பிரமிள் தேர்வுகள்

பிரமிளின் இந்தக் கட்டுரை 1987-இல் அரும்பு என்ற பத்திரிகையில் வந்திருக்கிறது. தி.ஜா. ஃபேஸ்புக் குழுமத்தில் பார்த்தேன். வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். அவர்களுக்கு நன்றி!


முதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், அன்றைய சமூக நிலையினைச் சிறுசிறு நிகழ்ச்சிகள் மூலம் சித்தரிக்கிறது. கமலாம்பாள் சரித்திரத்தில் வாழ்வின் துயில்நிலையிலிருந்து இரண்டு பாத்திரங்கள் ஆத்மிகமாக விழிப்படையும் பயணம் சித்தரிக்கப்படுகிறது. பத்மாவதி சரித்திரமும் பிரச்சினைகளைக் கட்டுக்கோப்பாகக் கொண்டதுதான். இவற்றில் உள்ள சம்பாஷணைத் திறனும் பாத்திரங்களும், இன்று கூட வீர்யம் குன்றாதவை.

இந்த ஆரம்பங்களை, வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர்களின் மலிவான உணர்ச்சிக் கதைகளும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோரின் ருசிகரக் கதைகளும், இரண்டு புறமும் இழுத்தன. நமது வாழ்வினையும் மனிதர்களையும் கவனிக்காமல், வெளிநாட்டு நாவல்களது தழுவல்களை நமது வாழ்வின் சித்தரிப்பாக காட்டும் அவசரத் தொடர்கதைகள் தொடர்ந்தன. பத்திரிக்கை வியாபாரத்துக்காக இதைக் கூசாமல் செய்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, நமது பகைபுலத்தை உபயோகிக்கிறபோது கூட, நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் தர்க்கமும் வெளிநாட்டு சுவாரஸ்ய கதைகளினது தழுவல்களாகவே இருந்தன. டி.கே.சிதம்பரநாத முதலியார் இதை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். கல்கி ஆரம்பித்த இந்த சுவாரஸ்யத் தழுவல், தமிழ்வாணனிலிருந்து சுஜாதா ஈறாகத் தொடர்ந்திருக்கிறது. பெருவாரிப் பத்திரிகையினில், இந்தத் தோரணையைக் கையாளாததுடன், இலக்கிய பூர்வமாகக் கணிக்கத் தக்க எழுத்தையும் கூட படைத்தவர்கள் தி. ஜானகிராமனும் த. ஜெயகாந்தனும்தான். இத்தகைய திறனாளிகளைப் படிப்பது, இவர்களை விட நுட்பமாக எழுதுவோரை ரசிப்பதற்கான ஒரு ஆரம்பப் பயிற்சியாகவேனும் இருக்கும்.

இடதுசாரி எழுத்தாளர்கள், தங்களது அரசியல் தீர்வைத்தான் கலைஞர்கள் யாவருமே வெளியிட வேண்டும் என்று கூப்பாடு போட ஆரம்பித்தபோது, எழுத்துலகில் மிகுந்த குழப்பம் பிறந்தது. இடதுசாரி பக்கம் தலையைத் திருப்பி, சல்யூட் அடித்தபடி நடை போடும் படைப்புகள் பிறந்தன. தொன்மையான மரபில் ஊறிய கிராம வாழ்வும் சமூக வாழ்வும், ஒரு பூர்வகுடித்தனமான சரீர வாழ்வாக மட்டும் இவர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, காமம் சம்மந்தமான சில சுவாரஸ்ய அம்சங்களையும் இவர்களுள் ஓரிருவர் உபயோகித்துள்ளனர். எதையுமே பிரச்னையாக்கி ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்தும் மனித இயற்கைக்கூட, இவர்களுக்கு அத்துபடியாகவில்லை.

