தமிழறிஞர் வரிசை 20: இன்னும் ஒரு கோனார் – கார்மேகக் கோனார்

ஒரு கோனார் பள்ளியில் தமிழ் படிக்கும் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தவர். இந்தக் கோனாரோ அவ்வளவாக அறியப்படாதவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர். உ.வே. சாமிநாத ஐயரின் பரிந்துரையால் அவருக்கு இந்தப் பதவி கிடைத்தது என்று கேட்ட நினைவிருக்கிறது. நான் அவரைப் பற்றி முதல் முறை கேள்விப்பட்டது அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்ட போதுதான்.

அவரது சில நூல்களைப் படித்துப் பார்த்தேன். நான் படித்த வரையில் அவர் பண்டிதர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் எதுவும் குறிப்பிட வேண்டியவையோ நினைவில் கொள்ள வேண்டியவையோ இல்லை. அது சங்கத் தமிழ் எனக்கு சரியாகப் புரியாத குறையாகவும் இருக்கலாம். படித்தவற்றுள் சிறந்ததாக நான் கருதுவது ‘நல்லிசைப் புலவர்கள்‘ புத்தகத்தைத்தான். மேலும் பல புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.

கோனாரைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் யாராவது உண்டா? பழைய மாணவர்கள் யாராவது?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள், நாட்டுடமை

தமிழறிஞர் வரிசை 19: கோனார் நோட்ஸ் போட்ட கோனார் யார்?

(திருத்தப்பட்ட மீள்பதிப்பு, ஒரிஜினல் இங்கே)

நான் படிக்கும் காலத்தில் கோனார் நோட்ஸ் ரொம்ப பிரபலம். மாணவர்கள் தமிழ் புத்தகம் வாங்குகிறார்களோ இல்லையோ, கோனார் நோட்ஸ் தவறாமல் வாங்கிவிடுவார்கள். (ஆனால் நான் வாங்கியதே இல்லை, நோட்ஸ், ட்யூஷன் எல்லாம் கூடவே கூடாது என்று உறுதியாக இருந்தேன். அபூர்வமாக தேவைப்பட்டால் ஓசி வாங்கிக் கொள்வேன். கோனாரே நோட்ஸை படித்துவிட்டு ஒரிஜினல் செய்யுளைப் படிக்காமல் இருக்கக் கூடாது என்பாராம்.) அவ்வப்போது நண்பர்கள் வட்டத்தில் கேட்டுக் கொள்வோம் – யார்ரா இந்த கோனார், இப்படி நோட்ஸ் போட்டே பெரிய பணக்காரர் ஆயிருப்பார் போலிருக்கே என்று. பல வருஷக் கேள்விக்கு ஏழெட்டு வருஷங்கள் முன்னால் விகடனில் விடை கிடைத்தது.

பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார்
பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார்
அவர் பேர் ஐயம்பெருமாள் கோனாராம். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவராம். எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால் கோனார் நோட்ஸ் எண்பதுகளின் முற்பாதி வரைக்குமாவது பயன்படுத்தப்பட்டது என்று தெரியும். ஒரிஜினல் பதிவில் 2010களில் கூட பிரபலமாக இருக்கிறது என்று டெக்‌ஷங்கர் என்பவர் தகவல் தந்திருக்கிறார்.

விகடனின் வார்த்தைகளில்:

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! மாணவர்களுக்குக் கல்வியறிவோடு ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை நல்லதொரு குடிமகனாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள்தான் வருங்கால சமுதாயத்தின் ஆணி வேர். அப்படித் தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடு கல்விப் பணி ஆற்றிய ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை ‘ஆசிரிய ரத்தினங்கள்’ என்னும் தலைப்பில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது விகடன். அவர்களைக் கோட்டுச் சித்திரமாக வரைந்து நம் முன்னே கொண்டு நிறுத்தியவர் இறையருள் ஓவியர் சில்பி. இங்கே படத்தில் இருக்கும் ஆசிரிய ரத்தினம் திரு. ஐயன் பெருமாள் கோனார். திருச்சி ஜோஸப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் கொண்டு வந்ததுதான் பிரபல ‘கோனார் நோட்ஸ்’.

எழுத்தாளர் சுஜாதாவுக்கு இவர்தான் காலேஜில் தமிழ் ப்ரொஃபசர். தனக்கு தமிழார்வம் அதிகரிக்க ஐயம்பெருமாள் கோனார் முக்கிய காரணம் என்று சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.

கோனார் நோட்சை பதிப்பித்தவர்கள் பழனியப்பா பிரதர்ஸ் என்று கிங் விஸ்வா தகவல் தருகிறார். கோனார், 1937-ம் ஆண்டு முதல் பதினோராவது வகுப்பு தமிழ் பாடத்துக்கு “Explanatory Tamil Notes” வெளியிட்டு வந்தாராம். பிறகு பதிப்பாளரோடு ஏதோ தகராறு வந்ததால், கோனார் பழனியப்பா பிரதர்ஸுக்கு மாறினாராம். ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ்ப் பாடத்துக்கு உரை வெளியிட்டாராம்.

கோனார் 1969-இல் இறந்திருக்கிறார். எத்தனை வருஷம் தன் கையாலேயே நோட்ஸ் எழுதி வெளியிட்டாரோ தெரியவில்லை.

கோனார் நோட்ஸ் பற்றிய ஒரிஜினல் பதிவில் பலரும் கோனாரை நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள். கோனாரின் பேரனான சின்னு என்பவரும் பதில் எழுதி இருந்தார். இரண்டு மாணவர்களின் நினைவுகள் கீழே.

கோனாரின் மாணவரான பாலகிருஷ்ணன் சொல்கிறார்.

Thiru Konar was my teacher In my B.A class in 1957-59. His son Rengarajan was my class mate who subsequently got his P.hd. in Tamil and became Professor of Tamil in Urumu Danalaksmi College,Trichy and might have retired. Konar took only non-detail to us in B.A. Thus I was denied of Konars KAMBAN which I feel even now. Further I studied under Prof Thirumeni who was a Prof of Tamil in National College,Trichy. As i Lived in Clives Hostel I used to See both Konar and Thirumeni at Palaniappa Pathippagam ,which was housed in Clives Hostel Premesis at that time.

1961-இல் அவரிடம் படித்த பால் ஜெயதிலக் தன் அனுபவங்களை விவரிக்கிறார்.

1961
That was the year when I first set my eyes on Thiru. Thiru Ayan Perumal Konar.

That was also the year when I first checked into St. Joseph’s College, Trichy as a first year graduate student.

Wait! If you think I have made a typographical error in repeating ‘Thiru’ twice while mentioning his name, then let me clarify. His full name was Thiru Ayan Perumal Konar. (‘திரு’ என்பது அவரது தந்தையின் பெயராகிய திருச்சிராப்பள்ளி திருவேங்கடக் கோனாரைக் குறிக்கும்) People always added another ‘Thiru’ as an honorific to his name. This is how his name was printed those days in his Konar Notes.

One afternoon I was seated in a classroom when Konar slowly walked in.

We have already been told that Konar will be our Tamil teacher for the next two years. We were therefore waiting for him with some expectation. Konar was a celebrity teacher not only at St. Joseph’s but also among academia and student community throughout Tamil Nadu thanks to his immensely popular Konar Notes.

Konar had humble beginnings. He started off as a Tamil vidwan in St. Joseph’s High School before getting into its college next door. Like many of the vidwans of his era he had a large family. He was the father of six sons and three daughters. In his early years he must have really struggled to maintain his large family with his meagre income. But then he wrote his famous notes and got them published by S.M. Palaniappa Chettiar. The rest, as they say, is history. A Google search tells me that during the year 1961-62 they recorded an annual turnover of ₹.4.17 lacs – a princely sum in those days. He must have earned a fairly substantial fortune because when he passed away on the New Year day in 1969, he was stated to have owned several buildings in Trichy.

Konar was a towering personality. He was a near six footer and well built. He always wore a jibba (ஜிப்பா) with a dhoti to go with it. On occasions he also wore an angavastram (அங்கவஸ்திரம்). A linear Vermilion mark (tilak) adorned his large forehead. You could always find him with a clutch of books (which he seldom referred to – more of it later) in one hand and a ubiquitous umbrella in the other. His gait was always slow and dignified, with one measured step after another. He acknowledged salutations with a smile and a slight nod of his head.

