ஈழப்போர் நாவல் – சயந்தனின் ‘ஆறாவடு’

தமிழ் இலக்கியத்தை தேடிப் பிடித்து வாசிப்பவர்கள் கூட தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ளவர்கள் எழுதுவதைப் படிப்பதில்லை. பக்கத்து ஊர் இலங்கை-ஈழத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி பிரக்ஞை இருப்பதில்லை. சிறு வயதில் நான் கேள்விப்பட்டிருந்த ஒரே பேர் டாமினிக் ஜீவா மட்டும்தான். அதுவும் குமுதத்திலோ விகடனிலோ ஓரிரு சிறுகதைகள் வந்ததால்தான்.

ஓரளவு விவரம் தெரிந்த பிறகு – அனேகமாக ஜெயமோகன் பரிந்துரையாகத்தான் இருந்திருக்கும் – அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி, தெளிவத்தை ஜோசஃப், எஸ்.பொ., தளையசிங்கம், தேவகாந்தன் என்று நாலைந்து ஈழ எழுத்தாளர்கள் பேர் தெரிய வந்தது. (ஷோபா சக்தி, தெ. ஜோசஃப், எஸ்.பொ. தளையசிங்கம் எல்லாரையும் ஈழ எழுத்தாளர்கள் என்று சொல்லலாம் – தி.ஜா.வை எப்படி தஞ்சாவூர் எழுத்தாளர் என்று ஒரு வசதிக்கு சொல்கிறோமோ அதே போல. ஆனால் முத்துலிங்கத்தை ஈழ எழுத்தாளர் என்று அடையாளப்படுத்துவது ஜெயகாந்தனை கடலூர் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்துவது போலத்தான்.) சயந்தனையும் சந்தேகமே இல்லாமல் (ஈழ) எழுத்தாளர்கள் வரிசையில் வைக்கலாம்.

ஆறாவடுவின் takeaway கொஞ்சமும் கருணையே இல்லாத ஈழப் போர் சூழ்நிலையை தத்ரூபமாக விவரிப்பதுதான். போர் எப்போதுமே விழுமியங்கள் அனைத்தும் தோல்வி நெருங்க நெருங்க – ஏன் வெற்றி நெருங்க நெருங்கக் கூட – கைவிடப்படும் சூழல். போர் முதலில் இழப்பு. இரண்டாவதாக இழப்பு. மூன்றாவதாகவும் இழப்பே. போர் வீர சாகசங்கள் அல்ல. லட்சியங்கள் வெளிப்படும் இடம் அல்ல. போரின் குரூரத்தை வரலாறு வெற்றி என்ற பேரில் மறைக்கிறது. (அதிலும் வரலாறு யாரால் எழுதப்படுகிறது என்பது முக்கியம். அலெக்சாண்டர் உலகை வென்றவர், ஜெங்கிஸ் கானின் குரூரம் அவரது வெற்றிகளை விட அதிகம் பேசப்படுகிறது) காந்தளூர்ச் சாலை களமறுத்ததும் கடாரம் கொண்டதும் கடாரத்தின் பார்வையிலும் சேரர்களின் பார்வையில் எழுதப்படுவதில்லை. கட்டபொம்மனையும் ஜான்சி ராணியையும் ஆங்கிலேயர்களும் நாமும் நினைவு கொள்ளும் விதம் வேறு. சயந்தனின் பார்வை தோற்றுப் போன ஈழத் தமிழனின் பார்வை. எல்லா தமிழர்களையும் தொடும் பார்வை. உண்மையான பார்வை. ஆனாலும் குறுகிய பார்வையே. சிங்களர்களின் இழப்பு, இந்தியர்களின் இழப்பு பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் கிடையாது.

அது எந்தக் கிளைக் கதை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது, கிளைக்கதைகள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன, கதைப்பின்னல் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். எத்தனை உயர்ந்த நோக்கங்களோடு அமைப்புகள் உருவானாலும் சரி, காலம் செல்லச் செல்ல அவை அதிகாரத்தை கைப்பற்றவும், தாங்கள் விரும்பும் சுயபிம்பத்தை கட்டமைக்கவும் அவை தங்கள் நோக்கங்களோடு எப்படி சமரசம் செய்து கொள்கின்றன, எப்படி நோக்கங்களை கைவிடவும் தயங்குவதில்லை என்பது அடிநாதமாகத் தெரிகிறது. புலிகளுக்கு (IPKF-க்கு கூட) அது நடப்பது நம்பகத்தன்மை நிறைந்த காட்சிகளால் விவரிக்கப்படுகிறது. புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கும் சரி – குறிப்பாக சிறு வயதில் சேர்ந்து வெளியேற நினைப்பவர்களுக்கு – வெளியில் இருக்கும் புலி அனுதாபிகளுக்கும், சாதாரண மக்களும் எங்கோ யாரோ எடுக்கும் முடிவுகளால் மாட்டிக் கொண்டு தப்பிக்கத் துடிப்பது பல கோட்டுச் சித்திரங்களாகக் காட்டப்படுகிறது. புலிகளும் சரி, IPKF-வும் சரி, மக்களிடமிருந்து விலகிப் போவது அருமையாக வெளிப்படுகிறது.

கதை? அது முக்கியமே இல்லை. காலம்? 1987-2003 என்று ஆசிரியரே சொல்கிறார். மறக்க முடியாத காட்சிகள் – படுத்த படுக்கையிலிருந்து நகர முடியாத அம்மாவுக்கு அருகில் கொஞ்சம் தண்ணீரும் மருந்துகளும் உணவும் வைத்துவிட்டு ஒரு நாள் மட்டும் என்று எண்ணி வெளியேறும் சிவராசன் படுக்கையிலேயே அழுகிக் கொண்டிருக்கும் பிணமாக காண்பது; கள்ளப் படகு ஏறி இத்தாலி செல்ல முயற்சித்து கடலிம் மூழ்கி இறக்கும் முன்னாள் போராளி அமுதனின் செயற்கைக் கால் சூடானின் நொண்டிக் கிழவனுக்குக் கிடைத்து அவன் குதூகலிப்பது; செருப்புத் திருடிய IPKF-க்கு துப்புக் கொடுக்கும் ஒருவனைக் கேள்வி கேட்டதற்காக மரண அடி வாங்கி வரதராஜப் பெருமாள் இயக்கத்தில் சேர்க்கப்படும் பரந்தாமன்/அமுதன். நேரு ஐயா பணம் கொடுத்தால் இலங்கை ஆர்மிக்கும் வேலை செய்வேன் என்று சொல்வது; பறையனும் பள்ளனும் தன் குடும்பக் கோவிலில் தங்குவதைக் கண்டு பொங்கி புலிகளிடம் அடி வாங்குபவர்; வெற்றிக்கும் நிலாமதிக்கும் ஏற்படும் ஈர்ப்பு. சொல்லிக் கொண்டே போகலாம்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சயந்தன் பக்கம்