சுப்ரபாரதிமணியனின் “அப்பா”

(மீள்பதிப்பு)

சுப்ரபாரதி மணியனை எனக்குத் தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா என்று கேட்டு மானத்தை வாங்காதீர்கள்.) நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் சந்தித்திருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது விகடன் குமுதமே அங்கே கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். இவர் சிரமப்பட்டு வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்துவார். முதல் முறை நான் அங்கே போய் சாயாவனம் புத்தகம் வாங்கியபோது அவர் கண்ணில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்த மாதிரி வெளிச்சம்! தமிழன் புஸ்தகம் வாங்குவதே அரிது. அப்படி வாங்கினாலும் சுஜாதாவை தாண்டுவது அதுவும் அந்தக் காலத்தில் மிக அரிது. அவருக்கு யாருடா இந்த பையன் சாயாவனம் எல்லாம் வாங்கறானே என்று ஒரு ஆச்சரியம். அவருக்குத் தெரியுமா நம்ம சுயரூபம்?

கஷ்டப்பட்டு ஒரு தமிழ் சங்கம் வேறு நடத்தினார். ஏதோ ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த பெரிய மனிதர் அறிவிக்கப்பட்டிருந்த தலைப்பை விட்டுவிட்டு வேறு எதையோ பேசினார்.வந்த எரிச்சலில் நான் அவரது தமிழ் சங்கம் பக்கம் போகும் ஆசையை விட்டுவிட்டேன். இப்போது தோன்றுகிறது – புத்தகங்களை இரவல் வாங்கவாவது அவரை நாலு முறை போய் பார்த்திருக்கலாம். ஒரு புத்தகக் கண்காட்சியிலாவது கூடமாட ஏதாவது உதவி செய்திருக்கலாம். நல்ல மனிதர்களை பழக்கம் செய்து கொள்ளவே அப்போதெல்லாம் ஒரு வினோத தயக்கம்!

கண்காட்சியில் இவர் எழுதிய “அப்பா” என்ற சிறுகதை தொகுப்பை obligation-க்காகத்தான் வாங்கினேன். அப்போதெல்லாம் சுஜாதாதான் என் ஆதர்ச தமிழ் எழுத்தாளர். சுஜாதா இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை வேறு எழுதி இருந்தார், புத்தகத்தை வாங்க அதுவும் ஒரு காரணம். அந்த முன்னுரையில் பாதி புரியவில்லை, ரொம்ப high funda ஆக இருந்தது, அது இன்னொரு காரணம்.

சுப்ரபாரதிமணியன் கொஞ்சம் dry ஆக எழுதும் எதார்த்தவாதக்காரர். எல்லா கதையிலும் சோகம் நிரம்பி இருக்கும், வீழ்ச்சி இருக்கும், நிறைய நுண்விவரங்கள் இருக்கும். வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களில் கதை கண்டுபிடிக்கும் பார்வை. அதையெல்லாம் ரசிக்கத் தெரியாத வயது. ஏதோ கொஞ்சம் சீரியஸாக படித்தாலும் மாதுரி தீக்ஷித் “ஏக் தோ தீன்” என்று ஆடிப் பாடுவதுதான் மிஸ் செய்யக்கூடாத ஒன்றாக இருந்த காலம். புத்தகங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டியது மிக முக்கியமாக இருந்தது. இரண்டு கதை படித்துவிட்டு இந்த மாதிரி அழுமூஞ்சிக் கதைகள் படிக்க பிடிக்காமல் பரணில் தூக்கிப்போட்டுவிட்டேன். ஒரு பத்து வருஷம் கழித்து புரட்டிப் பார்த்தேன். நல்ல எழுத்தாளர் என்று தெரிந்தது. சுஜாதா தன் முன்னுரையில் குறை சொல்லி இருந்த ஒரு கதை எனக்கு நல்ல கதை என்று பட்டது. அட என் ரசனை சுஜாதாவிடமிருந்து வேறுபடுகிறதே என்று வியந்தது நினைவிருக்கிறது. சுஜாதாவின் முன்னுரை வேறு புரிந்துவிட்டது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்!

அப்பா: பற்றாக்குறை குடும்பம். சின்ன மகனோடு தங்கி இருக்கும் அப்பா. பெரியவனைப் பார்க்க வரும்போது ஒரு பியர் – இல்லை இல்லை பீர் – குடித்துக் கொள்வார். அவனிடமிருந்து கொஞ்சம் பணம் வாங்கிக் கொள்வார். திடீரென்று தன் பேரனுக்கு நல்ல ஜட்டிகள் வாங்கி வருகிறார். பணம் எங்கே கிடைத்தது?

இன்னொரு முறை மௌனம்: ஐந்து மணமாகாத இளைஞர்கள் ஒரு போர்ஷனில், 35 வயது கணவன், 18 வயது இளம் மனைவி, 27 வயது கணவனின் தங்கை மூவரும் இன்னொரு போர்ஷனில். அவ்வளவுதான் கதை. இந்தத் தொகுப்பில் சுஜாதாவுக்கு பிடித்த கதை இதுதான். மிக subtle ஆக எழுதப்பட்டது.

இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்: திருமணத்தில் தலைப்பாகை கட்டிவிடும் தொழில் செய்பவர். ரெடிமேட் தலைப்பாகை வந்தால் என்னாவது?

நிழல் உறவு: மோர்க்காரியுடன் பந்தம் உள்ள குடும்பம். பல வருஷம் கழித்து மோர்க்காரியின் மகனை சந்திக்கிறார்கள். அவனுக்கு அம்மா மீது அலட்சியம். பந்தம் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

சில வேறு தினங்கள்: கோழிச்சண்டை மட்டுமே தெரிந்த கொஞ்சம் பொறுப்பில்லாத அப்பா. அம்மா ஒரு நாள் அவரை எதிர்க்கிறாள். இந்த மாதிரி ஒரு கதை எழுத முடிந்தால்!

அடையாளம்: வேற்று ஜாதி மாப்பிளைத் தோழன். சுமாரான கதை.

அது ஒரு பருவம்: மொட்டைக் கடிதத்தால் கல்யாணம் நின்று போன அக்காவின் துயரம்.

கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்: கல்யாணத்தில் குடத்திலிருந்து மோதிரம் எடுக்கும் சடங்கு. கணவனே மூன்று முறையும் வெல்கிறான். மனைவிக்கு வருத்தம். இந்த சாதாரண நிகழ்ச்சியை மிக அருமையாக எழுதி இருக்கிறார்.

வெளிச்சமற்றவை: ஒரு ஏழை உறவுக்காரி தான் சார்ந்திருக்கும் குடும்பத்தினரால் படும் காயங்கள். நல்ல எழுத்து.

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்: சுஜாதா இதைத்தான் சிறுகதை வடிவம் சரியாக வரவில்லை, தேவைக்கு அதிகமான விவரங்கள் என்று சொல்கிறார். எனக்கு அந்த விவரங்கள்தான் இந்த கதையை எங்கோ கொண்டு செல்கின்றன என்று தோன்றுகிறது. இந்த மாதிரி கதையைத்தான் ஒரு இருபது வருஷம் முன்னால் என்னால் ரசித்திருக்க முடியாது. ஜெயமோகன் இந்தக் கதையை தனக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். இந்தச் சிறுகதை வெளிவந்தபோது இந்தக் கதையை படி படி என்று நண்பர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினாராம். எஸ். ராமகிருஷ்ணனும் இதை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் குறிப்பிடுகிறார்.

கோடை: கடுமையான கோடை. எல்லாரும் வீட்டில் வெந்து சாகிறார்கள். ஒரு கூலிக்காரன் ஒரு மர நிழலில் கட்டில் போட்டு தூங்குகிறான். அவ்வளவுதான் கதை. இதிலும் ஒரு கதையைக் காண ஆழமான பார்வை வேண்டும்!

வெடி: கிணறு வெட்ட வெடி வைப்பவன் கொஞ்சம் இசகு பிசகாக மாட்டிக்கொண்டு தலைமறைவாக இருக்கிறான். சிறுவன் லக்ஷ்மி வெடி வைப்பதைப் பார்த்து எனக்கும் ஒன்று கொடு என்று கேட்கிறான். மனிதருக்கு அபாரமான பார்வை!

உறுத்தல்: மாமன் மச்சான் சண்டை. மச்சான் போடா பொட்டைப் பயலே என்று சொல்லிவிடுகிறான். மாமன் நாடகத்தில் பெண் வேடம் போட்டவர்!

சாயம்: ஹோலி பண்டிகையில் மாட்டிக் கொள்ளும் தமிழன்.

இவரது பலம் எந்த ஒரு அற்ப நிகழ்ச்சியிலும் ஒரு கதைக் கருவை காண்பது. மத்தியான நேரத்தில் மரத்தடியில் தூங்குவதில் எல்லாம் ஒரு கதையைப் பார்க்க முடிகிறது. Subtlety கை வந்த கலை.

பலவீனம் கதைகளில் சுவாரசியம் குறைவாக இருப்பது. எந்தக் கதையும் விறுவிறு என்று போவதில்லை, சரளமான நடை இல்லை. அசோகமித்ரன் பாணியில் வேண்டுமென்றே சுவாரசியத்தை குறைத்து எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது. அசோகமித்ரன் பாணியிலேயே வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளர் கமெண்டரி கொடுப்பதைப் போல பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. அதுவும் ஒரு droning குரலில் அந்தக் கால ஆல் இந்திய ரேடியோ கமெண்டரி கேட்பது போல ஒரு feeling. உணர்ச்சி பொங்கும் சீன் என்று ஒன்று எந்தக் கதையிலும் கிடையாது. மேலும் sometimes he is too subtle. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் கதையில் உள்ள subtlety சுஜாதா மாதிரி ஒரு தேர்ந்த வாசகருக்கே பிடிபடுவது கஷ்டம் என்றால் என் போன்றவர்கள் என்னாவது? இவர் ஒரு acquired taste என்றுதான் சொல்ல வேண்டும்.

பாலகுமாரன், தி.ஜா., ஜெயமோகன் போன்றவர்களை படித்துவிட்டு இவரை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமே. ஆனால் முயற்சி செய்து படியுங்கள், படிக்க படிக்க, அவரது subtlety பிடிபட பிடிபட கதைகளும் பிடித்துவிடும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
சுப்ரபாரதிமணியனின் வலைத்தளம்

சூரிய கிரஹணம் – ஐசக் அசிமோவின் “Nightfall”

கூடிய விரைவில் அமெரிக்காவில் சூரிய கிரஹணம். இந்தக் கதையை மீள்பதிப்பது பொருத்தமாக இருக்கும்…

nightfallசூரிய கிரஹணம் நடந்து பல காலம் ஆயிற்று. கிரஹணம் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள். சூரிய கிரஹணம் நடந்தால் எப்படி நடந்து கொள்வார்கள்?

Nightfall சிறுகதையும் அப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் விவரிக்கிறது. பல சூரியன்களைச் சுற்றி வரும் கிரகம். இரவு என்றால் என்னவென்றே தெரியாது. அதிசய நிகழ்ச்சியாக எல்லா சூரியன்களும் மறையப் போகின்றன. பல லட்சம் நட்சத்திரங்கள் தெரிகின்றன. கிரகவாசிகளுக்கு என்ன தோன்றும்?

issac_asimovஎனக்கு சிறுகதை பிரமாதமாகப் படவில்லை. ஆனால் சிறுகதை செல்லாத இடங்கள் – என்னவெல்லாம் நடக்கும், எப்படி எல்லாம் உணர்வார்கள் – என்று என் மனதில் ஓடும் எண்ணங்கள்தான் இந்தச் சிறுகதையை உயர்த்துகின்றன. அசிமோவும் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்ல முயற்சிக்கிறார்தான். ஆனால் அதற்கு அவரை விடத் திறமையான ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைக்கிறேன்.

1941-இல் எழுதப்பட்ட சிறுகதை. அனேகமாக எல்லாருடைய டாப்-டென் Sci-Fi பட்டியல்களிலும் இடம் பெறும்.

மின்னூலை இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விஞ்ஞானப் புனைவுகள்

ரா.கி. ரங்கராஜன்

எனக்கு ரா.கி.ர.வைப் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லை. அவரது பங்களிப்பு என்பது குமுதத்தை சுவாரசியமான வாரப் பத்திரிகையாக வைத்திருந்த ஒரு குழுவில் முக்கியப் பங்காற்றியதே. உதாரணமாக அவர் வாராவாரம் எழுதி வந்த “லைட்ஸ் ஆன்” சினிமா பத்தி. To state this uncharitably, அவர் குமுதத்தின் பக்கங்களை நிரப்பினார் என்று சொல்லலாம், அவ்வளவுதான்.

அவர் எழுத்திலே எனக்கு மிகவும் பிடித்த அம்சம் கச்சிதம்தான் – ஒரு நல்ல ஆர்க்கிடெக்ட் போடும் ப்ளானைப் போல. முடிவை நோக்கி சீராகப் போகும் கதைகள். சரளமான நடை. அனாவசியமாக இழுப்பதில்லை. ஆனால் பொழுதுபோக்கு எழுத்து என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தாலும், கதைக்கரு பல சமயம் மிக சிம்பிளாக இருக்கிறது. இப்படி அவரது படைப்புகளின் முடிச்சுகள் சிம்பிளாக இல்லாமல் இருந்தால் இந்த கச்சிதம் அவர் எழுத்தை உயர்த்தி இருக்கும். இன்றோ அவரது சிறந்த எழுத்துக்கள் நல்ல தச்சன் செய்த நாற்காலி போல இருக்கின்றன. நாற்காலி சவுகரியமாக இருக்கிறது, ஆனால் கலை அபூர்வமாகத்தான் தென்படுகிறது.

அவர் எழுதியவற்றில் நான் பரிந்துரைப்பது நான், கிருஷ்ணதேவராயன். சுலபமாகப் படிக்கக் கூடிய, தமிழுக்கு நல்ல சரித்திர நாவல்.

ஆனால் குமுதம் குழுவில் – இவர், எஸ்ஏபி, பாக்கியம் ராமசாமி என்ற ஜ.ரா. சுந்தரேசன், சுந்தர பாகவதர் என்ற புனிதன் – இவர்தான் சிறந்த எழுத்தாளர்.

அவரது தொடர்கதைகளில் – குறிப்பாக அறுபது, எழுபதுகளின் தொடர்கதைகளில் – ஆணும் பெண்ணும் காதல்வசப்படுவது ரசமாக இருக்கிறது. ரொம்ப சிம்பிள், அழகான நாயகி, ஸ்மார்ட்டான நாயகன், இருவரும் ஓரிரு முறை சந்தித்தால் காதல்தான். 🙂

சிறு வயதில் அவர் எழுதிய படகு வீடு, ப்ரொஃபசர் மித்ரா, ஒளிவதற்கு இடமில்லை, கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா, ராத்திரி வரும் என்று சில கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். அவர் மறைந்தபோது நினைவிருந்தது கையில்லாத பொம்மை (போலி டாக்டர் ஆளவந்தார் என்று ஒரு ஹீரோ) ஒன்றுதான். பிறவற்றை மீண்டும் படிக்கும்போதுதான் இதை எப்போதோ படித்திருக்கிறோமே என்று தோன்றியது. ஜெயமோகன் அவரது படகு வீடு, ப்ரொஃபசர் மித்ரா ஆகிய நாவல்களை நல்ல social romances பட்டியலில் சேர்க்கிறார்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் ப்ரொஃபசர் மித்ராவில் ஹிப்னாடிச வல்லுநர் மித்ராவுக்கு தன் மனைவி மீது சந்தேகம். அவளை ஹிப்னாடிசம் செய்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்று பார்க்கிறார். சரளமாகப் போகும் நாவல். ஆனால் என் கண்ணில் இதை விட நல்ல வணிக நாவல்களை ரா.கி.ர. எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் இன்னொரு நாவலான படகு வீட்டில் அத்தை மகளை விரும்பும், அவளால் விரும்பப்படும் வாலிபன் ராதாகிருஷ்ணன் திடீரென்று சாமியாராகிவிடுகிறான். ஏன் என்பதுதான் கதை. சரளமாகப் போகும் நாவல்.

சிறு வயதிலும் சரி, இப்போதும் சரி எனக்குப் பிடித்திருந்த கையில்லாத பொம்மையில் மூன்று முன்னாள் கைதிகள்; ஜெயிலில் அவர்கள் எதிரி அவர்கள் திரும்பி வந்தால் தீர்த்துவிட காத்திருக்கிறான். போலி டாக்டர் ஆளவந்தார் சாகக் கிடக்கும் ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்து பிழைக்க வைத்து மீண்டும் ஜெயிலுக்குப் போகிறான். சரளமாகப் போகும் நல்ல வணிக நாவல்.

அப்போதும் இப்போதும் பிடித்திருந்த இன்னொரு வணிக நாவல் உள்ளேன் அம்மா. இதை வந்த நேரத்திலோ, இல்லை பத்திரிகையை கிழித்து பைண்ட் செய்யப்பட புத்தகமாகவோ படித்திருக்கிறேன். ஆசிரியைகளை வம்புக்கு இழுத்து ‘கொடுமைப்படுத்தும்’ ஒரு பெண், அவளது புது ஆசிரியை, ஆசிரியையின் காதலன் என்று ஒரு முக்கோணம். இதுவும் சரளமாகப் போகிறது.

சிறு வயதில் பிடித்திருந்த இன்னொரு நாவல் ராத்திரி வரும். ரசவாதத்தை வைத்து ஒரு கதை. ரா.கி.ர.வின் வழக்கமான பலம் – சீராக முடிவை நோக்கிப் போவது; வழக்கமான பலவீனம் – கதை ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் கதை வந்த காலத்தில் நாயகியின் தலை தங்கமாக மாறும் இடம் பயங்கர உணர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கிறது. நான் அப்போது சின்னப் பையன் என்பதாலோ என்னவோ.

சிறு வயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த இன்னொரு நாவல் ஒளிவதற்கு இடமில்லை. எட்டு ஒன்பது வயதில் படித்த நாவல். வைரமுருகன், சீன வில்லன்கள், நாலு மாதத்தில் கொல்லும் மருந்து, ஆபாச புகைப்படங்கள் என்று போகும் நாவல். அந்த வயதில் மிக த்ரில்லிங் ஆக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும்தான். ஆனால் இன்று திரும்பிப் படித்துப் பார்த்தால் அறுபதுகளின் ஜெய்ஷங்கர் படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.

பின்னாளில் படித்தவற்றில் ராசி குறிப்பிட வேண்டிய நாவல். வழக்கம் போலவே சரளமாகச் செல்கிறது. ஒரே கோத்திரம் என்று ஒரு காதல் தடைப்படுகிறது. நாயகி கல்யாணம்தானே பண்ணிக் கொள்ளக் கூடாது, சேர்ந்து வாழ்கிறோம் என்று கிளம்புகிறாள். முடிவு என்று ஒன்றை எழுதாதது இந்தக் கதையை உயர்த்துகிறது.

நான் படித்த மற்றவற்றில் அழைப்பிதழ், சின்னக் கமலா, க்ரைம், கோஸ்ட், இன்னொருத்தி, கன்னாபின்னா கதைகள், குடும்பக் கதைகள், மூவிரண்டு ஏழு, ஒரு தற்கொலை நடக்கப் போகிறது, வாளின் முத்தம், வயசு 17 எல்லாமே படிக்கக் கூடிய, சுவாரசியமான, சரளமாகச் செல்லும் கதைகள். தொடர்கதையாக வந்தபோது இன்னும் சுவாரசியம் அதிகரித்திருக்கும். ஆனால் இலக்கியம், தரிசனம் என்ற பேச்சே கிடையாது. முடிச்சுகள் பல சமயம் பலவீனமாக இருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும் சம்பவங்களை கச்சிதமான நடையில், குமுதத்தில் நிரப்ப வேண்டிய பக்கங்களுக்குத் தேவையான வார்த்தைகளில் எழுதி இருக்கிறார். வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாமல், அவர்கள் மூளைக்கு ரொம்ப வேலை கொடுக்காமல் குமுதத்தின் பக்கங்களை நிரப்புங்கள் என்று எஸ்ஏபி அவரைப் பணித்திருக்கிறார், கொடுக்கப்பட்ட வேலையை இவர் திறமையாக செய்திருக்கிறார், அவ்வளவுதான்.

ஆனால் அவர் எழுதியதில் கணிசமானவை வணிக எழுத்து என்ற அளவில் (கூட) வெற்றி பெறவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன். திக் திக் கதைகள், காதல் கதைகள் என்ற தொகுப்புகளில் உள்ள சிறுகதைகள் தண்டம். தர்மங்கள் சிரிக்கின்றன, ஹேமா ஹேமா ஹேமா, மறுபடியும் தேவகி, முதல் மொட்டு எல்லாம் உப்புசப்பில்லாத கதைகள்.

சில படைப்புகளைப் பற்றி ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்:

அழைப்பிதழ்: ஒரு ஏப்ரல் ஃபூல் ஜோக்கில் ஒரு வாலிபன் தற்கொலை செய்துகொள்கிறான். அது தற்கொலையா கொலையா என்று துப்பறியும் கதை. சரளமாகப் போகும் இன்னொரு கதை.

சின்னக் கமலா: சிற்பக் கலைஞர் பிரபு கலை ஊக்கம் இல்லாது சோர்ந்து கிடக்கிறார். அவருக்கு திடீரென்று அப்பாத்துரை என்ற மறைந்த தொழிலதிபருக்கு ஒரு சிலை செய்யும் வாய்ப்பு வருகிறது. அப்பாத்துரைக்கு சிலை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய கும்பலே ரகசியமாக வேலை செய்கிறது. கும்பலின் பிரதிநிதியாக இருப்பவள்தான் சின்னக் கமலா. குழந்தை எம்.எஸ்ஸின் சித்தரிப்பு ரசிக்கும்படி இருந்தது.

க்ரைம்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகள் போலீஸ் அதிகாரி தான் துப்பறிந்த கேஸ்களை புத்தகமாகக் கொண்டு வரக்கூடாது என்று மிரட்டப்படுகிறாள்.

கோஸ்ட்: பேய் பிசாசுக் கதைகள். டைம் பாஸ்.

இன்னொருத்தி: உடல் உறவில் விருப்பம் இல்லாத மனைவி மனம் மாறுகிறாள். சரளமாகப் போகும் இன்னொரு கதை. மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்த காலத்தில் எழுதப்பட்டது என்று நினைவு.

கன்னாபின்னா கதைகள் சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் கடிதங்களின் தொகுப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நல்ல பொழுதுபோக்குச் சிறுகதைகள்.

குடும்பக் கதைகள் சிறுகதைத் தொகுப்பு. குறிப்பிடும்படி எதுவும் இல்லை என்றாலும் வாரப் பத்திரிகை சிறுகதைகளின் நல்ல பிரதிநிதி.

மூவிரண்டு ஏழு புத்தகத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கின ஹோட்டல் முதலாளி தன் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பவே அப்படி செய்தார், தன் அப்பாவுக்கு கிடைத்த தூக்குத்தண்டனை அந்த முதலாளிக்கு கிடைத்திருக்க வேண்டியது என்பதை உணரும் ஹோட்டல் மானேஜர் சேது. இன்னுமொரு சரளமான, ஆனால் பலமில்லாத கதை.

ஒரே ஒரு வழி நாவலில் அண்ணன் காதல் தோல்வியால் பைத்தியம் ஆகிவிட, தம்பி அந்தப் பெண்ணை பழி வாங்குகிறான். சுமாரான தொடர்கதை.

ஒரு தற்கொலை நடக்கப் போகிறது நாவலில் ஒரு ஜோசியர் தற்கொலை நடக்கப் போகிறது என்று ஆரூடம் சொல்கிறார். நடக்கிறது. அது கொலை என்று நாயகன் கண்டுபிடிக்கிறான்.

வாளின் முத்தம் சரித்திர நாவல். அக்பர்தான் நாயகன். இன்னுமொரு சரளமான கதை.

வயசு 17 நாவலில் குற்றவாளி மூர்த்தி. அவனை நிரபராதி என்று நம்பி அவன் விடுதலைக்குப் போராடும் அவன் தங்கை மாயா. மாயா மீது உள்ள ஈர்ப்பில் மனைவி கல்யாணியைப் புறக்கணிக்கும் வக்கீல் பத்மநாபன். கல்யாணிக்கும் பத்மநாபனுக்கும் நெருங்கிய நண்பனான அருண். கல்யாணிக்கும் அருணுக்கும் உள்ள நட்பின் சித்திரம் இந்த நாவலில் குறிப்பிட வேண்டிய அம்சம்.

அவரது மொழிபெயர்ப்புகள் நிறைய பேசப்பட்டன. Papillon, Rage of Angels மாதிரி சில. ஒரிஜினல்களே சுமார்தான்.

அவரால் சிறப்பாக எழுதி இருக்க முடியும், இன்னும் நல்ல வணிக எழுத்தாளராக வந்திருக்க முடியும், குமுதத்தின் பணிகள் அவரை முடக்கிவிட்டன, குமுதம் அவருக்குப் பொன் விலங்குதான் என்று தோன்றியது.

இலக்கியம் படைக்க வேண்டும் என்று ரா.கி.ர. முயலவில்லை. அவர் எழுதியது எதுவும் இலக்கியமும் இல்லை. ஆனால் குமுதத்தை மாபெரும் வெற்றி அடைய வைத்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. தமிழின் இரண்டாம் வரிசை வணிக எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஒரு தலைமுறைக்கு முந்தைய குமுதம் வாசகர்களில் நினைவில் அவர் எப்போதும் இருப்பார்.

அவருடைய ஒரு சிறுகதை – 1947-இல் எழுதியது, துரையிடம் லீவ் கிடைக்காது என்றெல்லாம் பிரச்சினை – இங்கே. அவருடைய எழுத்து முறைக்கு ஒரு சாம்பிள் கீழே. இன்னும் படிக்க விரும்புபவர்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.

சந்தனக் கடத்தல் வீரப்பர்

ஆளுக்கு ஆள் சந்தனக் கடத்தல் வீரப்பரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், நான் கிட்டத்தட்ட அவரை சந்தித்திருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். (ஒரு படா கெள்ளைக்காரனுக்கு, மகா கடத்தல்காரனுக்கு, பயங்கரக் கொலைகாரனுக்கு ‘அவர்’ என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தமிழ் டிவிக்களும், தமிழ் தினசரிகளும் முதலில் இரண்டு வரிகள் ‘அவன்’ என்று குறிப்பிட்டு விட்டு, உடனே மாபெரும் தவறு செய்து விட்ட மாதிரி ‘அவர்’ என்று மாற்றிக் கொள்கின்றன. (தூர்தர்ஷனில் மட்டும் ‘அவன்’ என்றே கடைசி வரை சொல்லிவருவதாக ஒரு நண்பர் சொன்னார்.)

எனக்கு இந்த மாதிரியான ‘அவன்’ ‘அவர்’ குழப்பமெல்லாம் கிடையாது. கன்னட நடிகர் ராஜ்குமார் நல்லபடி வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்ட பின், வீரப்பரை அவர் என்றே இங்கு குறிப்பிடுகிறேன்.

முன்னொரு காலத்தில் நான், புனிதன், ஜ.ரா. சுந்தரேசன் மூவரும் சேர்ந்து சினிமா பார்க்கப் போவது வழக்கம். குமுதத்தில் விமர்சனம் எழுதுவதற்காக. அனேகமாக கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களாகத்தான் இருக்கும். ஒரு நாள் நான் நண்பர்களிடம் “கிராமத்து நடுவில் சளசளவென்று சிற்றோடை ஓடுகிறது. இளம் பெண்கள் இடுப்பில் குடத்தைச் சுமந்துகொண்டு அங்கே போய் நீர் மொண்டு கொண்டு ஒய்யாரமாக வருகிறார்கள். ஆகாயத்தில் ‘S’ எழுதுகிற மாதிரி கையை வளைத்துக் கொண்டு ஒய்யார நடைபோடுகிறார்கள். இது போன்ற கிராமம் நிஜமாகவே இருக்கிறதா? இருந்தால் நேரில் பார்க்க வேண்டும்” என்றேன்.

அடுத்த ஒரு வாரத்தில் பல சினிமா நிருபர்களை நாங்கள் பேட்டி கண்டோம். சத்தியமங்கலத்துக்கு அருகே (கவனியுங்கள்: சத்தியமங்கலம்!) ஷுட்டிங்குகள் நடைபெறுகின்றன என்றும் அங்கே உண்மையிலேயே இது போன்ற கிராமங்கள் இருக்கின்றன என்றும் பேட்டியில் தெரிய வந்தது. சத்தியமங்கலத்துக்கு எப்படிப் போவது என்று கேட்டோம். ஈரோடுக்கு ரயிலில் போனால் அங்கிருந்து பஸ்ஸில் போகலாம் என்றார்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை இரவு ரயிலேறினோம். சனி, ஞாயிறு தங்கிவிட்டுத் திங்கள் காலை திரும்பி விடுவதாகத் திட்டம். (நாங்கள் மூவரும் இப்படித்தான் பல ஊர்களுக்கும் போய் வந்திருக்கிறோம். திங்கள் காலையில் கொள்ளை வேலை காத்திருக்கும். அரை நாள் தாமதமானால் போச் போச்!)

ஈரோடில் சுந்தரேசனுடைய உறவுக்காரர் ஒருவர் இருந்தார். சிறிய கைத்தறி மில் நடத்தி வந்தார். அவர் வீட்டில் குளித்து சாப்பிட்டுவிட்டு சத்தியமங்கலம் பஸ்ஸில் புறப்பட்டோம். தமிழ் நாட்டில் எந்த ஊருக்கும் முன்னறிவிப்பு இல்லாமல் போக எங்களுக்கு ஒரு வசதி இருந்தது. அதாவது மூலை முடுக்கெல்லாம் குமுதம் விற்பனையாளர்கள் இருப்பதால் அவர்களைப் பிடித்தால் அந்த ஊரில் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுப்பார்கள். (செலவுகள் எங்களுடையதுதான்.)

அந்த தைரியத்தில்தான் சத்தியமங்கலம் போனோம். விற்பனையாளரின் கடையை விசாரித்து அறிந்து அங்கே சென்றோம். அந்தோ! அவர் ஈரோடுக்குப் போயிருப்பதாகவும் வருவதற்கு இரண்டு மூன்று நாட்களாகும் என்றும் கடையிலிருந்த பையன் சொன்னான்.

ஆளுக்கொரு ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டு அந்தக் கடைத் தெருவில் அசட்டு விழி விழித்துக்கொண்டு நின்றோம். “மெட்ராசிலிருந்து வந்திருக்கிறோம். சினிமா ஷூட்டிங் நடக்குமாமே, எங்கே?” என்று யாரையும் கேட்கவும் கூச்சமாக இருந்தது. தோல்வி முகத்துடன் ஈரோடு திரும்பத் தீர்மானித்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தபோது, “ஸார்! இங்கே எங்கே வந்தீங்க?” என்ற குரல் கேட்டது.

“அட! நீயா?” என்றார் சுந்தரேசன். (எப்போதும் அவருக்கு அந்த ராசி உண்டு. ஸஹாரா பாலைவனத்திற்குப் போனால் கூட, ஒட்டகத்தின் பின்னாலிருந்து ஒரு ஆள் எட்டிப் பார்த்து “ஸார்! நீங்களா!” என்று கேட்பான்!)

கூப்பிட்டவர் இளைஞர். சென்னையில் ராஜேந்திரன் என்ற டாக்டரின் தம்பி. அந்த ராஜேந்திரன் ஆஸ்திரேலியாவுக்குக் போய்க் கொட்டி முழக்கிக் கொண்டிருந்தார். (இப்போதும் கொட்டி முழக்கிக் கொண்டுதான் இருப்பார்!) ராஜேந்திரனை நானும், புனிதனும் பார்த்திருக்கிறோம். அவர் தம்பியைப் பார்த்ததில்லை. சுந்தரேசன் பார்த்திருக்கிறார், பழகியிருக்கிறார்.

கொஞ்சம் கூச்சத்துடன் நாங்கள் ஷூட்டிங் பார்க்க வந்த சிறுபிள்ளைத்தனத்தைச் சொன்னோம், “அதற்கு நீங்கள் கோபிசெட்டிப் பாளையம் போயிருக்க வேண்டும். பரவாயில்லை என்னோடு வாருங்கள். கார் இருக்கிறது. என் வீட்டுக்குப் போய்விட்டு மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்று அழைத்தார். இந்த மட்டில் துணை கிடைத்ததே என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லியபடி காரில் ஏறினோம். “எங்கே உங்கள் வீடு?” என்று புனிதன் கேட்டார்.

“அந்தியூர்” என்றார் அவர் (மறுபடியும் கவனியுங்கள்: அந்தியூர்!) “ஒரு வேலையாக இங்கே வந்தேன். ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம் நல்ல வேளையாக உங்களைப் பார்த்தேன்” என்றார்.

அந்தியூர் அழகான ஊர். மரங்கள் நிறைந்த ஒரு சாலையில் அவருடைய பெரிய வீடு. வீட்டைவிடப் பெரிய மனது டாக்டர் ராஜேந்திரனின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும். அருமையான சாப்பாடு போட்டார்கள். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கிரிக்கெட் மேட்சை டி.வி.யில் பார்த்தேன்.

“வாருங்கள், பன்னாரி அம்மன் கோவிலுக்குப் போகலாம்” என்று காரில் எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் ராஜேந்திரனின் தம்பி. (மறுபடியும் கவனியுங்கள்: பன்னாரி!)

பிள்ளையார் கோவில் மாதிரி சின்னக் கோவில். (அந்த நாளில்). அம்மனை தரிசித்து, கோவிலை வலம் வந்தோம். “அடிக்கடி ஷூட்டிங் நடக்கிற இடம் ஒன்று அருகில் இருக்கிறது. பார்க்கலாம் வாருங்கள்” என்றார் நண்பர்.

போனோம், பார்க்கவில்லை. ஏனெனில் அங்கே அன்று எந்த ஷூட்டிங்கும் நடைபெறக் காணோம். நீளமாய்ப் பாலம் மாதிரி குறுக்கே ஒன்று தெரிந்தது. ஆற்று நீர் அதன் மீதாக மெதுவே ஓடி வழிந்து கொண்டிருந்தது. அங்கே பல டூயட் காட்சிகள் எடுத்திருப்பதாக நண்பர் சொன்னார்.

அவருடன் திரும்பி ஈரோடுக்கு பஸ் ஏறினோம். அது என்ன ரூட்டோ தெரியாது. நல்ல தூக்கம். வழியில் கண்டக்டர், “சார்! இதுதான் பாக்யராஜின் ஊர். வெள்ளங்கோவில். அதோ அப்படிப் போனால் அவருடைய வீடு” என்றார்.

ஏதோ சிவன் கோவிலைப் பற்றிச் சொல்கிறார் என்று அரைத் தூக்கத்தில் எண்ணி ஹர ஹர மகா தேவா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.

(“வீரப்பனைப் பற்றி ஸாரி, வீரப்பரைப் பற்றி இந்தக் கட்டுரையில் ஒன்றும் காணோமே?!” என்று கேட்காதீர்கள். நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, ‘கிட்டத்தட்ட சந்தித்தேன்’ என்று? நான் அன்று சுற்றிய வட்டாரங்களில்தான் வீரப்பர் ஒரு காலத்தில் சுற்றியிருக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
எஸ்ஏபி
பாக்கியம் ராமசாமி என்ற ஜ.ரா. சுந்தரேசன்
சுந்தர பாகவதர் என்ற புனிதன்
ஹிந்து குறிப்பு
சுஜாதா தேசிகனின் அஞ்சலி
ரா.கி.ர.வுடன் ஒரு சந்திப்பு

விடுதலைப் போராட்ட நாவல் – கே.ஏ. அப்பாசின் இன்குலாப்

இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 70 வருஷம். விடுதலைப் போராட்ட காலத்தில் லட்சியவாதமும், தியாக மனப்பான்மையும் இன்றை விட பல மடங்கு அதிகமாக இருந்தது (என்றுதான் நினைக்கிறேன்). இந்த பிம்பம் எப்படி உருவானது, ஆரம்பப் புள்ளி எது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நிச்சயமாக பாடப் புத்தகங்கள் இப்படி ஒரு நினைப்பை ஏற்படுத்தி இருக்க முடியாது! நம்மூர் பள்ளிப் புத்தகங்களின் தரம் அப்படி.

எனக்கு நினைவு தெரிந்து அப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிய முதல் புத்தகம்
கே.ஏ. அப்பாஸ் எழுதிய இன்குலாப்-தான். (1958) ரொம்ப சின்ன வயதில் – எட்டு ஒன்பது வயது இருக்கலாம் – படித்திருக்கிறேன். இன்றும் மனதில் பதிந்திருப்பது உப்பு சத்தியாக்கிரக காட்சிகள்தான். சத்தியாக்கிரகிகள் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு அமெரிக்க நிருபர் – பேர் மில்லர் என்று நினைக்கிறேன் – மற்றும் அவருக்கு உதவியாக நாயகன் ஊர்வலத்தை cover செய்கிறார்கள். போலீஸ் தடியடி ஆரம்பிக்கிறது. சத்தியாக்கிரகிகள் ஒருவர் பின் ஒருவராக போய் அடி வாங்கி விழுகிறார்கள். ஒருவர் கூட விலகவில்லை, திருப்பி கையோங்கவில்லை, ஓடவில்லை, ஒளியவில்லை. அமெரிக்க நிருபரே உணர்ச்சிவசப்படுகிறார். திருப்பி அடிப்பதை விட கொள்கைக்காக அடி வாங்க இன்னும் தைரியம் வேண்டும், இன்னும் வீரனாக இருக்க வேண்டும், சத்தியாகிரகம் என்பது எத்தனை புதுமையான கருத்தாக்கம், அதன் வலிமை என்ன என்று புரிந்த நாள் அது.

நாவல் ஒரு bildungsroman – அதாவது ஒரு இளைஞனின் வளர்ச்சியை விவரிக்கும் நாவல். அப்பாசின் வாழ்க்கையை அங்கங்கே பார்க்கலாம். முஸ்லிம் வாலிபன், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் படிக்கிறான், பத்திரிகையாளனாகிறான்… கதையின் முடிச்சு என்பது அவன் ஹிந்துவாகப் பிறந்தவன், முஸ்லிம் குடும்பத்தால் வளர்க்கப்படுகிறான், உண்மை தெரிந்ததும் என்ன செய்கிறான் என்று போகிறது.

கே.ஏ. அப்பாசை யாருக்கும் பெரிதாக நினைவிருக்காது. அப்படியே நினைவிருந்தாலும் அவரை ஒரு சினிமாக்காரராகத்தான் நினைவிருக்கும். அமிதாப் பச்சன் நடித்த முதல் படம் – சாத் ஹிந்துஸ்தானி (1969) – அவர் எழுதி இயக்கியதுதான். பல புகழ் பெற்ற ராஜ் கபூர் படங்களுக்கு – ஆவாரா, ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர், பாபி – ஆகியவற்றுக்கு அவர்தான் திரைக்கதை எழுதினார். முந்தைய இரண்டுக்கும் அவர் வசனம்தான். எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்றான ஜாக்தே ரஹோ (1957) அவரது திரைக்கதைதான். அவர் திரைக்கதை எழுதிய சில ‘முற்போக்கு’, சோஷலிச சாய்வு உள்ள திரைப்படங்கள் சர்வதேச விருதுகள் பெற்றிருக்கின்றன. நீச நகர் (1946), தர்தி கே லால் (1946), டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி (1946), தோ பூந்த் பானி (1971), ஆகியவற்றைப் பற்றி தீவிர சினிமா ரசிகர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தக் காலத்து லட்சியவாதக் கனவுகளை சோஷலிசமாக வெளிப்படுத்திய திரைக்கதைகள்.

ஆனால் எனக்கு அப்பாஸ் அறிமுகமானது எழுத்தாளராகத்தான். என் அம்மா சொன்னதால்தான் படித்தேன். நான் ஓரளவு பெரியவனான பிறகு அந்தப் புத்தகத்தை – குறிப்பாக தமிழ் மொழிபெயர்ப்பைத் – தேட ஆரம்பித்தேன், இன்னும் கிடைக்கவில்லை. 😦

பழைய ஞாபகம்தான், ஆனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுதந்திரப் போராட்ட நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: கே.ஏ. அப்பாஸுக்கு ஒரு தளம்

கால வெள்ளம் – இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவல்

(திருத்தங்களுடன் மீள்பதிப்பு)

இந்திரா பார்த்தசாரதி என்னை அவ்வளவாக கவர்ந்ததில்லை. அவர் புத்தகங்களில் அறிவுஜீவிகள் பேசிக் கொண்டே இருப்பார்கள். புத்திசாலித்தனத்தை வலிந்து புகுத்துகிறார், இதோ பார் என் கதாபாத்திரங்கள் எத்தனை அறிவிஜீவித்தனமாக, உண்மையைப் பேசுகிறார்கள், எதிர்கொள்கிறார்கள் என்று செயற்கையாகக் காட்டுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரது புகழ் பெற்ற அங்கத நடை பொதுவாக எனக்கு ஒரு புன்முறுவலை கூட வரவழைப்பதில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு, தன் மனைவியின் தோழியின் பிசினஸ் செய்யும் கணவனோடு ஒரு மாலை நேர சம்பாஷணையாக வரும் கதைக்கு – பெயர் மறந்துவிட்டது, ஒரு இனிய மாலைப் பொழுது – விழுந்து புரண்டு சிரித்திருக்கிறேன்.)

ஆனால் அவர் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். கருதப்படுகிறார் என்ன, என் கண்ணிலும் முக்கியமான எழுத்தாளர்தான். ஆனால் என் கண்ணில் அவரது முக்கியத்துவம் என்பது அவரது தாக்கம்தான், அவரது பாணிதான். அறிவுஜீவி கதைகள் என்ற sub-genre அவரால்தான் உருவாக்கப்பட்டது என்றே சொல்லுவேன். அவரது பாணியில் அவரை விஞ்சும் பல படைப்புகளை அவரது சீடர்கள் – குறிப்பாக ஆதவன் – எழுதிவிட்டார்கள். அவர் போட்ட கோட்டில்தான் அவர்கள் ரோடு போட்டிருக்கிறார்கள்.

குருதிப்புனல் சாக்திய அகாடமி விருது பெற்றது, அவரும் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்.

அவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவரது முதல் நாவலான காலவெள்ளம்தான். பிற்கால நாவல்களில் அவர் படைத்திருக்கும் பாத்திரங்கள் பொதுவாக தமிழனுக்கு கொஞ்சம் அன்னியமானவை போலவே இருக்கும். இந்த நாவலில் அப்படி கிடையாது. ஆனால் கதையோட்டத்தில், கதைப் பின்னலில் அனேக முதல் நாவல்களைப் போலவே சில rough edges இருக்கின்றன.

1920-40 வாக்கில் நடக்கும் கதை. ஸ்ரீரங்கத்து பணக்கார ஐயங்கார் பெண் குழந்தை வேண்டுமென்று ஏழைப் பெண்ணை இரண்டாவது கல்யாணம் செய்துகொள்கிறார். இரண்டு மனைவிக்கும் சேர்த்து நான்கு குழந்தைகள். முதல் மனைவி இறந்துவிடுகிறாள். இரண்டாவது மனைவி பிரிந்து போய்விடுகிறாள். மூத்த பையன் அப்பாவின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். இரண்டாவது பையன் அவ்வளவு உருப்படவில்லை. மூன்றாவது பையன் நன்றாக படிக்கிறான், நாற்பதுகளின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். கடைசி பெண் ஏதோ தகராறில் வாழாவெட்டியாக இருக்கிறாள். நன்கு படிக்கும் பையன் தலையெடுத்து தங்கையை கணவனோடு சேர்த்து வைக்கிறான், தன் அம்மாவை சந்திக்கிறான் என்று கதை போகிறது. அவருக்கு கதையை எப்படி முடிப்பது என்று குழப்பமோ என்னவோ, கதை திடீரென்று முடிந்துவிடுகிறது.

பாத்திரங்கள் உண்மையாகத் தோன்றுகின்றன. நல்ல craft தெரிகிறது. மற்ற பல புத்தகங்களில் இருப்பது போல பேசிக்கொண்டே இருக்கவில்லை!

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

குவிகம் சுந்தரராஜன்

இந்தத் தளத்தைப் படிப்பவர்களுக்கு கௌரி கிருபானந்தன் பரிச்சயமான பெயர். மூச்சு விடாமல் தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் மாற்றி மாற்றி மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்புக்காக சாஹித்ய அகடமி விருது பெற்றவர்.

கௌரியின் மூலமாகத்தான் கிருபானந்தன் பழக்கமானார். கிருபானந்தன் மூலமாகத்தான் இப்போது சுந்தரராஜனும் அறிமுகம்.

சுந்தரராஜனும் கிருபானனந்தனும் இணைந்து குவிகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். சுந்தரராஜன் முன்னணியிலும் கிருபானந்தன் பக்கபலமாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை. பல வருஷங்களாக மாதாமாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்துகிறார்கள். அழகியசிங்கர், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி மாதிரி பெரிய தலைகளை எல்லாம் அழைத்து விடாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நன்றாக ஒத்துப் போகக் கூடிய ராஜன், சுந்தரேஷ், பாலாஜி, பக்ஸ், முகின், விசு, எங்களுக்கே மாதம் ஒரு முறை சந்தித்து புத்தகங்களைப் பற்றிப் பேசுவது என்பது பெரும்பாடாக இருக்கிறது. இவர் இதை எப்படி விடாமல் நடத்துகிறார் என்பது பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஒரு இணையப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறார். எல்லாவற்றையும் விட இன்னும் செய்ய வேண்டும், இலக்கிய வாசிப்பைப் பரவலாக்க வேண்டும், சுலபமாக்க வேண்டும் என்ற கனவுகளில்தான் இன்னும் இருக்கிறார். அவரது உற்சாகம் பேசும் நம்மிடமும் தொற்றிக் கொள்கிறது!

க.நா.சு.வின் ஒரு புத்தகம் உண்டு – இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்று நினைக்கிறேன். சாஹித்ய அகடமி விருதெல்லாம் கூட வென்றது. (விருதுக்குத் தகுதி இல்லாத புத்தகம் என்பது வேறு விஷயம்). அதில் அவர் ஊருக்கு நாலு பேர் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் போதும், இலக்கியம் தழைக்கும் என்று சொல்லி இருப்பார். சுந்தரராஜனைப் பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

முதல் அப்புசாமி கதை

ஃபேஸ்புக்கில் பார்த்தது. வசதிக்காக கதையை கீழே கொடுத்திருக்கிறேன். பாக்கியம் ராமசாமிக்கு நன்றி!

1963’ம் ஆண்டு குமுதத்தில் முதல் அப்புசாமி கதை வெளியாயிற்று ஓவியர் ஜெயராஜின் படங்களுடன்.
இன்று 54 வருடங்களுக்குப் பிறகு அதே அப்புசாமி கதை மூன்று முகநூல் நண்பர்களுக்கு (ராஜசேகரன் வேதிஹா, கணேஷ் பாலா, சென்னை இந்திரா நகர் குப்புசாமி) நன்றி தெரிவிக்க இங்கே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் சீதாப்பாட்டி தலை காட்டியபோது அவள் பெயர் சீதாலட்சுமி. பாத்திரங்களும், சித்திரங்களும், சம்பவங்களும் காலத்துக்கேற்ப மாறி வருகின்றன. (ஓவிய நண்பர் ஜெயராஜுக்கு ஸ்பெஷல் நன்றி. என் கூடவே வரும் நிழல் அவர்.)

<hr /?

மஞ்சள் பிசாசே! கொஞ்சம் நில்!

பாக்கியம் ராமசாமி

அப்புசாமி சுற்றுமுற்றும் ஒரு தரம் பார்த்தார். மூன்று தரம் பார்த்தார். மனைவி சீதாலட்சுமியின் குறட்டை ஒலி உள்ளிருந்து வந்தது. ‘நல்ல காலம்’ என்று நினைத்துக்கொண்டு பொடிக் கடையை நோக்கி விரைந்தார். பொடிக் கடைக் கதவுகள், ஐயஹோ! அடைத்துக் கூடக்… இல்லை… இல்லை…
அப்புசாமிக்கு உயிர் வந்தது. சொர்க்கத்தின் கதவுகள் அப்போதுதான் மெதுவே மெதுவே அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதோ, கடைசிப் பலகையைச் சிப்பந்தி போடப் போகிறான். அனார்கலியின் சமாதியை அடைத்த கடைசிச் செங்கல்லைத் தடுக்க, அக்பரின் மகன் ஓடிய ஓட்டத்தைப் போலப் பத்து மடங்கு வேகத்துடன் அப்புசாமி ஓடி, “பொடி, பொடி,” என்றார். மூக்குப் பொடிக் கடைக் கடையின் கடைசிப் பலகை விழுமுன் கடைக்குள் தன்னை ஆஜர் செய்து கொண்டு விட்டார்.

“பெரிய டப்பாப் பொடிங்களா? இதோ தர்ரேங்க,” என்று மீண்டும் கடை திறந்து கடைக்காரர் ஒரு டப்பா தந்தார். ‘லூஸ்’ பொடி கொஞ்சம் அங்கேயிருந்த ஜாடியிலிருந்து எடுத்துத் தற்காலிக சாந்தி செய்து கொண்டு சஞ்சீவி பர்வதம் கிடைத்த மகிழ்ச்சியுடன், டப்பாவும் கையுமாக வீட்டுக்குள் நழைந்தார் அப்புசாமி.

அம்மாடி! இன்னும் சீதாலட்சுமி எழுந்திருக்கவில்லை. ஆனால் லேசாகப் புரண்டு படுத்தாள். அப்புசாமி, ஜிகினாக் காகிதம் சுற்றிய ‘இனிய சுகந்த’ இத்யாதி பொடியை அலமாரியில் வைத்து அழகு பார்த்தார். கையில் எடுத்து எடுத்துக் குழந்தையைக் கொஞ்சுவது போல் பார்த்தார். தூரத்தில் வைத்து ரசித்தார். டப்பாவைப் பிரிக்காமலேயே உச்சி முகர்ந்து மகிழ்ந்தார்.

ஒரு வாய் வெற்றிலைச் சீவல் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து மேஜை மீதிருநத பொடி டப்பாவைப் பார்த்து மகிழ்ந்தார். அப்புசாமிக்குப் பொடிதான் உயிர் என்றாலும் வெற்றிலைச் செல்லமும் எப்போதும் கையிலிருக்கும். கால் மணிக்கொரு தரம் வெற்றிலை போடுவார். ஐந்து நிமிடத்துக்கொரு தரம் பொடி போடுவார்.

மூக்கு தன் அடுத்த தவணையை ஞாபகப்படுத்தியது. அப்புசாமி ஜிகினாக் காகிதத்தை மெதுவே உரித்தார். டப்பாவின் இறுகலான மூடியைத் திறந்தார். ஒரு சிட்டிகை எடுத்து மூக்கருகே கொண்டு போனார். மிஸஸ் அப்புசாமியின் கிழக்கரம் அவர் கையைத் தடுத்தாட்கொண்டு பொடியைத் தட்டி விட்டது.

“ஏ, மஞ்சள் பிசாசு! சும்மா இருக்க மாட்டாய்?” என்று அப்புசாமி மனைவியைக் கோபித்துக் கொண்டார்.

ஸீஸன் மாம்பழம்போல ‘மஞ்ச மஞ்சேர்’ என்று திருமதி அப்புசாமி விளங்கினார். மிஸஸ் அப்புசாமியை எல்லோரும் சுமங்கலிப் பாட்டி என்று கூப்பிடுவார்கள். இயற்பெயர் சீதாலட்சுமி. 72 வயதாகியும் கணவனை இழக்காமல் சுமங்கலியாக இருக்கிறோமே என்பதில் சீதாலட்சுமிப் பாட்டிக்கு வெகு பெருமை.

தினமும் குளிக்கும்போது அரை வீசை மஞ்சள் கிழங்கைத் தேய்த்துத் தேய்த்துத் தீர்த்துவிடுவாள். அப்புசாமிக்குச் சந்தேகம். ‘ஒருகால் குளிக்கும் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு மஞ்சள் கிழங்கைத் தின்கிறாளோ?’ என்று.

அது போதாதென்று டிரஸ்ஸிங் மேஜைமுன் ஒரு டாய்லெட் பவுடர் டப்பாவில் மஞ்சள் தூள் இருக்கும். சீதா லட்சுமிப் பாட்டி முகப் பவுடருக்குப் பதில் மஞ்சள் பவுடரைத்தான் உபயோகிப்பாள்.

இப்படியாக எல்லா வகையிலும் தன் சுமங்கல்யத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வாள். ஆனால் சுமங்கலனான அப்புசாமி, “உனக்கென்ன பெருமை வாழ்கிறது? நான் சாகாமல் இருக்கிறேன். அதற்காக நான் அல்லவோ பொருமைப்பட வேண்டும்?” என்று கொக்கரிப்பார்.

சீதாப்பாட்டி அப்புசாமியின் பதுக்கப்பட்ட பொடி மட்டையைப் பறித்துக்கொண்டு, “உங்கள் மனத்தில் என்ன எண்ணம்? பொடி போடக் கூடாது, கூடாது என்று ஹௌ மெனி டைம்ஸ் உங்களுக்கு ‘வார்ன்’ செய்வது?” என்றாள்.

பாட்டிக்குத் தங்குதடையின்றி இங்கிலீஷ் வராவிட்டாலும், இங்குமங்குமாக நல்ல சங்கீதத்தில் அபஸ்வரம் தலை காட்டுகிற மாதிரி ஆங்கில வார்த்தைகள் வந்து விழும்.

‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’டில் வந்த கட்டுரை ஒன்றைப் பாட்டி சில காலத்துக்கு முன் படித்தாலும் படித்தாள், அப்புசாமி பாடு திண்டாட்டமாகிவிட்டது.

‘புகையிலையை எந்த விதத்தில் உபயோகித்தாலும் அது இருதயத்தைப் பலவீனப்படுத்துகிறது’ என்று அதில் ஒரு கட்டுரை கூறியது.

“நீ பொடி போட்டால் உனக்கு அதன் அருமை தெரியும்!” என்று முணுமுணுத்தார் அப்புசாமி. “நான்தான் உனக்குத் தாலி கட்டிவிட்டு அவதிப்படுகிறேன். என் மூக்குமா உனக்கு வாழ்க்கைப்பட்டது?”

சீதாப்பாட்டி பொடி டப்பாவை மாடியிலிருந்தவாறே, எதிரே இருந்த மைதானத்தை நோக்கி வீசிப் போட்டாள்.

அப்புசாமி அடுத்த நிமிடம் மாடியிலிருந்து தடதடவென்று இறங்கினார்.

வழி மறித்த சீதாப்பாட்டி, “எங்கே? போகிறீர்கள்? மைதானத்துக்கு ஒடுகிறீர்களோ, நான் வீசிப் போட்டதைத் தூக்கி வர? மண்ணில் கொட்டிப் போயிருக்குமே எல்லாம்!” என்றாள்.

“பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறும்! பொடியுடன் சேர்ந்த மண்ணும் மணம் பெறும்! அந்த மைதானத்து மண்ணையாவது ஒரு சிட்டிகை போட்டுக் கொள்ளாவிட்டால் இரண்டு நிமிடத்தில் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்!” அப்புசாமி மைதானத்து மண்ணைத் தழுவ ஓடினார்.

சீதாப்பாட்டி, “ஆ, ஐயோ, கிணறு வெட்டப் பூதம் கிளம்பியதே,. மண்ணை மூக்கில் போட்டுக் கொண்டால் உயிர் எதற்காகும்? அசல் பொடியை விட ஒருகால் அதுவே நன்றாயிருந்து, மண்ணையே போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டால், என்ன செய்வேன்?” என்று பின்னாலேயே ஓடினாள்.

மைதானத்தை அடைந்த அப்புசாமியிடம் பின்தொடர்ந்து வந்த சீதாப்பாட்டி, “அதோ! அதோ! அந்த மாட்டைப் பாருங்கள்! நான் போட்ட பொடி டப்பாவை, என்னவோ ஏதோ என்று ஆசைப்பட்டு விழுங்கிவிட்டு அவதிப்படுகிறது பாருங்கள்!” என்று காட்டினாள்.

