கலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே

சில வருஷங்களுக்கு முன் எழுதியது. எழுதப்படும்போது கலைஞருக்கு 85 வயதுதான். அதற்கப்புறம் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாததால் திருத்த வேண்டிய வேலை மிச்சம். சில பதிவுகளிலிருந்து கட் பேஸ்ட் செய்ததுதான் கீழே…

வயது எண்பத்தைந்து – அவருக்கு இருக்கும் வேகம், உழைப்பு, உற்சாகம் எல்லாம் ஒரு இருபத்தைந்து வயது இளைஞனுக்கு கூட இருக்காது. இன்றைய தமிழ் நாட்டு அரசியலில் பீஷ்மர். பீஷ்மர் காலம் செல்ல செல்ல ஹஸ்தினாபுரத்தின் பலவீனமாக மாறினார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ராஜாஜிக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடிய புத்தி கூர்மை. எம்ஜிஆருக்கு அடுத்தபடி சொல்லக்கூடிய மனோதிடம். அண்ணாதுரைக்கு சமமான பேச்சு, எழுத்துத் திறன். கட்சியின் முடிசூடா மன்னர், ஆனால் ஜெயலலிதா மாதிரி சர்வாதிகாரி இல்லை. எல்லாரையும் மிஞ்சிய அசாத்திய உழைப்பு. ஒரு மாபெரும் தலைவனாவதற்கு வேண்டிய அத்தனை prerequisite-களும் உண்டு. இருந்தென்ன? குடும்பத்தையும் கட்சியையும் ஒன்றாக்கிய சுயநலம், பெருத்த ஈகோ, தற்பெருமை, ஊழல், லஞ்சம், பதவியை துஷ்ப்ரயோகம் செய்வது, பதவி வெறி எல்லாம் சேர்ந்து அவரை ஒரு சாதாரண தலைவனாக கீழே தள்ளி விட்டன. எப்படியோ இருக்க வேண்டியவர் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாரே என்று பல சமயங்களில் தோன்றும்.

மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அவர் என்ன ஜாதி என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒரு கீழ் ஜாதிக்காரராகத்தான் இருக்க வேண்டும். ‘கீழ்ஜாதி’ என்று கருதப்பட்ட ‘இசை வேளாளர்’ ஜாதியினர். வளர்ந்து வரும்போது பல ஜாதி அவமானங்களை சந்தித்திருக்க வேண்டும். அந்த வடு அவருக்கு இன்னும் இருக்கிறது. தான் ஒரு சூத்திரன் என்று அவ்வப்போது அழுவார். அதனால்தான் அவாள், சவால் என்றெல்லாம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார். யாராவது அவரை குறை சொன்னால் அவர் முதலில் கவனிப்பது குறை சொன்னவர் என்ன ஜாதி என்றுதான். குறை சொன்னவர் பார்ப்பனராக இருந்தால் உடனே நான் சூத்திரன், பார்ப்பனத் திமிர் என்றெல்லாம் ஒரு பாட்டம் ஒப்பாரி வைப்பார். குறளோவியம் எழுதியவர்தான். வள்ளுவருக்கு கோட்டமும் சிலையும் எழுப்பியவர்தான். ஆனால் அந்த நேரத்தில் “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்” என்ற குறளை சவுகரியமாக மறந்துவிடுவார்.

நக்கல் பேசுவதில் பெரும் விருப்பமுண்டு. ஆனால் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல பேசி மாட்டிக்கொள்வார். ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்டார். மேடைக்கு மேடை தான் வள்ளுவருக்கு கோட்டம் கட்டினேன், சிலை எழுப்பினேன் என்றெல்லாம் பேசுவார். இவர் எந்த கட்டிடக்கலை கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார் என்று கேட்க மாட்டார்களா என்ன?

Spin master. தன் தவறை ஒத்துக்கொள்ளவே மாட்டார். தவறை சுட்டிக்காட்டினால் முட்டாள்தனமாக (கு)தர்க்கம் பேசுவார். ஜெயலலிதா தவறு செய்தபோது நீ ஏதாவது சொன்னாயா என்று கேட்பார். ஜெயலலிதா திருடி என்றால் இவர் திருடுவது நியாயம் ஆகாது என்பது புரியாத மாதிரி நடிப்பார். சமீபத்தில் 1964இல் கூட இப்படித்தான் நடந்தது என்று ஏதாவது முன்னுதாரணம் (precedent) காட்டுவார். முன்னுதாரணம் இருந்தால் போதும் என்றால் எல்லா தவறுகளையும் செய்து கொண்டே போகலாம். பாப்பாப்பட்டிக்காரர்களும் கீரிப்பட்டிக்காரர்களும் ஆயிரம் முன்னுதாரணம் காட்ட முடியும்.

சில சமயங்களில் அவர் வேதாந்தி; quantum physics விஞ்ஞானி. கொலையே நடந்தாலும் அங்கே கொலை நடந்திருக்கிறது என்று யாராவது சொல்லும் வரை கொலை நடக்கவில்லை என்று நினைப்பவர். Does the world exist if there is nobody to observe it? அதனால் அவர் கொலை நடப்பதை தடுப்பதை விட கொலை நடந்தது என்று சொல்வதை தடுக்கத்தான் அதிக முயற்சிகள் எடுப்பார்.

மொத்தத்தில் சரித்திரத் தலைவராக இருக்க வேண்டியவர் – குடும்பத் தலைவராக குறுகிவிட்டார்.

அரசியல் பங்களிப்பு

திராவிட இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. காந்தி வரும் வரை காங்கிரஸ் மேட்டுக்குடிக்காரர்களின் கட்சி. அந்த மேட்டுக்குடி காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுப் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஈ.வெ.ரா. வரும் வரை திராவிட இயக்கத்தினரும் அப்படித்தான். காந்தி காங்கிரசுக்கு எப்படி கடவுளோ அப்படித்தான் ஈ.வெ.ரா.வும் திராவிட இயக்கத்துக்கு. நேரு தனிப்பட்ட முறையில் மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தாலும் கட்சியின் பல கோளாறுகளை கண்டுகொள்ளவில்லை. அவருடைய charisma அனைவரையும் கவர்ந்தது. அண்ணாதுரையும் அப்படித்தான். இந்திரா காந்தி காரியம் ஆனதும் பெரியவர்களை கழற்றி விடுவது (காமராஜ்), லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் எல்லாவற்றையும் காங்கிரஸில் ஒரு தவிர்க்க முடியாத விஷயம் ஆக்கினார். கலைஞரும் அப்படித்தான். இந்திரா மொரார்ஜி தேசாயை மிதித்துக் கொண்டு மேலே வந்தார், இவர் நாவலர் என்று அழைக்கப்பட்ட நெடுஞ்செழியனை. இந்திரா அப்படி ஏறி வருவதற்கு செல்வாக்கு நிறைந்த காமராஜ் உதவியாக இருந்தார், இவருக்கு எம்ஜிஆர். இந்திராவுக்கு சஞ்சய் காந்தி, இவருக்கு அழகிரி.

அவரது கொள்கைகளை அவர் கைவிட்டு வெகு நாட்களாகிவிட்டன. அவரது கூர்மையான மூளை இப்போது பதவி, குடும்பம் ஆகியவற்றை மட்டுமே முன் வைத்து செயல்படுகிறது. அவர் தலைவர் இல்லை, அரசியல்வாதி. இந்திராவை மறுபடி பார்ப்பது போல இருக்கிறது.

ஆனால் அவர் இந்திரா போல பணக்கார, அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே பொது வாழ்வுக்கு வந்தவர். ஒரு காலத்தில் லட்சியவாதியாக இருந்திருக்க வேண்டும். சினிமா என்று ஒன்று இல்லாவிட்டால் ஏழையாகத்தான் இருந்திருப்பார். தி.மு.க. பதவிக்கு வருவதற்கு முன்பே சில பல தகிடுதத்தம் செய்தவர் என்று கண்ணதாசன் தன் மனவாசம், வனவாசம் போன்ற புத்தகங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் அண்ணாதுரை அவரது பணம் திரட்டும் திறமை, தேர்தலை சமாளிக்கும் திறமை ஆகியவற்றால் அவரை கட்சியின் இன்றியமையாத தலைவர் என்று கருதினாராம். காந்திக்கும் இதற்கெல்லாம் ஒரு படேல் தேவைப்பட்டார் என்று ஞாபகம் இருக்கட்டும்.

பதவிக்கு வருவதற்கு முன் அவர் அரசியல் பங்களிப்பை பற்றி எனக்கு ரொம்ப தெரியாது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஈ.வே.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இவரோடு ஏற்பட்ட மனஸ்தாபம், அண்ணாதுரை இவருக்கு கொடுத்த முக்கியத்துவம், ஆகியவற்றால்தான் கட்சியை விட்டு போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கட்சியில் அண்ணாதுரை, நெடுஞ்செழியனுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இருந்தார் போல தெரிகிறது.

