அரதப்பழசு திரைப்படம் – அசூத் கன்யா (1936)
நான் ஹிந்திப் படங்களைப் பார்க்க ஆரம்பித்ததே என் பதின்ம வயதுகள் முடிந்த பிறகுதான். அப்போதே அசூத் கன்யா திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அதன் பின்கதை அத்தனை சுவாரசியமாக இருந்தது.
அஷோக் குமார் நடித்த முதல் திரைப்படம். அவருக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய கதை. அசூத் கன்யா திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருந்த தேவிகா ராணி – தயாரிப்பாளர் ஹிமான்ஷு ராயின் மனைவி – கணவனை கழற்றிவிட்டுவிட்டு ஹீரோவோடு ஓடிப் போய்விட்டார். தேவிகா ராணி அன்று ஒரு பிரபல நட்சத்திரம். ஹிமான்ஷு ராய் நல்ல பிசினஸ்மான் போலிருக்கிறது. நீ என்னை விட்டு இன்னொருவனுடன் போனால் என்ன, பிரபல நட்சத்திரமான நீதான் படத்தின் நாயகி, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால் ஹீரோவை கைகழுவிவிட்டு அஷோக் குமாரை ஹீரோவாகப் போட்டிருக்கிறார்.
இசை அமைத்த சரஸ்வதி தேவி – நிஜப் பெயர் குர்ஷித் மினோசர்-ஹோம்ஜி – பார்சி மதத்தவர். ஹிமான்ஷு ராய் அவர் பாடியதை ரேடியோவில் கேட்டுவிட்டு அவரைத் தேடிப் போய் இசை அமைக்க அழைத்திருக்கிறார். அன்றைய பார்சி சமூகம் பம்பாயில் பெரும் தாக்கம் உடையது. நம்ம மதத்துப் பெண் டாக்கிகளிலா என்று ஆட்சேபித்திருக்கிறார்கள். சென்சார் போர்டிலும் சில பார்சிகள் இருந்திருக்கிறார்கள். ஏதாவது பிர்ச்சினை வந்துவிடப் போகிறது என்று பெயரை சரஸ்வதி தேவி என்று மாற்றிக் கொண்டு இசை அமைத்திருக்கிறார். இந்தியாவின் முதல் பெண் இசை அமைப்பாளர் இவர்தானாம்.
படம் பெரும் வெற்றி. இன்றும் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நினைவு கூரப்படுகிறது.
பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்தான், ஆனால் பார்க்கும் தைரியம் இல்லை. நான் பழைய படங்களைப் பார்ப்பதே அனேகமாக பாட்டுக்களுக்காகத்தான். ஆனால் முப்பதுகளில் வந்த கே.எல். சைகல் வகைப் பாடல்கள் என்னைக் கவர்வதில்லை. ஊமைப்படங்களின் காலம் முடிந்து டாக்கிகள் – அதாவது பேசும் படங்கள் – வந்த ஐந்தாறு வருஷத்திற்குள் வந்த படம். வழக்கமான கதையோடு சுவாரசியமே இல்லாத திரைப்படமாக இருக்கும் என்ற பயம். படத்தின் ஸ்டில்களில் அஷோக் குமார் அச்சு அசல் பெண் மாதிரியே இருப்பார். மனத்தை திடப்படுத்திக் கொண்டு சமீபத்தில்தான் பார்த்தேன். யூட்யூபில் கிடைக்கிறது.
என்னைப் பொறுத்த வரையில் படத்தின் நாயகி இசை அமைப்பாளர் சரஸ்வதி தேவிதான். வேறு எதையும் கேட்கவில்லை என்றாலும் கேத் கி மூலி பாட்டைக் கேளுங்கள். அஷோக் குமாரும் தேவிகா ராணியும் சொந்தக் குரலில் பாடி இருக்கிறார்கள். சின்னப் பாட்டு, ஒன்றரை நிமிஷம் இருந்தால் அதிகம்.
எனக்கு மிகவும் பிடித்திருந்த இன்னொரு பாட்டு கித் கயே ஹோ கேவன்ஹார். (கேவன்ஹார் என்ற வார்த்தையை நான் இதற்கு முன்னால் கேள்விப்பட்டதில்லை, அதற்கு கோனார் நோட்ஸ் கொடுத்த எழுத்தாளர் அம்பைக்கு நன்றி!) சரஸ்வதி தேவியே பாடி இருக்கிறார். Haunting melody and song, ஆனால் slow tempo உள்ள இந்தப் பாட்டு அனைவரையும் கவரும் என்று எனக்கு தோன்றவில்லை.
அனேகப் பாட்டுகளை ரசித்தேன். சூடி மே லாயா அன்மோல் ரே என்ற பாட்டை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றைய லாவணி நாடகம் போல படமாக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பாட்டுக்கு ஆடுபவர் பின்னாளில் பிரபலமான நகைச்சுவை நடிகரான மெஹ்மூதின் அப்பாவாம்!
திரைக்கதையில் எத்தனை தூரம் நம்பகத்தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை. படம் வெளிவந்த 1936-இன் கிராமங்களைப் பற்றியே எனக்கு எதுவும் தெரியாது. கதையின் களமோ அன்றைக்கு இருபது முப்பது வருஷங்களுக்கு முற்பட்டது. அதாவது 1900-1910 காலகட்டத்து கிராமத்தில் நடக்கும் கதையாம். தீண்டத் தகாதவர்களுக்கு ரயில்வேயில் சுலபமாக வேலை கிடைத்தது என்று காட்டுகிறார்கள்.
நாயகன் அஷோக் குமார் பிராமண ஜாதி. நாயகி தேவிகா ராணி தீண்டத் தகாத ஜாதி. ஆனால் நாயகனின் அப்பாவும் நாயகியும் அப்பாவும் நண்பர்கள். (அதற்கும் ஒரு பின்கதையாக அஷோக் குமாரின் அப்பாவை தேவிகா ராணியின் அப்பா பாம்பு கடியிலிருந்து காப்பாற்றுகிறார்). சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த அஷோக் குமாருக்கும் தேவிகா ராணிக்கும் ஈர்ப்பு இருக்கிறது, ஆனால் நடக்காத காரியம் என்றும் தெரிகிறது. இருவருக்கும் வேறு யாரோடோ திருமணம் ஆகிறது. ஏதோ சதியால் நாயகியின் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு அஷோக் குமாரைத் தாக்க முற்பட தேவிகா ராணி தன் உயிரைக் கொடுத்து இருவரையும் காக்கிறாள். அஷோக் குமார் அவளுக்கு ஒரு சிலை வடித்து அங்கேயே தன் காலத்தைக் கழிக்கிறார்.
நான் பயப்பட்ட அளவுக்கு கதையோ, அது படமாக்கப்பட்ட விதமோ ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. என் கண்ணோட்டத்தில் எண்பதுகளில் வந்த அலைகள் ஓய்வதில்லை மாதிரி திரைப்படங்களை விட இதன் திரைக்கதை எத்தனையோ பரவாயில்லை. அஷோக் குமார் தன் இயல்பான நடிப்புக்காக புகழ் பெற்றவர், ஆரம்பக் காட்சிகளில் மிகைநடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இயல்பான நடிப்பும் பின்னால் வெளிப்படுகிறது. தேவிகா ராணி நன்றாகவே நடித்திருந்தார். மற்றவர்களும் சொதப்பவில்லை. ஆனால் மெதுவாக இழுத்து இழுத்து வசனம் பேசுவது எனக்குப் பழக கொஞ்சம் நேரம் ஆயிற்று.
இது பழைய படங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். ஆனால் நான் குறிப்பிட்ட பாட்டுகளையாவது பாருங்கள்/கேளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். பிடித்திருந்தால் பிற பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
Trackbacks & Pingbacks