சாண்டில்யனின் ‘மன்னன் மகள்’

ரொம்ப நாளாயிற்று சாண்டில்யனின் புத்தகங்கள் பற்றி எழுதி. இரண்டரை வருஷம் முன்னால் மலைவாசல் பற்றி எழுதியதுதான் கடைசி.

சாண்டில்யனின் வெற்றிகளில் மன்னன் மகள் நாவலுக்கு நிச்சயமாக இடமுண்டு. சின்ன வயதில் படித்தபோது புத்தகம் unputdownable ஆக இருந்தது. இன்று படிக்கும்போது திடுக்கிடும் திருப்பம் எதுவும் பத்து பக்கமாக வரவில்லையே என்று அடிக்கடி இளக்கார நினைவு ஒன்று தோன்றிக் கொண்டே இருந்தது உண்மைதான். ஆனால் அரண்மனைச் சதி சரித்திர நாவல்களில் இன்னும் சாண்டில்யனை விஞ்சக் கூடிய எழுத்தாளர் தமிழில் வரவில்லை என்ற எண்ணமும் உறுதிப்பட்டது.

ராஜேந்திர சோழன் கங்கை வரை சென்றது எப்படி என்று ஆறாம் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு கிழக்கு கடற்கரையோரமாகவே சென்று கங்கையை இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தில் அடைந்தான் என்று விளக்கி வாத்தியாரிடம் சபாஷ் வாங்கியதெல்லாம் இந்தப் புத்தகத்தை படித்ததால்தான்.

சோழ-மேலைச் சாளுக்கிய (இன்றைய கர்நாடகம்)-கீழைச் சாளுக்கிய (இன்றைய ஆந்திரா) உறவு வியப்பைத் தருவது. மேலைச் சாளுக்கியர் ஜன்ம விரோதிகள் என்றால் கீழைச் சாளுக்கியர்களோடு மீண்டும் மீண்டும் மண உறவு, ஒரு கட்டத்தில் கீழைச் சாளுக்கியர் வம்சத்தில் வந்த குலோத்துங்கன் சோழ அரசனாகவே அமர்கிறான். இந்தப் பின்புலத்தில் கதை புனைந்திருக்கிறார். வழக்கம் போல ஒரு நாயகன். கரிகாலன். முதல் சந்திப்பிலேயே வேங்கி நாட்டு மன்னன் மகளோடு பரஸ்பர ஈர்ப்பு. ஒரே ஒரு வித்தியாசம், இன்னொரு காதலியைக் கழற்றிவிட்டுவிடுகிறான். சும்மா சதி மேல் சதி. கரிகாலன் யார் பக்கம், சோழ அரசுக்காக பாடுபடுகிறானா, சாளுக்கியருக்கா, இல்லை தான் காதலிக்கும் மன்னன் மகளுக்கா என்று படிப்பவர்களைத் தவிர எல்லாரும் குழம்புகிறார்கள். கரிகாலனின் பிறப்பில் ஒரு மர்மம் என்று ஒரு தனிச்சரடு போகிறது. வழக்கம் போல மன்னன் மகள் நிரஞ்சனா, இன்னொரு காதலி செல்வி இருவர் உடல்களிலும் மேடு, பள்ளம், முன்னழகு, பின்னழகு, சரசம், உரசல், எழில், முத்தாரம் செய்த பாக்கியம் என்ன என்று நாலைந்து அத்தியாயம். ஆனால் விறுவிறுவென்று போகிறது.

நண்பர் ப்ருந்தாபன் இதுதான் குமுதத்தில் சாண்டில்யன் எழுதி வெளியான முதல் நாவல் என்று தகவல் தந்தார். பிறகு அவருக்கே கொஞ்சம் சந்தேகம் வந்து இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கன்னிமாடம்தான் குமுதத்தில் வந்த முதல் நாவல் (1956-57 வாக்கில்), இது இரண்டாவதாக இருக்க வேண்டும், ஜனவரி 58-இல் தொடங்கியது என்கிறார்.

தமிழுக்கு நல்ல சரித்திர நாவல்தான். வணிக நாவல்களைப் பொருட்படுத்தி எழுதும் ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் இதை historical romances-இன் முதல் வரிசையில் வைக்கிறார். இன்றும் படிக்கக் கூடிய நாவல்தான், ஆனால் சிறு வயதில் படித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

6 thoughts on “சாண்டில்யனின் ‘மன்னன் மகள்’

 1. வழக்கமான சாண்டில்யன்.ஒரு நல்ல எடிட்டரிடம் கொடுத்து கண்ணை மூடிக் கொண்டு வெட்டித்தள்ளுங்கள் என்றால், நல்ல பல குறுநாவல்களும் சிறுகதைகளும் கிடைக்கும். முதல்முறை படித்ததை முழுக்க மறந்தால் மட்டுமே இரண்டாம் முறை படிக்க முடியும். அந்த வகையில் கல்கி தான் மாஸ்டர், பொன்னியின் செல்வன் முழுவதும் கிட்டத்திட்ட மனப்பாடம் என்றால் கூட படிக்க முடிவதில்தான் வேறுபாடு

  Like

 2. மன்னன் மகள் குமுதத்தில் சாண்டில்யனின் முதல் நாவல் (‘ஜீவபூமி’ அமுதசுரபியில் வந்தது. அதன் பின் எழுதியது இது) என்று எங்கேயோ வாசித்த ஞாபகம். ஆரம்ப எழுத்துக்கள் எப்போதுமே நன்றாக இருப்பது வழக்கம் தானே. உதாரணமாக “கடல் புறா”வையும் “விஜயமஹாதேவி”யையும் ஒப்பிடவே முடியாது. முன்னையது மிகச் சிறந்த historical romance. பின்னையது, இதனை சாண்டில்யனா எழுதினார் என்று யோசிக்க வைக்கும் நாவல்.

  Like

 3. ரெங்கா, சாண்டில்யனுக்கு எடிட்டர் இருந்திருந்தால் காகிதம் மிச்சப்பட்டிருக்கும் என்பதோடு நான் 100% உடன்படுகிறேன்.

  ப்ருந்தாபன், மன்னன் மகள் குமுதத்தில் சாண்டில்யன் எழுதி வெளியான முதல் நாவல் என்ற தகவலுக்கு நன்றி! பதிவிலும் குறிப்பிட்டுவிட்டேன்.

  Like

  1. நீங்கள் வேறு என் பெயரைக்குறிப்பிட்டு சொல்லி விட்டீர்களா. சொல்லிய தகவல் சரியா என்று அறிய ஒரு சிறிய ஆய்வு செய்ததில் தகவல் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. ஆனால் எனக்கு முதல் கதை ‘கன்னி மாடம்’ ஆகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. மன்னன் மகள் வந்தது 1958 இல் (பார்க்க: மன்னன் மகள் முன்னுரை). ஜீவ பூமியும், மலை வாசலும் வந்தது அமுத சுரபியில். ஜீவ பூமி முன்னுரை சொல்லும் ஆண்டு 1953, மலை வாசல் சொல்லும் ஆண்டு 1956. அதற்குப் பின்பே சாண்டில்யன் குமுதத்தில் எழுதத் தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக கன்னி மாடம் முன்னுரையில் வருடம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் எஸ்.ஏ.பி எழுதிய அணிந்துரையின் இறுதி வாக்கியம் “அவர் தமிழ்நாட்டுச் சரித்திரம் முழுவதையும் நாவல் உருவில் தருவதற்கு, ‘கன்னி மாடம்’ ஒரு ஆரம்பமாக அமையட்டும்” என்று சொல்கிறார். எனவே இதுவே முதல் கதையாக இருக்கலாம் (எஸ்.ஏ.பி வேறு சாண்டில்யன் நாவலுக்கு அணிந்துரை எழுதியதாகவும் ஞாபகம் இல்லை). இது குமுதத்தில் ஒன்றே முக்கால் வருடம் வந்ததாக முன்னுரை சொல்கிறது. எனேவ நான் 1956-57 இல் கன்னி மாடம் குமுதத்தில் வந்திருக்கும் என்று ஊகிக்கிறேன். அதனைத் தொடர்ந்து 1958 ஜனவரியில் “மன்னன் மகள்” தொடங்கியிருக்கிறது (அதற்கு அதன் முன்னுரை ஆதாரம்).

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.