பிரபஞ்சன் – அஞ்சலி

பிரபஞ்சனின் மறைவு வருத்தம் தந்த செய்தி. இரண்டு சிறந்த நாவல்களை எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைத்தவர். ஆனால் நான் படித்த வரைக்கும் அவர் எழுதிய பிற நாவல்கள் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. உலகியல் காரணங்களுக்காக இதழியலில் ஈடுபட்டது, வாழ்வின் பிரச்சினைகள் அவரை கொஞ்சம் முடக்கிவிட்டன என்று கேள்வி. அவரது சிறுகதைகள் பொதுவாக நன்றாக இருக்கின்றன, ஆனால் என் கண்ணில் படித்தே ஆக வேண்டிய முதல் வரிசை சிறுகதைகள் அல்ல.

மானுடம் வெல்லும் முன்னுரையில் அவர் சொல்வது:

தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

மேலும் சொல்கிறார் –

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.

நானே என் பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது.

பிரபஞ்சன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியின் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.

நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்மவர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் ஆட்சிக்கு வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டும் என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.

பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.

வானம் வசப்படும் மானுடம் வெல்லுமின் நீட்சியே. இன்னும் கொஞ்சம் கோர்வையாக இருக்கும். 1995-ஆம் ஆண்டுக்கான சாஹித்ய அகடமி விருதை வென்றது. ஆனால் என் கண்ணில், coherence குறைவாக இருந்தாலும் மானுடம் வெல்லுமே கலை ரீதியாக அதிக வெற்றி பெற்ற நாவல்.

பிரபஞ்சனின் மொத்த பங்களிப்பும் இந்த இரண்டு நாவல்கள் மட்டுமே என்றுதான் நான் கருதுகிறேன். ஜெயமோகன் தனது seminal நாவல் பரிந்துரைகளில் மானுடம் வெல்லுமுக்கு பத்தாவது இடத்தை அளிக்கிறார். வானம் வசப்படும், மற்றும் மஹாநதி என்ற நாவல்களை தனது இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் மானுடம் வெல்லும் மற்றும் சந்தியா இடம் பெறுகின்றன.

மனசு, அப்பாவின் வேஷ்டி, மற்றும் கருணையினால்தான் என்ற சிறுகதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. எஸ்ராவின் சிறுகதை பரிந்துரைகளில் அப்பாவின் வேஷ்டி மற்றும் மரி என்கிற ஆட்டுக்குட்டி என்ற சிறுகதைகள் இடம் பெறுகின்றன. மீன் என்ற சிறுகதையை சுஜாதா பரிந்துரைத்தார் என்று நினைவு.

மனசு யூகிக்கக் கூடிய கதைதான் என்றாலும் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. அ. வேஷ்டியில் வேஷ்டியை அப்பாவின் குறியீடாக மாற்றி இருக்கிறார். கருணையினால்தான் கதையில் கோபத்தில் கொலை செய்தாலும் அழகை ரசிக்கும் இளைஞன் நல்ல பாத்திரப் படைப்பு. மரி என்கிற ஆட்டுக்குட்டி சிறுகதையில் தனக்கிருக்கும் கடுப்பால் மற்றவர்களை கடுப்பேற்றும் பதின்ம வயதுப் பெண் அன்புக்குக் கட்டுப்படுவது நன்றாக விவரிக்கப்படுகிறது. மீன் எல்லாம் என்ன சிறுகதை என்றே புரியவில்லை. மிச்ச எல்லாம் நல்ல சிறுகதைகள்தான். இவற்றைத் தவிர பிரும்மம் என்ற சிறுகதையும் நினைவில் இருக்கிறது. ஆனால் நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று என்றாவது ஒரு தொகுப்பு வெளியிட்டால் அந்தப் பட்டியலில் இடம் பெறாது.

அவருடைய பல சிறுகதைகளை இங்கே படிக்கலாம். என்றாவது படிக்க வேண்டும். அவரது சிறுகதைகள் அவரது பிற நாவல்களை விட நன்றாக எழுதப்பட்டவை என்று தோன்றுகிறது.

