நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன்

தமிழ் நாட்டில் ஒரு பழக்கம் இருக்கிறது. திடீரென்று நினைத்துக் கொண்டு எழுத்தாளர்கள்/தமிழறிஞர்களின் எழுத்துக்களை நாட்டுடமை ஆக்குவது. சாதாரணமாக முதல்வராக இருப்பவரின் whims and fancies-ஐ அடிப்படையில்தான் இது நடக்கிறது. 2009-இல் அப்படி நாட்டுடமை ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய குறிப்புகளை மறைந்த சேதுராமன் எழுதினார். அப்போதிலிருந்தே அப்படி நாட்டுடமை ஆக்கப்பட்ட எல்லா எழுத்துக்களையும் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கொரு ஆசை.

சில முறை தரமற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் நாட்டுடமை ஆக்கிவிடுகிறார்கள். அதுவும் கட்சி சார்ந்தவர், தெரிந்தவர், எழுத்து எத்தனை குப்பையாக இருந்தாலும் சரி, செய்துவிடுவோம் என்று தோன்றிவிடுகிறது என்று நினைக்கிறேன். ஏ.கே. வேலன் அந்த ரகம்.

ஏ.கே. வேலன் சினிமாக்காரர். தை பிறந்தால் வழி பிறக்கும், காவேரியின் கணவன் மற்றும் சில படங்களைத் தயாரித்தவர். சொந்தமாக ஸ்டுடியோ வைத்திருந்தாராம். வணங்காமுடி, குறத்தி மகன், மாட்டுக்கார வேலன் திரைப்படங்களின் கதை இவருடையதுதானாம். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

திராவிட இயக்கத்தில் இருந்திருக்கிறார். அண்ணா, கருணாநிதியோடு சிறை சென்றிருக்கிறாராம். பிற்காலத்தில் அனுமார் அனுபூதி என்றெல்லாம் புத்தகங்களும் எழுதி இருக்கிறார். காஞ்சி மகா பெரியவரின் பக்தராம்.

இரண்டு நாடகங்களை – காவேரிக் கரையினில், மீனாட்சி நாடகத் தமிழ் – படித்தேன். தண்டமாக இருந்தது. காவேரிக் கரையினில் ஐம்பது அறுபதுகளில் திரைப்படமாக வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். இவர் எழுதியதை எல்லாம் நாட்டுடமை ஆக்க ஒரு முகாந்தரமும் இல்லை. கருணாநிதி தமக்குத் தெரிந்தவர், திராவிட இயக்கத்தில் இருந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இதை செய்திருக்க வேண்டும். இந்தக் கொடுமை எல்லாம் என்றுதான் நிற்குமோ தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள்