மாநில சுயாட்சியா, திராவிடஸ்தானா?

பசுபதி சாரின் தளத்தில் ஒரு பதிவு கண்ணில் பட்டது.

1946 டிசம்பரில் சென்னையில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடந்திருக்கிறது. நாமக்கல் கவிஞர், வ.ரா., தூரன் (அன்று பெரியசாமி மட்டும்தான் போலிருக்கிறது), ம.பொ.சி. (அன்று சிவஞான கிராமணி), அன்றைய அமைச்சர் டி.எஸ். அவினாசிலிங்கம், அண்ணாதுரை, ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரம், மு.வ. (அன்று மு. வரதராஜன்தான், மு. வரதராசனார் அல்லர்), தேவநேயப் பாவாணர், ஜீவானந்தம், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற பலர் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். (கல்கி, தேவன் உள்ளிட்ட விகடன் எழுத்தாளர்கள், மணிக்கொடி எழுத்தாளர்கள் யாரையும் காணோம்.). என்.எஸ்.கே. நாடகம் போட்டிருக்கிறார்.

கண்ணில் பட்ட பேர்களில் பலரும் – அண்ணாதுரை, என்.எஸ்.கே. இரண்டு பேரைத் தவிர – காங்கிரஸ், தேசிய இயக்கம் சார்புடையவர்கள். இன்னும் சில மாதங்களில் இந்தியா விடுதலை அடைந்துவிடும் என்று எல்லாரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக தீவிர காங்கிரஸ்காரரான, விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற நாமக்கல் கவிஞர் தன் தலைமை உரையில் தமிழனுக்கு தனி நாடு, தனி அரசு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். அன்றைய அரசியலில் தீவிரமாக இருந்த, ராஜாஜியின் அணுக்கரான ம.பொ.சி. கொண்டு வந்த தீர்மானம் கீழே:

தமிழ் நாட்டின் எல்லை குமரி முதல் திருப்பதி வரை ஆகும். இந்த எல்லைக்குள் சுதந்திர இந்தியாவின் ஐக்கியத்துக்கு பாதகமில்லா வகையில், சுதந்திரமுள்ள தமிழர் குடியரசு அமைய வேண்டும். அந்தக் குடியரசின் அரசியலை வேறு எவருடைய தலையீடுமின்றி தாங்களே தயாரித்துக் கொள்ள தமிழ் இனத்தவருக்கு சுய நிர்ணய உரிமை உண்டு.

இந்தத் தீர்மானத்தின் பிற்பகுதியை ம.பொ.சி. கொண்டு வரவில்லையாம். ஆனால் மாநாட்டிற்கு வந்த அத்தனை பேரும் தீர்மானத்தை ஆதரித்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் இது தமிழ் பாகிஸ்தானுக்கான தீர்மானமா என்று சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள், ம.பொ.சி.யே இல்லை என்று விளக்கி இருக்கிறார்.

இது குறைந்த அளவில் மாநில சுயாட்சி (federal structure) வேண்டும் என்ற கோரிக்கை. நாமக்கல் கவிஞரின் கோரிக்கையைப் பார்த்தால் தனி நாடு வேண்டுமென்ற எண்ணம்தான் இப்படி இலைமறைகாயாக சொல்லப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

அன்றைய திராவிட இயக்கம் வெறும் fringe movement அல்ல, அன்றைய அறிவுஜீவிகளிடம் – குறிப்பாக கல்வி அறிவில் உயர்ந்து விளங்கிய அபிராமணர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைத்தான் நான் இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

பிற்சேர்க்கை: ம.பொ.சி.யின் புத்தகங்கள் இரண்டு – மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு மற்றும் சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல் – இணையத்தில் கிடைத்தன. ம.பொ.சி. 1946-இலிருந்தே சமஷ்டி அமைப்பு, மாநிலத்துக்கு அதிகமான அதிகாரங்கள் என்றெல்லாம் பேசி வந்திருக்கிறார். அவர் தொடங்கிய தமிழரசுக் கழகத்தின் முக்கியக் கோரிக்கையே மொழிவாரி மாநிலங்கள், திருப்பதியிலிருந்து குமரி வரை உள்ள தமிழ்நாடு, சமஷ்டி அமைப்பு என்பதுதான். காமராஜ் கூட அவரது சில அறிக்கைகளுக்கு ஆதரவு தந்திருக்கிறார். அண்ணாவும் ஈ.வெ.ரா.வும் ம.பொ.சி. நமது திராவிட நாடு கோரிக்கையைத்தான் ஆதரிக்கிறார் என்று எழுதி இருக்கிறார்கள் – ம.பொ.சி. அதை மீண்டும் மீண்டும் மறுத்தும் கூட. ஆனால் அவரது குரல் சென்னைக்கு வெளியே கேட்கவே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பதிவு: ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு