“அம்மா வந்தாள்” – கட்டுடைக்கப்பட்ட பிம்பம்

நான் எழுபது-எண்பதுகளின் சிறுவன். அப்போதெல்லாம் எனக்கு தாய் என்றால் கல்லானாலும் கணவன், குழந்தைகளே உலகம் என்று வாழும் பெண் மட்டுமே. அந்த பிம்பத்தின் பிரதிநிதி ஏறக்குறைய பெரிய பொட்டுடன் குண்டாக அசட்டு சிரிப்போடு வலம் வரும் கே.ஆர். விஜயாதான். பெண் சுதந்திரம் என்றெல்லாம் படித்தாலும் அதெல்லாம் தியரிதான், அம்மாக்களுக்கு வேறு உலகம் இருக்க முடியும் என்று தோன்றியது கூட இல்லை.

பதினைந்து வயது வாக்கில்தான் அந்த பிம்பம் முதல் முறையாக விரிசல் கண்டது. ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது அம்மா தனது பள்ளி அனுபவம் ஒன்றை சொன்னாள். வத்ராயிருப்பில் பள்ளி சென்று திரும்பும்போது யாரோ ஒருவன் “அட பாருடா இந்த பொண்ணை! எவ்ளோ அழகா இருக்கு” என்று சொல்ல என் அம்மா பயந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்து விட்டாளாம். அது வரையில் எனக்கு அம்மா என்றால் என் தேவைகளை பூர்த்தி செய்யும் மெஷின் + கண் கண்ட தெய்வமாக வணங்கப்பட வேண்டிய தெய்வப் பிறவி என்ற புரிதல்தான். ஏறக்குறைய வேலைக்காரியாக பணி ஆற்ற வேண்டிய மெஷின் – தெய்வம் இரண்டு கருத்தாங்களுக்கும் உள்ள முரண்பாடு கூட புரிந்ததில்லை. அந்த வயதில் நான் சைட் அடிக்க போவது போல் என் அம்மாவையும் யாரோ அவளுடைய சின்ன வயதில் சைட் அடித்திருக்கலாம் என்பது மண்டையில் ணங்கென்று விழுந்த அடி. பழைய தமிழ் படங்களில் வருவது போல் ஹை வால்யூமில் எரிமலைகள் கொதித்து, கடல் அலைகள் ஆக்ரோஷமாக கரையில் மோதிய தருணம். அந்த அனுபவத்தைத்தான் பல வருஷங்கள் கழித்து அம்மாவுக்கு புரியாது என்ற சிறுகதையாக எழுதினேன்.

அதற்கப்புறம் மெதுமெதுவாக அந்த பிம்பம் கரைந்துவிட்டது. என் அம்மா பல பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிந்தும் பதவி உயர்வை ஏற்றுக் கொண்டு அப்பாவையும் பிள்ளைகளையும் கூடுவாஞ்சேரியில் விட்டுவிட்டு ஒரு வருஷம் கடலூரில் வேலை பார்த்தது (அப்பாவின் முழு சம்மதத்தோடுதான், பிள்ளைகள்தான் எதிர்த்தோம்), பொன்னகரம் சிறுகதை, அம்மா வந்தாள் படித்தது, பரோமா திரைப்படம், அம்பையின் சிறுகதைகள் – குறிப்பாக இந்தக் கை இது வரை எத்தனை தோசை வார்த்திருக்கும் என்ற வரி – என்று பல அடிகள் விழுந்ததில் அந்த பிம்பம் முழுதாக உடைந்தே போனது.

thi_janakiramanஅம்மா வந்தாளை நான் முதல் முறை படித்தபோது பதின்ம் வயதைக் கடக்கவில்லை என்றுதான் நினைவு. என் அம்மாவின் பரிந்துரைதான் என்று நினைக்கிறேன். ஹை வால்யூமில் கடல் அலைகள் மோதவில்லை என்றாலும் அதிர்ச்சி ஏற்படத்தான் செய்தது. படித்தபோதும் சரி, பின்னாளில் திரும்பிப் படித்தபோதும் சரி, மோகமுள்ளை விடவும் இது எனக்கு ஒரு மாற்று அதிகம்தான். நான் படித்த தி.ஜா. நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