As Konar entered the classroom we all stood up to receive him. He smiled, nodded his head, hung his umbrella on the door and mounted the podium. He did not tell us his name. But he briefly introduced himself beginning with his humble origin tracing his life thus far. He then concluded saying…

‘நீங்க தலையணையா உபயோகப்படுத்தறீங்களே அதை எழுதினது நான்தான்! கோனான்! அது என் ஆசானின் ஆசி’.

He then asked us to introduce ourselves. When my turn came, I got up and told him my name. The moment he heard my name, especially the later part of it, he stopped me and asked me…

‘யாழ்ப்பாணமா?’

‘இல்லை சார், சேலம்.’ I replied truthfully as I was born and brought up in Salem. It was only after my college days that I shifted my base, regretfully, to Chennai. Konar’s face lit up when he heard ‘Salem’. He knew instantly he had found so early a punching bag among this set of students.

‘ஓ! எங்க இதை சொல்லு.’ He asked me with a trace of glee on his face.

‘வெள்ளிக்கிழமை தள்ளாத கிழவன் வாழைப்பழத்தை மெல்ல மெல்ல விழுங்கினான்.’

As I repeated him, there were peals of laughter all around.

Konar took one hard look at me and with a wry smile said…

‘சேலம்காரன்னுக்கு நாக்குல சூடு போட்டாலூம் ‘ழ’,’ள’ வராது. அதனாலதான் அவங்க ஊர் பெயரிலும் ‘ல’ வைதான் வச்சி இருக்காங்க!’

Thus began a cat and mouse game between him and me.

Konar was teacher extraordinaire. He had a prodigious memory. Even though he always came to the classroom with a clutch of books, he seldom opened and referred any of them. From modern prose to ancient poetry everything came from his memory.

Despite being a scholar in Tamil, he never showed it off. Being a very practical person he had his feet firmly planted on the ground. He knew that what the students wanted was not a scholarly discourse in Tamil but a pass in the examinations and accordingly structured his sessions. May be this is what made him to write his notes. He also had an enviable record of not one of his students failing in Tamil in the university examinations. When I came under his tutelage, in me he perceived a real threat to his continued success. So he used me as a punching bag for two reasons. One to keep the class entertained and two to ensure that somehow or other I get through the examination. To this end he used to repeatedly tell me to learn Tamil grammar well and attempt the questions on grammar first in the examination. ‘This way you will not only impress the person who evaluates your paper but also can obtain full marks’ he used to say. Despite his exhortations, to me grammar continued to be like saree to Sunny Leone.

Often he used to come down from the podium, stand in the middle of the aisle and pick and choose students to ask questions. On questions relating to grammar, I was his natural choice. One day he did just that. Standing among the students, he searched for me and asked ‘எங்க நம்ம சேலம்காரர்?’ Even though it is very difficult to hide from his bird’s eye view of students, I instantly ducked behind the shoulders of my neighbour. The fellow refused to play ball. He must have become a police informant in his later years! He leaned back fully exposing me and said ‘சார், இங்க!’

Konar turned around, looked at me and said ‘எழுந்திரி’.

I got up gingerly.

He then asked me ‘வினைத்தொகைக்கு ஒரு உதாரணம் சொல்லு…’

‘ஊறுகாய்’ I shot back even before he could complete his question.

The loud clapping of hands made me to realise that my answer was, for once, correct.

For a split second Konar fell silent but recovered instantly and said ‘சபாஷ்…. உட்கார்.’

Neither did he lose his equanimity. After all he had seen thousands of students like me including, unlike me, some eminent ones like A. P. J. Abdul Kalam. He then half turned and delivered the punch line.

‘சேலம்காரன் சாப்பாட்டுலேயே குறியா இருக்கான்!’

His sessions were always lively full of witticism, anecdotes, comments on topical subjects and singing. In fact where many a professor would shun an afternoon class in the oppressive climate of Trichy, Konar always preferred and excelled in them. He never bothered to take the mandatory roll call. He would contemptuously sign the register as ‘all present’ and set it aside saying ‘If you think things outside are better than Konar’s classes, you are welcome to go. I will not bother you.’ Rarely anyone bunked his classes.

One hot afternoon when he found the entire class was struggling to keep awake, he said ‘என்ன உறக்கமா? சரி, கம்பன் உறக்கத்தை பற்றி என்ன சொல்கிறான் பார்போம்’ and asked us to close the books. He then sat on the table cross legged and summoned me. He picked up a copy of இராமாவதாரம் better known as Kambaramayanam (கம்பராமாயணம்), opened a page and pointing to a verse asked me ‘எங்கே இதை படி.’

This is the verse that he asked me to read.
‘உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!’
(யுத்த காண்டம் 16. கும்பகருணன் வதைப் படலம், கிங்கரர் கூற்றும் இராவணன் செயலும் –Verse 45)

When I finished reading it, he said ‘ம்ம்ம்… என்ன படிக்கிற … போய் உட்கார்.’

He then asked us to visualise the background. With the war drums beating in the distance, people were trying to wake up a sleeping Kumbhakarna so as to take him to war. But he would not wake up easily. Among other things they even hit him with long handled wooden pestles (உலக்கை) that people normally use with stone mortars to pound grains. ‘What would be the resultant sound? Pestle hitting human flesh?’ Konar asked and replied ’Dhum…Dhum…’

He then sang the same verse but in an entirely different way. What he did was to use a bass voice while reading some of the letters or combination of letters which I have indicated in brackets (I hope I got them right). For the rest he used his normal voice. You can get the hang of it after one or two try.

உ(றங்)கு(கின்)ற (கும்)ப(கன்)ன! (உங்)(கள்) மாய வாழ்வு எலாம்
இ(றங்)கு(கின்)றது! (இன்)று (காண்); எ(ழுந்)திராய்! எ(ழுந்)திராய்!
கற(ங்கு) போல (வில்)பி(டித்)த (கா)ல தூ(தர்) கையிலே,
உ(றங்)குவாய், உ(றங்)குவாய்! இனிக் கி(டந்து) உ(றங்)குவாய்!

Suddenly the mood became electrifying. The class was vibrating to a thumping ‘dhum..dhum..’ The rhythm was so pulsating I started to pound the table with my palms to accompany Konar. Seeing me, three or four others joined me and formed an impromptu orchestra. But then Konar did the unthinkable. He stopped singing without a prior notice.

While the others stopped their act with alacrity, I continued my (by now) solo performance with an enthusiasm of a Sivamani before I too realised what was happening. But then it was too late.

Konar looked at me hard and said ‘எழுந்திரி.’ He also picked up the other members of the merry orchestra one by one saying…’நீ எழுந்திரி…நீ எழுந்திரி’

When we all stood up sheepishly, he asked us ‘என்ன தாளமா?’ Then he said something very profound. ‘இன்று பரீட்சைக்கு தாளம்; நாளை வேலைக்கு தாளம்; பின்பு பெண்டாட்டிக்கு தாளம்! வாழ்கையே தாளம்தான்!’ He then broke into laughter and added ‘உங்களை தாளம் போட வைத்தது கோனான் இல்லை… கம்பன்!’

‘உட்கார்!’ I resumed my seat in double quick time before he could change his mind.

Talking of இராமாவதாரம், the 12th century Tamil epic written by Kamban, Konar was an exponent of it. Konar often spoke about Kamban and his virtuosity in glowing terms. He would tell us how this epic was divided into six chapters (காண்டம்) which in turn were divided into 123 sections (படலம்) containing nearly 12,000 verses. He also used to repeatedly tell us how Kamban’s use of Virutham (விருத்தம்; Tempo) and Santham (சந்தம்; Tune) in various verses was effective in bringing out the emotion and mood for storytelling. Konar used to recite most of these verses with ease from his memory.

I was told he also used to conduct discourses on Thirupavai (திருப்பாவை) in recognition of which Sri Chandrasekharendra Saraswathi Swamigal of Shri Kanchi Kamakoti Peetham honoured him with the title ‘திருப்பாவை ஆராய்ச்சி மணி’ and presented him with a gold pendent which he used to wear on a chain around his neck.

Despite the tremendous success of his notes, Konar never missed a chance to tell us to read the text books first. ‘That’s where life is’ he used to say adding ‘mine is a bloodless substitute.’

Konar was highly critical of Bharathidasan (பாரதிதாசன்). He would quote his verse ‘சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?’ and then add ‘சீ…. இவன் பாரதியாருக்கு தாசனாம், கேவலம்!’

Another ‘poet’ whom Konar lampooned was Kannadasan ( கண்ணதாசன்). After singing his song ‘அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் …’ which was very popular at that time and sarcastically adding ‘அத்தான்… உங்கள் பொத்தான்…!’, he would say with a sneer ‘எலந்த பழம், எலந்த பழம் …சீ… இவனும் ஒரு கவிஞன்! இவன் உங்களுக்கு ஒரு கவியரசு!!’

Often times Konar would recite the following verse to showcase Kamban’s command over language and meticulous choice
of words to achieve விருத்தம் and சந்தம் appropriate to the narration.

விழுதல், விம்முதல், மெய்உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல், அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.
(கம்பராமாயணம்/சுந்தர காண்டம்/காட்சிப் படலம்/சீதையின் துயர நிலை/Verse 5)

After the recital he would rhetorically ask ‘எலந்த பழம் உங்களுக்கு ஒரு கவியரசு என்றால் கம்பன் என்ன?!’

It is better Konar is not alive today. Imagine him listening to deeply meaningful and soul stirring songs like ‘IR 8 பல்லுக்காரி…’, ‘ஊதா கலரு ரிப்பன்… உனக்கு யாரு அப்பன்?’, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?!’ Or to see a university named after his bête noir!

After completing my graduation, I continued to stay in the college for another two years to finish my post graduation. When I was in the final year, one day I saw in the notice board a notice informing that on that day a farewell meeting was scheduled to be held at the Lawley Hall for Konar who was retiring from service. I decided to attend the meeting not only as a mark of respect to Konar but also because, heart of hearts, I knew that but for him I would have certainly failed in my Tamil examination.

When I reached the hall after finishing some work in the lab, I found it fully packed with many standing in the rear. The principal paid encomiums to Konar and presented him a casket containing ₹25000/-, may be his terminal benefits. In those days it was not a small amount. Konar received it reverentially, kept it on a table and gave his farewell speech replete with emotion and quotes from ancient scriptures and literature. At the end of his speech he paused, looked at the casket, picked it up and gave it back to the principal saying ‘Let this be with our college. Please use this for promotion of Tamil in whichever form you may deem it right.’

There was thunderous ovation.

Now when I see in Puthiya Thalaimurai news channel that chit of a girl, Divya Nathan, anchoring the news bulletin effortlessly in free flowing, faultless Tamil with crystal clear pronunciation handling ‘ல‘, ‘ழ‘ and ‘ள’ with such ease, I realise how atrocious my pronunciation of Tamil is.

And the anguish Konar must have felt when I said… ‘வெல்லிக்கிலமை தல்லாத கிலவன் வாலைப்பலத்தை மெல்ல மெல்ல விலுங்கினான்.’

~N. Paul Jeyatilak

பின்குறிப்பு 1: பாலசுந்தர விநாயகம் ‘சீரங்கநாதன்’… எழுதியது கலைஞர் என்று நான் குறிப்பிட்டிருந்ததைத் தவறு என்று எங்கோ சொல்லி இருந்தார். என் நினைவுதான் தவறு போலிருக்கிறது.

பின்குறிப்பு 2: எலந்தப்பயம் பாடல் பணமா பாசமா (1968) திரைப்படத்தில் வந்தது. பால் ஜெயதிலக் 1961-இல் கல்லூரியில் சேர்ந்திருந்தால் கோனார் எப்படி இந்தப் பாடலை எப்படி குறிப்பிட்டார்? ஒரு வேளை திரைப்படம் வெளிவருவதற்கு முன்னாலேயே பாட்டு வெளியாகிவிட்டதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய பதிவுகள்:
சுஜாதா வாழ்க்கை குறிப்பு – முரளிகிருஷ்ணனின் தளத்திலிருந்து

வாசிப்பு – புகைப்படங்கள்

இந்தக் கட்டுரை முழுவதும் புகைப்படங்கள்தான். படுத்துக் கொண்டும் சாய்ந்து கொண்டும் நேராக உட்கார்ந்து கொண்டும் பல வித நிலைகளில் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். புத்தகத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. அதுவும் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் மட்டுமே. இந்த மாதிரி புகைப்படங்களைத் தொகுத்து மெலிசா கடனீஸ் என்பவர் வாயேஜர்ஸ் என்று ஒரு புத்தகமாகவே போட்டிருக்கிறாராம். கட்டுரையையாவது பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

கட்டுரையில் எனக்கு மிகவும் பிடித்திருந்த புகைப்படம் கீழே. அந்தப் பெண் இந்த உலகத்திலேயே இல்லை, புத்தகம் காட்டும் உலகத்துக்கு சென்றாயிற்று…

தொகுக்கப்பட்ட பக்கம்: புகைப்படங்கள்

நக்கலின் உச்சம்

நகுபோலியன்‘ எழுதிய ‘மழநாட்டு மகுடம்‘ சிறுகதையை எப்போது முதலில் படித்தேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் படித்தபோது வாய்விட்டு வெடிச்சிரிப்பு சிரித்தேன் என்று நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் சாண்டில்யனும், ஜெகசிற்பியனும், நா.பா.வும் குறிப்பாக கோவி. மணிசேகரனும் எழுதிய பாணியை அநியாயத்துக்கு நக்கல் அடித்திருக்கிறார். அவர் எழுத்து வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடி இருக்கிறேன், இது வரை கிடைத்ததில்லை.

கணையாழியில் வந்த சிறுகதைகளில் தனக்கு மிகவும் பிடித்தது என்று அசோகமித்திரன் இக்கதையை தேர்ந்தெடுத்தாராம்.

நகுபோலியனின் நிஜப் பெயர் பாலசுப்ரமணியனாம். டெல்லிக்காரராம். அவரது புகைப்படத்தை பசுபதி சாரின் தளத்தில் இருந்த ஒரு படத்திலிருந்து வெட்டி ஒட்டி இருக்கிறேன்.

வசதிக்காக சிறுகதையை இங்கே வெட்டி ஒட்டி இருக்கிறேன். தவறாமல் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒரிஜினல் பதிவை இங்கே படிக்கலாம். நகுபோலியனைப் பற்றி சில விவரங்களும் தருகிறார்.

மழநாட்டு மகுடம்
அத்தியாயம் 303

கோப்பெருந்தேவி எங்கே?

அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக் கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின் திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது நிற்கும் அந்த அப்பிராகிருத மெளனச் சுடுகாட்டமைதியிலே, வெள்ளியென வீசும் வேனில் முழுமதியின் தண்ணொளி மிருதுமையின்பத்துவத்தையும் நுகராது, சிந்தையே உருவாய், சிற்சாண்டில்யமாய், மண்ணில் வரைந்த மாயா ஜெகசிற்பாகாரமாய் அப்புரவிமீது வீற்று விரைந்தேகும் அவ்வீரவுருவம் யார்? யாரா? வேறு யாருமில்லை – பொன்னியூர்ச் சதுக்கத்திலே காளிக்கோட்டம் காத்தவராயன் கையில் கடிவாளத்தைத் திணித்துவிட்டு அவனுடைய பொன்னிறச் சிங்களப் பரியைப் போக்குக் காட்டியழைத்துக் கொண்டோடியதாய்ப் போன அத்தியாயத்தில் சொன்னோமே, அதே திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிதான் இப்போது அந்தக் (ஆச்சரியக்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்!

சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருந்த சூறாவளியின் பேரிரைச்சலையும், சாலையின் இருமருங்கும் அளாவி நின்ற பாலைநிலத்தினூடே அந்தக் கிருஷ்ணபக்ஷப் பின்னிரவில் நொடிக்கொரு முறை மிதந்து வந்த வன விலங்குகளின் காட்டுமிருக ஓலத்தையும் மீறிக்கொண்டு அவர் நெஞ்சில் எழுந்து ஓங்கி நின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான் – ”கோப்பெருந்தேவி எங்கே?”

கங்கைகொண்ட சோழபுரம் கலங்கரை விளக்கத்தின் பண்டகசாலையருகே நான்கைந்து நாட்களுக்கு முன் வீரவள்ளாள ஹொய்சலனைக் கண்டதிலிருந்தே இந்தக் கேள்வி அவரை வெகுவாக வாட்டி வதைத்தது; ”கோப்பெருந்தேவி எங்கே?” – அந்தக் கஹனாந்தகார இருட் செறிவினூடே அக்கேள்வி சுழன்று சுழன்று எதிரொலித்தது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியின் பேருள்ளத்துள்தான்.

அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு விதத்தில் ஒன்றுமே பிடிக்கவில்லை போலவும் பட்டது. பின்? கட்டுண்ட கைகாலனாய்க் கூலவணிகர் தெருமுனையில் வீர வள்ளாள வெண்கலநாதனை ஏன்தான் கண்டோம் என்றுகூட ஒரு நொடிப்பொழுது தோன்றியது நம்பிக்கு. அவனை அந்நிலையில் கண்டிராவிட்டால் அத்தனை அவசரமாய்க் கோப்பெருந்தேவியைத் தேட வேண்டிய பிரமேயமே ஏற்பட்டிராதே! ஆழ்வார் திருநகரியில் அலைச்சலைப் பெருமானின் மடைப் பள்ளியில் அமர்ந்திருக்க வேண்டிய அவருக்கு, அவளைத் தேடிக்கொண்டு பொன்னியூர் செல்லும்படியும் நேர்ந்திருக்காது; அங்கே சற்றும் எதிர்பாராத விதமாய்ப் புனைப் மொழிமடந்தையின் சீனக் காதலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியும் வந்திருக்காது.

அவனைக் கண்ட அதிர்ச்சியில்தானே அப்படிக் காத்தவராயன் குதிரையைக் கடிவாளமில்லாமலேயே ஓட்டி வர வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்¡ட்டது? (பின் என்ன, தலைவிதியா?) அவருக்கே ஒரு கணம் சிரிப்பு வந்தது – பீறிட்டுக் கொண்டு!

அது போகட்டும் – அந்தச் சீனத்து ஆள் அங்கேயெப்படி முளைத்தான்? அப்படியானால் புனைமொழி மடந்தை தன்னிடம் முந்தாநாள் கூறியதெல்லாம்-? மண்ணகரம் மடவளாத்தில் மலங்குவிழி மங்கையைச் சந்தித்தபோதே தோன்றியிருக்க வேண்டும் தனக்கு!

அதற்காகத் தவறு ஒன்றும் தன்னதில்லை என்று தமக்குத் தாமே புரிந்து கொண்டார் சைவ நம்பி. எந்தக் கேள்விக்கு விடை முதலில் கண்டிபிடிப்பது? எதை ஒதுக்குவது? ஒரே குழப்பமாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் அந்தப் புத்த பிக்ஷுதான் காரணம்!
திடீரென்று ஏதோ முடிவுக்கு வந்தவராய் – இவ்வாறு அவர், அதுவும் இப்போது, இந்த அர்த்தராத்திரித் தனிமையிலே செய்வார் என்று நாம் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி, இடக்கையிலிருந்த குத்துவீச்சுக் கத்தியைச் சடாரென்று வலக்கைக்கு மாற்றித் தலைக்குமேல் உயர்த்தி மூன்று சுழற்றுச் சுழற்றிக் குவிந்து கிடக்கும் கும்மிருட்டிலே குருட்டிலக்காக வீசுபவர் போல வீசினார். வீசியவர் அதே சூட்டில் டக்கென்று கீழே குதித்துக் குதிரையையும் இழுத்துக்கொண்டு குத்து வாளை எறிந்த கோணத்திலேயே வேகமாக ஓடலானார்.

என்ன வந்துவிட்டது திடீரென்று திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிக்கு? ஹ! அது என்ன அவ்வளவு எளிதில், அவ்வளவு விரைவில், விளக்கிவிடக்கூடிய விஷயமா? அதை உடனுக்குடன் அறிய வேண்டிய ஆர்வமிருப்பின் (நேயர்களே) நாமும் அவரைத் தொடர்ந்தோடுவதுதான் தலைசிறந்த வழி.

அத்தியாயம் 304
மரணவறையில் சமண சுந்தரி!

மாறவர்மன் படுத்துக் கிடக்கிறான்! மன்னன் மணிமாற வர்மன் மாயக்கிடக்கிறான்! மழநாட்டு மணிமுடி மன்னன் மரகததமனவேள் மணிமாற மார்த்தாண்டவர்மன் மரணபடுக்கையிலே கிடக்கிறான்! ”மண்ணையும் விண்ணையும் சாடிப்பிடித்து மாடப் பிறையில் மாவிளக்கேற்றிடுவேன்” என்று மார்தட்டியெழுந்து மாவட்டம் முழுவதும் மழக்கொடியுயர்த்தி நின்றானே, அந்த மாண்டமிழ் வீரன் மல்லாந்து கிடக்கிறான்!

திருமழபாடியிலே திரண்டெதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டுத் தனி மன்னன் திருத்தக்கத் (ததிகிட) தாண்டவனைத் தேர்க்காலிலே கட்டி, அவன் தளபதி தடுமாறனைத் தெருத்தெருவாய்த் துரத்தித் தின்னனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைக்கோதையைத் திருமணம் கொண்டு திரும்பித் ‘திண்ணைக் கடந்த தீஞ்சுவைக் கிழான்’ என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்!

(இந்நினைவையொட்டிய திருவிழாவின் சிதைந்த உருவந்தான், இன்றும் தேரழுந்தூரில் வருடாவருடம் வைகாசிப் பெளர்ணமியன்று அறுபது வயது தாண்டிய கிழவர்கள் திண்ணைகளைத் தாண்டிக் குதிப்பதென்னும் வழக்கம். ஆனால். பிள்ளையில்லா வீட்டு வயோதிகர்தாம் இவ்விழாவில் அனுமதிக்கப்படுவதென்று இப்போது ஏற்பட்டிருக்கும் சம்பிரதாயம். வேறொரு முதுமொழியிம் குழப்பத்திலே உண்டான சரித்திர ஆதாரமற்ற விளைவேயாகும்.)

சேர்ந்து தண்டுகொண்டு வந்த சேரனையும் சோழனையும் சேத்துப்பட்டிலே சிறைப்பிடித்துச் சேர்த்து முதுகோடு முதுகாய்க் கட்டச் செந்தமிழ் மானங்காத்த ”முதுகுராய்வித்த முத்தமிழ்ப் பாண்டியன்” இவன் மூதாதையன்றோ! பவளந்தர மறுத்த பாண்டியனையும், சேர்ந்து இளித்த சேரனையும் வென்று பாண்டமங்கலம் வீதிகளிலே பானைவனைய வைத்துப் பண்டைத் தமிழ் மரபு காத்த (பத்தாம்) பராந்தகச் சோழன் இவனுக்குப் பாட்டன்தானே! மூவேந்தர் படைகளையும் முதுகு காட்டியோட வைத்துக் கோலாலம்பூர் வரை சென்று கோழிக் கொடியை நட்டு மூவுலகும் தமிழ் மணக்கச் செய்த ”முக்குடுமி கொண்ட முதுபல்லவன்” இவனுடைய முப்பாட்டன்தான்!
மலர்க் கண்களை மூடியவாறு மஞ்சத்திலே சயனித்திருந்தான் மணிமாறன். மண்ணுலகப் பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்த அவனுக்கு இந்தப் பிரகிருதிப் பிரபஞ்ச நினைவேயில்லை. மஞ்சத்தைச் சுற்றி மழநாட்டின் பொறுக்கியெடுத்த பிரதானிகள் ஐம்பத்தைந்தே பேர் வீற்றிருந்தனர். இந்தச் சமயத்திலும், அறிவிக்கப்பட்டிருந்தும், இன்னும் அங்கு நாட்டின் முன் மந்திரி பேரமைச்சர் வெளிநாடு கண்ட வெற்றுவேட்டரையர் மட்டும் வந்து சேராதது ஒரு மாதிரியாகத்தான் பட்டது. இது ஒரு புறம், தொண்டியிலே தோரணத் திருவிழா பார்க்கச் சென்றிருந்த, நாட்டின் முதற்கிழவியாம் ராஜமாதா முதுகொங்கைப் பிராட்டியாருக்கும் இளவரசி ஸப்ரகூட மஞ்சரிக்கும் இன்னும் விஷயம் தெரியப்படுத்தப்படவில்லை. இவ்வாறு குழம்பிக்கொண்டு எல்லோரும் மோனாகரமாய், வடிக்கப்பட்ட சிலையாய், வார்க்கப்பட்ட விக்கிரகமாய், வரையப்பட்ட சித்திர ஓவியமாய்ச் சமைந்து அமர்ந்திருக்கையில், திடீரென்று நுழைவாயிலிலே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ‘எக்ஸ்’ போட்டுத் தடுக்கும் எஃகு ஈட்டிகளை யவன வாயிலோர் கையிலிருந்து அனாயாஸமாய்ப் பிடுங்கி அகழிப்பக்கம் வீசியெறிந்துவிட்டுத் தடதடவென்று உள்ளே – சமணசுந்தரி! (ஆம்! என்ன, திகைக்கிறீர்களா? – சமணசுந்தரியேதான்!!)

அத்தியாயம் 305

திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி திடுமென எறிந்த வாளையும் அதன் பின்னே அவிழ்த்துவிட்ட குதிரையுடன் அதிவேகமாய் திருநம்பியையும் தொடர்ந்தோமல்லவா? மீண்டும் தொடர்வோம். (தொடரும்)

பத்திரிகை ஆசிரியருக்கு
வணக்கம். என் தொடர்கதையின் இந்தக் கந்தாயத்தை அனுப்ப இவ்வளவு தாமதமானது பற்றி வருந்துகிறேன். என்னிடமிருந்து வீரமழ நாட்டுச் சரித்திர வரலாற்று ஏட்டுப் பிரதிகளை என் இரண்டாவது பையன் தொலைத்துவிட்டு, அவனையும் பிரதியையும் கண்டுபிடிக்க இரண்டு மூன்று தினங்களானது தான் காரணம்.

தமிணாட்டின் தலைசிறந்த சரித்திரத் தொடர் நாவலாளனான என் இந்த அறுபத்து மூன்றாம் படைப்பாம் ”மழநாட்டு மகுடம்” – வாரா வாரம் 200 வாரங்களாக உங்கள் வாரப் பத்திரிகை வாசக மக்களைத் துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்நவீனம், ஐந்தே வாரங்களில் மகத்தான முடிவு பெற்றுவிடப் போகிறதென்பதை முன்கூட்டியே இக்கடித மூலம் நினைவுபடுத்த விரும்புவதன் நோக்கம், இக்கதை முடிந்தவுடன் இது பற்றி எங்கங்கிருந்து எத்தனையெத்தனை நேயர் பாராட்டுக் கடிதங்கள் வந்தால் அவற்றைப் பிரசுரிப்பது மட்டுமின்றி என் அடுத்த படைப்பான (இப்போதே பாதி தயார் செய்து வைத்துள்ள) ”அரபு நாட்டு அரசுரிமை”யை, அத்தலைப்பு பிடிக்காவிட்டால் ”கடாரத்துக் கன்னி” என்றாவது மாற்றிப் போட்டு வெளியிட ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிந்து கொண்டு அதற்காவன செய்வதுதான்.
தங்கள் ”நகுபோலியன்”

பி.கு.: இவ்வாரமாவது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியை உங்கள் சைத்திரிகர் சரியாக வரைவாரெண்று நம்புகிறேன். அவர் பெயரைப் பார்த்தாவது நினைவிருக்க வேண்டாமா, அவர் ஆழ்வார்க்கடியானுக்கும் அப்பருக்கும் கிராஸ் ஆன ஆசாமி, அவர் நெற்றியிலும் உடலெங்கும் விபூதிக்கீற்றும் நாமக்கீற்றும் சேர்ந்த (18-ஆம் புள்ளி ஆடுபுலி விளையாட்டுக்) கட்டங்கள் காணப்பட வேண்டுமென்று? மலங்குவிழி மங்கை படத்தையும் மறக்காமல் ‘லா.சு.ர.’ வைப் போடச் சொல்லுங்கள். – பாலு

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், தமிழ் வரலாற்றுப் புனைவுகள்

நூலகங்களும் நூலகர் எஸ்.ஆர். ரங்கநாதனும்

நான் கிராமங்களில் வளர்ந்தவன். கிராம நூலகங்கள் என் வாழ்க்கையில் அந்தக் காலத்தில் பெரிய தாக்கம் உடையவை. வாண்டு மாமாவும் சாண்டில்யனும் பெ.நா. அப்புசாமியும் ஜெயகாந்தனும் சா. கந்தசாமியும் எனக்கு கிராம நூலகங்கள் மூலம்தான் அறிமுகம் ஆனார்கள். அந்த நூலகங்கள் இல்லாவிட்டால் எனக்கு படிக்கும் பழக்கம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இன்றும் நூலகங்களுக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறேன், நூலகம் செல்வது வாழ்வின் சிறு சந்தோஷங்களில் ஒன்றாக இருக்கத்தான் செய்கிறது.

எஸ்.ஆர். ரங்கநாதனைப் பற்றி இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது எனக்கு கண் லேசாகக் கலங்கியது. கிராமம் கிராமமாகப் போய் நடமாடும் நூலகத்தை நடத்தி இருக்கிறார்கள். அந்தத் தலைமுறையில் உண்மையான லட்சியவாதிகள் நிறையவே இருந்திருக்கிறார்கள். ரங்கநாதன், கனகசபை, சக்ரபாணி, பாலசுப்ரமணிய ஐயர், அவினாசிலிங்கம் செட்டியார் போன்றவர்களின் உழைப்பாலும் ஆர்வத்தாலும்தான் நான் ஓரளவாவது படித்திருக்கிறேன். ரங்கநாதன், செட்டியார் பேரையாவது கேட்டிருக்கிறேன், மற்றவர்களைப் பற்றி இப்போதுதான் முதல் முறை கேள்வியே படுகிறேன்.

இவர்களுக்கெல்லாம் கடன்பட்டிருக்கிறேன் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

ஜேன் ஆஸ்டன் எழுதிய “Pride and Prejudice”

மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் இதை மீள்பதிக்கிறேன்.

எத்தனை முறை படித்தாலும் அலுக்காத நாவல்கள் என்று எனக்கு ஒரு சின்ன லிஸ்ட் இருக்கிறது. அந்த லிஸ்டில் உள்ள நாவல் Pride and Prejudice.

பதின்ம வயதில் முதல் முறையாகப் படித்தேன். அப்போதுதான் சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி போன்றவர்களைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தேன். ஜேன் ஆஸ்டன் ஒரு விதத்தில் இவர்களது முன்னோடிதான். அந்த மாதிரி ஸ்டைல் கதைதானே, இதை மட்டும் ரசிப்பானேன் என்று பல முறை யோசித்திருக்கிறேன், இன்னும் விடை சரியாக பிடிபடவில்லை. காதல் நாவல்கள் மீது இருக்கும் பயத்தால் ஆஸ்டெனின் பிற புத்தகங்களைப் படிக்கக் கூட இன்னும் தைரியம் வரவில்லை. (தமிழ் திரைப்படமான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கூட இவர் எழுதிய Sense and Sensibility நாவல்தானாம்.)

கதை அனேகமாக எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஒரு சிறு “நகரம்” அங்கே மிஸ்டர் பென்னட், மிசஸ் பென்னட், அவர்களுக்கு மணமாகாத ஐந்து பெண்கள் – ஜேன், எலிசபெத், மேரி, கிட்டி மற்றும் லிடியா. இன்று சவுகரியமாக இருந்தாலும், மிஸ்டர் பென்னட் இறந்தால் அவர்களது நிலங்கள் தூரத்து உறவினர் காலின்சுக்கு போய்ச்சேரும். குடும்பம் கஷ்டப்படும். மிசஸ் பென்னட் எல்லாப் பெண்களுக்கு மணம் ஆக வேண்டுமே என்று துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு eligible bachelor பிங்க்லி அங்கே “குடியேறுகிறார்”. பிங்க்லிக்கும் ஜேனுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. பிங்க்லியின் நண்பன் டார்சி. பெரும் பணக்காரன். Pride-இன் உருவகம். எலிசபெத்தான் Prejudice. டார்சியைப் பிடிக்கவே இல்லை. ஆனால் டார்சி மெதுமெதுவாக எலிசபெத்தை விரும்பத் தொடங்குகிறான். எலிசபெத்தின் குடும்ப அந்தஸ்து சரி இல்லாததால் மட்டும்தான் அந்த ஈர்ப்பு இன்னும் காதலில் போய் முடியவில்லை. அந்தஸ்து வித்தியாசம், மற்றும் ஜேனுக்கு பிங்க்லி மேல் காதல் கீதல் எதுவும் இல்லை என்று நினைத்து டார்சி பிங்க்லியையும் ஜேனையும் பிரிக்கிறான். மீண்டும் எலிசபெத்தை சந்திக்க நேரிடும்போது டார்சியால் தன காதலை அமுக்கிவைக்க முடியவில்லை, எலிசபெத்திடம் தன்னை மணக்க கேட்கிறான். எலிசபெத் மறுத்துவிடுகிறாள். அவளுக்கு ஜேனையும் பிங்க்லியையும் பிரித்தது டார்சிதான் என்று தெரியும்; மேலும் விக்ஹம் என்ற நண்பன் விஷயத்தில் டார்சி ஏமாற்றிவிட்டான் என்று குற்றம் சாட்டுகிறாள். டார்சி ஒரு ஆணவக்காரன், பழகும் விதம் தெரியாதவன் என்று நினைக்கிறாள். ஆனால் விக்ஹம் ஒரு பொய்யன் என்று டார்சி நிரூபிக்கிறான்.

தற்செயலாக டார்சியை அவன் வீட்டுப்பக்கம் சந்திக்க நேரிடுகிறது. டார்சி எந்த வித resentment-உம் இல்லாமல் மிகவும் நட்பு பாராட்டி நடந்து கொள்கிறான். எலிசபெத்தின் மனம் மாறத் தொடங்குகிறது. அப்போது கடைசித் தங்கை லிடியா விக்ஹமுடன் ஓடிப் போய்விட்டதாகவும், கல்யாணம் நடக்கவில்லை என்றும் தெரியவருகிறது. அன்றைய சமூகத்தில் அது பெரும் தலைக்குனிவு. கடிதம் வரும்போது அங்கு இருக்கும் டார்சியிடம் எல்லாவற்றையும் எலிசபெத் சொல்லிவிடுகிறாள். எப்படியோ அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து, பணத்தை செலவழித்து கல்யாணம் என்று ஒன்றை செய்து பூசி மெழுகுகிறார்கள். அந்தஸ்து பார்க்கும் டார்சி இனி மேல் தன்னிடம் வரமாட்டான் என்பது எலிசபெத்துக்கு ஏமாற்றம். ஆனால் அவர்களை கண்டுபிடித்ததும், திருமணம் செய்து வைக்க முக்கிய காரணமாக இருந்ததும் டார்சிதான் என்று எலிசபெத்துக்கு தெரியவருகிறது. காதல் கைகூடுகிறது.

இன்னும் பெரிய கதை சுருக்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் விக்கியில் பார்க்கலாம்.

கதையின் பலங்கள் என்று நான் கருதுவது:

  1. எலிசபெத் பென்னெட்டின் குணச்சித்திரம். ஒரு ஜாலியான, எல்லாரிடமும் சிரித்துப் பேசும், அழகான இளம் பெண். டார்சி என்ன, யாராயிருந்தாலும் காதலில் விழும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.
  2. டயலாக்: மெல்லிய நகைச்சுவை இழைந்தோடும், கூர்மையான பேச்சு. எங்கும் வாய்விட்டு சிரிப்பதற்கில்லை, ஆனால் சுவாரசியமான வெட்டிப் பேச்சு என்று சொல்லலாம். உதாரணமாக மிசஸ் கார்டினர் எலிசபெத்துக்கும் எலிசபெத் மிசஸ் கார்டினருக்கும் எழுதும் கடிதங்கள்; மிஸ்டர் பென்னெட் அநேக இடங்களில், குறிப்பாக விக்ஹாமை பற்றி சொல்பவை.
  3. சில பல துணைப் பாத்திரங்கள்: மிஸ்டர் அண்ட் மிசஸ் பென்னெட், காலின்ஸ், லேடி காதரின், விக்ஹாம் என்று பலரை மிக அருமையாக சித்தரித்திருக்கிறார். காலின்ஸ் தன் “முதலாளி அம்மா” லேடி காத்தரினுக்கு அடிக்கும் ஜால்ரா, லேடி காதரினின் அந்தஸ்து+ஆணவம், மிஸ்டர் பென்னட்டின் நக்கல் ஆகியவற்றை வைத்து அவர்கள் காரக்டரை வெளியே கொண்டு வருவது எல்லாமே ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் வெகு சில கோடுகளில், ஒரே ஒரு உறுப்பை மட்டும் prominent ஆக வரைந்து, தத்ரூபமாக ஒரு சித்திரத்தை கொண்டு வருவது போலிருக்கிறது.
  4. டார்சியின் மாற்றம் – மெதுமெதுவாக டார்சி எலிசபெத்தின் பால் ஈர்க்கப்படுவது, பெம்பர்லியில் அவர்கள் சந்திப்பது.
  5. இன்று இல்லாத ஒரு உலகம் – எப்படி பழக வேண்டும் என்பதற்கு பல விதிகள் உள்ள உலகம், பல படிகள் உள்ள ஒரு சமூகம் தத்ரூபமாக காட்டப்படுவது.
  6. முக்கியமாக படிப்பது ஒரு சந்தோஷத்தை தருகிறது. சில சமயம் அடுத்தவர் சந்தோஷத்தை பார்க்கும்போது நமக்கு சின்ன குஷி வருவதைப் போல. இளம் காதலர்கள், சின்ன குழந்தைகள், நண்பர்கள் ஜாலியாக இருப்பதைப் பார்க்கும்போது நமக்குள்ளும் ஒரு சின்ன மகிழ்ச்சி துளிர்ப்பதைப் போல..

திரைப்படமாக, சீரியலாக எல்லாம் வந்திருக்கிறது. சமீபத்தில் கூட ஐஸ்வர்யா ராய் நடித்து Bride and Prejudice என்று வந்திருக்கிறது. எனக்குப் பிடித்தது லாரன்ஸ் ஒலிவியர் நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படம்தான்.

1813-இல் வெளியான இந்த நாவலில் வரும் பல விஷயங்கள் இன்று cliche-க்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் படிக்க முடிகிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

மர்மக் கதை எழுத்தாளர் பி.டி. ஜேம்ஸ் 2011இல் இந்தக் கதாபாத்திரங்களை வைத்து ஒரு த்ரில்லரை – Death Comes to Pemberley – எழுதி இருக்கிறார். பாத்திரங்களை அவர் ஜேன் ஆஸ்டனுக்கு உண்மையாக சித்தரிக்க முடிந்தாலும் கதை சுவாரசியப்படவில்லை. டார்சியும் லிஸ்சியும் விக்ஹமும் கொலைக் கேசுக்கு சரிப்படமாட்டார்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜேன் ஆஸ்டென்

எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

இந்த ஆர்வி நானில்லை. ஒரு காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர். கண்ணன் என்று சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். போன தலைமுறைக்காரர்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரிந்திருக்கும்.

அவர் 30-40களில் வெளிவந்த சிறுகதைகளில் தனக்கு பிடித்தவற்றை பரிந்துரைப்பதை இங்கே மற்றும் இங்கே பார்த்தேன். (பசுபதி சாரின் தளத்தில்தான்) இவற்றுள் சிலவற்றையே நான் படித்திருக்கிறேன். படித்தவரை எதுவும் என் பட்டியலில் இடம் பெறாது. ஆனால் அந்தக் காலகட்டத்துக்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு கண்ணாடியாக இருக்கின்றன.

வசதிக்காக இங்கே பட்டியலாக:

  1. வ.வே.சு. ஐயர்குளத்தங்கரை அரசமரம்
  2. கல்கிகேதாரியின் தாயார்
  3. எஸ்விவி – கோவில் யானை
  4. தீபன் – பாப்பாவும் மரப்பாச்சியும்
  5. கு.ப.ரா.திரைக்குப் பின்னே
  6. பிச்சமூர்த்திகவலை மாடு
  7. புதுமைப்பித்தன்ஸித்தி
  8. சிதம்பரசுப்ரமணியன்சசாங்கனின் ஆவி
  9. பி.எஸ். ராமையாபணம் பிழைத்தது
  10. த.நா. குமாரசாமிராமராயன் கோவில்
  11. தி.ஜ.ர.நொண்டிக்கிளி
  12. சி.சு. செல்லப்பாநொண்டிக் குழந்தை
  13. லா.ச.ரா.பச்சைக் கனவு
  14. கி. சந்திரசேகரன்வெள்ளையன்
  15. க.நா.சு.இரண்டாம் கல்யாணம்
  16. தி.ஜா.ரத்தப்பூ
  17. அ.கி. ஜயராமன் கண்ணம்மா
  18. கி.ரா.(A.K. ராமச்சந்திரன்)சொத்துக்குடையவன்
  19. குகப்ரியைரசியா
  20. கி. சரஸ்வதி அம்மாள்ஜரிகைச் சேலை
  21. புரசு பாலகிருஷ்ணன்பொன் வளையல்
  22. சாவித்திரி அம்மாள்பழைய ஞாபகங்கள்
  23. றாலி கண்டதும் காதல்
  24. எம்.வி. வெங்கட்ராம்வேதனா
  25. வல்லிக்கண்ணன்நல்லமுத்து
  26. ஆர். ஷண்முகசுந்தரம்கல்லினுள் தேரை
  27. கி.வா.ஜ.கலைச்செல்வி
  28. கா.ஸ்ரீ.ஸ்ரீ.மழையிடையே மின்னல்
  29. ஸேனாசண்டையும் சமாதானமும்
  30. ரா.ஸ்ரீ. தேசிகன்மழை இருட்டு
  31. கௌரி அம்மாள்தீர்மானம்
  32. அகிலன்காசு மரம்
  33. ஜி.எஸ். மணிஅலையும் அமைதியும்
  34. பி.வி.ஆர்.தழும்பு
  35. சோமுமுதல் குழந்தை
  36. ஆறுமுகம்களத்து மேடு
  37. ? – எங்கிருந்தோ வந்தான் (எழுதியவர் பேர் குறிப்பிடப்படவில்லை)
  38. குமுதினி – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)
  39. தேவன் – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)
  40. ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன் – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)

ஆர்வி எழுதிய ‘நிலா சிரித்தது‘ என்ற குறுநாவலை சமீபத்தில் படித்தேன், அதைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. ஐம்பதுகளின் குடும்ப மெலோட்ராமா திரைப்படம் போல இருந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

ரகசியமாய் ஒரு ரேடியோ ஸ்டேஷன்

1942. வெள்ளையனே வெளியேறு இயக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம். தலைவர்கள் எல்லாம் சிறையில். ஆனால் இளைஞர்கள் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். தங்கள் எதிர்ப்பைக் காட்ட, சாகசங்கள் செய்யத் துடித்துக் கொண்டிருந்தார்கள். அஹிம்சை, வன்முறை அற்ற போராட்டம் என்பது – காந்தியை தெய்வமாகக் கொண்டாடியபோதும் – கொஞ்சம் பின்னால் தள்ளப்பட்டது. அன்று ‘சின்னத்’ தலைவரான காமராஜ் தானே சிறை செல்லத் தயாராகும் வரை அவருக்கு முழு பாதுகாப்பு இருந்தது. சின்ன அண்ணாமலை சிறை வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஸ்டேஷன் இடிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார். அவர்களின் போராட்டங்கள் எல்லாம் இன்று மறக்கப்பட்டுவிட்டன என்பதுதான் சோகம்.

அப்படி மறக்கப்பட்ட ஒரு போராட்டம் கண்ணில் பட்டது. உஷா மேத்தா. 22 வயது கல்லூரி மாணவி. பட்டப்படிப்பு முடிந்து வக்கீலுக்கு படித்துக் கொண்டிருக்கிறார். செய்திகள் கடுமையாக தணிக்கை செய்யப்படுகின்றன. லட்சத்துக்கும் மேலான இந்தியர்கள், முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில், ஆனால் இந்தக் கைதுகளைப் பற்றி செய்திகளே பத்திரிகைகளில் வரவில்லை. என்ன நடக்கிறது என்று வெளியில் தெரியவில்லை. உஷா தனது வீட்டில் படிப்பெல்லாம் அப்புறம்தான், இப்போது வேறு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு பதினைந்து நாள் ஆளையே காணோம். தனது நண்பர்கள் – விட்டல்பாய் ஜவேரி, சந்த்ரகாந்த் ஜவேரி, பாபுபாய் தக்கர், நானக் மோத்வானி – ஆகியோரோடு ஒரு ரேடியோ ஸ்டேஷனை உருவாக்குகிறார். மோத்வானியின் குடும்பம் சிகாகா ரேடியோ என்று ஒரு கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறது, அதனால் வேண்டிய கருவிகளும், தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் கிடைக்கின்றன/கிடைக்கின்றனர்.

1942, ஆகஸ்ட் 14 அன்று முதல் முறையாக உஷா மேத்தாவின் அறிவிப்பு:

This is the Congress radio calling on [a wavelength of] 42.34 meters from somewhere in India.

அப்புறம் ஒரே அமர்க்களம்தான். ரேடியோ ஸ்டேஷனின் இடத்தை தினம் தினமும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள், போலீசால் எங்கே, யாரால் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. காந்தியின் அறிக்கை, மற்ற தலைவர்களைப் பற்றிய செய்திகள், வடமேற்கு மாகாணத்திலிருந்து கன்யாகுமரி வரை என்ன நடக்கிறது என்று செய்திகள், ராம் மனோஹர் லோஹியா, அச்யுத் பட்வர்தன் ஆகியோரின் ஆக்ரோஷமான உரைகள், தேசபக்திப் பாடல்கள் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

நடத்துவதற்கான பணம்? பம்பாயின் வியாபாரிகள் பலரும் உதவி இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் அரசு தேடுதேடு என்று தேடி இருக்கிறது. வழக்கம் போல அங்கே பணி புரிந்த ஒருவரின் துரோகத்தால் கடைசியில் பிடித்துவிட்டார்கள். மூன்றே மாதம் – 88 நாட்களே – நடத்தப்பட்டிருக்கிறது.

உஷா கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் விசாரணைக்காக தனிமைச் சிறையில் இருந்திருக்கிறார். ஆனால் அவர் வாயையே திறக்கவில்லை. பிறகு நான்கு வருஷங்கள் சிறை தண்டனை. 1946-இல் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்த பிறகுதான் அவருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்திருக்கிறது. படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார்.

சில வருஷங்கள் கழித்து உடல்நிலை தேறி முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். கல்லூரியில் பணியாற்றி இருக்கிறார். காந்தியவாதியாகவே தன் வாழ்நாளைக் கழித்திருக்கிறார். பத்ம விபூஷண் விருது கொடுத்திருக்கிறார்கள். (அவருக்கு துணையாக இருந்த வித்தல்பாய் ஜவேரி – ரேடியோ மட்டுமல்ல, வேறு பல பணிகளும் புரிந்தவர் பத்ம பூஷண் விருது பெற்றிருக்கிறார்). நாடு போகும் போக்கைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறார். 1990-இல், 80 வயதில்தான் இறந்திருக்கிறார்.

எப்போதுமே அந்த மூன்று மாதங்களைத்தான் தன் வாழ்வின் உன்னதமான காலகட்டமாக கருதி இருக்கிறார். இன்று நாவல்தான் நினைவுக்கு வந்தது.

முழு கட்டுரையையும் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பக்கங்கள்:
உஷா மேத்தா விகிபீடியாவில்
விட்டல்பாய் ஜவேரி விகிபீடியாவில்
காங்கிரஸ் ரேடியோ விகிபீடியாவில்

காந்தி-சுபாஷ் போஸ் தகராறுகள்

காந்திக்கும் சுபாஷ் சந்திர போசுக்கும் முப்பதுகளின் இறுதியில் ஒத்துப் போகவில்லை. சுபாஷுக்கு காந்தி மீது எக்கச்சக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும் காந்தியின் நிதானப் போக்கைப் பொறுத்துக் கொள்வது கடினமாக இருந்தது. காந்தி சுபாஷின் அவசரப் போக்கு இளைஞர்களை தவறான பாதைக்கு செலுத்திவிடும், விபரீதத்தில் கொண்டுபோய்விடும் என்று நினைத்திருக்கிறார். சுபாஷின் எண்ணங்களும் நேருவின் எண்ணங்களும் ஒத்துப் போனாலும் காந்தி முகாமிலிருந்து விலகி வேறொருவரை ஆதரிப்பது என்பது நேருவுக்கு சாத்தியமே இல்லை. நேருவே இப்படி என்றால் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

1938-இல் சுபாஷ் காங்கிரஸ் தலைவராக ஆனபோது கூட இந்தப் பூசல் பெரிதாக வெடிக்கவில்லை. ஆனால் 1939-இலும் சுபாஷ் தலைவர் பதவிக்குப் போட்டி இட்டபோது காந்தி அவருக்கு எதிராக பட்டாபி சீதாராமய்யாவை நிறுத்தினார். பட்டாபியின் தோல்வி தனது தோல்வி என்று வெளிப்படையாக அறிவித்தார். படேல் சுபாஷுக்கு ஓட்டு போடுவது நாட்டுக்குத் தீமை, தேசத் துரோகம் என்றே சொல்லி இருக்கிறார். இருந்தாலும் சுபாஷ் ஜெயித்தார். அவர் ஜெயிக்க முத்துராமலிங்கத் தேவர் பெரும் உதவியாக இருந்தாராம்.

