தமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள்ளை

கா.சு. பிள்ளையின் நூல்கள் 2007-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. பிள்ளையின் பெயரை முன்னால் கேள்விப்பட்டிருந்தாலும் அப்போதுதான் அவரைப் பற்றி கொஞ்சம் தெரியவந்தது.

இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி தமிழில் ஆர்வம் ஈடுபாடு கொண்ட, அதே நேரத்தில் பிராமண ஆதிக்கம் கூடாது, ஹிந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமான காலம். அதுவும் சைவப் பிள்ளைமார் ஜாதியில் பிறந்து, தெய்வ பக்தி உள்ள, சைவத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகமான கஷ்டம். ஹிந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதுதான் காங்கிரசின் அதிகாரபூர்வமான கொள்கை. தமிழக காங்கிரஸ் ராஜாஜி கையில் இருந்தது. அவரை விட்டால் சத்தியமூர்த்தி. எல்லாரும் பிராமணர்கள். ஈ.வெ.ரா. பக்கம் போகலாம் என்றால் அவருக்கு தமிழ் காட்டுமிராண்டி பாஷை, கம்பன் ஒரு அயோக்கியன். இவர்களுக்கு தமிழ் மீது பெருமிதம். சைவத்தின் மீது ஆர்வம். தமிழே முதல் மொழி, தமிழனே முதல் மனிதன், தமிழ் இலக்கியமே உயர்ந்தது, பிராமணர்கள் வந்தேறி ஆரியர்கள், ஆரிய ஆதிக்கம் – ஹிந்தியாகட்டும், சமஸ்கிருதமாகட்டும் – வெல்லப்பட வேண்டும் என்ற கொள்கைகளை உடைய ஒரு இயக்கம் இல்லை. பலரும் சுயமரியாதை இயக்கத்தோடு சமரசம் செய்து கொண்டு அதன் பக்கம் சாய்ந்தனர். பூரணலிங்கம் பிள்ளை, கி.ஆ.பெ. விஸ்வநாதம், மறைமலை அடிகள், வேங்கடசாமி நாட்டார் என்று பலரிடமும் இந்த முரண்பாட்டின் விளைவுகளைக் காணலாம்.

கா.சு. பிள்ளையும் இந்தப் பாரம்பரியத்தை சேர்ந்தவர்தான். தமிழறிஞர். தீவிர சைவர். அவரைப் பூஜைப் பிள்ளை என்றே அழைப்பார்களாம். (எம்.எல். பிள்ளை என்றும் அழைப்பார்களாம், எம்.எல். பரீட்சையில் தேறின முதல் சிலரில் ஒருவர் என்பதால்). திருக்குறளே அவருக்கு சைவ நூல்தான். சைவ சித்தாந்த நூற்கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன். புகைப்படத்தில் கூட நெற்றி நிறைய விபூதியுடன் காட்சி அளிக்கிறார்.

ஆனால் நான் பரிந்துரைப்பது இலக்கிய வரலாறு புத்தகம் ஒன்றைத்தான். அது இன்றும் நல்ல reference-தான்.நான் புரட்டிப் பார்த்த மற்ற புத்தகங்களை – திருஞான சம்பந்த சுவாமிகள் சரித்திரம் (1927), மணிவாசகப் பெருமான் வரலாறு (1928) சேக்கிழார் சுவாமிகள் சரித்திரம் (1928), சிவஞான சுவாமிகள் சரித்திரம் (1932), தமிழர் சமயம் போன்றவற்றை இன்று படிப்பது கஷ்டம். காலாவதி ஆகிவிட்டன. ஆனால் இவை அனைத்தும் சேர்ந்து தமிழகத்தில் சமயம் – குறிப்பாக சைவம் – எப்படி வளர்ந்தது என்ற குறுக்குவெட்டுப் பார்வையைத் தரக் கூடும். மொழி நூல் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் போன்றவற்றைப் படிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது, எனக்கு இன்னும் எளிமையாக இருக்க வேண்டும்.

பிள்ளை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். பின்னாளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகவும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எப்போதுமே அரசியல் இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியனும் அன்பழகனும் அவரது மாணவர்களாம். ஆனால் கடைசி நாட்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டும், பணப் பற்றாக்குறையாலும் அவதிப்பட்டிருக்கிறார். அவரை தமிழ் பணக்காரர்கள் கொஞ்சம் கவனித்திருக்கக் கூடாதா என்று ஒரு ஆதங்கம் எழுகிறது.

தொடர்புடைய பதிவுகள்:
விக்கி குறிப்பு
பசுபதி தளத்தில் கா.சு. பிள்ளை பற்றி ஒரு பதிவு, இன்னொரு பதிவு

2019 – எழுத்தாளர்களுக்கான பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்

குல்தீப் நய்யாருக்கு பத்மபூஷண் விருது கிடைத்திருக்கிறது. 4-5 மாதங்களுக்கு முன்னால்தான் இறந்தார். ஒரு காலத்தின் முக்கிய பத்திரிகையாளர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார்.

கீழே உள்ள எல்லாருக்கும் பத்மஸ்ரீ.

நர்சிங் தேவ் ஜம்வால் டோக்ரி மொழியில் பல நாடகங்களை எழுதி இருக்கிறாராம். காஷ்மீர்காரர்.

கைலாஷ் மத்பையா ஹிந்தி கவிஞராம். புந்தேல்கண்ட் பகுதியை சேர்ந்தவராம்.

நாகின்தாஸ் சங்கவி பத்திரிகையாளர். குஜராத்காரர்.

கீதா மேத்தா முன்னாள் ஒரிஸ்ஸா முதல்வர் பிஜு பட்நாயக்கின் மகள். இன்னாள் ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அக்கா. சில புத்தகங்களை எழுதி இருந்தாலும் பதிப்பாளர் என்றே அறியப்படுகிறார். பத்மஸ்ரீ விருதை மறுத்துவிட்டாராம். இது பெரிய கௌரவம் என்றாலும் தம்பி பாஜகவின் தோழமைக் கட்சி ஒன்றுக்கு தலைமை வகிப்பதாலும், தேர்தல் அருகில் வருவதாலும், இந்த விருதை ஏற்பது இப்போது சரியாக இருக்காது என்று சொல்லி இருக்கிறார்.

முஹம்மது ஹனீஃப் கான் சாஸ்திரி – பேரே விசித்திரமாக இருக்கிறது – சமஸ்கிருத அறிஞர் போலிருக்கிறது. கீதை, காயத்ரி மந்திரம் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கிறார்.

பிரிஜேஷ் குமார் சுக்லாவைப் பற்றி உத்தரப் பிரதேசத்துக்காரர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

தேவேந்திர ஸ்வரூப் வரலாற்று ஆராய்ச்சியாளராம். ஆர்எஸ்எஸ்காரர். நிறைய அபுனைவுகளை எழுதி இருக்கிறார். இவருக்கும் அவரது இறப்புக்குப் பிறகுதான் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை இலக்கியவாதிகள் பெரிதாக கௌரவிக்கப்படவில்லை. அசோகமித்திரன் போய்ச் சேர்ந்துவிட்டார். ராஜநாராயணனையாவது கவனிங்கப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: 2019 பத்ம விருதுகள் முழு பட்டியல்

ஜனகணமன பாடலின் முழு வடிவம்

ஜனகணமன நாம் எல்லாரும் அறிந்ததுதான். ஆனால் நாம் பாடுவது அதில் ஒரு பகுதியை மட்டுமே. குடியரசு தினம் அன்று அதன் முழு வடிவத்தையும் கேட்டுப் பாருங்களேன்!

பிமல் ராய் இயக்கிய வங்காளப் படமான உதயர் பாதே (1944) திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். இந்தத் திரைப்படம் ஹிந்தியிலும் ஹம்ராஹி (1945) என்று வந்ததாம். ராய்சந்த் போரல் இசை அமைத்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே இருந்த மெட்டைப் பயன்படுத்தினாரா இல்லை இவரே போட்ட மெட்டா என்று தெரியவில்லை. தாகூர் இந்தப் பாடலை 1911-இல் எழுதினார் என்று நினைவு, அதனால் அனேகமாக ஏற்கனவே இருந்த மெட்டாகத்தான் இருக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்வுகள்

ராஹுல் சாங்கிரித்யாயன் II – பிடித்த சிறுகதை: பிரவாஹன்

வோல்காவிலிருந்து கங்கை வரை பற்றி எழுதி இருந்தேன். அதில் எனக்குப் பிடித்த சிறுகதை இது.

