இது புத்தகங்களுக்கான தளம். ஆனால் கொஞ்ச நாளாக மாதங்களாக வேலைப்பளு அதிகம். படிப்பதே மிகவும் குறைந்துவிட்டது.
வழக்கம் போல நண்பர் ராஜனிடம் நரேந்திர மோடியைப் பற்றி என்னவோ ‘சண்டை’ போட்டுக் கொண்டிருந்தபோது (என்ன கருத்து வேறுபாடு என்று கூட நினைவில்லை) மோடியைப் பற்றி என்னைப் போல் ஒருவன் – யார் செய்தது என்பதல்ல, என்ன செய்யப்பட்டது என்பதுதான் முக்கியம் கருதுபவன், தன்னை ‘நடுநிலையாளன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவன் – அவருக்கு ஓட்டு போடுவானா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அதனால் இந்தப் பதிவு.
குஜராத் கலவரங்களுக்கு முன்பும் மோடியைப் பற்றி – குறிப்பாக நர்மதாவில் சர்தார் சரோவர் அணை கட்டும் முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டிருந்தேன், ஆனால் அழுத்தமாக மனதில் பதியவில்லை. நானெல்லாம் எப்போதும் மேதா பட்கர் கட்சிதான், ஆனால் பலவந்தமாக மக்களை வெளியேற்றியது பற்றி எல்லாம் நான் குறை சொல்ல மாட்டேன். Eminent Domain என்பது அநீதிதான், ஆனால் அரசுக்கு அந்த அளவு அதிகாரம் தேவையாகத்தான் இருக்கிறது. பெரும் அணைகள் அனேகமாக காலப்போக்கில் பயனற்றவை ஆகிவிடுகின்றன என்பது உலகமெங்கும் – குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் – காணக் கிடைக்கிறது. எகிப்தின் அஸ்வான் அணையிலிருந்து நம்மூர் பக்ரா நங்கல் வரை எல்லா பெரிய அணகளிலும் அணைகளின் பின்னால் மணல் மண்டி அடித்து அடித்து அவற்றின் கொள்ளளவைக் குறைத்துக் கொண்டே போகின்றன. ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்று தெரியாமல் இருக்கலாம். தெரிந்த பிறகும் தான் கட்டினேன் என்று பெருமிதத்திற்காக, மக்களிடம் என் சாதனை என்று முன் வைத்து ஓட்டு கேட்பதற்காக அதே தவறைத் திரும்பவும் செய்கிறார், தவறுதான், ஆனால் புரிந்து கொள்ளக் கூடிய தவறு என்று தோன்றியது.
மோடியைப் பற்றி எனக்கு வலுவான கருத்து ஏற்பட்டது 2002 குஜராத் கலவரங்களின்போதுதான். குஜராத் கலவரங்களில் அரசு எந்திரத்தின் ஒத்துழைப்பு (குறைந்தபட்சம் மறைமுக ஒத்துழைப்பு) இருந்தது தெளிவாகத் தெரியும், ஆனால் நீதிமன்றங்களில் ஒருபோதும் நிரூபிக்கப்பட முடியாத உண்மை. 1975-இன் அவசரநிலை அடக்குமுறைகளைப் போல, 1984-இன் சீக்கியர் படுகொலைகளைப் போல, 1993-இன் மும்பை கலவரங்களைப் போல இந்தியாவின் வரலாற்றில் என்றும் துடைக்க முடியாத களங்கம். அதிதீவிர ஹிந்துத்துவரான சுப்ரமணிய சுவாமி ஒரு தனிப்பட்ட பேச்சில் மோடி அரசு மட்டுமல்ல, எந்த அரசுமே நினைத்திருந்தால் சுலபமாக இது போன்ற கலவரங்களைத் தடுத்திருக்க முடியும் என்று சொன்னார். அன்று பிரதமராக இருந்த வாஜ்பேயி மோடி ஆட்சியைக் கலைக்க விரும்பியதாகவும் மோடியை அத்வானிதான் காப்பாற்றியதாகவும் சொல்வார்கள். அந்த அத்வானியின் அரசியல் ஆசைகளை ஏறி மிதித்துத்தான் மோடி பிரதமராக ஆகி இருக்கிறார் என்பது இலக்கியத் தரமான நகைமுரண். (irony)
மோடி பிரதமர் தேர்தலில் நின்றபோது ரத்தக்கறை படிந்த ஒருவருக்கு பிரதமராகும் தார்மீக உரிமை இல்லை என்றுதான் கருதினேன், இன்னமும் கருதுகிறேன். ஆனால் மோடிக்கு எதிராக நின்ற யாருக்கும் பிரதமராகும் தகுதி இல்லை என்பதுதான் உண்மை. இன்னமும் மோடியின் மிகப் பெரிய பலம் ராஹுல் காந்திதான். பப்புதான் எப்போதும் போட்டி என்றால் மோடி சாகும் வரை பிரதமராகத்தான் இருப்பார்.
மோடியின் மீது என்றும் அழியாத களங்கம் இருக்கிறதுதான், ஆனால் குஜராத் கலவரங்களுக்கு பிற்பட்ட மோடியைப் பற்றி தார்மீக ரீதியாக யார் என்ன குறை சொல்லிவிட முடியும்?
மிக எளிமையான கேள்வி – எந்த விதத்தில் பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோஹன் சிங்கை விட பிரதமர் மோடி குறைந்துவிட்டார்? சிங் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர் என்றால் மோடி மட்டும் தினமும் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறாரா என்ன? மோடி பிரதமர் ஆன பிறகு அமைச்சர்கள் அளவிலாவது லஞ்சம் குறைந்திருக்கிறது என்பது அவரது பரம எதிரிகளே ஒத்துக் கொள்ளும் உண்மை. (அதானி கிதானி என்று ஆரம்பிக்காதீர்கள், இந்தியாவில் கட்சி நடத்த தேவைப்படும் பணத்தை சட்டரீதியாகப் பெற வழியே இல்லை. நேரு-படேல் காலத்திலேயே அப்படித்தான். படேல் 1946-இலோ என்னவோ ராஜேந்திர பிரசாதுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் – ‘இப்படி எல்லாம் சட்டம் இயற்றினால் நமக்கு பணம் கொடுத்த முதலாளிகளுக்கு என்ன பதில் சொல்வது’ என்று கேட்கிறார். படேல் இறந்த அன்று அவரது மகள் மனுபென் படேல் படேலின் வீட்டிலிருந்து சில பல லட்சங்களை நேருவிடம் கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஸ்டேட்மெண்டின் தொனியிலிருந்தே அது கணக்கில் வராத பணம் என்று யூகிக்க முடிகிறது. கட்சி பணம் எதற்கு வங்கியில் இல்லாமல் படேல் வீட்டில் இருக்கிறது?)
ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற முயற்சி தோல்வி என்று விமர்சிக்கிறார்கள். ஆம், 99 சதவிகிதத்துக்கு மேல் பணம் திருப்பி வந்துவிட்டது என்றால் அது தோல்விதான். ஆனால் எல்லா மாட்சிலும் ப்ராட்மன் கூட சதம் அடித்ததில்லை. நல்ல தியரி, நினைத்த அளவு வொர்க் அவுட் ஆகவில்லை. அரசு எட்டடி பாய்ந்தால் கறுப்புப் பண முதலைகள் பதினாறடி பாய்ந்துவிட்டார்கள். அதனால் என்ன? அவரது நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. அதை எல்லா மட்டத்திலும் மக்களும் – ஏழை,மத்ய்மர், பணக்காரர்கள் – உணர்ந்துதான் இருக்கிறார்கள். அதனால்தான் பிரச்சினைகள் இருந்தாலும் அந்த முயற்சி பொதுவாக வரவேற்கப்பட்டது/படுகிறது. இந்த மாதிரி முயற்சி செய்தால் சில பல நடைமுறைப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்றுதான் அனேகர் நினைக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அந்தக் காலகட்டத்தில் பொதுவாக சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு என்று அலுத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்த்தார்கள். உதாரணத்துக்கு ஒன்று.
ஜிஎஸ்டி என்று அடுத்தது. ஆம் ஜிஎஸ்டி வரி முயற்சியை இன்னும் நன்றாக அமுல்படுத்தி இருக்கலாம்தான். மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றுவதற்கு பதில் முதலிலேயே இன்னும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். குறிப்பாக உணவகங்களில் வரியை இன்னும் கொஞ்சம் சீராக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் எந்த அரசும் எந்தக் காலத்திலும் ஒரு புதிய வரி முறையை ஒரு குறையும் இல்லாமல் செயல்படுத்தியதில்லை. யாருக்காவது பாதிப்பு இருந்தே தீரும். எங்காவது ஏதாவது குறை இல்லாமல் நடைமுறைப்படுத்தவே முடியாது. இன்னும் இரண்டு வருஷம் போனால்தான் முயற்சி வெற்றியா இல்லையா என்று சொல்லவே முடியும். நேருவை விதந்தோதுபவர்களில் நானும் ஒருவன் – அதற்காக ஐந்தாண்டு திட்டம் எல்லாம் குற்றம் குறையே இல்லாத திட்டம் என்று சொல்ல முடியுமா என்ன? பசுமைப் புரட்சியால் எந்த பாதிப்பும் இல்லையா? நல்ல நோக்கம், இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ற சாதாரணப் புரிதல் கூட இல்லை என்றால் எப்படி?
