பாக்கியம் ராமசாமி என்ற புனைபெயரில் அப்புசாமி கதைகளை எழுதியவரும், குமுதத்தை பெருவெற்றியாக மாற்றிய டீமில் முக்கியமானவருமான ஜ.ரா. சுந்தரேசன் மறைந்தார்.
தயவு தாட்சணியம் எதுவும் இல்லாமல் சொன்னால் ஜ.ரா.சு. இலக்கியம் என்று கருதக் கூடிய ஒரு வார்த்தை கூட எழுதியதில்லை. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எழுத்தாளரே அல்லர். ஆனால் என் நினைவில் எப்போதும் இருப்பார். அப்புசாமி கதைகளை தொடர்கதையாகவோ சிறுகதைகளாகவோ குமுதத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் படித்த எவரும் அவரை மறக்கமாட்டார்கள். அப்படி படித்த ஒவ்வொருவருக்கும் அவர்களை ஈர்த்த ஒரு புள்ளி இருக்கும் – எனக்கு 1001 அரேபிய இரவுகள் தொடர்கதை. ஏழெட்டு வயதில் படித்து சிரித்திருக்கிறேன். குமுதம் வந்ததும் வீட்டில் சண்டை போட்டு பத்திரிகையைக் கைப்பற்றி படித்திருக்கிறேன். பின்னே சும்மாவா, அரசு பதில்கள், ஆறு வித்தியாசங்கள், ஜெயராஜ் ஓவியங்கள், லைட்ஸ் ஆன், சாண்டில்யன் தொடர்கதைகள், அப்புசாமி கதைகள் என்று விரும்பிப் படித்த/பார்த்த பல பகுதிகள் இருந்தன. அந்த காலகட்டத்துக்குத் தேவையான ஒரு பத்திரிகையைக் கொண்டு வந்த எஸ்.ஏ.பி., ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா.சு. மற்றும் புனிதன் அடங்கிய அந்தக் குழுவை இன்றும் பிரமிப்போடுதான் நினைவு கூர்கிறேன்.
போய் வாருங்கள், பாக்கியம் ராமசாமி! அப்புசாமி, சீதாப்பாட்டி, ரசகுண்டு, பீமாராவ் எல்லாரையும் மறக்காத கூட்டம் இன்னும் இருக்கிறது என்று பெருமையோடு எடிட்டரிடம் சொல்லுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்
தொடர்புடைய சுட்டிகள்:
அப்புசாமிக்கு ஒரு தளம்
முதல் அப்புசாமி கதை
ஜ.ரா.சு.வின் வாழ்க்கைக் குறிப்பு
விக்கி குறிப்புத்
தென்றல் மாத இதழில் ஜ.ரா.சு. (Registration Required)
அப்புசாமியை நூலகத்தில் விரட்டி விரட்டி படித்தேன். அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகி – அதுதான் எனக்கான புள்ளி. சில வருடங்கள் முன்னால் படித்த போது கூட படிக்க முடிந்தது. இந்த கதைகள் எல்லாம், எலிப்பொறியின் மசால்வடை மாதிரி, சிறுவயதில் படிக்க ஆரம்பிப்பவர்கள் உள்ளே வர எளிதான் வழி. சிறுவயது என்றால் ஓரளவிற்கு படிக்க முடிந்த வயது, கல்லூரி வயதல்ல. விகடனில் அன்றாட வாழ்வில் நடக்கும் அபத்தங்களி பற்றி ஒரு தொடர் எழுதினார். ஓரளவிற்கு நன்றாக இருக்கும். அதிலும் ஒரு ரவா தோசை பற்றிய கட்டுரை மறக்க முடியாது. எந்த உணவகத்திற்கு சென்றாலும் ரவாதோசை ஆர்டர் செய்வதற்கு பின்னால் அந்த கட்டுரை கண்டிப்பாக உண்டு.
LikeLike