கவிதையும் நானும்

எனக்கு கவிதை அலர்ஜி என்று அவ்வப்போது நான் சொல்வதுண்டு. உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் அது கொஞ்சம் அலட்டிக் கொள்வதுதான். கவிதைகள் அபூர்வமாகவே என் மனதைத் தொடுகின்றன என்பதற்கும் எனக்கு கவிதை அலர்ஜி என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதைகள் என்று பொதுவாக கருதப்படுபவை எனக்கு அனேகமாக அப்பீல் ஆவதில்லை, அவ்வளவுதான். கவிதைகளைப் பொறுத்த வரை என் அலைவரிசைக்கு ஒத்து வரும் சஹிருதயரை நான் இன்னும் சந்திக்கவில்லை. அதனால் நானேதான் நல்ல கவிதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டி இருக்கிறது. ஆயிரம் கவிதை படித்தால்தான் எனக்கு ஒன்று தேறுகிறது, அத்தனை பொறுமை இருப்பதில்லை.

நல்ல கவிதை என்றால் என்ன என்று சிறந்த வாசகரான ஜெயமோகன் இந்தப் பதிவில் வரையறுத்திருந்தார். அதைப் படிக்கும்போது என் வரையறை என்ன என்று யோசித்துப் பார்த்தேன்.

  • கவிதையைப் படித்ததும் மனதில் எழுச்சி ஏற்பட வேண்டும்.
  • எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய உணர்வையோ அல்லது ஒரு கணத்தையோ அல்லது ஒரு தரிசனத்தையோ ரத்தினச் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும்.
  • நாம் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது என்றால் அது மொழியை சுலபமாக தாண்டக் கூடியதாக இருக்க வேண்டும். கன்னடிகனும் கனடா நாட்டுக்காரனுக்கும் என்னால் புரிய வைக்க முடியாத கவிதை கவிதையே அல்ல.
  • மொழியே தாண்ட வேண்டிய தடை என்றால் சந்தம், வார்த்தை விளையாட்டு, அலங்காரம் எல்லாம் பொருட்டே அல்ல.
  • 20-30 வரிகளுக்குள் இருந்தால் உத்தமம். நூறு வரிக்கு மேலே போனால் அது காவியமாக இருக்கலாம், கவிதையாக இருக்க முடியாது.

அப்படிப் பார்த்தால் எனக்கு கவிதை என்று தேறுவது மிகக் குறைவுதான். கம்பனும் ஷெல்லியும் கீட்சும் மில்டனும் வோர்ட்ஸ்வொர்த்தும் நெருடாவும் – நான் படித்தவை குறைவுதான் – எனக்கு பெரும் கவிஞர்களாகத் தெரிவதில்லை.

உதாரணத்தோடு சொல்கிறேனே! ‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக‘ என்றால் மொழி தேவையில்லை. ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி‘ என்பது எல்லா மொழிகளிலும் செல்லும். ‘செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே‘ மனித இனத்துக்கான கவிதை. ‘How Dark?‘ என்பது எல்லாரையும் பொட்டில் அறையும் கேள்வி. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா‘ என்பது வேற்று கிரக உயிரினங்களுக்குக் கூட புரியலாம். ‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்‘, ‘முத்தைத்தரு‘, ‘பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து‘ எல்லாம் தமிழனுக்கு மட்டும்தான்.

இன்று சங்கக் கவிதைகள் பலவும் கவிதைகளாகத் தெரிகின்றன. அவற்றைப் போன்ற ரத்தினச் சுருக்கமான கவிதைகளை மிக அபூர்வமாகத்தான் பார்த்திருக்கிறேன். ‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன‘ என்ற ஒரு வரியே போதுமே, அதிலேயே மனம் விம்மி விரிந்து கண்ணில் ஈரம் தெறிக்கிறதே, அதற்கப்புறம் எதற்கு இன்னும் நாலு வரி என்றுதான் தோன்றுகிறது. அவற்றை நேரடியாகப் படித்துப் புரிந்து கொள்ளும் தமிழறிவு இல்லாததும், அவற்றுக்கு கிடைக்கும் உரைகள் எல்லாம் ஓடி விளையாடும் அழகிய குழந்தையைக் கொன்று உடலைக் கிழித்து இதோ பார் சதை, இதோ பார் எலும்பு, இதெல்லாம் சேர்ந்துதான் அந்தக் குழந்தையாக சிரித்துக் கொண்டிருந்தது என்று விளக்குவது போலிருப்பதுதான் படிப்பதற்கு தடைக்கற்களாக இருக்கின்றன.

எனக்கு முதன்முதலில் கவிஞன் என்று அறிமுகமானது பாரதிதான். அறியாத வயதில் உத்வேகத்தோடு வாய்விட்டுப் படித்த அந்தக் கவிதைகளை – குறிப்பாக ஸ்வதேச கீதங்களை – இன்றும் என்னால் தரம் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் 22-23 வயதில் நெருங்கிய மலையாளி நண்பன் ஸ்ரீகுமார் என்னவோ பாரதி பாரதின்றீங்களே, ஏதாவது மொழி பெயர்த்து சொல்லுடா என்று கேட்டபோது செந்தமிழ் நாடென்னும் போதிலே, வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம், சின்னஞ்சிறு கிளியே, சூதர் மனைகளிலே, காற்று வெளியிடை கண்ணம்மா என்று பல பாடல்களை ஒரே கணத்தில் மொழிபெயர்க்க முயன்று பாரதியின் உத்வேகத்தை வெறும் வார்த்தைகளை வைத்து காட்டிவிட முடியாது என்று உணர்ந்தேன். அந்தக் கணத்தில்தான் கவிதை என்றால் என்ன என்ற கேள்வியை முதல் முறையாக என்னை நானே கேட்டுக் கொண்டேன். மொழிபெயர்க்க முடியாதது கவிதை அல்ல என்ற முடிவுக்கும் வந்தேன். (ஆனால் இன்று வரை பாரதி நல்ல கவிஞரா என்று என்னை நானே கேட்டுக் கொண்டதில்லை. அது blasphemy, தெய்வக் குத்தம் ஆகிவிடும்.)

