மகாபலிபுரத்தின் பகீரதன் தவம்

பசுபதி சாரின் பதிவுகள் மிக சுவாரசியமானவை. கனடாவில் இருக்கிறார், ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று தெரிகிறது. எழுத்தாளர் தேவனின் பரம ரசிகர். அதுவும் அன்றைய பத்திரிகைகளை அன்று வந்த சித்திரங்களோடு, விளம்பரங்களோடு அப்படியே ஸ்கான் செய்து எடுத்துப் போடுவார்.

கலைமகள் பத்திரிகையின் (இன்னும் வருகிறதா இல்லை நின்றுவிட்டதா?) முதல் இதழில் – 1932-இல் முதல் இதழ் வந்ததாம் – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய ஒரு கட்டுரையை ஸ்கான் செய்து போட்டிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் மகாபலிபுரத்தின் புகழ் பெற்ற பகீரதன் தவம் சிற்பம் பகீரதன் தவத்தை சித்தரிப்பதுதானா இல்லை அர்ஜுனன் தவத்தையா என்று ஒரு சர்ச்சை இருந்திருக்கிறது. சாஸ்திரி அவர்கள் தெளிவாகத் தன் வாதங்களை முன் வைக்கிறார் – பகீரதன் தவம்தான் என்று நிறுவுகிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தின் மூலக்கதை – எரிக் காஸ்ட்னர் எழுதிய Lisa and Lottie

Parent Trap திரைப்படத்தை நம்மில் அனேகர் பார்த்திருப்போம். எனக்குப் பிடித்தது 1998-இல் லிண்ட்ஸே லோஹன் நடித்த படம். 1961-இல் ஹேய்லி மில்ஸ் நடித்து வெளிவந்ததுதான் முதல் படம். தமிழில் குழந்தையும் தெய்வமும் என்று ஜெய்ஷங்கர், ஜமுனா, குட்டி பத்மினி நடித்து வெளிவந்தது. ஹிந்தி, தெலுகு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் வந்திருக்கிறது.

அதன் மூலக்கதைதான் எரிக் காஸ்ட்னர் ஜெர்மன் மொழியில் எழுதிய Lisa and Lottie புத்தகம். காஸ்ட்னர் ஜெர்மானிய எழுத்தாளர். அனேகமாக சிறுவர் புத்தகங்களைத்தான் எழுதி இருக்கிறார். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்திருப்பார் போலிருக்கிறது. 1992-இல் ஒரு asteroid-க்கு அவர் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

காஸ்ட்னரின் நாவலில் ஒன்பது வயதுச் சிறுமிகள். வியன்னாவில் இசை conductor அப்பாவோடு வளரும் லிசா; ம்யூனிக்கில் பத்திரிகையாளர் அம்மாவோடு வளரும் லாட்டி இருவரும் குழந்தைகளுக்கான camp ஒன்றில் சந்திக்கிறார்கள். ஆள் மாறாட்டம், உண்மை தெரிந்து அம்மா அப்பா மீண்டும் இணைந்து சுபம்!

புத்தகத்தில் நான் மிகவும் ரசித்தது சித்திரங்களைத்தான். இப்படி படங்களோடு ஒரு புத்தகத்தைப் படித்து எத்தனையோ நாளாயிற்று.

இரண்டாவதாக ரசித்தது புத்தகத்தின் காலகட்டம். 1950களின் முற்பகுதி என்று நினைக்கிறேன். இன்னும் தபால் மூலம்தான் லிசாவும் லாட்டியும் தொடர்பு கொள்கிறார்கள். ம்யூனிக்கில் இருந்து வியன்னாவுக்கு விமானத்தில் போவது கொஞ்சம் அபூர்வமே. பெரிய பெரிய சூப்பர்மார்க்கெட்டுகளைக் காணோம், கசாப்புக் கடை, மளிகைக் கடை எல்லாம் இருக்கிறது. கடைக்காரர்களுக்கு ரெகுலர் கஸ்டமர்களைத் தெரிகிறது, மளிகைக்கடைக்காரர் camp-இலிருந்து திரும்பி வரும் சிறுமிக்கு சாக்லேட் கொடுக்கிறார். அந்தக் காலகட்டத்தோடு பரிச்சயம் உள்ள நானே கடிதம் எழுதி எத்தனையோ வருஷம் ஆயிற்று, இன்றைய இன்ஸ்டாக்ராம் தலைமுறைக்கு தபால் என்றால் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்!

படங்களோடு புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். ஆனால் புத்தகத்தைப் படிப்பதை விட லிண்ட்ஸே லோஹன் நடித்த திரைப்படத்தைப் பார்ப்பது உத்தமம்.

குழந்தையும் தெய்வமும் திரைப்படத்திலிருந்து எனக்குப் பிடித்த பாடல்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

ஈழ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் பேட்டி

முத்துலிங்கத்தை ஈழ எழுத்தாளர் என்று அழைப்பது ஜெயகாந்தனை கடலூர் எழுத்தாளர் என்று சொல்வது போலத்தான். இருந்தாலும் சுலபமாக அடையாளப்படுத்துவதற்காக அப்படி குறிப்பிடுகிறேன். அவர் எழுத்து அகில உலகத்துக்கும் உரியது. அதிலும் சிறப்பாக அவரது கதைகளின் பின்புலமும் உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கிறது. ஆஃப்ரிக்கா, கனடா, இலங்கை, ஏன் பாகிஸ்தான் பின்புலத்தில் கூட ஒரு சிறந்த சிறுகதை உண்டு.

முத்துலிங்கம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரது எழுத்துக்களில் தெரியும் மெல்லிய நகைச்சுவை அபாரமானது. அவரது சிறந்த பேட்டி ஒன்றை இங்கே பார்த்தேன், வசதிக்காக கீழே பதித்திருக்கிறேன். தமிழ் ஹிந்துவுக்கு நன்றி!

ஏன் எழுதுகிறீர்கள்?

முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை பெற்றால் அது சாதாரண விசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும், இசையமைப்பாளர் புதிய இசையை உருவாக்குவதும் இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அதைப் படிக்கும் வாசகருக்கும் கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது தவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்கு ஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்!

எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

அதிகாலை நேரத்தில்தான் எழுதுகிறேன். காலை 5.30 மணியிலிருந்து 9 மணி மட்டும் எழுதுவேன். காலை உணவுக்குப் பின்னர் இரண்டு மணி நேரம் எழுதலாம். ஆனால், ஊக்கம் குறைந்துவிடும். மதிய உணவுக்குப் பின்னர் சோர்வு ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் வாசிப்பேன். வாசிப்பின் வெற்றி கையில் இருக்கும் புத்தகத்தைப் பொறுத்தது. என்னுடைய எழுத்தாள நண்பரிடம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறேன். அவரும் காலைதான் எழுதுகிறார். ஆனால், ஒரு நாளில் அவருக்கு இரண்டு காலைகள். அதிகாலையிலிருந்து மதியம் வரை எழுதுவார். மதிய உணவுக்குப் பின்னர் சிறு தூக்கம். எழுந்தவுடன் ஒரு நடைபோய்விட்டு வந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறார். ஒரு நாள், இரண்டு விடியல், இரண்டு எழுத்து. இதையும் முயன்றுபார்த்திருக்கிறேன். நான் வேக மான எழுத்தாளன் இல்லை. நான்கு மணி நேரத்தில் சிலவேளைகளில் ஒரு பக்கம்தான் தேறுகிறது.

உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?

எழுத்தாளர்கள் திருப்தி அடைவதே இல்லை. டோல்ஸ்டோய் 1,300 பக்கங்கள் கொண்ட ‘போரும் சமாதானமும்’ நாவலை எழுதினார். எழுதி முடித்த பின்னர் பின்னுரை ஒன்று எழுதினார். அது திருப்தி தராமல் இன்னொரு பின்னுரை எழுதினார். மூன்றாவதாகவும் தன் நாவலை விளக்கி ஒன்று எழுதினார். இறுதிவரை அவருக்குத் திருப்தி கிடைத்ததாகத் தெரியவில்லை.

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

எப்போதும்தான். ஒரு புத்தகம்கூட எழுதிடாத பல சிறந்த எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். சிந்தனையில் அவர்கள் பல நூல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை எழுத்தில் மாற்றுவதற்கு சோம்பல் இடம்கொடுக்கவில்லை. எழுத்தாளருடைய உண்மையான வெற்றி சோம்பலைத் தோற்கடிப்பதுதான். நான் கணினியில் எழுதும்போது அடிக்கடி நினைப்பது 10,200 பாடல்களை இயற்றிய கம்பரைத்தான். ஓலையை ஒரு கையிலே பிடித்து மறுகையில் எழுத்தாணியை எடுத்து அத்தனை பாடல் களையும் எழுதினாரே அதற்கு எத்தனை உடல் உழைப்பு தேவைப்பட்டிருக்கும்! அதிகமாக எனக்கு சோர்வு நேர்ந்தது நேர்காணல் செய்யும்போது. ஒருவரை முன்னும் பின்னும் துரத்தி தொந்தரவுபடுத்தி நேர்காணலுக்குத் தேதி வாங்கியிருப்போம். பல மைல்கள் பயணிக்க வேண்டி வரலாம். நேர்காணல் முடிந்து எழுதித் திருத்தி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருக்க வேண்டும். பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படும்போது மிகவும் மனச்சோர்வாக உணர்வேன். அதைக் கடந்து மீண்டும் எழுதவருவது சிரமம்தான்.

எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

1999 என்று நினைக்கிறேன். பல மைல்கள் பயணித்து அமெரிக்காவில் சாந்தகுரூஸ் என்ற இடத்தில் சுந்தர ராமசாமியைச் சந்திக்கப் போயிருந்தேன். முதல் சந்திப்பு. நான் எழுதிய சில சிறுகதைகளை அவர் படித்திருந்தார். பாராட்டுகள் வந்திருந்தன. ஒன்றிரண்டு எதிர்மறையாகவும் இருந்தன. அப்போது அவர் சொன்ன அறிவுரை இன்றுவரை பயனுள்ளதாகவே இருக்கிறது. ‘திறனாய்வாளரை முற்றிலும் ஒதுக்கக் கூடாது. காழ்ப்புணர்வு விமர்சனம் என்றால் முதல் இரண்டு வரிகளிலேயே அதைக் கண்டுபிடித்துவிடலாம். அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. உங்கள் படைப்புத் திறனை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். திறனாய்வாளர் வெளிப்படுத்திய கருத்தில் உண்மை இருந்தால், அதை மதிக்கப் பழக வேண்டும். நல்ல விமர்சனங்கள் எழுத்தை மேம்படுத்தும்.’

இலக்கியம் தவிர்த்து – இசை, பயணம், சினிமா, ஓவியம்… – வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?

கிடைக்கும் ஒவ்வொரு நிமிட அவகாசத்திலும் ஏதாவது எழுதத் தோன்றும். அல்லது வாசிக்க வேண்டும். ஆகவே, தொலைக்காட்சி பார்ப்பதோ, இசை கேட்பதோ அபூர்வமாகவே நடக்கிறது. வெங்கட் சாமிநாதன் கர்னாடக இசைக் குறுந்தகடு ஒன்று தந்தார். அதை அடிக்கடி கேட்பேன். துக்கமான சமயத்திலும் மகிழ்வான சமயத்திலும் அதே இசை மனதை சமநிலைப்படுத்துகிறது.

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

சங்க இலக்கியம்தான். எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகியவற்றை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால், முறையாகப் பாடம் கேட்டதில்லை. நேற்று ‘மலைபடுகடாம்’ நூலை எடுத்துப் பார்த்தேன். எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஒரு புதிய தகவல் அங்கே கிடைக்கும். படிக்க வேண்டும்.

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

உயர்ந்த இலக்கியம் அதைச் செய்கிறது. தன் முதிய வயதில் டோல்ஸ்டோய் எழுதிய நீண்ட கதை The Death of Ivan Ilyich அறம் பற்றிப் பேசுவது. இவான் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். ஒருவருக்கும் தீங்கிழைக்காத சாதாரண வாழ்க்கை அவருடையது. அவர் விபத்தில் சிக்கிக் கீழே விழுந்து காயம்பட்டு தீர்க்க முடியாத நோயாளியாகப் படுக்கையில் படுத்துவிட்டார். மருத்துவர் அவரிடம் உண்மை பேசுவதில்லை. மனைவி வேண்டாவெறுப்பாக நடந்துகொள்கிறார். ஒருவரும் அவருக்கு உண்மையாக இல்லை, ஒரேயொரு வேலைக்காரனைத் தவிர. அவர் கடவுளைப் பற்றியும், வாழ்க்கையின் அர்த்தத் தைப் பற்றியும் அறத்தைப் பற்றியும் தன் இறுதிக் காலத்தில் சிந்திக்கிறார். வாசக மனங்களையும் உண்மையை நோக்கி நகர்த்துகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்

சமஸ்கிருத நிபுணர் ஷெல்டன் போலக்கின் பேட்டி

ஷெல்டன் போலக் சமஸ்கிருத விற்பன்னர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். Clay Sanskrit Library என்ற அமைப்பின் எடிட்டராகப் பணியாற்றி ராமாயணம், மஹாபாரதம், காளிதாசனின் நாடகங்கள் போன்ற பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் Murty Classical Library அமைப்பின் எடிட்டராகவும் இருக்கிறார்.