நாவலை ஒரு கலைப் படைப்பாக சிறப்பிக்கக் கூடிய மனம் சிந்தனை சார்ந்த மனமாக இருக்கவேண்டும். பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். அப்போதுதான் நாவலின் பரந்த களம் அலுப்பு தராது. வெறும் சரீரப் பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒரு சில பக்கங்களுக்குள் பிசுபிசுத்துவிடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம் இயற்கையாக வளரவும் வேண்டும். இதற்காக, இயற்கையில் உள்ளதை அப்படியே போட்டோ பிடித்த மாதிரி எழுதவேண்டும் என்று கருதுவது தவறு. பார்க்கப் போனால், ஒவ்வொரு நாவலும் உலகை ஆதாரமாக கொண்டு வளர்ந்த வேறு ஒரு உலகம்தான். எனவே, ‘யதார்த்தம்’ என்பதன் பொருளை, நாவலின் கட்டுக்கோப்புக்குள் ஏற்படும் தர்க்கங்களுக்குள்தான் பார்க்க வேண்டும். இது, இன்று தங்களை விமர்சகர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்குப் புரியாதது, தெரியாதது.

இன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர், பொய்த்தேவு என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா. சுப்ரமண்யம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும்…

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையை அதன் பின்னணியில் மட்டுமே சித்தரிக்கும் நாவல். சுஜாதா பாணியில் எழுதப்பட்ட நாவல் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். விசேஷமாக, ஜே.ஜே.யை மிகச் சிறப்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட தேர்வு இது. மிகச் சிறந்த தமிழ் நாவலை எழுதிய க.நா.சு. இந்த நாவலை நாவலே அல்ல என்று கூறியதுக்காக, க.நா.சு.வின் நாவலைக் கீழிறக்கிக் கூட இந்தக் குழு கணித்திருக்கிறது. க.நா.சு.வுடன் எனக்கும்தான் தீவிரமான அபிப்ராய வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, ஒரு சிறந்த நாவலைச் சிறப்பில்லாத நாவல் என்று கூறிவிட முடியுமா?

மோகமுள், தன்னளவில் ஒரு பூரணமான நாவல். தலைப்பைத் தொட்டு நிற்கும் பிரச்சினையுடன் தொடர்புள்ள வேறு பிரச்சினைகளின் கிளைகளும் அதற்கு உண்டு. ஜே.ஜே. சில குறிப்புகளில் எந்த விதப் பிரச்சினையுமே இல்லை. இடதுசாரிகளின் பார்வையை, சரியாக காட்டாமலே, அதை ஓரிரு பாத்திரங்களின் மூலம் ஆசிரியர் கிண்டல் பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்கள் குறுக்கு வழியில் இடதுசாரி அரசியலை உபயோகித்தமையால் இந்தக் கிண்டல். ஆனால் மதிப்பீடுகளின் யாத்திரையோ அதைப் பிரதிப்பலிக்கும் பாத்திரமோ நாவலின் இல்லாததால், இந்தக் கிண்டல் ஆழமற்ற விகடக் கச்சேரியாகவே நிற்கிறது.

உலகை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த இன்னொரு உலகின் ‘யதார்த்தம்’ கூட ஜே.ஜே.யில் இல்லை. ஏனெனில், தன்னளவில் தர்க்கபூர்வமாக ஒருமை பெறாத உலகம் அது. ஜே.ஜே. என்பவன் சந்திக்கும் முதல் மனிதனாலேயே, உணர்வு நாசம் பெறுகிறான் என்கிறார் ஆசிரியர். நாவலில், அவனைச் சந்திக்கும் முக்கியப் பாத்திரம்தான் உணர்வு நாசம் பெறுகிறது. ஜே.ஜே. என்ற பாத்திரமே பிறருக்கு உணர்வு நாசம் தரும் பாத்திரம்தான். இப்படித் தன்முரணான ஒரு உலகம் தன்னளவில் யதார்த்தமானதல்ல. மேலும், ‘அவனுடைய உயிர் திராவிட உயிர் என்றாலும் தமிழ் உயிர் அல்ல’ என்ற மறைமுகமான இனவாதமும் நாவலில் உண்டு. இதை நான் விரிவாக வேறு இடங்களில் விமர்சித்துக் காட்டி உள்ளேன்.

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையையும் அதனூடே தப்பி ஓடிவருவதையும் ‘டாக்குமெண்டரி’யாக, அதுவும் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட நாவல். பிரச்சினை என்று மதிப்பீட்டு ரீதியாக எதையும் எழுப்பாத நாவல்.

பின் இரு நாவல்களையும் விடச் சிறந்தவை என்று, கீழேவரும் நாவல்களை குறிப்பிட முடியும். (கீழுள்ள வரிசைக்கிரமத்துக்கு விசேஷ அர்த்தம் இல்லை.)

1. கமலாம்பாள் சரித்திரம்பி. ஆர். ராஜமையர்
2. பொய்த்தேவுக. நா. சுப்ரமண்யம்
3. நாகம்மாள்ஆர். ஷண்முகசுந்தரம்
4. ஒரு நாள்க. நா. சுப்ரமண்யம்
5. வாழ்ந்தவர் கெட்டால்க. நா. சுப்ரமண்யம்
6. அசுரகணம்க. நா. சுப்ரமண்யம்
7. ஜீவனாம்சம்சி.சு. செல்லப்பா
8. வாடிவாசல்சி.சு. செல்லப்பா
9. மோகமுள்தி. ஜானகிராமன்
10. புத்தம்வீடுஹெப்ஸிபா ஜேசுதாசன்
11. நிழல்கள்நகுலன்
12. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்த. ஜெயகாந்தன்

பொய்த்தேவு: சிறந்த தமிழ் நாவல். அரும்பு, மார்ச்-ஏப்ரல் 1987.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

சாண்டில்யனின் கடல் புறா

சாண்டில்யன் நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது கடல் புறாதான். முதல் முறை படிக்கும்போது எட்டு ஒன்பது வயதிருந்திருக்கலாம். கடலைப் பார்த்தது – கடலை விடுங்கள், நான் பார்த்திருந்த மிகப் பெரிய நீர்நிலையே உள்ளூர் குளம்தான். (ஏரி அதை விடப் பெரியதுதான், ஆனால் அதில் தண்ணீர் இருந்ததில்லை.) கடல், கப்பல், கடற்கொள்ளைக்காரர்கள்,கடற்போர் என்றெல்லாம் கதை விரிந்தது அந்தக் காலத்துக்கு humdinger ஆக இருந்தது. இன்றும் படிக்கக் கூடிய, சுவாரசியம் உள்ள நாவல்தான். வணிக நாவல்களைப் பொருட்படுத்தி எழுதும் ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் இந்த நாவலை சரித்திர மிகுகற்பனை நாவல்களின் முதல் வரிசையில் வைக்கிறார்.

அத்தியாத்துக்கு அத்தியாயம் திடுக்கிடும் திருப்பங்கள். இப்போது பல திருப்பங்கள் உப்புசப்பில்லாமல் இருந்தாலும் பழைய ஞாபகம் மறக்கவில்லை. ஓரளவு சின்னப் பசங்கள் காணும் பகல் கனவு போல இருந்தாலும் சுவாரசியமாகத்தான் போகிறது. சிருங்கார ரசம் சாண்டில்யன் லெவலுக்கு குறைவுதான். நாவலில் சொல்லப்படும் வரலாறு எத்தனை தூரம் உண்மையோ தெரியவில்லை உண்மைதான். குலோத்துங்க சோழனாக பின்னாளில் அரசாண்ட அநபாயன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை (இன்றைய மலேசியா மற்றும் சுமத்ரா, ஜாவா தீவுகள்) வென்று அரசு பூசலைத் தீர்த்து வைத்ததாக வருகிறது.

என்ன கதை? முதல் பாகத்தில் நாயகன் கருணாகர பல்லவன் (இளைய பல்லவன்) எதிரி நாடான கலிங்கத்தில் (இன்றைய ஒரிசா) இருந்து நாயகியும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மீது உரிமை உள்ளவளும் ஆன இளவரசி காஞ்சனாவை பல வீர சாகசங்கள் புரிந்து தப்புவிக்கிறான். இந்த பாகத்தில் கடலே கிடையாது. இரண்டாவது பாகத்தில் ஸ்ரீவிஜயத்தின் ஒரு கடற்கரை கோட்டையான அக்ஷய முனையையும் அடுத்த நாயகியான மஞ்சளழகியின் மனதையும் வெல்கிறான். இதில் துறைமுகம் உண்டு, ஆனால் கடற்கரையைத் தாண்டி கதை போகாது. மூன்றாவது பாகத்தில் கடலில் சோழர் மேலாதிக்கத்தை நிறுவி ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் அரியணையில் காஞ்சனாவின் அப்பாவை உட்கார்த்தி வைக்கிறான். இதில்தான் கடல், இரண்டு மூன்று கடற்போர்கள்.

அன்று படிக்கும்போது மனதை மிகவும் கவர்ந்த பாத்திரங்கள் சீனக் கொள்ளைக்காரனான அகூதா (Aguda), அரபு நாட்டைச் சேர்ந்த உபதலைவன் அமீர். அந்தப் பாத்திரங்களின் அன்னியத்தன்மை (exotic) ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். அகூதா உண்மையில் சீனாவின் அரசராக இருந்தவராம்.

இளைய பல்லவன் – கருணாகரத் தொண்டைமான் – பிற்காலத்தில் கலிங்கத்தை வென்றவன். ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியின் நாயகன். அவனது தலைநகரமான வண்டை இன்றைய வண்டலூர்!

ஏறக்குறைய எல்லா சாண்டில்யன் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். சில சமயம் அவரது பாணி பற்றி அலுத்துக் கொண்டும் இருக்கிறேன். ஒன்று நிச்சயமாகச் சொல்ல முடியும் – அவர் புத்தகங்களை அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாது. ரஜினி எப்படி வெற்றிக் கொடி கட்டு என்று ஒரு பாட்டுப் பாடும் வேளையில் பெரும் பணக்காரர் ஆகிறார் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் படையப்பா திரைப்படத்தை ரசிக்க முடியாது.

இந்தப் புத்தகத்தை எல்லாருக்கும் – குறிப்பாக சிறுவர்களுக்கு – பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்

என் கணிப்பில் பரிதிமால் கலைஞரின் பங்களிப்பு என்பது இலக்கிய நயத்திலும் தொன்மையிலும் தமிழ் சமஸ்கிருதத்திற்கு குறைந்ததல்ல என்று இடைவிடாமல் பேசியதுதான். அதன் அறிகுறிதான் அவர் தன் பேரையே தமிழ்ப்படுத்திக் கொண்டது. சூரியநாராயண சாஸ்திரி என்ற பேரை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டது இன்று cliched அணுகுமுறையாகத் தெரியலாம். ஆனால் எந்த cliche-க்கும் தேவை இருக்கும் காலகட்டம் ஒன்றுண்டு, அது புதுமையாக இருக்கும் காலம் ஒன்றுண்டு.

அவரது புனைவுகளை (மதிவாணன்) இன்று படிக்க முடியவில்லை. அவரது நடையை கவனித்தால் அபுனைவுகளும் காலாவதி ஆகிவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. முன்னோடிகள் ஒரு கட்டத்தில் தேவையற்றவர்களாக ஆவது இயல்புதான், இவரும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. அபுனைவுகளில் தமிழ்ப் புலவர் வரலாறு சில புலவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள். நடை படிக்க கஷ்டமாக இருந்தது. நாடகவியல் புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. தமிழ் வியாசங்களும் அப்படியேதான். தமிழ் மொழியின் வரலாறு பரவாயில்லை.

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த சிறு அறிமுகம் – அஜயன் பாலா எழுதியது.

பரிதிமால் கலைஞர்: பிறப்பு:06-07-1870, இறப்பு:02-11-1903

பரிதிமால் கலைஞர் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி. சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழியாக போற்றப்பட்ட சூழலில் தமிழ் உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக உலகுக்கு உரக்க கூவியவர்.