மோடி நாடு நாடாகப் போனார் என்று குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன இன்பச் சுற்றுலாவா போனார்? நொட்டை சொல்வதே வேலை. நிறுவனத்துக்கு புதுத் தலைவர் வந்தால் அவருக்கு சில குறைகள் தெரியலாம், அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய அவர் சில முயற்சிகள் எடுக்கலாம். உதாரணமாக எல்லாரும் கோட் சூட்டோடு வந்தால்தான் நிறுவனத்தின் இமேஜ் உயரும் என்று அவருக்குத் தோன்றலாம், அதை அவர் நிறுவன விதியாக்கலாம். உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை என்றால் அதுவும் ஒரு பிரச்சினையா? நிறுவனம் லாபகரமாகச் செயல்படுகிறா என்றுதான் பார்க்க வேண்டும். முன்னால் இருந்த தலைவர்களை விட நன்றாகச் செயல்படுகிறாரா என்றுதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் வேலை வாய்ப்புகள் குறைகின்றன, சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது, பணவீக்கம் அதிகம், லஞ்சம் நிறைய என்றெல்லாம் அவர் மீது குற்றம் சாட்டுங்கள், அதுதான் அவரை அளக்கும் metrics. அவர் வருஷம் 365 நாளும் வெளிநாட்டிலேயே இருந்தாலும் சரி, அலுவலகத்துக்கு அண்டர்வேர் மட்டுமே அணிந்து வந்தாலும் சரி, குஜராத்தியில் மட்டுமே பேசினாலும் சரி, அவரது பாதுகாப்புக்காக இருக்கும் கமாண்டோக்களுக்கு சிற்றுண்டியாக கமன் டோக்ளா மட்டுமே பரிமாறினாலும் சரி அதெல்லாம் அவரது பாணி, அவர் செயல்படும் முறை, அதிலெல்லாம் தலையிட எவருக்கும் உரிமை இல்லை.
ஓரளவாவது நியாயமான குறை என்றால் அது கல்பூர்கி, மாட்டிறைச்சி மாதிரி விஷயங்கள்தான். ஆம், கல்பூர்கியிலிருந்து ஆரம்பித்து பல விரும்பத் தகாத கொலைகள் நடந்தன. பல fringe அமைப்புகளுக்கு துளிர்விட்டுப் போய்விட்டது, மாட்டிறைச்சி என்று எல்லை மீறுகிறார்கள். மோடி பிரதமராக இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் அவருடைய தவறு என்று நான் கருதுவது errors of omission, errors of commission அல்ல. முதல் முறையே கொஞ்சம் ஓங்கி சவுண்ட் விட்டிருந்தால் அடுத்த முறை பிரச்சினையே வந்திருக்காது. அவர் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது வெறும் ஓட்டு அரசியல்தான். ஆனால் அவார்ட் வாப்சியும் வெறும் sensational அரசியல்தான். இந்த நிகழ்ச்சிகளை ஊதிப் பெருக்கி நாட்டில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை, சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள், எதிர்க்குரல் கொடுப்பவர்கள் அடக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.
மோடியின் மிகப் பெரிய தலைவலி அவரைச் சுற்றி இருக்கும் அதிதீவிர பக்தர்கள்தான். Blind hero worship செய்யும் கூட்டம். அவர் நின்றால், நடந்தால், ஏன் குசு விட்டால் கூட ஆஹா என்ன மணம் என்ன மணம் என்று புல்லரித்துப் போகிறார்கள். ஆனால் எம்ஜிஆருக்கு இருந்த ஒளிவட்டத்தை படிக்காத பாமர மக்களின் குருட்டுத்தனமான நாயக வழிபாடு என்று அவ்வப்போது பொங்குவார்கள். ஹிந்தி கொஞ்சமும் புரியாத நண்பர் ராஜன் மோடியின் ஹிந்தி உரையைக் கேட்டேன், ஒன்றும் புரியாவிட்டாலும் அவரைப் பார்த்து புல்லரித்தேன் என்று ஒரு முறை சொன்னார். ராஜன் மோடி என்று சொல்லவே மாட்டார், வாராது போல் வந்த மாமணி மோடி என்றுதான் எழுதுவார். புனிதப்பசு (Holy cow) மோடியை விமர்சிப்பவன் எதிரி, ஆதரிப்பவன் நண்பன் என்ற அணுகுமுறை. காந்தியே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல என்னும்போது சுண்டைக்காய் மோடி விமர்சிக்கப்பட்டால் மட்டும் ஏன் பொத்துக் கொண்டு வருகிறது? மோடிக்கு இவர்களைத் தவிர வேறு எதிரிகளே வேண்டியதில்லை!
உதாரணத்துக்கு ஒன்று: அதிதீவிர மோடி பக்தர்கள் Demonetization மாபெரும் வெற்றி என்று எரிச்சல் மூட்டும் வகையில் காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். 99 சதவிகிதப் பணம் திரும்பினால் அது தோல்வி என்று கூடவா இன்னொருவர் விளக்க வேண்டும்? தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சிதான். பலரும் காஷ்மீரில் கல்லெறிவது குறைந்திருக்கிறது, எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன அதனால் வெற்றி என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். விராட் கோலி நூறு போட்டி ஆடி அதில் 99-இல் டக் அடித்தார் என்றால் கோலி பிரமாதமாக காட்ச் பிடிக்கிறார், குழுவை திறமையாக நடத்திச் செல்கிறார், அதனால் அவர் வெற்றி அடைந்திருக்கிறார் என்றா சால்ஜாப்பு சொல்வீர்கள்? முக்கிய நோக்கம் எதுவோ அது முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தால்தான் அடுத்த முயற்சி வெற்றி பெற கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது.
இவர்களாவது பரவாயில்லை, நண்பர் ராஜன் ரூம் போட்டு யோசித்து கணக்கு காட்டாமல் காங்கிரஸ் பிரதமர்கள் சொல்லி ரிசர்வ் வங்கி நிறைய நோட்டு அடித்தது, அதெல்லாம் திரும்பவில்லை, வாராது வந்த மாமணி மோடி நாட்டின் மானத்தைக் காக்க வெளியிலே சொல்லவில்லை என்கிறார். Occam’s Razor, Hanlon’s Razor, Hitchen’s Razor, Alder’s Razor பற்றி படிக்குமாறு அவருக்குப் பரிந்துரைக்கிறேன்.
எதிர்முகாமும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. ஒரு பக்கம் வாராது வந்த மாமணி என்றால் எழுத்தாளர் பி.ஏ.கே Fuhrer என்ற அடைமொழி இல்லாமல் எழுதுவதில்லை. இந்திரா காந்தியும் சஞ்சய் காந்தியும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலா வாழ்ந்தார்கள்? இந்திராவுக்கே சர்வாதிகாரி என்ற அடைமொழி தேவை இல்லை என்றால் மோடிக்கு ஏன்? இவரை மாதிரி நாலு பேர் இருந்தால் போதும், மோடிக்கு வேறு நண்பர்களே தேவை இல்லை.
மோடி சாதனைகள் புரிந்துவிட்டார், இந்தியாவின் நிலை அவரால் மிகவும் உயர்ந்துவிட்டது என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஆனால் எந்த விதத்திலும் அவர் அனேக முந்தைய பிரதமர்களுக்கு குறைந்தவர் அல்லர். நேருவை விட சிறந்த பிரதமரை நாம் இது வரை பெறவில்லை. ஆனால் அடுத்த வரிசையில் – சாஸ்திரி, தேசாய், ராஜீவ் (ராஜீவின் கைகளும் ரத்தக் கறை படிந்தவைதான்), ராவ், வாஜ்பேயி வரிசையில் இவரையும் வைக்கலாம். (என் கண்ணில் இந்திரா, சரண்சிங், வி.பி. சிங், சந்திரசேகர், கௌடா, குஜ்ரால், மன்மோஹன் போன்றவர்கள் மோசமான பிரதமர்கள்.)
இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற விழைவு, அயராத உழைப்பு, நேர்மை, தனிப்பட்ட ஒழுக்கம், நல்ல சகாக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை செயல்பட அனுமதிப்பது, எத்தனை உதவி இருந்தாலும் தனக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என்று தோன்றினால் அவர்களை உதறிவிடும் ruthlessness என்று மோடியிடம் பல தலைமைப் பண்புகள் இருக்கின்றன. ஹிந்து ஓட்டு அரசியலுக்காக அவ்வப்போது அடக்கி வாசிப்பதைத் தவிர இன்று வேறு எதுவும் பெரிதாகக் குறை சொல்லிவிட முடியாது. ஓட்டு எப்படியும் விழும் என்ற தைரியம் வந்தால் ஹிந்து ஓட்டு அரசியலுக்காக அடக்கி வாசிப்பதைக் குறைத்துக் கொள்வாரோ என்ற ஒரு நப்பாசை உண்டு.