1965இன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அரிசி தட்டுப்பாடு, காமராஜ் மத்திய அரசியலில் மூழ்கியது, ராஜாஜி, ம.பொ.சி. போன்ற அப்பழுக்கற்ற உழைப்பாளர்களின் கூட்டணி, சுடப்பட்ட எம்ஜிஆர் மீது எழுந்த அனுதாப அலை, எம்ஜிஆரின் திரை உலக இமேஜ் போன்ற பல காரணங்கள் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தின. அண்ணாதுரை இறந்தவுடன் எல்லாரும் நெடுஞ்செழியன்தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் அவரை கவிழ்த்துவிட்டு முதலமைச்சரானார். நெடுஞ்செழியன் கட்சி பொது செயலாளர் பதவிக்கு போட்டி இட்ட போது அது வரை ஈ.வெ.ரா.வுக்காக காலியாகவே வைக்கப்பட்டிருந்த தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நெடுஞ்செழியனை மீண்டும் கவிழ்த்தார். 71இல் பங்களாதேஷ் போரினால் இந்திராவுக்கு ஏற்பட்டிருந்த ஆதரவு, எம்ஜிஆர், அண்ணாதுரையின் மறைவு ஆகியவற்றின் மீது சவாரி செய்து காமராஜை தோற்கடித்தார்.

அது வரை அருமையாக கணக்கு போட்ட மூளை எம்ஜிஆர் விஷயத்தில் சொதப்பி விட்டது. அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் மு.க. முத்துவை வைத்து படம் எடுக்காமல் இருந்திருக்கலாம். எம்ஜிஆர் தன் பாணியிலே ஒரு இளைஞன் கிழவனாகிக்கொண்டிருக்கும் தனக்கு போட்டியாக உருவாவதை பார்த்தார். மந்திரி பதவியும் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று சவால் விட்டு கட்சியை விட்டு வெளியேறினார். கலைஞர் தனக்கு ஐந்து வருஷம் பதவி இருக்கிறது, அதற்குள் எம்ஜிஆரை அடக்கி விடலாம் என்று நினைத்திருக்க வேண்டும். பெரிய தப்புக் கணக்கு. (சின்ன தப்புக் கணக்கு சோ ராமசாமியை அடக்கி விடலாம் என்று நினைத்தது)

மிசா சமயத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி போன்றவர்களே ஜெயிலுக்கு போக, அவர் ஜெயிலுக்கு போகாது ஆச்சரியம்தான். ஸ்டாலின் அடிபட்டார், அன்றைய எம்.பி. சிட்டிபாபு அடி வாங்கி செத்தே போனார். பலர் மன்னிப்பு கேட்டு தி.மு.கவை விட்டுப் போனார்கள். ஆனாலும் கட்சி இருந்தது. கலைஞரின் தமிழுக்கும் தலைமைக்கும் பின்னால் ஒரு கூட்டம் இருந்தது. என்ன, எம்ஜிஆருக்கு பின்னால் இருந்த கூட்டம் இதை விட பெரியதாக இருந்ததால் கலைஞர் 77இல் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் 77இல் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அதிர்ந்திருப்பீர்கள். மஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், அந்த ஊழல், இந்த ஊழல் என்று வெளி வந்துகொண்டே இருந்தது. மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்ட ஒரு சென்னை கார்ப்பரேஷன் குமாஸ்தா வாக்குறுதி என்று ஒரு சினிமா படமே தயாரித்தார். தினத்தந்தியில் பொழுது விடிந்து பொழுது போனால் இதே நியூஸ்தான். லஞ்சம் அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை மறைத்து, பயந்துகொண்டே வாங்கினார்கள். அதை சாதரண விஷயமாக்கியது கலைஞர்தான். அவர் வழியில் பின்னால் எம்ஜிஆரும் போனார். கலைஞர் எழுபதுகளில் எட்டடி பாய்ந்தால் எம்ஜிஆர் பின்னாளில் பதினாறடி பாய்ந்தார்; ஜெவும் சசிகலாவும் எண்பதடி பாய்ந்தார்கள். கலைஞர் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அவரும் இப்போதெல்லாம் நூறடி பாய்கிறார்.

