சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். அதனால்தான் இந்தப் பழைய பதிவைத் தேடிப் பிடித்து மீள்பதித்திருக்கிறேன். ஒரிஜினல் பதிவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து சிறு மாறுதல்களோடு கட் பேஸ்ட் செய்யப்பட்டதுதான். 🙂
ஜெயகாந்தனின் பல நாவல்கள் எனக்குப் பிடித்தமானவைதான். ஆனால் அவற்றின் முடிச்சுகள் இன்றே கூட காலாவதி ஆகிவிட்டனவோ என்றுதான் தோன்றுகிறது. யுகசந்தி மாதிரி சிறுகதைகளை விடுங்கள், சில நேரங்களில் சில மனிதர்களின் நாயகி கங்காவுக்கு என்ன பிரச்சினை? ஒரு நாள் எவனுடனோ படுத்ததெல்லாம் ஒரு விஷயமா? ஆமாம், அது பிரச்சினை என்றை நம்மை ஒத்துக் கொள்ள வைத்து அதிலிருந்து ஏற்படும் விளைவுகளின் மூலம் என்றென்றும் உள்ள மனித உணர்வுகளை நம்மை தரிசிக்க வைப்பதில்தான் ஜெயகாந்தனின் வெற்றி அடங்கி இருக்கிறது. ஆனால் பில்டிங் எத்தனை ஸ்ட்ராங்காக இருந்தபோதிலும் பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்காக இல்லையா?
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளும் அப்படித்தான். ரங்காவுக்கும் கல்யாணிக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கும் சரி, மனவிலக்கத்துக்கும் சரி, வலுவான காரணங்கள் எதுவுமில்லை. ஈர்ப்புக்காவது கல்யாணி ஒரு ஆண் துணையைத் தேடுகிறாள், சூழ்நிலை கொஞ்சம் மாறி இருந்தால் அவள் தனது mentor ஆன சாமியுடன் கூட தன் வாழ்வைப் பிணைத்துக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது, ரங்கா மீது ஒன்றும் தெய்வீகக் காதல் இல்லை, ஈர்ப்புதான் என்றும் வாசித்துக் கொள்ளலாம். மனவிலக்கத்துக்கு பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் பாத்திரப் படைப்பு, ரங்காவின் அடிப்படை குணங்களான மனிதநேயம், கனவான் தன்மை, ரங்காவின் குடும்பத்தினரின் பாசம் வெளிப்படும் விதம், கல்யாணியின் மன உறுதி, அவளுடைய நவீனத் தன்மை எல்லாம் நெகிழ வைக்கிறது. கல்யாணியின் விழுமியங்கள் – வைப்பாட்டியாக வாழத் தயாராக இருப்பது – இன்று பழையதாகி விட்டிருக்கலாம். ஆனால் அவள் அன்றும் இன்றும் புதுமைப் பெண்தான். ஆணுக்கு கொஞ்சம் குறைவான சமூக அந்தஸ்து அவளுக்கு தவறாகப் படாமல் இருக்கலாம். ஆனால் அவள் மனதில் ஆணுக்கு உயர்ந்த இடம் என்று எதுவும் இல்லை. ரங்கா அவளுக்குத் துணையாக இருப்பதைப் பற்றி அவளுக்கு எந்த காம்ப்ளெக்சும் இல்லை. ஆனால் ரங்கா விலகிப் போயிருந்தால் அவள் சமாளித்துக் கொண்டிருப்பாள். ரங்காவிடம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு. ஆனால் ரங்காவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உணமையைச் சொல்லப் போனால் ரங்காவிடம்தான் கொஞ்சூண்டு பலவீனம் தெரிகிறது.
மீண்டும் பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கோ வீக்கோ, அதைப் பற்றி கவலைப்படாமல் பில்டிங் எத்தனை சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது என்றுதான் ஜெயகாந்தன் நம்மை உணர வைக்கிறார்.
