சுஜாதாவை இலக்கியவாதி என்றோ பொழுதுபோக்கு எழுத்தாளர் என்றோ சுலபமாக வகைப்படுத்த முடியாது. வணிக எழுத்தை வாரப் பத்திரிகைகளில் தொடர்கதையாக எழுதுவார், அதில் இலக்கியத்தின் சாயை தெரியும். சில சமயம் இலக்கியம் படைக்க வேண்டும் என்று முயன்று எழுதுவார், ஆனால் வெற்றி பெறமாட்டார். (மத்யமர் சிறுகதைகள் ஒரு நல்ல் உதாரணம்).
எனக்கு அவரிடம் இருக்கும் ஈர்ப்புக்கு மூன்று காரணங்கள் உண்டு. முதல் காரணம் நாஸ்டால்ஜியா. சிறு வயதில் ஏற்படும் ஈர்ப்பு சுலபமாக அழிவதில்லை. குறைந்தபட்சம் எனக்கு அழிவதில்லை. இரண்டாவது நடை. சுஜாதாவின் நவீன நடை இன்று வரை எவருக்கும் கை வந்ததாக எனக்குத் தெரியவில்லை. மூன்றாவது விறுவிறுப்பு. பல புத்தகங்களை எடுத்தால் கீழே வைக்க முடியாது.
புகழ் பெற்ற எழுத்தாளர்தான், ஆனால் அவரது கணேஷ்-வசந்த் நாவல்கள் அவருக்குத் தந்திருக்கும் ஒளிவட்டத்தில் பிரமாதமான சில முயற்சிகள் கண்டுகொள்ளப் படுவதில்லை. அவரை இலக்கியவாதியாகப் பார்ப்பவர்களும் ஸ்ரீரங்கத்துக் கதைகளையும் அவரது நாடகங்களையும் தாண்டுவதில்லை. கணேஷும் வசந்தும் இல்லாமல் வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகவோ அல்லது மாத நாவல்களாகவோ வந்ததாலேயே வைரங்கள், ஒரே ஒரு துரோகம், பூக்குட்டி, ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், மண்மகன், 24 ரூபாய் தீவு என்று பல இலக்கியத் தரமுள்ள படைப்புகள் சுஜாதாவின் பரம ரசிகர்களாலும், இலக்கிய விமர்சகர்களாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. (வேறு நாவல்களை நினைவு கூர்பவர்கள் தவறாமல் பின்னூட்டம் எழுதுங்கள்!)
என் கண்ணில் அவர் ஒரு (இரண்டாம் பென்ச்) இலக்கியவாதியாகத் தெரிவது இந்த மாதிரி நாவல்களால்தான். வசந்த காலக் குற்றங்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். Arthur Haileysque நாவல் எழுத முயற்சித்திருக்கிறார். அதாவது ஒரு பின்புலத்தை எடுத்துக்கொண்டு கதை என்னும் சட்டத்தில் பல நுண்விவரங்களை காட்டி நம்மை பிரமிக்க வைப்பது. Police Procedural என்றும் சொல்லலாம். அதாவது போலீஸ் துறையின் தினசரி வாழ்க்கையின் நுண்விவரங்களை நிறைய கொடுத்து போலீஸ் எப்படி வேலை செய்கிறது என்று நமக்கு உணர்த்துவது. மொத்தத்தில் நல்ல புத்தகம். ஆங்கிலத்தில் இந்த மாதிரி நாவல்கள் பிரபலம்.
களம்: எண்பதுகளின் பெங்களூர். ஒரு லோகல் கால் எண்பது பைசா. இந்திரா நகரே நகரத்துக்கு வெளியே இருந்திருக்கும். டெக்னாலஜி கிடையாது. இந்த நிலையில் போலீசுக்கு வரும் சவால்கள்.
மூன்று கிளைக்கதைகள்.
ஆறுமுகம் திறமை வாய்ந்த திருடன். திறக்க முடியாத பூட்டே கிடையாது. பூட்டுக்கு மறு சாவி தயாரித்து திறந்து வேண்டியதை எடுத்துக்கொண்டு மீண்டும் பூட்டிவிட்டு செல்வது இவன் ஸ்டைல், முத்திரை. இந்த முத்திரையை வைத்தே போலீஸ் இவன்தான் திருடினான் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஜெயிலிலிருந்து திரும்பி வந்திருக்கிறான், இந்த முறை சாவியை தான் தயாரித்து, தனக்கு ஒரு அலைபி உருவாக்கிக் கொண்டு, கூட்டாளியை வைத்து அதே முத்திரையுடன் திருட திட்டமிடுகிறான். கூட்டாளி ஒரு “கேஸ்”.
சுனில் பணக்கார வீட்டுப் பையன். கஞ்சா கேஸ். பொழுது போகாமல் கிக்குக்காக பிரேமலதா என்று பெண்ணை ஃபோனில் கூப்பிட்டு ஆபாசமாக மிரட்டுகிறான். விவகாரம் முற்றிப் போய் பிரேமலதாவின் ஏழு வயதுப் பெண்ணை கடத்துகிறான்.
ரேகா-பிரசன்னா காதல். அப்பா அம்மாவுக்கு பிடிக்கவில்லை. போலீஸ் உதவியை நாடுகிறார்கள்.
இந்த மூன்றும் போலீஸ் கமிஷனர் கவனத்துக்கே வருகிறது. ரேகா-பிரசன்னா கேசில் கோட்டை விடுகிறார்கள். கடத்தல் கேசை சிறப்பாக கண்டுபிடிக்கிறார்கள். திருட்டு கேஸ் குற்றவாளிகளின் திறமையின்மையால் மாட்டிக் கொள்கிறது.
மிக அருமையாக எழுதி இருக்கிறார். அவரது சாதனைகளில் ஒன்று.
தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா