சமீபத்தில் பி.ஸ்ரீ. எழுதிய ராமானுஜர் என்ற புத்தகத்தைப் படித்தேன். 1965-இல் இந்தப் புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய இ.பா. தொகுத்திருக்கும் குருபரம்பரைக் கதைகளைத்தான் தொகுத்திருக்கிறார். ஆனால் பி.ஸ்ரீ. எழுதுவதற்கும் பழைய குருபரம்பரைக் கதைகளை நேராகப் படிப்பதற்கும் பெரிய வித்தியாசமே இல்லை. புத்தகத்தைப் பற்றி எழுத ஒன்றுமே இல்லை, ஏறக்குறைய ஒரு காலட்சேபத்தைப் படிப்பது போல இருந்தது. இதற்கு சாஹித்ய அகாடமி விருது என்று தெரிந்தபோது எவண்டா இதைப் பரிந்துரைத்தான் என்று கடுப்புதான் வந்தது.
பி.ஸ்ரீ.யின் ராமானுஜர் ஒரு தொன்மத்தின் நாயகர். ஆனால் இ.பா.வின். ராமானுஜர் நம் காலத்தவர் – உண்மையில் எந்நாளும் சம்காலத்தவராகவே தோன்றுவார். காந்தி போன்றவர். பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் படிக்கும்போது இ.பா. இந்த நிகழ்ச்சியை எப்படி விவரித்திருக்கிறார் என்றுதான் மனம் போய்க் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இ.பா.வின் நாடகம் எப்படியோ என் மனதில் ராமானுஜர் தொன்மம்+வரலாற்றுக்கு gold standard ஆகி இருக்கிறது! இத்தனைக்கும் குருபரம்பரைக் கதைகள் வரலாற்றை தொன்மமாக மாற்றுகின்றன என்றுதான் நினைக்கிறேன். வரலாற்று நிபுணர்கள் இந்த குருபரம்பரைக் கதைகளில் பலவற்றை மறுக்கிறார்கள். உதாரணமாக டாக்டர் நாகசாமியின் கட்டுரையைப் பாருங்கள்.
பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் பற்றி எழுதுவதை விட இ.பா.வின் நாடகத்தைப் பற்றி எழுதுவது உத்தமம் என்று அக்டோபர் 2010-இல் எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன்.
ராமானுஜர் நான் admire செய்யும் ஆன்மீகவாதிகளில் ஒருவர். அவருடைய ஆன்மீகத்தை – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் – பற்றி பேசும் அளவுக்கெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பஞ்சமரை திருக்குலத்தாராக்கி, அவர்களுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமைகளைப் பெற்றுத் தர போராடிய எந்த ஆன்மீகவாதியும் என் பெருமதிப்புக்குரியவரே. எல்லா ஜாதியினரையும் ராமானுஜர் வைணவம் என்ற குடைக்குக் கீழே கொண்டு வர முயன்றார், ஆனால் காலம் போகப் போக அந்த குடைக்கு கீழே வந்தவரெல்லாம் பிராமணர் – அதுவும் அய்யங்கார் – ஆகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். (பசவருக்கும் இப்படித்தான் ஆனது.) திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றதை ராமானுஜர் மற்றவருக்கு சொல்லும் கதை உண்மையோ பொய்யோ – ஒரு உன்னத மனிதரை நமக்கு காட்டுகிறது. இந்திரா பார்த்தசாரதியையும் ராமானுஜரின் சமூக நோக்கு கவர்ந்திருக்கிறது. அந்த நோக்கை emphasize செய்து ராமானுஜர் பற்றிய சுவாரசியமான வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளை (legends) அவர் ராமானுஜர் என்ற நாடகம் ஆக்கி இருக்கிறார்.
இ.பா.வின் வார்த்தைகளில்:
தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்கு சமகாலத்தவராய் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்த நாடகத்தின் நோக்கம். ஸ்ரீராமானுஜர் வரலாற்றை நாடகமாக்குவது சுலபமான காரியமல்ல என்பது எனக்குத் தெரிந்ததுதான். ராமானுஜர் ஓர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர். அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டும் என்ற உந்துதலை அதுதான் ஏற்படுத்தியது.