நான் போலக்கின் எந்தப் புத்தகத்தையும் இது வரை படித்ததில்லை. அங்கும் இங்குமாக போலக்கைப் பற்றி படித்தபோது அவருடைய கருத்துக்கள் பலவற்றையும் நான் மறுப்பேன் என்றுதான் தோன்றுகிறது. உதாரணமாக சமஸ்கிருதம் ஆதிக்க மொழி என்கிறாராம். சமஸ்கிருதம் ஆதிக்கம் செய்தவர்களின் கருவியாகப் பயன்பட்டிருக்கலாம்தான். ஆங்கிலத்தில் பேசினாலும் எழுதினாலும் இன்றும் கூட உங்கள் வார்த்தை எடுபடத்தான் செய்கிறது. அது ஆங்கிலத்தின் குறை அல்ல. Information asymmetry எப்போதும் விஷயம் தெரிந்தவனுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பது அடிப்படையான உண்மை. அதை போலக் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

இருந்தாலும் போலக்கின் இந்தப் பேட்டியைப் படித்தபோது அவர் உண்மையான scholar என்ற எண்ணம் உறுதிப்பட்டது. அவருடைய கருத்துக்கள் out of context ஆக மேற்கோள் காட்டப்படுகின்றனவோ என்று தோன்றியது. உதாரணமாக:

every document of civilisation is at the same time a document of barbarism. A thing of beauty often rests on the foundations that are very ugly. The job of the scholar is to pay attention to both.

சரிதானே? தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவதால் ஏற்பட்ட வரிச்சுமையை அன்றைய விவசாயிகள் எதிர்த்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நீங்கள் போலக் எழுதிய புத்தகம்/கட்டுரை படித்திருக்கிறீர்களா? எதையாவது பரிந்துரைப்பீர்களா? சுட்டி ஏதாவது கொடுத்தால் இன்னும் சிறப்பு…

பேட்டியைப் படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: Scholars

தி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்

இணையத்தில் கிடைத்ததை இணைத்திருக்கிறேன்.

தி.மு.க. 1949-ஆம் ஆண்டு தோன்றியது என்று நினைவு. அப்படி என்றால் இந்த மலர் 1951-52 வாக்கில் வெளிவந்திருக்க வேண்டும். தலையங்கம் இப்படி ஆரம்பிக்கிறது.

ஆண்டுகள் இரண்டு உருண்டு ஓடி மறைந்துவிட்டன. கிடந்து, தவழ்ந்து, எழுந்து, தளர்நடை நடந்து, இட்டுந் தொட்டும், உழந்தும் பிசைந்தும் மகிழும் குழவி போல, தி.மு.க. திராவிடத்தின் மடி மீதும் தோள் மீதும் விளையாடுகிறது

ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கழகத்தின் செயல்கள் மூலம் தமிழகத்தை – இல்லை இல்லை திராவிடத்தை – உய்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று பலரும் உண்மையிலேயே நினைத்திருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

48 பக்கம். விலை எட்டணா. தம்பிடி, அணா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்க முடியாத இன்றைய தலைமுறைக்காக – இன்றைய கணக்கில் ஐம்பது காசு. முதல் பக்கத்தில் மெடல் மாதிரி இருக்கிறது, அதில் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட திராவிட நாட்டின் வரைபடம் இருக்கிறது. படத்தைப் பார்த்தால் ஒரிஸ்ஸா வரைக்கும் கூட போகும் போலிருக்கிறது.

இரண்டாவது பக்கத்தில் ‘மணமகள்‘ திரைப்பட விளம்பரம். என்.எஸ். கிருஷ்ணன் விளம்பரம் மூலமாக பணம் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். என்எஸ்கே பெயரை விட கொட்டை எழுத்தில் ‘திரைக்கதை வசனம் மு. கருணாநிதி‘ என்று போட்டிருக்கிறது. பின் அட்டையில் ‘சொர்க்கவாசல்‘ திரைப்பட விளம்பரம். அதில் ‘கதை வசனம் அண்ணாதுரை‘ என்று இருக்கிறது, ஆனால் கொட்டை எழுத்தில் இல்லை. கருணாநிதி அப்போதே தான் தனியாகத் தெரிய வேண்டும் என்று ஆரம்பித்துவிட்டார் போல.

அண்ணாதுரையே ஒரு நாடகம் எழுதி இருக்கிறார் – ‘நன்கொடை’.

இதைத் தவிர வாணிதாசன் ஒரு கவிதை, கா. அப்பாத்துரை ஒரு கட்டுரை, ‘நாவலர்’ நெடுஞ்செழியன் ஒரு கட்டுரை. எதுவும் படிக்க லாயக்கில்லை.

இதைத் தவிர இரண்டு சிறுகதைகள். ஒன்றில் பிராமண வெறுப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. (‘உன் இனத்திலே உன்னைப் போன்ற நல்லவர்கள் பிறப்பது அபூர்வமே’, இனத்திற்கேற்ற குணம் அவனிடத்திலே பரிபூரணமாகவே இருந்தது, ஆரியப் பதஞ்சலி செய்யும் சதிகளும் கொலைகளும் இத்யாதி)

மேலும் ஒரு நாடகம். யார் எழுதியது என்ற விவரம் இல்லை.

தனித்துத் தெரிவது அன்றைய தி.மு.க.வின் செயலூக்கம்தான். விடாமல் ஏதாவது செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். கூட்டம், நாடகம், கறுப்புக் கொடி, வழக்கு ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. அன்று பெரிய நிதி வசதி எல்லாம் இருந்திருக்காது. ஆனால் விடாமல் தங்கள் குரல் மக்களிடையே கேட்டே ஆக வேண்டும் என்று முயன்று கொண்டே இருந்திருக்கிறார்கள். அறிக்கையாவது விட்டிருக்கிறார்கள். காலெண்டர் என்ற தலைப்பில் அத்தனையையும் பட்டியலும் போட்டிருக்கிறார்கள்.

ஆவண முக்கியத்துவம் உள்ள மலர். இணைத்திருக்கிறேன். படித்துப் பார்க்காவிட்டாலும் புரட்டியாவது பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

எம்.ஜி. சுரேஷும் பின்நவீனத்துவமும்

எம்.ஜி. சுரேஷின் பெயரை அவ்வப்போது இலக்கிய சூழல்களில் கேட்டிருக்கிறேன். போன வருஷம் இறந்துவிட்டார். ஒரு புத்தகத்தைக் கூடப் படித்திருக்காததால் நானும் அஞ்சலி கிஞ்சலி என்று எதையும் எழுதவில்லை.

எம்.ஜி. சுரேஷ் பின்நவீனத்துவ எழுத்தாளர் என்பார்கள். எனக்கு இன்னும் நவீனத்துவம் என்றால் என்ன என்றே சரியாகத் தெரியாது, பின்நவீனத்துவத்துக்கு எங்கே போவது? மேலும் யாரும் பெரிதாக சிலாகித்ததில்லை, இருந்தாலும் என்றாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தக் கட்டுரை வேறு சின்னதாக என் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. .

தற்செயலாக நூலகத்தில் ‘அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்‘ என்ற சிறுகதைத் தொகுப்பு தென்பட்டது. சின்னப் புத்தகம், 150 பக்கம் இருந்தால் அதிகம். ஒரு வேளை படித்தாலாவது பின் நவீனத்துவம் என்றால் என்ன என்று புரிந்துவிடுமோ என்ற நப்பாசை. சரி என்று தூக்கிக் கொண்டு வந்தேன்.

ஒரு கதை என்றால் ஒரு கதை கூட எனக்குத் தேறவில்லை. என்னதான் சொல்ல வருகிறார்? உதாரணமாக ‘அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்’ சிறுகதையை எடுத்துக் கொள்ளுங்கள். சினிமா உலகம். சிறு வயதிலிருந்தே பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் அவந்திகா. கூட்டிக் கொடுக்கும் பெற்றோர், காதலன் இத்யாதி. சினிமா நட்சத்திரமாகிறாள். காதல். சொந்தப் படம். நஷ்டம். தற்கொலை. தற்கொலைக்கு பெற்றோர் காரணமாக இருக்கலாம், காதலன் காரணமாக இருக்கலாம், பண நஷ்டம் காரணமாக இருக்கலாம் என்று போகிறது. கதையில் சுவாரசியம் இல்லை, தரிசனம் இல்லை, நடை இல்லை. ஏதோ ஜூனியர் விகடனில் வரக் கூடிய செய்தியை சிற்றிதழ் கதையாக மாற்றியது போல இருக்கிறது. இதை நான் எதற்குப் படிக்க வேண்டும்?

சில சிறுகதைகளில் நேர்மையாக நடந்து கொள்ள விரும்பும் அரசு குமாஸ்தாவாக ஒரு பாத்திரம் வருகிறது. எம்.ஜி. சுரேஷ் தன்னையேதான் இந்தப் பாத்திரங்களில் சித்தரிக்கிறார் என்று யூகிக்கிறேன். அது மட்டுமே நம்பகத்தன்மையால் எனக்கு பரவாயில்லை என்ற சித்தரிப்பாக இருந்தது.

எம்.ஜி. சுரேஷ் இலக்கியம் படைக்கத்தான் முயன்றிருக்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு சட்டகத்திற்குள் எழுத முற்படுவது இலக்கியம் ஆவதே இல்லை. இந்த சிறுகதைகளை மட்டும் வைத்துப் பார்த்தால் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு என்ற அளவுக்குக் கூட தேறமாட்டார்.

சில சமயங்களில் நான் பரிந்துரைக்கு பதிலாக தவிர்த்துரை எழுதுவது உண்டுதான். ஆனால் இது தவிர்த்துவிடுங்கள் என்று சொல்வதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல.

பின்நவீனத்துவப் படைப்பு என்றால் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? பின்நவீனத்துவத்தை உண்மையாக பிரதிபலிக்கும் நல்ல படைப்புகள் தமிழில் இருக்கின்றனவா? இதைப் படி, பின்நவீனத்துவம் என்றால் புரிந்துவிடும் என்று நீங்கள் பரிந்துரைக்கும் புனைவு ஏதாவது உண்டா? ஆங்கிலத்திலாவது எதையாவது பரிந்தரைப்பீர்களா? எனக்கு இலக்கியக் கோட்பாட்டு புத்தகம் எதையும் பரிந்துரைக்காதீர்கள், படிக்க மாட்டேன். 😉 புனைவு – சிறுகதையாக இருந்தால் இன்னும் உத்தமம் – பரிந்துரைகள் மட்டுமே வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
அவந்திகா தொகுப்பிலிருந்து ஒரு சிறுகதை

எம்.ஜி. சுரேஷ் எதற்காக எழுதுகிறேன் என்று விளக்குகிறார்
எம்.ஜி. சுரேஷ் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று விளக்குகிறார்
எம்.ஜி. சுரேஷ் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று இன்னும் டிடெய்லாக விளக்குகிறார்
எம்.ஜி.சுரேஷின் பேட்டி
எம்.ஜி.சுரேஷின் இன்னொரு பேட்டி
எம்.ஜி. சுரேஷ் தன் பின்புலத்தைப் பற்றி

BBC – 100 Stories That Shaped the World

பொதுவாக இந்த மாதிரி பட்டியல்களில் – அதுவும் இத்தனை பெரிய பட்டியலில் பாதி தேர்வுகள் நமக்கும் சரியாகப் பட்டால் அதிகம். அதுவும் பிபிசி, நியூ யார்க் டைம்ஸ் என்று மேலை உலக நிறுவனங்களாக இருந்தால் அவற்றில் அனேகமாக மேலை உலகப் படைப்புகள்தான் இருக்கும். Tokenism ஆக சீனாவிலிருந்து, ஜப்பானிலிருந்து, இந்தியாவிலிருந்து சில படைப்புகளை பட்டியலில் சேர்த்துக் கொள்வார்கள். இதுவும் அப்படித்தான். அதிலும் தோபா டேக் சிங்கை எல்லாம் சேர்த்திருப்பது ரொம்பவே அதிகப்படி. (இத்தனைக்கும் எனக்குப் பிடித்த சிறுகதைதான், நானே மொழிபெயர்த்திருக்கிறேன்.) இருந்தாலும் இப்படி ஒரு பட்டியலைப் பார்த்தால் அதில் எத்தனை படித்திருக்கிறேன் என்று எண்ணாமல் கடக்க முடிந்ததில்லை. சும்மா ஜாலியாக படித்துப் பாருங்கள்!

பிபிசியின் பட்டியல் இங்கே. டாப் டென் மட்டும் கீழே வசதிக்காக.

  1. The Odyssey (8th Century BC) – Homer
  2. Uncle Tom’s Cabin (1852) – Harriet Beecher Stowe
  3. Frankenstein (1818) – Mary Shelley
  4. Nineteen Eighty-Four (1949) – George Orwell
  5. Things Fall Apart (1958) – Chinua Achebe
  6. One Thousand and One Nights (8th-18th Centuries)
  7. Don Quixote (1605-1615) – Miguel de Cervantes
  8. Hamlet (1603) – William Shakespeare
  9. One Hundred Years of Solitude (1967) – Gabriel García Márquez
  10. The Iliad (8th Century BC) – Homer

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

ஏன் எழுதுகிறேன்? – தி. ஜானகிராமன்

தி.ஜா. ஃபேஸ்புக் குழுவிலிருந்து:

ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகிறாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று சாப்பிடுகிறோம். சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகிறோம். சில பேர் சாப்பிடுவதற்காகவே சாப்பிடுகிறார்கள். ருசி, மணத்தைக் கூடப் பாராட்டாமல் சாப்பிடுகிறார்கள். நம் நாட்டு அரசியல் பிரமுகர் ஒருவர் அமெரிக்கத் தூதராலய விருந்து, உடனே கவர்னர் விருந்து, உடனே ராமநவமி உத்சவச் சாப்பாடு மூன்றையும் ஏழிலிருந்து எட்டு மணிக்குள் சாப்பிடுவார். இத்தனை காரணங்கள் எழுத்துக்கும் உண்டு – அதாவது நான் எழுதுகிறதற்கு.

பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் – இப்படி பல மாதிரியாக எழுதுகிறேன். சில சமயம் நாடகத் தயாரிப்பாளர் சொல்லுகிறார் – ஒரு பிரமிப்பு, ஒரு தினுசான தாக்குதல் ஏற்படுத்த வேண்டும்; பார்க்கிறவர்கள் மனதில் என்று- சரி என்று சொல்கிறேன். கடைசியில் பார்க்கும்பொழுது, இத்தனை காரணங்களும் அல்லாடி அலைந்து மூன்று கழிகளில் பிரிந்து விழுந்துவிடுகின்றன. எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் – இந்த மூன்று தினுசுதான் கடைசியாக உண்டு என்று தோன்றுகிறது. இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறாற் போல சில சமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமைதான். உண்மையில்லை.

எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப் பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் சொல்ல முடியும். விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப் போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன. கண்யநஷ்டம், பாபம் பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனச்சாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக் கண்கள், – இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி, அதாவது ஆனந்தம் – எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்குப் பணியாதவர்களைக் கண்டும் நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

பா. செயப்பிரகாசம்

பா. செயப்பிரகாசத்தின் பேரை அங்கே இங்கே கேட்டிருந்தாலும், அவருடைய அம்பலக்காரர் வீடு சிறுகதையை எங்கோ (விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுதி என்று நினைக்கிறேன்) படித்திருந்தாலும் சமீபத்தில் ஜெயமோகன் அவரைக் கழுவி ஊற்றியபோதுதான் அவரது பெயர் பிரக்ஞையில் ஏறியது. கையில் கிடைத்த ஒரு சிறுகதைத் தொகுப்பைப் – அக்னி மூலை – படித்துப் பார்த்தேன்.

இந்தக் கதைகளில் எனக்குப் பிடித்தவை ‘நிஜமான பாடல்கள்‘. ஏழை கொத்தாசாரி கோவில் வேலை கிடைக்கும், பிள்ளைகளுக்கு சோறு போடலாம் என்ற எதிர்பார்ப்பு தகரும்போது சாமி சிலையை உடைக்கிறான். இந்த மாதிரி ஒற்றை வரி சுருக்கங்களை வைத்து இந்தக் கதையை மதிப்பிட முடியாது, படித்துத்தான் பார்க்க வேண்டும். வளரும் நிறங்கள் சிறுகதையில் அந்தக் கால சண்டியரை இன்று அடையாளம் கண்டு கொள்ளும் தருணம் நன்றாக வந்திருந்தது. அக்னி மூலை, ஒரு ஜெருசலேம் போன்றவை பரவாயில்லை ரகம். அம்பலக்காரர் வீடு, தாலியில் பூச்சூடியவர்கள் இரண்டும் அவரது சிறுகதைகளில் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்படுகின்றன.

பா. செயப்பிரகாசம் ‘முற்போக்கு’ எழுத்தாளர் என்று நினைக்கிறேன். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய கதைகள்தான் மீண்டும் மீண்டும். ‘முற்போக்கு’ எழுத்து என்றல்ல, சட்டகத்தை வைத்து அதற்குள் எழுதப்படும் எழுத்து அனேகமாக இலக்கியம் ஆவதில்லை. பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பக்கங்கள்:

பா.செயப்பிரகாசத்தின் தாலியின் பூச்சூடியவர்கள் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் தடையம் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மகன் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் புத்தர் ஏன் நிர்வாணமாக ஓடினார் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மூளைக்காய்ச்சல் சிறுகதை

இரும்பு குதிரைகள் முன்னுரை

எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் பாலகுமாரனின் இரும்பு குதிரைகளுக்கு எழுதிய முன்னுரை. பாலகுமாரனுக்கு அஞ்சலியாக இதைப் பதிக்கலாம் என்று மீண்டும் படித்தபோது நான் படித்த இரும்பு குதிரைகள் புத்தகத்தைத்தான் இவரும் படித்தாரா, என்னவோ இத்தனை சிலாகிக்கிறாரே என்று தோன்றியது. 🙂 முன்னுரையை எழுத நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. கல்கியில் தொடர்கதையாக வந்தபோது நிறைய கவனம் பெற்றது என்று நினைவு, மாலனும் புல்லரித்துப் போயிருக்கிறார்.

பாலா, நினைவிருக்கிறதா உனக்கு?

உணக்கையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்த ஜூன் மாதம். நடுங்கி ஒடுங்குகிற குளிரோ, புழுங்க அடிக்கிற சூடோ இல்லாத இதம்.

நினைத்துக் கொண்டாற்போல கிளம்பி நீ தஞ்சாவூர் வந்தாய். திடுமென்று என் ஆஃபீஸில் பிரசன்னமானாய். அந்த க்ஷணமே ஆஃபீஸை உதறினோம். அடுத்த நிமிஷம் பஸ்ஸில் ஏறிப் புறப்பட்டோம்.

நிசப்தம் இசையாய் பெருகி நதியாய் ஓடுகிற திருவையாறு. ‘களுக் களுக்’ என்று பக்கத்தில் சுருள்கிற ஆற்றின் சிரிப்பிலும், பனித்துளியாய் பெய்கிற பலாப்பூவிலும், எங்கேயோ சோற்றுக்கு கரைகிற காகத்தின் குரலிலும் சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிற தியாகப் பிரம்மம்.

எத்தனை பெரிய உயிர்! சங்கீதத்திலும் தவத்தையும் உருக்கத்தையும் ஒன்றாய் இணைத்த மனுஷன். எளிமையும் இனிமையும் கலந்த வடிவம். சொல்கிற விஷயத்துக்கு ஏற்ற வடிவம். புரண்டு புரண்டு கற்ற கல்வி. உயிர் தொட்டுப் பெற்ற அனுபவம். மனம் குவித்துத் தேறிய சிந்தனை. அடிபட்டுத் துடித்த வலி எதுவுமில்லாது வெறும் பொழுதுபோக்காகவே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் மூடனுக்குக் கூட, நாம் கூட பாடிவிடலாம் என நம்பிக்கையும், பிரமிப்பும், சந்தோஷமும் தரும் உருவங்களைப் படைத்த கலைஞன்.

இவனை ராஜாக்கள் கும்பிட்டார்கள். வித்வான்கள் விற்றுப் பிழைத்தார்கள். வியாபாரிகள் கேட்டு இளைப்பாறினார்கள். ஜனங்கள் கேட்டு நெகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு தாசி அல்லவோ கோவில் கட்டினாள்!

தாசி மாதிரிதான் காவிரி புரள்கிறது. பூணூல் மாதிரி ஒடுங்கின காவிரியைப் பார்த்திருக்கிறோம். கணுக்காலைத் தொட்டு வணங்கிப் போன காவிரியைப் பார்த்திருக்கிறோம். பாலத்தின் முதுகின் மீது சீற்றத்துடன் துப்பிவிட்டு விரைகிற காவிரியைப் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அன்றைக்கு காவிரி புரள்கிறது. தாசி மாதிரி புரள்கிறது. காலை அகட்டி மல்லாந்து படுத்துக் கொண்டு வெட்கமில்லாமல் சிரிக்கிறது. மோகம் கொண்ட பொம்மனாட்டி காரணமின்றி பின்னலை முன் வீசி, பிரித்து கால் மாற்றிப் பின்னியது போல சந்தேகம் பேசுகிறது. புத்திசாலிப் பெண் போல வதைக்கிறது. தொடுவாயோ என்று சீண்டுகிறது. தொட்டால் மாட்டிக் கொண்டாய் என மிரட்டுகிறது.

நமக்குத் தாங்கவில்லை. இறங்கிவிட்டோம். உடுத்தின துணியை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு அவர் அகத்திலேயே துண்டு வாங்கிக் கொண்டு இறங்கிவிட்டோம்.

நெஞ்சு வரை இறங்கிவிட்டோம். காவிரிக்கு இணையாகத் துளைந்தோம். கையில் நீர் வாரி வான் நோக்கி இறைத்தோம். நாசித் துளையைப் பொத்தி தலை நனைத்து சிலும்பிச் சிலும்பி மூழ்கிக் களித்தோம். இடுப்புத் துண்டைக் காவிரி உருவிற்று. மனம் தளை அறுந்து காற்றில் மிதந்தது. நாம் கற்ற பாசுரங்களை இறைத்தோம். நெஞ்சில் இறங்கி ஊறின பாரதியைத் துப்பினோம். முறை வைத்து கவிதை கட்டி காற்றில் ஊதினோம். மனசு அடங்கவில்லை. தமிழின் புதிய ருசி புரிந்தது. வழக்கமான வார்த்தைகளுக்கு வேறு புதிய அர்த்தங்கள் துலங்கின.

அன்றைக்கு காவிரியின் சுழிகளை எனக்கு அடையாளம் காட்டினாய். அதன் நெளிவுசுளிவு பற்றி கற்றுக் கொடுத்தாய்.

காவிரியை விடப் பெரிய இன்னொரு நதியை அடையாளம் காட்டி சொல்லித் தந்தான் இன்னொருவன்.அதுவும் மோகம் கொண்டு அழைக்கிற நதிதான். இறங்கினால் ஆளைப் புரட்டி விடுகிற நதிதான். இந்த வண்டல் சேர்ந்துவிட்டால் பிறகு எதை முழுங்கினாலும் பசேல் என்று கிளைத்து எழுந்து நிற்கும். புத்தகப் படிப்பு, எழுத்து, கவிதை, இலக்கியம் என்று சின்னச் சின்னதாய் ஓடைகள் சேர்ந்து பெருகின வாழ்க்கை நதி அது.

படிப்பை முடித்துக் கொண்டு ஒரு வேலையை சம்பாதித்துக் கொண்டு சென்னை வந்த எனக்கு ஏற்பட்ட முதல் ஸ்னேகம் அவன்தான். அது அதிருஷ்டம்தான். அவன்தான் உன்னை எனக்குச் சொன்னான். என்னை உனக்குச் சொன்னான். சின்னப் பத்திரிகை, நல்ல சினிமா என்று ஒரு கதவைத் திறந்தான். புத்தகப் படிப்போடு நிறுத்திக் கொண்டுவிடவில்லை. வெறுமனே பேசிக் களைத்து ஓய்ந்துவிடவில்லை. தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல்கிறது என்ற பிரமையில் கிறங்கிப் போய் உட்கார்ந்துவிடவில்லை. கற்றதை எழுத்தில் வடித்துக் காண்பித்தான்.

சுறுசுறுவென்று, ஆனால் உறுத்தாத கூர்மையும் ஒளியும் கொண்ட எழுத்து அவனுடையது. அவன் குரலைப் போலவே அவன் எழுத்தும் உரத்து நான் பார்த்ததில்லை. ஆனால் சொல்வதைத் தீர்மானமாக, அழுத்தமாக, நயமாக சொல்கிற எழுத்தாய் அது இருக்கும். அரைப் பக்க சினிமா விமர்சனம் ஆனாலும் சரி, நாலு வரி கேள்வி பதிலானாலும் சரி, கவிதை, சிறுகதை, நாவல் என்று கனமான விஷயங்கள் ஆனாலும் சரி.

ஞாபகம் இருக்கிறதா? கணையாழி கடைசிப் பக்கத்தில் சுஜாதா ஒரு மானசீகத் தொகுப்பு வெளியிட்டார். கு.ப.ரா., லா.ச.ரா., புதுமைப்பித்தன் என்று பெரிய பெயர்களோடு தொடங்கிய பட்டியலில் நமது தலைமுறையில் இருந்தது அவன் பெயர் ஒன்றுதான். தி. ஜானகிராமன் நன்றாய் எழுதுகிற புதியவர்கள் பற்றிய தில்லி இலக்கிய உரையாடலில் ஸ்பான்டேனியஸாகச் சொல்லிய பெயர் அவனுடையதுதான்.

அவனை இன்று ஆஃபீஸ் தின்றுவிட்டது. லேடக்ஸ் பீப்பாய்களுக்கும் கணக்குப் புத்தகங்களுக்கும் ஆஃபீஸ் ஃபைல்களுக்கும் நடுவே அவனுடைய கவிதையும் இலக்கியமும் விழுந்துவிட்டன. அவன் அந்தப் பெரிய ஆஃபீஸின் இன்னொரு இயந்திரம் ஆகிப் போனான். அவனைக் கண்டு வியந்துபோய் இங்கே நீ அவனை நாவலாக்கி இருக்கிறாய். அவனை நாயகனாக்கி இருக்கிறாய்.

கவிதையும் இலக்கியமும் வாழ்க்கையும் ஒன்றாய் இருந்த காலங்கள் காணாமல் போய்விட்டன. வெகு வருடங்களுக்கு முன்னால், அம்மா அவளுக்கு வேண்டிய சாந்தை அவளே தயாரித்துக் கொண்டிருந்தாள். அதை வைப்பதற்கென்றே தனியாகப் பாத்திரங்கள் கூட இருந்தன. வெண்கலத்தில், வெள்ளியில். தேங்காய் சிரட்டையில் ஊற்றி வைத்த சாந்து முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும். மேலே பாத்திரம் ஜவ்வு கட்டி இருக்கிற அந்த சின்னச் சின்ன வட்டங்களில் ரேகை பார்த்தது மெத்தென்ற சுகமான அனுபவம். சின்ன வயதில் என் ரேகைகளின் அத்தனை அழகையும் பார்க்கக் கிடைத்த அந்தச் சிரட்டைகள்தான் எத்தனை விதம்! இனி மேல் அந்த சாந்துச் சிரட்டைகள் நமக்கு பார்க்கக் கூட கிடைக்காது.

இது பிளாஸ்டிக் குப்பிகள் யுகம். மாஸ் ப்ரொடக் ஷன் யுகம். நம்முடைய கையின் பதிவுகள் நமக்குக் கவிதைகளாய்க் கிடைத்துக் கொண்டிருந்த காலங்கள் தொலைந்து போய்விட்டன.

திருநெல்வேலிக்குப் போயிருக்கிறாயோ, பாலா? டிங்கர் வொர்க்ஸ், சா மில், ஸ்கூட்டர் வொர்க்‌ஷாப், லாரி கம்பெனி என்று வரிசையாய் பட்டறைகளாய் இருக்கும். சத்தமும் குப்பையும் குவிக்கிற பட்டறைகள். இரும்புத் துரு, வெட்டின தகடு, க்ரீஸ் எண்ணெய் என்று அழுக்கும் பிசுக்குமாய் குவிந்து கிடக்கிற பட்டறைகள். இத்தனை குப்பைக்கு அடுத்தாற்போல், சட்டென்று பெரிய பெரிய வயல்வெளிகள் விரிந்திருக்கும். இடைவெளி தெரியாமல் கிண்ணங்களாய் நெருக்கி அடித்து மண்டிக் கொண்டு நீரைப் போர்த்தி இருக்கிற ஒரு குளம் வரும். நெருக்கமான பச்சை நடுவில் குவளையா, அல்லியா இன்னதென்று தெரியாத நீலப் பூக்கள் பூத்திருக்கும். வெள்ளையாய் நாரையும் கொக்கும் குளத்தைச் சுற்றி வரும்.

இந்த ஊரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நம் தலைமுறை ஞாபகம் வரும். கடை, ஆஃபீஸ், ஃபாக்டரி என்று அலைந்துவிட்டு, அழுக்கும் பிசுக்குமாக வேலை செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி கவிதை எழுதும் காலம் நமக்குத்தான் வந்திருக்கிறது. ஸ்பானரை எடுத்து மிஷினை முடுக்குகிற கையில்தான் பேனாவையும் எடுத்து கதை, நாவல் எழுதுகிற காலம்.

இது முன்னேற்றமா? துரதிருஷ்டமா? இதை துக்கம் எனப் புரிந்து புலம்புவதா? சோகம் எனச் சுருண்டு கொள்வதா?

நம்முடைய இந்த நண்பன் சுப்ரமணிய ராஜு – இந்த நாவலின் விஸ்வநாதன் – தன்னுடைய அம்மா இறந்து போன இரண்டாம் நாள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தான். படிக்கிறவனை கதற் அடித்துவிடுகிற கடிதம் அது. தன் துக்கம் முழுக்கச் சொன்ன அந்தக் கடிதம் புலம்பவில்லை. ‘எனக்கு வாழ்க்கையின் அபத்தம், குரூரம், irony எல்லாம் புரிந்துவிட்ட மாதிரி இருக்கிறது மாலன். ஆனால் இது அல்ல சாஸ்வதம். எதுவுமே அல்ல.’

உன்னுடைய நாவலும் இதைத்தான் சொல்கிறது. வாழ்க்கை என்பது யுத்தம் எதிர்கொள் எனச் சொல்கிறாய். இந்த யுத்தத்தில் எந்த துக்கமும் வலியும் அபத்தமும் தோல்வியும் சாஸ்வதம் அல்ல. அழ வேண்டாம். புலம்ப வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். முதலில் இது இயல்பு, இயற்கை, சுபாவம் எனப் புரிந்து கொள் என்று உன் நாவல் மன்றாடுகிறது. இலக்கியத்துக்கும் உத்தியோகத்துக்கும் உள்ள முரண்பாட்டை மட்டும் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசாமல் மொத்த வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டு பேசுகிறது.

எடை போட்டு எழுபது ரூபாய்க்கு எடுத்த விரிசல் சக்கரத்தை இருநூறு ரூபாய்க்குத் தள்ளிவிடுவது அநியாயமா? வியாபாரமா? மூன்று லட்ச ரூபாய் சரக்கை கிணற்றில் இறக்கிவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஓடிப் போவது தற்காப்பா? நம்பிக்கை துரோகமா? லட்சக்கணக்கில் வியாபாரம் செய்தவன் ஒரு இரவில் நொடித்துப் போவது துரதிருஷ்டமா? கடவுள் சித்தமா? விபசாரம் செய்த பணத்தில் லாரி வாங்குவதும் விபத்துக்கு ஈடாய் வந்த பணத்தில் விபசாரம் செய்வதும் வயிற்றுப் பிழைப்பா? வக்கிரமா? பிரியத்தின் நிமித்தம் கொடுத்த பிரிவுபசாரப் பணத்தை கணக்கு பார்க்கிற, விமர்சனம் செய்கிற வாத்தியார் ஞானியா? மூர்க்கனா? உதவி செய்தவனை முட்டாள் எனச் சொல்லும் பெண் அகங்காரியா? கணவனின் கவிதையைப் பொறுத்துக் கொள்ளாத மனைவியும் மனைவியின் அவஸ்தையை புரிந்து கொள்ளாத கணவனும் குழந்தை பெற்றுக் கொள்வது காதலா? காமமா?

எல்லாமே இயற்கை. இயல்பு. சுபாவம். அதைப் புரிந்து கொள் முதலில் என்று உன் பாத்திரங்கள் சொல்கின்றன. சரி, இந்தப் புரிதல் இல்லை என்றால் என்ன கஷ்டம்?

புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை, இதன் இயல்பைப் புரிந்து கொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம்? இந்த கூரிய முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது, முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்தப் புரிதல் இல்லாமல் போனால் இருத்தலே இம்சையாகும். எதிலும் தெளிவின்றி எப்போதும் சுலபமின்றி இருக்கும் வாழ்க்கை நரகமாகிவிடாதா? தன்னையும் துன்புறுத்திக் கொண்டு உடன் வாழ்பவனையும் காயப்படுத்திக் கொண்டிருந்தால் ஒரு மொத்த சமூகமே நாசப்பட்டுப் போகாதா?

இந்தப் புரிதல் இல்லாமல்தான் நமது இளைஞர்கள் தலை கலைந்து போகிறார்கள். அன்னியமாதல் பற்றி பேசுகிறார்கள். எதிலும் நம்பிக்கையற்று சிதைகிறார்கள். எதிர்மறையாய் யோசிக்கிறார்கள். எளிதில் கலங்குகிறார்கள். கவிதை எழுதி இலக்கியம் பேசி ஊர் விட்டு ஊர் போய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இன்னொரு வகை இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த முதல் படி தாண்டியவர்கள். இந்த வாழ்க்கையின் முரண்பாடு பற்றி தெரிந்தவர்கள். இது இயல்பு என்று விளங்கியவர்கள்.

சரி புரிந்துவிட்டது. ஆனால் இந்த முரண்பாடுகளும் அநீதிகளும் வக்கிரங்களும் இப்படியே இருக்கத்தான் வேண்டுமா? இவற்றை என்ன செய்வது? ‘சும்மா இரு’ என்கிறாய். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ‘just be’ என்று சொன்ன தொனியில், பொருளில் சும்மா இருக்கச் சொல்கிறாய். காஞ்சிப் பெரியவர் ‘மௌனமாய் இருப்பது என்றால் பேசாமல் இருப்பது மட்டும்தானா?’ என்று கேட்ட அர்த்தத்தில் சொல்கிறாய்.

எனக்கு சும்மா இருப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதால் சாத்தியமில்லை. செயலற்று சும்மா இருப்பது முறைதானா என்று எனக்குள் கேள்விகள் இருக்கின்றன. இவை எல்லாம் இங்கே புறம்பான விஷயங்கள். வேறு ஒரு சமயம் பேசித் தெளிய வேண்டிய கேள்விகள். என்னைத் துலக்க இன்னொரு நாவல் எழுது.

இந்த நாவலை அற்புதமாக எழுதி இருக்கிறாய். ஒவ்வொரு வரியும் இழைத்து இழைத்துப் பூட்டின மணியாக விழுந்திருக்கிறது. மெருகு பொலிய எழுதுவது சாதாரண விஷயம் இல்லை. இதற்கு பக்கம் பக்கமாக நான் உதாரணம் காட்ட முடியும். வேண்டாம். தன் ரசனையை மெய்ப்பிப்பதற்காக கம்பனை அக்கக்காகப் பிரித்த தமிழ் வாத்தியார் ஞாபகம் வருகிறது. சுயமாக ஒன்றினை அறிதலும் புரிந்து கொள்ளலும் ரசிக்கக் கற்றலும் மகா பாக்கியம். உன் வாசகர்கள் ரசனைக்கு நடுவே நான் குருவியாகப் பறக்க வேண்டாம். உன் எழுத்துக்கள் மறுபடி மறுபடி எனக்கு ஒன்றை நிச்சயிக்கின்றன. ‘உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கில் ஒளி உண்டாகும்’.

எத்தனை காலமாக உன் உரைநடையை நான் அறிவேன்! எதிரே உட்கார்ந்து பேசுகிற பேச்சாகப் பெருகுகிற நடை அது. உன்னைப் போல கம்பீரம் கொண்ட நடை. உன் கவிதைகளை நான் காதலிக்கிறேன். யாப்புதான் கவிதை என்கிற மௌடீகத்தையும் வார்த்தைகள்தான் கவிதை என்கிற ரொமான்டிசிஸத்தையும் தாண்டிய சரியான கவிதைகள். தி. ஜானகிராமன் சொல்கிற மாதிரி சரியான் ஆண்பிள்ளை அல்லது பெண்பிள்ளைக் கவிதைகள். இந்த நாவலை கவிதையும் உரைநடையுமாக ஊடும் பாவுமாக நெய்திருக்கிறாய். ஆணும் பெண்ணும் புணர்தல் போல சரியான முறையில், சரியான இடத்தில், சரியான அளவில் கவிதையும் உரைநடையும் கலந்திருக்கின்றன. முறையும் இடமும் அளவும் தவறினால் விகாரமாகும். மிகுந்தால் ஆபாசமாகும். குறைந்தால் நோய் காணும். தாம்பரத்தில் ஏறி கிண்டியில் இறங்குவதற்குள் இந்த வார அத்தியாயத்தைப் படித்து முடித்து ஜீரணமும் செய்து கொள்ள வாசகன் ஆசைப்படுகிற காலம் இது. இதில் கவிதையிலேயே ஒரு அத்தியாயம் எழுதி இருக்கிறாய். என்ன அதிசயம் இது!

ஒரு முறை ஒரு நண்பனைப் பார்க்க அரசூர் சென்றிருந்தேன். மெயின் ரோட்டில் இறங்கி கிளைச் சாலையில் நடக்க வேண்டும். மையிருட்டு. ஆங்காங்கே ஒன்றிரண்டு மின்மினி. தூரத்தில் ‘களக் களக்’ என்று சுண்ணாம்புக் காளவாய். நடக்கத் தயங்கி நின்றிருந்தபோது டயரைக் கொளுத்தி கையில் பிடித்தபடி எதிரே ஒருவன். நின்று நிதானித்து எரிகிற ரப்பர் சுடர். லேசில் அணையாத ஜோதி.

இன்றைக்கு சூழ்ந்திருக்கிற இருளுக்கு நடுவில் மொய்க்கின்ற மின்மினிகளுக்கு நடுவில் பயம் காட்டுகிற காளவாய்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வழி காட்டுகிற சுடராகப் பொலிகிறது உன் நாவல். இருட்டு மண்டுகிறபோது வெளிச்சம் காட்டுவது முக்கியம். இதற்கு நெய்ப்பந்தம்தான் சிலாக்கியம் என்று மரபு பேசுவது காலவிரயம். எல்லா ரோடுகளுக்கும் எலக்ட்ரிக் பல்ப் என்பது மிகுந்த யோக்கியமான சிந்தனை என்றாலும் உடனடியாகச் சாத்தியமாகாத காரியம். குழம்பிச் சோர்ந்துவிடாமல் குதர்க்கம் பேசிச் சிரிக்காமல் ஒரு சுடரை ஏற்றி இருக்கிறாய். உனக்குள்ளே ஆகுதி சொரிந்த காலங்காலமாய் வளர்ந்த யாகத் தீயில் ஏற்றிய சுடர்.

இதற்காக ஒரு தலைமுறை உனக்குக் கடன்பட்டிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்