அவர் 80இல் தோற்றது ஒரு சோகக் கதை. பேசாமல் இருந்திருக்கலாம். இந்திராவிடம் கெஞ்சி எம்ஜிஆர் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார். அனுதாப அலை அடித்து எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார். காங்கிரஸின் உள்குத்து வேலையால் ஹண்டே அவரை கிட்டத்தட்ட தோற்கடித்தே விட்டார் (ஆயிரமோ என்னவோதான் ஓட்டு வித்தியாசம்) மனம் குளிர்ந்து எம்ஜிஆர் ஹண்டேவுக்கு மந்திரி பதவி எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் எம்ஜிஆரும் கலைஞரும் சேர்ந்து அரசியலை சும்மா oneupmanship ஆக ஆக்கினார்கள். கலைஞருக்கு எம்ஜிஆரை embarass செய்ய வேண்டும், அது ஒன்றுதான் வாழ்க்கையின் லட்சியம் போல இருந்தது. எம்ஜிஆருக்கு கலைஞரை வார வேண்டும் அது ஒன்றுதான் லட்சியம். கலைஞரின் சட்ட சபை ஆயதங்கள் ரஹ்மான் கான், துரைமுருகன், சுப்பு. அவர்கள் மூவரும் எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். எம்ஜிஆரும் அவர்களை ரசித்துக்கொண்டே காளிமுத்து (கருவாடு மீனாகாது போன்ற தத்துவங்களை சொன்னவர்) போன்றவர்களை வைத்து ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தார். (துரைமுருகனை படிக்க வைத்தது எம்ஜிஆர்தான். துரைமுருகனிடம் அவர் எம்ஜிஆரை தீவிரமாக தாக்கிய காலத்தில் இதை பற்றி கேட்டார்களாம். அவர் எம்ஜிஆர் தெய்வம், கலைஞர்தான் தலைவன் என்று சொன்னாராம்.) எம்ஜிஆரை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் அவ்வளவுதான் – கலைஞர் தெலுங்கர் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். இந்த கலாட்டாவில் உழவர் போராட்டம் (உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு சர்க்கார் கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கை உடையவர்), இட ஒதுக்கீடு கலாட்டா, திருந்செந்தூர் கொலை, பால் கமிஷன் அறிக்கை, என்று பல விஷயங்கள் நடந்தன.

84இலோ கேலிக்கூத்து. எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டு கேட்டுப் பார்த்தார். எம்ஜிஆரின் உடல் நிலைக்காக அடித்த அனுதாப அலையில் கலைஞர் ஏறக்குறைய காணாமலே போய்விட்டார். அவரும் உடனே ஏன் சூடு சுரணை இல்லாத தமிழனே, நீ என்னை கடலிலே போட்டால் நான் உனக்கு தோணியாவேன், கரையில் போட்டால் ஏணியாவேன், வயலுக்கு போட்டால் சாணியாவேன் என்று தன் பாணியிலே அறிக்கை விட்டுக்கொண்டு ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தார்.

எம்ஜிஆர் மறைந்து, ஜானகி-ஜெ சண்டையில் அவர் 89இல் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது அநியாயம்.

ஆனால் 89இல் மாறன் மத்திய அமைச்சர் ஆனது தி.மு.கவுக்கு ஒரு inflection point. ஒரு லோக் சபா எம்.பி. கூட இல்லாவிட்டாலும் வி.பி. சிங் தி.மு.க.விலிருந்து ஒரு அமைச்சர் வேண்டும் என்று சொன்னார். அன்றிலிருந்து கலைஞருக்கு மத்திய அரசு பற்றி ஒரு கணக்கு மனதில் ஓட ஆரம்பித்தது. திராவிட நாடு எல்லாம் அப்போதுதான் உண்மையிலேயே போயே போச்! இந்திய அளவில் ஊழல் செய்யலாம் என்றால் திராவிட நாடாவது மயிராவது! அவர் அப்போதுதான் முழுமையான இந்தியர் ஆனார்.

91இல் ராஜீவ் அனுதாப அலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். எழுபதுகளில் கலைஞர் ஆட்சி எப்படி தமிழ் நாட்டின் valuesஐ மாற்றியதோ அப்படித்தான் இந்த ஆட்சியும். இப்படியும் பதவி துஷ்ப்ரயோகம் செய்ய முடியுமா என்று அசந்து போனோம்.

சசிகலா கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஜெயலலிதா யாரோ முன் பின் தெரியாதவர்கள் எனக்கு பல லட்சம் டாலர் அன்பளிப்பு தந்தார் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். வளர்ப்பு மகன் திருமணம் மாதிரி ராமன்-சீதா கல்யாணம் கூட நடந்திருக்காது. ஜால்ராக்கள் கொழித்தனர். ஜெவுக்கு எதிராக ஒரு கடுமையான எதிர்ப்பு அலை வீசியது. சோ ராமசாமியே ஜெவுக்கு கலைஞர் பெட்டர் என்று சொன்னார். மூப்பனாருடன் கூட்டணி, மூப்பனாருக்கு பெருந்தன்மையாக அதிக அளவு எம்.பி. சீட்கள், சன் டிவி, ரஜினிகாந்த், சோ ஆகியோரின் வெளிப்படையான ஆதரவு – 96இல் அமோகமாக ஜெயித்தார்.