சிம்பிளான கதை. பெரிய சிக்கல் எதுவும் கிடையாது. கல்யாணி நாடக நடிகை. சினிமாவிற்கு போக விரும்பவில்லை. தனிக்கட்டை. நாடகம்தான் அவள் வாழ்க்கையின் அர்த்தம் என்று சொல்லலாம். நாடக விமர்சனம் செய்யும் ரங்கா மீது ஆசைப்படுகிறாள். ரங்காவிடம் அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை – திருமணம் என்ற அங்கீகாரம் உட்பட. வைப்பாட்டியாக இருக்கவும் ரெடி. ஆனால் ரங்கா அவளை மணந்துகொள்கிறான். ஒரு சராசரி அறுபதுகளின் ஆணாக (இன்றைய ஆணிடமிருந்து பெரிய வித்தியாசம் இல்லை), தான்தான் தலைவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். தன் மேல் அவளுக்கு “காதல்” இருக்க வேண்டும், தனக்காக அவள் எதையும் இழக்க தயாராக இருக்க வேண்டும், அவளுக்கு உயிரான நாடகத்தையும் துறக்க வேண்டும் என்று நினைக்கிறான். அவளோ அவனுக்கு சமமான இடத்தை குடும்பத்தில் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். ப்ராக்டிகலான பெண். இத்தனைக்கும் சமையல், துவைத்தல் எல்லாம் அவள் வேலைதான். இதனால் ஏற்படும் பிரிவு, பிணக்கு அவள் நோய்வாய்ப்படும்போது தானாக தீர்ந்துவிடுகிறது.
ஜெயகாந்தன் இதை மிக அழகாக எழுதி இருக்கிறார். ஆண், பெண் இருவரின் நோக்கும் புரிந்து கொள்ளக்கூடியவை. அவர்களது உள்மன சிக்கல்களை மிக நன்றாக வெளியே கொண்டு வந்திருக்கிறார்.
ஜெயகாந்தன் கதைகளில் எல்லாரும் பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். பேசாத போது அவர்கள் சிந்தனைகள் – அவர்கள் தனக்குத் தானே பேசுவது போல இருக்கும் – பக்கம் பக்கமாக வரும். இந்த நாவலிலும் அப்படித்தான். ஆனால் அது பொருந்தி வருகிறது, அதுதான் விசேஷம். அதுவும் குறிப்பாக அவர்கள் இருவரும் விவாகரத்து வேண்டுமென்று ஒரு வக்கீலிடம் போவார்கள். அந்த வக்கீல் பாத்திரம் அற்புதம்!
அந்தக் காலத்து விழுமியங்களை உண்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி தாசி வீட்டில் பிறந்தவள். அவளுக்கு வைப்பாட்டியாக இருப்பது பற்றி தாழ்வுணர்ச்சி எதுவுமில்லை. ஆனால் நாயகன் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்றதும் அவளுக்கு புல்லரிக்கிறது. நாயகனின் நட்பு வட்டாரத்தில் ஒரு நடிகையை வச்சுக்கலாம், ஆனால் “திரும்பி வர வேண்டும்”, இல்லை சொந்த ஜாதியில் கல்யாணம் செய்துகொண்டு நடிகையை வச்சிக்க, அப்பத்தான் வீட்டுப் பெண்ணுக்கு பயம் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதையே ஒரு அகிலனோ, நா.பா.வோ எழுதி இருந்தால் நானே கிழிகிழி என்று கிழித்திருப்பேன். ஜெயகாந்தனின் திறமை அதை உண்மையான, நடக்கக் கூடிய ஒன்றாக காட்டுவதில் பளிச்சிடுகிறது.
இந்த நாவல் ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும், எஸ்.ரா.வின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. ஆனால் ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி இப்படி சொல்கிறார்.
ஜெயகாந்தனின் இரு பிற நாவல்களை குறிப்பிடத்தக்கனவாக கருதுகிறேன் – ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரீஸுக்குப் போ. இவ்விரு நாவல்களிலும் ஜெயகாந்தனின் படைப்பாளுமை கதாபாத்திரங்களையும் கதைக்கருக்களையும் உருவகம் செய்வதில் வெற்றி கண்டுள்ளபோதிலும் இப்படைப்புகள் மெல்ல மெல்ல தேய்ந்து சென்று முக்கியத்துவம் இழப்பதாகவே எனக்கு படுகிறது.
பிற்சேர்க்கை: இந்த நாவல் பற்றி திண்ணை தளத்துக்கு அளித்த பேட்டியில் ஜெயகாந்தன் சொன்னது:
இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள். ஒரு பாத்திரம் சிந்திக்கிற பொழுது, தன் அறிவினால் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களாக மாறுகிறார்கள். அவள் ஓரளவிற்குப் படித்தவள். ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்தவள். வாழ்க்கையில் ஆண் துணை வேண்டும் என்று சிந்தித்து செயல்படுகிறாள். அவர்(சாமி) முன்னாலே ப்ரொபோஸ் பண்ணியிருந்தால், அவருடன் கூட அவள் இருந்திருக்கக் கூடும். அவளுக்குப் பத்திரிகை நிருபராய் வரும் ரங்காவிடம் ஒரு ஈடுபாடு. அவள்தான் அவனுக்குக் கடிதம் எழுதி இந்தக் கடிதம் எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் வந்து சந்திக்கவும் என்று எழுதுகிறாள். ஆனால் ரங்கா அவளை பேட்டி காண்பவனாக வருகிறான். போட்டோவிலே கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்பான். போட்டோவிலேயாவது கையெழுத்துப் போடலாமில்லையா? என்று கேட்பான். துர்கனேவ்-இன் ஒரு நாவலில் நாயகி இப்படித் தான் தனக்குப் பிரியமானவனுக்கு எழுதுகிறாள். அதைப் படித்ததன் விளைவு என்று பிறகு கண்டுபிடித்தேன். அவள் கால் விளங்காமலான பிறகு, மனிதாபிமானத்தோடு இணைகிறான். அதன் காரணமாக அவளை விவாகரத்து செய்து விடலாம் என்று சட்டம் சொல்லும் பொழுது அது அவனுக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. மனிதாபிமானத்திற்கு விரோதமென அவனுக்குத் தோன்றுகிறது. காதலுக்கு அடிப்படை மனிதாபிமானம்தான். அதுதான் இந்த நாவலில் வலியுறுத்தப்படுகிறது.
புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. நண்பர் திருமலைராஜன் இரவல் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். அவருக்கு நன்றி!
லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்து பீம்சிங் இயக்கத்தில் படமாகவும் வந்தது. (வக்கீலாக நாகேஷாம் நாகேஷ்) நான் பார்த்ததில்லை. லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், நாகேஷ், ஒய்.ஜி.பி. எல்லாரும் நன்றாக நடித்திருந்தாலும் ரொம்பப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தில் இத்தனை வசனம் இருக்கக் கூடாது. இதுதான் பீம்சிங் இயக்கிய கடைசி திரைப்படமாம். சாரதாவின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
எனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்று. ஆனால் தமிழ் இலக்கியத்தின் முதல் வரிசை நாவல்களில் கூட வைக்கமாட்டேன். முரண்பாடாகத்தான் இருக்கிறதோ?
குறைகள் இருந்தாலும் திரைப்படத்தையும் பார்க்கலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்
தொடர்புடைய பதிவுகள்:
Good review.
//ஜெயகாந்தன் கதைகளில் எல்லாரும் பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். பேசாத போது அவர்கள் சிந்தனைகள் – அவர்கள் தனக்குத் தானே பேசுவது போல இருக்கும் –// LOL! :))
LikeLike
JD, மறுமொழிக்கு நன்றி!
LikeLike
சமீபத்தில்தான் இந்த நாவலைப் படித்தேன்.
கல்யாணி என்பவள் கதாபாத்திரமாக இருக்க முடியுமே தவிர, ரத்தமும் சதையுமான ஒரு மனுஷியாக இருக்க முடியாதென்று தோன்றுமளவுக்கு அவளை ரொம்ப ஐடியலாக ஜெயகாந்தன் படைத்திருக்கிறார். மற்ற பாத்திரங்கள் எல்லோரும் சாதாரண மனிதர்களாகதான் கதைக்குள் வலம் வருகிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்டது போலவே கதை முக்கால்வாசி உரையாடல்கள் மூலமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. பல உரையாடல்கள் கதையின் முக்கியத் திருப்பங்களுக்கு வழி வகுக்கின்றன. நிறைய நிறைய பேசப்பட்டாலும் எதுவும் அலுக்கவில்லை.
ஒரு கதை எழுதப்பட்டு இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கப்படும்போது ஆச்சரியப்படுத்தும் சில வரலாற்றுத் தடங்களை அதில் காணலாம். இந்தக் கதையில் நான் கண்டு வியந்தது 20-30 ஆண்டுகளுக்கு முன் வெற்றிலை சாப்பிடுவது எவ்வளவு பரவலாக இருந்திருக்கிறது என்பது. கல்யாணி சமயம் கிடைக்கும் போதெல்லாம் வெற்றிலை சாப்பிட்டு துப்பிக் கொண்டே இருக்கிறாள். ரங்கா புகைத்துத் தள்ளுகிறான், படுக்கையறையில் கூட. காலம்தான் எப்படி வாழ்க்கையை மாற்றி விடுகிறது.
LikeLike
ஏவிஎஸ், // வெற்றிலை சாப்பிடுவது… // நீங்கள் எழுதி இருப்பதை ரசித்தேன்.
LikeLike
வாழ்த்துக்கள் ஆர்வி, புத்தகவாசிப்பு பற்றி பேச இடமே இல்லை என்ற நிலையில் இது நல்ல முயற்சி. ஆனால் வழக்கம்போல வம்புகளாக குவித்து பின்னூட்டங்களை மன அவசத்துக்கான வடிகால்களாக ஆக்கிவிடுவார்களோ என்று பய்ந்து கொஞ்ச நாட்கள் நான் இணைப்பு கொடுக்கவே தயங்கினேன். தமிழில் எந்த ஒரு விவாதமும் சிலரது ஊடாடுதலால் தரமிழப்பது நான் 2000த்தில் ஃபாரம்ஹப்பில் எழுத ஆரம்பித்த காலம்முதலே கண்டு வரக்கூடியது.
பார்ப்போம், நேரமிருக்கிறதல்லவா? எதிர்வினைகளை தொகுக்க பொறுமையும் தேவைப்படும்
LikeLike
ஜெயமோகன், நன்றி! நீங்கள் உங்கள் தளத்தில் சிலிகான் ஷெல்ஃபைப் பற்றி எழுதியது, இங்கே வந்து மறுமொழி எழுதுவது பெரிய சந்தோஷம்! அதுவும் சில பல இடங்களில் உங்களோடு கருத்து வேறுபாடு உண்டு. அதை பொருட்படுத்தாமல் ஊக்கம் தருவதற்கு நன்றி!
// எதிர்வினைகளை தொகுக்க பொறுமையும் தேவைப்படும் // ஓடுகிற வரையில் ஓடட்டும் என்றுதான் இருக்கிறேன். முடியாதபோது வருத்தத்தோடு விட்டுவிட வேண்டியதுதான்.
கருத்து வேறுபாடுகளைப் பற்றி – ஜயஜய சங்கர+சந்திரசேகரர் – இன்னும் விளக்கமும் தந்தால் இன்னும் சந்தோஷம் அடைவேன். (சந்தடி சாக்கில் உங்களை வம்புக்கு இழுக்கிறேன். :-)) உங்கள் சிறந்த தமிழ் நாவல் லிஸ்டை அப்டேட் செய்து போன பத்து வருஷத்தில் வந்த சிறந்த நாவல்களையும் சேர்த்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்…
LikeLike
//ஜெயகாந்தனின் பல நாவல்கள் எனக்குப் பிடித்தமானவைதான். ஆனால் அவற்றின் முடிச்சுகள் இன்றே கூட காலாவதி ஆகிவிட்டனவோ என்றுதான் தோன்றுகிறது//
ஜெயகாந்தன் கதைகளில் வரும் பல பிரச்சினைகள் இன்று பிரச்சினைகளே அல்ல என்றாலும் காலக்கிரமத்தில் இன்று கண்டிபிடிக்கப்பட்ட தீர்வுகளை முப்பது நாற்பது வருடங்கள் முன்பாகவே அவர் முன்வைத்திருக்கிறார் என்பது என் கருத்து.
LikeLike
நீங்கள் சொல்வது சரியே கிருபானந்தன் சார். ஆனால் அடுத்த தலைமுறைக்கு இந்த முடிச்செல்லாம் புரியாமல் போய்விடவே வாய்ப்பிருக்கிறது…
LikeLike