சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I

இது ஒரு மீள்பதிவு (கொஞ்சம் அப்டேட் செய்யப்பட்டது)

சமீபத்தில் ஜெயமோகன் இந்த நாவலை மறுபார்வைக்குட்படுத்தி இருந்தார். அவரது கோணம் மாறி இருக்கிறது என்று சொன்னார். (ஒரிஜினல் அலசலை இங்கே பார்க்கலாம்.) என் கருத்துக்கள் மாறவில்லை, மீள்பதித்திருக்கிறேன்.

ஜெயகாந்தன் நிறைய எழுதி இருக்கிறார். ஆனால் அக்னிப்பிரவேசம் சிறுகதை, அதன் தொடர்ச்சியான சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல், அதன் தொடர்ச்சியான கங்கை எங்கே போகிறாள் நாவல் ஆகியவற்றின் தாக்கம், பாப்புலாரிட்டி பிற கதைகளுக்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது. அக்னிப்பிரவேசம் அளவுக்கு சர்ச்சைக்கு ஆளான வேறு சிறுகதையை ஜெயகாந்தன் எழுதவில்லை என்று நினைக்கிறேன். (ரிஷிமூலம் போன்றவையும் நிச்சயமாக சர்ச்சையை உண்டாக்கி இருக்கும்தான்.) சினிமாவாக வந்து வெற்றி பெற்றதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

அக்னிப்பிரவேசம் சிறுகதை அறுபதுகளில் எழுதப்பட்டது. யாரோ ஊர் பேர் தெரியாதவனுடன் கொஞ்சமாவது விருப்பத்துடன் உறவு கொண்ட பெண்ணை தலையில் தண்ணீர் விட்டு நீ புனிதமாயிட்டே என்று சொல்லும் அம்மாக்கள் இன்று கூட கொஞ்சம் அபூர்வம்தான். அன்று மத்திய தர குடும்பங்களுக்கு ஏற்பட்ட ஷாக் மிக அதிகம்.

சி.நே.சி.ம. அறுபதுகளின் இறுதியிலோ என்னவோ எழுதப்பட்டது. (படமே 75-இல் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.) கங்காவின் வெறுமையில் கதை ஆரம்பிக்கிறது. நீ ஒரு வைப்பாட்டியாகத்தான் இல்லை இல்லை “கான்குபைனாகத்தான்” வாழ முடியும் என்று கங்காவிடம் வெங்கு மாமா சொல்கிறார். அக்னிப்பிரவேசம் கதை பத்திரிகையில் வருகிறது. எதுவுமே பேசாத கங்காவுக்கு அதைக் கண்டு ஆவேசம் வருகிறது. அந்த பத்திரிகையை தன் அம்மாவிடம் தூக்கி எறிகிறாள். அம்மா இப்படி செய்யலாம் என்று தோன்றக்கூட இல்லையே என்று அழுகிறாள். அம்மாவை தேற்றக் கூடிய ஒரே மனிதர் வெங்கு மாமா. அவர் இல்லை நீ செய்ததுதான் சரி, அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவனையே தேடி பிடிச்சு அவன் கூடவே வாழட்டுமே என்கிறார். தன் சாமர்த்தியத்தை நிரூபிக்க கங்கா கதை எழுதிய ஆர்கேவியை பிடித்து, பிரபுவை கண்டுபிடித்துவிடுகிறாள். முதலில் சபலத்தோடு கங்காவை பார்க்க வரும் பிரபு கங்காவுக்கு ஒரு குழந்தை போல தெரிகிறான். பிரபு கங்கா நட்பு வளர்கிறது, ஆனால் அம்மாவுக்கு மானம் போகிறது. கங்காவுடன் சண்டை போடும்போது, நீ மட்டும் என்ன முடியை சிரைச்சுண்டா நிக்கறே என்று கேட்டுவிட, அம்மா அடுத்த நாளே ஆசாரமான பிராமண விதவை மாதிரி மொட்டை அடித்துக் கொண்டு நிற்கிறாள். பிரபு கங்கா நட்பில் பிரபுவின் டீனேஜர் மகள் மஞ்சுவும் இடம் பெறுகிறாள். விளையாட்டாக ஒரு திருமண சம்பந்தப் பேச்சை கங்கா கட் செய்யாமல் இருந்துவிட, அது வளர்ந்து பிரபு கங்காவை வந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறான். கங்காவுக்கு தனக்கு வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் அது பிரபுவுடன்தான் என்று முடிவாகிவிட்டது. தோழி என்ற ஸ்தானத்திலிருந்து உண்மையிலேயே “கான்குபைனாக” தயாராக இருக்கிறாள். பிரபுவின் குற்ற உணர்ச்சி அவளை ஏற்க முடியாமல் தடுக்கிறது. அவர்கள் பிரிவோடு கதை முடிகிறது.

கதையின் முதல் பலம் பாத்திரங்கள். கங்காவும், பிரபுவும், மஞ்சுவும் நாம் அடிக்கடி சந்திப்பவர்கள் இல்லைதான். ஆனால் உண்மையான நபர்கள். கங்காவின் வாழ்க்கையின் வெறுமை, பிரபு திரும்பியதும் ஒரு பிடிப்பு ஏற்படுவது, பிரபுவின் பலவீனங்கள், அந்த பலவீனங்களை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கும் அவன் குணம், மாறினால் நன்றாக இருக்குமே, மாறலாம் என்று கூட தெரியவில்லையே என்று துடிக்கும் ஒரு பழைய கால பிராமண அம்மா, ஒரு “மாடர்ன்” டீனேஜர் மஞ்சு, அதி புத்திசாலி, ஆனால் எழுபது வயதான பிறகும் சபலம் போகாத வெங்கு மாமா, அவரிடம் அடிபட்டே வாழ்க்கையை கடத்தும் மாமி, ஒரு டிபிகல் அந்த கால அண்ணன் கணேசன், எழுத்தாளர் ஆர்கேவி, என்று சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மிகவும் ரியலிஸ்டிக்காக இருக்கின்றன. அனேகமாக இவர்கள் எல்லாருமே கொஞ்சம் அதீத மனிதர்கள், ஆனால் பொய்ச்சித்திரங்கள் இல்லை.

கதையின் இரண்டாவது பலம் கதைப் பின்னல். சம்பவங்கள் மிக அருமையாக கோர்க்கப்படுகின்றன. “கற்பிழந்த” கங்கா வெங்கு மாமாவை விலக்குவது, கங்காவுக்கு கான்குபைனாக வாழ்வது தவறாகத் தெரியாத அன்றைய சமுதாய விழுமியங்கள், பிரபு மெதுமெதுவாக தன்னுள் மறைந்து கிடக்கும் நல்ல குணங்களை வெளிப்படுத்துவது, பிரபு தன் பெண் மஞ்சுவின் தலையில் தன் “பாவங்கள்” இறங்கிவிடுமோ என்று பயப்படுவது, அந்த குற்ற உணர்வினால் கங்கா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது, மொட்டை அடித்துக் கொண்டு வரும் அம்மா, அக்னிப்ரவேசம் கதையை நாவலுக்குள் அழகாக பிணைத்திருக்கும் விதம் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன.

கதையின் மூன்றாவது பலம் அன்றைய சமூக விழுமியங்கள் இயற்கையாக வெளிப்பட்டிருக்கும் விதம். “கற்பு” போச்சா, வாழ்க்கை முடிந்துவிட்டது. வாழ்க்கை வேண்டுமா, அதே “கற்பழித்தவனுக்கு” வைப்பாட்டியாகத்தான் இருக்க முடியும், அதுதான் அதிக பட்சம். இப்படி இன்றைக்கு ரமணி சந்திரன் கூட எழுதமாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அன்று அதுதான் மத்திய தர குடும்பத்தின் வால்யூ சிஸ்டம். அது இன்றைக்கு படிக்கும்போதும் நமக்கு ஆச்சரியமாகத், தவறாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் கங்காவை பெண்ணியம் பேசுபவர்கள் ஒரு ரோல் மாடலாகத்தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்! சும்மா சொல்லக்கூடாது, அப்படி தோன்ற வைப்பதில்தான் ஜெயகாந்தன் கலக்குகிறார்!

ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது விலாவாரியான அலசலைப் பற்றி அடுத்த பகுதியில். சுருக்கமாக அவரது வார்த்தைகளில்:

நமது பாலியல் பாவனைகளுக்குப் பலியாகும் பெண்களின் வாழ்வு பற்றிய ஆய்வு எனத் தொடங்கி, சீதையில் தொடங்கும் இந்தியப் பெண்ணின் தனிமையை காட்டி முழுமை பெறுகிறது. இந்த நாவல் தீவிரமே இதன் பலம். 1973ல் பிரசுரமாயிற்று.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

ஜெயகாந்தனின் ஒரு சிறந்த எழுத்தாளர், ஆனால் இந்தப் புத்தகம் முடிந்து போன ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி. இன்றைக்கே இந்த புத்தகத்தின் விழுமியங்கள் (என்னைப் போன்ற ஒரு அரைக்கிழத்துக்கே) கொஞ்சம் காலாவதியான மாதிரி தெரிகிறது. இன்னும் நூறு வருஷம் கழித்து ஏதோ ஒரு நாள் எவனோடோ படுத்தாளாம், அவள் வாழ்க்கையே மாறிவிட்டதாம், வாட் நான்சென்ஸ்? என்றுதான் படிப்பவர்களுக்கு தோன்றும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் நூறு வருஷம் கழித்து இந்த புத்தகம் நினைவு கூரப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதே படித்துவிடுங்கள்!

பின்குறிப்பு: கங்கை எங்கே போகிறாள் நாவலில் பிரபு திவாலாகிவிடுகிறான். கடைசி காலத்தில் கங்காவும் பிரபுவும் ஒன்றாக platonic relationship என்று வாழ்கிறார்கள். கங்கா கங்கையிலே மூழ்கி இறந்துவிடுவதோடு முடிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயமோகனின் அலசல்
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் – பக்ஸ் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்