செட்டி நாட்டைச் சேர்ந்த கண்டரமாணிக்கம் எனும் ஊரில் பிறந்த பரிதிமால் கலைஞரின் இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. தந்தை கோவிந்தராஜ சாஸ்திரி, தாய் லட்சுமி அம்மாள். இவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். துவக்கக் கல்விக்குப் பின் பதினைந்தாம் வயதில் மதுரை சபாபதி முதலியாரிடம் மூன்றாண்டுகள் தமிழ் படித்த சாஸ்திரி பின் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் தமிழும் தத்துவமும் படித்து மாநிலத்திலேயே நான்காவதாக தேறினார். முதுகலை பட்டப் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்து பாஸ்கர சேதுபதியின் கைகளால் அதற்காக பொற்பதக்கம் ஒன்றும் பெற்றார்.

படிக்கும்போதே தமிழ் மீதான தணியாத தாகம் கொண்டிருந்த அவர் தனித்தமிழ் இயக்கங்களுக்கு முன்னோடியாக தன் பெயரை சூரிய=பரிதி, நாராயண=மால், சாஸ்திரி=கலைஞர் எனப் பொருள்படும் வகையில் பரிதிமால் கலைஞர் என மாற்றிக் கொண்டார். அது மட்டுமல்லாமல் தன் தமிழுணர்வை வகுப்பிலும் மாண்வர்கள் மத்தியிலும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். ஒரு முறை மில்லர் எனும் ஸ்காட்லாந்து பேராசிரியர் ஆங்கிலக் கவிஞர் டென்னிஸன் பாடல் ஒன்றை வானாளவப் புகழ்ந்து இதுபோல் உலகில் வேறு யாரும் எழுதவே இல்லை இனியும் எழுத முடியாது என்று கூற அதைக் கேட்டு பொறுக்க முடியாத சாஸ்திரி சட்டென எழுந்து நின்று தமிழில் கம்பரின் பாடல்கள அவற்றைக் காட்டிலும் சிறப்பாக இருப்பதை எடுத்துக் கூற பேராசிரியர் மில்லர் ஆச்சரியப்பட்டார். அப்போது மில்லருக்கு பரிதிமால் கலைஞரின் மேல் உண்டான மதிப்பின் காரணமாக அவர் படித்து முடித்ததும் கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியப் பணியும் வாங்கித் தந்தார். அப்பணியின்போது சிறந்த தமிழ் மாணவர்களுக்கு தன் வீட்டில் பிரத்யோகமாக வகுப்புகள் எடுத்தார்.

நாடகத் தமிழின் மேல் ஆர்வம் கொண்டிருந்த பரிதிமால் கலைஞர் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் போன்ற நாடகங்களையும் நாடகவியல் எனும் நாடகம் குறித்த இலக்கண நூல் ஒன்றையும் எழுதினார். முழுவதும் உதடுகள் ஒட்டாமல் பாடும் நெடிய நீரோட்ட கவிதையை தன் கலாவதி நாடகத்தில் அமைத்தார். மதிவாணன், பாவலர் விருந்து, தமிழ் வியாசங்கள் போன்றவை இவரது பிற நூல்கள்.

தானும் மாணாக்கர்களும் இயற்றிய நூல்களை ஆறு பாகங்களாக வெளியிட்டார். குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்திற்கு உரையெழுதினார்.

தமிழை விட சமஸ்கிருதமே மேலான மொழி என பிராமணர்கள் கொண்டாடி வந்த காலத்தில் பிறப்பால் பிராமணனாக இருந்தும் தமிழின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ் உயர்தனை செம்மொழி என அறிவித்தோடு அல்லாமல் தமிழ் மொழியின் வரலாறு குறித்து முதல் முதலாக முதலாக நூல் ஒன்றையும் எழுதினார்.

தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுகளை கண்ட சி.வை. தாமோதரம் பிள்ளை இவரை திராவிட சாஸ்திரி என அழைத்தார்.

