(திருத்தங்களுடன் மீள்பதிப்பு)
இந்திரா பார்த்தசாரதி என்னை அவ்வளவாக கவர்ந்ததில்லை. அவர் புத்தகங்களில் அறிவுஜீவிகள் பேசிக் கொண்டே இருப்பார்கள். புத்திசாலித்தனத்தை வலிந்து புகுத்துகிறார், இதோ பார் என் கதாபாத்திரங்கள் எத்தனை அறிவிஜீவித்தனமாக, உண்மையைப் பேசுகிறார்கள், எதிர்கொள்கிறார்கள் என்று செயற்கையாகக் காட்டுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரது புகழ் பெற்ற அங்கத நடை பொதுவாக எனக்கு ஒரு புன்முறுவலை கூட வரவழைப்பதில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு, தன் மனைவியின் தோழியின் பிசினஸ் செய்யும் கணவனோடு ஒரு மாலை நேர சம்பாஷணையாக வரும் கதைக்கு –
பெயர் மறந்துவிட்டது, ஒரு இனிய மாலைப் பொழுது – விழுந்து புரண்டு சிரித்திருக்கிறேன்.)
ஆனால் அவர் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். கருதப்படுகிறார் என்ன, என் கண்ணிலும் முக்கியமான எழுத்தாளர்தான். ஆனால் என் கண்ணில் அவரது முக்கியத்துவம் என்பது அவரது தாக்கம்தான், அவரது பாணிதான். அறிவுஜீவி கதைகள் என்ற sub-genre அவரால்தான் உருவாக்கப்பட்டது என்றே சொல்லுவேன். அவரது பாணியில் அவரை விஞ்சும் பல படைப்புகளை அவரது சீடர்கள் – குறிப்பாக ஆதவன் – எழுதிவிட்டார்கள். அவர் போட்ட கோட்டில்தான் அவர்கள் ரோடு போட்டிருக்கிறார்கள்.
குருதிப்புனல் சாக்திய அகாடமி விருது பெற்றது, அவரும் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்.
அவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவரது முதல் நாவலான காலவெள்ளம்தான். பிற்கால நாவல்களில் அவர் படைத்திருக்கும் பாத்திரங்கள் பொதுவாக தமிழனுக்கு கொஞ்சம் அன்னியமானவை போலவே இருக்கும். இந்த நாவலில் அப்படி கிடையாது. ஆனால் கதையோட்டத்தில், கதைப் பின்னலில் அனேக முதல் நாவல்களைப் போலவே சில rough edges இருக்கின்றன.
1920-40 வாக்கில் நடக்கும் கதை. ஸ்ரீரங்கத்து பணக்கார ஐயங்கார் பெண் குழந்தை வேண்டுமென்று ஏழைப் பெண்ணை இரண்டாவது கல்யாணம் செய்துகொள்கிறார். இரண்டு மனைவிக்கும் சேர்த்து நான்கு குழந்தைகள். முதல் மனைவி இறந்துவிடுகிறாள். இரண்டாவது மனைவி பிரிந்து போய்விடுகிறாள். மூத்த பையன் அப்பாவின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். இரண்டாவது பையன் அவ்வளவு உருப்படவில்லை. மூன்றாவது பையன் நன்றாக படிக்கிறான், நாற்பதுகளின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். கடைசி பெண் ஏதோ தகராறில் வாழாவெட்டியாக இருக்கிறாள். நன்கு படிக்கும் பையன் தலையெடுத்து தங்கையை கணவனோடு சேர்த்து வைக்கிறான், தன் அம்மாவை சந்திக்கிறான் என்று கதை போகிறது. அவருக்கு கதையை எப்படி முடிப்பது என்று குழப்பமோ என்னவோ, கதை திடீரென்று முடிந்துவிடுகிறது.
பாத்திரங்கள் உண்மையாகத் தோன்றுகின்றன. நல்ல craft தெரிகிறது. மற்ற பல புத்தகங்களில் இருப்பது போல பேசிக்கொண்டே இருக்கவில்லை!
படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்
இ.பா.வின் நேர்காணல் – http://www.thehindu.com/arts/books/article804496.ece
LikeLike
இ.பா. சுட்டிக்கு நன்றி, முரளி!
LikeLike