பிரவாஹன் இளவரசன். ஆனால் அவன் ஒரு பிராமண குருகுலத்தில் ஒளித்து வளர்க்கப்படுகிறான். மற்ற உரிமையாளர்கள் எல்லாம் இறந்துவிட அவன் ராஜா ஆகிறான். நாட்டில் உள்ள வைதீக தத்துவங்களை மக்கள் கேள்வி கேட்கிறார்கள். பெரிய “ரிஷிகள்” யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. பிரவாஹன் பிரம்மம், மறுபிறவி என்று இரண்டு புதிய கருத்துகளை கொண்டு வருகிறான். யாராலும் உணர முடியாத பிரம்மம் என்ன வேண்டுமானாலும் செய்யும். இந்த பிறவியில் நீ அடிமையா? பரவாயில்லை, உன் கடமையை செய், அடுத்த பிறவியில் பிராமணனாக பிறந்து சுகமாக இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு. இந்த கருத்துகளை யாக்ஞவல்கியருக்கு உபதேசிக்கிறான். அவர் அந்த கருத்துகளை கொண்டு ஜனகனின் அரசவையில் நடக்கும் ஒரு போட்டியில் வெல்கிறார். இந்த கருத்துகள் மதத்தின் ஒரு பகுதி ஆகின்றன.

பிரம்மம் பற்றி பதின்ம வயதுகளில் படித்தபோது இது ரொம்ப சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. கொல்பவனும் பிரம்மம், கொலை செய்யப்படுபவனும் பிரம்மம், திருடுபவனும் பிரம்மம், திருட்டு கொடுப்பவனும் பிரம்மனும், கற்பழிப்பவனும் பிரம்மம், கற்பழிக்கப்படுபவளும் பிரம்மம் என்றால் அறமாவது நெறியாவது? ஜாலிலோ ஜிம்கானாதான்! அப்புறம் மறுபிறவி. அடுத்த ஜன்மத்தில் என்னவாகப் பிறந்தால் இந்த ஜன்மத்தில் என்ன? மயிரே போச்சு. பக்கத்து வீட்டு மாமி ஒருவர் அங்கே நிற்காதே, இங்கே போகாதே, இபபடி எல்லாம் செய்யாதே, அடுத்த ஜன்மத்தில் பாம்பாகப் பிறப்பாய், பல்லியாகப் பிறப்பாய் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் பல்லியாகப் பிறந்தால் என்ன மாமி, இரண்டு பூச்சியைப் பிடித்து தின்றுவிட்டு ஜாலியாக இருக்க வேண்டியதுதானே என்று கேட்டுவிட்டேன். அதற்கப்புறம் அவர் கப்சிப், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன மாதிரி அறிவாளிடா இவன் என்று இரண்டு பேர் வியப்போடு பார்த்தார்கள். பதின்ம வயதில் வேறென்ன வேண்டும்?

எனக்கு இந்த மாதிரி கதைகள் எப்போதுமே பிடிக்கும். நான் எழுதும் மஹாபாரதக் கதைகளும் இந்த மாதிரி ஏதாவது ஒரு தியரியாகத்தான் அனேகமாக இருக்கும். க்ஷத்ரிய ஆதிக்கத்தை ஒழிக்க பிராமண பரசுராமரின் சூழ்ச்சி என்ற ஒரு கான்ஸ்பிரசி தியரியை வைத்து ஒரு கதை எழுதியபோது இந்த பிரம்மம் பற்றிய கான்ஸ்பிரசி தியரி கதை மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. என்ன, ராகுல்ஜி என்னை விட மிகத் திறமையான எழுத்தாளர். அதனால் அவரது சிறுகதை நான் எழுதியதை விட மிக நன்றாக இருக்கிறது. நான் எழுதியது திராவிடக் கழக எழுத்தாளர்களின் கதைகளை விட நன்றாக இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களை விட நன்றாக எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. 🙂

சிறுகதையை இங்கே படிக்கலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பிரவாஹன் பற்றி நான் வேறு எங்கும் படித்ததில்லை. பிரவாஹன் ராகுல்ஜியின் கற்பனை பாத்திரமா இல்லை இதிகாசங்களில் குறிக்கப்படுபவனா என்று நிச்சயமாக தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டி: வோல்காவிலிருந்து கங்கை வரை

ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”

(மீள்பதிவு)

சிறு வயதிலேயே படித்த தரமான படைப்பு. இன்று படிக்கும்போது குறைகள் தெரியத்தான் செய்கின்றன, ஆனால் குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஒரு “தாயின்” தலைமையில் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த “ஆரியக்” குழுக்கள் மெதுமெதுவாக விவசாயம், கிராமம், “அசுரர்களோடு” போர்கள், தெய்வங்கள், இந்தியா வருதல், வேதங்கள், ஜாதி, சிறு அரசுகள், மன்னர்கள், சாம்ராஜ்யங்கள், முஸ்லிம்களின் வருகை, ஆங்கிலேய ஆட்சி, சுதந்திரப் போர் என்று பரிணாமிப்பதை சிறுகதைகள் மூலம் சித்தரிக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் ஒரு சிறுகதை கூட தனியாகப் படித்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. பிரச்சார நெடி – சாங்க்ரித்யாயன் கம்யூனிஸ்ட் சார்பு உடையவர், ஒரு டிபிகல் அந்தக் கால “முற்போக்கு” நோக்கோடு எழுதுபவர் – கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. பந்துலமல்லன் போன்ற கதைகள் பழைய ஐதீகக் கதைகளை அப்படியே திருப்பிச் சொல்கிறன. பேசிக் கொண்டே இருப்பார்கள். அவருக்கும் (என்னைப் போலவே) உரையாடல்கள் மூலம்தான் கதையை முன் நகர்த்த முடிந்திருக்கிறது. Subtlety, சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. தட்டையான பாத்திரப் படைப்புதான். இங்கே சொல்லப்படும் சரித்திரமான வந்தேறிய ஆரியர்கள் இந்தியாவில் இருந்த திராவிடர்களை ஆக்கிரமித்தார்கள் என்ற தியரி உண்மையில்லை என்று இன்று பலரும் கருதுகிறார்கள். (அவர் எழுதியபோது இந்த தியரி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நினைக்கிறேன்.)

சில அவசரமாக வரையப்பட்ட ஓவியங்கள் போன்று தோன்றும் கதைகள். ஆனால் அவற்றின் sweep, அவற்றுக்குள்ளே இருக்கும் தொடர்பு அருமை. இத்தனை குறைகள் இருந்தாலும் அது பெரிதாகத் தெரிவதில்லை. மொத்தமாகப் படிக்கும்போது இந்தியாவின் சரித்திரத்தையே காண்பித்துவிடுகிறார். அதுதான் இந்தப் புத்தகத்தை உயர்த்துகிறது.

எனக்கு மிகவும் பிடித்த கதை பிரவாஹன். பிரம்மம் என்ற தியரி எப்படி உண்டானது என்பதை தன் கோணத்தில் கற்பனை செய்திருக்கிறார்.

நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

1944-இல் (ஹிந்தியில்) எழுதப்பட்ட புத்தகம். நான் படித்தது தமிழில். கண. முத்தையா மொழிபெயர்ப்பு. தமிழ் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.

பின்குறிப்பு: சாங்க்ரித்யாயன் இந்திய குறிப்பாக பவுத்த தத்துவங்களில் ஸ்காலராம். இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறாராம். நான் படித்த இன்னொரு புத்தகம் சிந்து முதல் கங்கை வரை. லிச்சாவி குடியரசு மீது மகதப் பேரரசு (பிம்பிசாரன்-அஜாதசத்ரு காலம்) போர் தொடுத்து தோற்றத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட சாண்டில்யன் ஸ்டைல் நாவல். ஆரிய-அனாரிய ரத்தக் கலப்பினால்தான் மன்னர்கள் தலை தூக்குகிறார்கள், குடியரசு முறை அழிகிறது, ஜாதி ஒரு ஏமாற்று, பவுத்த மதத்தின் பெருமை என்று அவருடைய பல தியரிகளை முன் வைத்திருக்கிறார். நயம் இல்லாத புனைவு, புதிதாக ஒன்றுமில்லை. தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ராகுல் சாங்க்ரித்யாயன் பற்றி விக்கியில்
பிரவாஹன்

