பாரதி பாடல்கள் மீதிருந்த தடை நீங்கியது எப்படி?

பாரதி எழுதிய தேசபக்திப் பாடல்கள் ஸ்வதேச கீதங்கள் என்ற தலைப்பில் 1908-இல் புத்தகமாக வெளிவந்தது. இன்றும் பிரபலமாக இருக்கும் பல பாட்டுக்கள் – வந்தேமாதரம் என்போம், வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம், எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, செந்தமிழ்நாடென்னும் போதினிலே – அதில்தான் முதல்முதலாக வெளியிடப்பட்டன. 1928-ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாம். (எனக்கு அதற்கு முன்னாலேயே தடை செய்யப்பட்டது என்று நினைவு, தவறாக இருக்கலாம்.) அதுவும் பர்மாவில் தடை செய்யப்பட்டதாம், அதை சென்னை மாகாண அரசும் பின்பற்றி தடை செய்திருக்கிறது. அன்றைய முதல்வர் டாக்டர் பி. சுப்பராயன். சத்தியமூர்த்தி அதை எதிர்த்து சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அதை அனேகமாக எல்லாரும் ஆதரித்திருக்கிறார்கள். அனேகரில் டி.கே.சி. (இவர் சட்டசபை உறுப்பினராக இருந்தாரா?), செளந்தரபாண்டியன் நாடார், முத்துரங்க முதலியார் (பின்னாளில் முதல்வர் ஆன பக்தவத்சலத்தின் மாமா), பனகல் ராஜா, பி.டி. ராஜன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரும் அடக்கம். தீர்மானத்தை எதிர்த்த ஒரே குரல் சட்ட அமைச்சர் மன்னத்து கிருஷ்ணன் நாயருடையதாம். (அவர்தான் தடை உத்தரவைப் போட்டவர்.) தீர்மானம் நிறைவேறி தடை நீங்கியது!

சா. கந்தசாமி இதைப் பற்றி ஒரு சிறப்பான கட்டுரை எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்