முதுமை

இன்று என் பெற்றோர்களின் திருமண நாள். (மே 17)

என் அப்பாவுக்கு 84 வயது. அம்மாவுக்கு 77. இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள். வேலையிலிருந்து ஓய்வு பெற்று பல வருஷங்கள் ஆகிவிட்டன. பேச ஆளில்லை, பிள்ளையும் பெண்களும் அவரவர் கவலைகளில், அவரவர் உலகத்தில். பிள்ளைகள் அடிக்கடி அதட்டுகிறோம். ‘வயசான காலத்திலே கிருஷ்ணா ராமான்னு ரெஸ்ட்ல இருக்காம ரெண்டு பேரும் அங்கயும் இங்கயும் அலையாதீங்க, உடம்புக்கு வந்தா பாத்துக்க ஆளில்ல’ என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம். பிள்ளைகளின் வாழ்க்கைக்கும் தங்கள் வாழ்க்கைக்கும் பொதுவான புள்ளிகள் குறைந்துகொண்டே போனாலும் பிள்ளைகள் மூலமாகத்தான் அவர்கள் இருவருக்கும் தங்கள் வாழ்வை சுவாரசியப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. தன் தோள் மீது வளர்ந்த குழந்தைகள் இன்று தோளை அல்ல, தலையையே மிஞ்சிப் பேசுவதை அவர்கள் எப்படி உணர்வார்கள்?

பொத்தூரி விஜயலட்சுமி என்று தெலுகு கவிஞர் எழுதிய இந்தக் கவிதை மிக அருமையாக விளக்குகிறது. என்னைப் பொறுத்த வரையில் கடைசி வரியை எடுத்துவிட்டால் இன்னும் நல்ல கவிதையாக இருக்கும்.

மொழிபெயர்த்தவர் சாஹித்ய அகடமி விருது பெற்ற தோழி கௌரி கிருபானந்தன். மே மாத அமுதசுரபி இதழில் வந்திருக்கிறது.

திருமண அழைப்பிதழை
கையில் கொடுத்து
நம் இல்லத்திலேயே புத்தாடைகளை
வழங்கி காலில் விழுந்து வணங்கி
அத்தனை தூரம் எப்படியும்
உங்களால் வர முடியாது,
ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று
சொல்லும்போது

அது நீங்கள் பார்க்கத் தகுந்த படம் இல்லை
என்று அவர்களே
முடிவு செய்யும்போது

பிறந்த நாள் பரிசாக
கைத்தடி, பகவத்கீதை
ஜபமாலை தரும்போது

பற்றைக் குறைத்துக்
கொள்ளுங்கள் என்று குழந்தைகள்
மெல்லிய குரலில்
கண்டிக்கும்போது

எதற்கு நல்லது யாராருக்கு
என்னென்னவென்று
ஒரு கடிதத்தில்
எழுதி வைத்து விடுங்கள் என்று
நலம் விரும்பிகள் அறிவுரை
வழங்கும்போது

அரை மணி நேரம் நாம்
சொன்ன வியாதிகளை
கேட்டுக் கொண்டு
பழைய மருந்துகளையே
தொடருங்கள் என்று
டாக்டர் முறுவலுடன்
சொல்லும்போது

பத்து நாட்களாக பேச்சு மூச்சையே
காணும் என்று நாம் கேட்டால்
பட்டும் படாமல் எதிராளி பதில்
சொல்லும்போது

எதன் மீதும் ஆர்வம் இல்லாமல்
எப்படியோ போகட்டும் என்று
நமக்கே நம் உணவு, உடைகள் மீது
அக்கறை இல்லாமல் போகும்போது

குழந்தைகள் சாப்பிட்டார்களோ
எப்படி இருக்கிறார்களோ
என்ற தவிப்பு குறைந்து
அவரவர் வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்ற வேதாந்த போக்கு படியும்போது

ஏதாவது இழவு செய்தி கேட்க
நேர்ந்தால் வருத்தத்திற்கு பதில்
இன்னொரு விக்கெட் போய்விட்டது
கொடுத்து வைத்தவன் கிடக்காமல்
போய்ச் சேர்ந்துவிட்டான்
என்ற திருப்தியோடு கடுகளவு
பொறாமையும்
ஏற்படும்போது

அர்த்தம் என்னவென்று
தெரியுமா?
நாம் அவுட்டரில் இருக்கிறோம் என்று

பின்குறிப்பு: அவுட்டர் என்றால் இந்தக் காலத்தில் புரிவது கஷ்டம் என்று நினைக்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில் ஏற்கனவே இருக்கும் வண்டி நகர்ந்தால்தான் அடுத்த வண்டி உள்ளே வர முடியும் என்ற நிலை இருந்தால் அந்த வண்டியை ஸ்டேஷனிலிருந்து ஒரு அரை மைல் தூரத்தில் நிறுத்திவிடுவார்கள். ‘அவுட்டர்ல போட்டாண்டா’ என்ற குரலை நான் ரயிலில் ஏறி பள்ளி சென்ற நாட்களில் அடிக்கடி கேட்கலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்