தி.ஜா. ஃபேஸ்புக் குழுவிலிருந்து:
ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகிறாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று சாப்பிடுகிறோம். சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகிறோம். சில பேர் சாப்பிடுவதற்காகவே சாப்பிடுகிறார்கள். ருசி, மணத்தைக் கூடப் பாராட்டாமல் சாப்பிடுகிறார்கள். நம் நாட்டு அரசியல் பிரமுகர் ஒருவர் அமெரிக்கத் தூதராலய விருந்து, உடனே கவர்னர் விருந்து, உடனே ராமநவமி உத்சவச் சாப்பாடு மூன்றையும் ஏழிலிருந்து எட்டு மணிக்குள் சாப்பிடுவார். இத்தனை காரணங்கள் எழுத்துக்கும் உண்டு – அதாவது நான் எழுதுகிறதற்கு.
பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் – இப்படி பல மாதிரியாக எழுதுகிறேன். சில சமயம் நாடகத் தயாரிப்பாளர் சொல்லுகிறார் – ஒரு பிரமிப்பு, ஒரு தினுசான தாக்குதல் ஏற்படுத்த வேண்டும்; பார்க்கிறவர்கள் மனதில் என்று- சரி என்று சொல்கிறேன். கடைசியில் பார்க்கும்பொழுது, இத்தனை காரணங்களும் அல்லாடி அலைந்து மூன்று கழிகளில் பிரிந்து விழுந்துவிடுகின்றன. எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் – இந்த மூன்று தினுசுதான் கடைசியாக உண்டு என்று தோன்றுகிறது. இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறாற் போல சில சமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமைதான். உண்மையில்லை.
எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப் பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் சொல்ல முடியும். விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப் போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன. கண்யநஷ்டம், பாபம் பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனச்சாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக் கண்கள், – இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி, அதாவது ஆனந்தம் – எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்குப் பணியாதவர்களைக் கண்டும் நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்
One thought on “ஏன் எழுதுகிறேன்? – தி. ஜானகிராமன்”