ஈழப்போர் நாவல் – சயந்தனின் ‘ஆறாவடு’

தமிழ் இலக்கியத்தை தேடிப் பிடித்து வாசிப்பவர்கள் கூட தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ளவர்கள் எழுதுவதைப் படிப்பதில்லை. பக்கத்து ஊர் இலங்கை-ஈழத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி பிரக்ஞை இருப்பதில்லை. சிறு வயதில் நான் கேள்விப்பட்டிருந்த ஒரே பேர் டாமினிக் ஜீவா மட்டும்தான். அதுவும் குமுதத்திலோ விகடனிலோ ஓரிரு சிறுகதைகள் வந்ததால்தான்.

ஓரளவு விவரம் தெரிந்த பிறகு – அனேகமாக ஜெயமோகன் பரிந்துரையாகத்தான் இருந்திருக்கும் – அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி, தெளிவத்தை ஜோசஃப், எஸ்.பொ., தளையசிங்கம், தேவகாந்தன் என்று நாலைந்து ஈழ எழுத்தாளர்கள் பேர் தெரிய வந்தது. (ஷோபா சக்தி, தெ. ஜோசஃப், எஸ்.பொ. தளையசிங்கம் எல்லாரையும் ஈழ எழுத்தாளர்கள் என்று சொல்லலாம் – தி.ஜா.வை எப்படி தஞ்சாவூர் எழுத்தாளர் என்று ஒரு வசதிக்கு சொல்கிறோமோ அதே போல. ஆனால் முத்துலிங்கத்தை ஈழ எழுத்தாளர் என்று அடையாளப்படுத்துவது ஜெயகாந்தனை கடலூர் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்துவது போலத்தான்.) சயந்தனையும் சந்தேகமே இல்லாமல் (ஈழ) எழுத்தாளர்கள் வரிசையில் வைக்கலாம்.

ஆறாவடுவின் takeaway கொஞ்சமும் கருணையே இல்லாத ஈழப் போர் சூழ்நிலையை தத்ரூபமாக விவரிப்பதுதான். போர் எப்போதுமே விழுமியங்கள் அனைத்தும் தோல்வி நெருங்க நெருங்க – ஏன் வெற்றி நெருங்க நெருங்கக் கூட – கைவிடப்படும் சூழல். போர் முதலில் இழப்பு. இரண்டாவதாக இழப்பு. மூன்றாவதாகவும் இழப்பே. போர் வீர சாகசங்கள் அல்ல. லட்சியங்கள் வெளிப்படும் இடம் அல்ல. போரின் குரூரத்தை வரலாறு வெற்றி என்ற பேரில் மறைக்கிறது. (அதிலும் வரலாறு யாரால் எழுதப்படுகிறது என்பது முக்கியம். அலெக்சாண்டர் உலகை வென்றவர், ஜெங்கிஸ் கானின் குரூரம் அவரது வெற்றிகளை விட அதிகம் பேசப்படுகிறது) காந்தளூர்ச் சாலை களமறுத்ததும் கடாரம் கொண்டதும் கடாரத்தின் பார்வையிலும் சேரர்களின் பார்வையில் எழுதப்படுவதில்லை. கட்டபொம்மனையும் ஜான்சி ராணியையும் ஆங்கிலேயர்களும் நாமும் நினைவு கொள்ளும் விதம் வேறு. சயந்தனின் பார்வை தோற்றுப் போன ஈழத் தமிழனின் பார்வை. எல்லா தமிழர்களையும் தொடும் பார்வை. உண்மையான பார்வை. ஆனாலும் குறுகிய பார்வையே. சிங்களர்களின் இழப்பு, இந்தியர்களின் இழப்பு பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் கிடையாது.

அது எந்தக் கிளைக் கதை மூலம் வெளிப்படுத்தப்படுகிறது, கிளைக்கதைகள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன, கதைப்பின்னல் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். எத்தனை உயர்ந்த நோக்கங்களோடு அமைப்புகள் உருவானாலும் சரி, காலம் செல்லச் செல்ல அவை அதிகாரத்தை கைப்பற்றவும், தாங்கள் விரும்பும் சுயபிம்பத்தை கட்டமைக்கவும் அவை தங்கள் நோக்கங்களோடு எப்படி சமரசம் செய்து கொள்கின்றன, எப்படி நோக்கங்களை கைவிடவும் தயங்குவதில்லை என்பது அடிநாதமாகத் தெரிகிறது. புலிகளுக்கு (IPKF-க்கு கூட) அது நடப்பது நம்பகத்தன்மை நிறைந்த காட்சிகளால் விவரிக்கப்படுகிறது. புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கும் சரி – குறிப்பாக சிறு வயதில் சேர்ந்து வெளியேற நினைப்பவர்களுக்கு – வெளியில் இருக்கும் புலி அனுதாபிகளுக்கும், சாதாரண மக்களும் எங்கோ யாரோ எடுக்கும் முடிவுகளால் மாட்டிக் கொண்டு தப்பிக்கத் துடிப்பது பல கோட்டுச் சித்திரங்களாகக் காட்டப்படுகிறது. புலிகளும் சரி, IPKF-வும் சரி, மக்களிடமிருந்து விலகிப் போவது அருமையாக வெளிப்படுகிறது.

கதை? அது முக்கியமே இல்லை. காலம்? 1987-2003 என்று ஆசிரியரே சொல்கிறார். மறக்க முடியாத காட்சிகள் – படுத்த படுக்கையிலிருந்து நகர முடியாத அம்மாவுக்கு அருகில் கொஞ்சம் தண்ணீரும் மருந்துகளும் உணவும் வைத்துவிட்டு ஒரு நாள் மட்டும் என்று எண்ணி வெளியேறும் சிவராசன் படுக்கையிலேயே அழுகிக் கொண்டிருக்கும் பிணமாக காண்பது; கள்ளப் படகு ஏறி இத்தாலி செல்ல முயற்சித்து கடலிம் மூழ்கி இறக்கும் முன்னாள் போராளி அமுதனின் செயற்கைக் கால் சூடானின் நொண்டிக் கிழவனுக்குக் கிடைத்து அவன் குதூகலிப்பது; செருப்புத் திருடிய IPKF-க்கு துப்புக் கொடுக்கும் ஒருவனைக் கேள்வி கேட்டதற்காக மரண அடி வாங்கி வரதராஜப் பெருமாள் இயக்கத்தில் சேர்க்கப்படும் பரந்தாமன்/அமுதன். நேரு ஐயா பணம் கொடுத்தால் இலங்கை ஆர்மிக்கும் வேலை செய்வேன் என்று சொல்வது; பறையனும் பள்ளனும் தன் குடும்பக் கோவிலில் தங்குவதைக் கண்டு பொங்கி புலிகளிடம் அடி வாங்குபவர்; வெற்றிக்கும் நிலாமதிக்கும் ஏற்படும் ஈர்ப்பு. சொல்லிக் கொண்டே போகலாம்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சயந்தன் பக்கம்

6 thoughts on “ஈழப்போர் நாவல் – சயந்தனின் ‘ஆறாவடு’

 1. “சயந்தனின் பார்வை தோற்றுப் போன ஈழத் தமிழனின் பார்வை. எல்லா தமிழர்களையும் தொடும் பார்வை. உண்மையான பார்வை. ஆனாலும் குறுகிய பார்வையே. சிங்களர்களின் இழப்பு, இந்தியர்களின் இழப்பு பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் கிடையாது.”

  நான் இந்தக் கருத்துடன் மாறுபடுகிறேன். ஈழத்தமிழர்களின் இழப்புப் பற்றிப் பேசும் நாவல் பிறரது இழப்பையும் பேச வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது சொல்ல வந்த விஷயத்தின் தீவிரத்தைக் குறைக்கவே செய்யும். உதாரணமாக பெண்கள் இந்த உலகில் படும் துன்பம் பற்றிப் பேசும்போது ‘சில வேளைகளில் ஆண்களும் தான் படுகிறார்கள். ஏன் அதைப்பற்றிப் பேசவில்லை?’ என்று கேட்பது ‘பரந்த பார்வையா’ அல்லது அந்த இடத்தில் தேவையற்ற வாதமா? கறுப்பர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்று சொன்னால், ‘வசதியற்ற எத்தனையோ வெள்ளையரும் துன்பப் படவே செய்கிறார்கள்’ என்று சொல்வது பரந்த பார்வையா அல்லது தவறான உள்நோக்கம் கொண்ட பார்வையா?

  Like

 2. ப்ருந்தாபன், உங்கள் கருத்து புரிகிறது. சயந்தனின் கோணம் தவறு என்று நான் கூறவில்லை. அது முழுமையானது அல்ல என்றும் நான் சொல்ல வரவில்லை. ஆனால் என் கண்ணில் குறுகிய கோணமே. தயிர் சாதம் தன்னளவில் நல்ல உணவுதான், முழுமையான உணவுதான், அது மட்டுமே போதும்தான். ஆனால் அது விருந்தாகாது அல்லவா?

  யாழ்பாவாணன், உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தது மகிழ்ச்சி.

  Like

 3. நல்ல ஓர் வாசிப்பாக இருக்கும் படைப்பு . எனக்கே என் மேல் வெறுப்பும் எரிச்சலையும் உண்டாக்கிய நூல், காரணம் தெரியவில்லை . Thanks for sharing.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.