கல்கியின் நகைச்சுவை கட்டுரைகள் – “ஏட்டிக்கு போட்டி”

(மீள்பதிப்பு)

நீங்கள் ஒரு முப்பது வருஷத்துக்கு முன் ப்ளஸ் டூ, கலைக் கல்லூரிகளில் படித்தவரா? ஜெரோம் கே ஜெரோம், ஈ.வி. லூகாஸ், ஸ்டீஃபன் லீகாக் போன்றவர்களின் எழுத்துகளை அப்போது பாடமாக படித்திருக்கலாம். சில சமயங்களில் புன்னகை செய்யலாம். டைம் பாஸ் எழுத்துதான், ஆனால் லீகாக்கின் சில கட்டுரைகள் இலக்கியத்துக்கு அருகிலாவது வரும். ஜெரோமின் Three Men in a Boat ஒரு க்ளாசிக் என்று கருதப்படுகிறது.

கல்கி, தேவன், எஸ்.வி.வி., நாடோடி, துமிலன், சாவி மாதிரி சிலர் அந்த மாதிரி எழுத முயற்சித்திருக்கிறார்கள். என் கண்களில் வெற்றி பெற்றவர்கள் கல்கியும், எஸ்விவியும், தேவனும் மட்டுமே.

ஏட்டிக்குப் போட்டி அவர் விகடனில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்று நினைக்கிறேன். அவரது எல்லா படைப்புகளிலும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை இங்கு நன்றாகவே வெளிப்படுகிறது. அதுவும் “பூரி யாத்திரை” என்ற கட்டுரையில் பூரியின் பண்டா ஒருவர் இவர் கோஷ்டியிடம் பணம் வாங்க படாத பாடு படுகிறார். என்னவெல்லாமோ சொல்லிப் பார்க்கிறார். இவர்கள் கோஷ்டியில் இருக்கும் பந்துலு லேது லேது என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். பண்டா கடைசியில் ஒரு புரோ நோட்டில் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்கிறார். யாருக்கு புரோ நோட்டு? பூரி ஜகன்னாதருக்கு! கையில் பணம் இல்லை என்றால் பரவாயில்லை, ஊருக்கு போய் இருபது ரூபாய் அனுப்புகிறேன் என்று பூரி ஜகன்னாதரிடம் கடன் சொல்லு என்கிறார் பண்டா. பார்த்தார் பந்துலு. பக்கத்தில் இருக்கும் ஒரு ராவை முன்னால் தள்ளி இவரிடம் பணம் திருட்டு போய்விட்டது, நீங்கள் ரயில் செலவுக்கு உதவமுடியுமா என்று பண்டாவை பணம் கேட்கிறார்! பண்டா பிடித்தார் ஓட்டம்!

வாழ்க்கையின் அபத்தங்கள் அவருக்கு கண்ணில் நன்றாக படுகிறது – கண்ணகி நாடகத்தில் அங்க தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் இறந்து போனதைப் பற்றி கோவலன் பாட வேண்டி இருக்கிறது!

சமயத்தில் கல்கி ஜெரோம் கே. ஜெரோம் போன்றவர்களை காப்பியே அடிப்பார் என்று டோண்டு ராகவன் எழுதுகிறார். இந்த தொகுப்பில் அவர் சொன்ன கட்டுரையைத் தவிர வேறு ஏதாவது காப்பி கீப்பி உண்டா தெரியாது.

இன்றே படிக்க முடிகிறது என்றால் கட்டுரைகள் வந்த 1930-களில் இவை பெருவெற்றி பெற்றிருக்கும். பூரி யாத்திரை கட்டுரையை இணைத்திருக்கிறேன். பத்து பக்கம்தான். முழு புத்தகத்தையும் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். (ஒரத்தநாடு கார்த்திக்குக்கு நன்றி!) கல்கியின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருப்பதால் எந்த விதமான சட்டப் பிரச்சினையும் இல்லை. கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

  • கல்கி – ஒரு மதிப்பீடு
  • கல்கி காப்பி அடித்தது
  • ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”

    சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். அதனால்தான் இந்தப் பழைய பதிவைத் தேடிப் பிடித்து மீள்பதித்திருக்கிறேன். ஒரிஜினல் பதிவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து சிறு மாறுதல்களோடு கட் பேஸ்ட் செய்யப்பட்டதுதான். 🙂

    ஜெயகாந்தனின் பல நாவல்கள் எனக்குப் பிடித்தமானவைதான். ஆனால் அவற்றின் முடிச்சுகள் இன்றே கூட காலாவதி ஆகிவிட்டனவோ என்றுதான் தோன்றுகிறது. யுகசந்தி மாதிரி சிறுகதைகளை விடுங்கள், சில நேரங்களில் சில மனிதர்களின் நாயகி கங்காவுக்கு என்ன பிரச்சினை? ஒரு நாள் எவனுடனோ படுத்ததெல்லாம் ஒரு விஷயமா? ஆமாம், அது பிரச்சினை என்றை நம்மை ஒத்துக் கொள்ள வைத்து அதிலிருந்து ஏற்படும் விளைவுகளின் மூலம் என்றென்றும் உள்ள மனித உணர்வுகளை நம்மை தரிசிக்க வைப்பதில்தான் ஜெயகாந்தனின் வெற்றி அடங்கி இருக்கிறது. ஆனால் பில்டிங் எத்தனை ஸ்ட்ராங்காக இருந்தபோதிலும் பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்காக இல்லையா?

    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளும் அப்படித்தான். ரங்காவுக்கும் கல்யாணிக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கும் சரி, மனவிலக்கத்துக்கும் சரி, வலுவான காரணங்கள் எதுவுமில்லை. ஈர்ப்புக்காவது கல்யாணி ஒரு ஆண் துணையைத் தேடுகிறாள், சூழ்நிலை கொஞ்சம் மாறி இருந்தால் அவள் தனது mentor ஆன சாமியுடன் கூட தன் வாழ்வைப் பிணைத்துக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது, ரங்கா மீது ஒன்றும் தெய்வீகக் காதல் இல்லை, ஈர்ப்புதான் என்றும் வாசித்துக் கொள்ளலாம். மனவிலக்கத்துக்கு பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் பாத்திரப் படைப்பு, ரங்காவின் அடிப்படை குணங்களான மனிதநேயம், கனவான் தன்மை, ரங்காவின் குடும்பத்தினரின் பாசம் வெளிப்படும் விதம், கல்யாணியின் மன உறுதி, அவளுடைய நவீனத் தன்மை எல்லாம் நெகிழ வைக்கிறது. கல்யாணியின் விழுமியங்கள் – வைப்பாட்டியாக வாழத் தயாராக இருப்பது – இன்று பழையதாகி விட்டிருக்கலாம். ஆனால் அவள் அன்றும் இன்றும் புதுமைப் பெண்தான். ஆணுக்கு கொஞ்சம் குறைவான சமூக அந்தஸ்து அவளுக்கு தவறாகப் படாமல் இருக்கலாம். ஆனால் அவள் மனதில் ஆணுக்கு உயர்ந்த இடம் என்று எதுவும் இல்லை. ரங்கா அவளுக்குத் துணையாக இருப்பதைப் பற்றி அவளுக்கு எந்த காம்ப்ளெக்சும் இல்லை. ஆனால் ரங்கா விலகிப் போயிருந்தால் அவள் சமாளித்துக் கொண்டிருப்பாள். ரங்காவிடம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு. ஆனால் ரங்காவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உணமையைச் சொல்லப் போனால் ரங்காவிடம்தான் கொஞ்சூண்டு பலவீனம் தெரிகிறது.

    மீண்டும் பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கோ வீக்கோ, அதைப் பற்றி கவலைப்படாமல் பில்டிங் எத்தனை சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது என்றுதான் ஜெயகாந்தன் நம்மை உணர வைக்கிறார்.

    சிம்பிளான கதை. பெரிய சிக்கல் எதுவும் கிடையாது. கல்யாணி நாடக நடிகை. சினிமாவிற்கு போக விரும்பவில்லை. தனிக்கட்டை. நாடகம்தான் அவள் வாழ்க்கையின் அர்த்தம் என்று சொல்லலாம். நாடக விமர்சனம் செய்யும் ரங்கா மீது ஆசைப்படுகிறாள். ரங்காவிடம் அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை – திருமணம் என்ற அங்கீகாரம் உட்பட. வைப்பாட்டியாக இருக்கவும் ரெடி. ஆனால் ரங்கா அவளை மணந்துகொள்கிறான். ஒரு சராசரி அறுபதுகளின் ஆணாக (இன்றைய ஆணிடமிருந்து பெரிய வித்தியாசம் இல்லை), தான்தான் தலைவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். தன் மேல் அவளுக்கு “காதல்” இருக்க வேண்டும், தனக்காக அவள் எதையும் இழக்க தயாராக இருக்க வேண்டும், அவளுக்கு உயிரான நாடகத்தையும் துறக்க வேண்டும் என்று நினைக்கிறான். அவளோ அவனுக்கு சமமான இடத்தை குடும்பத்தில் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். ப்ராக்டிகலான பெண். இத்தனைக்கும் சமையல், துவைத்தல் எல்லாம் அவள் வேலைதான். இதனால் ஏற்படும் பிரிவு, பிணக்கு அவள் நோய்வாய்ப்படும்போது தானாக தீர்ந்துவிடுகிறது.

    ஜெயகாந்தன் இதை மிக அழகாக எழுதி இருக்கிறார். ஆண், பெண் இருவரின் நோக்கும் புரிந்து கொள்ளக்கூடியவை. அவர்களது உள்மன சிக்கல்களை மிக நன்றாக வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

    ஜெயகாந்தன் கதைகளில் எல்லாரும் பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். பேசாத போது அவர்கள் சிந்தனைகள் – அவர்கள் தனக்குத் தானே பேசுவது போல இருக்கும் – பக்கம் பக்கமாக வரும். இந்த நாவலிலும் அப்படித்தான். ஆனால் அது பொருந்தி வருகிறது, அதுதான் விசேஷம். அதுவும் குறிப்பாக அவர்கள் இருவரும் விவாகரத்து வேண்டுமென்று ஒரு வக்கீலிடம் போவார்கள். அந்த வக்கீல் பாத்திரம் அற்புதம்!

    அந்தக் காலத்து விழுமியங்களை உண்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி தாசி வீட்டில் பிறந்தவள். அவளுக்கு வைப்பாட்டியாக இருப்பது பற்றி தாழ்வுணர்ச்சி எதுவுமில்லை. ஆனால் நாயகன் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்றதும் அவளுக்கு புல்லரிக்கிறது. நாயகனின் நட்பு வட்டாரத்தில் ஒரு நடிகையை வச்சுக்கலாம், ஆனால் “திரும்பி வர வேண்டும்”, இல்லை சொந்த ஜாதியில் கல்யாணம் செய்துகொண்டு நடிகையை வச்சிக்க, அப்பத்தான் வீட்டுப் பெண்ணுக்கு பயம் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதையே ஒரு அகிலனோ, நா.பா.வோ எழுதி இருந்தால் நானே கிழிகிழி என்று கிழித்திருப்பேன். ஜெயகாந்தனின் திறமை அதை உண்மையான, நடக்கக் கூடிய ஒன்றாக காட்டுவதில் பளிச்சிடுகிறது.

    இந்த நாவல் ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும், எஸ்.ரா.வின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. ஆனால் ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி இப்படி சொல்கிறார்.

    ஜெயகாந்தனின் இரு பிற நாவல்களை குறிப்பிடத்தக்கனவாக கருதுகிறேன் – ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரீஸுக்குப் போ. இவ்விரு நாவல்களிலும் ஜெயகாந்தனின் படைப்பாளுமை கதாபாத்திரங்களையும் கதைக்கருக்களையும் உருவகம் செய்வதில் வெற்றி கண்டுள்ளபோதிலும் இப்படைப்புகள் மெல்ல மெல்ல தேய்ந்து சென்று முக்கியத்துவம் இழப்பதாகவே எனக்கு படுகிறது.

    பிற்சேர்க்கை: இந்த நாவல் பற்றி திண்ணை தளத்துக்கு அளித்த பேட்டியில் ஜெயகாந்தன் சொன்னது:

    இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள். ஒரு பாத்திரம் சிந்திக்கிற பொழுது, தன் அறிவினால் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களாக மாறுகிறார்கள். அவள் ஓரளவிற்குப் படித்தவள். ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்தவள். வாழ்க்கையில் ஆண் துணை வேண்டும் என்று சிந்தித்து செயல்படுகிறாள். அவர்(சாமி) முன்னாலே ப்ரொபோஸ் பண்ணியிருந்தால், அவருடன் கூட அவள் இருந்திருக்கக் கூடும். அவளுக்குப் பத்திரிகை நிருபராய் வரும் ரங்காவிடம் ஒரு ஈடுபாடு. அவள்தான் அவனுக்குக் கடிதம் எழுதி இந்தக் கடிதம் எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் வந்து சந்திக்கவும் என்று எழுதுகிறாள். ஆனால் ரங்கா அவளை பேட்டி காண்பவனாக வருகிறான். போட்டோவிலே கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்பான். போட்டோவிலேயாவது கையெழுத்துப் போடலாமில்லையா? என்று கேட்பான். துர்கனேவ்-இன் ஒரு நாவலில் நாயகி இப்படித் தான் தனக்குப் பிரியமானவனுக்கு எழுதுகிறாள். அதைப் படித்ததன் விளைவு என்று பிறகு கண்டுபிடித்தேன். அவள் கால் விளங்காமலான பிறகு, மனிதாபிமானத்தோடு இணைகிறான். அதன் காரணமாக அவளை விவாகரத்து செய்து விடலாம் என்று சட்டம் சொல்லும் பொழுது அது அவனுக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. மனிதாபிமானத்திற்கு விரோதமென அவனுக்குத் தோன்றுகிறது. காதலுக்கு அடிப்படை மனிதாபிமானம்தான். அதுதான் இந்த நாவலில் வலியுறுத்தப்படுகிறது.

    புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. நண்பர் திருமலைராஜன் இரவல் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். அவருக்கு நன்றி!

    லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்து பீம்சிங் இயக்கத்தில் படமாகவும் வந்தது. (வக்கீலாக நாகேஷாம் நாகேஷ்) நான் பார்த்ததில்லை. லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், நாகேஷ், ஒய்.ஜி.பி. எல்லாரும் நன்றாக நடித்திருந்தாலும் ரொம்பப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தில் இத்தனை வசனம் இருக்கக் கூடாது. இதுதான் பீம்சிங் இயக்கிய கடைசி திரைப்படமாம். சாரதாவின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

    எனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்று. ஆனால் தமிழ் இலக்கியத்தின் முதல் வரிசை நாவல்களில் கூட வைக்கமாட்டேன். முரண்பாடாகத்தான் இருக்கிறதோ?

    குறைகள் இருந்தாலும் திரைப்படத்தையும் பார்க்கலாம்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

    தொடர்புடைய பதிவுகள்:

  • ஜெயகாந்தனின் திண்ணை பேட்டி
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதாவின் திரைப்பட விமர்சனம்
  • ஜெயகாந்தன்+இந்த நாவலைப் பற்றி ஜெயமோகன்
  • தமிழறிஞர் வரிசை 17: வில்லுப்பாட்டுக்களை எழுதிய அ.க. நவநீதகிருஷ்ணன்

    2009-இல் இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான் இவரது பேரை முதல் முறையாக கேள்விப்பட்டேன். மறைந்த சேதுராமன் அவரைப் பற்றி ஒரு அறிமுகக் கட்டுரை எழுதினார். பள்ளியில் தமிழாசிரியர், இலக்கியக் கட்டுரைகள் எழுதுவார் என்றதும் பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. சமீபத்தில் வள்ளுவர் சொல்லமுதம் என்ற புத்தகத்தின் ஒரு பகுதி இணையத்தில் கிடைத்தது. எனக்கான புத்தகம் அல்ல, ஆனால் குறள்களின் கருத்துகளை மற்ற பாடல்களோடு நன்றாக ஒப்பு நோக்குகிறார். பண்டிதர், நல்ல ஆசிரியராக இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. ஆழமாகவும் அகலமாகவும் தமிழ் இலக்கியங்களை பயின்றிருக்கிறார், ஆனால் அனேகமாக கோனார் நோட்ஸ் லெவலில்தான் – அதாவது ஆரம்ப நிலை விளக்கங்களாகத்தான் – அவரது புத்தகங்கள் இருக்கின்றன. புதிதாக நமக்கு – குறைந்தபட்சம் எனக்கு – எந்த தரிசனமும் கிடைத்துவிடவில்லை.

    நவநீதகிருஷ்ணன் தானே சில வில்லுப்பாட்டுகளை எழுதி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் வில்லுப்பாட்டு இலக்கியமாகக் கருதப்பட்டிருக்காது. வாய்மொழி இலக்கியம் என்ற கருத்தே இருந்திருக்காது. அப்போது இவர் அவ்வையார் கதை, கண்ணகி கதை, தமிழ் வளர்ந்த கதை, திருவள்ளுவர் கதை என்ற நாலு வில்லுப்பாட்டுகளைத் எழுதி இருப்பது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது. இவற்றில் மூன்று இணையத்தில் கிடைக்கின்றன. (எதுவும் என் ரசனைக்கு ஒத்துவரவில்லை, எதையும் நான் பரிந்துரைக்கமாட்டேன்.)

    நவநீதகிருஷ்ணன் மாதிரி பண்டிதர்கள் இன்னும் இருக்கிறார்களா, அவர்களுக்குத் தேவை இருக்கிறதா, அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து இருக்கிறதா என்ற சந்தேகமாகத்தான் இருக்கிறது. நான் கவிதையைக் கண்டால் ஓடுபவன், ஆனால் என் கண்ணோட்டத்தில் கூட எல்லாக் காலங்களிலும் இந்த மாதிரி பண்டிதர்கள் நிச்சயமாகத் தேவை. என்ன, இவர் போன்றவர்களை நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஒருவரை மற்றொருவர் மிகச் சுலபமாக ஈடு செய்யலாம் என்று கருதுகிறேன்.

    நான் சிறுவனாக இருந்த காலத்தில் கோவில்களில் கீரன் போன்றவர்கள் ஆன்மீக இலக்கியங்களைப் பற்றி பேசுவார்கள். கூட்டமும் வரும். கம்பன் கழகம் என்று ஒன்று இருந்தது. ம.பொ.சி., மு.மு. இஸ்மாயில், சௌந்தரா கைலாசம், கி.வா.ஜ. என்று பலரும் எழுபதுகளில் கூட தமிழ் இலக்கியத்தைப் பற்றி சொற்பொழிவாற்றுவார்கள். இன்று தமிழ் பேராசிரியர்களுக்கு, இந்த மாதிரி இலக்கிய வாசிப்புகளுக்கு ஏதாவது மரியாதை இருக்கிறதா? கு. ஞானசம்பந்தன், சாலமன் பாப்பையா முறையே பெரியபுராணத்தையும் குறளையும் கரைத்துக் குடித்தவர்கள் என்று கேள்வி. ஆனால் அவர்களுக்கும் பட்டிமன்ற நீதிபதியாகத்தான் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது.

    என் கணிப்பில் இவர் வில்லுப்பாட்டு வடிவத்தை முயற்சித்திருப்பதால் மட்டுமே இலக்கிய வரலாற்றில் அடிக்குறிப்பு (footnote) என்ற அளவில் நினைவு கூரப்படுவார்.

    வேறு புத்தகங்கள் பல இங்கே பலவும் கிடைத்தன. ஒரு விதத்தில் பார்த்தால் அறநூல் தந்த அறிவாளர் எல்லாம் பண்டிதர்கள் பேசுவது எழுதுவது. காவியம் செய்த மூவர் புத்தகத்தில் இளங்கோ/சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தனார்/மணிமேகலை, சேக்கிழார்/பெரிய புராணம் பற்றி எழுதி இருக்கிறார். பாரதியாரின் குயில் பாட்டைப் பற்றிய புத்தகம் கோனார் நோட்ஸேதான்.

    சேதுராமன் அப்போது எழுதிய அறிமுகத்தை மீள்பதித்திருக்கிறேன். ஓவர் டு சேதுராமன்!

    நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

    திருநெல்வேலி மாவட்டத்திலே, அம்பாசமுத்திரத்துக்கு அருகிலுள்ள ஊர்க்காடு என்னும் சிற்றூரில் பிறந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் தந்தையார் அங்குள்ள குறுநிலமன்னரின் அவைக்களப் புலவராக விளங்கியிருந்த ‘அரசவரகவி’ அங்கப்ப பிள்ளையென்பவர். அவருடைய மக்கள் மூவரில், நடுவர்தான் கங்காதர நவநீத கிருஷ்ணன்.

    அ.க.ந. பள்ளிக் கல்வியைக் கற்று முடித்தபின் புலமைக் கல்வியும் கற்றுச் சிறப்படைய விரும்பியதால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். கல்வி கற்கும்போதே செய்யுள் பாடவும், இயற்றவும் கட்டுரைகள் எழுதவும் வல்லவரானார். இவர் கல்வி பயிலும்போது நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும் அண்ணாமலையில் கல்வி பயின்று கொண்டிருந்தனர். அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய நன்மதிப்பையும் பெற்றவர் நவநீதகிருஷ்ணன்.

    புலவர் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற பிறகு, திண்டுக்கல் புனித சூசையப்பர் மகளிர் உயர் நிலைப்பள்ளியில் ஈராண்டுகள் பணி புரிந்தார். சிவகாசி மகாராஜ பிள்ளை அவர்களின் ஒரே மகளான பிச்சம்மாளை மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். திருமணமான பிறகு, பாளையங்கோட்டையில் குடியேறி நெல்லையில் பணி புரியலானார். மந்திரமூர்த்தி உயர் நிலைப் பள்ளியில் ஒன்பது ஆண்டுகளும், பின்னர் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கலாசாலைப் பள்ளியில் பதினைந்து ஆண்டுகளும் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

    தமிழ்ப் பணியோடு சிவப் பணியையும் இடையிடையே செய்து வந்ததால், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் இவருடைய புலமையைப் பயன்படுத்தத் தொடங்கினர். காலத்துக்கு வேண்டியவாறு நூல்களை எழுதிப் பொருளும் புகழும் பெற்றார். திருக்குறளைப் பலருக்கும் போதித்ததோடு “வள்ளுவர் சொல்லமுதம்” என்னும் நூலையும் (நான்கு பகுதிகள்) எழுதினார். திருவள்ளுவர் கழகத்திற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் தலைவராக இருந்தவர், நெல்லையப்பர் கோயிலிலும் ஈராண்டுகள் திருக்குறள் விரிவுரையாற்றினார்.