பிரச்சினை பூதாகாரமாக வெடித்திருக்கிறது. ஜபல்பூர் அருகில் உள்ள திரிபுரியில் காங்கிரஸ் மாநாடு நடந்திருக்கிறது. காந்தி ஏதோ சமஸ்தானத்தில் சத்தியாக்கிரகம் என்று வரவில்லை போலிருக்கிறது. போசுக்கு உடல்நிலை மோசமாக இருந்திருக்கிறது, இருந்தாலும் வந்து தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். இரண்டு கோஷ்டிகளும் முட்டிக் கொண்டிருக்கின்றன. ராஜாஜி அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் பிரதமர். (பிரதமர் என்றுதான் அப்போதெல்லாம் சொல்வார்கள்). அவர் காந்தி என்ற படகு பழையதாக இருந்தாலும் பெரியது, உறுதியானது, அனுபவம் உள்ள படகோட்டியால் செலுத்தப்படுவது, சுபாஷ் என்ற புதிய படகு பார்க்க அழகாக இருக்கலாம், ஆனால் ஓட்டைப் படகு என்று மாநாட்டில் பேசி இருக்கிறார். கோவிந்த வல்லப பந்த் காந்தியின் தலைமையே தேவை, அதனால் காரியக் கமிட்டியை அவரே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். எம்.என். ராய், மற்றும் நாரிமன் போசுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.

காரியக் கமிட்டி விவகாரம் தீர்வதாக இல்லை. காந்திக்கும் போசுக்கும் கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. போஸ் எவ்வளவு தூரம் தழைந்து வந்தாலும் காந்தி பிடி கொடுக்கவே இல்லை. போஸ் நான் ஏழு பேரை நியமிக்கிறேன், படேல் எழுவர் பேரைச் சொல்லட்டும் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். காந்தி மாற்றுத் தரப்புக்கு இடம் தரவே முடியாது, வேண்டுமென்றால் நீங்களே எல்லாரையும் நியமித்துக் கொள்ளுங்கள் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். நமக்குள் பரஸ்பரம் நம்பிக்கை இல்லை, மரியாதை கூட இல்லை என்று காந்தி எழுதி இருக்கிறார். காந்திக்குத்தான் நம்பிக்கை இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த நிகழ்ச்சிகளை ‘திரிபுரி முதல் கல்கத்தா வரை‘ என்ற சிறு புத்தகமாக சக்திதாசன் எழுதி இருக்கிறார். முக்கியமான ஆவணம். மின்பிரதியை இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: ஷ்யாம் பெனகலின் ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’ படம் மரண மொக்கை. தவிருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

டிங்கினானே – உ.வே.சா.வின் நினைவுகள்

(மீள்பதிப்பு)

உ.வே.சா. எழுதிய நான் கண்டதும் கேட்டதும் நூலிலிருந்து ஒரு excerpt:

மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் உ.வே. சாமிநாதையர் மாணவராய்த் தங்கிப் பல நூல்களைப் பாடம் கேட்டு வந்தார். அப்பொழுது சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார்.

ஒரு நாள் பிற்பகலில் பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளையை ஒரு காரியமாக மாயவரத்தில் முனிசீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார்கள். அங்குச் சென்ற சவேரிநாத பிள்ளை இரவு 12 மணியாகியும் திரும்பி வரவில்லை. பிறகு 2 மணிக்கு வந்தார். வந்தவரை “ஏன் இவ்வளவு காலதாமதம்” என்று பிள்ளை வினவினார். அதற்குப் பின்வருமாறு சவேரிநாதர் பதில் கூறினார்:

நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.

என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.

ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.

‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,

‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார் சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரிய வந்தது. இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக் காட்டி வந்தார்கள்.

நான் கண்டதும் கேட்டதும் பல நிகழ்ச்சிகளின் தொகுப்பு. டிங்கினானே-தான் இவற்றுள் மிகவும் சுவாரசியமானது என்று கருதுகிறேன். இதைத் தவிர உ.வே.சா.வுக்கு மணிமேகலை பிரதி தந்துதவிய அழகிய சிற்றம்பலக் கவிராயரின் முன்னோருக்கு மிதிலைப்பட்டி என்ற கிராமத்தையே மானியமாகத் தந்த வெங்களப்ப நாயக்கரின் வாரிசு ஒருவரே அவருக்கு வண்டி ஓட்டி வந்ததும் கவிராயரின் வரலாறு தெரிந்ததும் என் முன்னோர் கொடுத்த தானத்திலிருந்து நான் கூலி வாங்க மாட்டேன் என்று சொல்லி சென்றுவிட்ட நிகழ்ச்சியையும் குறிப்பிட வேண்டும்.

இதே பாணியில் – தான் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகள், பாரம்பரியக் கதைகள் – என்று பலவற்றை நினைவு மஞ்சரி என்று எழுதி இருக்கிறார். சீவக சிந்தாமணியில் ஒரு வரிக்கு (கள்ளராற் புலியை வேறு காணிய காவல் மன்னன்) அர்த்தம் தெரியாமல் தவித்ததும், அதே வரியை (கள்ளா, வா புலியைக் குத்து!) பழமொழியாக ஒரு கிழவர் சொல்லும்போது அவரைக் கேட்டு அது என்ன என்று புரிந்து கொண்டதும் குறிப்பிட வேண்டியது. அவருடைய தேடல் முழுமையாக வெளிப்படும் நிகழ்ச்சி.

உ.வே.சா. பரம வைதிகர் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் குறிப்பிடும், பழகிய அறிஞர்கள் பல ஜாதியினர். (ஜாதிப் பெயரை தவிர்க்கும் வழக்கம் அவர் காலத்தில் இல்லை, அதனால் தெளிவாகத் தெரிகிறது). அவரது ஆசான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவருடைய சக மாணவர்கள் சவேரிநாதப் பிள்ளை, தியாகராஜச் செட்டியார் என்று பலர். பூண்டி அரங்கநாத முதலியார், மழவை மகாலிங்கையர், சாமிக்கண்ணு பிள்ளை (பிரசிடென்சி கல்லூரி லத்தீன் பேராசிரியராம்!), தொழுவூர் வேலாயுத முதலியார் என்று பல பேர்கள் போகிற போக்கில் குறிப்பிடப்படுகின்றன. வ.உ.சி. சிறையில் இருக்கும்போது இவருக்கு கடிதம் எழுதி திருக்குறள் பற்றி சந்தேகம் கேட்டிருக்கிறார். இந்தப் புத்தகங்களில் பேர் வரவில்லை என்றாலும் சி.வை. தாமோதரம் பிள்ளைக்கும் இவருக்கும் ஆரோக்கியமான போட்டி இருந்தது என்பார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் உ.வே.சா.வுக்கு இருந்த பக்தி உலகறிந்தது. தியாகராச செட்டியாரிடம் நட்பும் மரியாதையும் நிறைய இருந்தது. உ.வே.சா.வை பதிப்புப் பணிக்கு திருப்பியவர் சேலம் ராமசாமி முதலியார்.

உ.வே.சா. தனது ஆசான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரலாற்றையும் எழுதி இருக்கிறார். அது அத்தனை சுவாரசியமாக இல்லைதான், ஆனால் அது முக்கியமான ஆவணம். அன்றையத் தமிழ் புலவர்களின் வாழ்க்கை நிலையை சிறப்பாகக் காட்டுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த புலவர் என்று பிள்ளை அவர்களைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் லௌகீக வாழ்க்கையின் சிரமங்கள் அவருக்கும் இருந்திருக்கிறது. கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய ஸ்வாமிகள் கூட பிள்ளை அவர்களின் மாணவர்தான். தேவராய ஸ்வாமிகள் பெரும் செல்வந்தர் போலிருக்கிறது. அன்று அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று பல மாதங்கள் உபசரித்து தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். பிள்ளையை ஊருக்கு அனுப்பும்போது அவருக்கு ஐயாயிரம் ரூபாய் தட்சிணையாகத் தந்திருக்கிறார்! அன்றைய 5000 ரூபாய் இன்றைக்கு 5 கோடி பெறும் என்று நினைக்கிறேன்!

உ.வே.சா. அன்றைய் சங்கீத வித்வான்களின் வரலாற்றையும் எழுதி இருக்கிறார் – நந்தனார் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார், கனம் கிருஷ்ணையர், மஹா வைத்யநாதையர் – இன்று இவற்றுக்கு ஆவண முக்கியத்துவம் தவிர வேறு எதுவுமில்லை.

உ.வே.சா.வின் சுயசரிதத்தையும் எப்போதோ படித்திருக்கிறேன். சுவாரசியமான, முக்கியமான ஆவணம். அவர் கண்ட, கேட்ட சம்பவங்களை எல்லாம் புதியதும் பழையதும் என்றும் தொகுத்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்