவே அதிருஷ்டம் உடைய துப்பறிபவராக நாகேஷ் நடித்திருக்கிறார். ஆனால் தேவனின் கதைகள் எதுவும் அதில் பயன்படுத்தப்படவில்லை.
நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே.
தேவனின் பரம ரசிகரான பசுபதி சாம்புவைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். சில கதைகளை ராஜு ஆகியோர் வரைந்த சித்திரங்களுடனேயே ஸ்கான் செய்து பதித்திருக்கிறார். திரை எழும்புகிறது, சித்ரசேனா நாடக சபை ஆகியவற்றை இங்கே படிக்கலாம்.
மேலும் தென்றல் பத்திரிகையில் பங்களா மர்மம் என்ற சிறுகதையைப் படிக்கலாம்.
ஒரே ஒரு வருத்தம்தான். ஐம்பதோடு நிறுத்திவிட்டாரே, இன்னும் எழுதி இருக்கலாமே!
கட்டாயமாக படியுங்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன்
தொடர்புடைய பதிவுகள்:
தேவன் மரணம் – விகடன் தலையங்கம்
மோட்டார் சுந்தரம் பிள்ளை விமர்சனம்