    இவரது தமிழ்த் தொண்டையும், சிவத் தொண்டையும் பாராட்டிய மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் இவருக்கு “தமிழ்க் கொண்டல்” என்ற சிறப்புப் பெயரையும், தருமபுரம் ஆதீனம் “செஞ்சொற்புலவர்” என்ற பெயரையும் வழங்கினர்.

    1967ம் வருடம் சித்திரை முதல் தேதியன்று, கைத்தொழில் பொருட்காட்சியில் செய்யும் தொழிலின் ஏற்றத்தைப் பற்றி நெசவாளர்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்திய பின் இல்லத்தை அடைந்தவர் திடீரென்று காலமானார்.

    இவர் இயற்றிய நூல்களின் பட்டியல் வருமாறு:

    1. வள்ளுவர் சொல்லமுதம் (நான்கு பகுதிகள்)
    2. அறநூல் தந்த அறிவாளர்
    3. தமிழ் காத்த தலைவர்கள்
    4. காவியம் செய்த மூவர்
    5. இலக்கியத் தூதர்கள்
    6. கோப்பெருந்தேவியர்
    7. இலக்கிய அமைச்சர்கள்
    8. தமிழ் வளர்த்த நகரங்கள்
    9. முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
    10. வள்ளலார் யார்?
    11. பாரதியார் குயில்பாட்டு
    12. முதல் குடியரசுத் தலைவர்
    13. தமிழ் வளர்ந்த கதை
    14. ஔவையார் கதை (வில்லுப் பாட்டு)
    15. கண்ணகி கதை (வில்லுப் பாட்டு))
    16. திருவள்ளுவர் கதை (வில்லுப் பாட்டு)
    17. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை
    18. அடுக்குமொழி ஆவுடையப்பர் வரலாறு

    (தகவல் நன்றி — தமிழ்ப் புலவர் வரிசை பத்தாம் பகுதி — ஆசிரியர் சு.அ. இராமசாமிப் புலவர் — பதிப்பாளர் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்- சென்னை. 1973)

    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள், சேதுராமன் பக்கம், நாட்டுடமை பக்கம்

    கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு

    இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் வசந்த் கதைகள் ப்ளாகிலிருந்து இங்கே மீண்டும் பதிப்பித்திருக்கிறேன்.

    கணேஷின் முதல் தோற்றம் நைலான் கயிறு நாவலில். அறுபதுகளின் பின் பாதியில் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கணேஷ் ஒரு துணை கதாபாத்திரம். அப்போதெல்லாம் அவருக்கு டெல்லி வாசம். வசந்த் கிடையாது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கோ ஆஜராகி அவருக்கு விடுதலை வாங்கித் தருவார். பாதி கதையில் காணாமல் போய்விடுவார்.

    வசந்த்துக்கு முன்னால் கணேஷுக்கு நீரஜா என்று ஒரு அசிஸ்டன்ட் உண்டு. பாதி ராஜ்யம் என்ற கொஞ்சம் நீளமான கதையில் முதன் முதலாக க்ளையன்டாக வருவார். பிறகு ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அசிஸ்டன்டாக ப்ரமோஷன். அனிதா இளம் மனைவி வரும்போது நீரஜாவை கழற்றிவிட்டார். அந்த சமயத்தில் கணேஷ் கொஞ்சம் ஈயடிக்கும் வக்கீல், நிறைய கேஸ்கள் கிடையாது. ஜேகே-யில் ஜாமீனில் எடுக்க வேண்டும் என்று கணேஷுக்கு ஃபோன் செய்வார்கள், ஆனால் கணேஷ் பங்கு அவ்வளவுதான்.

    கணேஷ் எப்போது டெல்லியிலிருந்து சென்னை வந்தார் என்று சரியாகத் தெரியவில்லை. சென்னை வந்த பிறகுதான் வசந்த் வந்து ஒட்டிக்கொள்வார். வசந்தின் முதல் தோற்றம் மாயாவில். காயத்ரி தொடர்கதையாக வந்தபோது ஜெயராஜின் ஒரு படம் பார்த்து மனம் கிளர்ந்தது ஞாபகம் இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் அது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி கதைதான். சாவி ஆசிரியராக இருந்த பத்திரிகை, எது என்று சரியாக நினவு இல்லை. தினமணி கதிரோ? பிறகு ப்ரியாவில் வசந்துக்கு ஒரு கௌரவத் தோற்றம். அதில் வரும் கணேஷ் புத்திசாலிதான், ஆனால் சூப்பர்மான் அல்லர்.

    நிர்வாண நகரம் வந்த நாட்களில் அவர்கள் காரக்டர்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டுவிட்டன. மேற்கே ஒரு குற்றம் போன்ற மாத நாவல்களில் அவர்கள் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் முடிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன. வசந்த்! வசந்த்! நாவல் கல்கியில் வந்தபோது வசந்துக்குத்தான் அதிக ரசிகர்கள் என்று தோன்றியது.

    வசந்த் தனியாக வரும் கதையும் உண்டு – மேகத்தைத் துரத்தினவன். காந்தளூர் வசந்தகுமாரன் கதையில் வசந்த் ராஜ ராஜ சோழன் காலத்துக்கு சென்று கணேச பட்டரையும் சந்திக்கிறார்.

    பொதுவாக வசந்த் ஜொள்ளன், கணேஷ் சாமியார் என்று ஒரு impression இருக்கிறது. வசந்த் வருவதற்கு முன் கணேஷிடம் வசந்த் ஜாடை நிறைய உண்டு. வசந்த் வந்த பிறகும் கொலையுதிர்காலத்தில் கதாநாயகி லீனாவை உரசுவார். இதன் பெயரும் கொலை நாவலில் இன்ஸ்பெக்டர் இன்பாவோடு ஏறக்குறைய காதலே உண்டு.

    பல நாவல்களில் இவர்கள் மைனர் ரோலில் வருவார்கள். யாருக்காவது வக்கீல் தேவைப்பட்டால் அது இவர்கள் இருவரும்தான். 24 ரூபாய் தீவு ஒரு நல்ல உதாரணம்.

    எண்பதுகளின் ஆரம்பத்தில் குமுதம் இல்லாவிட்டால் விகடன் இல்லாவிட்டால் கல்கி இல்லாவிட்டால் குங்குமம் என்று எங்கேயாவது ஒரு கணேஷ் வசந்த் தொடர்கதை வந்துகொண்டே இருக்கும். ஒன்றும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு மாத நாவலிலாவது வந்துவிடுவார்கள்.

    எண்பதுகளின் முடிவில் பாலகுமாரன் புதிய நட்சத்திரமாக தோன்றிவிட்டார். இருந்தாலும் இவர்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. சில்வியா, மெரீனா போன்ற நீள் கதைகளில் வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால் படிக்கும் எனக்கு வயதாகிவிட்டதாலோ என்னவோ கதையின் முடிச்சுகள் சுலபமாக பிடிபட ஆரம்பித்துவிட்டன. கணேஷ் வசந்த் கதைகள் ஒரு ஆம்னிபஸ் வடிவில் வெளியிடப்பட்டால் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். (உயிர்மை குறுநாவல்களை இரண்டு வால்யூமாக வெளியிட்டிருக்கிறதாம்.)

    ஜெய்ஷங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு (அனிதா இளம் மனைவியின் படமாக்கல்) ஆகியவற்றிலும் ரஜினிகாந்த் ப்ரியாவிலும் கணேஷாக நடித்திருக்கிறார்கள். காயத்ரியில் வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசந்த்!

    டிவி சீரியலாகவும் வந்திருக்கிறதாம். எண்பதுகளின் டம்மி ஹீரோக்களில் ஒருவரான சுரேஷ் கணேஷாகவும், விஜய் ஆதிராஜ் வசந்தாகவும் நடித்திருக்கிறார்களாம். சுரேஷுக்கு வேஷப்பொருத்தம் நன்றாக இருக்கும். ஆனால் விஜய் ஆதிராஜுக்கு கொஞ்சம் முற்றிய முகம். அவருக்கும் கணேஷ் வேஷம்தான் நன்றாக பொருத்தும் என்று தோன்றுகிறது. கொலையுதிர்காலமும் டிவி சீரியலாக வந்திருக்கிறதாம். அதில் வசந்தாக நடித்தவர் விவேக்காம். டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு டிவியில் வந்தபோது ராஜீவ் கணேஷாகவும் ஒய்.ஜி. மகேந்திரன் வசந்தாகவும் நடித்தார்களாம். (சரத்பாபு டாக்டராம்). இருவருக்கும் வேஷப் பொருத்தம் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி.க்கு வயதும் இமேஜும் உதைக்கிறது.

    எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்கள் கனவுகளில் கண்ணாடியுடன் ரஜினி கணேஷாகவும், கமல் வசந்தாகவும் இருந்தார்கள். இன்றைக்கும் பிரகாஷ்ராஜ் நல்ல கணேஷாக இருப்பார் என்று நினைக்கிறேன். பத்து வருஷத்துக்கு முந்தைய சிம்பு பொருத்தமாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன், ஆனால் நண்பர் ரெங்கசுப்ரமணியும் சுந்தர் பத்மநாபனும் ஆட்சேபிக்கிறார்கள். சுந்தர் ஆர்யா பொருத்தமாக இருப்பார் என்கிறார். எனக்கென்னவோ அவருக்கு வயதாகிவிட்ட மாதிரி இருக்கிறது. மீண்டும் யோசித்துப் பார்த்தால் பத்து வருஷத்துக்கு முன்னால் பிரகாஷ் ராஜ்-மாதவன் பொருத்தமாக இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. இன்று விஜய் சேதுபதி-பிரசன்னா?


    தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

    சுஜாதாவின் அந்தக் காலத் தொடர்கதை – “பத்து செகண்ட் முத்தம்”

    (சிறு திருத்தங்களுடன் மீள்பதிப்பு)

    கொஞ்சம் வயதானவர்களுக்கு 1982 ஏஷியாட் நினைவிருக்கலாம். அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய நிகழ்ச்சி. அதைப் பின்புலமாக வைத்து சுஜாதா எழுதி இருக்கும் கதை. குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. என்று நினைவு.

    அவரது வழக்கமான பலம் – சுவாரசியமான நடை இருக்கவே இருக்கிறது. சுஜாதா டச்களும் – இரண்டு மூன்று பாராவில் நாயகி (தமிழ)ரசியின் குடும்பப் பின்னணியைப் புரிய வைத்தல், ரசியின் சக ஓட்டப் பந்தயப் போட்டியாளர்களின் மனநிலை, அன்றைய டெல்லி, அந்த டெல்லியில் ஏஷியாட் கொண்டு வந்த மாற்றங்கள் என்று பல விஷயங்களை தத்ரூபமாக கொண்டு வருதல் – நிறைய இருக்கின்றன.

    கொஞ்சம் முரட்டுத்தனமான, ஓட்டம் மட்டுமே வாழ்க்கையான கோச் ராஜ்மோகன். அவருக்கு வேண்டியதெல்லாம் பத்து செகண்டில் நூறு மீட்டர் ஓட முடியும் ஒரு பெண், உலக சாதனை. (இன்னும் கூட யாரும் பத்து செகண்டில் ஓடவில்லை என்று நினைக்கிறேன்.) அவரிடம் ஓட்டம் பயிலும் அவருடைய சொந்த அக்கா மகள் (தமிழ)ரசி. சின்னப் பெண், உலகம் தெரியாது, மாமாவின் கட்டுப்பாட்டுக்குள் மொத்தமாக இருக்கும் பெண். ஏஷியாடில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. அவளை பேட்டி காண விரும்பும் பத்திரிகையாளன் மனோ. அவனை கோச் கவனம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக மூர்க்கமாகத் தவிர்க்கிறார். மனோவும் கோச்சும் முறைத்துக் கொள்கிறார்கள். ரசி நூறு மீட்டர் ஓட்டத்தில் வெல்கிறாள். வென்ற பிறகு சந்தோஷத்தில் இது கொண்டாட வேண்டிய நேரம், கவனம் சிதறும் என்ற பிரச்சினை எல்லாம் இல்லை, நீயும் நாலு பேரோடு பழகு என்று பழைய கோபத்தை மறந்து மாமாவே ரசியை மனோவோடு பார்ட்டிக்கு அனுப்புகிறார். ரசிக்கு அங்கே யாரோ ஜின் ஊற்றிக் கொடுத்துவிட, மாமாவுக்கு திரும்பி கோபம் எகிறுகிறது. ரசியை ஏறக்குறைய சிறைப்படுத்தி வைக்கிறார். மனோ போலீஸ் உதவி கொண்டு ரசியை விடுவிக்கிறான். பிறகு கொஞ்சம் ரொமான்ஸ். மாமா நீ என்னை விட்டு விலகினாலும் பரவாயில்லை, ஓட்டப் பந்தயத்தை விடாதே என்று ரசியிடம் கெஞ்சுகிறார். ரசி மீண்டும் உங்களிடம் வர முடியாது, ஓட்டப் பந்தயத்தையும் விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன் என்று சொல்லிவிட மாமா தற்கொலை செய்துகொள்கிறார். ரசி மீண்டும் ஓட்டமே வாழ்க்கை என்ற மன நிலைக்குத் திரும்புகிறாள்.

    பத்து செகண்டில் ஓட வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்ட கோச்சின் பாத்திரம் மிக நன்றாக வந்திருக்கிறது. விவரம் தெரியாத பெண்ணாக ரசியும் ஓரளவு நன்றாக வந்திருக்கிறது.

    அவரது நல்ல குறுநாவல்களில் ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்