தொல்லியல் நிபுணர் நாகசாமிக்கு பத்மபூஷண்

டாக்டர் நாகசாமி என் தங்கையின் மாமனார். இந்த முறை தலைபோகும் பிரச்சினையில் இந்தியா சென்றிருந்தபோது சந்தோஷப்பட்ட ஒரு தருணம் அவருக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டதுதான். நான் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தேன். 25-ஆம் தேதி இரவு நேரம் கழித்து வந்தவன் தூங்க முடியாமல் காலை மூன்று மணி வாக்கில் கணினியைத் திறந்தேன். இவருக்கு விருது என்று பார்த்ததும் தூங்கிக் கொண்டிருந்த என் தங்கையை ‘கீதா, கீதா, உன் மாமனாருக்கு பத்மபூஷன்!’ என்று உலுக்கி எழுப்பினேன். அவள் கண்ணை வேண்டாவெறுப்பாகத் திறந்து ‘தெரியுண்டா, ராத்திரி வேளைல தூங்கவிடாம! பேசாம போய் படு!’ என்று ஒரு அதட்டல் போட்டாள். 🙂 இரண்டு நாள் முன்னால் சந்தித்தபோதும் அவரும் மூச்சுவிடவில்லை.

நாகசாமி உண்மையான scholar. தமிழிலிலும் சமஸ்கிருதத்திலும் ஊறித் திளைத்திருப்பவர். பல முறை அவருடைய வித்வத்தைக் கண்டு ஆவென்று வாயைத் திறந்து பார்த்திருக்கிறேன்.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். ஓய்வு பெற்ற பிறகும் அக்கடா என்று ஓய்வாக உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. Conferences, உள்/வெளி நாடு பல்கலை கழகங்களில் visiting professor ஆக போய் வருதல், சிதம்பரம் நாட்டியாஞ்சலி, ஒரு இசை நாடக குழுவை அமைத்து அதன் மூலம் பல நாடுகளில் இந்திய கலைகளை பரிச்சயம் செய்து வைத்தல் என்று அயராத உழைப்பு. தமிழ், சமஸ்கிருதம், வரலாறு – குறிப்பாக கல்வெட்டுகள், நாணயங்கள், சிற்பம், ஆகியவற்றில் நிபுணர். இப்படி பெரிய நிபுணராக இருந்தாலும் எல்லாருடனும் அவரவர் லெவலில் சாதாரணமாக பேசுவார். தான் பெரிய பிஸ்தா என்றெல்லாம் துளியும் கர்வம் அற்றவர்.

தமிழ் நாட்டு செப்பு சிலைகளை பற்றி இவரை விட அதிகம் தெரிந்தவர் யாரும் இருக்க முடியாது. லண்டனுக்கு கடத்தப்பட்ட சிவபுரம் நடராஜர் சிலை விவகாரம் ஞாபகம் இருக்கலாம். லண்டனுக்கு சென்று கோர்ட்டில் சாட்சி சொன்ன expert witness இவர்தான். அந்த சிலையை பற்றிய பல விவரங்களை சந்தேகத்துக்கிடமில்லாமல் கோர்ட்டில் நிறுவி, அதை மீண்டும் தமிழ் நாட்டுக்கு கொண்டு வர அவரே முக்கிய காரணம்.

ஒரு முறை தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு போயிருந்தோம்.அங்கே சுற்றுச்சுவரில் இருக்கும் கல்வெட்டை அவர் பாட்டுக்கு காலையில் எழுந்து காப்பி சாப்பிட்டுவிட்டு ஹிந்து பேப்பர் படிப்பது போல படித்துக் கொண்டே போனார். நானும் முயற்சித்துப் பார்த்தேன், அங்கங்கு ஒன்றிரண்டு எழுத்துதான் படிக்க முடிந்தது. அவருடைய தயவால்தான் தஞ்சை பெரிய கோவிலின் ஓவியங்களை ஒரு முறை பார்த்திருக்கிறேன்.

சௌந்தர்ய லஹரியை தமிழில் வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். இது சோழர் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாம். அதைத் தேடிப் பிடித்து பதித்திருக்கிறார்.

அவருக்கு விருது தரப்பட வேண்டும், ஆனால் அவர் போன்றவர்களை எந்த அரசும் கண்டு கொள்ளாது என்று ஒரு வருத்தம் இருந்தது. மோடி அரசுக்கு ஒரு ஜே!

அவருக்கு ஒரு தளம் இருக்கிறது. அவருடைய பல புத்தகங்கள்/கட்டுரைகள் அங்கே படிக்கக் கிடைக்கின்றன.

விகடனில் அவரது பேட்டி வெளியாகி இருக்கிறது. வசதிக்காக கீழே மீள்பதித்திருக்கிறேன். விகடனுக்கு நன்றி!

ஏராளமான ஆய்வு நூல்கள், லென்ஸ், சுற்றிலும் பண்டைய கால ஓவியங்கள் என நாகசாமியின் வீடே ஒரு மியூசியம் போல்தான் இருக்கிறது. தொல்லியல் துறையில் குறிப்பிடத்தகுந்த பணிகளைச் செய்ததற்காக 2017-ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது நாகசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 87 வயதாகும் நாகசாமி, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் என்ற பெருமை பெற்றவர். பெசன்ட் நகர் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிப்பவரை வாழ்த்துகளோடு சந்தித்தேன்.

தமிழ்க் கல்வெட்டுகள், மதுரை திருமலை நாயக்கர் மஹால், பாரதியார் வாழ்ந்த வீடு ஆகியவை குறித்த ஆச்சர்யமூட்டும் ஏராளமான தகவல்கள் அவரிடமிருந்தன.

கொடுமுடியின் அருகிலுள்ள ஊஞ்சலூர் தான் நாகசாமியின் சொந்த ஊர். தன் சொந்த ஊரில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். அதன் பிறகு கொடுமுடியில் பத்தாம் வகுப்பு வரை சம்ஸ்கிருதத்தை ஒரு மொழியாக எடுத்துப் படித்திருக்கிறார். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் சம்ஸ்கிருத இலக்கியத்தில் பி.ஏ ஹானர்ஸ் முடித்த கையோடு சென்னை அருங்காட்சியகத்தில் கலைப்பிரிவுத் தலைவராக 1959-ல் பணியில் சேர்ந்தார் நாகசாமி.

‘எனக்குச் சின்ன வயசுலயிருந்தே இலக்கியம்லாம் படிக்கிற பழக்கம் இருந்ததால, எனக்கு அந்த வேலை ரொம்பப் பிடிச்சிருந்தது. அருங்காட்சியகத்துல சேர்ந்ததுக்கு அப்புறமா அங்க இருந்த பாரதியார் கைப்பட எழுதின கவிதைகளை முதன் முதலாக பொதுமக்களோட பார்வைக்குக் காட்சியாக வச்சேன், நல்ல வரவேற்பு கிடைச்சது’ என்பவரின் கண்களில் அவ்வளவு பரவசம்.

பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்துக்கு அவர் சென்றிருந்தபோது பாரதியார் பிறந்த வீடு, தீக்குச்சிகளுக்கு நெருப்பு உருவாக்கப் பயன்படும் கந்தகம் தயாரிக்கும் கூடமாக இருந்துள்ளது. அதை மீட்டு சீர்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் நாகசாமி.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடு ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது. அதையெல்லாம் மாற்றி ‘கலைச் செல்வங்கள்’ என்ற பெயரில் முதன் முறையாகத் தமிழில் கையேடு கொடுத்தது, தான் கலைப்பிரிவுத் தலைவராக இருந்தபோதுதான் என்பதில் நாகசாமிக்கு ரொம்பவே பெருமிதம்!

‘மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹால் அரசு அலுவலகமாகத்தான் முதலில் செயல்பட்டு வந்தது. அந்த மஹாலைத் தடுப்பு வைத்துப் பிரித்துப் பல அலுவலகங்கள் இயங்கி வந்தன. அதன் பிறகு நாங்கள் அதை மீட்டெடுத்து சில பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தோம்’ என்னும் நாகசாமி தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் பேசினார்.

‘தமிழை உயர்த்த வேண்டும் என்பதற்காகப் பிற மொழிகளை நாம் எதிர்க்கத் தேவையில்லை. பிற மொழி வருகையால் அழிந்துவிடக்கூடியதல்ல நம் மொழி’ என்கிறார் அக்கறையோடு.

தொடரட்டும் உங்கள் சேவை!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

2 thoughts on “தொல்லியல் நிபுணர் நாகசாமிக்கு பத்மபூஷண்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.