கடல்புரத்தில் பல வருஷங்களுக்கு முன் படித்த குறுநாவல். படித்தபோது மனம் கனமாக இருந்ததும் பிலோமி போன்ற பெண் கிடைப்பாளா என்று ஏக்கப்பட்டதும் இன்னும் நினைவிருக்கிறது.
தான் விரும்பும், தன்னை விரும்பும் சாமிதாசுக்கும் தனக்கும் திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் அவன் மீது மாறாத அன்பும் – அன்பு அல்ல, அன்பைத் தாண்டி, ஏறக்குறைய விசுவாசம் என்றே சொல்லலாம் – காதலும் கொண்ட பிலோமி. தான் காதலிப்பனின் பலவீனங்களையும் ஏற்றுக் கொள்ளும் பிலோமி. அவளது மங்கிய நகல்களாகவே மற்ற பாத்திரங்கள். தான் காதலித்த வாத்தி மீது இன்னும் மாறாத அன்பு கொண்ட அவள் தாய். இன்னும் ஒருவரை ஒருவர் மறக்காத பிலோமியின் தோழி ரஞ்சியும் பிலோமியின் அண்ணனும். வாத்தி மீது மனைவி அன்பு கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் குருசு (பிலோமியின் அப்பா). எல்லோருமே காதல் கைகூடாது என்று தெரிந்தும் காதலை கைவிடுவதில்லை. வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்ட போதும் காதலை மறப்பதில்லை.
இன்று மீள்வாசிப்பில் கடல்புரத்தில் மிகுகற்பனை நாவல் என்று தோன்றுகிறது. அவ்ளோ நல்லவனா(ளா) நீ என்று மனதில் ஒரு கேள்வி ஓடிக் கொண்டே இருக்கிறது. வாத்தியை நினைத்துக் கொண்டே குருசோடு படுத்தாளா பிலோமியின் அம்மா (அது என் கண்ணில் தவறில்லை) என்ற கேள்வி நாவலில் ஏன் கேட்கப்படவே இல்லை, அது கதையில் பெரிய ஓட்டையாக இருக்கிறதே என்று தோன்றுகிறது. எல்லோரும் எல்லா காலங்களிலும் நல்லவரே, எப்பப் பார்த்தாலும் அன்பும் பாசமும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும் என்றால் இந்த எழுத்தாளர் எந்த உலகில் இருக்கிறார், what is he smoking என்றுதான் தோன்றுகிறது. எக்கச்சக்கமாக நெஞ்சை நக்குகிறார்கள் என்று தோன்ற வைக்கிறது. இது நாவலின் குறையா, இல்லை எனக்கு வயதாகிவிட்ட குறையா என்று தெரியவில்லை.
கடல்புரத்தைப் பற்றி பேசும்போது நம்மூர் விமர்சகர்கள் இது மீனவர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது என்றெல்லாம் பிலிம் காட்டுவார்கள். வல்லமும் லாஞ்சியும் வலையும் கருவாடும் கதையில் பேசப்பட்டால் அது மீனவர் வாழ்க்கை அல்ல. இது முற்றிலும் அகத்தளத்தில் நடக்கும் நாவல். இந்தக் கதையை சென்னையின் அடுக்குமாடிக் கட்டிடப் பின்புலத்தில் எழுதலாம்; கும்பகோணம் அக்ரஹாரப் பின்புலத்தில் எழுதலாம்; மும்பையின் தாராவிப் பின்புலத்தில் எழுதலாம். கருவாட்டுக்கு பதிலாக தயிர் சாதம், வடா பாவ் என்று எதையாவது போட்டுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.
குறைகள் இன்று தெரிந்தாலும் கடல்புரம் இலக்கியம்தான். பிலோமி நல்ல படைப்புதான். தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாவல்தான். ஆனால் எனக்கு இருந்த பிம்பம் அளவுக்கு உயர்ந்த இலக்கியம் அல்ல. நாவல் வெளிவந்த காலத்தில் – சரோஜா தேவியும் கே.ஆர். விஜயாவும் தமிழ்ப் பண்பாட்டை, காதலி/மனைவி என்றால் என்ன என்று தாங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் – மணமானாலும் காதலித்தவனை மறக்காத பெண்கள் என்பது பெரிய புரட்சியாக இருந்ததோ, நாவலில் அங்கங்கே பறையன் என்று சொல்லிக் கொள்வது அந்தக் காலத்தில் politically incorrect ஆக இருந்து நாவலின் நம்பகத்தன்மையை அதிகரித்ததோ என்று சந்தேகம் வருகிறது.
ஜெயமோகன் தன் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் கடல்புரத்தை இரண்டாம் நிலை பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – கடல்புரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்.ரா.வும் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் கடல்புரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
படியுங்கள் என்று இன்னும் பரிந்துரைக்கிறேன் – எனக்கு இருந்த பிம்பம் கொஞ்சம் உடைந்துவிட்டாலும்.
