ரா.கி. ரங்கராஜன்

எனக்கு ரா.கி.ர.வைப் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லை. அவரது பங்களிப்பு என்பது குமுதத்தை சுவாரசியமான வாரப் பத்திரிகையாக வைத்திருந்த ஒரு குழுவில் முக்கியப் பங்காற்றியதே. உதாரணமாக அவர் வாராவாரம் எழுதி வந்த “லைட்ஸ் ஆன்” சினிமா பத்தி. To state this uncharitably, அவர் குமுதத்தின் பக்கங்களை நிரப்பினார் என்று சொல்லலாம், அவ்வளவுதான்.

அவர் எழுத்திலே எனக்கு மிகவும் பிடித்த அம்சம் கச்சிதம்தான் – ஒரு நல்ல ஆர்க்கிடெக்ட் போடும் ப்ளானைப் போல. முடிவை நோக்கி சீராகப் போகும் கதைகள். சரளமான நடை. அனாவசியமாக இழுப்பதில்லை. ஆனால் பொழுதுபோக்கு எழுத்து என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தாலும், கதைக்கரு பல சமயம் மிக சிம்பிளாக இருக்கிறது. இப்படி அவரது படைப்புகளின் முடிச்சுகள் சிம்பிளாக இல்லாமல் இருந்தால் இந்த கச்சிதம் அவர் எழுத்தை உயர்த்தி இருக்கும். இன்றோ அவரது சிறந்த எழுத்துக்கள் நல்ல தச்சன் செய்த நாற்காலி போல இருக்கின்றன. நாற்காலி சவுகரியமாக இருக்கிறது, ஆனால் கலை அபூர்வமாகத்தான் தென்படுகிறது.

அவர் எழுதியவற்றில் நான் பரிந்துரைப்பது நான், கிருஷ்ணதேவராயன். சுலபமாகப் படிக்கக் கூடிய, தமிழுக்கு நல்ல சரித்திர நாவல்.

ஆனால் குமுதம் குழுவில் – இவர், எஸ்ஏபி, பாக்கியம் ராமசாமி என்ற ஜ.ரா. சுந்தரேசன், சுந்தர பாகவதர் என்ற புனிதன் – இவர்தான் சிறந்த எழுத்தாளர்.

அவரது தொடர்கதைகளில் – குறிப்பாக அறுபது, எழுபதுகளின் தொடர்கதைகளில் – ஆணும் பெண்ணும் காதல்வசப்படுவது ரசமாக இருக்கிறது. ரொம்ப சிம்பிள், அழகான நாயகி, ஸ்மார்ட்டான நாயகன், இருவரும் ஓரிரு முறை சந்தித்தால் காதல்தான். 🙂

சிறு வயதில் அவர் எழுதிய படகு வீடு, ப்ரொஃபசர் மித்ரா, ஒளிவதற்கு இடமில்லை, கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா, ராத்திரி வரும் என்று சில கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். அவர் மறைந்தபோது நினைவிருந்தது கையில்லாத பொம்மை (போலி டாக்டர் ஆளவந்தார் என்று ஒரு ஹீரோ) ஒன்றுதான். பிறவற்றை மீண்டும் படிக்கும்போதுதான் இதை எப்போதோ படித்திருக்கிறோமே என்று தோன்றியது. ஜெயமோகன் அவரது படகு வீடு, ப்ரொஃபசர் மித்ரா ஆகிய நாவல்களை நல்ல social romances பட்டியலில் சேர்க்கிறார்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் ப்ரொஃபசர் மித்ராவில் ஹிப்னாடிச வல்லுநர் மித்ராவுக்கு தன் மனைவி மீது சந்தேகம். அவளை ஹிப்னாடிசம் செய்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்று பார்க்கிறார். சரளமாகப் போகும் நாவல். ஆனால் என் கண்ணில் இதை விட நல்ல வணிக நாவல்களை ரா.கி.ர. எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் இன்னொரு நாவலான படகு வீட்டில் அத்தை மகளை விரும்பும், அவளால் விரும்பப்படும் வாலிபன் ராதாகிருஷ்ணன் திடீரென்று சாமியாராகிவிடுகிறான். ஏன் என்பதுதான் கதை. சரளமாகப் போகும் நாவல்.

சிறு வயதிலும் சரி, இப்போதும் சரி எனக்குப் பிடித்திருந்த கையில்லாத பொம்மையில் மூன்று முன்னாள் கைதிகள்; ஜெயிலில் அவர்கள் எதிரி அவர்கள் திரும்பி வந்தால் தீர்த்துவிட காத்திருக்கிறான். போலி டாக்டர் ஆளவந்தார் சாகக் கிடக்கும் ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்து பிழைக்க வைத்து மீண்டும் ஜெயிலுக்குப் போகிறான். சரளமாகப் போகும் நல்ல வணிக நாவல்.

அப்போதும் இப்போதும் பிடித்திருந்த இன்னொரு வணிக நாவல் உள்ளேன் அம்மா. இதை வந்த நேரத்திலோ, இல்லை பத்திரிகையை கிழித்து பைண்ட் செய்யப்பட புத்தகமாகவோ படித்திருக்கிறேன். ஆசிரியைகளை வம்புக்கு இழுத்து ‘கொடுமைப்படுத்தும்’ ஒரு பெண், அவளது புது ஆசிரியை, ஆசிரியையின் காதலன் என்று ஒரு முக்கோணம். இதுவும் சரளமாகப் போகிறது.

சிறு வயதில் பிடித்திருந்த இன்னொரு நாவல் ராத்திரி வரும். ரசவாதத்தை வைத்து ஒரு கதை. ரா.கி.ர.வின் வழக்கமான பலம் – சீராக முடிவை நோக்கிப் போவது; வழக்கமான பலவீனம் – கதை ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் கதை வந்த காலத்தில் நாயகியின் தலை தங்கமாக மாறும் இடம் பயங்கர உணர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கிறது. நான் அப்போது சின்னப் பையன் என்பதாலோ என்னவோ.

சிறு வயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த இன்னொரு நாவல் ஒளிவதற்கு இடமில்லை. எட்டு ஒன்பது வயதில் படித்த நாவல். வைரமுருகன், சீன வில்லன்கள், நாலு மாதத்தில் கொல்லும் மருந்து, ஆபாச புகைப்படங்கள் என்று போகும் நாவல். அந்த வயதில் மிக த்ரில்லிங் ஆக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும்தான். ஆனால் இன்று திரும்பிப் படித்துப் பார்த்தால் அறுபதுகளின் ஜெய்ஷங்கர் படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.

பின்னாளில் படித்தவற்றில் ராசி குறிப்பிட வேண்டிய நாவல். வழக்கம் போலவே சரளமாகச் செல்கிறது. ஒரே கோத்திரம் என்று ஒரு காதல் தடைப்படுகிறது. நாயகி கல்யாணம்தானே பண்ணிக் கொள்ளக் கூடாது, சேர்ந்து வாழ்கிறோம் என்று கிளம்புகிறாள். முடிவு என்று ஒன்றை எழுதாதது இந்தக் கதையை உயர்த்துகிறது.

நான் படித்த மற்றவற்றில் அழைப்பிதழ், சின்னக் கமலா, க்ரைம், கோஸ்ட், இன்னொருத்தி, கன்னாபின்னா கதைகள், குடும்பக் கதைகள், மூவிரண்டு ஏழு, ஒரு தற்கொலை நடக்கப் போகிறது, வாளின் முத்தம், வயசு 17 எல்லாமே படிக்கக் கூடிய, சுவாரசியமான, சரளமாகச் செல்லும் கதைகள். தொடர்கதையாக வந்தபோது இன்னும் சுவாரசியம் அதிகரித்திருக்கும். ஆனால் இலக்கியம், தரிசனம் என்ற பேச்சே கிடையாது. முடிச்சுகள் பல சமயம் பலவீனமாக இருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும் சம்பவங்களை கச்சிதமான நடையில், குமுதத்தில் நிரப்ப வேண்டிய பக்கங்களுக்குத் தேவையான வார்த்தைகளில் எழுதி இருக்கிறார். வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாமல், அவர்கள் மூளைக்கு ரொம்ப வேலை கொடுக்காமல் குமுதத்தின் பக்கங்களை நிரப்புங்கள் என்று எஸ்ஏபி அவரைப் பணித்திருக்கிறார், கொடுக்கப்பட்ட வேலையை இவர் திறமையாக செய்திருக்கிறார், அவ்வளவுதான்.

ஆனால் அவர் எழுதியதில் கணிசமானவை வணிக எழுத்து என்ற அளவில் (கூட) வெற்றி பெறவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன். திக் திக் கதைகள், காதல் கதைகள் என்ற தொகுப்புகளில் உள்ள சிறுகதைகள் தண்டம். தர்மங்கள் சிரிக்கின்றன, ஹேமா ஹேமா ஹேமா, மறுபடியும் தேவகி, முதல் மொட்டு எல்லாம் உப்புசப்பில்லாத கதைகள்.

சில படைப்புகளைப் பற்றி ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்:

அழைப்பிதழ்: ஒரு ஏப்ரல் ஃபூல் ஜோக்கில் ஒரு வாலிபன் தற்கொலை செய்துகொள்கிறான். அது தற்கொலையா கொலையா என்று துப்பறியும் கதை. சரளமாகப் போகும் இன்னொரு கதை.

சின்னக் கமலா: சிற்பக் கலைஞர் பிரபு கலை ஊக்கம் இல்லாது சோர்ந்து கிடக்கிறார். அவருக்கு திடீரென்று அப்பாத்துரை என்ற மறைந்த தொழிலதிபருக்கு ஒரு சிலை செய்யும் வாய்ப்பு வருகிறது. அப்பாத்துரைக்கு சிலை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய கும்பலே ரகசியமாக வேலை செய்கிறது. கும்பலின் பிரதிநிதியாக இருப்பவள்தான் சின்னக் கமலா. குழந்தை எம்.எஸ்ஸின் சித்தரிப்பு ரசிக்கும்படி இருந்தது.