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு கவிதை என்றால் என்ன? வரையறுப்பது கஷ்டமாக இருந்தால் உங்களுக்குப் பிடித்த கவிதைகள் நாலைந்தை எடுத்துவிடுங்கள்! இந்தத் தளமே என்னை மாதிரி நாலு கிறுக்குகள் இருக்க மாட்டார்களா, அவர்களிடம் பேச மாட்டோமா என்ற தவிப்பின் வெளிப்பாடுதான். அதனால் உங்கள் கருத்துகளைச் சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். பேசி முடிவெடுக்கலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

8 thoughts on “கவிதையும் நானும்

  1. RV,
    வாரணம் பொருத மார்பும்வ ரையினை எடுத்த தோளும்
    நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
    தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
    வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்.

    இது உமக்குக் கவிதையா? இல்லையா?

    Like

    1. டில்லிதுரை, அது எனக்கு கவிதையே. ஆனால் அபூர்வமாகவே கம்பன் பாடல்களில் எனக்கு கவிதை தென்படுகிறது. நான் படித்திருப்பது மிகக் குறைவு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

      Like

  2. ஆர்வி,

    நடையழகு, சொற்சிக்கனம், காலங்கடக்கும் தன்மை, universality என்பவைதான் உங்கள் வரையறை என்றால்:

    திங்கள் மாலை வெண்குடையான்,
    சென்னி செங்கோல்-அதுஒச்சிக்
    கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாய்;வாழி;காவேரி!
    கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாது ஒழிதல்,கயல்கண்ணாய்!
    மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
    அறிந்தேன்;வாழி காவேரி! 2

    மன்னும் மாலை வெண்குடையான்
    வளையாச் செங்கோல்-அதுஓச்சிக்
    கன்னி தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாய் வாழி,காவேரி!
    கன்னி தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாது ஒழிதல்,கயல்கண்ணாய்!
    மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
    அறிந்தேன்;வாழி காவேரி!

    Like

  3. கம்பராமாயணத்தில் உயர்வு நவிற்சி அதிகம் (காவியத் தலைவன் தெய்வமானதால்?…). சங்கப் பாடல்களில் dry as dust இயல்பு நவிற்சி.

    Like

  4. அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதும்
    உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உறுத்து வந்தூட்டு மென்பதும்

    Like

  5. Geep, திங்கள் மாலை வெண்குடையான் முழுதாகப் புரியாததால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசியல் பிழைத்தோர் எல்லாம் எனக்கு கவிதை அல்ல.

    Like

  6. மொழிபெயர்க்க முடியாதது கவிதை என்று கூறி முடியாது. மொழி பெயர்ப்பவரும் கவிஞராக இருக்க வேண்டுமே 🙂

    கவிதை என்பது ஒரு வித சித்திரத்தை மனதில் உருவாக்கினாலே போதும் என்று தோன்றுகின்றது. பல வரிகளில் வளவளவென்று கூறுவதை சட்டென்று ஒரு சில வரிகளில், ஒரு ஸ்னாப்ஷாட் மாதிரி காட்டிவிட்டு போவது நல்ல கவிதை என்று தோன்றுகின்றது.

    அனாவுக்கு ஆனா போட்டு எழுதுவது, ஒரு வரியை ஒடித்து மடக்கி எழுதுவது, ஏ மனிதா என்று விளிப்பது எல்லாம் கொஞ்சம் பீதி தருவன.

    சில சும்மா ஒரு பாய்ச்சலை காட்டிவிட்டு ஒரு சுவாரஸ்ய கணத்தை காட்டுகின்றது. சமீபத்தில் படித்த ஒரு நல்ல கவிதை(!!??), போகன் சங்கர் எழுதியது

    //எனது கவிதைகளில் வந்த ஒரு கருத்து பற்றி நீங்கள் கேட்டபோது கடும் அதிர்ச்சியாக இருந்தது.
    எவ்வளவோ விழிப்புடன் இருந்தும் இப்படித்தான் ஒன்றிரண்டு வந்துவிடுகிறது//

    பிறகு கவிதை வேறு செய்யுள் வேறு இல்லையா? மேலே இருப்பவை எல்லாம் செய்யுள்கள் இல்லையா? தேர்வில் மதிப்பெண்களை குறைக்க கிடைத்த நல்ல ஆயுதம்

    போன வருடம் கம்பராமாயணத்தை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வேளை பொழுது வரவில்லை. ஜாதகத்தில் குரு பலன் மாதிரி, கவிதை படிக்க ஏதாவது கிரகம் வர வேண்டும் போல

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.