ஒரு காலத்தில் வங்காள மொழி நாவல்களுக்கு திரைப்பட உலகில் இருந்த மவுசு ஆச்சரியப்படுத்துவது. சாதாரண வணிக நாவல்கள், சுமாரான கதைகள் எல்லாம் கூட திரைப்படமாக வெளிவந்தன. தமிழில் வெளியான தேவதாஸ், பெண்ணின் பெருமை, அன்னை, படிக்காத மேதை, படித்தால் மட்டும் போதுமா, காத்திருந்த கண்கள், பழனி, எதிர்நீச்சல் கூட வங்காள மொழி நாவல்கள்/நாடகங்களை மூலக்கதையாகக் கொண்டவை. எதிர்நீச்சல் விஷயத்தில் அது வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்று அந்தக் காலத்தில் ஒரு சின்ன சச்சரவு இருந்திருக்கிறது. ஐம்பது-அறுபதுகளின் ஜமீந்தார்/நிலச்சுவான்தார் குடும்ப மிகை உணர்ச்சித் திரைப்படம் (Melodrama) என்றால் அதன் மூலக்கதை வங்காள நாவலாக இருக்க நல்ல வாய்ப்பிருக்கிறது.
இந்தக் கட்டுரை அப்படிப்பட்ட சில நாவல்கள்-ஹிந்தித் திரைப்படங்களைப் பற்றி பேசுகிறது. அந்த திரைப்படங்களைப் பற்றி கீழே…
சாஹெப் பீபி அவுர் குலாம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. பாட்டுகளுக்காகவே பார்க்கலாம். மீனாகுமாரியும் குரு தத்தும் வஹீதா ரெஹ்மானும் ரஹ்மானும் கலக்கலாக நடித்திருப்பார்கள். அந்த வருஷ ஃபில்ம்ஃபேர் விருதுகளுக்கான ஐந்து nominations-உம் மீனாகுமாரிக்கு இந்தப் பாத்திரத்துக்காகவே கிடைத்தது, வேறு யாரும் nominate கூட செய்யப்படவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! புத்தகத்தை வாங்கி வைத்திருக்கிறேன், படிக்க வேண்டும்…
எல்லா பாட்டுகளுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான் என்றாலும் ஒரே ஒரு பாட்டு.
தேவதாஸைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இன்று ஒரு cliche-வாக மாறிவிட்ட படிமம். எல்லா இந்திய மொழிகளிலும் ஒரு முறையாவது வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கே.எல். சைகலுக்கும் திலீப் குமாருக்கும் நாகேஸ்வரராவுக்கும் அவர்களின் இமேஜை நிர்ணயித்தவை அவர்கள் தேவதாசாக நடித்த திரைப்படங்கள்தான். அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
என் உயிரின் கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது
ஏறிக்கொண்டே போகிறது வயது
சீப்பைப் பயன்படுத்தி சில வருஷமாயிற்று
சின்ன எழுத்துகளைப் படிக்க முடிவதில்லை
கனவில் கூட தொப்பை இல்லாமல் நான் வருவதில்லை
கண்ட கனவுகளில் நிறைவேறியவை கொஞ்சமே
செய்தவை பெரிதாகத் தெரியவில்லை
செய்ய வேண்டியவை ஏராளம்
செய்ய விரும்புபவை இன்னும் ஏராளம்
செய்வது என்ன என்று தெரிவதில்லை
செய்தது என்ன என்றும் தெரியவில்லை
தினம் தினமும் அதே அதே
தில்லியோ வெகு தூரத்தில்
காலை நாலு மணிக்கு சப்பாத்திக் கள்ளியை சுற்றிச் சுற்றி வரும் வாழ்க்கை
கடிகாரம் டிக்டிக்குவது மட்டும் நிற்பதே இல்லை
ஆனாலும் தோழர்களே
குறை ஒன்றும் இல்லை
கனவு மெய்ப்படாவிட்டால் கவலை ஏதும் இல்லை
இலக்கல்ல நடப்பதே என் ஜீவனின் வெற்றி
தில்லி அல்ல செல்லும் சாலையே என் இலக்கு
இன்னும் கனவு காண்பேன்
இன்னும் செய்வேன்
முடிந்தது அத்தனையும் செய்வேன்
முடியாததும் சில செய்வேன்
கடிகாரம் டிக்டிக்கிக் கொள்ளட்டும்
கடிகாரம் என் எதிரி அல்ல.
க.நா.சு கொடுத்த பில்டப்பால்தான் இந்தப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். முதல் வாசிப்பில் புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறோ என்று தோன்றியது. அப்போது எனக்குத் தோன்றியதை இப்படி சுருக்கலாம்.
ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, பூமணி, கி.ரா.வின் படைப்புகள், ஜோ டி க்ரூசின்ஆழிசூழ் உலகு என்று இஇதை விட நல்ல வட்டார இலக்கியம் நிறைய வந்துவிட்டன. ஒரு வேளை க.நா.சு. இப்படிப்பட்ட தமிழில் இப்படிப்பட்ட genre-இல் எழுதப்பட்ட முதல் புத்தகம், முன்னோடி நாவல் (1942-இல் வெளி வந்த புத்தகமாம்) என்று பூரித்துப் போய்விட்டாரோ என்னமோ. புத்தகம் உண்மையான மனிதர்களை, உண்மையான சூழ்நிலைகளை சித்தரிக்கிறதுதான். ஆனால் சுவாரசியமான முடிச்சுகள், ஒரு புதிய உலகம், மனிதர்களைப் பற்றிய insights என்று எதுவுமே இல்லை.
இன்று நாவலை மீண்டும் படிக்கும்போது மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட நாவல் என்று புரிகிறது. (ஆசிரியரின் குரல் அங்கங்கே இருந்தாலும் கூட). விடை இல்லாத கேள்விகள் புத்தகத்தை சுவாரசியப்படுத்துகின்றன. நாகம்மாள் உண்மையில் விரும்பியது என்ன? சின்னய்யனின் இறப்பையா? அவளுக்கு ராமாயி கணவனோடு வாழ்வது கண்டு பொறாமையா? முதலில் சின்னையன் இறந்துவிட்டானா? அவளுக்கு கெட்டியப்பன் மேல் ஈர்ப்பு இருக்கிறதா இல்லையா? காட்டிலும் மேட்டிலும் யாரும் அறியாமல் சந்தித்துக் கொண்டே இருப்பது எங்கே கொண்டு போகும் என்று அறியாமலா இருப்பாள்? ஊர் என்ன பேசும் என்று உணராமலா இருப்பாள்?
ஆனால் புத்தகம் பாதியில் முடிந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். விடை இல்லாத கேள்விகள் என்பதெல்லாம் சரிதான், ஆனால் இன்னும் கொஞ்ச தூரமாவது போயிருக்க வேண்டும் என்று தோன்றியது.
எனக்கு அரைகுறையாகத் தெரிந்தாலும் சிறப்பான வட்டார நாவல்தான். ராஜம் ஐயரோடும் மாதவையாவோடும் தேங்கிப் போயிருந்த தமிழ் நாவல் உலகத்தை அடுத்த நிலைக்கு இவர்தான் கொண்டு போயிருக்க வேண்டும். இன்றும் படிக்கக் கூடிய, காலாவதி ஆகாத, எதார்த்தவாத நாவல். அவர் காட்டுவது கொங்கு நாட்டு கிராம சூழ்நிலையில் தன் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் தைரியமான பெண்ணை. அவளுக்கு நேர் எதிர் குணாதிசய்ம் கொண்டவள் அவள் கொழுந்தன் மனைவி ராமாயி – அடங்கி ஒடுங்கிப் போகும் ‘குடும்பப் பெண்’. ராமாயி மூத்தவள் மீது கசப்போடு அடிபணிந்து போவது சிறப்பான சித்திரம். சின்னச் சின்ன பாத்திரங்கள் – சின்னையனை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள விரும்பும் மாமியார், சண்டியர் கெட்டியப்பன், முன்விரோதம் பாராட்டும் மணியக்காரர், அவரின் உதவியாளர் – மிகக் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன.
எனக்கு புத்தகம் இன்னும் நீண்டிருக்க வேண்டும்தான். மனக்குறை இருந்தாலும் என் எண்ணம் மாறிவிட்டது என்பதைப் பதிவு செய்கிறேன். இன்னும் சிறப்பான வட்டார நாவல்கள் வந்திருக்கலாம், ஆனால் இந்த நாவல் காலாவதி ஆகிவிடவில்லை. இன்னும் பல வருஷம் உயிரோடு இருக்கும் முன்னோடி நாவல் என்றே இப்போது கருதுகிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இப்போது காலச்சுவடு பதிப்பு ஒன்று இருக்கிறதாம்.
நாகம்மாள்கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் இந்த புத்தகத்தைப் பற்றி முதல் முறையாக கேள்விப்பட்டேன். க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அறிமுகங்கள் இரண்டு – ஒன்று சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம், இன்னொன்று இது. புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை. புத்தகம் கிடைப்பது பத்து வருஷத்துக்கு முன்னால் குதிரைக் கொம்புதான். பல வருஷமாகத் தேடியதை நண்பர் ராஜன் இரவல் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். இப்போது காலச்சுவடு ஒரு பதிப்பைக் கொண்டு வந்திருக்கிறது.
முதல் வாசிப்பில் புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. க.நா.சு.வின் பில்டப் என் எதிர்பார்ப்புகளை மிக அதிகமாக்கிவிட்டதோ என்னவோ. ஆனால் வாங்கி என் நூலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் என்பதில் எனக்கு அப்போதே எந்த சந்தேகமும் இல்லை. இந்த முறை நூலகம் சென்றபோது தற்செயலாக கண்ணில் பட்டது. மறுபடியும் படித்துப் பார்ப்போம் என்று கொண்டு வந்தேன்.
