பொருளடக்கத்திற்கு தாவுக

வண்ணதாசனின் ‘சமவெளி’

by மேல் ஜூலை 27, 2018

வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். சாஹித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர். 2016-க்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிஞராகவும் புகழ் பெற்றவர். பிரபல விமர்சகர் தி.க. சிவசங்கரனின் மகன். சொல்லப் போனால் இந்தக் காலத்தில் தி.க.சி.யைத்தான் வண்ணதாசனின் அப்பா என்று குறிப்பிட வேண்டும்.

அவருக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது அவரது சிறுகதைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். என் வாழ்வோ சாண் ஏறினால் முழம் சறுக்கல் என்றுதான் சில வருஷங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது. எதையும் நினைத்த உடனே செய்தாக வேண்டும் இல்லை என்றால் நடப்பதே இல்லை. ஏதோ இப்போதாவது முடிந்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.

சமவெளி சிறுகதைத் தொகுப்பு 1983-இல் விஜயா பதிப்பகம் வேலாயுதத்தால் முதல் முறை வெளியிடப்பட்டிருக்கிறது. நான் படித்தது சந்தியா பதிப்பகம் 2011-இல் வெளியிட்ட பதிப்பு. விஜயா வேலாயுதத்தைப் பற்றி வண்ணதாசன் முகவுரையில் எழுதி இருப்பதைப் படித்தபோது அந்தப் பதிப்பு கிடைக்காதா என்று இருந்தது. வண்ணதாசன் effect-ஏதானோ, படிக்கும் என் மனமும் நெகிழ்கிறதோ என்றும் தோன்றியது.

வண்ணதாசனின் எழுத்தை நான் ஒரே வார்த்தையில் கனிவு என்றுதான் சுருக்குவேன். அவரது கதைகளில் – அனேகமாக எல்லாக் கதைகளிலுமே – கனிவும் நெகிழ்ச்சியும் அன்பும் ஒருவரை ஒருவர் எல்லா குறை நிறைகளோடும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும்தான் வேறு வேறு கோணங்களில் காட்டப்படுகின்றன. சில சமயம் இது பக்குவம் இல்லை, கையாலாகாத்தனத்தை பூசி மெழுகும் முயற்சி என்று கூடத் தோன்றுகிறது. அவரது கதைகளில் ரஜோகுணம் நிறைந்த மனிதர்கள் அபூர்வமாகவே தென்படுகிறார்கள். விசையும் பலமும் ஆக்ரோஷமும் கோபமும் இழிகுணங்களும் காணப்படுவதே இல்லை. ஆனாலும் அந்தக் கதைகள் தன்னளவில் முழுமையாகவே இருக்கின்றன. அதுவே அவரது பலம்.

வண்ணதாசனை பலரும் திருநெல்வேலி எழுத்தாளர் என்று சுருக்கிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் அவர் மனிதர்களை திருநெல்வேலி பின்புலத்தில் சித்தரித்திருக்கிறார், அவ்வளவுதான். அவரது கதைகளில் தாமிரபரணிக்கு பதிலாக தேம்ஸ் நதி ஓடினால் ஒரு வித்தியாசமும் இருக்காது. அவரது எல்லைகள் மனிதர்களின் குணங்களைப் பொறுத்த வரை குறுகியவையே. ஆனால் புவியியல் ரீதியாக திருநெல்வேலி என்று வருவது தற்செயலே, அது ஒரு விஷயமே இல்லை.

வண்ணதாசனின் கதைகளில் மாபெரும் வரலாற்று தரிசனங்களோ தத்துவ விசாரங்களோ மனிதர்களை தோலுரித்துக் காட்டிவிடுவதோ இல்லைதான். ஆனால் அதெல்லாம் எனக்கு ஒரு குறை அல்ல, அவர் என்ன எழுத முனைந்தாரோ, அதை மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

வண்ணதாசனின் சிறுகதைகளைப் பற்றி எழுத உட்கார்ந்தபோது அவரது சிறுகதைகளை விவரிப்பது மகா கஷ்டம் என்பதை உணர்ந்தேன். அன்பையும் கனிவையும் பற்றி திருப்பி திருப்பி என்ன எழுத? உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்!

வண்ணதாசனை இத்தனை ரசித்தாலும் பாராட்டினாலும் அவர் எனக்கான எழுத்தாளர் இல்லை. எல்லாரும் ரொம்ப நல்லவராக இருந்துவிட்டால் எனக்கு அது ஒட்டுவதில்லை. கர்ணனும் பீமனும் கிருஷ்ணனும் துரியோதனனுமே எனக்கு மகாபாரதத்தை மாபெரும் காவியமாக்குகிறார்கள், ரொம்ப நல்லவனான யுதிஷ்டிரன் அல்ல. Of course, இது வண்ணதாசனின் குறை அல்ல. என் வாசிப்பின் குறையேதான்.

சமவெளி சிறுகதைத் தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் மிகச் சிறப்பானதாக நான் கருதுவது ‘நிலை‘. கதை முக்கியமே இல்லை, அதில் வெளிப்படுத்தும் உணர்வு மட்டுமே முக்கியம். நான் விவரிக்கப் போவதில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த இன்னொரு சிறுகதையான சமவெளி இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. என் கண்ணில் சமவெளி சிறப்பான கதை அல்லதான். இந்தச் சிறுகதையைப் படித்தபோது அட இதை நான் கூட எழுதுவேனே என்று தோன்றியது. என்னாலேயே ஒரு சிறுகதையை எழுத முடியும் என்று தோன்றினால் அதை நான் சிறப்பானதாகக் கருதுவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அதை ஏன் ஜெயமோகன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

மற்ற சிறுகதைகளில் எனக்குப் பிடித்தவை சில பழைய பாடல்கள், விசாலம், வருகை. சில பழைய பாடல்கள், வருகை போன்ற சிறுகதைகளை எல்லாம் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் என்னால் ஒரு நாளும் எழுத முடியாது. சிறுகதை எழுதுவதை விடுங்கள், கதைச் சுருக்கம் கூட எழுத முடியவில்லை. இதை எல்லாம் எழுத ஒரு மாஸ்டரால்தான் முடியும். இது வரை படித்ததில்லை என்றால் நேரடியாக படித்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

வருகை சிறுகதையில் இரண்டு தோழிகள் சந்திக்கிறார்கள். அப்புறம் என்ன? அன்புதான்!

விசாலம் அவரது ட்ரேட்மார்க் சிறுகதை. விரும்பிய மாமாவின் பெண்ணோடு திருமணம் நடக்கவில்லை. மாமாவின் குடும்பம் நொடித்துப் போய் அந்தப் பெண்ணுக்கு திருமணமே நடக்கவில்லை. அதனால் ஒருவருக்கொருவர் அன்பு விட்டுபோய்விடுமா என்ன? – அதுவும் வண்ணதாசனின் உலகத்தில்?

தாகமாய் இருக்கிறவர்கள் சிறுகதையும் விசாலத்தின் இன்னொரு வடிவம்தான். ஆனால் சில வலுவான பாத்திரங்களை வைத்து தாளிப்பு வேலை செய்திருக்கிறார்.

அவருக்கு வரும் போகும் சிறுகதை பிடித்தமான ஒன்று என்று தோன்றியது. அவருக்கு கொஞ்சம் நீளமான சிறுகதை. கணவன்-மனைவிக்குள் சிறு மனஸ்தாபம் என்று சுருக்குகிறேன்.

உதிரி இன்னொரு நல்ல சிறுகதை. இறந்தவர் மேல் நெகிழ்ச்சி என்று சுருக்கலாம்.

கூறல் இன்னொரு நல்ல சிறுகதை. ஆனால் விவரிப்பது மகா கஷ்டம். படித்துக் கொள்ளுங்கள்!

பளு சுமாரான சிறுகதைதான். வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர் மணம் முறிந்த பெண்ண மணக்கிறேன், வேலை கிடைக்குமா என்று பார்க்கிறார். வெளியேற்றம், பூனைகள் சிறுகதைகளும் என் பார்வையில் சுமார்தான்.

இந்தப் பதிவை எழுதுவதற்கு முன்னால் அவரது தளத்தில் சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். என் பதிவு ஒன்றை அங்கே எடுத்துப் போட்டிருப்பதைக் கண்டு அப்படியே ஷாக்காயிட்டேன். என்னை எல்லாம் ஒரு பொருட்டாக நினைத்தார் (நினைத்தது அவரா அல்லது சுல்தானா என்று நிச்சயமாகத் தெரியாது) என்றால் அது அவர் கதைகளில் நிரம்பி இருக்கும் கனிவின் இன்னொரு வெளிப்பாடுதான்.

ஜெயமோகனின் seminal சிறுகதைத் தேர்வுகளில் வண்ணதாசனின் ஆறு சிறுகதைகள் இடம் பெறுகின்றன.

 1. தனுமை
 2. நிலை
 3. சமவெளி
 4. தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
 5. போய்க்கொண்டிருப்பவள்
 6. வடிகால்

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணதாசன் பக்கம்

From → Vannadasan

2 பின்னூட்டங்கள்
 1. வண்ணதாசனிடம் அந்த பூமியும் மனிதர்களும் நிரவிக் கிடக்கின்றனர். அவர் எழுதுவதை வாசித்து, அதைத் திருப்பி யாரிடமாவது சொல்லப்போனால், இவ்வளவுதானா என்று தோன்றுகிறது.

  பச்சைப்பிள்ளைகிட்ட என்னை எப்படி நீ பூச்சாண்டின்னு சொல்லப்போச்சு? நாளையும் பின்னேயும் நான், ‘வாம்மா’ன்னு கூப்பிட்டா அது வரவேண்டாமா? உனக்கு முறை சொல்லத் தெரியுமா? போய்ச் சேர்ந்துட்டாளே மகராசி, உன் மாமியா, அவளை நான் அக்கான்னுதான் கூப்பிடுவேன். அவ எனக்கு அக்கான்னா, ஒம் பிள்ளைக்கு நான் யாரு? தாத்தா முறை தெரிஞ்சுக்க. வேணுமின்னா பூத்தாத்தான்னு சொல்லிக்குடு. அஹ, பூத்தாத்தா. அதுவும் நல்லாத்தான் இருக்கு!

  -சுடலை, உதிரி சிறுகதையில் (சமவெளி தொகுப்பு)

  இது மாதிரி கதைகளில் மனம் இளைப்பாறிக் கொள்வதைப் போலவும், சிறிய வயதில் இதனை ஒத்த மனிதர்களை நினைவு படுத்தி அசை போடவும் பிடிக்கிறது.

  பார்க்கும் இடம் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி ரொம்பவே சிலாகித்துக் கொள்கிறார். சிலிர்த்துக் கொள்கிறார். சமீபத்தில் ‘ஒளியிலே தெரிவது’ தொகுப்பு வாசித்தேன். ஆட்டுக்குட்டி சுவற்றில் கால் வைத்து எக்கி பூவரசங்கொம்பைக் கடிப்பதை அவர் பார்ப்பதை நாம் பார்த்தால், அந்த ஆட்டுக்குட்டிக்கு வயித்துக்கு ஏதும் ஆகாமல் போயிருமோ என்று பதைக்க வேண்டி இருக்கிறது!!

  Like

Trackbacks & Pingbacks

 1. சமவெளி | வண்ணதாசன் – கடைசி பெஞ்ச்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: