எனக்கு ஏழு வயது இருக்கும்போது என் அம்மா என்னை உள்ளூர் நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டாள். முதன்முதலாகப் படித்த புத்தகத்தில் ஓநாய் ஒன்று அம்மா பன்றியிடம் நான் உன் குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்கிறேன் என்று கேட்கும், அம்மாக்காரி மறுத்துவிடுவாள். சில மாதங்களில் அங்கிருந்த அத்தனை சிறுவர் புத்தகங்களையும் முடித்துவிட்டேன். இரண்டு வருஷங்களுக்குள் அங்கிருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் புரட்டியாவது பார்த்திருப்பேன். உலகில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் படிக்க முடியாது, அத்தனை நேரம் இல்லை, இந்த சின்ன நூலகத்தில் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் கூட படித்து முடிக்கப் போவதில்லை என்று உணர்ந்த கணம் இன்னும் நினைவிருக்கிறது. ஐநூறு, அறுநூறு வருஷங்களுக்கு முன் பிறந்திருந்தால் அது நடந்திருக்கலாம் என்று நினைத்தது உண்டு.
இன்று ஹெர்னாண்டோ கோலன் என்பவரைப் பற்றிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. கோலன் கொலம்பசின் மகனாம். பதினைந்தாம்-பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் உலகின் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட முயன்றிருக்கிறார். ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு சென்று கிடைக்கும் புத்தகம் எல்லாவற்றையும் வாங்கி இருக்கிறார். வாங்கிய விலை, புத்தகம் பற்றிய விவரங்களை எல்லாம் குறித்து வைத்திருக்கிறார். அப்போதே அவற்றை படித்து முடிக்க முடியவில்லை. அதனால் ஆட்களை நியமித்து புத்தகங்களை சுருக்கி அவற்றின் சாரத்தை கிரகிக்க முயன்றிருக்கிறார். புத்தகம் இருந்தால் போதாது, அவற்றை சுலபமாக கண்டுபிடிக்க வேண்டும், தேடுவது சுலபமாக இருக்க வேண்டும் என்று catalogs அமைத்திருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இன்னும் அவரது நூலகத்தில் இருக்கின்றனவாம். நூலகம் இன்று செவியா (Seville) நகர கதீட்ரலில் இருக்கிறதாம்.
சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்