அவர் முயன்றிருந்தால் தேவே கவுடா, குஜ்ரால் ஆகியோர் இடத்தில் மூப்பனார் அமர்ந்திருக்க முடியும். பொறாமை, ஈகோ. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் உள்குத்து வேலை நடத்தினார். Gentleman மூப்பனாரும் பேசவில்லை.

96இல் நல்லபடியாக ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலங்களிலேயே சிறந்தது அதுதான். அவரை எப்போது தீவிரமாக விமர்சிக்கும் சோ கூட அதை ஒத்துக்கொண்டார். சோவே எல்லா விஷயங்களிலும் நல்ல ஆட்சிதான், ஆனால் புலிகள் மீது ஒரு soft corner இருக்கிறது, அதனால் ஜெவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். ஆனால் கட்சி உளுத்துப்போய்விட்டது. சொந்த பலத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணி சரியாக அமையவில்லை. மக்களும் ஆட்சியில் காந்தியே இருந்தாலும் தோற்கடிப்பது என்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

மீண்டும் ஜெ. நள்ளிரவில் கைது. (அதை எப்படிய்யா சரியாக விடியோ எடுத்தார்கள்?) மாறன் வேட்டி அவிழ ஜீப் பின்னால் ஓடியது மறக்க முடியாத காட்சி. ஒரு மத்திய அமைச்சருக்கே அவ்வளவுதான் மரியாதை என்றால் ஜெவின் திமிரை என்ன சொல்வது? நாற்பது எம்.பி. தொகுதியும் அவருக்கே. அன்றிலிருந்து அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர். தங்கபாலு, கிருஷ்ணசாமி எல்லாம் சும்மா லுலுலாயி.

2006 – அருமையான தேர்தல் வியூகம். காங்கிரஸ், பா.ம.கவுடன் கூட்டணி. இலவச டிவி அறிவிப்பு. மைனாரிட்டி அரசுதான், ஆனால் மெஜாரிட்டி அரசுக்கு இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இலவசங்கள் சரியான விஷயம் இல்லைதான் – ஆனால் சொன்னதை செய்தார், சொன்னதைத்தான் செய்தார். இலவச டிவி கொடுத்தார், அரிசி சீப்பாக கிடைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் குடும்பத் தகராறை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அழகிரி பக்கம் சாய்ந்தார், தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டார், கனிமொழி அரசியலுக்கு வந்தார், பிறகு கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தும் விட்டது. இதற்கு ஏனையா அவர்களை வெளியே அனுப்பினீர்கள்? அழகிரியால் கெட்ட பேர்தான். (தா. கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதிலிருந்தே அப்படித்தான் – தா.கி. இறந்ததும் அதற்கும் சமீபத்தில் 19xxஇல் யாரோ கொல்லப்பட்டார் என்று காட்டியது மிக மோசமான விஷயம்)

இன்றைக்கு அவரை பார்த்தால் பதவிக்காக இளவரசர்கள் அடித்துக்கொள்ள, ஒன்றும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருந்த மொகலாய ராஜாக்கள், திருதராஷ்டிரன் போலத்தான் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.

கட்சி உளுத்துப்போய்விட்டது. தி.மு.கவில் இன்று யார் சேருவார்கள்? அப்பா தி.மு.க.வில் பிரமுகராக இருந்தால் பிள்ளை சேருகிறான், அவ்வளவுதான். கலைஞரும் குறுநில மன்னர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கிறார். அழகிரி, ஐ. பெரியசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி மாதிரி பலர் அவர்களது வாரிசுகளை முன் வைத்துவிட்டார்கள். ஆனால் எந்த இளைஞன் வந்து இந்த கட்சியில் சேருவான்? அவன் அப்பா பிரமுகராக இல்லாவிட்டால் அவனுக்கு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம். (நாகப்பட்டினம் ரூசோ கட்சிக்காக உழைத்தார் – அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, செத்தே போனார். அவர் மனைவி சுயேச்சையாக நின்று கணிசமான ஓட்டு வாங்கினார்)

கலைஞரின் தமிழுக்காக ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட பலர் வந்து சேர்ந்தார்கள். இன்று ஸ்டாலினுக்காக யாரும் வரப் போவதில்லை. அவருக்கு பிறகு கட்சி இன்னும் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அவுரங்கசீப் ஞாபகம்தான் வருகிறது. அவுரங்கசீப்பின் சாம்ராஜ்யம் அளவில் மிகப் பெரியது. ஆனால் உள்ளே சிவாஜியை சமாளிக்க முடியவில்லை, அவருக்கு பிறகு சாம்ராஜ்யமும் உடைந்து சுக்கல் சுக்கலாக போய்விட்டது. தி.மு.கவும் அப்படித்தான் ஆகப்போகிறது. பெருங்காய டப்பா மாதிரி கொஞ்ச நாள் வாசனையை வைத்து ஓட்டுவார்கள்.

பல தகுதிகள் இருந்தாலும், கட்சியை கட்டி காப்பாற்றி இருந்தாலும், அவர் அரசியலில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. தோல்வி என்றும் சொல்ல முடியவில்லை. ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. எவ்வளவோ செய்திருக்கலாம்.

திரைப்படங்களில் பங்களிப்பு

கதை எழுதி இருந்தாலும், படங்களை தயாரித்திருந்தாலும், பாட்டுகளை எழுதி இருந்தாலும், கலைஞர் வசனகர்த்தா என்ற முறையிலேயே ஸ்டார் ஆனார்.

அவரது காலம் ஐம்பதுகள்தான். மந்திரி குமாரி, பராசக்தி, திரும்பிப் பார், மனோகரா மாதிரி பல படங்களில் அவரது வசனம் பேசப்பட்டது. அறுபதுகளில் குறவஞ்சி, இருவர் உள்ளம், மறக்க முடியுமா மாதிரி படங்களில் அவர் பங்களிப்பு இருந்தாலும் அவை எல்லாம் அவரது பங்களிப்புக்காக குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இல்லை.

அவர் தன் வசனங்கள் சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். மந்திரி குமாரியில் அவர் கள்ளபார்ட் நடராஜனுக்காக களவும் ஒரு கலை என்று எழுதிய வசனங்கள் அப்போது ஒரு சர்ச்சையை உருவாக்கியது. வசனங்கள் நன்றாக இருந்தன. பராசக்தியிலோ சொல்லவே வேண்டாம். இன்றைக்கும் குணசேகரன் கோர்ட்டில் பேசும் வசனங்களை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் பராசக்தி தடை செய்யப் பட வேண்டும் என்று பலரும் பேசினார்கள். திரும்பிப் பாரில் பெண் பித்தனான தம்பியிடம் உனக்கு ஒரு பெண் உடல்தான் வேண்டுமென்றால் என்னை எடுத்துக் கொள் என்று அக்கா பேசுவது ஒரு சர்ச்சையை உருவாகியது.

என்னை பொறுத்த வரையில் மனோகராதான் அவருடைய மாஸ்டர்பீஸ். அவர் மனோகராவுக்கு எழுதிய வசனங்கள் மாதிரி இனி மேல் யாரும் எழுதப் போவதில்லை. அதை சிவாஜி மாதிரி யாரும் பேசப் போவதும் இல்லை. அப்படிப் பேசினாலும் அதை யாரும் ரசிக்கப் போவதும் இல்லை. சின்ன வயதில் எம்ஜிஆரின் சாகசங்களில் மயங்கிக் கிடந்த நான் இந்த படத்தை பார்த்த பிறகுதான் சிவாஜியின் நடிப்புக்கு ரசிகன் ஆனேன். மனோகரன் தர்பாரில் பேசும் இடம் மிக அருமை. அதற்கு கலைஞரும் ஒரு பெரிய காரணம்தான்.

எழுபதுகளில் அவர் எம்ஜிஆரை எதிர்க்க சினிமாவை மீண்டும் உபயோகித்தார். ஜெய்ஷங்கர் நாயகனாக வண்டிக்காரன் மகன் முதலாக சில படங்களில் நடித்தார். அவை நன்றாக ஓடவும் செய்தன என்று நினைவு.

பத்து வருஷம் முன்னால் கூட அவ்வப்போது வசனம் எழுதிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அந்த படங்களை பார்க்க விரும்பாமல் எல்லாரும் இப்போது ஓடுகிறார்கள். அவர் காலம் கடந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

இலக்கியப் பங்களிப்பு

சிலிகன் ஷெல்ஃபில் புத்தகங்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி? ஆனால் ஏற்கனவே எழுதியாயிற்று. மீண்டும் எழுதும் அளவுக்கு அவ்வளவு வொர்த் கிடையாது. அதனால் சுருக்கமாக: கலைஞர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மொத்த மதிப்பு என்னைப் பொறுத்த வரை பூஜ்யம்தான். கறாராக மதிப்பிட்டால் பூஜ்யத்துக்கும் கீழேதான் மதிப்பெண் தரவேண்டும். அவர் பண்டைய தமிழ் இலக்கியத்தில் முங்கிக் குளிப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்துப் பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

14 thoughts on “கலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே

 1. வஞ்சகப் புகழ்ச்சிக்கு மிக சிறந்த உதாரணம் இந்த பதிவு. உங்களுக்கு பிடிக்காததை அல்லது அவரின் தவறுகளை நேர்மையாக பதிவு செய்திருக்கலாமே?
  எதற்கு வஞ்சகப் புகழ்ச்சி?