மா. வெல்லும், மற்றும் வா. வசப்படும் நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்ததால் வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். கிடைத்த புத்தகங்களின் தரம் – மகாபாரத மாந்தர்கள், காதலெனும் ஏணியிலே, நானும் நானும் நீயும் நீயும், சுகபோகத் தீவுகள், உள்ளங்கையில் ஒரு கடல், ஈரம் எல்லாம் சுமார்தான்.

எனக்கு மகாபாரதப் பித்து அதிகம். மகாபாரத மாந்தர்கள் என்ற தொடர் பல பாத்திரங்களை சுருக்கமாக விவரிக்கிறது. படிக்கலாம்தான், ஆனால் புதிய insights என்று எதுவும் இல்லை.

காதலெனும் ஏணியிலே: நாயகன் சேது நல்லவன், வல்லவன். அவன் மீது உயிரையே வைக்கும், அவன் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தும் ஏறக்குறைய தன் சொத்தை அவன் மேல் எழுதி வைக்கும் நாயகி சுமி. Go-getter ரேகா. முக்கோணக் காதல். வாரப் பத்திரிகைகளில் பெண்களை குறி வைத்து எழுதப்படும் தொடர்கதைகள் தரத்தில்தான் இருக்கிறது, சுவாரசியமே இல்லை. தவிர்க்கலாம்.

நானும் நானும் நீயும் நீயும்: திருமணம் நிச்சயமான பிறகு தனக்கு வேண்டியது என்ன என்பதை உணரும் பெண். டக்கென்று முடித்துவிட்டார்.

உள்ளங்கையில் ஒரு கடல்: நல்ல இயக்குனர் மூர்த்தி சினிமாத்துறையை விட்டு ஒதுங்குகிறான். ஒரு நிருபி அவனை மீட்டுக் கொண்டு வருகிறாள். இதே போன்று ஒரு நீளமான சிறுகதையைப் படித்த நினைவும் இருக்கிறது. சுமார்.

சுகபோகத் தீவுகள்: அரசியல்வாதிகளுக்கு பின்னால் நிற்கும் ஓரளவு படித்த மானேஜர் போன்ற ஒருவனை முன்னால் வைத்து (தொண்ணூறுகளின்) அரசியல் நிலையை நமக்கு சொல்ல ஒரு முயற்சி. கிராமத்து படித்த இளைஞன் தன் அரசியல்வாதி மாமாவிடம் வந்து சேர்கிறான். குறுகிய காலத்தில் விவசாயிகளை ஏமாற்றி நிலம் வாங்கும் ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்திக் கொடுக்கிறான். தலைவர் மாமாவை பின் தள்ளிவிட்டு இவனை முன்னே கொண்டு வருகிறார். விரைவில் நம்பகமான ஆலோசகன் ஆக மாறிவிடுகிறான். இன்னொரு முன்னாள் நடிகை, இந்நாள் அரசியல்வாதியின் மகளிடம் ஏற்படும் காதல் கொஞ்சம் குற்ற உணர்வைத் தருகிறது. காதல் வலுக்க வலுக்க கடைசியில் அரசியலை விட்டுவிடுகிறான். சுமாரான த்ரில்லர். அரைகுறையாக இருக்கிறது. அவரது திறமைதான் இதை காப்பாற்றுகிறது. அரசியல் நிகழ்வுகள் நன்றாக வந்திருக்கின்றன, அதை இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதி இருக்கலாம். நாவல் அனேகமாக வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

ஈரம் என்ற மினி-தொடர் சகிக்கவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் இரண்டு நல்ல நாவல்கள், சில நல்ல சிறுகதைகள் எழுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். இன்னும் எழுதி இருக்கலாம் என்று தோன்ற வைக்கிறார்.

உங்கள் கண்ணில் வேறு நல்ல புத்தகங்கள் ஏதாவது எழுதி இருக்கிறாரா? நீங்கள் எவற்றை பரிந்துரைப்பீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அஞ்சலிகள், பிரபஞ்சன் பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”