சிறிது தூரத்தில் ஒரு தெருப் பொறுக்கி மாடு “அக்சூ! அக்சூ!” என்று துள்ளித் துள்ளி சுமார் இருபது தும்மல் போட்டு விட்டு, மடேல் என்று தரையில் விழுந்துவிட்டது.

“பார்த்தீர்களா இந்தக் கோரக் காட்சியை? இனி மேலாவது திருந்துங்கள்,” என்று அப்புசாமியின் கரதலம் பற்றிக் கரகரவென்று வீட்டுக்கு இழுத்து வந்தாள்.

“கண்டவன் எழுதியதை நம்பி எனக்கு நீ தடை போடலாமா? உன் அறியாமையை ஆதாரபூர்வமாக அகற்றுவதற்கு இதோ இப்போதே கிளம்புகிறேன்?”

“என் இக்னரன்ஸா?”

“சந்தேகமென்ன? உனக்குத் தெரியும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாகரீகமிருப்பதுபோல ஒவ்வொரு சீதோஷ்ண ஸ்திதிக்குத் தகுந்த மாதிரி ஆரோக்யமும் உடல்நிலைகளும் மாறுபடுகிறது என்று. ஆரோக்கியத்துக்குத் தகுந்தபடி டாக்டர் யோசனை வெளியிடுகிறார்கள். ஒரு நோயாளிக்கு முட்டை கூடாது என்பார்கள்; இன்னொருத்தருக்கு முட்டை நிறையச் சாப்பிட வேண்டும் என்பார்கள். தமிழ்நாட்டில் தினமும் மூன்று வேளை குளிக்க வேண்டும். நல்லது. எஸ்கிமோவிடம் போய் இதையே கட்டாயப்படுத்தினால் எவ்வளவு மடத்தனம்?”

“ஐ கான்ட் காட்ச் யூ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஏதோ ‘ரீஸனபிள்’ ஆகப்பேசுவது மாதிரி நடிக்கிறீர்களே!”

“பார்த்தாயா? நீ இப்படி அவசர முடிவுக்கு வந்து விடுவாய் என்றுதான் நான் ஆதாரம் தேடிக்கொண்டு வரப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மேல்நாட்டு பத்திரிகையை ஆதாரம் காட்டி உன் கட்சியை நீ சொன்னாய். சரி, நான் நம் தமிழ்நாட்டு டாக்டர் எழுதியுள்ள ஒரு கட்டுரையைக் கொண்டு வந்து காட்டுகிறேன் பார். பொடி போடுகிறதிலுள்ள நாற்பது நன்மைகளையும் அது போடாவிட்டால் விளையும் எண்பது தீமைகளையும் ஆணித்தரமாகப் பாரா பாராவாக எழுதியிருக்கிறார். ‘சஞ்சாரி’ என்ற மாதப் பத்திரிகையில் அது கட்டுரையாக வந்திருக்கிறது. எந்த இதழ் ஞாபகமில்லை. நேரே இப்போது மூர்மார்க்கெட் போகிறேன். பொடி எனக்குத் திரண மாத்திரம். நான் பொடியை என்ன, பெண்டாட்டியையே கூடத் துறக்கத் தயார். ஆனால் நீ இப்படி அறியாமை காரணமாக வழிவழி வந்த நமது முன்னோரின் ஞானத்தைப் பழிப்பதை நான் சகிக்க மாட்டேன். வருவதற்குச் சிறிது நேரமானாலும் கவலைப்படாதே, பத்திரமாகப் போய்விட்டு ஆதாரத்துடன் வந்து சேர்கிறேன்.
அப்புசாமி வாக்கிங் ஸ்டிக்கையும் வெற்றிலைச் செல்லத்தையும் எடுத்துக் கொண்டு விறுவிறென்று நடக்கத் தொடங்கி விட்டார்.

“கொண்டு வரட்டும். அதையும் பார்த்து விடுவோம்” என்று சீதாப்பாட்டி, கறுவிக் கொண்டே சோபாவில் வந்து உட்கார்ந்து ‘ஸ்பெக்ஸை’ மாட்டிக்கொண்டு ‘டைஜஸ்ட் ‘கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்தாள்.

‘எந்தச் சீதோஷ்ண நாடாக இருந்தாலும். பொடி, கெடுதல், கெடுதல், கெடுதல்,’ என்று பன்னிரண்டாம் வாக்கியம் பேசுகிறதே, இது பொய்யா? கணவர் சொல்லும் விவரம் வந்த பத்திரிகை வரட்டுமே, பார்ப்போம் என்று காத்திருந்தாள்.

இரவு எட்டு மணிக்கு அப்புசாமி டாக்ஸியில் வந்து இறங்கினார்.

“ஸோ லேட்?” என்று கணவனை வரவேற்பதற்காக சீதாப்பாட்டி வாசல் விளக்கைப் போட்டாள்.

அப்புசாமி, “உஸ்ஸ்…” என்று மாடிப் படி ஏறினார்.

சீதாப்பாட்டி, “எங்கே உங்க மாகஸின்? கிடைக்கவில்லையா?” என்றாள்.
“கிடைக்கப்பட்ட பாடு போதும் என்றாகிவிட்டது,” என்றார் இன்னமும் எதையும் கொடுக்காமல்.

சீதாப்பாட்டி, சோபாவில் உட்கார்ந்த கணவனை இப்போதுதான் நன்றாகப் பார்த்தாள். திடுக்கிட்டாள் : “இதென்ன வேட்டி ஜிப்பா எல்லாம் கன்னங்கரேலென்று மை? எங்கேயாவது போய்த் தார்ப் பீப்பாய் மேல் விழுந்து விட்டீர்களா என்ன? இதற்குத்தான் தனியாக உங்களைப் போக நான் ‘அலௌ’ செய்வதில்லை. சொன்னால் கேட்கிறீர்களா?”

அப்புசாமி திகைத்தார். “மையா? மை.. ஏது மை? நான் எங்கே விழுந்தேன் தார்ப் பீப்பாய் மேல்?”

“அதுவாக வந்து விழுந்ததோ? முதலில் வேறு வேட்டி சட்டை போட்டுக் கொள்ளுங்கள். சேசே! சாமான்னியமாக இந்த மை போகாது போலிருக்கிறதே?” என்று பக்கத்தில் வந்து சீதாப்பாட்டி பார்த்த பிறகுதான் அப்புசாமியும் கவனித்தார். “ஆமாம். மை.. ஓ! ப்ரஸ்..” என்றவர் கப்பென்று நிறுத்திக் கொண்டார்.

“ப்ரஸ்ஸா? என்ன ப்ரஸ்?” என்றாள் சீதாப்பாட்டி.

அப்புசாமி சிறிது தடுமாறி, “ஒன்றுமில்லை. ஏதோ ஒரு பிரஸ்ஸுக்கு டிரம் நிறைய அச்சு மை ஏற்றிக்கொண்டு ஒரு வண்டி போனது. ஒருகால் அது உரசி விட்டுப் போனதோ என்னவோ? அதைப் பற்றி என்ன? நீ பத்திரிகையைப் படித்துப் பார். கொண்டு வந்திருக்கிறேன்,” என்று மடியில் வைத்திருந்த ஒரு மாதப் பத்திரிகையை வெளியே எடுத்து அதில் ஒரு பக்கத்தைப் பிரித்துக் காட்டினார்.

“ஓ! ஸஞ்சாரியா? மன்த்லியா? எந்த டாக்டர் எழுதியிருக்கிறான்?” சீதாப்பாட்டி பத்திரிகையை வாங்கி ஆராய்ந்தாள்.

“டாக்டரை, ‘அவன் இவன்’ என்று சொல்லாதே. உன் ‘டைஜஸ்ட்’ டாக்டரை வேண்டுமானால் அப்படிச் சொல்லிக்கொள்,” என்று ஆட்சேபித்தார் அப்புசாமி.

சீதாப்பாட்டி கட்டுரையை வாய் விட்டே படிக்க ஆரம்பித்தாள்.

‘பொடியின் மகிமை
டாக்டர் காமாட்சிநாதன்.
எம்.பி.பி.எஸ். பெடி போடுவதைப் பலா…’

அப்புசாமி முகத்தைச் சுளித்தார். “சரியாகப் படி. பெடி போடுவதை என்றா கம்போஸ் பண்ணியிருக்கிறான்! மடையன்ஸ்!”

சீதாப்பாட்டி அப்புசாமியை ஏற இறங்கப் பார்த்தாள். “இருக்கிறதைத்தான் படிக்கிறேன். டோன்ட் டைவர்ட் மை அட்டன்ஷன்!”

சீதாப்பாட்டி தொடர்ந்து படித்தாள் :

‘பெடி போடுவதைப் பலர் முட்டாள்தனமாகத் தப்பாக எண்ணுகிறார்கள். பொடி, நமது இந்திய நாட்டுக்கு முக்கியமாகத் தமிழ்நாட்டுக்கு மிக மிக இன்றி அமைத்ததுதுதுப. மகாராஜ ராஜ ஸ்ரீ சுபயோக சுப தினத்தினத்தில் எனது மகன்…’

அப்புசாமி பதறிப் போனார் : “என்ன, என்ன பேத்தலாகப் படிக்கிறாய்?”

சீதாப்பாட்டி ஒருமுறை முறைத்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள் :

…முக்கியமானனது. அது மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது. பொடி போடுவதால் ஆயுல் நீடிக்கிறது. ஜலதோகம் பிடிக்காது. போடி போட்டி கிழவர்கள் பொடி போடாதா கிழவர்களை விட நீண்டநால் வாழ்கினார்கள். இது மிக மிக உண்மை. இதைத் தெரியாதவர்கள் சொல்லும் வார்த்தையோ, சில மேல் நாட்டுக்காரர்கள், பத்திரிகைகள் ஊலறுவதை நாம் செவி மடிக்க வேண்டியதிள்ளை….”

“நாசமாய்ப் போக!” அப்புசாமி தலை தலையாய் அடித்துக்கொண்டார்.

சீதாப்பாட்டி பத்திரிகையை மேலும் சிறிது புரட்டிவிட்டுத் தூக்கி எறிந்தாள். “டெரிபிள்! என் கண்ணே வலியெடுத்துப் போய்விட்டது. ஒரே ஒரு பாரா படிப்பதற்குள்! சகிக்க முடியாத பிரிண்ட்டிங் மிஸ்டேக்ஸ்! நான் படித்த இந்த ஒரு பக்கத்தில்தான் அதுவும் இப்படி!”

அப்புசாமிக்குக் கால்கள் கைகள் நெஞ்சுகள் லேசாக நடுங்கி வியர்க்கத் தொடங்கின.

‘தெரிந்து கொண்டு விட்டாளோ? நாசமாய்ப் போகிற குஜிலி பிரஸ்காரன்! ஆனால் அப்போதே சொன்னான், ‘அவசரப்படுத்தினீங்கன்னா, தப்புத் தவறு வந்துடும், அப்புறம் நான் பொறுப்பில்லை’ என்று. ஆனால் அதற்காக இப்படியா கண்ணராவி! ஏதோ கல்யாணப் பத்திரிகை மேட்டரையெல்லாம் கலந்து ஒரு பக்கம் அடித்துத் தொலைத்திருக்கிறான். இந்த வரைக்கும் பசை போட்டு அந்தத் தனிக் காகிதத்தை ஒட்டாமல், பின்னைக் கழற்றிச் செருகியிருக்கிறான். தொலைகிறது. நானாவது புரூஃப் சுத்தமாகப் படித்திருக்கலாம். அச்சாபீஸில் விளக்கு வெளிச்சம் இல்லை. என் கண்ணும் தெரியவில்லையே? எல்லாம் சோதனை! கடவுளே! அவளுக்கு மந்த புத்தி கொடு! அவள் என் மோசடியைத் தெரிந்து கொள்ளாதிருக்க வேண்டும். என் மூக்கு பிழைக்க வேண்டும்’ என்று மனத்துக்குள் அப்புசாமி பதறினார்.

சீதாப்பாட்டி சொன்னாள் : “முதல் வேலையாக அந்த டாக்டரை நாளை காலையில் ‘மீட்’ செய்வோம். நேரிலேயே கேட்கிறேன். ஐ டௌட் ஹிஸ் ஆதன்ட்டிஸிடி.”

“எதற்கு வீண் சிரமம்? ஒரு டாக்டரை அப்படிக் கேட்பது தவறு. நாகரீகக் குறைவு,” என்று அப்புசாமி வீணாக அணை போட முயன்றார்.

படுக்கையில் படுத்தபடி அப்புசாமி தவித்தார். ‘முந்த்ரா’ ஊழலை விடக் கேவலமான ஓர் ஊழலில் மாட்டிக்கொண்டு தவித்தார்.
நடு ராத்திரி.

அப்புசாமி மெதுவே மாடியிலிருந்து இறங்கினார்.

இரவு பன்னிரண்டுக்கு நழுவிய அப்புசாமி ஒரு மணி நேரம் கழித்து வந்து ஓசைப்படாமல் படுத்துக்கொண்டார்.

மறுநாள் மாலை. சீதாப்பாட்டி அப்புசாமியையும் அழைத்துக் கொண்டு டாக்டர் வீட்டை அடைந்தாள்.

டாக்டர் காமாட்சிநாதன் பொறுமையாக எல்லாத் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு பிறகு, “என் கருத்து தவறு என்று நீங்கள் சொன்ன மாதிரியே பலர் தெரிவித்திருக்கிறார்கள். நான் அமெரிக்காவுக்கு என்னுடைய புரஃபசருக்கு இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். பதில் வரவேண்டும்,” என்றார்.

“அது வரை?” என்றாள் சீதாப்பாட்டி. “இவர் அதற்குள் அரை டன் பொடி தீர்த்து விடுவாரே?”

அப்புசாமியை டாக்டர், “சோதனை ரூமுக்கு ஒரு நிமிடம் வாருங்கள். உங்கள் தேக நிலையைப் பரிசோதித்து, உங்களுக்குப் பொடி நல்லதா கெட்டதா பார்க்கிறேன்,” என்று அழைத்துக் கொண்டு தனி அறைக்குப் போனார்.

சோதனை அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டதும் அப்புசாமி, டாக்டரின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு, “டாக்டர்! நேற்று நடுநிசியில் வந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்காக என்னைக் காப்பாற்றினீர்களே? உங்களுக்கு எப்படி நன்றியும் பீஸும் செலுத்துவேன்?” என்றார்.

டாக்டர் காமாட்சிநாதன், “அதெல்லாம் சரி. பெஞ்சியில் ஏறிப் படும்,” என்றார். “சோதனை நடத்த வேண்டும்.”

அப்புசாமி நடுங்கிப் போனார். ‘பாவி மனுஷா! நடு ராத்திரியில் வந்து உண்மையைச் சொல்லிக் கேட்டுக் கொண்டதற்கு இதுதானா பலன்?’ என்று எண்ணிக் கொண்டார்.

ஒரு மணி நேரம் டாக்டர் காமாட்சிநாதன் சோதனை நடத்திவிட்டு, வெளியே வந்தார் அப்புசாமியுடன்.

சீதாப்பாட்டி ஆவலுடன், “என்ன டாக்டர்? ஐ ஆம் வெரி ஆங்க்‌ஷஸ்…” என்றாள்.

டாக்டர் காமாட்சிநாதன் அப்புசாமி பக்கம் திரும்பி, “மிஸ்டர் அப்புசாமி! நீங்கள் பொடி போடக்கூடாது . அது மகாமகா கெடுதல் உங்கள் உடம்புக்கு. அத்தோடு, வெற்றிலை பாக்கும் போடக் கூடாது.வெற்றிலையை மெல்லாமல் இடித்துப் போட்டுக் கொள்வதால் அது சரியாக ஜீரணமாகாமல் உங்களுக்கு ஏதேனும் வயிற்றுக் கோளாறு ஏற்படலாம்.”

சீதாப்பாட்டி, “டாக்டர்! உங்களிடம் வந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! ஓ மை காட்! சேவ் மை ஹஸ்பெண்ட்!” என்று தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டவள் மறு நிமிடம் அப்புசாமியின் கையிலிருந்து ஓலை வெற்றிலைச் செல்லத்தைப் பறித்து வெளியே எறிந்தாள்.

அப்புசாமி ஆத்திரத்துடன் மனைவியைப் பார்த்தார். ‘உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்றது அந்தப் பார்வை.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

படிக்க விரும்பும் புத்தகம் – ஜார்ஜ் ஜோசஃபின் வாழ்க்கை வரலாறு

தமிழகத்தின் விடுதலைப் போராட்டத் தலைவர்கள், வீரர்கள் என்று ஒரு நாலைந்து பேர்தான் பொதுப் பிரக்ஞையில் இருக்கிறார்கள். வ.உ.சி., பாரதியார், ராஜாஜி, காமராஜ். மிஞ்சிப் போனால் திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், சுப்ரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், சத்யமூர்த்தி, ஈ.வெ.ரா. (பின்னாளில் ஈ.வெ.ரா. வெள்ளைக்காரன் ஆட்சிதான் பெஸ்ட் என்று அழிச்சாட்டியம் செய்தது வேறு விஷயம்.)

ஆனால் குறைந்த பட்சம் இரண்டாம் நிலையிலாவது வைக்கப்பட வேண்டிய இன்னொரு தலைவர் ஜார்ஜ் ஜோசஃப். அது எப்படி அவரைப் போன்ற ஒரு ஆளுமை இன்று முழுவதுமே மறக்கப்பட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவே இல்லை. என் சிறு வயதில் நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. எந்தப் பாடப் புத்தகத்திலும் அவரைப் பற்றி ஒரு வரி கூட வந்ததில்லை. வைக்கம் வீரர் என்று ஈ.வெ.ரா.தான் பேசப்பட்டாரே தவிர ஜார்ஜ் ஜோசஃபின் பங்களிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்பட்டு நான் கேட்டதில்லை. ஒரு வேளை அவர் மலையாளி என்பதாலா? குறைந்த பட்சம் கேரளத்திலாவது அவர் நினைவு கூரப்படுகிறாரா? இல்லை அவர் மலையாளிகளுக்கு பாண்டியா?

ஜார்ஜ் ஜோசஃப் பற்றி அவருடைய பேரனான ஜார்ஜ் ஜோசஃப் எழுதி இருக்கிறாராம். (George Joseph: The Life and Times of a Kerala Christian Nationalist) அதைப் படிக்க வேண்டும் என்று ஆவல். புத்தகம் அச்சில் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. சில பகுதிகளை இந்தத் தளத்தில் படிக்கலாம். படித்த வரை சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

யாராவது படித்திருக்கிறீர்களா? மதுரைக்காரர்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரிந்தால் கட்டாயம் பதில் எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலை இயக்கம்