தி.ஜா. தனது நாவல்களில் அரைத்த மாவையே அரைக்கிறார் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இன்று இல்லாத, இசைப் பிரக்ஞை கூடிய தஞ்சாவூர் விவசாயக் கிராம சூழல், ஏதாவது ‘தகாத உறவு’, அனேகமாக பிராமணக் குடும்பங்கள் இல்லாமல் இவரால் எழுதவே முடியாதா என்று தோன்றியதுண்டு. அம்மா வந்தாளின் அலங்காரத்தம்மாளின் சாயல் மரப்பசுவின் அம்மிணியில் கூட உண்டு, ஏன் செம்பருத்தியின் பெரிய அண்ணியில் கூட உண்டு. இந்து செம்பருத்தியின் குஞ்சம்மாளேதான். இந்துவுக்கு அப்பு மேல் இருக்கும் காதல் – காதல் என்றால் போதவில்லை, obsession – பாபுவுக்கு யமுனா மேல் உள்ள அதே obsession-தான்.

இந்த நாவலுக்கு கதைச் சுருக்கம் எல்லாம் எழுதுவதில் பயனில்லை. படிக்காதவர்கள் படியுங்கள்!

amma_vandhal17-18 வயதில் படித்தபோது நுட்பமான சித்தரிப்பு என்று பல இடங்களில் தோன்றியது. தனியாக இருக்கும் இந்துவைத் தவிர்க்கத்தான் அப்பு காவிரிக் கரையில் பொழுதைப் போக்குகிறான், ஆழ்மனதில் அவனுக்கும் இந்துவிடம் ஈர்ப்பு உண்டு, இந்து தன்னை விரும்புவதும் அவனுக்கு தெரியும் என்றுதான் புரிந்து கொண்டேன். அது பெரிய திறப்பாக இருந்தது, திறமையான எழுத்தாளன் ஒரு வார்த்தை செலவழிக்காமல் எத்தனையோ விஷயங்களை சொல்ல முடியும் என்று புரிந்தது. கோபு பேசுவதெல்லாம் சிவசுவை ஏற்பது போலத்தான் இருந்தாலும், சிவசுவைப் பார்த்த கணத்தில் உள்ளே போய் ஒடுங்கிக் கொள்ளும் காவேரியை விடவும் சிவசுவை வெறுப்பவன் அவனே என்றுதான் என் வாசிப்பு இருந்தது. தண்டபாணி பேசும் வேதாந்தமும் வித்வத் செருக்கும் வெறும் வெளிப்பூச்சு, அலங்காரத்தம்மாளை dominate செய்ய விரும்பும், ஆனால் கையாலாகாத பக்தர் என்பதுதான் அவரது அடையாளம், அவர் அந்தஸ்துள்ளவர்களை அலட்சியப்படுத்துவதெல்லாம் அந்த கையாலாகத்தனத்தின் frustration மட்டுமே என்றுதான் புரிந்து கொண்டேன். குடும்பத்தின் அத்தனை பேரும் ‘Elephant in the Room’-ஐ கண்டுகொள்ளாமல் ஒன்றுமே நடக்காதது போலப் புழங்குவது அந்த வயதில் ஆச்சரியப்படுத்தியது. அலங்காரத்தம்மாள் அப்புவுக்கு வரும் சம்பந்தத்தை பெண்ணின் அம்மா சோரம் போனவள் என்று நிராகரிக்கும் இடம் என்னை புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மனித மனத்தின் முரண்களைப் பற்றி யோசிக்க வைத்தது. அந்த நிராகரிப்பை அலங்காரத்தம்மாளின் குற்ற உணர்வின் இன்னொரு வடிவம், தனக்கு விடுதலை தர வேண்டிய அப்புவின் மீது ஏதாவது களங்கம் படிந்தால் அப்புவால் விடுதலை கிடைக்காது என்ற சுயநலம் என்றும் புரிந்து கொள்ளலாம்தான். சிவசு ஆசிர்வாதமாகத் தரும் பணத்தை அலங்காரத்தம்மாள் நிர்த்தாட்சண்யமாக நிராகரிப்பது அப்படிப்பட்ட புரிதலை வலுப்படுத்துகிறதுதான். ஆனால் எனக்கு அது மனித மனத்தின் முரண்பாடாகவேதான் எனக்கு (இன்றும்) தோன்றுகிறது. சிவசு மூலமாகப் பிறந்தவர்கள்தான் அம்மா சந்தோஷமாகப் பெற்றுக் கொண்ட குழந்தைகள் என்று அக்கா சொல்வதும் அந்த சந்தோஷத்தைப் பற்றிய அலங்காரத்தம்மாளின் குற்ற உணர்வும் இன்னொரு திறப்பு. சிவசுவின் குற்ற உணர்வும் அலங்காரத்தம்மாளுக்கு குறைந்ததில்லையோ? எதற்காக அப்புவைக் கண்டதும் அவன் கூனிக் குறுக வேண்டும்? என்ன செய்திருக்க வேண்டும் அலங்காரத்தம்மாள்? எது சரி, எது தவறு? தன் சந்தோஷத்தை நிராகரித்திருக்க வேண்டுமா? மகிழ்ச்சி இத்தனை குற்ற உணர்வை ஏற்படுத்துமா? கர்ணனும் துரியோதனனும் துச்சாதனனும் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்களா? குற்ற உணர்வால் பீடிக்கப்பட்டிருந்ததுதான் அர்ஜுனனுக்கு நிகரான திறமை கொண்ட கர்ணனும் பீமனுக்கு நிகரான வலிமை கொண்ட துரியோதனனும் அவர்களிடம் தோற்றதற்கு காரணமா?

இன்று படிக்கும்போது அதிர்ச்சி இல்லை. ஆனால் பல இடங்களில் அந்த மாஸ்டர் டச் இன்னும் தெரிகிறது. என் அம்மாவை நினைத்துத்தான் அவ்வப்போது பெருமிதம் கொண்டேன். என் அம்மாவின் value system-இல் இதெல்லாம் பெரிய தவறுதான். ஆனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் பதின்ம வயதிலேயே எனக்கு இதை எல்லாம் பரிந்துரைத்தது சந்தோஷப்படுத்தியது. தி.ஜா.வே சொல்வது போல ‘கலை உலகம் ஒரு மாயலோகம், அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ள கூடாது’ என்றுதான் என் அம்மாவும் புரிந்து கொண்டிருக்கிறாள்.

அம்மா வந்தாள் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. என்னைப் பொறுத்த வரையில் தி.ஜா.வின் மாஸ்டர்பீஸ் இந்த நாவலே.

அனுபந்தம்:

தி.ஜா.வே அம்மா வந்தாளைப் பற்றி சொல்கிறார். தி.ஜா. ஃபேஸ்புக் குழுவுக்கு நன்றி!

“அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏது சொல்ல இல்லை. நூல்தான் முக்கியம். எப்படி ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப் படைப்பு என்ற ஒரு நோக்கத்தோ அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதை தூற்றி விட்டார்கள். நான் பிரஷ்டன் என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை, பிரஷ்டர்களிடமிரிந்துதான் பிறந்து வருகின்றது என்று கூற விரும்புகின்றேன்

‘அம்மா வந்தாள்’ நான் கண்ட கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு முயற்சி. மனதுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றை பார்த்து ஊறி வெகுகாலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெருகின்றன. நாம் உருவம் கொடுப்பதாக எனக்கு தோன்றவில்லை.

மையக் கருத்தை பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களை பற்றி நான் எப்போதும் கவலைப்படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன். அவனுக்குப் பலம் பழங்காலம். கலை அமைதி பற்றி ரசிகனுக்குதான் தெரியும். கலை உலகம் ஒரு மாயலோகம், அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ள கூடாது”

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

8 thoughts on ““அம்மா வந்தாள்” – கட்டுடைக்கப்பட்ட பிம்பம்

  1. 👌👌👌. அம்மா வந்தாள் ஆரம்பித்து திரு தி.ஜாவின் மோகமுள், அமிர்தம், உயிர்த்தேன் , நளபாகம் மற்றும் மரப்பசு , செம்பருத்தியை பாதியில் கைவிட்டு விட்டு இந்த அடியை சில வாரங்களுக்கு முன் வாசித்து முடிக்கையில் தோன்றியது திரு தி.ஜா நாவல் வடிவத்தில் இந்த உறவு மீறல்களை தாண்டி வெளியே வரவில்லையோ என்று.

    அதையும் தாண்டி என்னை அவரிடம் இழுக்கும் சத்தி என்னதென்று நினைக்கும் பொழுது நாவல் வாசிப்பில் ஏற்படும் மோன நிலை . உதாரணமாக ஓர் ஊரைவிட்டு இன்னுமொரு ஊர் செல்லும் பொழுது பார்பதெல்லாம் புதிதாக தெரியும் காவிரிக்கரை வர்னையும் , சரசுவதி பூஜை அன்று மட்டும் புத்தகத்தை எடுத்து படிக்க துடிக்கும் மனமும் தண்டபாணியின் வேதாந்த வியாக்யானமும் உள்ளுக்குள் தன்னுடைய கையாலாகத மனக்குமயலும் மற்றும் பல நம்மையே சில இடங்களில் வாசிக்கும் நிலை . திருஜெயமோகன் ஜானகிராமனின் சிறப்பு சிறுகதையிலேயே இருக்கிறது என்கிறார், இனி மேல் தான் வாசிக்க வேண்டும். இக்கதையில் எனக்கு பிடித்தது பவானியம்மாள் . அவளுக்கு இந்துவின் காதலும் தெரிந்திருக்கும் அலங்காரத்தம்மாளின் உறவும் அறிந்திருப்பாள் , எதையும் பட்டும் படாமல் தாமரை இலைத் தண்ணீர் போல ! உங்கள் அம்மாவைப் பற்றி சொல்லும் பொழுது என்னுள் நான் நினைப்பது சுஜாதாவின் மாஞ்சுவில் வரும் அம்மா. என் அம்மாவிற்கும் அதைப்போல் ஓர் சினேதிதர் உண்டு, விசேஷ காலங்களில் அவரிடம் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்பை வைத்து கிண்டல் செய்யும் நாட்கள் நினைக்கையில் அம்மா நீ இறக்கவில்லை நினைவுகள் என்னும் படிமங்களாகவே வாழ்கிறாய் என்பதே !

    Like

  2. மா வந்தாள் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. என்னைப் பொறுத்த வரையில் தி.ஜா.வின் மாஸ்டர்பீஸ் இந்த நாவலே. Whole heartedly agree!

    Like

  3. இதேபோல என் வாழ்க்கையில்…
    ஐம்பதுகளில் (எனக்கு ஒற்றைஇலக்க வயது) மேச்சஸ் (பிறகு தீப்பெட்டிகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது) சேகரிப்பது பொழுதுபோக்கு. ஒட்டி அழகுபார்க்கவும், கரன்ஸியாகவும் (ஒரு மயிலிறகுக்கு ஒரு சீட்டாஃபைட்). ஏதோ காரணத்துக்காக பலகை மச்சில் தேடியபோது பைன்ட் செய்யப்பட்ட பழைய உயரமான நோட்டில் வர்ணங்கள் மங்கிய மேச்சஸ். முதல்பக்கத்தில் என் அப்பாவின் பெயர். அவரும் ஒருகாலத்தில் ஒற்றைஇலக்க வயதினராக மேச்சஸ் சேர்த்திருக்கிறார். என்ன ஆச்சரியம்!

    Like

sowganthi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.