குரு பரம்பரைப்படி: ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சி யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் கற்கிறார். சிஷ்யன் போகும் போக்கு பிடிக்காததால் காசிக்கோ எங்கோ போகும்போது யா. பிரகாசர் ராமானுஜரை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் ராமானுஜர் தப்பிவிடுகிறார். அவர் மனைவி தஞ்சம்மா. தஞ்சம்மா ராமானுஜரின் சமூக நோக்கை ஏற்பவர் அல்ல, ஜாதி வித்தியாசம் பார்ப்பவர். ராமானுஜரின் பிராமண ஜாதியில் பிறக்காத குருமார்களை தஞ்சம்மா அவமதிப்பது அவர் துறவறம் ஏற்க இன்னுமொரு தூண்டுதலாக அமைகிறது. ஆளவந்தார் அவரை வைஷ்ணவர்களின் அடுத்த தலைவராக, தன் வாரிசாக நியமிக்கிறார். பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி என்று பல ஆசிரியர்கள். திருக்கோஷ்டியூர் நம்பியிடம் ரகசியமான வைணவ தத்துவங்களை கற்கச் செல்கிறார் ராமானுஜர். தி. நம்பி இவற்றை யாருக்கும் சொல்லக்கூடாது, சொன்னால் நரகத்துக்கு போவாய் என்று எச்சரிக்கிறார். ஆனால் ராமானுஜரோ கோபுரத்தின் மேல் ஏறி நின்றுகொண்டு எல்லாருக்கும் சொல்லித் தருகிறார். இத்தனை பேர் பிழைக்கும்போது நான் ஒருவன் நரகத்துக்குப் போனால் பரவாயில்லை என்று சொல்கிறார். தலித் மாறனேர் நம்பிக்கு உதவி செய்ததால் பிராமண பெரிய நம்பியை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் ரங்கநாதன் உற்சவமாக ஸ்ரீரங்கம் வீதிகளில் வரும்போது தேர் அவர் வீட்டு வாசலிலிருந்து நகரமாட்டேன் என்கிறது. பெரிய நம்பிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை வாபஸ் வாங்கிய பிறகுதான் தேரை நகர்த்த முடிகிறது. பல ஜாதிக்காரர்களான முதலியாண்டான்+கூரேசர் (பிராமணர்கள்), உறங்காவில்லி-பொன்னாச்சி (மறவர்?) என்று பல சிஷ்யர்கள். ஜாதி சம்பிரதாயம் உடைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இவர்கள் எதிரியான நாலூரான் சதியால் சோழ அரசன் ராமானுஜரை கைது செய்ய உத்தரவிடுகிறான். ஆனால் அவரது பிரதம சிஷ்யரான கூரேசர் தான்தான் ராமானுஜன் என்று சொல்லி கைதாகிறார். கூரேசரை குருடாக்குகிறான் நாலூரான். இன்றைய கர்நாடகத்துக்கு தப்பிச் செல்லும் ராமானுஜர் ஒரு இளவரசியை பிடித்திருக்கும் பேயை ஓட்டி ராஜாவின் ஆதரவைப் பெறுகிறார். அங்கே வைஷ்ணவத்தை ஸ்தாபிக்கிறார்/வலுப்படுத்துகிறார். துலுக்க நாச்சியாரை சந்திக்கிறார். மீண்டு வந்து கூரேசன் உதவியுடன் பல பாஷ்யங்களை எழுதுகிறார். 120 வயதில் மரணம்…
இ.பா. இந்த குரு பரம்பரைக் கதையை நாடகம் ஆக்கி இருக்கிறார். பல supernatural legends-ஐ சாதாரண நிகழ்ச்சிகளாக காட்டுகிறார். (ராமானுஜர் பேய் ஓட்டும் காட்சி) ராமானுஜரின் சமூக சீர்திருத்த உணர்வுகளை தூக்கிப் பிடிக்கிறார். ராமானுஜர் வைணவத்தை ஆன்மீகமாக மட்டும் இல்லாமல் சமூகத்தை மாற்றும் ஒரு சக்தியாக பார்ப்பதாக நமக்கு தோன்ற வைக்கிறார் இ.பா. இது historically accurate-தானா என்று எனக்கு கேள்விகள் உண்டு. ராமானுஜருக்கு ஆன்மீகமே முக்கியம், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவை இரண்டாம் பட்சமே என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ராமானுஜரின் ஆன்மீகத்தைப் பற்றி – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் பற்றி – எனக்கு தெரிந்தது பூஜ்யமே. இ.பா.வுக்கு என்னை விட ராமானுஜர் பற்றியும், அவரது ஆன்மிகம் பற்றியும், பொதுவாக வைஷ்ணவம் பற்றியும் அதிகம் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
ராமானுஜரின் வாழ்க்கை legends பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு revelation ஆக இருக்கலாம். படிப்பதை விட இந்த நாடகம் பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ராமானுஜர் வாழ்வின் உச்சக்கட்டம் அவர் திருக்கோஷ்டியூர் நம்பியின் உத்தரவை மீறி எல்லாருக்கும் மந்திரோபதேசம் செய்வதுதான். தான் ஒருவன் நரகம் போனாலும் இத்தனை பேர் உய்வார்கள் என்று அவர் நினைத்தது அற்புதமான ஒரு தருணம். ஆனால் இ.பா. எழுதி இருக்கும் விதம் அவ்வளவு exciting ஆக இல்லை. அதே போல நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரம் கேட்கும் கூரேசரிடம் ஆயிரம் ராமானுஜன் ஒரு கூரேசனுக்கு சமம் ஆகார் என்று சொல்லும் நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்று. இவற்றை underplay செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். இ.பா. அப்படி நினைக்கவில்லை. 🙂
இந்த நாடகத்துக்காக இ.பா. சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கிறார்.
