(மீள்பதிவு, முதல் பதிவு ஜனவரி 2011-இல்)
பிரபஞ்சனுக்கு அஞ்சலியாக இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன்.
பிரபஞ்சன் இந்த புத்தகம் பற்றி சொல்கிறார் –
தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!
மேலும் சொல்கிறார் –
முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.
அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியின் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.
நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்மவர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டி இருக்கிறது என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.
பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.
ஆனால் அவராலும் ராஜா கதையை முழுதாக தாண்ட முடியவில்லை. நாவலில் பெரும் பகுதி சந்தாசாஹிப், தஞ்சை அரசர்கள், ஆட்சி உரிமைக்கான தகராறுகள் பற்றி பேசுகிறது. இவை பெரும்பாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன. ராஜராஜ சோழன் கதையை முதலமைச்சர் அநிருத்த பிரம்மராயர் கண்ணோட்டத்தில் விவரிப்பது போல. கதை நடப்பது 1730-களின் பிற்பாதியில். டூமா என்பவர் புதுச்சேரியின் ஃபிரெஞ்சு கவர்னர். துபாஷிகள் மூலம்தான் எல்லாம் நடக்கிறது. அடுத்த துபாஷாக வருவோம் என்று எதிர்பார்த்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு ஏமாற்றமே. தஞ்சையில் மராத்திய அரசுக்கு பெரும் போட்டி, பணம் கொடுத்து சந்தாசாஹிப் முதலியோரின் ஆதரவை நாடும் போட்டியாளர்கள். பணம் கொடுக்க வரி நிறைய கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த mercenary படைகள் சர்வசாதாரணமாக வயல்களை, கிராமங்களை சூறையாடுகின்றன. நிலையான ஆட்சி இல்லை. டூமா ஓரளவு நியாயமாக நடந்துகொள்கிறார். சந்தாசாஹிபின் மனைவிக்கு அடைக்கலம் கொடுக்கிறார். நாட்டில் ஜாதி, மதமாற்றப் பிரச்சாரம், கலவரங்கள் என்று பல உரசல்கள் ஏற்படுகின்றன. பிள்ளை இவை எல்லாவற்றையும் தன் நாட்குறிப்புகளில் எழுதி இருக்கிறாராம். அதை வைத்து இலக்கியம் படைத்திருக்கிறார் பிரபஞ்சன்.
அரசு சண்டைகள் பற்றி நிறைய வந்தாலும் கதையின் focus சாதாரண மக்களின் வாழ்வு முறையே. அதுவே இந்தக் கதையின் பெரிய பலம்.
நாவலில் குறைகள் இல்லாமல் இல்லை. பெரிய பிரச்சினை கதை கோர்வையாக இல்லாததுதான். உதாரணமாக ஒரு முதலியார் தன் சம்பந்தியிடமிருந்து அடிமைகளை வாங்குவது ஒரு பகுதியில் விவரிக்கப்படுகிறது. இது ஒரு தனி கிளைக்கதை. ஒரு பத்து பக்கம் போகிறது. முன்னேயும் பின்னேயும் அதை பற்றி வேறு பேச்சு இல்லை. அதில் வரும் பாத்திரங்கள் வேறு எங்கும் வருவதும் இல்லை. ஒரு வருஷம் பேப்பர் தலைப்பு செய்திகளை சேகரித்து அதை ஒரு கதை ஆக்குவது போலத்தான். தொடர்பில்லாத பல கிளைக்கதைகளை தொகுத்திருப்பது போல இருக்கிறது.
ஆனால் மிக அருமையான முயற்சி. கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ் நாவல். தமிழின் மூன்று சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. (பொ. செல்வன், சிவகாமியின் சபதம் மற்ற இரண்டு) கல்கி போட்ட கோட்டிலிருந்து வெளியே வெற்றிகரமாக வந்திருக்கிறார். ஒரு புதுப் பாணியை உருவாக்கி இருக்கிறார். கல்கி நமக்கு காட்டுவது ஒரு fantasy உலகம். இவர் காட்டுவதுதான் நிஜமாக இருக்கிறது.
ஜெயமோகன் இதை தமிழின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது சிறந்த தமிழ் இலக்கிய லிஸ்டில் இடம் பெறும் ஒரே சரித்திர நாவல் இதுதான். அவரது வார்த்தைகளில்:
வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப்படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரே சமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதிமானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிகமிக முக்கியமானது.
எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார்.
பிரபஞ்சன் வானம் வசப்படும் என்றும் இன்னொரு நாவல் எழுதி இருக்கிறார். அது இன்னும் கிடைக்கவில்லை…
ஆனந்தரங்கரின் டைரி இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா? (பத்ரி சேஷாத்ரி கொடுத்திருக்கும் லிங்க் இப்போது வேலை செய்யவில்லை) நண்பர் ராஜ் சந்திரா ஒரு சுட்டியைக் கொடுத்திருக்கிறார்.
அடுத்த பகுதி – பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்
தொடர்புடைய பதிவுகள்:
மானுடம் வெல்லும் புத்தகத்திலிருந்து ஒரு excerpt – மதுவிலக்கு உத்தரவு
இன்னொரு excerpt – காலைக்கடன் உத்தரவு
பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவல்
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய விக்கி குறிப்பு
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி கிழக்கு பதிப்பகம் தலைவர் பத்ரி சேஷாத்ரி
தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி), பகுதி 2 (கல்கியின் வாரிசுகள்), பகுதி 3 (படிக்க விரும்புபவை)