க்ரைம்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகள் போலீஸ் அதிகாரி தான் துப்பறிந்த கேஸ்களை புத்தகமாகக் கொண்டு வரக்கூடாது என்று மிரட்டப்படுகிறாள்.

கோஸ்ட்: பேய் பிசாசுக் கதைகள். டைம் பாஸ்.

இன்னொருத்தி: உடல் உறவில் விருப்பம் இல்லாத மனைவி மனம் மாறுகிறாள். சரளமாகப் போகும் இன்னொரு கதை. மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்த காலத்தில் எழுதப்பட்டது என்று நினைவு.

கன்னாபின்னா கதைகள் சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் கடிதங்களின் தொகுப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நல்ல பொழுதுபோக்குச் சிறுகதைகள்.

குடும்பக் கதைகள் சிறுகதைத் தொகுப்பு. குறிப்பிடும்படி எதுவும் இல்லை என்றாலும் வாரப் பத்திரிகை சிறுகதைகளின் நல்ல பிரதிநிதி.

மூவிரண்டு ஏழு புத்தகத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கின ஹோட்டல் முதலாளி தன் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பவே அப்படி செய்தார், தன் அப்பாவுக்கு கிடைத்த தூக்குத்தண்டனை அந்த முதலாளிக்கு கிடைத்திருக்க வேண்டியது என்பதை உணரும் ஹோட்டல் மானேஜர் சேது. இன்னுமொரு சரளமான, ஆனால் பலமில்லாத கதை.

ஒரே ஒரு வழி நாவலில் அண்ணன் காதல் தோல்வியால் பைத்தியம் ஆகிவிட, தம்பி அந்தப் பெண்ணை பழி வாங்குகிறான். சுமாரான தொடர்கதை.

ஒரு தற்கொலை நடக்கப் போகிறது நாவலில் ஒரு ஜோசியர் தற்கொலை நடக்கப் போகிறது என்று ஆரூடம் சொல்கிறார். நடக்கிறது. அது கொலை என்று நாயகன் கண்டுபிடிக்கிறான்.

வாளின் முத்தம் சரித்திர நாவல். அக்பர்தான் நாயகன். இன்னுமொரு சரளமான கதை.

வயசு 17 நாவலில் குற்றவாளி மூர்த்தி. அவனை நிரபராதி என்று நம்பி அவன் விடுதலைக்குப் போராடும் அவன் தங்கை மாயா. மாயா மீது உள்ள ஈர்ப்பில் மனைவி கல்யாணியைப் புறக்கணிக்கும் வக்கீல் பத்மநாபன். கல்யாணிக்கும் பத்மநாபனுக்கும் நெருங்கிய நண்பனான அருண். கல்யாணிக்கும் அருணுக்கும் உள்ள நட்பின் சித்திரம் இந்த நாவலில் குறிப்பிட வேண்டிய அம்சம்.

அவரது மொழிபெயர்ப்புகள் நிறைய பேசப்பட்டன. Papillon, Rage of Angels மாதிரி சில. ஒரிஜினல்களே சுமார்தான்.

அவரால் சிறப்பாக எழுதி இருக்க முடியும், இன்னும் நல்ல வணிக எழுத்தாளராக வந்திருக்க முடியும், குமுதத்தின் பணிகள் அவரை முடக்கிவிட்டன, குமுதம் அவருக்குப் பொன் விலங்குதான் என்று தோன்றியது.

இலக்கியம் படைக்க வேண்டும் என்று ரா.கி.ர. முயலவில்லை. அவர் எழுதியது எதுவும் இலக்கியமும் இல்லை. ஆனால் குமுதத்தை மாபெரும் வெற்றி அடைய வைத்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. தமிழின் இரண்டாம் வரிசை வணிக எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஒரு தலைமுறைக்கு முந்தைய குமுதம் வாசகர்களில் நினைவில் அவர் எப்போதும் இருப்பார்.

அவருடைய ஒரு சிறுகதை – 1947-இல் எழுதியது, துரையிடம் லீவ் கிடைக்காது என்றெல்லாம் பிரச்சினை – இங்கே. அவருடைய எழுத்து முறைக்கு ஒரு சாம்பிள் கீழே. இன்னும் படிக்க விரும்புபவர்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.

சந்தனக் கடத்தல் வீரப்பர்

ஆளுக்கு ஆள் சந்தனக் கடத்தல் வீரப்பரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், நான் கிட்டத்தட்ட அவரை சந்தித்திருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். (ஒரு படா கெள்ளைக்காரனுக்கு, மகா கடத்தல்காரனுக்கு, பயங்கரக் கொலைகாரனுக்கு ‘அவர்’ என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தமிழ் டிவிக்களும், தமிழ் தினசரிகளும் முதலில் இரண்டு வரிகள் ‘அவன்’ என்று குறிப்பிட்டு விட்டு, உடனே மாபெரும் தவறு செய்து விட்ட மாதிரி ‘அவர்’ என்று மாற்றிக் கொள்கின்றன. (தூர்தர்ஷனில் மட்டும் ‘அவன்’ என்றே கடைசி வரை சொல்லிவருவதாக ஒரு நண்பர் சொன்னார்.)