ஆனால் அவர் காந்தியோ லிங்கனோ ரூசவெல்ட்டோ இல்லை. இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் பெரும் பிரச்சினைகளை வெல்லக் கூடிய திறமை கொண்டவர் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனக்கு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? இந்தியாவின் பிரச்சினைகளை குறைக்கவாவது முடியும் என்று அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பல கோடி இந்திய வாக்காளர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு பிரதமராக தார்மீக உரிமை இல்லை என்று நான் நம்புகிறேன்தான். ஆனால் இந்திரா காந்திக்கும் 66-இலும் சரி, 80-இலும் சரி, அந்தத் தார்மீக உரிமை இல்லை. சரண்சிங்குக்கு இல்லை; ராஜீவுக்கு இல்லை; சந்திரசேகருக்கு, கௌடாவுக்கு, குஜ்ராலுக்கு இல்லை. நேரு, சாஸ்திரி, தேசாய், ராவ், வாஜ்பேயி, மன்மோஹன், 71-இன் இந்திரா தவிர்த்த வேறு யாருக்குமே அந்தத் தார்மீக உரிமை இல்லை.
நிர்வாக ரீதியாக மோடியின் பெரும் குறை என்பது அவர் தன் குஜராத் அணுகுமுறையை இன்னும் விடாததுதான். குஜராத் சின்ன மாநிலம். கஷ்டமாக இருந்தாலும் அவரால் ஒவ்வொரு முயற்சியையும் நேரடியாக கண்காணிக்க முடிந்திருக்கலாம். இந்தியா பல மடங்கு பெரியது. டெல்லியில் உட்கார்ந்திருக்கும் ஒரு குழு எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவது முடியாத காரியம். ஆனால் அவரை குறை சொல்லியும் புண்ணியம் இல்லை. நேரு காலத்திலிருந்தே எல்லாரும் எல்லா திட்டங்களையும் அப்படித்தான் நடத்த முயன்றிருக்கிறார்கள். மோடி காந்தியைத் தன் ரோல் மாடலாகக் கொண்டாரானால் – bottom up approach-ஐ முயன்றாரானால் – வெற்றி பெற வாய்ப்புண்டு. அதாவது இந்தியாவிலேயே மிகப் பெரிய சர்தார் சரோவர் அணை அல்ல, சின்னச் சின்னதாக பல நூறு அணைகள் கட்டும் அணுகுமுறையைக் கைக் கொண்டாரானால் இன்னும் வெற்றி பெறலாம்.
சுருக்கமாகச் சொன்னால்: மோடி நிச்சயமாக above average PM-தான். (இந்தியப் பிரதமர்களின் சராசரித் தரம் மிக மோசம், நேருவுக்கே B-தான் கொடுப்பேன் என்பது வேறு விஷயம்.) இந்தியாவின் பெரும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சியாவது செய்கிறார். ஆனால் எதிர்ப்பாளர்கள் ‘நடுநிலையாளர்கள்’ என்ற போர்வையில் எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவரது அதிதீவிர ஆதரவாளர்கள் அவர் என்ன செய்தாலும் ஆஹா ஓஹோ பேஷ்பேஷ் என்கிறார்கள். விமர்சனங்கள் கிளம்பினால் என் தலைவனைக் குறை சொன்னா நீ ஒரு தேசத்துரோகி மகனே வகுந்துருவேன் என்று கிளம்புகிறார்கள். மொத்தத்தில் polarizing figure ஆக இருப்பதால் காட்டுக் கூச்சல் மட்டுமே கேட்கிறது, அதுதான் தலைவலியாக இருக்கிறது.
தார்மீக உரிமை இல்லை, இந்தியாவின் பிரச்சினைகளை வெல்லும் திறமை இல்லை என்று ஆயிரம் நொட்டை சொன்னாலும் இன்று எனக்கு இந்திய ஓட்டுரிமை இருந்தால் வேண்டாவெறுப்பாக மோடிக்குத்தான் ஓட்டுப் போடுவேன். பப்புவுக்குப் போடுவதற்கு பதில் தற்கொலையே செய்து கொள்ளலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...