தமிழறிஞர் வரிசை: 18. பரிதிமால் கலைஞர்

என் கணிப்பில் பரிதிமால் கலைஞரின் பங்களிப்பு என்பது இலக்கிய நயத்திலும் தொன்மையிலும் தமிழ் சமஸ்கிருதத்திற்கு குறைந்ததல்ல என்று இடைவிடாமல் பேசியதுதான். அதன் அறிகுறிதான் அவர் தன் பேரையே தமிழ்ப்படுத்திக் கொண்டது. சூரியநாராயண சாஸ்திரி என்ற பேரை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டது இன்று cliched அணுகுமுறையாகத் தெரியலாம். ஆனால் எந்த cliche-க்கும் தேவை இருக்கும் காலகட்டம் ஒன்றுண்டு, அது புதுமையாக இருக்கும் காலம் ஒன்றுண்டு.

அவரது புனைவுகளை (மதிவாணன்) இன்று படிக்க முடியவில்லை. அவரது நடையை கவனித்தால் அபுனைவுகளும் காலாவதி ஆகிவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. முன்னோடிகள் ஒரு கட்டத்தில் தேவையற்றவர்களாக ஆவது இயல்புதான், இவரும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. அபுனைவுகளில் தமிழ்ப் புலவர் வரலாறு சில புலவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள். நடை படிக்க கஷ்டமாக இருந்தது. நாடகவியல் புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. தமிழ் மொழியின் வரலாறு பரவாயில்லை.

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த சிறு அறிமுகம் – அஜயன் பாலா எழுதியது.

பரிதிமால் கலைஞர்: பிறப்பு:06-07-1870, இறப்பு:02-11-1903

பரிதிமால் கலைஞர் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி. சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழியாக போற்றப்பட்ட சூழலில் தமிழ் உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக உலகுக்கு உரக்க கூவியவர்.

செட்டி நாட்டைச் சேர்ந்த கண்டரமாணிக்கம் எனும் ஊரில் பிறந்த பரிதிமால் கலைஞரின் இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. தந்தை கோவிந்தராஜ சாஸ்திரி, தாய் லட்சுமி அம்மாள். இவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். துவக்கக் கல்விக்குப் பின் பதினைந்தாம் வயதில் மதுரை சபாபதி முதலியாரிடம் மூன்றாண்டுகள் தமிழ் படித்த சாஸ்திரி பின் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் தமிழும் தத்துவமும் படித்து மாநிலத்திலேயே நான்காவதாக தேறினார். முதுகலை பட்டப் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்து பாஸ்கர சேதுபதியின் கைகளால் அதற்காக பொற்பதக்கம் ஒன்றும் பெற்றார்.

படிக்கும்போதே தமிழ் மீதான தணியாத தாகம் கொண்டிருந்த அவர் தனித்தமிழ் இயக்கங்களுக்கு முன்னோடியாக தன் பெயரை சூரிய=பரிதி, நாராயண=மால், சாஸ்திரி=கலைஞர் எனப் பொருள்படும் வகையில் பரிதிமால் கலைஞர் என மாற்றிக் கொண்டார். அது மட்டுமல்லாமல் தன் தமிழுணர்வை வகுப்பிலும் மாண்வர்கள் மத்தியிலும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். ஒரு முறை மில்லர் எனும் ஸ்காட்லாந்து பேராசிரியர் ஆங்கிலக் கவிஞர் டென்னிஸன் பாடல் ஒன்றை வானாளவப் புகழ்ந்து இதுபோல் உலகில் வேறு யாரும் எழுதவே இல்லை இனியும் எழுத முடியாது என்று கூற அதைக் கேட்டு பொறுக்க முடியாத சாஸ்திரி சட்டென எழுந்து நின்று தமிழில் கம்பரின் பாடல்கள அவற்றைக் காட்டிலும் சிறப்பாக இருப்பதை எடுத்துக் கூற பேராசிரியர் மில்லர் ஆச்சரியப்பட்டார். அப்போது மில்லருக்கு பரிதிமால் கலைஞரின் மேல் உண்டான மதிப்பின் காரணமாக அவர் படித்து முடித்ததும் கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியப் பணியும் வாங்கித் தந்தார். அப்பணியின்போது சிறந்த தமிழ் மாணவர்களுக்கு தன் வீட்டில் பிரத்யோகமாக வகுப்புகள் எடுத்தார்.

நாடகத் தமிழின் மேல் ஆர்வம் கொண்டிருந்த பரிதிமால் கலைஞர் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் போன்ற நாடகங்களையும் நாடகவியல் எனும் நாடகம் குறித்த இலக்கண நூல் ஒன்றையும் எழுதினார். முழுவதும் உதடுகள் ஒட்டாமல் பாடும் நெடிய நீரோட்ட கவிதையை தன் கலாவதி நாடகத்தில் அமைத்தார். மதிவாணன், பாவலர் விருந்து, தமிழ் வியாசங்கள் போன்றவை இவரது பிற நூல்கள்.

தானும் மாணாக்கர்களும் இயற்றிய நூல்களை ஆறு பாகங்களாக வெளியிட்டார். குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்திற்கு உரையெழுதினார்.

தமிழை விட சமஸ்கிருதமே மேலான மொழி என பிராமணர்கள் கொண்டாடி வந்த காலத்தில் பிறப்பால் பிராமணனாக இருந்தும் தமிழின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ் உயர்தனை செம்மொழி என அறிவித்தோடு அல்லாமல் தமிழ் மொழியின் வரலாறு குறித்து முதல் முதலாக முதலாக நூல் ஒன்றையும் எழுதினார்.

தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுகளை கண்ட சி.வை. தாமோதரம் பிள்ளை இவரை திராவிட சாஸ்திரி என அழைத்தார்.

தன் முப்பத்திரண்டாம் வயதில் மரணத்தை தழுவியபோது பேராசிரியர் மில்லர் கதறி அழுத காட்சி அவரது வாழ்வுக்கு சான்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்