எதற்காக மறுவாசிப்பு? முதல் காரணம், முக்கிய காரணம் இந்த முறை எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதால்.
இரண்டாவது காரணம் பல நல்ல வாசகர்கள் பரிந்துரைப்பதால். அந்தப் பரிந்துரைகளை கீழே தொகுத்திருக்கிறேன். என் கருத்தை அடுத்த பதிவில் எழுத உத்தேசம்.
க.நா.சு.வைப் பற்றி ஏற்கனவெ சொல்லி இருந்தேன். மீண்டும் மீண்டும் இந்த நாவலைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஷண்முகசுந்தரமே ஹாஸ்டல் ஹாஸ்டலாக சுற்றி இந்த நாவலை விற்றிருக்கிறாராம், க.நா.சு. அவரிடமிருந்தே நேரடியாக வாங்கி இருக்கிறார். (இப்போது திடீர் குழப்பம், அப்படி விற்றது சங்கரராமோ? விற்கப்பட்டது மண்ணாசை நாவலோ? நினைவிருப்பவர்கள் நான் தவறாக எழுதி இருந்தால் திருத்துங்கள்!)
முற்றம் இலக்கிய கூட்டத்தில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி (உபயம்: நண்பர் கேசவமணி). அக்டோபர் 2012 காலச்சுவடில் வெளியாகி உள்ளது. (யாருக்காவது சுட்டி கிடைத்தால் கொடுங்கள்!)
…1940களின் தொடக்கத்தில் ஷண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள் ஒரு குறுநாவல். அதில் நாகம்மாள் என்று ஒரு கேரக்டர். பலர் படித்திருக்கலாம். கிராமத்தைச் சேர்ந்த அம்மா. அவர்தான் நாவலில் மையத்தில் இருக்கிறார். ஒரு படைப்பின் மையத்தில் எவ்வளவோ பேர் இருந்திருக்கிறார்கள். ராமன் இருந்திருக்கிறான். கிருஷ்ணன் இருந்திருக்கிறான். துரியோதனன் இருந்திருக்கிறான். அர்ஜுனன் இருந்திருக்கிறான். மிக உன்னதமான புருஷர்களெல்லாம் படைப்பின் மையத்தில் இருந்திருக்கிறார்கள். முதன்முதலாகச் சமுதாயத்திலிருக்கக்கூடிய ஒழுக்கம், அமுக்கக்கூடிய விஷயம் இவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத, மீறிப் போகக்கூடிய தன்னிச்சையான, தனக்காகவே சுதந்திரத்தை வரவழைத்துக் கொண்ட, என்னுடைய வாழ்க்கையை நான்தான் தீர்மானிப்பேன், நீ என்ன சொன்னாலும் நான் கவலைப்படமாட்டேன் என்னும் இயல்பு கொண்ட ஒரு பாத்திரம் – அதிலும் ஒரு பெண் பாத்திரம் – அந்த நாவலுடைய மையத்துக்கு வருகிறார். அந்த மாதிரி ஒரு நபர் வந்து ஊரிலிருந்தால் ‘ஒரு மாதிரியான கேஸ்’ என்று ஒதுக்கிவிடுவார்கள். ஊரில் அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லக்கூடிய அபிப்பிராயம். அபிப்பிராயம் என்பதைவிட ஒரு விமர்சனம் – எதிர்மறையான விமர்சனம் – இவர் மோசமான ஆத்மா, நல்ல ஆத்மா இல்லை என்று தொடர்ந்து திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அந்த விமர்சனத்தையே அவர் தலை மேல் வைத்துக் கட்டி அந்த விமர்சனத்துடைய ஒரு வடிவமாகவே பார்க்கக்கூடியது சமூகத்தில் ஒரு பழக்கமாகப் போய்விட்டது. நாவலுக்குள் வரக்கூடிய சமயத்தில் என்ன ஏற்படுகிறது என்று பாருங்கள்.