அச்சிடப்பட்ட முதல் தமிழ் புத்தகம்

ஜீகன்பால்க் (Ziegenbalg) என்ற டென்மார்க் பாதிரியார்தான் தமிழில் முதல் புத்தகத்தை அச்சிட்டவர் – 1715 வாக்கில் – என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (வேறென்ன புத்தகம், புதிய ஏற்பாடுதான்) ஆனால் ஹென்றிக் ஹென்றிகஸ் (Henrique Henriques) என்ற போர்ச்சுகீசிய பாதிரியார்தான் தம்பிரான் வணக்கம் என்ற புத்தகத்தை 1578-இலேயே வெளியிட்டாராம். 24 பக்கங்கள் உள்ள புத்தகமாம், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளாம். இன்றைய கேரளா மாநிலத்தில் இருக்கும் கொல்லத்தில் போர்ச்சுகீசிய அச்சு எந்திரங்களை வைத்து இது அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில புத்தகங்களையும் அச்ச்சடித்திருக்கிறார். ஹென்றிகஸ் ஆமென் என்று சொல்வதற்கு பதில் ஓம் என்று சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தாராம்! அக்பர் டெல்லியிலும், நாயக்கர்கள் மதுரையிலும் தஞ்சையிலும் ஆட்சி செய்து வந்த காலம். ஹிந்துவில் சுவாரசியமான கட்டுரை ஒன்று கிடைக்கிறது.

மேலே உள்ள படத்தில் எனக்குப் புரிந்தது கடைசி மூன்று வரிகள் மட்டுமே – “பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்”

ஜீகன்பால்க் 1706-இல் தரங்கம்பாடிக்கு வந்திருக்கிறார். தமிழிலே புத்தகங்கள் அச்சடித்தால்தான் மத மாற்றத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நினைத்திருக்கிறார். உண்மையில் மத மாற்றத்தை விட தமிழ் கற்பதில்தான் அதிக நேரம் செலவிட்டாராம். அச்சு எந்திரம் ஒன்றை வரவழைத்து, தமிழுக்காக முதல் typeface உருவாக்கி, புதிய ஏற்பாட்டை அச்சடித்திருக்கிறார். மேல் விவரங்களுக்கு எஸ். முத்தையா எழுதிய இந்த கட்டுரையைப் பார்க்கலாம். (படத்தில் இருப்பதில் என்னால் சில எழுத்துக்களை மட்டுமே அடையாளம் காண முடிகிறது.)

தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புடைய சுட்டிகள்:
முதல் தமிழ் புத்தகம்
ஜீகன்பால்க் பற்றி எஸ். முத்தையா

அண்ணாவின் “ஓரிரவு”

(மீள்பதிவு) இந்த முறை மின்புத்தகத்தை இணைத்திருக்கிறேன்.

அண்ணாவின் நாடகங்கள் கல்கியை மிகவும் impress செய்திருக்கின்றன. ஓரிரவு நாடகத்தைப் பார்த்துவிட்டு அண்ணாவுக்கு அவர் தமிழ்நாட்டு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் பட்டம் கொடுத்திருக்கிறார். ஆனால் இதை திரைப்படமாக பார்த்தபோது ஒன்றும் பிரமாதமாக இல்லை. இதை விட வேலைக்காரி திரைப்படம் சிறப்பாக இருந்தது. அனல் பறக்கும் வசனங்கள்! என்னடா போயும் போயும் இவ்வளவு சுமாரான ஒரு நாடகத்தைப் பார்த்து கல்கி இப்படி பூரித்துப் போய்விட்டாரே என்று நினைத்திருந்தேன்.

நான் நாடகத்தை அப்படியே எடுத்து பாட்டுகளை மட்டும் சேர்த்து படமாக்கி இருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். படிக்கும்போதுதான் ஓரிரவின் சிறப்பு புரிந்தது. திரைப்படத்தில் கதையின் மெயின் கதைக்கு தேவை இல்லாத பகுதி என்று கட் செய்துவிட்ட பகுதிகள்தான் நாடகத்தை உயர்த்துகின்றன. அண்ணா இதை ஓர் இரவில் நடக்கும் காட்சிகளாக கற்பனை செய்திருக்கிறார். மெயின் கதை வழக்கமான பாய்ஸ் கம்பெனி நாடகக் கதைதான். ஆனால் இரவில் நடக்கும், கதைக்கு நேரடியாக தொடர்பில்லாத காட்சிகள்தான் இதை குறிப்பிடப்பட வேண்டிய நாடகமாக மாற்றுகின்றன. எனக்குத் தெரிந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சி இதற்கு முன்னால் தமிழில் நடந்ததில்லை, இதற்கு அப்புறமும் வெகு நாள் நடந்ததில்லை. (சோ ராமசாமி மெட்ராஸ் பை நைட் என்று ஒரு நாடகத்தை தன் வழக்கமான பாணியில் எழுதி இருக்கிறார், அதுவும் சென்னையில் ஒரு இரவுக் காட்சிகள்தான்.)

ஓரிரவின் கதை ஒன்றும் பிரமாதமில்லை. சில பல ஸ்டீரியோடைப் பாத்திரங்கள், நம்பக் கஷ்டமான தற்செயல் நிகழ்ச்சிகள், செயற்கையான மெலோட்ராமா காட்சிகள் நிறைந்ததுதான். நாயகி வீட்டில் இரவு திருட வருபவன் யார்? அவளுடைய மாற்றாந்தாய் சகோதரன். திருடனைக் கண்டதும் நாயகி என்ன செய்கிறாள்? வில்லன் என்னை வற்புறுத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறான், அப்பாவால் தடுக்க முடியவில்லை, நீ என் கள்ளக் காதலனாக நடி என்கிறாள். கள்ளக் காதலனாக நடிக்கும்போது யார் வரவேண்டும்? கரெக்ட், நாயகன், அவளுடைய உண்மையான காதலன் வருகிறான். என்னாகும்? சந்தேகப்படுகிறான். கதை முடியும்போது என்னாகும்? நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். அப்புறம்? சரியாகச் சொல்லிவிட்டீர்கள், வில்லனை முறியடிக்கிறார்கள். சுபம்!

அண்ணா ஒரு பாய்ஸ் நாடகக் கதையை தன் பாணி வசனங்களை மாட்டும் ஒரு சட்டமாக (framework) எப்போதுமே பயன்படுத்துவார். இந்தக் கதையில் சமுதாய இழிவுகளை – விபசாரிகள், மைனர்கள், திருடர்கள், கீழ்மட்டத்து மக்கள் இத்யாதி – காட்டுகிறார். வழக்கம் போல பிரசார நோக்கத்துக்குத்தான். ஆனால் அந்தக் காட்சிகளில் ஓரளவு உண்மை, ரியலிசம் தெரிகிறது. இது அந்தக் காலத்துக்கு பெரிய புரட்சியாக இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக ஒரு முன்னோடி நாடகம். கல்கிக்கு அந்த வித்தியாசம் புரிந்திருக்கிறது, அதனால்தான் பாராட்டி இருக்கிறார்.

கல்கி எழுதியது:

தற்கால நாடகக் கலையை பற்றி பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட் ஷாவுடன் இப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு இப்சனுக்கு எங்கே போவது? திருடப் போக வேண்டியதுதான்! என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம், தமிழ் நாடு நாடகாசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார்! இப்சனும் இருக்கிறார்! இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்!” என்று தோன்றியது.

ஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி.என். அண்ணாதுரை.
   – (கல்கி இதழ் 07-12-47)

எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்றான “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” பாட்டு கீழே. காதலர்கள் நெருங்குவதை காட்ட தமிழில் பூக்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதாக காட்டும் cliche அனேகமாக இந்த பாட்டில்தான் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த cliche-க்காகவாவது இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஓரிரவு திரைப்படம் பற்றி ஆர்வி
ஓரிரவு திரைப்படம் பற்றி ராண்டார்கை

நாடோடியின் நகைச்சுவை எழுத்துக்கள்

ஒரு தலைமுறைக்கு முன்னால் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பு படித்தவர்களுக்கு ஆங்கில நூல்களில் ஈ.வி. லூகஸ், ஏ.ஜி. கார்டினர், ஸ்டீஃப்ன் லீகாக் போன்றவர்களின் நகைச்சுவைக் கட்டுரைகள் பாடமாக இருக்கும். லீகாக் பரவாயில்லை, லூகசின் பாணி மிக மெல்லிய நகைச்சுவை. அதை ரசிக்கும் பக்குவம் பதின்ம வயதினருக்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன். ரசிப்பதை விடுங்கள், அதை ஆராய்ந்து தேர்வில் பதில் எழுதுவது மகா கடியாக இருந்தது.