  Like

 2. நீ உன்னுடைய புத்தியை காட்டியதற்கு நன்றி, உங்கள் நாய் புத்தியை நிருபித்தீர் நன்றி

  Like

 3. குடும்பத்தலைவர் மட்டுமே எனச் சொல்லவே இவ்வளவு எழுதவேண்டி வந்துவிட்டதே! இருந்தும் சுவாரஸ்யம்.

  வ.மு.முரளியின் இன்றைய (8-8-18) பதிவு ‘ஓம்! சாந்தி! சாந்தி! சாந்தி!’ யையும் படித்துப்பாருங்கள் (https://writervamumurali.wordpress.com)

  Like

 4. Every obituary reflects the deeper abysses of the author’s mind, not the subject of the obituary, except in rare cases that appear in newspapers.

  This obituary of Karunanidhi shows you in brighter light, than the subject himself. You can make it viral as it will stand for ever as an example and will be quoted in several places.

  However, one point stands out in this obituary – almost a confessional statement from you. You confess here that you’ve not read two of his well-known books on Sangam literature informing the readers you intend to read them later on. Almost a decade has gone by since you wrote this When’re you going to read and firm up your final estimate of him as a Tamil writer? It would be necessary to first develop some interest, by reading the poems yourself, if not mastery, in Sangam lit. That is the stepping stone to go into such books as he has written. Your view will be balanced then. Even if you rate them less than zero, it would be welcome, coming as it does from man of erudition in Sangam lit.

  An important point is omitted from your obituary – unwittingly. It is the Ramanujar, the TV serial for which the deceased wrote the script. Rather, it was his story that was filmed and it was as per his wishes. I am not qualified to rate it as my knowledge in the field of Vaishnavism and Ramanujar is very limited. But I understand that the serial was well received by Vaishnavas; and when it was abruptly taken off – because of his sudden illness, they were dismayed. The critics did point out errors in it; but only in the way it was filmed: like the actors wearing anachronisms like glass bangles, but not in the script. The respect the serial earned for the writer was so much that a group of Vaishnava priests of celebrated temples went to his residence and offered their thanks.

  It was a stellar achievement which only Vaishanvas can appreciate. For others, it won’t be worth seeing or kuppai.

  Like

 5. ”அவர் என்ன ஜாதியென்று தெரியவில்லை ஆனால் ஒரு கீழ்ச்சாதிக்காரராகத்தான் இருக்க வேண்டும்?”

  ஊரறிந்த உண்மையைத் தெரியவில்லை யெனலாமா?

  தஞ்சாவூர் மாவட்ட இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் கருநாநிதி. கோயில்களில் நாதசுரம், மேளம் வாசிப்பவர்கள் மற்றும் தேவதாசிகள் பரம்பரை. தில்லானா மோகனாம்பாள் இவர்கள் கதைதான். சின்ன மேளம்; பெரிய மேளம் என இரு உட்பிரிவுகள். சின்ன மேளம் வகையறா கருநாநிதி. கீழ்ச்சாதிதான். தேவதாசிகள்தானே? தேவதாசிகளை மேற்சாதியாக ஏற்க முடியுமா? தமிழகத்தில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, எம் எஸ் சுப்புலட்சுமி, பல நாடக மற்றும் திரைப்பட நடிகைகள் (ஈ வி சரோஜா, பாடகர் மாணிக்க விநாயகம் (சரோஜாவின் தம்பி, டி பி ராஜலட்சுமி), மாபெரும் நாதசுரக்கலைஞர்கள் – எல்லாரும் இக்கீழ்ச்சாதிதான். எனவேதான் கருநாநிதி, முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் தேவதாசி முறைக்கெதிராக போராடி வெற்றி கண்டார்கள். ஜெமினி கணேசனும் இஜ்ஜாதிதான் என் தூரத்து உறவு என்றார் கருநாநிதி. எல்லாரும் கல்வரமடைந்து எதிர்த்தார்கள். கணேசனின் வரலாற்றைப்பார்த்தால் உண்மைதான் எனத்தெரிகிறது. தேவதாசி கலப்பு. கணேசன் புதுக்கோட்டை; அச்சமஸ்தானத்தில் தேவதாசி முறை கொடிகட்டிப் பறந்தது. இஜ்ஜாதியிலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே மேற்ஜாதியாக்கிக்கொண்டார்கள்; அவர்தான் எம் எஸ் சுப்புலட்சுமி. சுப்புலட்சுமி வாழ்க்கை காட்டுவது மேற்ஜாதி, கீழ்ஜாதியென்பது இட்டுக்கட்டப்பட்ட புனைகதை. உயர்வும் தாழ்வும் நாம் வாழும் வாழ்க்கையில், மதம் செய்த கற்ப்னையால் அன்று.