தன் முப்பத்திரண்டாம் வயதில் மரணத்தை தழுவியபோது பேராசிரியர் மில்லர் கதறி அழுத காட்சி அவரது வாழ்வுக்கு சான்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

மதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’

1981 வாக்கில் மீனாட்சிபுரம் என்ற கிராமமே இஸ்லாமுக்கு மாறியது. தலித்கள் பெருவாரியாக வாழ்ந்த கிராமம். ஜாதி அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவே இது நடந்தது என்று கூறப்பட்டது. பண ஆசை காட்டி மதம் மாற்றினார்கள் என்று இன்னொரு தரப்பு கூறியது. சில வருஷங்கள் கழித்து அனேகம் பேர் மீண்டும் ஹிந்து மதத்திற்கே திரும்பிவிட்டார்கள் என்று நினைவு.

அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம். அன்றைய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான வாஜ்பேயி வந்து பார்த்து அறிக்கை எல்லாம் சமர்ப்பித்தார். தமிழக் அரசு விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. ஜெயகாந்தன் இந்தப் பின்புலத்தை வைத்து ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்ற (சுமாரான) நாவலை எழுதினார்.

அதே பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட குறுநாவல் கருப்பாயி என்கிற நூர்ஜஹான். இங்கே கிராமத்தின் பேர் காமாட்சிபுரம். 25 வருஷங்களுக்குப் பிறகு மதம் மாறியவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. புத்தகம் மதம் மாறியவர்களுக்கும் மாற இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பேர் அன்வர் பாலசிங்கம் என்று இருப்பதால் அவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கருப்பாயியாகப் பிறந்து ஆறேழு வயதில் மதம் மாறிய நூர்ஜஹானுக்கு 40 வயதாகியும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அப்பா தனக்கு மாப்பிள்ளை தேடி அனுபவிக்கும் அவமானங்களின் பளு தாங்க முடியாமல் நூர்ஜஹான் தற்கொலை செய்து கொள்வதுடன் குறுநாவல் ஆரம்பிக்கிறது. மதம் மாறியவர்கள் என்றாலே ஒரு படி குறைவாகத்தான் பார்க்கிறார்கள்; அதுவும் தலித் – இல்லை இல்லை பள்ளக்குடி பறையக்குடி என்றால் – விலகி ஓடுகிறார்கள். காமாட்சிபுரத்தில் இப்படி மதம் மாறிய குடும்பங்களில் ஐம்பது அறுபது முதிர்கன்னிகள் மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். முஸ்லிம்களாக மாறினாலும் இன்னும் அவர்கள் தலித்துகளாகவோ அல்லது ‘நவ் முஸ்லிம்களாகவோ’தான் இருக்கிறார்கள். நூர்ஜஹான் இறந்த பிறகு முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை எல்லாரும் நிற்க வைத்து நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேள்வி கேட்கிறார்கள். நாவல் அவ்வளவுதான்.

நாவலில் கொஞ்சமாவது உண்மை இருக்கத்தான் இருக்கும். நம்மூரில் மதம் மாறினால் ஜாதி ஒழிந்துவிடுவதில்லை என்பது நிதர்சனம். எதற்காக மதம் மாறி இருந்தாலும் அதை வைத்து பெருமை அடித்துக் கொள்ளவும், அது மனமாற்றம் அல்ல, மதம் மாறியவர்களை உசுப்பிவிட்டு குளிர்காய்கிறார்கள் என்று குற்றம் சாட்டவும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கேட்கப்படும் கேள்வியும் நியாயமானதுதான்.

ஆனால்: காமாட்சிபுரத்தில் என்ன பெண் குழந்தைகள் மட்டும்தான் பிறப்பார்களா? உள்ளூரிலேயே வேறு மதம் மாறிய குடும்பங்களிலிருந்து மாப்பிள்ளை கிடைக்காதா? ஏதோ 55 சதவிகிதம் பெண் குழந்தைகள் 45 சதவிகிதம் ஆண் குழந்தைகள் என்றால் பரவாயில்லை, ஆனால் எக்கச்சக்க பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றால் லாஜிக் இடிக்கிறதே!

இந்தப் புத்தகத்தின் வெற்றி என்பது அப்படி லாஜிக் இடிப்பதைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரமே இல்லாமல் கதை போவதுதான். கேள்வி அவ்வளவு உக்கிரமாக கேட்கப்படுகிறது. இலக்கிய நயம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சமீபத்தில் மீனாட்சிபுரம் சென்று பார்த்தவர்கள் மதம் மாறியவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், விலக்கி வைக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன். புனைவுக்கு plausibility இருந்தால் போதும், அது முழு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்பதுதான் எப்போதுமே என் தரப்பு. அது பெருமாள் முருகனின் மாதொருபாகனாக இருந்தாலும் சரி, இல்லை கருப்பாயி என்கிற நூர்ஜஹானாக இருந்தாலும் சரி.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

ஈஸ்டருக்காக

சிறு வயதில் சில கிறிஸ்துவப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். தாம்பரம் கார்லி மேல்நிலைப் பள்ளியில் சில சமயம் காலையில் சில கிறிஸ்துவப் பாடல்களைப் பாடுவோம். எல்லாரும் – கிறிஸ்துவ மாணவர்கள் உட்பட – வாத்தியார் பார்க்காதபோது கண்டபடி மாற்றிப் பாடுவோம் என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட பாடல்களில் இன்னும் மறக்காதது ‘தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ‘. சக மாணவர்களுடன் சேர்ந்து கிண்டல் அடித்த காலத்திலும் மனதைக் கவர்ந்த பாடல். மாணவனாக இருந்த காலத்தில் காலை எழுந்து குளித்து பேயை ஓட்டு, பிசாசை அண்டவிடாதே, அடியிலிருந்து முடி வரை காக்க காக்க, டகுடகுடிகுடிகு டங்கு டிங்குகு என்று பாடாவிட்டால் காப்பி கிடைக்காது. கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன தேவை என்று, இது என்ன கேனத்தனமாக அதைக் கொடு இதைக் கொடு என்று பிரார்த்தனை, வட்டக் குதத்தைக் காப்பதை விட வல்வேலுக்கு வேறு வேலை இல்லையா என்ற மாதிரி அந்த வயதுக்கே உரிய சில பல புரட்சிகர சிந்தனைகள் தோன்றிக் கொண்டிருந்த காலம். காப்பிக்காக மட்டுமே கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்திருந்த காலம். அப்போது கடவுளிடம் எதையும் கேட்காத, நல்ல வழியில் நடத்துவதற்கு நன்றி சொல்லும் பாடல் மனதைக் கவர்ந்தது. ஆங்கிலத்தில் படித்த்ததும் மனதைக் கவர்ந்தது. அப்போது வந்த ஆர்வத்தினால்தான் பைபிள் படித்தேன். (பைபிளிலும் குறை கண்டுபிடித்தது தனிக்கதை.)

ஆங்கிலத்தில் படிக்கும்போது தமிழின் கவர்ச்சி அதன் மெட்டுதான் என்பதை உணர்ந்தேன்.  ‘Lord is my shepherd; I shall not want.’ என்பதில் உள்ள கவித்துவம் ‘தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே‘ என்பதில் இல்லை. யூத அரசனான டேவிட் இதை எழுதியதாக கூறப்படுகிறது

மேலே வளர்த்தாமல் Psalm 23 மற்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே

Lord is my shepherd
I shall not want

He make me to lie down in green pastures
He leads me beside the still waters.

He restores my soul
He leads me in the paths of righteousness for His name’s sake.

Yea, though I walk through the valley of the shadow of death,
I will fear no evil
For Thou art with me
Thy rod and Thy staff they comfort me.

Thou prepare a table before me in the presence of mine enemies
Thou anoint my head with oil
My cup runneth over.

Surely goodness and mercy shall follow me all the days of my life
And I will dwell in the house of the Lord for ever.

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்

ஆத்துமந்தன்னை குளிரப் பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

சாநிழல் பள்ளத்திரங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வலைதடியும் கோலுமே தேற்றும்

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

பகைவற்கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கே ஏற்படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையை
சுபமாய் அபிஷேகம் செய்குவார்

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

ஆயுள் முழுவதும் என் பாத்திரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்