நாவல் ஆசிரியர் இந்தப் பார்வையைத் தலைகீழாக மாற்றிப் போடுகிறார். அவர் அந்த நாவலை எழுத வந்ததற்கான காரணம் இவர் கூறுகெட்ட அம்மாவென்று சொல்வதற்கு அல்ல. இந்தக் கூறுகெட்ட அம்மாவுக்கும் கூறுள்ள அம்மாக்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதென்று சொல்கிறார். எந்த அம்மாக்களெல்லாம் உயர்வானவர்களென்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ அவர்களது மனிதத்தன்மை, அவர்களிடம் இருக்கக்கூடிய காதல், உறவுமுறை, திறமை, கெட்டிக்காரத்தனம், மனிதப் பண்பு எல்லாமே இவரிடமும் இருக்கிறது. இத்தனை விஷயங்கள் இருக்கும் சமயத்தில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே என்று அந்தப் பார்வையைத் திருப்பிப் போடுகிறார். பார்வையைத் திருப்பிப் போடுவதன் மூலம் உன்னதமான நாவல் என்று நீங்கள் சொல்வதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. ஓரம் கட்டப்பட்ட அம்மாக்கள் சமூகத்தில் மையத்துக்கு வந்துவிடுகிறார்கள். சமூகத்தோடு ஓரத்திலிருந்தவர் தட்டிக் கேட்கலாம், தட்டிக் கேட்பவர் ஆபீசுக்குள் உட்கார்ந்துவிட்டார். தட்டிக் கேட்பவர் கலெக்டராக வந்துவிட்டார். தட்டிக் கேட்பவர் ஆசிரியராக வந்துவிட்டார். யாருடைய பார்வை மாற்றம் அடைந்ததால் வந்தாங்க? அந்த ஆணித்தரமான, அடிப்படையான ஒரு வாதத்தை முன்வைத்து வாழ்க்கை சார்ந்த ஒரு தர்க்கத்தை முன்வைத்து இந்தப் பார்வையை மாற்றியது யாரு?
நாவல் ஆசிரியர்தான் அந்தப் பார்வையை மாற்றினார். உலகம் முழுவதும் மனிதருடைய பார்வையை அடிப்படையாக மாற்றியதில் நாவல் ஆசிரியர்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றனர்….
ஜெயமோகன் தன் சிறந்த தமிழ் நாவல்களின் seminal பட்டியலில் நாகம்மாளை வைக்கிறார். வார்த்தைகளில் நாகம்மாள்:
தமிழ் இயல்புவாத (நாச்சுரலிச) நாவல்களுக்கு முன்னோடியான (குறு)நாவல். நாகம்மாள் ‘கெட்டி எலும்புள்ள’ கிராமத்து விதவை. அவளுடைய காதல் கொலையில் முடிகிறது. கிராமத்து ‘இட்டேறிகளை’, கானல் பறக்கும் கரிசல் மண்ணை, ராகம் போடும் கொங்கு மொழியை ஆசிரியர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களை விட சிறப்பாகவே அளித்திருக்கிறார்.
சாரு நிவேதிதா தினமணியில் பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற ஒரு தொடரை எழுதினார். அதிலும் ஷண்முகசுந்தரத்தையும் நாகம்மாளையும் பற்றி எழுதிய நினைவு இருக்கிறது. இப்போது இணையத்தில் சுட்டி கிடைக்க மாட்டேன் என்கிறது. நினைவிருப்பவர்கள் சொல்லுங்கள், சுட்டி கொடுத்தால் இன்னும் உத்தமம்.
என் ரசனையோடு பெரிதும் ஒத்துப் போகும் கேசவமணியின் வார்த்தைகளில்:
நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் நம் மனதில் எழும் முதல் கேள்வி, ‘நாவலாசிரியர் ஏன் இடையிடையே பேசுகிறார்?’ என்பதுதான். அவர் பேசுவது ஒரு குறையே. நாவல் எளிமையான நடையில் செல்கிறது. கிராமத்து வாழ்க்கை நம் கண்முன் சிறப்பாகவே விரிகிறது. நாகம்மாள், சின்னப்பன், ராமாயி, கெட்டியப்பன் ஆகிய பத்திரங்கள் தத்தம் குணங்களோடு சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். எல்லாருக்குமே அவரவர்களுக்கு என்று தனித்தனி ஆசைகள் உள்ளன. சுயநலம் என்று கூட சொல்லலாம். அதுவே நாவலின் கருவாகவும் உள்ளது. கணவனை இழந்த நாகம்மாள் தன் கணவனின் தம்பி கெட்டியப்பனுடன் சேர்ந்து வாழ்கிறாள். கெட்டியப்பன் மனைவி ராமாயிக்கும் நாகம்மாவை பிடிப்பதில்லை. நாகம்மாவின் அதிகாரம், ராமாயின் சுயகௌரவத்தை பாதிக்கிறது. மணியக்காரருக்கு நாகம்மாவின் கணவன் மேல் கோபம் இருக்கிறது. கெட்டியப்பனுக்கும் அதே கோபம் இருக்கிறது. ராமாயின் அம்மா காளியம்மாவுக்கு, தன் மகள் மருமகனை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக, நாகம்மாவுக்கும் சின்னப்பனுக்கும் இடையேயான பிரச்சினையை பயன்படுத்தி கொள்கிறார்கள்.
அதன் விளைவாக என்ன ஆகிறது என்பதுதான் கதை. ஆசிரியர் சரளமாக கதையை நகர்த்திச் செல்கிறார். ஆனால் கதை அதன் கடைசி முடிவை நோக்கி நகரும் ஒற்றைப்படைத் தன்மை கொண்டதாக உள்ளது. இது சிறுகதைக்கான ஒரு அம்சம். கடைசியில் கதையும் சடாரென ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. கடைசியில் நடந்துவிட்ட விபரீதம், நாகம்மாள் சம்மதத்துடன் நடந்ததா என்பதை ஆசிரியர் நம் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார். ஆசிரியர் பாஷையில் சொல்வதென்றால், ‘நாகம்மாளும் அதைத்தான் விரும்பினாளா என்பது நமக்கு தெரியவில்லை’.
ஒவ்வோர் சமயம் கோபம், மற்றோர் சமயம் கனிவு என்பதாகவே நாகம்மாள் மற்றும் சின்னப்பனின் மனவோட்டங்கள் சொல்லபடுகிறது. என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே என்று ஆசிரியர் காட்டுகிறார். கதை முடிவிலும் அதையே நாம் எடுத்துகொள்ளலாம்.
இந்த நாவலின் விவாத தளம் எது என்று பார்க்கும்போது, பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதை இந்நாவல் சொல்ல வருகிறது. ஆனால் அது முழுமையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தும் வாசகன் மனதில் அது பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. இன்றும் கூட அது பற்றி சமூகத்தில் இரண்டு விதமான பார்வை இருப்பதை நாம் பார்க்கிறோம்.
நாகம்மாள் எளிமையான ஒரு குறுநாவல். நாவலுக்குண்டான அம்சங்கள் அதில் குறைவு. அலங்காரமான வார்த்தைகளோ, ஆர்பாட்டமான உத்திகளோ எதுவும் இல்லாத ஒரு குறுநாவல். படித்து முடித்ததும், பசுமையான சோலையில், கிராமத்தில், சில்லென்ற காற்றின் இதத்தில், மோருடன் சேர்ந்து பழைய சோறு சாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது. கூடவே கடித்துக் கொள்ள மிளகாயும் உண்டு.
ரொம்ப நாளாயிற்று சாண்டில்யனின் புத்தகங்கள் பற்றி எழுதி. இரண்டரை வருஷம் முன்னால் மலைவாசல் பற்றி எழுதியதுதான் கடைசி.
சாண்டில்யனின் வெற்றிகளில் மன்னன் மகள் நாவலுக்கு நிச்சயமாக இடமுண்டு. சின்ன வயதில் படித்தபோது புத்தகம் unputdownable ஆக இருந்தது. இன்று படிக்கும்போது திடுக்கிடும் திருப்பம் எதுவும் பத்து பக்கமாக வரவில்லையே என்று அடிக்கடி இளக்கார நினைவு ஒன்று தோன்றிக் கொண்டே இருந்தது உண்மைதான். ஆனால் அரண்மனைச் சதி சரித்திர நாவல்களில் இன்னும் சாண்டில்யனை விஞ்சக் கூடிய எழுத்தாளர் தமிழில் வரவில்லை என்ற எண்ணமும் உறுதிப்பட்டது.
ராஜேந்திர சோழன் கங்கை வரை சென்றது எப்படி என்று ஆறாம் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு கிழக்கு கடற்கரையோரமாகவே சென்று கங்கையை இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தில் அடைந்தான் என்று விளக்கி வாத்தியாரிடம் சபாஷ் வாங்கியதெல்லாம் இந்தப் புத்தகத்தை படித்ததால்தான்.
சோழ-மேலைச் சாளுக்கிய (இன்றைய கர்நாடகம்)-கீழைச் சாளுக்கிய (இன்றைய ஆந்திரா) உறவு வியப்பைத் தருவது. மேலைச் சாளுக்கியர் ஜன்ம விரோதிகள் என்றால் கீழைச் சாளுக்கியர்களோடு மீண்டும் மீண்டும் மண உறவு, ஒரு கட்டத்தில் கீழைச் சாளுக்கியர் வம்சத்தில் வந்த குலோத்துங்கன் சோழ அரசனாகவே அமர்கிறான். இந்தப் பின்புலத்தில் கதை புனைந்திருக்கிறார். வழக்கம் போல ஒரு நாயகன். கரிகாலன். முதல் சந்திப்பிலேயே வேங்கி நாட்டு மன்னன் மகளோடு பரஸ்பர ஈர்ப்பு. ஒரே ஒரு வித்தியாசம், இன்னொரு காதலியைக் கழற்றிவிட்டுவிடுகிறான். சும்மா சதி மேல் சதி. கரிகாலன் யார் பக்கம், சோழ அரசுக்காக பாடுபடுகிறானா, சாளுக்கியருக்கா, இல்லை தான் காதலிக்கும் மன்னன் மகளுக்கா என்று படிப்பவர்களைத் தவிர எல்லாரும் குழம்புகிறார்கள். கரிகாலனின் பிறப்பில் ஒரு மர்மம் என்று ஒரு தனிச்சரடு போகிறது. வழக்கம் போல மன்னன் மகள் நிரஞ்சனா, இன்னொரு காதலி செல்வி இருவர் உடல்களிலும் மேடு, பள்ளம், முன்னழகு, பின்னழகு, சரசம், உரசல், எழில், முத்தாரம் செய்த பாக்கியம் என்ன என்று நாலைந்து அத்தியாயம். ஆனால் விறுவிறுவென்று போகிறது.