எனக்கு இந்த மாதிரியான ‘அவன்’ ‘அவர்’ குழப்பமெல்லாம் கிடையாது. கன்னட நடிகர் ராஜ்குமார் நல்லபடி வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்ட பின், வீரப்பரை அவர் என்றே இங்கு குறிப்பிடுகிறேன்.

முன்னொரு காலத்தில் நான், புனிதன், ஜ.ரா. சுந்தரேசன் மூவரும் சேர்ந்து சினிமா பார்க்கப் போவது வழக்கம். குமுதத்தில் விமர்சனம் எழுதுவதற்காக. அனேகமாக கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களாகத்தான் இருக்கும். ஒரு நாள் நான் நண்பர்களிடம் “கிராமத்து நடுவில் சளசளவென்று சிற்றோடை ஓடுகிறது. இளம் பெண்கள் இடுப்பில் குடத்தைச் சுமந்துகொண்டு அங்கே போய் நீர் மொண்டு கொண்டு ஒய்யாரமாக வருகிறார்கள். ஆகாயத்தில் ‘S’ எழுதுகிற மாதிரி கையை வளைத்துக் கொண்டு ஒய்யார நடைபோடுகிறார்கள். இது போன்ற கிராமம் நிஜமாகவே இருக்கிறதா? இருந்தால் நேரில் பார்க்க வேண்டும்” என்றேன்.

அடுத்த ஒரு வாரத்தில் பல சினிமா நிருபர்களை நாங்கள் பேட்டி கண்டோம். சத்தியமங்கலத்துக்கு அருகே (கவனியுங்கள்: சத்தியமங்கலம்!) ஷுட்டிங்குகள் நடைபெறுகின்றன என்றும் அங்கே உண்மையிலேயே இது போன்ற கிராமங்கள் இருக்கின்றன என்றும் பேட்டியில் தெரிய வந்தது. சத்தியமங்கலத்துக்கு எப்படிப் போவது என்று கேட்டோம். ஈரோடுக்கு ரயிலில் போனால் அங்கிருந்து பஸ்ஸில் போகலாம் என்றார்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை இரவு ரயிலேறினோம். சனி, ஞாயிறு தங்கிவிட்டுத் திங்கள் காலை திரும்பி விடுவதாகத் திட்டம். (நாங்கள் மூவரும் இப்படித்தான் பல ஊர்களுக்கும் போய் வந்திருக்கிறோம். திங்கள் காலையில் கொள்ளை வேலை காத்திருக்கும். அரை நாள் தாமதமானால் போச் போச்!)

ஈரோடில் சுந்தரேசனுடைய உறவுக்காரர் ஒருவர் இருந்தார். சிறிய கைத்தறி மில் நடத்தி வந்தார். அவர் வீட்டில் குளித்து சாப்பிட்டுவிட்டு சத்தியமங்கலம் பஸ்ஸில் புறப்பட்டோம். தமிழ் நாட்டில் எந்த ஊருக்கும் முன்னறிவிப்பு இல்லாமல் போக எங்களுக்கு ஒரு வசதி இருந்தது. அதாவது மூலை முடுக்கெல்லாம் குமுதம் விற்பனையாளர்கள் இருப்பதால் அவர்களைப் பிடித்தால் அந்த ஊரில் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுப்பார்கள். (செலவுகள் எங்களுடையதுதான்.)

அந்த தைரியத்தில்தான் சத்தியமங்கலம் போனோம். விற்பனையாளரின் கடையை விசாரித்து அறிந்து அங்கே சென்றோம். அந்தோ! அவர் ஈரோடுக்குப் போயிருப்பதாகவும் வருவதற்கு இரண்டு மூன்று நாட்களாகும் என்றும் கடையிலிருந்த பையன் சொன்னான்.

ஆளுக்கொரு ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டு அந்தக் கடைத் தெருவில் அசட்டு விழி விழித்துக்கொண்டு நின்றோம். “மெட்ராசிலிருந்து வந்திருக்கிறோம். சினிமா ஷூட்டிங் நடக்குமாமே, எங்கே?” என்று யாரையும் கேட்கவும் கூச்சமாக இருந்தது. தோல்வி முகத்துடன் ஈரோடு திரும்பத் தீர்மானித்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தபோது, “ஸார்! இங்கே எங்கே வந்தீங்க?” என்ற குரல் கேட்டது.

“அட! நீயா?” என்றார் சுந்தரேசன். (எப்போதும் அவருக்கு அந்த ராசி உண்டு. ஸஹாரா பாலைவனத்திற்குப் போனால் கூட, ஒட்டகத்தின் பின்னாலிருந்து ஒரு ஆள் எட்டிப் பார்த்து “ஸார்! நீங்களா!” என்று கேட்பான்!)

கூப்பிட்டவர் இளைஞர். சென்னையில் ராஜேந்திரன் என்ற டாக்டரின் தம்பி. அந்த ராஜேந்திரன் ஆஸ்திரேலியாவுக்குக் போய்க் கொட்டி முழக்கிக் கொண்டிருந்தார். (இப்போதும் கொட்டி முழக்கிக் கொண்டுதான் இருப்பார்!) ராஜேந்திரனை நானும், புனிதனும் பார்த்திருக்கிறோம். அவர் தம்பியைப் பார்த்ததில்லை. சுந்தரேசன் பார்த்திருக்கிறார், பழகியிருக்கிறார்.

கொஞ்சம் கூச்சத்துடன் நாங்கள் ஷூட்டிங் பார்க்க வந்த சிறுபிள்ளைத்தனத்தைச் சொன்னோம், “அதற்கு நீங்கள் கோபிசெட்டிப் பாளையம் போயிருக்க வேண்டும். பரவாயில்லை என்னோடு வாருங்கள். கார் இருக்கிறது. என் வீட்டுக்குப் போய்விட்டு மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்று அழைத்தார். இந்த மட்டில் துணை கிடைத்ததே என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லியபடி காரில் ஏறினோம். “எங்கே உங்கள் வீடு?” என்று புனிதன் கேட்டார்.

“அந்தியூர்” என்றார் அவர் (மறுபடியும் கவனியுங்கள்: அந்தியூர்!) “ஒரு வேலையாக இங்கே வந்தேன். ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம் நல்ல வேளையாக உங்களைப் பார்த்தேன்” என்றார்.

அந்தியூர் அழகான ஊர். மரங்கள் நிறைந்த ஒரு சாலையில் அவருடைய பெரிய வீடு. வீட்டைவிடப் பெரிய மனது டாக்டர் ராஜேந்திரனின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும். அருமையான சாப்பாடு போட்டார்கள். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கிரிக்கெட் மேட்சை டி.வி.யில் பார்த்தேன்.

“வாருங்கள், பன்னாரி அம்மன் கோவிலுக்குப் போகலாம்” என்று காரில் எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் ராஜேந்திரனின் தம்பி. (மறுபடியும் கவனியுங்கள்: பன்னாரி!)

பிள்ளையார் கோவில் மாதிரி சின்னக் கோவில். (அந்த நாளில்). அம்மனை தரிசித்து, கோவிலை வலம் வந்தோம். “அடிக்கடி ஷூட்டிங் நடக்கிற இடம் ஒன்று அருகில் இருக்கிறது. பார்க்கலாம் வாருங்கள்” என்றார் நண்பர்.

போனோம், பார்க்கவில்லை. ஏனெனில் அங்கே அன்று எந்த ஷூட்டிங்கும் நடைபெறக் காணோம். நீளமாய்ப் பாலம் மாதிரி குறுக்கே ஒன்று தெரிந்தது. ஆற்று நீர் அதன் மீதாக மெதுவே ஓடி வழிந்து கொண்டிருந்தது. அங்கே பல டூயட் காட்சிகள் எடுத்திருப்பதாக நண்பர் சொன்னார்.

அவருடன் திரும்பி ஈரோடுக்கு பஸ் ஏறினோம். அது என்ன ரூட்டோ தெரியாது. நல்ல தூக்கம். வழியில் கண்டக்டர், “சார்! இதுதான் பாக்யராஜின் ஊர். வெள்ளங்கோவில். அதோ அப்படிப் போனால் அவருடைய வீடு” என்றார்.

ஏதோ சிவன் கோவிலைப் பற்றிச் சொல்கிறார் என்று அரைத் தூக்கத்தில் எண்ணி ஹர ஹர மகா தேவா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.

(“வீரப்பனைப் பற்றி ஸாரி, வீரப்பரைப் பற்றி இந்தக் கட்டுரையில் ஒன்றும் காணோமே?!” என்று கேட்காதீர்கள். நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, ‘கிட்டத்தட்ட சந்தித்தேன்’ என்று? நான் அன்று சுற்றிய வட்டாரங்களில்தான் வீரப்பர் ஒரு காலத்தில் சுற்றியிருக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
எஸ்ஏபி
பாக்கியம் ராமசாமி என்ற ஜ.ரா. சுந்தரேசன்
சுந்தர பாகவதர் என்ற புனிதன்
ஹிந்து குறிப்பு
சுஜாதா தேசிகனின் அஞ்சலி
ரா.கி.ர.வுடன் ஒரு சந்திப்பு

12 thoughts on “ரா.கி. ரங்கராஜன்

  1. ரா. கி. ரங்கராஜனின் எழுத்துகள் பற்றிப் பேசும்போது அதிகம் பேசப்படுவது நான் கிருஷ்ணதேவராயன் என்றாலும் எனக்கு அவரது கையுடைந்த பொம்மை மிக பிடித்தமாக இருந்தது. அது போல ராசியும். அதில் கோத்திரம் பார்த்து, திருமணம் தடைப்படுகின்றபோது ஈழத்தில் கோத்திரம் என்ற வழமை எனக்குத் தெரிந்து இருக்கவில்லை. அது பற்றி பெரியவர்கள் பலரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது, அந்தக் கதைகள் அனேகம் மறந்துவிட்டாலும், பால்யத்தின் நினைவுகளாக அவற்றை வாசித்த நினைவுகள் இருக்கின்றன

    Like

  2. ஏகப்பட்ட புனைபெயர்களில் எண்ணிலடங்காத கதைகளை எழுதியிருக்கும் ராகிர கதாபாத்திரமாக ஒருமுறை உபயோகித்த பெயரை பின் எப்போதும் உபயோகிக்க மாட்டாராம். இது அவரது துணைவியார் கமலா ரங்கராஜன் தெரிவித்த தகவல்.

    Like

  3. அருண்மொழிவர்மன், இன்னொரு சின்ன வயது ரா.கி.ர. ரசிகரை சந்திப்பதில் மகிழ்ச்சி! ஒரு சின்ன திருத்தம், அது கையில்லாத பொம்மை, கையுள்ள பொம்மை அல்ல.

    எஸ்கேஎன், சுவாரசியமான தகவலுக்கு நன்றி!

    Like

  4. RV, I am shocked and amazed that you and Arun anna are also fans of Ra Ki Rangarajan. Your views on two of your favorite novels resonate with mine. I had read rathri varum as a child and it was indeed scary to read about Aarthi falling into the chemical cauldron and becoming gold.

    மனுஷன் நல்ல ரீல் விட்டிருக்கிறார் என்று பின்னாளில் புத்தகத்தை சயனில் ஒரு கண்காட்சியில் வாங்கிய போது புரிந்து கொள்ள முடிந்தது. பிர்ஜு மகாராஜ் அப்படி இப்படி என்று நல்ல கதை விட்டு இருக்கிறார். அப்போது கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. இப்போது மனுஷன் நன்னா பூ சுற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த நாவலில் பிடித்த விஷயம் அவர் சென்னையையும் அடையாரையும் விவரித்து இருந்தது தான். அடையாறில் அப்படி ஒரு கட்டிடம் இருக்குமா என்று ஆவல் எனக்குள் உண்டானது என்னவோ வாஸ்தவம்.

    ஜனா என்பவன் ஆர்த்தியின் தங்கையை கைப்பிடிப்பதாக முடிவு. வில்லன் பிர்ஜு மகாராஜ் என்று எண்ண வைத்து ஏமாற்றி விடுவார் மனுஷன். பட் அந்த காலத்து சென்னையை நம் கண் முன்னே நிறுத்தியதால் நாவல் மனதை விட்டு நீங்கவில்லை.

    கை இல்லாத பொம்மையை நான் அப்போது படிக்கவில்லை. ஆனால் சயனில் நடந்த புத்தக கண் காட்சியில் வாங்கினேன். அந்த முதல் அத்யாயம் நெஞ்சை அப்படியே உலுக்கி விடும். மாட்டுப்பெண் மாமனார் ஜெயிலில் விடுதலை ஆகி வந்திருப்பார் – அவருக்கு அப்படி பசிக்கும். ஆனால் குக்கர் வைக்கும் மருமகள் மாமனாரை சாப்பிடுங்கள் என்று சொல்ல மாட்டாள். இத்தனைக்கும் அவர் பண்ணிய குற்றம் போர்ஜ்ரி பண்ணியது. ஆனால் வயத்துக்கு வஞ்சனை பண்ணலாமா.சொல்லுங்கள்.

    அவர் பிள்ளை மணிகண்டனை செருப்பால் அடித்தால் என்ன என்று கூட தோன்றும். ஆனால் நடு நடுவே நீங்கள் சொல்வது மாதிரி கதை எங்கேயோ போய் விடும். ரீல் நிறைய சுற்றி இருப்பார். பக்கத்தை நிரப்புவது தான் நோக்கமோ?

    அதுவும் செங்கம் என்கிற பாத்திரம். மனுஷன் சும்மா எக்ஸ்ட்ரா marital affair ஐ நியாயப்படுத்துவார். ரொம்பவே இழுத்து இருப்பார். சென்னை பாஷையை ஒரு ஐயங்கார் எப்படி சரளமாக எழுதினார் என்று புரியவில்லை.

    கதையில் பிடித்தது

    ௧. அந்த மூன்று கைதிகளுக்கும் இடையே இருந்த அன்யோன்யம்
    பி. அந்த வயதானவரை ஒருவர் எதிர்பாராத விதமாக காப்பாற்றும் இடம் – அவரது மகனும் மருமகளும் திருந்துவதாக காட்டுவார்கள்.
    ௩. கதைக்கு ஏன் “கை இல்லாத பொம்மை” என்று பெயர் வைத்தார்? ஒன்லி போர் எபெக்ட் என்றே எண்ணுகிறேன். இத்தனைக்கும் அந்த வயதானவர் பேத்தி ரேகாவின் மேல் வைத்திருக்கும் பாசம் மனதை நெகிழ செய்யும்.
    ௪. பிடித்த கேரக்டர் என்றால் ஆளவந்தார். அவரது மென்மையான காதல் கதை அனுபமாவுடன். இன்னிக்கும் ஆளவந்தாரின் பங்களா சென்னையில் எங்கே இருக்கிறது என்று பார்க்க ஆசை. ஆளவந்தார் வரும் இடமெல்லாம் சுவாரஸ்யம் தான்.
    கி. முடிவு தான் சற்றே ஏமாற்றம். ஆளவந்தார் மறுபடியும் ஜெயிலுக்கு போவார்.. உள்ளே ஒரு கிராதகன் அவரை பழி வாங்க காத்துக்கொண்டு இருப்பான்…மற்ற எல்லார் முகத்திலும் கலவரம் இருக்கும். என்ன தான் அவர் செங்கத்தை காப்பாற்றினாலும் போலி டாக்டர் போலி டாக்டர் தானே.

    ஆனால் “கை இல்லாத பொம்மை” ஒரு சுவாரஸ்யமான நாவல் என்பதை மறுப்பதற்கு இல்லை.

    இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் “தர்மங்கள் சிரிக்கின்றன”. ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை தெரியவில்லை. அதில் காமராஜர் மாதிரி ஒரு பாத்திரப்படைப்பு. இந்து, பாசு மற்றும் இந்துவின் ஏழை அத்தை பையன். கொல்கத்தா முதல் அமைச்சர் பேரை கதாநாயகனுக்கு வைத்து விட்டார்,

    இந்த இரண்டு கதைகளும் தொலைக்காட்சி தொடராக பண்ணலாம். பூனைக்கு யார் மணி கட்டுவது? அதுவும் லக்ஷ்மியின் தேடிக்கொண்டே இருப்பேன் கூட திரைப்படமாக ஆகி இருக்கலாம். தமிழ் தயாரிப்பாளர்கள் கோட்டை விட்டு விட்டார்கள்.

    Like

    1. சந்திரா, நல்ல அலசல். நீங்கள் அனுமதித்தால் இந்தத் தளத்திலேயே ஒரு guest post ஆகப் பதித்துவிடுகிறேன். உங்களுக்கு சம்மதத்தை தெரியப்படுத்துங்கள் (சம்மதம் இல்லை என்றால் ஒரு பிரச்சினையுமில்லை). முடிந்தால் உங்கள் புகைப்படம் ஒன்றை rv dot subbu at gmail dot com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

      Like

  5. ஆர் வீ … கரும்பு தின்னக்கூலியா..தாராளமாக விருந்தினர் பக்கம் என்று போடுங்கள். ஆனால் புகைப்படமெல்லாம் எதற்கு ஆர் வீ. நீங்கள் இந்த அளவுக்கு சொன்னதே எனக்கு ஒரு விருது மாதிரி தான்.

    கை இல்லாத பொம்மையின் முன்னுரையில் ரங்கராஜன் எழுதி இருந்தார் – ” எப்படி இந்தக்கதையை எழுதினேன் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது. பல கிரைம் நாவல்களைப் படித்ததன் விளைவாக இருக்கலாம்”.

    ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. குமுதம் அவருக்கு பொன் விலங்கு மாட்டியது என்று தான் சொல்ல வேண்டும். அவரே ஹிந்துவில் கொடுத்த பேட்டியில் நிறைய விருதுகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் புனைப்பெயர்களில் எழுதியது தான் என்று ஒப்புக்கொண்டார். அவர் மறைவு எனக்குள் ஒரு சொல்ல முடியாத சோக உணர்வைத்தான் ஏற்படுத்தியது.

    எஸ் எ பியின் மகன் இவர்களை சரியான முறையில் நடத்தினாரா என்று தெரியவில்லை. பாவம் – பத்திரிகை உலகில் என்ன பெரிதாக சம்பாதித்து இருக்க முடியும் என்று தோன்றியது. பல வருடங்கள் குமுதத்தில் வேலை பார்த்து விட்டு வெளியே வந்த போதும் அவரது ஆசிரியர் மீது நன்மதிப்பையே வைத்து இருந்தார் ரங்கராஜன். எல்லோராலும் குமுதத்தில் வேலை பார்த்திருக்க முடியாது தான். பிரபஞ்சன் ஒரு முறை எழுதியிருந்தார் – காலையில் குமுதம் ஆசிரியக்குழு அமரும் – பகவத் கீதையைப்பற்றி பேசி விட்டு , பிறகு அட்டையில் எந்த பெண்ணின் கவர்ச்சி புகைப்படத்தைப்போடலாம் என்று ஆலோசனை செய்வார்கள் என்று.
    எஸ் ஏ பி ரொம்ப கண்டிப்போ என்று கூடத் தோன்றியது.
    எஸ் ஏ பியின் மறைவுக்கு பிறகு அவரது மகனும் பார்த்தசாரதியின் மகனும் சண்டை போட்டு நாறியது எல்லாருமே அறிந்தது தான்.
    புதிதாக வந்தவர்கள் குமுதத்தின் தரத்தை தரை மட்டத்துக்கு ஆக்கி விட்டார்கள் – குமுதத்தின் தரம் ஒன்றும் ஒசத்தி இல்லை தான் . ஆனால் பிரியா கல்யாணராமன் போன்றோர் வந்த பிறகு கழுதை கெட்டால் குட்டிச்சுவார் கேஸ் என்றாகி விட்டது. தவிர brand extensions வேறு
    – பக்தி, சிநேகிதி, என்று…

    ]

    Like

    1. சந்திரா, புகைப்படம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆட்சேபணை இல்லை என்றால் அனுப்புங்களேன்!

