அனேகமாக எல்லாரும் ஆர்.பி. சாரதியா, எழுத்தாளர் பா.ரா.வின் அப்பா ஆயிற்றே என்றுதான் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எனக்கோ பா.ரா. ஆர்.பி. சாரதி ‘மாமாவின்’ மகன். ஆர்.பி. சாரதி தலைமை ஆசிரியராக இருந்தவர். என் அப்பாவும் தலைமை ஆசிரியர். இரண்டு பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றி மாற்றி மாறுதல் நடக்கும். ஓரிரு வருஷங்களுக்கு ஒரு முறை குடும்பங்கள் சந்தித்துக் கொள்ளும். பா.ரா. முதல் முறையாக “எழுதிய” கதையை என் அப்பாவை கிணற்றடியில் பிடித்து வைத்துக் கொண்டு சொன்னதை இன்னும் நினைவு கூர்கிறார். அவ்வப்போது சாரதி மாமா எழுதிய கவிதைகள் கோகுலம் மாதிரி பத்திரிகைகளில் வரும். அது அவரை இன்னும் கவர்ச்சிகரமானவராக ஆக்கியது. அவரது அண்ணா சுராஜ் பாரதி மன்றம் என்ற ஒரு அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார். சைதாப்பேட்டையில் சில ஒண்டுக் குடித்தன வீட்டு முற்றங்களில் பாரதியைப் பற்றிய அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இவை எல்லாம் சேர்ந்து அவரை ஒரு மறக்க முடியாத ஆளுமையாக ஆக்கிவிட்டன.
ஆனால் அவரை நான் கடைசியாகப் பார்த்தபோது நான் சிறுவன். இப்போது வழுக்கை. போன வருஷம் இந்தியா போயிருந்தபோது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் கடைசியில் முடியாமல் போய்விட்டது. இப்போது அது ஒரு மாறாத வருத்தமாகவே நின்றுவிடப் போகிறது.
அவர் மொழிபெயர்த்த பாபர்நாமா, மஹாவம்சம் ஆகியவற்றைப் படிப்பதுதான் இனிமேல் செய்யக் கூடியது. இவற்றைத் தவிர ராமச்சந்திர குஹா எழுதிய India After Gandhi புத்தகத்தையும் மொழிபெயர்த்திருக்கிறார். இத்தகைய மெகா-ப்ராஜெக்டுகளை முன்னின்று சிறப்பாக மொழிபெயர்த்ததற்காக அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
பா.ரா., மற்றும் குடும்பத்தினரோடு என் ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்
//இவற்றைத் தவிர ராமச்சந்திர குஹா எழுதிய India After Gandhi புத்தகத்தையும் மொழிபெயர்த்திருக்கிறார்// அந்த அளவிற்கு சிரத்தையாகக் கவனிக்கவில்லை. செய்திக்கு நன்றி.
LikeLike