நண்பர் ப்ருந்தாபன் இதுதான் குமுதத்தில் சாண்டில்யன் எழுதி வெளியான முதல் நாவல் என்று தகவல் தந்தார். பிறகு அவருக்கே கொஞ்சம் சந்தேகம் வந்து இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கன்னிமாடம்தான் குமுதத்தில் வந்த முதல் நாவல் (1956-57 வாக்கில்), இது இரண்டாவதாக இருக்க வேண்டும், ஜனவரி 58-இல் தொடங்கியது என்கிறார்.
தமிழுக்கு நல்ல சரித்திர நாவல்தான். வணிக நாவல்களைப் பொருட்படுத்தி எழுதும் ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் இதை historical romances-இன் முதல் வரிசையில் வைக்கிறார். இன்றும் படிக்கக் கூடிய நாவல்தான், ஆனால் சிறு வயதில் படித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
தமிழ் இலக்கியத்தை தேடிப் பிடித்து வாசிப்பவர்கள் கூட தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ளவர்கள் எழுதுவதைப் படிப்பதில்லை. பக்கத்து ஊர் இலங்கை-ஈழத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி பிரக்ஞை இருப்பதில்லை. சிறு வயதில் நான் கேள்விப்பட்டிருந்த ஒரே பேர் டாமினிக் ஜீவா மட்டும்தான். அதுவும் குமுதத்திலோ விகடனிலோ ஓரிரு சிறுகதைகள் வந்ததால்தான்.
ஓரளவு விவரம் தெரிந்த பிறகு – அனேகமாக ஜெயமோகன் பரிந்துரையாகத்தான் இருந்திருக்கும் – அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி, தெளிவத்தை ஜோசஃப், எஸ்.பொ., தளையசிங்கம்,தேவகாந்தன் என்று நாலைந்து ஈழ எழுத்தாளர்கள் பேர் தெரிய வந்தது. (ஷோபா சக்தி, தெ. ஜோசஃப், எஸ்.பொ. தளையசிங்கம் எல்லாரையும் ஈழ எழுத்தாளர்கள் என்று சொல்லலாம் – தி.ஜா.வை எப்படி தஞ்சாவூர் எழுத்தாளர் என்று ஒரு வசதிக்கு சொல்கிறோமோ அதே போல. ஆனால் முத்துலிங்கத்தை ஈழ எழுத்தாளர் என்று அடையாளப்படுத்துவது ஜெயகாந்தனை கடலூர் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்துவது போலத்தான்.) சயந்தனையும் சந்தேகமே இல்லாமல் (ஈழ) எழுத்தாளர்கள் வரிசையில் வைக்கலாம்.
ஆறாவடுவின் takeaway கொஞ்சமும் கருணையே இல்லாத ஈழப் போர் சூழ்நிலையை தத்ரூபமாக விவரிப்பதுதான். போர் எப்போதுமே விழுமியங்கள் அனைத்தும் தோல்வி நெருங்க நெருங்க – ஏன் வெற்றி நெருங்க நெருங்கக் கூட – கைவிடப்படும் சூழல். போர் முதலில் இழப்பு. இரண்டாவதாக இழப்பு. மூன்றாவதாகவும் இழப்பே. போர் வீர சாகசங்கள் அல்ல. லட்சியங்கள் வெளிப்படும் இடம் அல்ல. போரின் குரூரத்தை வரலாறு வெற்றி என்ற பேரில் மறைக்கிறது. (அதிலும் வரலாறு யாரால் எழுதப்படுகிறது என்பது முக்கியம். அலெக்சாண்டர் உலகை வென்றவர், ஜெங்கிஸ் கானின் குரூரம் அவரது வெற்றிகளை விட அதிகம் பேசப்படுகிறது) காந்தளூர்ச் சாலை களமறுத்ததும் கடாரம் கொண்டதும் கடாரத்தின் பார்வையிலும் சேரர்களின் பார்வையில் எழுதப்படுவதில்லை. கட்டபொம்மனையும் ஜான்சி ராணியையும் ஆங்கிலேயர்களும் நாமும் நினைவு கொள்ளும் விதம் வேறு. சயந்தனின் பார்வை தோற்றுப் போன ஈழத் தமிழனின் பார்வை. எல்லா தமிழர்களையும் தொடும் பார்வை. உண்மையான பார்வை. ஆனாலும் குறுகிய பார்வையே. சிங்களர்களின் இழப்பு, இந்தியர்களின் இழப்பு பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் கிடையாது.
