சிதம்பர சுப்ரமணியனின் இரு புத்தகங்கள்

மீள்பதிப்பு (முதல் முறை பதிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 14, 2010)

இதய நாதம்

இருபது வருஷங்களுக்கு மேலாக நான் தேடிக் கொண்டிருந்த புத்தகம் ந. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்.

விகடன், குமுதம், சாண்டில்யன், கல்கி, சுஜாதா லெவலைத் தாண்டிய தமிழ் கதை உலகம் இருக்கிறதா என்று நான் சந்தேகப்பட்ட காலம் ஒன்று உண்டு. அப்போது கிடைத்த ஒரு புத்தகம் க.நா.சு.வின் “படித்திருக்கிறீர்களா? தமிழில் முதன் முதலாக புத்தக அறிமுகம் என்று நான் படித்தது அதைத்தான். க.நா.சு. போட்டிருந்த லிஸ்டில் என்னை மிகவும் கவர்ந்தது “இதய நாதம்” புத்தகத்தின் அறிமுகம்தான்.

எனக்கு தெரிந்த யாருமே அதைப் படித்திருக்கவில்லை. நான் சென்னையில் இருந்த வரை எந்த புத்தக கண்காட்சியிலும் எனக்கு அது கிடைக்கவில்லை. புத்தகங்களை தேடி எடுத்துத் தரும் எழுத்தாளர் திலீப் குமாரும் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார். நண்பர் ராஜனிடம் இருக்கிறது என்று தெரிந்தது, ஆனால் அவரால் அதை அவரது நூலகத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன் அவர் என் வீட்டுக்கு வருவதாக இருந்தது; அப்போது அவர் சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் படிக்கிறாயா என்று கேட்டார்; படிக்கிறேன், ஆனால் இதய நாதம் கிடைக்கவில்லையா என்று கேட்டேன். அவர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்; ஆனால் வரும்போது கொண்டு வந்துவிட்டார்! புத்தக ஷெல்ஃபுக்கு பின்னால் விழுந்து கிடந்திருந்ததாம். ஒரே மூச்சாக படித்துவிட்டேன்!

கதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோ, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. க.நா.சு.வின் அறிமுகத்திலிருந்து கதை ஓரளவு தெரியும் – இசையே வாழ்க்கையாக வாழும் ஒரு வித்வானின் கதை. சிறுவன் கிட்டு சங்கீத யோகியான சபேசய்யரிடம் எப்படியோ வந்து சேர்கிறான். அவருக்கு தகுந்த சீடனாக வளர்கிறான். அவர் மறைவுக்கு பிறகு புகழ் பெற்ற வித்வானாக ஆகிறான். கல்யாணமும் ஆகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் காசுக்கு கச்சேரி செய்யமாட்டேன் என்று தீர்மானிக்கிறார் (இனி மேல் மரியாதையாகத்தான் அழைக்க வேண்டும்). வாழ்க்கையை எப்படி நடத்துவது? மனைவி நீலாவுக்கும் அவனுக்கும் தினமும் தகராறு. நடுவில் தாசி பாலாம்பாளின் உண்மையான சங்கீத தாகத்தை புரிந்து கொண்டு அவளுக்கு இசை சொல்லித் தருகிறார். பேர் கெடுவதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் பாலாம்பாள் தன் மேல் ஆசைப்படுவதை உணரும்போது அவளிடமிருந்து விலகுகிறார். பிறகு திடீரென்று குரலே போய்விடுகிறது. தனக்குள்ளே ஆழந்துவிடுகிறார்.

உண்மையை சொல்லத்தான் வேண்டும். கதை ஒன்றும் பிரமாதமில்லை. இது மகா வைத்யநாத சிவனின் வாழ்க்கையால் inspire ஆன கதை என்று முன்னுரையில் சொல்லி இருக்கிறார். அதைப் படிக்காவிட்டால் இது வெறும் wishful thinking, fantasy என்றுதான் சொல்லி இருப்பேன். ஒரு லட்சிய சங்கீத மேதையை மனதில் உருவாக்கிக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி எழுதப்பட்ட கதை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கதையில் ஜீவன் இருக்கிறது. குறிப்பாக நீலா பாத்திரம். அவர் நீலாவின் லௌகீக ஆசைகளை குறையாக சொல்லவே எழுதி இருக்கிறார். ஆனால் அந்த பாத்திரம் நிறைவாக இருக்கிறது. கிட்டுவின் பாத்திரத்தில் நம்பகத் தன்மை குறைவாக இருந்தாலும், அவரது போராட்டங்கள் எல்லாம் heroic struggles ஆக மட்டுமே இருந்தாலும் (பணம், கெட்ட பேர், “ஒழுக்கம்” அற்ற உறவு, குரல் இழத்தல் vs இசை), அந்த பாத்திரத்திலும் உயிர் இருக்கிறது. எல்லா பாத்திரங்களும் one dimensional ஆக இருப்பதுதான் குறை.

கிட்டு தன் குருவின் வீணையை உடைப்பதும், சபேசய்யர் தன் மகன் மகாதேவனை அதற்காக திட்டும்போது உண்மையை ஒத்துக் கொள்வதும், குரு நீ உண்மை சொன்னது பெரிய விஷயம் என்று சொல்வதும் என் மனதை தொட்ட காட்சி. க.நா.சு.வும் இதைப் பற்றி விலாவாரியாக எழுதி இருக்கிறார்.

இதய நாதம் எனக்கு பொய்த்தேவு நாவலை நினைவுபடுத்தியது. இரண்டிலும் ஒரு சிறுவன் தன் உள்ளே இருக்கும் மனிதனை நோக்கி செல்லும் பயணம்தான் கதை. பொய்த்தேவின் சோமு முதலியாருக்கு அது பணம், பிசினஸ், ஆன்மிகம் என்று போகிறது. கிட்டு பாகவதருக்கு இசைப் பயணம்.

படிக்கலாம். முன்னோடி கதை. (Pioneering effort) ஒரு முன்னோடி முயற்சியில் இருப்பது போல குறைகளும் இருக்கின்றன. ஜெயமோகன் இதை “பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்”-இல் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ்.ரா.வின் லிஸ்டில் இது இடம் பெறவில்லை.

மண்ணில் தெரியுது வானம்

எனக்கு காந்தி மேல் எப்போதுமே ஒரு ஆச்சரியம் உண்டு. ஒரு தனி மனிதர் எப்படி லட்சக்கணக்கானவர்களை கட்டி மேய்த்தார்? அவர்களுக்கு அவர் கொடுத்ததெல்லாம் ஜெயில் வாசம், வறுமை, அவர்கள் காலம் காலமாக நம்பிக் கொண்டிருந்த ஜாதி போன்ற கருத்துகளை உடைத்தல். சிதம்பர சுப்ரமணியத்துக்கும் அந்த ஆச்சரியம் இருந்திருக்கிறது.
பட்டப் படிப்பில் மாநிலத்தில் முதல்வனாக தேறும் நடராஜன். அவன் ஐ.சி.எஸ். படிக்க வேண்டும் என்று கனவு காணும் அப்பா. நடராஜனுக்கு கொஞ்சம் காந்தி பைத்தியம் இருக்கிறது. தற்செயலாக ஒரு சத்யாகிரகத்தை பார்க்கப் போகும்போது தடியடி விழுகிறது. ஜெயிலுக்கு போகிறான். பிறகு காங்கிரஸ், காந்தி ஆசிரமம் என்று வாழ்க்கை திசை திரும்பி விடுகிறது. அப்புறம் பத்திரிகை வேலை, வேற்று ஜாதி பெண் சரோஜாவுடன் காதல், கல்யாணம். காங்கிரஸ் மந்திரி சபை, வெள்ளையனே வெளியேறு, சுதந்திரம், காந்தி மறைவு என்று நாட்டு நடப்பை பற்றி கமென்ட் வந்துகொண்டே இருக்கிறது.

நடராஜன் இவர்தான் என்று தெரிகிறது. அவரது லட்சிய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டதை நாவலாக எழுதி இருக்கிறார். தி.ஜ. என்ற பாத்திரம் எழுத்தாளர், பத்திரிகையாளர் தி.ஜ.ர. (தி.ஜ. ரங்கநாதன்) வீ.ர. என்ற பாத்திரம் வ.ரா. (வ. ராமஸ்வாமி ஐயங்கார்) மற்றவர்கள் – குறிப்பாக கிருஷ்ணமணி யாராவது நிஜ மனிதரின் சாயலா என்று தெரியவில்லை.

படிக்கலாம். ஆனால் சுமார்தான்.

மதிப்பீடு

சிதம்பர சுப்ரமணியத்தை மறந்துவிடுவார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இந்த இரண்டு புத்தகங்களையும் மட்டும் வைத்துப் பார்த்தால் அவர் தமிழ் இலக்கியத்தில் ஒரு footnote ஆக மட்டுமே இருக்க முடியும். தமிழ் இலக்கியத்தில் அவரது பங்களிப்பு minor contribution-தான். அவரது சிறந்த படைப்பான இதய நாதத்தையே நான் ஆங்கிலத்தில் படித்திருந்தால் அடுத்தவரிடம் இதைப் பற்றி பேசவே மாட்டேன். ஒரு விதத்தில் அவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மாதிரி – அவர் காலத்து விமர்சகர்கள் சிலருக்கு அவர் சாதனையாளராக இருந்திருக்க வேண்டும். இன்றைக்கு ஸ்ரீகாந்த் நல்ல ஆட்டக்காரர் என்று யாரும் சொல்வதில்லை, ஆனால் அவரது சில இன்னிங்க்ஸ்கள் பார்த்தவர்களால் இன்னமும் நினைவு கூறப்படுகின்றன. அந்த மாதிரிதான் இவரும்.

ஆனால் அவரது புத்தகங்களில் நேர்மை இருக்கிறது; அந்த காலகட்டத்தின் விழுமியங்களை (இசை, சுதந்திரப் போராட்டம்) அவர் நன்றாக கொணடு வந்திருக்கிறார். தீவிர வாசகர்கள், footnote ஆக கருதப்படுபவற்றையும் படிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களுக்கு மட்டுமே நான் இவரை சிபாரிசு செய்வேன். இதய நாதம் என் இரண்டாம் பட்டியலில் (நேரம் இருந்தால் படிக்கலாம்) இடம் பெறும்.

அவரது ஒரு சிறுகதை – வேலையும் விவாகமும் – நெட்டில் (தென்றல் இதழ்) கிடைக்கிறது. (Registration Required). பாவண்ணன்சசாங்கனின் ஆவி” என்ற சிறுகதையை திண்ணை இதழில் அலசி இருக்கிறார். எனக்குப் பிடித்த சிறுகதை ஜாகை மாற்றம். 1942-இல் எழுதப்பட்டது

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் இதய நாதம் படியுங்கள்.

இப்போது இந்தப் புத்தக்த்தை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருப்பதாக சந்தியா பதிப்பகம் நடராஜன், நண்பர் செல்வராஜ் தகவல் தருகிறார்கள். சந்தியா பதிப்பகத்தின் தொலைபேசி எண்கள் – 044-2489-6979; 98411-91397

பின் குறிப்பு: இவரது புகைப்படம் எதுவும் நெட்டில் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள்! தினமணிக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
வேலையும் விவாகமும் சிறுகதை (தென்றல் இதழ், Registration Required).
சசாங்கனின் ஆவி” என்ற சிறுகதையை பாவண்ணன் அலசுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு தினமணியில்
சிதம்பர சுப்ரமணியன் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாத அசோகமித்ரனும் தி.ஜா.வும்