      Like

  6. கிருஷ்ண குமார் என்ற பெயரில் ரங்கராஜன் எழுதி வந்தார் . எதற்காக இத்தனை புனைப்பெயர் கள் என்றே புரியவில்லை. மார்க்கெட்டிங் உலகில் சொல்வது போல் தனித்தனியாக பிராண்டிங் பண்ணுவதற்காக எஸ் ஏ பி தான் புனைப்பெயரை பிரயோகம் பண்ணச்சொன்னாரோ?

    செல்லப்பா என்றொரு சினிமா நிருபர் இருந்தார். அவர் தான் சினிமா தகவல்களை ரங்கராஜனுக்கு கொடுப்பார். இவர் அதை வினோத் என்ற பெயரில் எழுதி வந்தார்.
    குரு பட ஷூட்டிங் போது கமலஹாசனுக்கு அடிபட்டது என்று ஏதோ எழுதப்போக கமலுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் உண்டானதாம். பின்னாளில் மகாநதி படத்தின் திரைக்கதையை எழுத கமல் ரங்கராஜனைத்தான் அணுகினார் என்று எண்ணுகிறேன். ஆனால் பாவம் இவர் ஒரு staunch குமுதம் loyalist (அபிமானி) போல.

    இவர் பாலகுமாரன் மாதிரியோ தேவிபாலா மாதிரியோ பணம் பண்ணவில்லை என்றே தோணுகிறது. சுஜாதாவும் “என் கதைகளை கொலை பண்ணி விட்டார்கள்” என்று மூக்கால் அழுதாலும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தனது கதையை விற்று க்கொண்டு தான் இருந்தார்.

    பட்டுக்கோட்டை பிரபாகர் கூட தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதி துட்டு பார்த்து விட்டார். இந்திரா சவுந்தர்ராஜன் நன்றாக எழுதினாலும் கதையை ரம்பம் மாதிரி இழுத்து ஒரு வழி பண்ணி விடுவார்.

    ரங்கராஜன் நல்ல மனிதர். பிழைக்க த் தெரியாதவர் என்று கூட கூறலாம். மன்னிக்கவும் – இப்படி கூறியதற்கு.

    Like

  7. என்ன ஆச்சரியம்! ரா.கி.ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு கதை ஒன்று எழுதலாம் என்று அமர்ந்த போது இந்த ஆர்.வி.என்னும் நண்பரர் விமர்சகராகப் பார்த்தேன். நானும் சிறு வயதில் இருந்தே ரா.கி.யின் ரசிகன். நான் சினிமா எழுத்தாளனாகி 35 வருடங்களுக்கு மேலாகிறது. புதுமைப் பித்தனை தெரியாத இந்த தமிழ்நாட்டில் வெறும் சினிமா எழுத்தாளனை எப்படி தெரியும்? கிரேஸி மோகனைத் தெரிய கமல ஹாசனது நிழல் அவர் நிழலாக இருந்தது முக்கிய காரணம்.ஒருகாலத்தில் ஐயர்களைத்தவிர யாருமே பரத நாட்டியம்,கர்நாடக சங்கீதம் துறைகளில் வர முடியாது என்ற சித்தாந்தம் பத்திரிகை எழுத்து துறைகளில் இருந்தது,அதுவும் ஆனந்த விகடன்-சிவசங்கரி-இந்துமதி- பாலகுமாரன் போன்றவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிய காலத்தில் குமுதம் ரா.கி.யை வைத்துக் கொண்டது ஆச்சரியம்தானே! அவரது கடைசி காலங்களில் நான் கலந்து கொண்ட பாக்கியராஜ் கதை விவாதங்களில் கலந்து-கரைந்து-காணாமல் போன அவருடன் பழகியிருக்கிறேன்,, சினிமா திரைக்கதை அமைப்பதில் பல எழுத்தாளர்களுக்கு தோல்விதான்…காரணம் பக்கம் பக்கமாக படிக்க எழுதுவது வேறு…பார்க்க காட்சி அமைப்பது வேறு…எப்படியோ நல்ல இலக்கிய குழு ஒன்றில் இணைய வழி காட்டிய நண்பர்-ஆர்.வி.க்கு நன்றி,,,,விரும்பினால் தொடருவேன்,,,பல சுவையான சினிமா தகவல்களுடன்- கொசுறு-நானும் அமெரிக்கா வாசியாக 15 வருடங்கள் இருந்தவன் தான்- தற் சமயம் சினிமாவுக்கு திரைக்கதை-வசனம் எழுது ஆன்-லைன் பயிற்சி வகுப்பு ஆசிரியராக இருக்கிறேன் ஆர்.வி.!

    Like

    1. உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி தினகரன் காசி விஸ்வநாதன்! கரும்பு தின்னக் கூலியா, நிச்ச்யமாக எழுதுங்கள்! என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள், rv dot subbu at gmail dot com

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.