  Like

 6. நன்றி, பாஸ்டன் பாலா, ஏகாந்தன்!

  ராஜஸ்ரீ, // வஞ்சகப் புகழ்ச்சிக்கு மிக சிறந்த உதாரணம் இந்த பதிவு // நேரடியாகத்தானே சொல்லி இருக்கிறேன்? ஒரு வேளை நீங்கள் ஏதாவது புகழ் மாலையை எதிர்பார்த்தீர்களோ?

  இளங்கோவன், // உங்கள் நாய் புத்தியை நிருபித்தீர் // மிருக வைத்தியராகப் பணி புரிகிறீர்களோ? அதையும் உருப்படியாக செய்வதாகத் தோன்றவில்லை…

  வினாயகம், நீங்களே காசு கொடுத்து அச்சடித்து இலவசமாக வினியோகித்தால்தான் இது viral ஆக வாய்ப்பிருக்கிறது என்று அனுமானிக்கிறேன். தாராளமாகச் செய்யுங்கள்!

  // ”அவர் என்ன ஜாதியென்று தெரியவில்லை ஆனால் ஒரு கீழ்ச்சாதிக்காரராகத்தான் இருக்க வேண்டும்?” ஊரறிந்த உண்மையைத் தெரியவில்லை யெனலாமா? // அதுதான் அடுத்த வரியில் இருக்கிறதே? பத்து வருஷத்துக்கு முன் தெரியவில்லை, பிறகு தெரிந்துவிட்டது என்பதைக் கூட புரிந்து கொள்ள மாட்டீர்களா?

  // When’re you going to read and firm up your final estimate of him as a Tamil writer? // குறளோவியமும் தொ. பூங்காவும் எனது bucket list-இல் உள்ளவை, என் வாழ்நாளில் படிப்பேனா என்று தெரியாது.

  Like

 7. நன்றி, பாஸ்டன் பாலா, ஏகாந்தன்!

  ராஜஸ்ரீ, // வஞ்சகப் புகழ்ச்சிக்கு மிக சிறந்த உதாரணம் இந்த பதிவு // நேரடியாகத்தானே சொல்லி இருக்கிறேன்? ஒரு வேளை நீங்கள் ஏதாவது புகழ் மாலையை எதிர்பார்த்தீர்களோ?

  இளங்கோவன், // உங்கள் நாய் புத்தியை நிருபித்தீர் // மிருக வைத்தியராகப் பணி புரிகிறீர்களோ? அதையும் உருப்படியாக செய்வதாகத் தோன்றவில்லை…

  வினாயகம், நீங்களே காசு கொடுத்து அச்சடித்து இலவசமாக வினியோகித்தால்தான் இது viral ஆக வாய்ப்பிருக்கிறது என்று அனுமானிக்கிறேன். தாராளமாகச் செய்யுங்கள்!

  // ”அவர் என்ன ஜாதியென்று தெரியவில்லை ஆனால் ஒரு கீழ்ச்சாதிக்காரராகத்தான் இருக்க வேண்டும்?” ஊரறிந்த உண்மையைத் தெரியவில்லை யெனலாமா? // அதுதான் அடுத்த வரியில் இருக்கிறதே? பத்து வருஷத்துக்கு முன் தெரியவில்லை, பிறகு தெரிந்துவிட்டது என்பதைக் கூட புரிந்து கொள்ள மாட்டீர்களா?

  // When’re you going to read and firm up your final estimate of him as a Tamil writer? // குறளோவியமும் தொ. பூங்காவும் எனது bucket list-இல் உள்ளவை, என் வாழ்நாளில் படிப்பேனா என்று தெரியாது.

  ரிஷபராஜ், யார் வருண்? அவரை எங்கே கதறவிட்டேன்?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.