அது எந்தக் கிளைக் கதை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது, கிளைக்கதைகள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன, கதைப்பின்னல் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். எத்தனை உயர்ந்த நோக்கங்களோடு அமைப்புகள் உருவானாலும் சரி, காலம் செல்லச் செல்ல அவை அதிகாரத்தை கைப்பற்றவும், தாங்கள் விரும்பும் சுயபிம்பத்தை கட்டமைக்கவும் அவை தங்கள் நோக்கங்களோடு எப்படி சமரசம் செய்து கொள்கின்றன, எப்படி நோக்கங்களை கைவிடவும் தயங்குவதில்லை என்பது அடிநாதமாகத் தெரிகிறது. புலிகளுக்கு (IPKF-க்கு கூட) அது நடப்பது நம்பகத்தன்மை நிறைந்த காட்சிகளால் விவரிக்கப்படுகிறது. புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கும் சரி – குறிப்பாக சிறு வயதில் சேர்ந்து வெளியேற நினைப்பவர்களுக்கு – வெளியில் இருக்கும் புலி அனுதாபிகளுக்கும், சாதாரண மக்களும் எங்கோ யாரோ எடுக்கும் முடிவுகளால் மாட்டிக் கொண்டு தப்பிக்கத் துடிப்பது பல கோட்டுச் சித்திரங்களாகக் காட்டப்படுகிறது. புலிகளும் சரி, IPKF-வும் சரி, மக்களிடமிருந்து விலகிப் போவது அருமையாக வெளிப்படுகிறது.
கதை? அது முக்கியமே இல்லை. காலம்? 1987-2003 என்று ஆசிரியரே சொல்கிறார். மறக்க முடியாத காட்சிகள் – படுத்த படுக்கையிலிருந்து நகர முடியாத அம்மாவுக்கு அருகில் கொஞ்சம் தண்ணீரும் மருந்துகளும் உணவும் வைத்துவிட்டு ஒரு நாள் மட்டும் என்று எண்ணி வெளியேறும் சிவராசன் படுக்கையிலேயே அழுகிக் கொண்டிருக்கும் பிணமாக காண்பது; கள்ளப் படகு ஏறி இத்தாலி செல்ல முயற்சித்து கடலிம் மூழ்கி இறக்கும் முன்னாள் போராளி அமுதனின் செயற்கைக் கால் சூடானின் நொண்டிக் கிழவனுக்குக் கிடைத்து அவன் குதூகலிப்பது; செருப்புத் திருடிய IPKF-க்கு துப்புக் கொடுக்கும் ஒருவனைக் கேள்வி கேட்டதற்காக மரண அடி வாங்கி வரதராஜப் பெருமாள் இயக்கத்தில் சேர்க்கப்படும் பரந்தாமன்/அமுதன். நேரு ஐயா பணம் கொடுத்தால் இலங்கை ஆர்மிக்கும் வேலை செய்வேன் என்று சொல்வது; பறையனும் பள்ளனும் தன் குடும்பக் கோவிலில் தங்குவதைக் கண்டு பொங்கி புலிகளிடம் அடி வாங்குபவர்; வெற்றிக்கும் நிலாமதிக்கும் ஏற்படும் ஈர்ப்பு. சொல்லிக் கொண்டே போகலாம்.
பாரதி எழுதிய தேசபக்திப் பாடல்கள் ஸ்வதேச கீதங்கள் என்ற தலைப்பில் 1908-இல் புத்தகமாக வெளிவந்தது. இன்றும் பிரபலமாக இருக்கும் பல பாட்டுக்கள் – வந்தேமாதரம் என்போம், வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம், எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, செந்தமிழ்நாடென்னும் போதினிலே – அதில்தான் முதல்முதலாக வெளியிடப்பட்டன. 1928-ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாம். (எனக்கு அதற்கு முன்னாலேயே தடை செய்யப்பட்டது என்று நினைவு, தவறாக இருக்கலாம்.) அதுவும் பர்மாவில் தடை செய்யப்பட்டதாம், அதை சென்னை மாகாண அரசும் பின்பற்றி தடை செய்திருக்கிறது. அன்றைய முதல்வர் டாக்டர் பி. சுப்பராயன். சத்தியமூர்த்தி அதை எதிர்த்து சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அதை அனேகமாக எல்லாரும் ஆதரித்திருக்கிறார்கள். அனேகரில் டி.கே.சி. (இவர் சட்டசபை உறுப்பினராக இருந்தாரா?), செளந்தரபாண்டியன் நாடார், முத்துரங்க முதலியார் (பின்னாளில் முதல்வர் ஆன பக்தவத்சலத்தின் மாமா), பனகல் ராஜா, பி.டி. ராஜன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரும் அடக்கம். தீர்மானத்தை எதிர்த்த ஒரே குரல் சட்ட அமைச்சர் மன்னத்து கிருஷ்ணன் நாயருடையதாம். (அவர்தான் தடை உத்தரவைப் போட்டவர்.) தீர்மானம் நிறைவேறி தடை நீங்கியது!
சா. கந்தசாமி இதைப் பற்றி ஒரு சிறப்பான கட்டுரை எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்!