மீள்பதிப்பு, சிறு திருத்தங்களுடன் (முதல் முறை பிரசுரிக்கப்பட்டது அக்டோபர் 2010-இல்)
மரப்பசுவின் ஆரம்பம் பிரமாதம்! தஞ்சாவூர் கிராமம், ஊர் பெரிய மனிதர், நமஸ்காரம் செய்யும் அம்மிணி, விதவை மகளின் தலையை மழிக்கப் போகும்போது இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேனே என்று அலறும் ஊர் பெரிய மனிதர் என்று ஒரு அருமையான சித்திரத்தை காட்டுகிறது.
அடுத்த பகுதியில் ஒரு மாற்று குறைகிறது. பாசமான பெரியம்மா/பெரியப்பா, ஒரு பார்வையில் அம்மிணியின் செக்ஸ் வேட்கையை அடையாளம் கண்டுகொள்ளும் கோபாலி என்று செல்கிறது.
அதற்கப்புறம் அதல பாதாளத்தில் விழுந்துவிடுகிறது. தி.ஜா.வுக்கு நம்மை எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்று ஆசை போலிருக்கிறது. அதனால் விரும்பியவரிடம் உறவு கொள்ளும் ஒரு பெண் பாத்திரமாக அம்மிணியைப் படைத்திருக்கிறார். கோபாலியின் வைப்பாட்டியாக வாழ்வதில், அதே நேரத்தில் வேறு பலரிடம் உறவு வைத்துக் கொள்வதில் அம்மணிக்கு எந்த தயக்கமும் இல்லாதது அந்த காலத்தில் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். இப்போது இல்லை. அப்போதும் ஆங்கிலத்தில் ஹரால்ட் ராபின்ஸ் மாதிரி படித்துவிட்டு இதைப் படித்தால் ஒரு அதிர்ச்சியும் ஏற்படப் போவதில்லை. அம்மா வந்தாள் என்னைப் போன்ற மிடில் கிளாஸ் மாதவன்களை இதை விட பல மடங்கு பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கும். தி.ஜா.வாக ஆரம்பித்து பாலகுமாரனாக முடித்திருக்கிறார்.
இது பரத நாட்டிய விற்பன்னர் சந்திரலேகாவை வைத்து எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
எஸ்.ரா. இதை தமிழின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அம்பை இந்த நாவலை இங்கே மற்றும் இங்கே போட்டுத் தாக்குகிறார்.
படிக்கும்போது மீண்டும் மீண்டும் தி. ஜா. ஒரே கதையை எழுதுவது மாதிரி ஒரு அலுப்பு ஏற்படுகிறது. தஞ்சாவூர் பின்புலம், ஏதோ ஒரு வகையில் சமூகம் சுலபமாக அங்கீகரிக்காத உறவு, இதை விட்டால் வேறு எதுவும் இல்லையா என்று தோன்றுகிறது.
ஆனால் அந்தக் கால தஞ்சாவூர் வட்டார பின்புலத்தை, அதுவும் பிராமண பின்புலத்தை சித்தரிப்பதில் தி.ஜா.வை மிஞ்சியவர் எவருமில்லை. அது மட்டுமே இந்தக் கதையின் பலம்.
பின்குறிப்பு: நான் இந்தப் பதிவை எழுதி இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பிறகு நண்பர் ரெங்கசுப்ரமணி இதைப் பற்றி எழுதுகிறார் –
நான் எழுத நினைப்பதை ஏற்கனவே ஆர்.வி எழுதிவைத்துவிட்டார் இங்கு.
அவர், நான், கேசவமணி மூவருக்கும் ஏறக்குறைய ஒரே வேவ்லெங்க்த்!
பின்பின்குறிப்பு: தி.ஜா.வின். அடுத்த வீடு ஐம்பது மைல் புத்தகத்தைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. அவரது ஆஸ்திரேலியப் பயணக் குறிப்புகள். எழுதப்பட்ட காலத்தில் முக்கியமாக இருந்திருக்கும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தி. ஜா. பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
திண்ணை தளத்தில் அம்பையின் விமர்சனம் பகுதி 1, பகுதி 2
ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்
மோக முள், அம்மா வந்தாள், செம்பருத்தி எல்லாம் படித்து தி.ஜா கதைகளின் மேல் கிறுக்குப் பிடித்திருந்தது..அதை நல்ல வேலையாக மரப்பசுவில் அவரே தெளிவித்து விட்டார்..ஒரு கண்காட்சியில் தேடிப் பிடித்து மரப்பசு வாங்கி வெறுத்து விட்டேன்..
LikeLike
ஷாஹி, மரப்பசு தி.ஜா.வின் தோல்விதான். ஆனால் என் கண்ணில் முழு மோசம் இல்லை.
LikeLike
தி.ஜாவின் மிகபெரிய பலமே அவரது உரையாடல்களும், வர்ணனைகளும், கதாப்பாதிரங்களை அறிமுகப் படுத்தும் நேர்த்தியும் தான் என நினைக்கிறன். மோகமுள் முதல் நூறு பக்கங்களை இரண்டு முறை படித்திருக்கிறேன், அந்த ஊரின் வர்ணனையும்.பாபு யமுனா இருவரின் உறவை அவர்களின் பேச்சு மூலமாகவே வெளிக்கொணரும் அந்த யுத்தியும் அவ்வளவு அழகு. அதற்கு அப்புறம் கதை போய் கொண்டே இருக்கிறது நேர் கோட்டில் எந்த இடையூறும் இல்லாமல். நாவல் என்பதை விட ஒரு நீளமான கதை என்றே சொல்லலாம் மோகமுள்ளை. ஒப்புநோக்க செம்பருத்தி இன்னும் செறிவான நாவல் என்றே நினைக்கிறன்.
LikeLike
மதன், தி.ஜா.வின் நாவல்களில் எனக்கு இப்போது ஒரு repetitiveness தெரிகிறது. கொஞ்ச நாளைக்கு முன் வந்த கடுப்பில் பாலகுமாரனை இவரை விட உயர்ந்த இடத்தில் வைத்து ஒரு லிஸ்ட் போட்டேன். 🙂 (அப்போது பாலகுமாரனின் நல்ல நாவல்கள், சிறுகதைகளாக கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது.) அப்புறம் இன்னும் கொஞ்சம் தேடித் பிடித்து படித்த பிறகுதான் தெரிகிறது அவர் எத்தனை repetitive என்று!
LikeLike
மரப்பசு ரிப்பிட்டேடிவ் மாதிரி தெரியவில்லை. அவரின் களம் தஞ்சாவூர், சென்னை, டில்லி. அவர் வாழ்ந்த இடங்கள். இது கொஞ்சம் டேஞ்சரான கதை. முதலில் படிக்கும் போது பல இடங்கள் புரியவில்லை, நான் ஒவ்வொரு வார்த்தையையும், வரியையும் படிக்க மாட்டேன். அங்கங்கு ஜம் செய்து உரையாடல்களை தவிர்து போவது வழக்கம். நான் படித்த தி.ஜாவின் முதல் புத்தகம் இது தான். குழம்பி, பின் இரண்டாம் தடவை கவனமாக படித்தபின் தான் தெரிந்தது, இவர் உரையாடல்கள் மூலமாக கதையை நகர்த்தி செல்லும் ஆசாமி என்று. அம்மா வந்தாள் கதையிலும் அதே மாதிரி இந்துவின் ஒரு வரியில் கதை வேறுவிதமாக திரும்பும்.
LikeLike