படிக்கலாம். தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. அதனால் நிச்சயமாக படிக்கலாம். ஆனால் பார்க்க முடிந்தால் இன்னும் நல்லது.
பின்குறிப்பு: பி.ஸ்ரீ. எழுதிய மணிவாசகர் சரித்திரம் என்ற புத்தகமும் கிடைத்தது. இதுவும் தெரிந்த விஷயங்களைத்தான் திரும்பக் கூறுகிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், விருதுகள், இ.பா. பக்கம்
தொடர்புடைய பக்கம்: ராமானுஜரும் குலோத்துங்க சோழனும் – டாக்டர் ஆர். நாகசாமி
ஆர் வி
இந்த நாடகத்தை நமது காயல் பட்டிணத்தில் போட்டார்களே நீங்கள் பார்க்கவில்லையா என்ன? இந்த நாடகம் மொத்தமே இரண்டு அல்லது மூன்று முறைதான் மேடையேற்றப் பட்டுள்ளது. அப்பொழுது இ பா இங்கு வந்திருந்து ஒரு வாரம் டிராமா கிளாஸ் நடத்தினார். ஃப்ரீமாண்ட் நூலகத்தில் தினமும் மாலை நடத்தினார்.
அன்புடன்
ராஜன்
LikeLike
ராமானுஜர் சீரியல் வந்ததே பொதிகையில்? பார்க்கவில்லையா?
இணையத்தில் அந்த சீரியல் எங்காவது கிடைக்கிறதா எனப்பார்த்தேன். இந்த கார்ட்டூன் கிடைத்தது.
முடிந்தால் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
LikeLike
இ.பா. வந்ததே தெரியாதே ராஜன்! வீடியோவுக்கு நன்றி, டோண்டு! ஸ்ரீனிவாஸ், சுட்டிக்கு நன்றி!
ஜெகதீஸ்வரன், தொன்மம் (legends ) உண்மையா பொய்யா என்று எப்படி கண்டுபிடிப்பது? இதையெல்லாம் அனுபவிக்கனும், ஆராயக்கூடாது! 🙂
LikeLike
இந்திரா பார்த்தசாரதி பற்றி பாரதிமணியின் சுவையான கட்டுரை…..
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=3294
LikeLike
ராமானுஜம் பற்றி சுஜாதா கற்றதும் பெற்றதுமில் குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். ராமானுஜம் கோவில் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு மந்திரம் போதித்ததாக சொன்னார்கள். ஆனால் தாத்தாத்திரி இந்துமதம் எங்கே போகிறது நூலில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறார்.
உண்மையை அறிய சிலர் உதவலாம்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
LikeLike
சமிபத்தில் தினமலரில் தொடராக எழுதி ” பொலிக பொலிக” எனப் பெயர் தாங்கி வந்த பாராவின் இராமனுஜரின் சரிதை ஏறக்குறைய நீங்கள் இ.பாவிற்கு எழுதிய விமர்சனம் அளவுக்குப் பெருமை உடையது என நினைக்கிறேன் Sir . இந்தப் புஸ்தகத்துக்குண்டான நிறைய மெனக்கெடல் எடுத்திருப்பார் எனத் தோன்றும், நேரமிருந்தால் படித்துப் பாருங்களேன். (பின் குறிப்பு) பா, ராவும் விசிஷ்டாத்வைதத்தை ரொம்பத் தொடலை.என்பது ஒரு ப்லஸ் பாயிண்ட்.
தவிர்த்து இ. பா வோட நாடகத்துக்கெல்லாம் லிங்க் கேட்டா திட்ட மாட்டிங்களே !
LikeLike