ஓரளவு வயதான பிறகு இவர்களை எல்லாம் படிக்க, ரசிக்க முடிந்தது. தமிழில் கல்கி மட்டுமே இவர்கள் பாணியில் (ஆனால் இவர்களை விட சிறப்பாக) எழுதுபவர் என்று நினைத்திருந்தேன். எஸ்விவி, குமுதினி கொஞ்சம் அருகில் வருகிறார்கள். பாக்கியம் ராமசாமி, நாடோடி, சாவி, துமிலன், கடுகு-அகஸ்தியன் ஆகியோர் இந்தப் பாணியில் முயற்சி செய்தார்கள் என்று நினைத்திருந்தேன். சிறு வயதில் விரும்பிப் படித்தவை பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளும் கடுகு-அகஸ்தியனின் கமலா-தொச்சு கதைகளும் மட்டுமே. நாடோடி போன்றவர்கள் நான் தமிழ் பத்திரிகைகள் படித்த காலத்தில் எழுதியதும் குறைவு, அவை பெரிதாக அப்பீலும் ஆகவில்லை.

சமீபத்தில் நாடோடியின் சில பழைய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகமே உலகம் (1943), ஒரு நாள் கூத்து (1945), அட பரமசிவா (1946), ஹேய் அனுராதா (1946) பிழைக்கும் வழி (1946), முடியாத யுத்தம் (1947). லூகசின் வாரிசு இவரே. மெல்லிய நகைச்சுவை. அந்தக் காலத்து மத்தியதர, பிராமண குடும்பங்களின் வாழ்க்கைக்கு ஒரு ஜன்னல். Charming. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நாடகமே உலகம் புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

ஆனால் படித்த பெண் வேண்டாம் (1946) போன்றவற்றைப் படித்தால் பெண்ணியவாதிகள் கொதித்தெழ் வாய்ப்புண்டு. படித்த பெண்களை மணம் செய்வதில் நிறைய கஷ்டம் உண்டு, அவர்களுக்கு சமைக்கத் தெரியாது போன்று நீட்டி முழக்குவார்.

இந்தப் புத்தகங்களில் இதுவும் ஒரு பிரகிருதி புத்தகத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். வ.ரா.வின் நடைச்சித்திரம், சாவியின் கேரக்டர் போன்ற புத்தகம். என்ன, அவர்கள் புத்தகங்களில் தொழிலை வைத்து அடையாளப்படுத்துகிறார்கள். நாடோடி பிராமண வட்டாரத்தை விட்டு வெளியே போவதில்லை.

நாடோடி ஒரு முறை சின்ன அண்ணாமலையிடம் எனக்கு ஏதாவது பிழைக்கும் வழி காட்டக்கூடாதா என்று கேட்டாராம். சி. அண்ணாமலை அப்போதுதான் தமிழ்ப்பண்ணை என்ற பதிப்பகத்தை ஆரம்பித்திருந்தார். அவரது கட்டுரைகளை தொகுத்து பிழைக்கும் வழி என்ற பேரிலேயே போட்டாராம். (சி. அண்ணாமலையின் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்‘ புத்தகத்தில் படித்தது.)

நாடோடியின் புத்தகங்கள் இன்று கிடைக்குமா என்று தெரியவில்லை. அல்லையன்ஸ், வானதி யாராவது போட்டால் உண்டு. ஆனால் புத்தகங்களை இங்கே (‘தேடு’ பெட்டியில் அவர் பெயரைப் போட்டால்) படிக்கலாம்/தரவிறக்கிக் கொள்ளலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய பக்கங்கள்:
நாடோடி பற்றி டோண்டு ராகவன்
பசுபதி தளத்தில் நாடோடி பற்றி – 1, 2, 3, 4, 5